Friday, April 07, 2006

ஏன் மறந்து போனாய்?

பெண் விடுதலை பற்றி
நண்பர்களுடன்
நயமாகப் பேசுகிறாய்!

சீதனக் கொடுமை பற்றி
மேதாவித் தனமாய்
மேடையில் விவாதிக்கிறாய்!

பெண்ணையும்
கண்ணாகப் பார்க்கும் படி
கதைகள் புனைகிறாய்!
கவிதைகள் வடிக்கிறாய்!

வீட்டிலே மட்டுமேன்
தாலி கட்டியவளை
வேலைக்காரி ஆக்குகிறாய்!
சீதனம் தரவில்லையென்று
வார்த்தையால் குத்துகிறாய்!

தாலி கட்டியவள்
உன் தாரம் மட்டுமல்ல
அவள் பூமியில் பிறந்ததே
உனக்கு சேவகம் செய்ய அல்ல

வாழ்க்கையின் ஆசைகள்
வசந்தத்தின் தேடல்கள்
நேசத்தைத் தேடும்
நெஞ்சுக்குள் ஏக்கங்கள்
கூடவே தன்னோடு
கூடாமல் கலைந்து...

உன்னோடு கூடவே
உனக்காகச் சிரிப்பவளும்
பெண் ஜென்மம் தானென்று
மறந்துதான் போனாயோ?

சந்திரவதனா
ஜேர்மனி
20.6.99

Tuesday, April 04, 2006

கொக்கான் வெட்டுதல்

பாடசாலையில் படிக்கும் காலங்களில் எமக்குப் பிடித்தமான விளையாட்டுக்களில் கொக்கான் வெட்டுதல் முக்கிய விளையாட்டாக இருந்தது. இதைக் கூடுதலாகப் பெண்கள்தான் விளையாடுவார்கள். மாங்கொட்டை போடுதல், சிப்பி, ஏரோப்பிளேன், இது தவிர கிளித்தட்டு, கெந்திப் பிடித்தல், றவுண்டெஸ்(Rounders) இவைகளும் எமது பாடசாலைகளில் முக்கிய இடத்தை வகித்திருந்தன. இவையெல்லாமே உடலை அசைத்து விளையாடும் விளையாட்டுக்கள். ஆனால் கொக்கான் வெட்டுதல் அப்படியல்ல. அது இருந்து விளையாடும் விளையாட்டு. ஏதாவதொரு விறாந்தை நுனியில் இருந்துதான் இதை விளையாடுவோம். சீமெந்து விறாந்தை இவ்விளையாட்டுக்கு உகந்தது. விறாந்தை இல்லாவிட்டால் டோங்கு(மார்பிள்) மேலெழும்பாது. (bump பண்ணாது).

கொக்கான் வெட்டுவதற்கு ஒரு டோங்கும்(மார்பிள்), இரு சிறிய கற்களும் அல்லது ஒரு டோங்கும், நான்கு சிறிய கற்களும் வேண்டும். அனேகமாக எங்கள் எல்லோரதும் பாடசாலை சூட்கேசில் ஒரு டோங்கு, ஒரு சிற்பி, ஒரு நன்கு சப்பையான காய்ந்த மாங்கொட்டை என்பன இருக்கும். சூட்கேஸ் இல்லாதவர்கள் கொம்பாஸ் பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்.

வீட்டிலும் எப்போதாவது நண்பிகள் ஒன்று கூடும் போது கொக்கான் வெட்டி விளையாடுவோம். ஆனால் இவ்விளையாட்டை வீடுகளுக்குள் யாரும் வரவேற்பதில்லை. கொக்கான் வெட்டினால் வீட்டுக்குத் தரித்திரம் பிடிக்கும் எனப் பெரியவர்கள் சொல்வார்கள். "ஏன் தரித்திரம் பிடிக்கும்?" என்ற எனது கேள்விக்கு யாருமே இதுவரை பதில் சொல்லவில்லை.

ஆனால் இவ்வளவு தூரம் எமக்குப் பிடித்தமான விளையாட்டு உலகளவில் பலருக்கும் தெரியாமல் இருப்பதுதான் ஏனென்று தெரியவில்லை. அமெரிக்காவைப் பார்த்தால் கண்ட கண்ட விளையாட்டுக்களை எல்லாம் உலக வெற்றிக் கிண்ண விளையாட்டு என்று அறிவித்துப் போட்டியாக வைத்து விடுவார்கள். எங்கள் விளையாட்டுக்களில் இந்த கொக்கான் போல் உலகளாவாத எத்தனையோ விளையாட்டுக்கள் இருக்கின்றன.

இந்தக் கொக்கானை மட்டும் உலக வெற்றிக் கிண்ணப் போட்டியாக்கி இருந்தால் எங்கள் பெண்களில் எத்தனை பேர் சம்பியன் ஆகியிருப்பார்கள்.

சந்திரவதனா
26.4.2005

Wednesday, March 08, 2006

காலமிட்ட விலங்கையும் உடை



பொல்லெடுத்து
உனை அடித்தார்களா..!
சொல்லெடுத்து
மனம் சிதைத்தார்களா..!
மெல்லியவள் என்று சொல்லி
மெல்லவே பின்னே
தள்ளியவர் முன்னே
கல்லுடைத்து....
வாழ்வின்
வளம் பொருத்த முனையும்
பெண்ணே..!
உடை
கல்லோடு சேர்த்து
காலமிட்ட விலங்கையும் உடை
வெல்வாய்!

சந்திரவதனா
யேர்மனி
10.3.2003

Monday, February 06, 2006

சின்னஞ்சிறுவயதில் எனக்கோர்...

மீண்டும் கோகிலா படத்தில் இடம் பெற்ற
சின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி...

இப்பாடல் என்னைக் கவர்ந்ததற்கான முக்கியமான காரணம் அருமையான பாடற் காட்சி. கமலஹாசனும் சிறீதேவியும் இணைந்தாலே அவர்களது அபாரமான இயல்பான நடிப்பில் படம் தனித் தன்மை பெற்று விடும்.

மீண்டும் கோகிலா படத்தில் இந்த ஜோடிகள் இணைந்தது மட்டுமல்லாமல் பெண் பார்க்கும் படலமும் சற்று வித்தியாசமாக சந்தோசமான முறையில் சித்தரிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் பெண் பார்க்கும் படலம் ஒரு நாடகம் போலவே அமைந்திருக்கும். உண்மையில் எப்படியோ.....? இந்தியத் திரைப் படங்களில் அப்படித்தான் காட்டுகிறார்கள்.

பெண் வீட்டார் பஜ்ஜி, சொஜ்ஜி, வடை, முறுக்கு, பலகாரம் என்று செய்து வைத்துக் காத்திருக்க மாப்பிள்ளை ஒரு பொம்மை போல வருவார். அவரை இயக்கி வைப்பது அவரது பெற்றோராகத்தான் இருக்கும்.
வந்து இருந்து கொண்டு பெண் வீட்டார் செய்து வைத்த பலகாரங்களைச் சுவைத்துக் கொண்டு பெண் கூனா, குருடா, செவிடா...... என்று ஆராய, அவளை ஆடு.. பாடு.. என்று ஆட்டுவித்துவிட்டு வீட்டுக்குப் போய் முடிவு சொல்வதாகச் சொல்லிச் செல்வது அபத்தமாகப் பெண்ணை அவமதிப்பது போலாக இருக்கும்.

இப் படத்திலும் பஜ்ஜி, சொஜ்ஜியிலிருந்து பாடுவது வரை எல்லாம் நடக்கிறது. ஆனால் கமல் தன் சம்மதத்தைத் தெரிவிக்கும் விதம் அருமையாக உள்ளது. அழகாக உள்ளது.

மணப்பெண்ணான சிறீதேவி பெண் பார்க்கும் படலத்தின் போது இந்தச்
சின்னஞ் சிறு வயதினிலே... என்ற பாடலைத்தான் பாடுகிறார். பாடல் தொடங்கும் போதே ஜானகியின் இனிய குரல் அற்புதமாக எம்மைத் தழுவுகிறது. அந்த இனிமையை நாம் ரசிக்க, படத்தில் மாப்பிள்ளையாக வந்த கமலும் அதை ரசிக்கத் தொடங்கி விடுவது ஒரு நல்ல தொடக்கமாக உள்ளது. செயற்கைத் தன்மை இல்லாமல் பெற்றோருக்குப் பயந்து அடங்கி ஒடுங்கி இராமல் பெண்ணை மதிப்பதாகக் காட்டி பார்ப்பவர்களின் மனதில் மகிழ்வை ஏற்படுத்துகிறது.

பாடிக் கொண்டு போகும் போது சிறீதேவிக்கு, இடையில் பாடல் மறந்து விடுகிறது. வழமையான பாடல்களில் என்றால் இதுவே கெட்ட சகுனமாக்கப் பட்டு கல்யாணம் நிறுத்தப் பட்டு விடும். ஆனால் இங்கே கமல் தொடர்ந்து பாடுவதாய் காட்சி அமைகிறது.

கமல் பாடத் தொடங்கியதும் சிறீதேவி தனக்குள் தோன்றிய ஆச்சரியத்தையும் பரவசத்தையும் காட்டும் விதம், அந்த முகபாவம், அற்புதமாய் அமைந்துள்ளது. சிறீதேவியின் நடிப்புத்திறன் அழகாய் வெளி வருகிறது.

தொடரும் பாடலில்
பாட்டி வெற்றிலை பாக்கு இடிக்கும் ஓசை, இடித்த வெற்றிலை பாக்கை துளாவியெடுக்கும் ஓசை, , தாத்தா வெற்றிலை பாக்கை வாய்க்குள் போட்டுக் குதப்பும் ஓசை... இன்னும் வெள்ளிக் கிண்ணத்தைத் தட்டில் வைக்கும் ஓசை... என்று நாளாந்தம் நாம் கேட்கும் ஓசைகள் பாட்டுடன் இணைக்கப் பட்டு அந்த ஓசைகள் கூட இசைகள்தான் எனக் காட்டப் பட்டது இனிமையான ஆச்சரியத்தைத் தருகிறது.

காதல் நெருப்பினிலே
எனது கண்களை விட்டு விட்டேன்....
மோதும் விரகத்திலே.... .
என்ற கட்டத்தில் குழந்தையொன்று கமலின் மடியை நனைத்து விடும். அது கூட சுவாரஸ்யமாக உள்ளது.

மொத்தத்தில் சாதரணமாக நடக்கக் கூடிய விடயங்கள் பாடலுடன் இணைக்கப் பட்டு, கமலும் சிறீதேவியும் அருமையாக நடித்து, அருமையான இசையுடன் யேசுதாஸ் ஜானகியின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் கேட்கும் போதெல்லாம் மனதில் இனிமையைத் தோற்றுவிக்கக் கூடிய ஒரு இனிய பாடலாக அமைந்துள்ளது.

சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல்
எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகனப் புன்னகையில்
ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்

தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்

ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்

கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்

சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ

பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

சபாஷ்
பலே

வெள்ளிப் பனியுருகி மடியில்

வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்

காதல் நெருப்பினிலே எனது

கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ......

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்

சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ

பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி


சந்திரவதனா
யேர்மனி

Thursday, January 05, 2006

உயிர்ப்பு - ஒரு பார்வை

உசா யவாகரின் மலரொன்று கருகுகின்றதோ!

எந்த நாடு எந்தத் தேசம் எதுவாயினும் பெண் என்பவளுக்கு ஏற்படுகின்ற சில துயர்கள் தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றன. உசா யவாகரின்
மலரொன்று கருகுகின்றதே கதையும் இப் பிரச்சனையைத் தொட்டுள்ளது.

ஆபிரிக்கக் கண்டத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப் பட்ட இக்கதையில் சம்பியா நாட்டைச் சேர்ந்த விக்டோரியா என்ற 20வயது இளம்பெண் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பத்தில் பணிப்பெண்ணாய் பணி புரிகிறாள். அந்தக் குடும்பத்தில் நல்லவளாய் முத்திரை பதித்து நட்போடு பழகும் அவள் தனது பணியை நேர்த்தியாகவும் விசுவாசத்தோடும் செய்யும் ஒருத்தியாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறாள்.

அவள் தனது 16வது வயதிலேயே நண்பன் என்ற பெயரோடு பழகிய ஒருவனால் தாயாக்கப் பட்டுக் கைவிடப் பட்டவள். தற்போது மீண்டும் ஒருவனோடு நட்பாகி மோதிரம் மாற்றி திருமண பந்தத்தில் இணைந்த போது எயி;;;ட்சையும் அவனிடமிருந்து பெற்று இறந்து போகிறாள்;.
இரு ஆண்களிடமிருந்தும் சுகத்தையும் விட சுமைகளையே அதிகமாகப் பெற்ற விக்ரோறியாவின் இறப்பு கதாசிரியரின் மனதில் ஏற்படுத்திய பாதிப்பும் விரக்தியும் கதையின் முக்கிய அம்சங்களாக இருந்தாலும் கதையில் இன்னும் பல விடயங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.

குறிப்பாக எந்தப் புலத்தைக் கொண்டு ஒரு சிறுகதை அமைகிறதோ அந்தப் புலத்தோடு வாசகரை அழைத்துச் செல்வதும் அந்தப் புலம் பற்றிய செய்திகளை கதையினூடு வாசகனுக்குத் தருவதும் சிறப்பானது.
அந்த வகையில் உசா யவாகர் வெற்றி கண்டுள்ளார். கதையில் கிடைத்த பல சுவையான தகவல்களில் சம்பியாவில் முருங்கைக்காய் மரங்கள் இருப்பதுவும் முருங்கைக்காயை அவர்கள் னுநஎடை ளவiஉம என்பதுவும் நான் அறிந்திராத தகவல்கள்.

கதை இத்தனை நீளமாக இல்லாமல் குறுகலாக இருந்திருந்தால் நறுக்கென்று அமைந்த மிகஅருமையானதொரு கதையாக மிளிர்ந்திருக்கும்.

அ.சந்திரகாசனின் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடி

கலை வளர்பதும் தமிழ் வளர்ப்பதும் தமை வளர்ப்பதற்க்கு என்ற நிலை புலத்தில் மட்டுமல்ல தாய்நிலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனாலும் புலத்தில் கலை என்றால் என்னவென்றே தெரியாத… தமிழ் மேல் துளி கூட அக்கறையில்லாத… சிலர் கலை வளர்ப்பதாகவும் தமிழ் வளர்ப்பதாகவும் சொல்லிக் கொண்டு தமது அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாகவே இருக்கின்றன. இப்படியானவர்களின் பாசாங்கும் போலியும் ஓரளவு சிந்திக்கக் கூடியவர்களுக்குப் புரியாமலும் இல்லை. அ.சந்திரகாசனின் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடியும் இப்படியான போலிகளைத்தான் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

தமிழ் தமிழ் என்று மேடைகளில் முழங்கும் பல பிரபலங்களின் பிள்ளைகள் தமிழே தெரியாமல் இருப்பதை நாம் நடப்பிலே பார்த்திருக்கிறோம். இக்கதையிலே தமிழுக்குச் சேவை செய்வதற்காகவே சிட்னி தமிழ்ப்பாடசாலையின் தலைவராகத் தெரிவு செய்யப் படுகிறார் கணேசானந்தம். தமிழ்ப்பாடசாலையில் தமிழ் கற்பிப்பது மட்டும் போதாது. வீட்டிலும் தமிழிலேயே பேசுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றார்; ஆனால் இவ்வளவு பெரிய அந்தஸ்து வந்த பின் அவர் மகன் வெளியிலே ஆட் களின் முன் தன்னோடு தமிழில் பேசி மானத்தை வாங்கி விடக் கூடாது என்ற மனைவியின் வேண்டுகோளை ஆமோதிக்கிறார். இது உடனடியாகச் சிரிப்பை ஏற்படுத்தினாலும் சிந்திக்கும் போது எமது சமூகத்தின் ஆரோக்கியக் கேட்டை உணர்த்துகிறது.


ரதியின் நெருடல்

அம்மா தெய்வத்துக்குச் சமனானவள்தான். அம்மாவுக்காக மகன் எதையும் விட்டுக் கொடுப்பதுவும் மகனுக்காக அம்மா விட்டுக் கொடுப்பதும் எத்தனை சங்கடமானாலும் இயல்பிலே நடக்கக் கூடிய விடயங்கள். ஆனால் இங்கே இவர்களிடையே மனைவி என்றொருத்தி வரும் போது புரிந்துணர்வுகள் சரியாக அமையாத போது தவிர்க்க முடியாத பல சங்கடங்கள் ஏற்படலாம்.

ரதியின் நெருடல் இந்தியாவைப் பின் புலமாகக் கொண்டு எழுதப் பட்ட கதையாயினும் ஒரு சாதாரண குடும்பத்தில் ஏற்படக் கூடிய அம்மா மகன் மனைவிக்கு இடையிலான யதார்த்தமான இந்தப் பிரச்சனையைத் தொட்டிருக்கிறது;

இந்தக் கதையில் அம்மாவின் சில புரிந்துணர்வற்ற தன்மைகளும் அதனாலான சிக்கல்களும் அம்மாவை முதியோர் விடுதியில் சேர்க்குமளவுக்கு வருகிறது. இது குற்ற உணர்வுடனான சலனத்தை ஏற்படுத்தினாலும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நினைப்பில் வீட்டிலே குறையும் கூப்பாடுமாய் இருப்பதை விட அவரவர்க்கு ஏற்ற வழியில் தனியாக வாழ்வது சந்தோசத்தையும் நிம்மதியையும் தரலாம் எனபதை உணர்த்துகிறது.

கதையில் கதாசிரியர் அம்மாவைச் சந்தோசமாக வைத்திருப்பது மட்டுமல்ல… மனைவி குழந்தைகளையும் சந்தோசமாக வைத்திருப்பது ஒரு ஆணின் கடமை என்ற நல்ல விடயத்தையும் சுட்டியுள்ளார்.

கதையில் வரும் சம்பாசணைகளை பேச்சுத் தமிழிலேயே தந்திருந்தால் கதையிலும் யதார்த்தம் மிளிர்ந்திருக்கும். கதாசிரியரின் வாழ்நில வட்டாரச் சொற்களும் வாசகருக்குக் கிடைத்திருக்கும்.


சாந்தா யெயராயின் அம்மா இல்லாத ஒரு மணி நேரம்

அம்மா…! எமது இளமைப்பருவத்தில் அவள் இல்லாத பொழுதுகளை எம்மால் எண்ணிப் பார்க்கவே முடியாது. ஏமக்கு எல்லாமே அவளாகத்தான் இருப்பாள். இந்த நிலையில் அவளின் இறப்பு என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

சாந்தா யெயராயின் அம்மா இல்லாத ஒரு மணி நேரம் அம்மா இறந்து விட்டதாகக் கனவு கண்ட ஒரு பெண்ணின் கதை.

செல்லமாகவும் வசதியாகவும் புலத்தில் வளர்ந்த ஒரு பதினைந்து வயதுப் பெண் திடீரென அம்மாவை இழந்து விட்டால் அவளின் உணர்வுகள் எப்படியிருக்கும் என்பதை சாந்தா யெயராய் சொன்ன விதம் மிக அழகாக அமைந்துள்ளது.

ஆனால் அம்மா இறந்து விட்டதாகக் கனவு கண்ட ஒரு பெண்ணின் கனவில் இத்தனை விடயங்களும் வந்து விடுமா என்பது கேள்விக் குறியாகிறது. அம்மா திடீரென இறந்து விட்டால்… நினைத்துப் பார்க்கவே முடியாத விடயம். அதைக் கற்பனை பண்ணிப் பார்க்கும் போது இத்தனை உணர்வுகளும் ஒருங்கே வந்து விடுமா?

ரவியின் கரைந்துரையும் நாகங்கள்

புலம் பெயர்ந்தாலும் நாம் எமது ஊர் எம்மவர் என்ற ஒரு பற்;றுதலோடும் உண்மையாகவே உதவும் நோக்கோடும் வாழ்பவர்கள் மிகச்சிலரே. இக் கதையில் வரும் பி.எம் மும் அப்படியான ஒரு நன்நோக்குடையவர்.
உணவுவிடுதி ஒன்றை நடாத்தி தானும் வாழ்ந்து ஊருக்கும் உதவிக் கொண்டிருக்கும் அவரின் இனப்பற்றும் ஊர்ப்பற்றும் இயல்பாகவே அவரை மற்றவர்களுக்கும் உதவ வைத்தது.

அவரது அந்த நன்நோக்கை தனக்குச் சாதகமாக்கி அவரது உதவியைப் பெற்று அவரது உணவு விடுதியிலே வேலை செய்து தன்னை நிலைப் படுத்திக் கொண்ட ஒருவர் அவருக்கு எதிராகச் செயற்பட முனைந்தது
ஊரிலே இரும்புக்கடையில் வேலை செய்த ஒருவர் சில வருடங்களில் தானே இரும்புக்கடை ஒன்றை திறந்த ஏமாற்று வித்தையை ஞாபகப் படுத்தியது.

புவனா இராசரட்ணத்தின் அர்த்தங்கள்

பணம் தேடுவது ஒரு அவசியமான செயற்பாடாயினும் புலத்தில் சக்திக்கு மீறி வீடு கார் தளபாடம் என்று வாங்கி விட்டு அதற்காக தமது வாழ்வைத் தொலைப்பவர்கள் பலர். இவர்களில் பலர் தமது பிள்ளைகளுக்கு அந்தந்த வயதில் தேவைப்படும் அன்பு அணைப்பு ஆதரவைப் பற்றிச் சிந்;திப்பதேயில்லை. பணத்தாலும் பொருளாலும் பிள்ளைகள் திருப்தி அடைந்து விடுவார்கள் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு பிள்ளைகளையே தொலைத்து விடுவார்கள்.

புவனா இராசரட்ணத்தின் அர்த்தங்கள்; கதையிலும் பெற்றோர் வேலை வேலை என்று திரிய வீட்டில் எந்தப் பிடிப்பும்; இல்லாத சூழ்நிலை உருவாக மகன் முரளி போதை மருந்துக்கு அடிமையாகிறான். நீட்டி முழக்காமல் நறுக்கெனச் சொல்லப் பட்ட சிந்திக்க வைக்கும் கதை.

கல்லோடைக்காரனின் மறக்குமா மண்வாசைன…?
சிலர் புலம் பெயர்ந்து எத்தனை வருடங்கள்தான் ஆனாலும் அங்குள்ள நல்லவைகளைக் கண்டும் அனுபவித்தும் அந்தச் சூழலை தமக்குச் சாதகமாக்கி மகிழ்ச்சி கொள்வதை விடுத்து எப்போதுமே ஊரிலுள்ளவைகளையும் ஊரில் வாழும்போதான காலங்களையும் ஒப்பிட்டு ஒப்பிட்N;ட ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.

இந்தக் கதையில் அவுஸ்திரேலிய மண்ணில் வாழும் ஒருவர் ஒவ்வொரு விடயத்தையும் ஊர் நடப்புகளோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு மனம் பொருமுகிறார். ஊர் நினைவுகள் மறக்க முடியாதவைதான். அதற்காக அதையே நினைத்து ஏங்கி ஏங்கி இப்படி வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்த்தும் விதமான கதை. சொல்ல வந்த விடயம் நல்ல விடயம். சற்றுக் குறுக்கிச் சொல்லியிருந்தால் சொன்ன விதமும் மிக நன்றாக அமைந்திருக்கும்.


நித்தியகீர்த்தியின் அது ஒரு பருவகால விளையாட்டு

இணையமும் மின்னஞ்சலும் காதல் பரிமாற்றங்களுக்கான ஊடகங்களாக மாறிவிட்ட இனறைய காலத்திலும் வேலியினூடு காதல் கடிதங்களைப் பரிமாறிய அன்றைய காலத்திலும் காதல் ஒன்றேயானாலும் அதனது வெளிப்பாடுகள் வேறுவிதமான சந்தோசங்களைத் தருவனவாக இருந்தன.

நித்தியகீர்த்தி அவர்களின் அது ஒரு பருவகால விளையாட்டு சொல்ல வந்த விடயம் வேறு கோணத்தில் கனமாக இருந்தாலும் கதையை வாசிக்கும் போது அன்றைய காதலும் வேலிச்சண்டையும் கறுத்தக்கொழும்பான் மாம்பழமும்.. என்று மெல்லிய கிளுகிளுப்புடன் எம்மை அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறது.

கவித்துவம் கலந்து நளினமாக எழுதப் பட்ட இக் கதையின் சாராம்சம் -சமூகம் அந்தஸ்து... என்ற போலி கௌரவங்களுக்கு பலிக்கடாவாகிப் போன வாணி என்ற ஒரு பெண்ணின் வாழ்வைக் கொண்டுள்ளது. பருவத்தே அரும்பிய ஒரு காதல் காரணமாக அவள் 17வயதிலேயே தன்னை விடப் 12வயது அதிகமான நந்தகுமாருக்கு மனைவியாக்கப் பட்டு விட்டாள். அம்மாவின் போலி கௌரவந்தான் அதற்கு முக்கிய காரணம்.

வாணியால் அந்த வயதில் அம்மாவை மீற முடியவில்லை. தற்கொலை செய்யும் எண்ணத்தையோ எங்காவது ஓடி விடும் எண்ணத்தையோ அவளால் செயற் படுத்தவும் முடியவில்லை. அதற்குள் அவள் தாயாகியும் விட்டாள். ஆனாலும் திருமண பந்தத்தில் அவள் மனம் ஒட்டவுமில்லை. ஒரு வேளை நந்தகுமார் வாழ்வின் சூட்சுமங்களை அறிந்தவராக அவளேர்டு வேறு மாதிரிப் பழகியிருந்தால் அவளும் பழசுகளை மறந்து குடும்பத்துக்குள் முழுமனசோடு இணைந்திருக்கலாம். அது நடக்கவில்லை. 23 வருடங்களின் பின் தன் மகனுக்கும் ஒரு வாழ்வு அமைந்த பின் அவள் நந்தகுமாரை விட்டுப் போகத் துணிகிறாள். ஒரு புரட்சியான கதைதான்.

ஆனால் எத்தனை ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் கணவன் மனைவியை விட்டுப் போவது என்பதும் மனைவி கணவனை விட்டுப் போவது என்பதும் அத்தனை சுலபமான விடயமல்ல. அது சிலரால் மட்டுமே முடிந்த விடயம். இங்கு வாணியின் குணாதிசயத்தைப் பார்த்தால் அவளிடம் 23 வருடங்களாக அந்தத் துணிவு இல்லை. 23 வருடங்களாக வராத அந்தத் துணிவு 23வருடங்களின் பின் அவளிடம் வருமா என்ற ஒரு கேள்வி என்னுள் எழுகிறது.

இப்படியான ஒரு புரட்சியான முடிவைச் சொன்ன கதாசிரியரின் மனதில் பெண்கள் அழகாக உடுத்துவதும் நகைகள் அணிவதும் தமது அழகைப் புருசனுக்குக் காட்டுவதற்கோ அன்றி வேறு ஆண்களுக்குக் காட்டுவதற்கோ
என்ற தப்பான அபிப்பிராயம் பதிந்துள்ளது என்பதைக் கதையினூடு காண முடிகிறது.

எஸ். கிருஸ்ணமூர்த்தியின் பசி

பணத்தால் எதையும் வாங்கி விடலாம் என்பது பலரின் நினைப்பு.
எவ்வளவுதான் பணம் இருந்தாலும் சிலதை எம்மால் வாங்கி விட முடியாதென்ற உண்மையை எஸ். கிருஸ்ணமூர்த்தியின் பசி
உணர்த்துகிறது.

அவுஸ்திரேலியாவில் வசதியான சூழ்நிலையில் வாழும் தர்சனிடம்
பணம் போதுமான அளவு இருந்தும் பக்கத்தில் கடைகள் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் மகளின் பசியை போக்க முடியவில்லை. மகள் பசியால் துடித்த போதுதான் இhழத்தில் உணவின்றி அல்லலுறும் உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற உத்வேகம் எழுகிறது.

சுருக்கமாக நல்ல விடயமொன்றை மற்றவர்களுக்கு உணர்த்தி விட்ட கதை.


களுவாஞ்சிக்குடி யோகனின் அன்னம்

காதலும் தோல்விகளும் என்றைக்குமே தவிர்க்க முடியாதவை. காதல் தோல்விகள் எமது பெண்களைக் கூனிக் குறுகவைத்ததும் தற்கொலை வரை கொண்டு சென்றதும் போராட்டம் என்ற ஒன்று எமது நாட்டில் தொடங்குவதற்கு முன் சற்று அதிகமாகவே இருந்திருக்கிறது.

களுவாஞ்சிக்குடி யோகனின் அன்னம் அன்றைய சீர் சீதனங்களில் காதலைத் தொலைத்தவள். ஏறத்தாள 40-45வருடஙகளின் முன் காதலிப்பதே பாவமெனக் கருதப் பட்ட சூழலில் வாழ்ந்த அன்னமும் தற்கொலை வரை செல்லத் தயங்கவில்லை. ஆனாலும் சாகவில்லை.

உறவினரையோ காதலனாக இருந்து ஏமாற்றிய ஆறுமுகத்தையோ பார்க்க விரும்பாமல் சிங்கப்புhருக்குச் சென்று விட்டாள். அங்கு ஒரு சந்தர்ப்பத்தில் சைமன் என்பவரோடு மனம் ஒத்துப் போக அவரோடு தன் வாழ்வையும் இணைத்து அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து விட்டாள். ஆனாலும் மனதின்; அடியில் ஆறுமுகத்தின் மீதிருந்த வெறுப்பு மட்டும் அவளை விட்டு அகலவில்லை. தனது 65வது வயதில் ஒரு திருமண வைபவத்தில் எதிர் பாராத விதமாக அவனைக் காண நேர்ந்த போது உடனேயே அங்கிருந்து வெளியேறி நாட்டுக்குத் திரும்புகிறாள்.

கதை சற்று நீளமாக இருந்தாலும் சொல்லப் பட்ட விதம் நன்றாக உள்ளது. ஆனாலும் புதிய சிந்தனையோடு வெளிநாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுமளவுக்கு தன்னை மாற்றிக் கொண்ட அன்னம்
ஆறுமுகததைக் கணடதும் அவ்விடத்தை விட்டு நகர வேண்டுமா எனவும் எண்ணத் தோன்றுகிறது.

சந்திரவதனா
6.1.2006