Monday, July 05, 2004

எதனால்---?

அப்பா மட்டும் அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாக விறாந்தையில் நடந்த படி புறுபுறுத்துக் கொண்டிருந்தார். அவர் புறுபுறுப்பில் நியாயமிருந்தது.



எனது எதிர்பர்ர்ப்பு மாமாவின் பிள்ளைகளுடனான சந்திப்பும் அதன் பின் தொடரப் போகும் பம்பலைப் பற்றியுமென்றால், அப்பாவின் கோபமோ தான் சொல்லச் சொல்லக் கேளாமல் தன் தங்கையைக் கொழும்புக்குக் கூட்டிப் போன மாமாவின் மேல் இருந்தது.



"எத்தினை தரம் சொன்னனான். கொழும்பு வாழ்க்கை வேண்டாம். நீ போய் வேலையைச் செய்திட்டு லீவுக்கு வா. தங்கச்சியும் பிள்ளையளும் இங்கை இருக்கட்டும் எண்டு. கேட்டவனே?! 58 இலை வேண்டின அடி அவனுக்குக் காணாது. இப்ப என்ரை தங்கச்சியையும் அவதிப்பட வைச்சிட்டான்."



இன்று முழுக்க அப்பாவின் புறுபுறுப்பு இப்படித்தான் தொடர்கிறது.



அம்மாவுக்குக் கூட ஆத்தியடிச் சனம் எல்லாம் கொழும்பில் ஒரு வீடு, இங்கை ஆத்தியடியில் ஒரு வீடு என்று வைத்துக் கொண்டு, கொழும்பில் போய் இருந்து பிள்ளைகளை கொழும்புப் பாடசாலைகளில் படிக்க வைப்பதைப் பார்த்து நாங்களும் அப்பிடிச் செய்தாலென்ன என்ற நப்பாசை இடைக்கிடை வரும்.



அப்பாவோ "இஞ்சை பாரும் உந்த ஆசையை மட்டும் விட்டுத் தள்ளும். எங்கடை இடம் இதுதான். கொழும்பிலை இருக்கிற ஆக்கள் பாரும் - ஓரு நாளைக்கு நல்லா வேண்டிக் கட்டிக் கொண்டு ஓடி வருவினம்." என்று ஒரேயடியாச் சொல்லிவிடுவார்.



தான் கொழும்பில் வேலையாய் இருக்கும் காலங்களிலும் பாடசாலை விடுமுறைக்கு மட்டும் எங்களை அங்கு கூட்டிப் போவாரே தவிர எந்தக் கட்டத்திலும் எங்களை அங்கு நிரந்தரமாக இருக்க விடமாட்டார்.



இப்படியிருக்கையில் தான் யாழ்ப்பாண அரச மருத்துவமனையில் கடமையிலிருந்த மாமாவுக்கு 1971 இல் தெகிவளை மருத்துவமனைக்கு மாற்றலாகியது. மாமா தனியப் போக விரும்பாது மாமி பிள்ளைகளையும் தன்னோடு அழைத்துப் போய் விடத் தீர்மானித்;த போதுதான் அப்பா எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தார். மாமா கேட்க வில்லை. வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு தெகிவளைக்கு மாமி பிள்ளைகளுடன் போய் விட்டார்.



நினைவு தெரிந்த நாளிலிருந்து அல்லும் பகலும் பழகி வளர்ந்த மச்சாள் சுகி, மச்சான் பாபு எல்லோரும் போய் விட்டதில் எனக்கும் கவலைதான்.



அவர்கள் இன்று வரப்போகிறார்கள். சும்மா இல்லை. அடி வேண்டிக் கொண்டு வருகிறார்கள். சிங்களக் காடையர்கள் இவர்களை அடித்தது மட்டுமில்லாமல் வீட்டிலும் எல்லாவற்றையும் உடைத்துத் தள்ளிப் போட்டார்களாம். எழுபத்தி ஏழுக் கலவரம் தெரியும்தானே. அவதிப் பட்டு அவலப் பட்டு எங்கேயோ ஒழித்து இருந்து தப்பிப் பிழைத்து வருகிறார்கள்.



எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. பல தடவைகள் மதிலால் எட்டிப் பார்த்து விட்டேன். ஆத்தியடிச் சந்தியில் யாராவது பயணத்தால் வருவது தெரிகிறதா என்று.



கடைசியாக அவர்கள் ஒரு பாடசாலை லீவுக்கு வந்து போய் ஒரு வருஷத்துக்கு மேலாகி விட்டது. அவர்கள் நின்ற அந்த ஒரு மாதமும் நல்ல பம்பல். விளையாட்டு, சிரிப்பு, கேலி, பந்தயம் என்று ஒரே கும்மாளம். அவர்கள் போறதுக்கு முதல் நாள் அவர்களுக்குக் கொடுத்து விட என்று அம்மா குசினிக்குள் பலகாரங்கள் செய்து கொண்டிருந்தா. அம்மம்மாவும் மாமியும், அம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்க அப்பாவும், மாமாவும் கூட இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள்.



பெரியவர்கள் குசினிக்குள் கலகலக்க, நாங்கள் பிள்ளைகள் வீட்டின் முன் பக்கம் மல்லிகைப் பந்தலின் கீழிருந்து விளையாடிக் கொண்டிருந்தோம். எங்கள் விளையாட்டுக்கள் லு}டோ, கரம் என்று துவங்கி அது அலுக்க கெந்திப் பிடித்து விளையாடி அதுவும் களைக்க ஆளாளாக படிகளிலும் விறாந்தை நுனிகளிலுமாகக் குந்தி விட்டோம். வேர்த்து ஊத்தி சட்டைகள் தெப்பமாக நனைந்திருக்க ஆளாளுக்கு ஏதேதோவெல்லாம் கதைத்தோம். எங்கள் கதைகள் எங்கெல்லாமோ சுற்றி கடைசியில் கடவுள் நம்பிக்கை பற்றிய கதையில் வந்து நின்றது. கடவுள் இருக்கிறார் என்றும் இல்லை என்றும் பல விதமாக வாதம் பண்ணினோம்.



மாமாவின் மகன் பாபு அடிச்சு வைச்சுச் சொல்லி விட்டான்.

"கடவுளும் இல்லை. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. நான் உதுகளை ஒரு நாளும் நம்பவே மாட்டன்." என்று.



என்னுடைய தம்பி பாலுவால் அவனுடைய நாஸ்திகத் தனத்தை ஆமோதிக்க முடியவில்லை.

"என்ன நீ இப்பிடிச் சொல்லுறாய். எங்கடை ஆத்தியடிப் பிள்ளையாரிலை கூட உனக்கு நம்பிக்கையில்லையே?!" ஆச்சரியமாகக் கேட்டான்.



பாபு "இல்லை" என்று திடமாகப் பதிலளித்தான்.



"உனக்கு உள்ளுக்கை நம்பிக்கை இருக்கு . வெளீலை சும்மா லெவலுக்கு கடவுள் இல்லை எண்டுறாய்." என்று மறுதலித்தான் பாலு.



"எனக்கு நம்பிக்கை இல்லையெண்டுறன். கடவுளே இல்லாத போது ஏன் நான் நம்ப வேண்டும்."

பாபு அறுத்துறுத்துச் சொன்னான்.



இப்படியே பாலுவுக்கும் பாபுவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டு பந்தயம் வரை வந்து விட்டது.



பாபு தனக்கு கடவுளில் நம்பிக்கை இல்லை என்பதை நிரூபிக்க ஆத்தியடிப் பிள்ளையார் கோவிலுக்குப் போய் பிள்ளையாரின் மேல் துப்பிவிட்டு வருவதாகத் தீர்மானிக்கப் பட்டு, எங்கள் சம்பாஷணை இடை நிறுத்தப்பட்டுது.



அவர்கள் பிள்ளையார் கோவில் வரை போக ஆயத்தமானார்கள். எனக்கும் போக ஆசைதான். நான் வளர்ந்த பெண் பிள்ளை என்பதால் பாடசாலை தவிர்ந்த நேரத்தில் அம்மாவைக் கேளாது வெளியில் போகத் துணிவு வரவில்லை. எனது சின்னத் தம்பிமாரும் தங்கைமாரும் மட்டும் அவர்களுடன் சேர்ந்து போனார்கள். நான் கேற் வாசலில் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.



எனது அரை மணி நேரக் காத்திருப்பின் பின் அவர்கள் திரும்பி வந்தார்கள். என்னுடைய முழு நம்பிக்கையும் பாபு சும்மா சொல்லியிருப்பான். ஆனால் கடைசி மட்டும் பிள்ளையாரின் மேல் துப்பியிருக்க மாட்டான் என்பதே.



அந்த நம்பிக்கையுடன் சிரித்த படி

"என்ன பாலு பந்தயத்திலை கோபுப்பிள்ளை தோத்திட்டாரே?" கேட்டேன்.



"இல்லை நான் தான் தோத்திட்டன்."

பாலுவின் குரலில் பந்தயக் காசு கொடுக்க வேண்டுமே என்ற கவலை தெரிந்தது.



"உண்மையா பிள்ளையாருக்கு மேலை துப்பினவனே?"

நம்ப முடியாததால் சந்தேகத்துடன் மீண்டும் நான் கேட்டேன்.



"ம்..கும்--- கதவு பூட்டியிருந்தது. அதாலை பிள்ளையாருக்கு நேரே இருக்கிற தலை வாசல் கதவை காலாலை உதைஞ்சு போட்டு, பிறகு கதவிலை துப்பியும் போட்டு வந்தவன்." பாலு கொஞ்சம் அசாதாரணமாகத்தான் சொன்னான்.



"நான் நம்பமாட்டன். எந்தக் காலாலை உதைஞ்சவன்?"

என்னிடம் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற தீர்க்கமான எந்த முடிவும் இல்லையென்றாலும், கடவுள் இல்லையென்று சொல்லி எங்கள் ஊர் பிள்ளையாரை அவமதிக்க ஒரு போதும் சம்மதமில்லை. அதனால்தானோ என்னவோ என் குரலும் அசாதாராணமாகவே ஒலித்தது.



பாபு வலது காலைத்தூக்கி எங்கள் மதிலை உதைந்து காட்டி,

"இப்பிடித்தான் இந்தக் காலாலைதான் உதைஞ்சனான் மச்சாள்." என்றான்.

எனக்கு நம்ப முடியவில்லை. தம்பி பாலு பந்தயக்காசு கொடுக்க வேண்டுமென்று அம்மாவிடம் ஒரு ரூபாவுக்குக் கெஞ்சிய போது கூட இரண்டு பேரும் நடிக்கிறாங்கள் என்றுதான் முதலில் நினைத்தேன்.



"உண்மையா உதைஞ்சவன் அக்கா." தம்பி என்ரை கையில் அடித்து சத்தியம் பண்ணிய போது தான் நம்பினேன். அதற்குப் பிறகு அன்றைய பொழுது எனக்கு என்னவோ போலவே இருந்தது.



அடுத்த நாள் மாமா குடும்பம் பயணமாகி விட்டது. வழமை போல் அவர்கள் பயணமான அன்றைய நாள், எங்கள் வீடு வெறிச்சோடிப் போனது போல் அமைதியாக இருந்தது. அடுத்த நாள் மீண்டும் நானும் தம்பியும் தனியாக கரம் அது இது என்று விளையாடத் தொடங்கி விட்டோம். ஆனால் பாபு செய்த வேலையை மட்டும் மறக்காமல் அடிக்கடி நினைத்தோம் அவன் அப்பிடிச் செய்திருக்கக் கூடாது என்று பலமுறை கதைத்தோம்.



இன்றும் அந்த நினைவு என் மனத்திரையில் பல முறை முகம் காட்டி விட்டது.

பாபுவின் பிடிவாதமான முகத்தை நினைத்த படியே மீண்டும் மதிலால் எட்டிப் பார்த்தேன்.



"வாவ்------!" மக்கள் வெள்ளம். எனக்குள் சந்தோஷம் மின்னலிட்டது.

அப்பாவின் முகத்திலும் சந்தோஷம். ஆனால் அது ஒரு இனம்புரியாத கோபமும் சோகமும் கலந்த சந்தோஷம்.



நான் ஓடிப்போய் கேற்றைத் திறந்து மனித வெள்ளத்தை முழுமையாகப் பார்த்தேன். எல்லோர் முகங்களிலும் களைப்பு. நடைகளில் தளர்வு.



எல்லோரும் எமது ஊர்க்காரர்கள்தான். அப்பா விழுந்து விழுந்து எல்லோரையும் விசாரித்தார்.



"அநுராதபுரம் மாதிரி கொழும்பிலை அடி விழேல்லைத் தம்பி. சில சில இடங்களிலைதான் சிங்களக் காடையன்கள் இருக்கிறாங்களே. அவங்கள் தங்கடை வேலையைக் காட்டிப் போட்டாங்கள். எனக்குத்தான் காங்கேசன் துறையிலை வந்து இறங்கு மட்டும் ஒரே சத்தி. எனக்கு இந்தக் கப்பல் பயணம் ஒத்து வராது தம்பி."

சுந்தரிப்பாட்டி இழுத்து இழுத்து சொல்லிக் கொண்டு போனா.



"அப்ப தங்கச்சியவையளும் உங்கடை கப்பலிலேயே வந்தவை?"

அப்பா அவசரமாய் கேட்டார்.



"ஓமடா தம்பி. அங்கை பின்னுக்குப் பார். வந்து கொண்டிருப்பினம்."

சுந்தரிப்பாட்டி சொல்லி வாய் மூடவில்லை.



தூரத்தில் வரும் மாமா என் கண்களுக்குள் அகப்பட்டு விட்டார். பக்கத்தில் கொஞ்சம் பின்னால் மாமி மிக மெதுவாக நடந்து கொண்டு வந்தா.



அது யார் நொண்டியபடி, காலை இழுத்து இழுத்து ----- ? வடிவாகப் பார்த்தேன்.

அட அது பாபு. ஏன் இவன் நொண்டுறான்? ஏதும் விழுந்து கிழுந்து போட்டானோ? நான் யோசித்துக் கொண்டிருக்க, அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.



அப்பா நிம்மதிப் பெரு மூச்சோடு அவர்களை உள்ளே அழைத்தபடி

"இவன் பாபு ஏன் கிழவங்கள் மாதிரி காலை இழுத்திழுத்து நடக்கிறான். என்ன நடந்தது இவனுக்கு?" மாமியைக் கேட்டார்.



"அதையேன் அண்ணை கேக்கிறிங்கள்? பள்ளிக்கூடத்திலை புற்போல் (Football) விளையாடக்கை முழங்காலுக்கை முறிஞ்சு போட்டுதாம். உடனையே பிரின்சிப்பல் (Principle) ரெலிபோன் பண்ணிக் கூப்பிட்டவர். இவர் போய் ரக்ஸி (Taxi) பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவர். எல்லாம் உடனையே கவனிச்சு ஒப்பிரேசன் எல்லாம் செய்தும் போட்டாங்கள். பிறகுதான் கண்டுபிடிச்சாங்கள். எலும்பு சரியாப் பொருந்தேல்லையெண்டு. திருப்ப ஒப்பிரேசன் செய்யிறதுக்கெண்டு நாளெல்லாம் குறிச்சிருக்கக்கைதான் இந்தப் பிரச்சனையெல்லாம் வந்திட்டுது. டொக்டேர்ஸ்(Doctors) எல்லாரும் ஸ்றைக்(strike) பண்ணீட்டினம். ஒண்டும் செய்யேலாமல் போட்டுது. எல்லாரும் இவற்றை ப்ரெண்ட்ஸ் (Friends)தான். இவருக்காண்டியாவது வந்து செய்யிறம் எண்டு சிலர் சொன்னவைதான். ஆனால் ஸ்றைக்(Strike) எண்ட படியால் ஆஸ்பத்திரியிலை ஒப்பரேசன் செய்யக் கூடிய நிலைமையளும் இருக்கேல்லை. இதைப் பாத்துக் கொண்டு நிண்டு உயிரையே குடுக்க வேண்டி வந்திடும் எண்டு வெளிக்கிட்டிட்டம். அவனுக்குத்தான் எங்களிலை கோவம். நிண்டு ஒப்பிரேசனை முடிச்சிட்டு வெளிக்கிட்டிருக்கலாம் எண்டு வழியெல்லாம் ஒரே புறுபுறுப்பு."



மாமி சொல்லி முடித்ததும், "அப்ப இனி என்ன நடக்கும்?" அப்பா அக்கறையுடன் வினவினார்.



"என்ன... எலும்பை பொருத்திறதெண்டு சொல்லி ஒரு எலும்புக்கு மேலை ஒரு எலும்பை வைச்சு தங்கடை வேலையை முடிச்சிட்டாங்கள்.

இப்ப எனக்கு இந்த வலது கால் இடது காலை விட நீளத்திலை ஒரு இஞ்சி குறைஞ்சிட்டுது. ஓப்பரேசன் செய்யிறதெண்டால் உடனையே செய்யோணுமாம். நாள் போனால் ஒண்டுமே செய்யேலாதாம். அம்மாக்கும் அப்பாக்கும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தன். கேட்கேல்லை. என்னை இங்கை இழுத்துக் கொண்டு வந்திட்டினம். இனி என்ன? இப்பிடியே வாழ்நாள் பூரா கிழவன்கள் மாதிரி நான் காலை இழுத்து இழுத்து நடக்க வேண்டியதுதான்.

கப்பலுக்குள்ளை கூட சாப்பாடு குடுத்த ஆக்கள் என்னைப் பின் பக்கமாப் பார்த்திட்டு, ஒரு சின்னப் பெடியனைக் கூப்பிட்டு, அந்தக் கிழவனுக்கு இந்தப் பாணைக்குடு - எண்டு சொன்னாங்கள். நானொண்டும் கிழவனில்லை. எனக்கு இப்பதான் பதின்னாலு வயசு எண்டு கத்தோணும் போலை இருந்திச்சு."

பாபு மிகவும் சலிப்பும் வேதனையும் இழைந்தோடச் சொன்னான்.

எனக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது.



பாலு என்ன நினைத்தானோ, விரைந்து பாபுவின் அருகில் சென்று

"நீ பிள்ளையாருக்கு உதைஞ்சதுக்குப் பாத்தியோ கிடைச்சிட்டு."

என்றான்.



"காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதை சொல்லாதை."

பாபு - அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்பதை வலியுறுத்தினான்.



நான் ஓன்றுமே சொல்லவில்லை. ஆனால் பாபு இன்று வரை வலது காலை விட ஒரு இஞ்சி நீண்ட இடது காலை மெதுவாக இழுத்து இழுத்துத்தான் நடக்கிறான்?



அது எதனால்? எனக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை.



-முற்றும்-



சந்திரவதனா

யேர்மனி



பிரசுரம் - பூவரசு (செப்டெம்பர்-ஒக்டோபர்-2002)

எங்கே தவறு?

பறந்து வந்த சாப்பாட்டுக் கோப்பையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மதுமிதா குளிர்சாதனப் பெட்டிக்கும், மின்சார அடுப்புக்கும் இடையில் இருந்த இடைவெளிக்குள் புகுந்து குனிந்தாள். ஏழு மாதக் கர்ப்பிணியான அவளால் அந்தச் சிறிய இடைவெளிக்குள் தன்னை முழுமையாக அடக்க முடியவில்லை. கோப்பை அவளைத் தாண்டிச் சுவரில் மோதி, அவள் ஆசை ஆசையாகச் சமைத்த சாப்பாடுகள் நிலத்தில் சிதறின. ஏற்கனவே படபடத்த அவளது நெஞ்சு, கோப்பை உடைந்த சத்தத்தில் இன்னும் வேகமாக அடித்துக் கொண்டது. கால்கள் வெடவெடத்தன.



"உனக்குப் புருஷன் வீட்டாரோடை சரியான முறையில் பழகத் தெரியாது."

சாப்பாட்டை நிலத்தில் விதைத்ததோடு திருப்பிப்படாத மகேசன் அவளை அடிப்பதற்காக கோபாவேசத்துடன் நெருங்கினான்.



அந்தச் சிறிய சமையலறைக்குள் ஒடுங்கி நிற்கும் அவளுக்கு, தன்னை எப்படிக் காத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. பயத்தில் வீரிட்டாள். அந்தச் சத்தத்தில் குளியலறைக்குள் குளித்துக் கொண்டிருந்த கண்ணன் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தான். மூர்க்கத்தனத்துடன் மதுமிதாவை நோக்கி விரையும் மகேசனை கட்டிப் பிடித்து மறித்தான். ஒரு நொடிப்பொழுது பிந்தியிருந்தாலும் கர்ப்பிணியான மதுவின் உடலின் ஏதோ ஒரு பகுதியை மகேசனின் மூர்க்கத்தனம் பதம் பார்த்திருக்கும். மதுவின் கண்கள் கண்ணனுக்கு நன்றி கூறின.



"என்ன மகேசண்ணை நீங்கள்........! உங்களுக்கு மதுவை அடிக்க மனம் வருதே? ஏன் இப்பிடி அவளைக் கொடுமைப் படுத்துறீங்கள்? அவள் உங்கடை தம்பி பெண்சாதியெண்டதை மறந்திட்டீங்களோ?"

கண்ணன் வேதனை இழைந்தோட வினவினான்.



"நீ என்னடா கதைக்கிறாய். அவளுக்கு நான் அவளின்ரை புருஷன்ரை அண்ணன் எண்டதே மறந்து போச்சு. நீ அதுக்குள்ளை வந்திட்டாய்." சீறினான் மகேசன்.



மகேசனின் சீற்றம் மதுவை இன்னும் பயமுறுத்த அவள் கண்ணனின் பின் ஒளிந்து கொண்டாள்.



"என்னடி அவனுக்குப் பின்னாலை ஒளியிறாய்? அவன் என்ன உனக்குப் புருஷனோடீ?"



அவனது அநாகரிகமான பேச்சைக் கேட்க விரும்பாமல் மது தனது அறைக்குள் ஓடிச் சென்று கட்டிலில் வீழ்ந்து அழுதாள்.

"ஏன் எனக்கு இந்தக் கொடுமை. இன்னும் எத்தினை காலத்துக்குத்தான் இந்த அவஸ்தைகளை நான் தாங்கோணும்!"

மனசுக்குள் வேதனை பொங்கக் கண்ணீரைச் சொரிந்தாள்.

இன்று அவளது முதலாவது திருமணநாள். அதைக் கொண்டாடத்தான் அவள் ஸ்பெஷல் சமையல் செய்திருந்தாள்.



அவளது அக்கா சுபேதாவும், அத்தான் மகேசனுமாகத்தான் அவளை மகேசனின் தம்பி சபேசனுக்கு மனைவியாக்க இங்கு யேர்மனிக்குக் கூப்பிட்டார்கள்.



"கொம்பியூட்டர் கோர்ஸ் செய்கிறேன். வரமாட்டேன்." என்று மது மறுத்துத்தான் பார்த்தாள். சுவேதாதான் போனுக்கு மேல் போனாக எடுத்து ஊரிலிருந்து அம்மா சகோதரர்கள் படும் கஷ்டங்களைக் காரணங்களாக்கி யேர்மனிக்கு மதுவை வரச் செய்தாள்.



வந்து ஹோல் எடுத்து, தாலி கட்டி திருமதி. சபேசன் ஆகும் வரையிலான அந்த மூன்று மாதங்களும், மது சிட்டுப் போல் சிறகடித்துப் பறந்து திரிந்தாள். சபேசனின் கடைக் கண் பார்வையில் களித்திருந்தாள்.



கூட்டுக் குடும்பமாய் சுவேதா மகேசன் ஒரு அறையிலும், மது சபேசன் இன்னொரு அறையிலும், சபேசனின் நண்பன் கண்ணன் இன்னும் ஒரு அறையிலுமாக அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சில நாட்களுக்குள்ளேயே, மகேசனின் நடவடிக்கையில் ஏதோ தப்பிருப்பதை மது உணர்ந்து கொண்டாள்.



குளித்துக் கொண்டிருக்கையில் திறப்புத் துவாரத்தில் நிழலாடுவதும், உடை மாற்றிக் கொண்டிருக்கையில், எதேச்சையாக உள்ளே நுழைவது போல் மகேசன் அவள் அறையில் நுழைவதும், எதேச்சையான விடயங்கள் தான் என்று மதுவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் சந்தோசமான குடும்பத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் துணிவின்றி, மௌனித்திருந்து மனதுக்குள் சஞ்சலப்பட்டாள்.



சுவேதா வேலைக்குப் போகும் நேரத்தில் தனது வேலை நேரத்தை மாற்றி மகேசன் வீட்டில் நிற்கத் தொடங்கியதுமல்லாமல் "ரீ போட்டுத் தா. பக்கத்திலை இருந்து சாப்பாடு போட்டுத்தா. என்னோடை கதை......." என்று தொல்லைப் படுத்தவும், அவள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் அவளை மூர்க்கமாகத் தாக்க முற்படவும் தொடங்கிய போதுதான், அவள் துணுக்குற்று, சபேசனிடம் "உங்கள் அண்ணனின் நடவடிக்கை சரியில்லை" என்று முறையிட்டாள்.



முதலில் புரியாது விழித்த சபேசன், என்ன சொல்கிறாள் என்று புரிந்ததும் "என்ரை அண்ணனை எனக்குத் தெரியும். நாங்கள் ஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த குடும்பம். இப்பிடியான கதையளைச் சொல்லி எங்களைப் பிரிக்கலாம் எண்டு மட்டும் நினைக்காதை." புழுவைப் போல மதுவைப் பார்த்து பொரிந்து தள்ளினான்.



வெகுண்ட மதுவின் மனதுள் அன்றுதான் சபேசனிலிருந்த காதல் மயக்கம் மெதுமெதுவாய் கரையத் தொடங்கியது. `மனைவி நான் சொல்லுறன். நம்ப மறுக்கிறானே!` என்று சினப்பட்டாள்.



குழந்தை பிறந்ததும் மகிழ்வில் எல்லாவற்றையும் மறக்க முயன்றாலும், மகேசனின் அருவருப்பான லீலைகளில் வாழ்க்கையையே வெறுத்தாள். தனிக்குடித்தனம் போய் விடுவோம் என்று சபேசனிடம் மன்றாடிப் பார்த்தாள். பலனில்லாது போக, அக்கா சுபேதாவிடம் தனது அவஸ்தைகள் பற்றிச் சாடை மாடையாகச் சொல்லிப் பார்த்தாள்.



"உனக்கு அடக்க ஒடுக்கம் இல்லை. பெரியாக்களை மதிக்கிற குணமும் இல்லை. அவரே உன்ரை அடங்காப்பிடாரித் தனத்தைப் பற்றி என்னட்டைச் சொல்லிப் பேசினவர். நீ அடங்காமல் வாழுற ஆசையிலை, சாமிப் போக்கிலை வாழுற அவரையே நாக்கூசாமல் குறை கூற நினைக்கிறாய். இப்பிடி ஒரு தங்கைச்சி கிடைச்சதை நினைக்கவே எனக்கு வெட்கமாய் இருக்கு."



சுவேதா சீறிய சீறலில் மது அடங்கிப் போனாள். ஒடுங்கிப் போனாள். அனாதையாக உணர்ந்தாள். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அந்த வீட்டுக்குள் நடக்கும் அநியாயங்களை மென்று விழுங்கினாள்.



மகேசனுக்கு இது நல்ல வசதியாகப் போய்விட்டது. பகல் வேலையையே விட்டு விட்டு இரவில் வேலை செய்யத் தொடங்கினான். பகலில் இவளின் அழகிய மேனியைத் தொடுவதிலும், உரசுவதிலும் கண்ணாயிருந்தான். மறைமுகமாகக் கட்டிலுக்குக் கூட அழைத்துப் பார்த்தான். அவள் மறுக்கும் நேரமெல்லாம் மூர்க்கம் பிடித்தவனாய் அவளை அடிக்கவும் உதைக்கவும் முயற்சித்தான்.

இப்படியான சமயங்களில்தான் கண்ணன் இவர்கள் விடயத்தில் தலையிடத் தொடங்கினான்.



இந்த நரக வாழ்க்கையின் நான்கு வருட ஓட்டத்தில் மது இரண்டாவது குழந்தையையும் பெற்றிருந்தாள். தனிமைப் படும் நேரத்திலெல்லாம், தன்னைக் காத்துக் கொள்ள மதுவே கண்ணனை அழைக்கத் தொடங்கியுமிருந்தாள்.



அண்ணன் மேல் கண்மூடித்தனமான பாசம் வைத்திருக்கும் சபேசனோ, கணவன் மேல் அதீத நம்பிக்கை வைத்திருக்கும் சுபேதாவோ தராத பாதுகாப்பை, கண்ணன் தந்ததில் கண்ணன் மீது தன்னையறியாமலே பாசமாகிப் போனாள்.

மகேசன் "அவன் உன்ரை புருசனோ...?" என்று கேட்கிற ஒவ்வொரு தருணத்திலும் அவளுக்கு கண்ணனிடமான மன நெருக்கம் இறுக்கமாகிக் கொண்டே போனது.



அந்த மனநெருக்கம் தப்பென்று தெரிந்தும், தப்பிக்க முடியாமல் மது தடுமாறினாள். கட்டிய கணவன் பக்கத்தில் கட்டிலில் தூங்கிய போதும், மனம் துப்புக் கெட்டு பக்கத்து ரூம் கண்ணனைத் தொட்டுத் தொட்டு வருவதைத் தடுக்க முடியாமல் தவித்தாள்.



நான் என்ன கெட்டவளா? ஏன் இப்படியானேன்? தன்னையே கேள்விகளால் துளைத்தாள்.



- சபேசன் என் கணவன்தான். ஆனாலும் காதலிக்க முடியவில்லையே. வெறுப்பில்லா விட்டாலும் மனதால் விரும்ப முடியவில்லையே! ஏன் இப்படியானது? இவனுடனான நான்கு வருட வாழ்க்கை கசந்து விட்டதா? அல்லது கசக்க வைத்தானா?



பருந்தாகத் திரியும் இவன் அண்ணன் முன் நான் கோழிக்குஞ்சாய் நடுங்குவதைக் கூடக் கண்டு கொள்ளத் தெரியாத இவனை என்னால் கணவனாகவே கருத முடியவில்லையே! - தானே தனக்குப் பதிலும் சொன்னாள்.



இரவு விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், மது நினைவுகளால் கண்ணனைத் தழுவிக் கொண்டிருந்தாள்.



ஒரு பிற்குறிப்பு

-------------------------

ஐந்து வருடங்களின் பின் கலாச்சாரமும் பண்பாடும் தன் கழுத்தை நெரித்து விடப் போகிறதே என்ற பயத்தில், குடல் தெறிக்க ஓடிய மது, வேகமாக வந்த ரெயின் ஒன்றில் மோதி, யேர்மனிய நகரமொன்றின் தண்டவாளங்களில் இரத்தமும் சதையுமாகச் சிதைந்து போனாள்.

அவளைக் கூட்டி அள்ளி.................!



சந்திரவதனா

யேர்மனி

பிரசுரம் - ஈழமுரசு (30 செப்டெம்பர் - 06 ஒக்டோபர் 1999)

இவர்களென்ன மார்க்கண்டேயர்களா.....?

சங்கவிக்குக் கையும் ஓடேல்லை. காலும் ஓடேல்லை. இண்டைக்கு அவர் வாறார். எத்தனை வருசக் காத்திருப்புக்குப் பிறகு வாறார். சரியாப் பத்து வருசங்கள்.



அவளுக்கு இருபத்தைஞ்சு வயசா இருக்கேக்கை பேசின கலியாணம்.



மாப்பிள்ளை யேர்மனியாம். அப்ப அவருக்கு முப்பத்தெட்டு வயசு. சங்கவியை விட பதின்மூன்று வயசு கூட எண்டாலும் பரவாயில்லை. சீதனம் ஒண்டும் வேண்டாம் எண்டெல்லே சொல்லியிருக்கிறார். இனி இதுக்குள்ளை வயசைப் பார்த்துக் கொண்டிருக்கேலுமே!



போதாதற்கு சங்கவிக்குப் பின்னாலை 23, 20, 16 எண்டு மூண்டு குமருகள் எல்லோ காத்துக் கொண்டு நிக்குதுகள்.



அதுதான் மாப்பிள்ளைக்கு தலை முன்பக்கத்தாலை வெளிச்சுப் போனதைப் பற்றிக் கூட ஒருத்தரும் அக்கறைப் படேல்லை.



இந்த விசயத்திலை சங்கவி கோயில் மாடு மாதிரித்தான். பெரியாக்கள் எல்லாருமாப் பேசித் தீர்மானிச்சிட்டினம். அவள் தலையை ஆட்ட வேண்டியது தான் பாக்கி இருந்தது. அவளுக்கு வேறை வழியில்லை. ஆட்டீட்டாள்.



என்ன........! அம்மா கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் எண்டு எல்லாச் சஞ்சிகைகளையும் வேண்டிப் படிச்சதோடை விடாமல், அதிலை வந்த தொடர்கதைகள் எல்லாத்தையும் சேர்த்துக் கட்டி வைச்சிருந்தவள். அந்தப் புத்தகங்களுக்கை இருந்த பொன்னியின் செல்வன், ராஜமுத்திரை போன்ற அரச கதையளை எல்லாம் வாசிச்சு வாசிச்சு, அதிலை வாற ராஜகுமாரர்களைப் போலவும் இளவரசர்களைப் போலவும் தனக்குள்ளை ஒரு இலட்சிய புருசனை வரித்து வைத்திருந்தவளுக்கு, இப்ப கறுப்பா, கட்டையா வழுக்கைத் தலையோடை ஒருவன் வரப் போறான். ஆனால் வெளிநாட்டிலை இருந்து வரப் போறான்.



கதைகளில் வந்த மாநிறமான வீரபுருசர்களைக் கற்பனையில் கண்ட சங்கவிக்கு யேர்மனிய மாப்பிள்ளைதான் இனி தன் புருசன் என்பதை மனதில் பதிய வைக்கச் சில காலங்கள் தேவைப்பட்டது.



அது பல காலங்கள் ஆகியிருந்தால் கூட ஒன்றும் ஆகியிருக்காது. ஏனெண்டால் நியம் பார்க்காமல், புகைப் படம் பார்த்து, இரண்டு வருச கடிதக் குடித்தனத்துக்குப் பிறகு, திடீரென்று ஒரு நாள் மாப்பிள்ளையைத் தூக்கி ஜெயில்லை போட்டுட்டாங்களாம். என்ன - அவர் ஒண்டும் பெரிய பிழை விடேல்லையாம். தூள் வித்தவராம். கறிக்குப் போடுற தூள் இல்லை. மற்றது.



யேர்மன் சட்டதிட்டங்களும் பொலிஸ் கெடுபிடியளும் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே. மாப்பிள்ளையோடை சேர்ந்து இன்னும் நாலுபேராம். சங்கவி ராஜகுமாரர்களை யெல்லாம் களைந்து விட்டு யேர்மன் மாப்பிள்ளையை மனசுக்குள் குடி வைச்ச பிறகுதான் இந்தப் பிரச்சனை வந்ததெண்ட படியால், பிறகு யேர்மன் மாப்பிள்ளையையும் மனசிலிருந்து களைந்தெறிய சங்கவிக்குத் துணிவு வரேல்லை.



இனி என்ன செய்யிறது! கிறிமினல் குற்றவாளி என்ற பட்டப் பெயரோடை வெளியிலை வரப்போகும் மாப்பிள்ளைக்காண்டி இன்னும் ஐந்து வருசம் காத்திருக்க வேண்டி வந்தது.



இதுவே இப்ப எண்டால் மாப்பிள்ளையை நேரே கொண்டு போய் நாட்டிலை இறக்கி விட்டிருப்பாங்கள். அந்த நேரம் அந்தக் கடும் சட்டம் வராத படியால் மாப்பிள்ளையாலை யேர்மனியிலையே இருக்க முடிஞ்சுது.



சங்கவி காத்திருந்தாள். மனசு ஒண்டையே சுத்திச் சுத்திக் காத்துக் கொண்டிருக்க வயசு மட்டும் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாய் ஓடி 32 ஐத் தொட்டு விட்டது.



ஜெயிலில் இருந்து வெளியில் வந்தவன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு திருமணத்துக்காக சிங்கப்பூரை நோக்கிய பயணத்துக்கு ஆயத்தமாக இன்னும் 3 வருசங்கள் தேவைப்பட்டுது.



அதிலையென்ன வந்தது இப்ப..? சங்கவி 35 ஐத் தொட்டு விட்டாள் அவ்வளவுதான். மனசு மட்டும் இன்னும் 25 போல் மிகவும் இளமையாய் கனவுகளுடன் காத்திருந்தது.



மாப்பிள்ளை எல்லாச் செலவையும் பார்க்கிறார் எண்டுதான் பேச்சு. ஆனால் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு சிங்கப்பூருக்கு வாறதுக்கு இடையிலை சங்கவின்ரை அம்மாவுக்குத்தான் கொஞ்ச ஆயிரங்கள் செலவழிஞ்சிட்டுது.



எல்லாப் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தால் இன்னும் கூடப் போயிருக்கும். தனிய சங்கவியின்ரை 16 வயசுத் தங்கைச்சி பார்கவியையும் - அவளுக்கு இப்ப 26 ஆச்சு - அப்பா இல்லாத படியால் துணைக்கு மாமாவையும் தான் கூட்டிக் கொண்டு வந்தவள். அப்பா கடைசித் தங்கைச்சிக்கு 10 வயசா இருக்கக்கையே மாடு மிரிச்சுச் செத்திட்டார்.



சங்கவிக்கு காசெல்லாம் செலவழியுது எண்டு கொஞ்சம் அந்தரமாத்தான் இருக்குது. ஆனால் கல்யாணக் கனவுக்கு முன்னாலை அது சிம்பிள்தான். சிங்கப்பூருக்கு வந்து இரண்டு கிழமை பறந்தோடிட்டு. நல்ல காலமா சிங்கப்பூரிலை சங்கவியின்ரை தூரத்து உறவு மாமா குடும்பத்தோடை இருந்ததாலை ஹொட்டேல் செலவு இல்லாமல் தங்க வழி கிடைச்சிட்டு. மாப்பிள்ளை ஹொட்டேல் செலவை தான் பார்க்கிறன் என்று ஹொட்டேல்லை தங்கச் சொன்னவர். அவரும் எவ்வளவுக் கெண்டு தாறது. அவர் அங்கையிருந்து வந்தாப் பிறகு - இவ்வளவு நாளும் ஹொட்டேல்லை இருந்து சாப்பிட்ட காசைத் தாங்கோ எண்டு - கேக்கேலுமே..!



சங்கவிக்கு சிங்கப்பூரிலை ஒண்டும் தெரியாது. சின்னப் பிள்ளையா இருக்கேக்கை அப்பாவோடை போய்ப் பார்த்த ஒரு கறுப்பு வெள்ளை சினிமாப் படத்தின்ரை பெயர் மட்டும் ரங்கூன்ராதா என்று நல்ல நினைவாய் இருக்கு. அவ்வளவுதான் அவளுக்கு தான் இப்ப தங்கியிருக்கிற ரங்கூனைப் பற்றியும் தெரியும். அதுக்கு மேலையெல்லாம் அறியோணும் எண்ட ஆர்வம் கூட பெரிசாய் இல்லாமல், வரப்போற மாப்பிள்ளையையே மனசு வட்டமிட்டுக் கொண்டிருந்தது.



மீண்டும் மீண்டும் அரச கதைக் கதாநாயகர்கள் நினைவில் வந்து போனார்கள். கச்சை கட்டிய ராஜகுமாரிகளைப் போல் தன்னைக் கற்பனை செய்து கொண்டாள். அரண்மனைக்குச் சொந்தமான நீச்சல் தடாகத்தில் தான் குளித்துக் கொண்டிருக்க குதிரையில் வந்த மாப்பிள்ளை......... தன் அழகைக் கள்ளமாக ரசிப்பது போல.......... சங்கவிக்குக் கன்னம் எல்லாம் சிவந்து........ தனக்குள் தானே நாணி......!



குளித்து சேலை உடுத்தி முகத்தை நேர்த்தியாக்கி விட்டு நேரத்தைப் பார்த்தாள். இன்னும் மூன்று மணித்தியாலங்கள். - சே...... இந்த நேரம்....... ஏன் இப்படி நத்தை மாதிரி நகருது. - காத்திருப்பது சுகமானதுதான். ஆனால் எத்தனையோ வருசமாக் காத்திருக்கிறபோது தோன்றாத அவஸ்தை இறுதி நாளில் தோன்றுவது விசித்திரம்தான். நேற்றிரவிலிருந்து சங்கவிக்குள் இன்னவென்று சொல்ல முடியாத போராட்டம். இன்னும் காத்திருக்க வேணுமா..! என்ற ஏக்கம். மணித்தியாலங்களை எண்ணி எண்ணி இன்னும் இத்தனை மணித்தியாலங்கள் காக்க வேணுமே..! என்ற மலைப்பு.



மாப்பிள்ளையின் சொந்தங்கள் - அக்காமார், அண்ணாமார் எல்லாரும் சுவிஸ் யேர்மனி பரிஸ் என்று பரந்திருக்கிறார்கள். அவர்களும் எல்லாரும் இன்று சிங்கப்பூர் வந்து - சங்கவியைப் பார்க்கச் சேர்ந்து வருவதாகத்தான் திட்டம்.



சங்கவி பொறுமையிழந்து மீண்டும் நேரத்தைப் பார்த்தாள். குறிப்பிட்ட நேரம் தாண்டி விட்டது. அம்மா, தங்கைச்சி பார்கவி, மாமா எல்லாரும் கூட குளித்து வெளிக்கிட்டு மாப்பிள்ளையை வரவேற்க ரெடியாக இருந்தார்கள்.



ஆ........வந்து விட்டார்கள். சங்கவியின் கால்கள் பின்னிப் பிணைந்து தடுமாறி..... முடியவில்லை அவளால்..... ஓடி விட்டாள் அறைக்குள்.



உள்ளிருந்து திறப்புத் துவாரத்தினூடாக வருபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். - எங்கை மாப்பிள்ளையைக் காணேல்லை. இவர் எங்கை போட்டார்..? வரேல்லையோ..? - மனசு பட படத்தது. இதயம் அடித்துக் கொண்டது. வண்ண வண்ணச் சேலையில் பெண்கள், சிட்டுக்களாய் குழந்தைகள்..... - இவர் மட்டும் எங்கே......? -



சங்கவீ......! வெளீலை வா. அம்மா கூப்பிட்டா. சங்கவி மெல்லிய ஏமாற்றத்துடன் வெளியில் வந்தாள். எல்லோரது பார்வையும் சங்கவி மீது மேய்ந்து பின் பார்கவி மீது பாய்ந்தன. சங்கவியின் கண்களோ மாப்பிள்ளையைத் தேடியது. - ம்..கும்..... காணவில்லை. எங்கை அவர் வரேல்லையோ....? - வெட்கத்தை விட்டுக் கேட்டு விட்டாள்.



எல்லோர் பார்வையும் ஒருமித்து அவர் பக்கம்... அதுதான் கொல் கொல்லென்று இருமிக் கொண்டிருந்த ஒருவர் பக்கம் திரும்பியது. - இவர்தானா அவர்..! - சங்கவியால் நம்ப முடியவில்லை. கற்பனைச் சிறகுகள் ஒரு கணம் விரிய மறுத்தன. ஒரு கணம்தான். சுதாரித்துக் கொண்டாள்.



- 38வயது மாப்பிள்ளையும் பத்து வருசத்திலை 48வயசைத் தொட்டிருப்பார்தானே. என்ரை மரமண்டைக்குள்ளை இது ஏன் தோன்றேல்லை..? அது மட்டுமே 5வருசம் ஜெயிலுக்கை இருந்தவரில்லோ..! வருத்தம் பிடிச்சிருக்கும் தானே..! அவரும் அதுக்குப் பிறகு ஒரு போட்டோவும் அனுப்பேல்லை. ம்ம்..... ஆர் நினைச்சது....! இப்பிடிக் கேவலாமாப் போயிருப்பார் - எண்டு. மனசைச் சமாளித்தாள்.



ஒருவாறு சம்பிரதாயப் பேச்சுக்கள், சாப்பாடுகள் எல்லாம் முடிஞ்சு, அன்றைய பொழுதும் இருண்டு விட்டது. அதற்கிடையில் மாப்பிள்ளை வீட்டுக்காரர் ஏதேதோ குசுகுசுத்தார்கள். மாப்பிள்ளையின் அக்கா கணவன் மாமாவை வெளியில் வரச் சொல்லிக் கூட்டிக் கொண்டு போனார்.



திரும்பி வரும் போது மாமா பேயறைஞ்சது போல வந்தார். அவர்கள் ஹொட்டேல் புக் புண்ணியிருப்பதாகச் சொல்லிப் போய் விட்டார்கள். சங்கவி எதிர் பார்த்தது போல மாப்பிள்ளை அவளுடன் தனியாக ஒன்றுமே கதைக்கவில்லை. கடிதங்களில் கதைத்த மாப்பிள்ளை இப்போது சற்று அந்நியப் பட்டுப் போனார் போல உணர்ந்தாள். மாமா நிறையப் பேசவில்லை. கவலையாக இருந்தார்.



சங்கவிக்கு - மாப்பிள்ளை வரமுன்னம் மனசுக்குள்ளை இருந்த குழுகுழுப்பான நினைவுகள் எல்லாம் இப்ப இல்லாமல் போய் விட்டன போல ஒருவித வெறுமையாக இருந்தது. தங்கைச்சிதான் சும்மா சும்மா சீண்டிக் கொண்டிருந்தாள்.



இரவு நெடு நேரத்தின் பின் மாமா அம்மாவிடம் குசுகுசுப்பது சங்கவியின் செவிகளில் நாரசமாய் விழுந்தது.



- 35வயசு வந்த பொம்பிளையை ஆராவது கலியாணம் கட்டுவினையோ எண்டு அத்தான் காரன் கேட்டான். சங்கவின்ரை தங்கச்சியை வேணுமெண்டால் மாப்பிள்ளை கட்டுறாராம். 35 வயசான சங்கவியைக் கட்டி என்ன பிரயோசனமாம்.



சங்கவிக்கு வானம் தரையில் இடிந்து விழுவது போன்றதொரு பிரமை.



எனக்கு மட்டும்தான் வயசு ஏறியிருக்கோ.......! அவருக்கு வயசென்ன இறங்கியிருக்கோ.......! 48 வயசுக் கிழடுக்கு 26 வயசுப்பெண் தேவைப்படுதோ.......!

நாடி நரம்பெல்லாம் புடைத்து.......! கோபம் அனல் கக்கியது.

நாளைக்கு வரட்டும் கேட்கிறன். சங்கவி மனசுக்குள் கறுவிக் கொண்டாள்.



- சங்கவிக்குத்தான் வாழ்க்கை அமையேல்லை. பார்கவியாவது வாழட்டும் - என்று அம்மாவும் மாமாவுமாகத் தீர்மானித்தது அவள் காதுகளில் விழவில்லை.



-முற்றும்-



சந்திரவதனா

யேர்மனி



பிரசுரம் - பூவரசு - 75வது சிறப்பிதழ் ( வைகாசி-ஆனி 2002)

பிரசுரம் - திண்ணை - (March - 2004)

வசந்தம் காணா வாலிபங்கள்

அதிகாலையில் ஒலித்த தொலைபேசி மணியில் திடுக்கிட்டெழுந்த கோபுவின் நெஞ்சு படபடத்தது. ரெஸ்ரோறன்ற் வேலையை முடித்து விட்டு வந்து மூன்று மணிக்குப் படுத்தவனை நாலுமணிக்கே தொலைபேசி குழப்பி விட்டது. சற்று எரிச்சலுடன் போர்வையை இழுத்தெறிந்து விட்டு தொலைபேசியை நோக்கி ஓடினான்.



இந்த அகால வேளையில் இப்படி தொலைபேசி அலறினால் அது ஊரிலிருந்து வரும் அழைப்பாகத்தான் இருக்குமென்பது அவனுக்குத் தெரியும். - வேறுயார் அப்பாவாகத்தான் இருக்கும். - மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.



முன்னர் என்றால் ஊரிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பில் காசு கரைந்தாலும் அப்பாவுடன் பேசுவதில் அவனிடம் உற்சாகம் பிறக்கும். இப்போது போட்டி போட்டுக் கொண்டு பல ரெலிபோன் கார்ட்டுகள் வந்து தொலைபேசிச் செலவைக் குறைத்திருந்தாலும் அவனது உற்சாகம் முன்னரைப் போலில்லாது குறைந்து விட்டது.



ஊரில் உள்ளவர்கள் பாடு கஷ்டம்தான். அவன் இல்லையென்று சொல்லவில்லை. மாடு போல் உழைத்து........ அப்படிச் சொல்வதையும் விட அதிகமாகத் தன்னை வருத்தி, உழைத்து உழைத்து ஊருக்குத்தான் அனுப்பினான்.



பதினைந்து வருடங்களின் முன் 84 இல் அவன் யேர்மனிக்கு வந்த போது, அவன் இருபது வயது கூட நிரம்பாத அழகிய வாலிபன். வாழ்க்கையின் கனவுகள், வசந்தத்தின் தேடல்கள் எல்லாமே அவனுள்ளும் நிறைய இருந்தன.



ஆமியிடம் பிடிபட்டு பூசாவில் அடைபடவோ அல்லது அநியாயமாகச் சுடுபடவோ விரும்பாமல் அம்மா, அப்பாவின் ஆலோசனையுடன் சொந்த நாட்டை விட்டு ஓடி வந்தவன்.



வெளிநாடு - அதுவும் ஐரோப்பா - கோட், சூட்டுடன், ரையும் கட்டிக் கொண்டு......! அழகிய நினைவுகளும், இனிய கனவுகளும்......... யேர்மனியில் முகாம்களுக்குள் எட்டுப்பேரை அல்லது ஒன்பது பேரை ஒரு அறைக்குள் விட்ட போது முழுவதுமாகக் கலையாது போனாலும் கொஞ்சங் கொஞ்சமாகக் கரையத் தொடங்கின.



ஊருக்குக் கடிதமெழுதப் போதுமாயிருந்த பொக்கற் மணி 70டீஎம் (DM) மும், வேலையும் இல்லாது வேறு இடம் போக அனுமதியும் இல்லாது இருந்ததில் வெறெதுவும் செய்ய வழி தெரியாது பியர் கேஸ் (Bier Case) இற்கும் சிகரெட்டுக்கும் அடிமையாகிப் போன, கூட இருந்தவர்களுடன் கூட வைத்து காணாமற் போயின.



களவாய் ஸ்ரோபெரி பழம் பிடுங்கும் வேலை செய்ததில் சிறிது பணம் சேர்ந்தாலும் அழகாய் இருந்த கைகளும், சுகமாக இருந்த முதுகும் கறுக்கவும் வலிக்கவும் தொடங்கின. ஆரம்பத்தில் கறுத்துப் போன கன்னங்களையும், வெடித்துப்போன விரல்களையும் பார்த்து மனம் சிறிது வெறுத்துப் போனாலும் ஊருக்கு அனுப்பப் பணம் கிடைத்ததில் தொடர்ந்து வெலை செய்ய மனம் மறுக்கவில்லை.



முகாமில் கிடைக்கும் யேர்மன் சாப்பாட்டைச் சாப்பிட முடியாமல், ஆளுக்கு 1டீஎம் (DM) என்று முகாமிலிருந்த எல்லாத் தமிழர்களுமாய் போட்டு வாங்கிய மின்சார அடுப்பை அறைக்கு அறைமாற்றி கட்டிலுக்குக் கீழே ஒளித்து வைத்து ஹவுஸ் மைஸ்ரர் (Haus Meister) இற்குத் தெரியாமல் சமைப்பதே ஒரு சாதனையாகி, ஒரு கோழியை ஒன்பது பேர் பகிர்ந்துண்பது அதை விடப் பெரிய சாதனையாகி, கொட்டும் பனியில், குளிரின் கொடுமையில் வாழ்க்கையே வேதனையாகியதில், படிக்கும் நினைவும் ஐரோப்பிய வாழ்க்கை பற்றிய கனவும் கலைந்த போதுதான் ஆளுக்கொரு நகரமாய் அனுப்பப் பட்டார்கள்.



கோபுவுடன் இன்னொரு தமிழனையும் அனுப்பினார்கள். அவனுக்கு அந்த நகர் பிடிக்க வில்லையென்று, யாரையோ பிடித்து எப்படியோ கதைத்து கனடா போய்ச் சேர்ந்து விட்டான். முகாமை விட்டு வெளியில் வந்த சந்தோசத்தை வாய் விட்டுச் சொல்ல, ஒரு தமிழ்க்குருவி கூட இல்லாது கோபு தனித்துப் போய் விட்டான்.



தனிமையில் பேசி தனிமையில் சிரித்து வேலை செய்ய அனுமதியோ வேறு நகரம் செல்ல ஒரு விதியோ இல்லாத நிலையில் பைத்தியக்காரன் போலத் திரிந்தான். தருகின்ற 350 டீஎம் (DM) இல் - சோறையும் கோழியையும் சாப்பிட்டு விட்டு மீதியை ஊருக்கு அனுப்பினான்.



பணம் கிடைத்ததும் அம்மாவும், அப்பாவும், தங்கைமாரும், தம்பிமாரும், எப்படி யெல்லாம் மகிழ்வார்கள் என நினைத்துத் தனக்குள் மகிழ்ந்தான்.



- என்ரை ராசா இல்லே......... ! பாசம் பொங்க ஊரிலிருந்து வந்த கடிதங்கள் நியமாகவே பாசத்தைச் சுமந்து வந்தாலும் போகப் போக - சாமான் விலையேற்றம் கூட அனுப்பு. - என்றன.



பாசை தெரியாமல் படிகள் ஏறி - வேலை இருக்கா - என்று கேட்டதில் பேக்கரி பிற்சேரியா ரெஸ்ரோறன்ற் என்று வேலைகள் கிடைத்தன. வேலைக்கான அனுமதிப் பத்திரம் இல்லாது களவாய் வேலை என்பதால், வேலை கொடுத்தவர்களும் போதிய ஊதியம் கொடுக்க மறுத்தார்கள். வேலையை மட்டும் நன்றாக வாங்கினார்கள். ஊரிலுள்ள உறவுகளின் தேவைகள் அவனால்தான் தீர்க்கப் பட வேண்டும் என்பதால் - வேண்டாம் என்று - வேலையை விட்டுப் போகவும் வழி தெரியாது கூட்டல் கழுவல் துடைத்தல் சலாட் கழுவுதல்........ என்று எல்லாவகையான வேலைகளையும் செய்தான்.



இப்படியே வாழ்க்கை மாறி அழகிய இருபது வயது வாலிபனான கோபு குளிரிலும் பனியிலும் வேலையிலும் ஆறு வருடங்களைக் கழித்த பின்னே வேலை செய்யவும் வேறு நகரம் செல்லவும் அனுமதி கிடைத்தது.



இனியாவது வாழ்க்கை சிறப்பாகி விடுமென்ற நமஇபிக்கையில் ஓடி ஓடி வேலை தேடினான். வேறு நகரங்களுக்குச் சென்று நண்பர்களைச் சந்தித்தான். பாசை தெரியாத நாட்டில் படித்த படிப்புக்கோ பகட்டான வேலைக்கோ இடமில்லை என்பதை வேலை தேடிய போதும் நண்பர்களுடன் பேசிய போதும் உணர்ந்தான்.



படிக்க என்று ஆசை வந்தது. ஊருக்குப் பணம் அனுப்ப வேண்டிய பாரிய பிரச்சனையில் ஆசை ஆசையாகவே இருக்க களவாய் செய்த வேலைகளையே அனுமதியுடன் தொடர்ந்தான்.



ஊரில் தங்கைமார் வளர வளர, ஒரு வேலையில் கிடைத்த பணம் போதாமல் இரண்டு வேலை, மூன்று வேலை என்று தேடி வாழ்க்கை பண்த்துக்கு ஓடுவதாய் மாறிவிட்டது.



"பக்கத்து வீடு மாடியாய் எழுந்து விட்டது. நாம் மட்டும் இப்படி இருப்பது உனக்குத்தான் அழகில்லைத் தம்பி.....!"



"தங்கைச்சிக்கு ஒரு வரன் சரி வந்திருக்கு. கனடாப்பெடியன். ஆறு இலட்சம் சீதனம் கேட்கினம். இந்தியாவிலை கலியாணத்தை வைக்கோணுமாம்...... உன்ரை கையிலைதான் அவளின்ரை வாழ்க்கை தங்கியிருக்குத் தம்பி....!"



இப்படியாகத் தொடர்ந்த ஊர்க்கடிதங்கள் அவனைப் பணத்துக்காகத் துரத்தின. பஸ்சிலும் ரெயினிலும் ஓடிக் களைத்தவன் சொந்தமாகக் கார் வாங்கி ஓடி இன்னும் களைத்தான். பாசம் "பேசாதே" என்று கட்டிப் போட அலுத்தான்.



உழைத்து உழைத்து அனுப்பியவன் - முப்பதைத் தாண்டிய பின்னும் "உனக்கொரு கல்யாணம் செய்து பார்க்க எமக்காசை" என அம்மாவோ அப்பாவோ ஒரு வரி எழுதாததில் மனதுக்குள் சலித்தான்.



வாழ்க்கையின் ஆசைகளும் வசந்தத்தின் தேடல்களும் ஏக்கங்களாய் மாறின. நரையோடத் தொடங்கி விட்ட தலையில் மெல்லிய வழுக்கையும் விழத் தொடங்கியது. அடிக்கடி கண்ணாடியைப் பார்த்து ஆதங்கப் படும் பலநூறு ஐரோப்பியத் தமிழ் இளைஞர்களின் வரிசையில் - 35 வயதைத் தொட்டு நிற்கும் பிரமச்சாரியாக அவனும் நின்ற போதுதான் அவன் மதுவைக் கண்டு கொண்டான்.



மதுவின் சினேகம் அவனைத் தென்றலாய் தழுவிய போதுதான், தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தான். தனக்கும் ஒரு வாழ்வு வரப் போகிறதென்ற மகிழ்வில் அது பற்றி ஊருக்கு எழுதினான்.



"இன்னுமொரு தங்கை இருபந்தைந்து வயதில் கல்யாணமாகாமல் இருக்க... உனக்கென்ன அவசரம்..?" என்றது ஊர்க்கடிதம்.



வாழ்க்கை ஆசை அவனை வாட்ட, யார் சம்மதமுமின்றி, பதிவுத் திருமணம் செய்து மதுவை மனைவியாக்கிக் கொண்டான்.



அதுதான் இப்போ பிரச்சனை. "தங்கை இருக்க நீ கல்யாணம் செய்தது மாபெருந்தப்பு" என்று அம்மாவும் அப்பாவும் மட்டுமில்லை. மாமா மாமி சித்தப்பா சித்தி... என்று எல்லோருமே மனங் கொண்ட மட்டும் திட்டி எழுதி விட்டார்கள்.



மனம் சலித்து விட்டது. யாரும் அவனுக்கு இப்போ கடிதம் எழுதுவதில்லை. ஆனாலும் மாசம் தவறாது வவுனியா வரை வந்து தொலைபேசியில் அழைத்து பணத்தை உண்டியல் மூலம் எடுத்துப் போக அப்பா மறப்பதில்லை.



ஓடிப்போனவன் ரெலிபோனை எடுத்தான். அப்பாவின் அழைப்புத்தான் அது. ஓரு நிமிட அழைப்பில் "திருப்பி எடு" என்று சொல்லி விட்டு அப்பா வைத்து விட்டார். திருப்பி எடுத்தான். ஊர் நிலைமை பற்றி, கஷ்டங்கள் பற்றி அப்பா நிறையச் சொன்னார்.



அம்மா சகோதரங்கள் பற்றி நாத்தழுதழுக்க விசாரித்தான்.



"தம்பி..! இந்த முறை கொஞ்சங் கூடவா அனுப்பு தம்பி! நீ அனுப்பிறது ஒரு மூலைக்கும் போதுதில்லை. எல்லாம் விலை. கொக்கான்ரை பிள்ளைக்கும் பிறந்தநாள் வருது. அதுவும் பெரிசாச் செய்யாட்டி உனக்குத்தான் மரியாதையில்லை. ஒரு ஆயிரமாவது கூட அனுப்பு...... நாளைக்குக் காசு கொண்டு வந்து தந்திடுவினைதானே..!" அப்பா மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.



ஏற்கெனவே ஏஜென்சிக்குக் காசு கட்டிவிட்டு மொஸ்கோவில் இரண்டு வருடங்களாக நிற்கும் தம்பியை வெளியில் எடுக்க இன்னும் சில ஆயிரங்கள் ஏஜென்சிக்குக் கொடுக்க வேண்டும். அந்தப் பணப் பிரச்சனையே கோபுவின் தலைக்குள் சுமையாக இருக்க அப்பா இன்னுமொரு ஆயிரம் கூடக் கேட்கிறார்.



ஏற்கெனவே குற்றவாளிக் கூண்டில் உறவுகளால் நிறுத்தப் பட்ட அவனால் -அப்பாவின் வேண்டுதலை மறுக்க முடியவில்லை.



"ஓமப்பா நான் அனுப்புறன். நாளைக்கே காசைக் கொண்டு வந்து தருவினம்." என்றான்.



"உன் மனைவி மது எப்படி இருக்கிறாள்?" என்று அப்பா ஒரு வார்த்தை கேட்கவில்லை. தொலைபேசி வைக்கப் பட்டு விட்டது.



கோபுவின் மனம் வேதனைப் பட்டது.



இந்த ஆயிரங்களை எப்படிச் சமாளிக்கலாம் என்ற யோசனையில் வேதனை விரக்தியாக மாறி யோசனையில் மூளை குழம்பியது. ஆறுதல் படுத்த இருக்கும் மனைவியுடனும் ஆறி இருந்து பேச நேரமில்லை. அடுத்த வேலைக்குப் போவதற்கிடையில் இன்னும் ஒரு மணித்தியாலம் தான் படுக்கலாம். ஓடிப் போய் படுத்தான். ஆனால் தூக்கம் அவனை விட்டு தூர விலகியிருந்தது.



-முற்றும்-



சந்திரவதனா செல்வகுமாரன்

யேர்மனி

October-2000



பிரசுரம் - ஈழமுரசு (4 - 10 ஜனவரி - 2001)

Sunday, July 04, 2004

விழிப்பு

இரவு ஒருமணிக்குப் பின் வீட்டுக்குள் நுழைந்த சங்கரைப் பார்த்து "நீங்கள் செய்யிறது உங்களுக்கே நல்லா இருக்கோ..?" இந்து குமுறினாள்.



"இதுதான் இதுக்குத்தான். எனக்கு வீட்டுக்கு வரவே பிடிக்கிறேல்லை. பெண்டாட்டி எண்டால் வீட்டுக்கு வாற கணவனை அன்பா சிரிச்ச முகத்தோடை வரவேற் கோணும்." சினந்தான் சங்கர்.



அவன் ஸ்ரெபியுடன் சுற்றி விட்டுத்தான் இவ்வளவு தாமதமாக வருகிறான் என்பது அவளுக்கு நன்கு தெரிந்ததால் "அந்தஆட்டக்காரியோடைதானே இவ்வளவு நேரமும் சுத்திப் போட்டு வாறிங்கள். எனக்குத்தெரியும்." என்றாள் எரிச்சலும் கோபமுமாக.



"சும்மா காகம் கத்திற போலை எப்பவும் கத்திக் கொண்டிராதை. குடும்பம் எண்டால் இப்பிடிக் கனக்க இருக்கும். பொம்பியைள்தான் இதையெல்லாம் அனுசரிச்சுப்போகோணும். ஏன் உனக்கு கொம்மா இதொண்டும் சொல்லித் தரேல்லையே? என்ன வளர்ப்பு வளர்த்திருக்கிறாவோ? ஒரு நல்ல பழக்கங்கள் கூடப் பழக்காமல்.....! உன்னைப் போய் கலியாணம் கட்டினனே..!" சங்கர் வழக்கம் போலவே வக்கிரத்தனமாகக் கதைத்தான்.



இந்துவால் அவனது அலட்சியம கலந்த வக்கிரப் பேச்சை அணுவளவேனும் ரசிக்க முடியவில்லை. செய்வதையும் செய்து விட்டு அதற்கு வேறு நியாயம் தேடும் அவனது நியாயமற்ற பேச்சு அவளை கோபத்தில் கொதிக்க வைத்தது.

ஏற்கனவே மனதை வதைத்துக் கொண்டிருந்த வேதனைக்கும் ஏமாற்றத்துக்கும் கோபம் தூபம் போட "நானும் இப்பிடி வேறொருத்தனோடை சுத்திப் போட்டு வந்தால் நீங்கள் பொறுத்துக் கொள்ளுவிங்களோ? அல்லது உங்களாலை சகிக்கத்தான் முடியுமோ?" சீற்றத்துடன் கேட்டாள்.



சங்கருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. "என்னடி கதைக்கிறாய்? ஆம்பிளையள் எண்டால் அப்பிடி இப்பிடித்தான் இருப்பினம். அது சகயம். அதுக்காண்டி பொம்பிளையளும் அப்பிடிச் செய்யிறதோ?" கத்தினான்.



"ஏன் செய்யக் கூடாது." கோபம் அழுகையாக வெடிக்க கேவலுடன் வார்த்தைகளை வீசினாள் இந்து.



"பெண் எண்டால் தாய். தாய் தெய்வத்துக்குச் சமமானவள். அந்த தெய்வத்துக்குச் சமமான தாய் பிள்ளையளைப் பெத்து பாலூட்டி, சீராட்டி வளர்த்து ஆளாக்க வேண்டியவள். அவள் அப்பிடிச் செய்யக் கூடாது." கோபம் கொப்பளிக்க சங்கர் இன்னும் சத்தமாகக் கத்தினான்.



இந்துவும் விடவில்லை. "பெண்ணெண்டால் தெய்வம் என்பது உங்களுக்குத் தெரியுது. நீங்கள் செய்யிறது ஒரு செய்யத் தகாத வேலை என்பதும் உங்களுக்குத் தெரியுது. இருந்தும் அப்பிடியொரு வேலையைச் செய்து பெண்ணென்ற தெய்வத்துக்கு துரோகம் செய்யி.......!" இந்து சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கவில்லை.



அதற்கிடையில் இடைமறித்த சங்கர் "இப்ப கதையை நிப்பாட்டு. விட்டால் கதைச்சுக் கொண்டே போவாய். புருசன் வந்திருக்கிறன். சாப்பிட்டியோ குடிச்சியோ எண்டு கூடக் கேட்காமல் ....., உன்னை இங்கை கூப்பிட்டன் பார். அது என்ரை பிழை. ஊரிலையெண்டால் இப்பிடிக் கதைப்பியே?. வாய் வெத்திலை போட்டிருக்கும்;.....! நீ திரும்பி ஊருக்கே போயிடு." என்றான். அவன் வார்த்தைகளில் நையாண்டியும் அதிகாரமும் தொக்கி நின்றன.



இந்து கொதித்துப் போனாள். "இப்பிடியே போனால் நான் தற்கொலை செய்து செத்துப் போடுவன். அதுக்குப் பிறகுதான் உங்களுக்கு என்ரை அருமை தெரியும்." என்றாள்.



இப்போது சங்கர் பெரிய நையாண்டிச் சிரிப்பொன்றைச் சிரித்தான். இந்துவுக்கு அவனைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது. சிரித்தது போதாதென்று "நீ எங்கை சாகப்போறாய்? நீ செத்தாயெண்டால் அதையிட்டுச் சந்தோசப் படப் போற முதலாள் நானாத்தான் இருக்கும்." என்றான்.



இந்துவை அவன் வார்த்தைகள் தீயாகச் சுட்டன. சங்கர் தொடர்ந்து "போன முறையும் இப்பிடித்தான் சாகப் போறன் எண்டு சொல்லி மருந்துகுடிச்சியே! அப்ப நான் உன்னைத் தூக்கிக் கொண்டு ஓடிப் போய் கொஸ்பிட்டல்லை போட்டனே! அதுதான் நான் செய்த பெரிய தப்பு." என்றான்.



மகன் கோகுலை கிண்டர் கார்டனில் விட்டுவிட்டு பகுதி நேர வேலைக்குப் போய்க் கொண்டிருந்த இந்துவின் மனதில் நேற்று சங்கருடன் நடந்த சண்டையும் சங்கரின் கர்ணகடுரமான ஈவிரக்கமற்ற வார்த்தைகளுமே சுழன்று கொண்டிருந்தன. கோபத்தில் உடம்பு கொதிப்பது போல் இருந்தது.



போனவருடம் இப்படித்தான். சண்டையில் வாக்குவாதம் உச்சக் கட்டத்துக்கு வர இந்து தற்கொலை செய்யப் போவதாகச் சொன்னாள். உடனே சங்கர் "நல்லாச் செய். அப்பாடா ஒரு சனியன் துலைஞ்சுது எண்டு நான் நிம்மதியா இருப்பன்." என்றான்.



கோபம் தலைக்கேற இந்து ஓடிப்போய் மலசலகூடம் கழுவும் மருந்தை எடுத்துக் குடித்து விட்டாள். மருந்து உள்ளே போகும் போதுதான் தான் செய்தது எத்தகையதொரு மடைத்தனமான வேலை என்பதை உணர்ந்தாள். உணர்ந்து என்ன பயன்? உடலுக்குள் தீப்பற்றி எரிவது போன்ற வேதனையில் துடித்து விழுந்தாள்;.



சங்கர் இதைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை. பயந்து போய் விட்டான். வேதனையில் புரளும் இந்துவைத் தூக்கிக் கொண்டு ஓடிப்போய் காரில் ஏற்றினான். இந்து அப்படியே மயங்கி விட்டாள்.



அவள் மீண்டும் கண் விழித்த போது மருத்துவமனையில் கட்டிலில் படுத்திருந்தாள். உடம்பெல்லாம் புண்ணாய் வலித்தது. எழும்ப முயற்சித்தாள். அவளால் அசையக் கூட முடியவில்லை. நடந்த விடயங்களை மெல்ல அசை போட்டுப் பார்த்தாள். மனசை சோகம் நிறைக்கக் கண்கள் கலங்கின. அழக் கூட அவளால் முடியவில்லை. அசதியில் மீண்டும் தூங்கி விட்டாள்.



மீண்டும் அவள் கண் விழித்த போது சங்கர் கோகுலுடன் வநதிருந்தான். கோகுல் சோகமாய் இருந்தான். இந்துவின் கைகளைப் பிடித்த படி அழுதான். "எப்ப அம்மா வீட்டை வருவீங்கள்?" என்று ஏக்கத்துடன் கேட்டான். இந்துவால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. நா உலர்ந்திருந்தது. அவனை அணைத்;துக் கொள்;ள எண்ணி கைகளை நீட்ட எத்தனித்தாள். அவளால் கைகளை அசைக்கவே முடியவில்லை. சங்கரைப் பார்த்தாள். கொஞ்சம் கலைந்து போய் இருந்தான்.



"தவறுதலா மருந்தைக் குடிச்சிட்டன் எண்டுதான் டொக்டரிட்டைச் சொல்லு. பிறகு ஏதாவது ஏடாகூடாமாச் சொல்லி என்னை மாட்டிப்போடாதை." என்றான்.

இந்து அவனுடன் எதுவுமே பேசவில்லை. அவளுக்கு கோகுலைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்தது.



சங்கர் போன பின் நேர்சைக் கேட்டு வேறொரு நகரில் இருக்கும் அண்ணன் மாதவனுடன் ரெலிபோனில் தொடர்பு கொண்டு நடந்தவைகளைச் சொன்னாள். அவன் அடுத்த சில மணிகளிலேயே பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தான். "நான் சங்கரை என்னென்று கேட்கிறன். நீ கவலைப் படாதை." என்றான். பக்கத்தில் இருந்து ஆறுதலாகக் கதைத்தான். ஆனால் கடைசியில் போகும் போது "இந்து இனி இப்பிடியான வேலையளைச் செய்து போடாதை, என்னெண்டாலும் பொம்பிளையள்தான் அனுசரிச்சுப் போகோணும்" என்று சொல்லி விட்டுப் போனான்.



பின்னர் இந்து நோர்வேயில் இருக்கும் அண்ணனுடன் தொடர்பு கொண்ட போது அவனும் மாதவனைப் போலவே பதறினான். சங்கர் மேல் கோபம் கொண்டு திட்டினான். ஆனால் கடைசியில் "இந்து! ஆம்பிளையளெண்டால் அப்பிடி இப்பிடித்தான் இருப்பினம். பொம்பிளையள்தான் கெட்டித்தனமா அதுகளை உணர்ந்து நடக்கோணும.;....! உனக்கு கெட்டித்தனம் போதாது" என்று சலித்தான். ரேலிபோனை வைக்கும் போது "இந்து இனி இப்பிடி புத்தி கெட்ட முடிவுகளை மட்டும் எடுத்துப் போடாதை. சங்கரைத் திருத்தப்பார்." என்றான்.



இந்துவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. "எல்லாரும் என்னிலைதானே பழியைப் போடினம். சங்கரின்ரை தவறு ஒருத்தருக்கும் தவறாத் தெரியேல்லையே! சங்கராவது என்ரை நடவடிக்கையாலை திருந்தினானோ எண்டு பார்த்தால் அவன் கூடத் திருந்தினதாத் தெரியேல்லையை" மனசுக்குள் பெரிதும் குழம்பினாள்.



சங்கர் இந்துவைப் பார்க்க இடைக்கிடை மருத்துவமனைக்கு வந்து போனான். மாதவன் வந்து இந்துவைப் பார்த்துப் போன மறுநாளே கோகுலை மாதவன் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டான். பொறுப்பான அப்பாவாக வீட்டில் நின்று கோகுலைப்பார்க்கவில்லை. எல்லாவற்றையும் மருத்துவமனையின் தனிமையில் இருந்து யோசித்துப் பார்த்த இந்துவுக்கு கோகுலை நினைக்க நினைக்க அழுகையாக வந்தது. சங்கருக்காக கோகுலைத் தண்டிச்சுப் போட்டனோ என்ற நினைவு அவளைப் பாடாய்ப் படுத்தியது.



இப்படியே சிலவாரங்கள் ஒடி இந்துவும் ஒரளவு குணமாகினாள். "மிஸிஸ் சங்கர்..! உங்கடை குடல் மிகவும் பலவீனமாப் போயிட்டுது. இந்த முறை ஏதோ அதிர்ஸ்ட வசமாத் தப்பீட்டிங்கள். இன்னொருக்கால் இப்பிடி நீங்கள் மருந்தைக் குடிச்சால் எங்களாலை உங்களைக் காப்பாற்றேலாமல் போயிடும். இது உங்கடை உடம்பு நீங்கள்தான் உங்கடை உடம்பிலை கவனமாயிருக்கோணும்....!" என்ற அன்பான கண்டிப்பான பல நிபந்தனைகளோடு டொக்டர் அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.



வீட்டுக்கு வந்த பின் சங்கரிடம் தென்பட்ட சில மாற்றங்களை வைத்து சங்கர் திருந்தி விட்டான் எனறே நினைத்தாள். அவளின் அந்த நம்பிக்கையெல்லாம் சில நாட்களுக்குத்தான். நாட்கள் போகப் போக அவன் திருந்தவில்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்டாள். தாங்க முடியாமல் அடிக்கடி குமுறினாள். அந்தக் குமுறலின் பிரதி பலிப்புத்தான் நேற்றைய காரசாரமான சண்டையின் காரணமானது.



மீண்டும் தனக்கும் சங்கருக்கும் இடையில் மனதளவில் இவ்வளவு தூரம் விரிசல் ஏற்பட்டு விட்டதில் அவளுக்குச் சரியான கவலையாக இருந்தது. நேற்று அவன் சொன்ன வார்த்தைகள் "நீ செத்தால் அதையிட்டுச் சந்தோசப் படப்போற முதல் ஆள் நானாத்தான் இருக்கும்" அவளுக்குள் திரும்பத் திரும்ப அந்த வார்த்தைகள் ஒலித்துக் கொண்டே இருந்தன.



இந்தச் சண்டை நடந்த போது கோகுல் நித்திரை என்றுதான் இந்து நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் சண்டை முடிந்து சங்கர் போய்ப் படுத்த பின் அவள் வெகுநேரமாக அந்தக் கதிரையிலேயே இருந்து அழுது கொண்டிருந்தாள். அப்போது கோகுல் வந்து "அம்மா அழாதைங்கோ வந்து படுங்கோ" என்றான். அவன் கண்கள் நீண்ட நேரம் அழுததற்குச் சான்றாக வீங்கிச் சிவந்திருந்தன.



அதை நினைக்க நினைக்க இந்துவுக்கு ஒரே கவலையாக இருந்துது. "கோகுல் மீது பச்சாத்தாபம் ஏற்பட்டது. ஏன்தான் அவனுக்கு இந்தத் தண்டனையோ? என்ன பாவம் செய்து எனக்குப் பிள்ளையாப் பிறந்தானோ? எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிற அழுமுஞ்சி அம்மா, யாரோ ஒருத்தியோடு நாளெல்லாம் ஊர் சுற்றி விட்டு நேரங் கழித்தே வீட்டுக்கு வரும் அப்பா. இவைகளையெல்லாம் பார்த்துப் பார்த்து அந்தப் பிஞ்சு மனசிலை என்னென்ன காயங்கள் ஏற்பட்டிருக்குமோ....!" என்ற நினைவுகளெல்லாம் வந்து அவளைக் குழப்பின.



"இவ்வளவு நாளும் நான் இதைப்பற்றிச் சொட்டுக் கூடச் சிந்திக்காமல் இருந்திட்டனே!" என்று வெட்கப் பட்டாள். கலங்கினாள். கோகுலுக்காக மனங் கசிந்தாள். "சங்கர்தான் இப்பிடி விட்டேற்றியாக பொறுப்பற்றவனாக கோகுலின் பிஞ்சு மனசு பற்றி கிஞ்சித்தேனும் சிந்தித்துப் பாராது தன் பாட்டில் திரிகிறான் என்றால் எனக்கு மட்டும் அறிவு எங்கை போயிட்டுது?" என்று தன்னையே தான் கேட்டு மனசுக்குள் நொந்து கொண்டாள். தனது இந்தச் செய்கையால் கோகுலின்வாழ்க்கை நரகமாகிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டாள்.



அவளுக்குத் தன் மீதே கோபம் கோபமாக வந்தது. "எனக்கென்ன அறிவில்லையோ? அல்லது அழகில்லையோ? அல்லது கெட்டித்தனம்தான் இல்லையோ? சங்கர் ஏன் என்னை விட்டிட்டு இன்னொரு பெண்ணோடை சுத்தோணும். இப்பிடிப் பட்ட ஒரு சுயநல விரும்பிக்காக ஏன் நான் என்ரை வாழ்க்;கையையும் கோகுலின்ரை வாழ்கையையும் வீணாக்கிக் கொண்டிருக்கோணும்." என்று தனக்குள்ளே பொருமினாள். வாய் விட்டுச் சத்தமாக அழவேண்டும் போல சோகம் அவளைப் பிசைந்தெடுத்தது.



இந்த உலகத்து ஜீவராசிகள் அத்தனையுமே சந்தோசமாக இருப்பது போலவும் தான் மட்டும் தனிக்காடொன்றில் விடப்பட்டு தண்டிக்கப் படுவது போலவும் உணர்ந்தாள். ஓடிப் போய் அம்மாவின் மடியில் அப்படியே முகத்தைப் புதைத்து வைத்து அழவேண்டும் போல அவளுக்கு இருந்தது.



இந்து தாயகத்தில் அம்மா அப்பாவின் அன்பிலும் நல்ல வழி நடத்தலிலும் மிகவும் ஒழுக்கமாகவும் வசதியாகவும் வாழ்ந்தவள். ஏழு வருடங்களுக்கு முன் அண்ணன்மார் பேசிய கல்யாணத்தில் சங்கர் குடி இல்லை சிகரெட் இல்லை, அருமையானவன் என வர்ணிக்கப்பட்டு எலலாப் பெண்களையும் போல மணாளனின் நிய முகமும் சுய குணமும் தெரியாமலே ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் வாழ்க்கையின் இனிமைகளைப் பற்றிய கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு யேர்மனிக்கு வந்து சேர்ந்தவள்.



சங்கருடனான அவளது ஆரம்ப நாட்கள், வாரங்கள், மாதங்களாய் இனிப்பாகத்தான் இருந்தன. எப்போது மாறியது என்றே தெரியவில்லை. எல்லாமே மாறிப்போய் விட்டன.



அவளுக்கு சங்கரை விட்டுவிட்டு யார் கண்ணிலும் படாது எங்கேயாவது ஓடி விடவேண்டும் போலிருந்தது. எங்கே...? அதுதான் தெரியவில்லை. என்ன வந்தாலும் போகும் போது கோகுலை தன்னோடு கூட்டிக் கொண்டு போய் விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்



ஆனால் போய் என்ன செய்வது? எப்பிடி வாழ்வைத் தொடருவது? என்ற கேள்விகள் அவளைக் குடைந்து கொண்டே இருந்தன. இங்கு யேர்மனியில் இப்படியான நிலையில் சமூகநல உதவிகள் கிடைக்கும்தான். அத்தோடு சங்கரும் கோகுலின் செலவுக்குப் குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்க வேண்டும் என சட்டப் படி தீர்மானிக்கப் படும். ஆனால் அவளுக்கோ இதற்கு மனம் ஒப்பவில்லை. சங்கரை விட்டுப் போக நினைத்த பின் அவனின் பணத்தை எடுக்க விருப்பம் வரவில்லை. "யாரிடமும தங்கி நான் வாழக்கூடாது" என்று எண்ணிக் கொண்டாள். முக்கியமாகச் சங்கரைச் சாரக் கூடாதென மனதுக்குள் உறுதி எடுத்துக் கொண்டாள்.



அன்று வேலையிடத்தில் வேலைகளின் மத்தியிலும், வேலை முடிந்து வீடு திரும்புகையிலும், கோகுலைக் கிண்டர் கார்டனால் கூட்டிக் கொண்டு வரும் போதும் இது பற்றி நிறையவே சிந்தித்தாள். இறுதியில் தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்தாள்.



"நான் நல்ல வேலையொண்டு எடுக்கோணும். அதுக்கு ஏதாவதொரு தொழில் சம்பந்தமாப் படிக்கோணும்;. எல்லாத்துக்கும் முதல்லை நான் டொச்சைப் (யேர்மன் மொழியைப்) படிக்கோணும். "நினைவுப் படிகளை அடுக்கத் தொடங்கினாள். தான் எடுத்துக் கொண்ட முடிவைச் செயற்படுத்தி வெற்றிச் சிகரத்தைத் தொட்டுக் கொள்ள.



தற்போது அவளுக்குத் தெரிகின்ற யேர்மன் மொழி ஒரு தொழிற்கல்வி கற்பதற்குப் போதுமானதா? என்பது அவளுக்கே தெரியவில்லை. அன்றே அவள் இது சம்பந்தமான அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு தனக்குத் தெரிந்த டொச்சில(யேர்மன் மொழி) ஆலோசனைகள் கேட்டாள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அடுத்த நாளே வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டுப் போய் அவர்களை நேரடியாகச் சந்தித்தாள்.



இந்து யேர்மனிக்கு வந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டதால் யேர்மனியச் சட்டப்படி அவள் டொச்(யேர்மன் மொழி) படிப்பதற்கு அவர்களால் எந்த விதமான பண உதவியும் செய்ய முடியவில்லை. ஆனால் அவளுக்கு எந்த ஒரு நிலையான தொழிலும் இல்லாததால் அதுவும் அவள் அகதி அந்தஸ்து பெற்ற நிலையில் இருப்பதால் யேர்மனியச் சட்டப்படி அவள் தொழிற்கல்வி கற்பதற்கான செலவை மட்டும் ஏற்றுக் கொள்ள முன் வந்தார்கள். அவளுக்கு ஓரளவு டொச் தெரிந்ததால் இன்னும் நான்கு மாதங்களில் தொடங்க இருக்கும் கொம்பியூட்டர் கோர்ஸ் இல் அவள் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதையும் சுட்டிக் காட்டினார்கள்.



இருள் நிறைந்த தன் வாழ்விலும் ஒளி வீச வாய்ப்புண்டு என்பதைக் கண்டு இந்து உற்சாகமானாள். கலக்கமான முகத்துடன் அவள் உள் நுழைந்த நேரத்திலிருந்து அவளையே கவனித்துக் கொண்டு அங்கு கடமையிலிருந்த இன்னொரு பெண் இவள் ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்பதை நன்கு உணர்ந்து கொண்டவளாய், இவள் நன்றி சொல்லிக் கொண்டு அவர்களிடம் இருந்து

விடை பெறும் போது "மிஸிஸ் இந்து உங்களுக்கு விருப்பமெண்டால் இந்த நாலு மாசமும் நீங்கள் உங்கடை செலவிலை ஒரு டொச் கோர்ஸ் செய்து உங்கடை டொச் அறிவைக் கூட்டிக் கொள்ளுங்கோ." என்று ஆலோசனை கூறினாள்.



"தனக்கு ஆலோசனை கூறவும், தனக்கு உதவி செய்யவும், தன்னுடன் இன் முகத்துடன் பேசிக் கொள்ளவும் கூட இந்த அந்நிய தேசத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள்." என்ற நியத்தை நினைத்து இந்து நியமாகவே மகிழ்ந்தாள்.



நேரங்களையோ காலங்களையோ வீணடிக்காமல் உடனடியாகவே தனது பகுதி நேர வேலைக்; காசில் டொச் படிப்பதற்கான ஆயத்தங்களைச் செய்தாள்.



இம்முறை அவள் முடிவு அவளுடையதாகவே இருந்தது. கணவன் என்ற பெயரில் அவளைக் கலங்க வைக்கும் சங்கரிடமோ, பெண் என்றால் வாய் மூடி மௌனியாக வாழ வேண்டுமென்று நினைக்கும், இன்னும் பழமையிலேயே ஊறிப் போயிருக்கும் அண்ணன்மாரிடமோ அவள் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை. அவர்கள் ஏதாவது சொல்வார்களே என்று பயப்படவும் இல்லை. "இது என் வாழ்வு. என் மகன் கோகுலின் வாழ்வு. நாமிருவரும் வாழாது ஊருக்குப் பயந்து நரகத்துழல்வது வீண்." தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.



சங்கர் இம்முயற்சிக்குத் தடைக்கல்லாக இருந்தால் அடுத்த கணமே அவனை விட்டுப் பிரிந்து போகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள்.



அன்று படுக்கைக்குப் போகும் போது இந்துவின் மனசு மிகவும் லேசாக இருந்தது. அன்றும் வழமை போல நேரங்கழித்தே இந்துவுடன் சண்டை போடத்தயாராக வீட்டுக்குள் நுழைந்த சங்கர் "இப்போதாவது விழித்துக் கொண்டேனே!" என்ற புத்துணர்வு தந்த திருப்தியிலும் எதிர் காலத்தைப் பற்றிய நம்பிக்கை தந்த பலத்திலும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த இந்துவைப் பார்த்து ஒன்றுமே புரியாமல் விழித்தான்.





-முற்றும்-



சந்திரவதனா

யேர்மனி

1997



ஒலிபரப்பு - ஐபிசி (பூவையர் பூங்குரல் - சுமதி - 1997)

பிரசுரம் - பெண்கள் சந்திப்புமலர் - 2001(சக்தி வெளியீடு)