Monday, June 28, 2004

தீர்வுகள் கிடைக்குமா...?

வீட்டுக்குள் நுழைந்த போது வழமையாக கணணிக்கு முன்னால் உட்கார்ந்து இன்ரநெட்டில் உலகம் முழுவதும் சட்டன் செய்யும் என் கடைக்குட்டி வரவேற்பறையில் France 98 (உலக வெற்றிக் கிண்ண கால் பந்துப் போட்டி)பார்த்துக் கொண்டிருந்தான். நான் வந்ததே தெரியாத அளவுக்கு விளையாட்டு வீரர்களிலும் அவர்களிடம் உதைபடும் பந்திடமும் தன்னை மறந்து ஊன்றிப் போயிருந்தான்.



அவனுக்கருகில் இருந்து France 98 ஐப் பார்த்துக் கொண்டிருந்த என் கணவர் மட்டும் திரும்பி கேள்விக் குறியுடன் என்னைப் பார்த்தார்.



"என்ன வேலை முடிஞ்சு வழக்கம் 8.10 க்கே வாறனீர்..? இண்டைக்கென்ன..? அதுவும் இந்த இரவு நேரம் 9 மணி தாண்டி வருகிறீர்..!" என்பது போல் இருந்தது அவரின் பார்வை.



நான் மெல்லிய சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு நேரே எனது அறையுள் போய் உடைகளை மாற்றி குளியலறைக்குள் புகுந்து கொண்டேன். தண்ணீரை அளவான சூட்டில் விட்டு சவரைப் பிடித்த போது உடம்புக்கு இதமாக இருந்தது. ஆனாலும் மனதுக்குள் இன்னும் புழுக்கமாகவே இருந்தது.



நான் வேலை முடிந்து என் சக வேலையாட்களுடன் பேரூந்துக்காக விரைந்த போது எனது ஸ்வெபிஸ்ஹால் நகரம் கோடைகாலத்துக்கே உரிய கலகலப்புடன் தெரிந்தது. ஆங்காங்கு உணவுச்சாலைகளின் முன்பும், சிற்றுண்டிச்சாலைகளின் முன்பும், ஐஸ்கிரீம் கடைகளின் முன்புமாக பெரியவர்கள், சிறியவர்கள், காதலர்கள், நண்பர்கள் என கும்பல் கும்பலாக இருந்து எதையாவது சுவைப்பதுவும், கதைப்பதுவும் சிரிப்பதுவுமாக இருந்தார்கள். வீதிகள் கண் பார்த்துக் கதை பேசும், உதட்டோடு உதடுரசும், இடைவளைத்து உடல் உரசித் தமை மறந்து செல்லும் ஜோடிகளும், ஆங்காங்கு சிறுவர்கள் சிறுமியர்களும் என்று நிறைந்திருந்தது.



விருட்சமாக விரிந்திருந்த கஸ்தானியன் மரங்களில் வெள்ளைப் பூக்கள் கொத்தாகப் பூத்திருந்தன. இன்னும் ஒரு மாதத்தில் கஸ்தானியன் காய்கள் காய்த்து விடும்.



வீதியோரங்களில் சிவப்பாய், வெள்ளையாய், மஞ்சளாய்.. என்று பல வர்ணங்களில் மலர்கள் சிரிக்க, இதமான காற்று உடலை வருட.. `வேலை முடிந்து விட்டது. இனி வீட்டுக்குத்தானே..!´ என்ற திருப்தியில் நடக்கையில் சந்தோசமாக இருந்தது. கதையும் பகிடியும் சிரிப்புமாய் வந்த நானும் என் சக வேலையாட்களும் பேரூந்து தரிப்பு நிலையத்துக்கு அருகில் வந்ததும் பிரிந்து எமக்கெமக்கான பேரூந்துகளை நோக்கி நடந்தோம்.



மைக்கல் தேவாலய மணிக்கூடு எட்டு முறை அடித்து ஓய்ந்தது. பக்கத்திலிருந்த பெயர் தெரியாத மரத்தின் வெள்ளைப் பூக்கள் என்னை ஈர்த்தன. அந்தப் பூக்களில் லயித்துப் போய் நின்ற என் மனதையும், கண்களையும் வலுக்கட்டாயமாக பேரூந்தின் பக்கம் திருப்பி பேரூந்தில் ஏற முற்பட்ட போதுதான்..... பேரூந்து நிலையத்துக்கு அருகில் வீதியோரமாக இருந்த மரவாங்கிலில் மல்லாக்காகப் படுத்திருந்த அவன் என் கண்ணில் பட்டான்.

அவன் படுத்திருந்த விதம் வித்தியாசமாகவே இருந்தது.



அவன் வேறு யாருமல்ல. எனது நாட்டவன். எனக்கு என்ன செய்வதென்று தெரியாத தடுமாற்றமாய் இருந்தது. சொற்ப விநாடிகளில் எனது பேரூந்து புறப்படப் போகிறது. `என்ன செய்வது..? எனது நாட்டவன் ஒருவன்..´ அப்படியிருக்க பாராமுகமாய் சென்று விடவும் மனசு ஒப்புக் கொள்ளவில்லை.



´என்ன பிரச்சனையாக இருக்கும்..? அவன் போக வேண்டிய இடத்துக்கான பேரூந்து வந்திருந்தும் அவன் அதைப் பொருட் படுத்தாது ஏன் அப்படி.....? ஏதாவது சுகவீனமோ..?` எனக்குள் குழப்பமான கேள்விகள் எழுந்தன.



என்னைச் சட்டை செய்யாது எனது பேரூந்து புறப்பட்டு விட்டது. சற்று நேரத்துக்கு முன்னர் இருந்த சந்தோசத்தில் ஏதோ குறைந்து விட்டது போலிருந்தது. நான் அந்த வாங்கிலை நோக்கி நகர்ந்தேன். அருகில் சென்றதும் அவன் என்னைக் கண்டு திடுக்கிட்டு தட்டுத் தடுமாறி எழும்பினான். கையில் இருந்த பியர் பேணியை அவசரமாய் பின் பக்கம் மறைத்தான். "அக்கா....!" என்று சங்கடப் பட்டான்.



எனக்கு அவனது கோலம் ஆச்சரியமாகவும் நம்ப முடியாததாகவும் இருந்தது.

பத்து வருடங்களாக நான் வாழும் இந்த ஸ்வெபிஸ்ஹால் நகரில் என்னையும் என் கணவரையும் எனது பிள்ளைகளையும் விட்டால் மருந்துக்குக் கூட வேறு தமிழர்களே இருக்கவில்லை. இரண்டு வருடங்களின் முன்புதான் 1989 வரை அமெரிக்க இராணுவத்தினரின் முகாமாக இருந்த - டோலன்பறக்ஸ் - அகதிகள் முகாமாக்கப் பட்டு அங்கு பல்வேறு நாட்டு அகதிகளோடு நாற்பது தமிழர்களும் குடியமர்த்தப் பட்டனர். அவர்களுள் இப்போ என் முன்னால் பியர் பேணியோடு நிற்கும் கோபுவும் ஒருவன்.



எமது நகரத் தினசரிப் பத்திரிகையொன்றில் நாற்பது தமிழர்களின் வரவு செய்தியாக வந்த போது ´எமது நகரில் தமிழரா..!` என்று மனசு சந்தோசத்தில் துள்ள குடும்பமாகச் சென்று அவர்களைச் சந்தித்தோம்.



கோபுவையும் அன்றுதான் முதன் முதலாகச் சந்தித்தோம். மிகவும் அடக்கமானவனாகக் காணப் பட்டான். அவன் தாயகத்திலிருந்து புறப்பட்டதிலிருந்து பாங்கொக், உக்ரையின் என்று ஏஜென்சியால் அலைக்கழிக்கப்பட்டு, உக்ரையின் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டு.. சில வருடங்களோடு தனது வாழ்க்கையின்; சில வசந்தப் பொழுதுகளையும் தொலைத்திருந்தான். அவனிடம் மட்டுமல்ல. வந்திருந்த நாற்பது பேரிடமும் விரக்தியான சோகமான உண்மைக் கதைகள் பல இருந்தன. அவர்களுக்குள் இவன் படித்த பண்பான குடும்பத்தில் இருந்து வந்த ஒருவனாகவே தெரிந்தான். தந்தை பாடசாலை அதிபர் என்றான்.



அவனைப் பின்பும் பலமுறை சந்தித்திருக்கிறேன். ஓரளவு தேறியிருந்தான். பொறுப்புள்ளவனாக ஊர்க்கனவுகளைச் சுமந்தவனாக வேலை தேடிக் கொண்டிருந்தான்.



சில மாதங்களின் பின் மீண்டும் ஒரு முறை சந்தித்த போது பிற்சாக் கடை ஒன்றில் நிலத்தைக் கழுவிக் கொண்டிருந்தான். என்னைக் கண்ட போது வெட்கப் பட்டு ஒழித்தான்.

"இதிலை ஒண்டும் வெட்கமில்லை. அடுத்தவன் கையை எதிர் பார்க்காமல் அடுத்தவனை ஏமாற்றாமல்.. யாருக்கும் தீங்கு விளைவிக்காத.. உங்களாலை முடிஞ்ச வேலையை நீங்களே செய்து பணம் சம்பாதிக்கிறது ஒண்டும் வெட்கமான விசயமில்லை." என்றேன்.

அதன் பின்னர் - அவன் நிலம் கழுவிக் கொண்டிருக்கும் போது என்னைக் கண்டாலும் கூச்சப் படாமல் "அக்கா...!" என்று கூப்பிட்டு "வணக்கம்" சொல்லுவான்.



அப்படிப் பண்போடும் மரியாதையோடும் பழகும் அடக்கமான பொறுப்பான கோபுவைத் தான் எனக்குத் தெரியும். இன்று இப்படி குடிபோதையில் தோய்ந்து போயிருந்த கோபு எனக்கு முற்றிலும் புதியவன்.



"என்ன கோபு..? ஏன் இன்னும் வீட்டை போகேல்லை? உங்கடை பஸ்ஸில்லோ வெளிக்கிடப் போகுது..?"



"இல்லை.. அக்கா.. போப்போறன்.." என்று தடுமாறியவன் "நீங்கள் போங்கோ அக்கா நான் அடுத்த பஸ்ஸிலை போறன்." என்றான்.



"இல்லை.. மினக்கடாமல் இப்பவே ஓடிப் போய் அந்த பஸ்ஸிலை ஏறி வீட்டை போய்ச் சேருங்கோ.." என்றேன்.



அவன் எனக்குத் தெரியக் கூடாது என்ற பிரயத் தனத்துடன் கையில் இருந்த பியர் பேணியை மெதுவாக அவனருகில் நாட்டப் பட்டிருந்த குப்பை வாளியினுள் போட்டான். நான் கண்டும் காணாத மாதிரி நின்றேன். அதற்கிடையில் அவனது பேரூந்தும் போய் விட்டது.



"பார்த்திங்களே இப்ப பஸ்ஸை விட்டிட்டிங்கள்."



"வீட்டை போயும் என்னத்தைச் செய்யிறதக்கா..?"



"இந்த ரோட்டிலை நிண்டு மட்டும் என்ன செய்யப் போறிங்கள்..?

நாளைக்கு வேலையில்லையோ..?"



"இல்லை நான் வேலையை விட்டிட்டன்."



"ஏன்..? அப்ப காசுக்கு என்ன செய்யிறிங்கள்..?

அம்மாக்கு காசு அனுப்பினனிங்களே..? அக்கான்ரை தாலிக்கொடியை அத்தானுக்கும் தெரியாமல் அடைவு வைச்சில்லே உங்களை இங்கை அனுப்பினவையள். மறந்திட்டிங்களோ..?"



அவன் தள்ளாடியபடி மௌனமாய் நின்றான்.



நான் மேற்கொண்டு எதுவும் கேளாது அவனை ஒரு ரக்சியில் ஏற்றி அவனது வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். இரவு நேரமாதலால் ஒரு மணி நேரங்கழித்தே எனது அடுத்த பேரூந்து வந்தது. வழியெல்லாம் ஏன் இவன் இப்படியானான்..? என்ற கேள்வி என்னைக் குடைந்து கொண்டேயிருந்தது. அவன் மீது கோபமாகக் கூட இருந்தது. பேரூந்து தரிப்பு நிலையத்தில் எத்தனை பேர் பார்த்துக் கொண்டு நின்றார்கள். எல்லாருக்கும் அவன் எனது நாட்டவன் என்பது புரிந்திருக்கும். அவமானம் அவனுக்கு மட்டுமா? அல்லது அவனுக்கும் எனக்கும் மட்டுமா? எங்கள் நாட்டுக்கும் அல்லவா..! தமிழரையே கேவலமாக நினைப்பார்களல்லவா..!

ஏன் இப்படி எம்வர்கள் மாறிப் போகிறார்கள் என்று யோசித்ததில் எனக்கு எரிச்சலாகவும் மனசுக்குள் புகைச்சலாகவும் இருந்தது.



வெளிநாட்டுக்கு வந்து எமது இளையவர்கள் கெட்டுப் போகிறார்கள் என்ற சிலரின் வாய்ப்பாட்டை உண்மையாக்குவது போலல்லவா இவன் நடந்து கொண்டிருக்கிறான்.



குளித்து முடித்து வெளியில் வந்த போது கால் பந்து மிகவும் சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருந்தது. தேநீர் தயாரித்து கணவருக்குக் கொடுத்த போது கண்களை தொலைக்காட்சியில் இருந்து விலத்தாமலே தேநீரை வாங்கிச் சுவைக்கத் தொடங்கினார்.



கோபு ஒழுங்காக வீடு போய்ச் சேர்ந்து விட்டானா என்பதை அறிந்து கொள்வதற்காக, நான் எனது தேநீரை உறிஞ்சிய படி தொலைபேசியில் கோபுவின் வீட்டு இலக்கத்தை அழுத்தினேன். அவனோடு கூட வாழும் அவனது நண்பன்தான் அழைப்பில் வந்தான். "கோபு வாந்தி எடுத்து விட்டு படுத்து விட்டான்." என்றான்.



அவனிடம் கோபுவைப் பற்றி விசாரித்த போது முதலில் சங்கடப் பட்டு எதையும் சொல்லாது மழுப்பியவன் பின்னர் சொல்லத் தொடங்கினான்

"என்னத்தைச் சொல்லுறது அக்கா...! இவனுக்கு அங்கை ஊரிலை ஒரு காதலி இருக்கிறாள். அவளை இங்கை வந்த உடனை கூப்பிடுறதாச் சொல்லிப் போட்டுத்தான் இவன் இங்கை யேர்மனிக்கு வந்தவனாம். பாங்கொக், மொஸ்கோ எண்டு அலைஞ்சதிலை அங்கை அவளுக்கு ஒழுங்கா கடிதமொண்டும் போகேல்லை. பிறகு இரண்டு வருசம் உக்ரையினிலை ஜெயில்லை இருந்த விசயம் உங்களுக்குத் தெரியும்தானே. அந்த நேரம் இவனைப் பற்றி ஒரு தகவலும் அங்கை ஒருத்தருக்கும் கிடைக்கேல்லை. அவன் ஒரே அவளின்ரை நினைவாத்தான் இருந்தவன். ஆனாலும் அவள் இவனை நம்புகிறாளில்லை. அவள் நினைச்சிட்டாள் இவன் இவ்வளவு காலமும் இங்கை யேர்மன் காரியோடை சுத்திப் போட்டு இப்ப அலுத்துப் போக தனக்கு ரெலிபோன் அடிக்கிறான் எண்டு. இவன் ரெலிபோன் அடிச்சாலே - வையடா ரெலிபோனை.. - எண்ட பதில்தான் வருது.



நானும் இவனுக்காண்டி அவளோடை கதைச்சுப் பார்த்தன். ம்கும்... சரிவரேல்லை.

இவனுக்கு தொலைபேசிக் கட்டணம் தலைக்கு மேலே வந்ததுதான் மிச்சம்.



இப்ப இங்கையிருந்து காட் கிடைச்ச வேறை ஒருவன் அங்கை போய் அவனுக்கும் அவளுக்கும் கல்யாணம் நிச்சயமாகிட்டுதாம்.

அந்த விரக்தியிலைதான் இவன் இப்படியாப் போனான்....."



எனக்கு கோபுவின் நிலை புரிந்தது. ஆனால் புலம் பெயர்ந்தவர்களின் இப்படியான அவலங்களை தாயக உறவுகளுக்கு எப்படிப் புரிய வைக்கலாம் என்பதுதான் புரியாமல் இருந்தது.



சந்திரவதனா

யேர்மனி

10.4.1999

இலவசம்

தபால்கள் கொணர்ந்து தருவதாலேயே தபாற்காரன் மேல் நட்பாயிருந்த கோமதிக்கு இன்று ஏன்தான் தபாற்காரன் வந்தானோ என்றிருந்தது. விடுமுறையும் அதுவுமாய்.. பிள்ளைகளும் வீட்டில் நிற்கிற நேரம் பார்த்து.... அந்தக் கடிதம் வந்ததில் இருந்த சந்தோசமெல்லாம் வடிந்து போயிற்று. பிள்ளைகளுக்கு விடுமுறை என்றால் எப்போதும் தானும் வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டு கோமதி வீட்டிலேயே நிற்பாள். போனமாதமும் ஏதோ காரணத்துக்காக பிள்ளைகளுக்கு நான்கு நாட்கள் பாடசாலை விடுமுறை. கோமதி விடுப்பு எடுத்து விட்டு வீட்டில் நின்றாள். அப்படி அவள் வீட்டில் நின்றால் பிள்ளைகள் விளையாடும் எல்லா விளையாட்டுகளிலும் தானும் பங்கு பற்றி விளையாடுவாள்.



அவர்கள் சிறுவர்களாயிருந்த போது லூடோ, கரம்... போன்ற விளையாட்டுக்கள். கொஞ்சம் வளர மொனோபோலி, இன்னும் கொஞ்சம் வளர கேம்போய், நின்ரெண்டோ என்று அவர்களின் ஆர்வத்துக்கும் காலத்திற்கும் ஏற்ப விளையாட்டுக்களும் மாறும். இந்த விளையாட்டுக்கள் தற்போது இணையதளத்துக்கு மாறியிருந்தன.

சாப்பாட்டைக் கூட மறந்து உலகம் முழுவதும் - சட்டன் - செய்வதும், மின்னஞ்சல் அனுப்புவதுமே கோமதியின் கடைசி மகன் மதுரனின் வேலையாக இருந்தது.



அன்றும் அப்படித்தான் கோமதி சாப்பாட்டை மேசையில் வைத்து விட்டு

- மதுரன் வா. வந்து சாப்பிடு. - என்று பல தடவைகள் கூப்பிட்டுப் பார்த்தாள். மதுரன் வருவதாயில்லை. சற்றுக் கோபமாகக் கணணி இருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.



அம்மா பிற்ற (தயவு செய்து) இன்னும் கொஞ்ச நேரம். வெரி இன்ரெஸ்ரிங் - என்று மூன்று பாசைகள் கலந்து மதுரன் அவளிடம் கெஞ்சினான்.



கோமதி கணணித் திரையைப் பார்த்தாள். ஒரே நேரத்தில் நிறையப் பேருடன் சட்டன் செய்து கொண்டிருந்தான். அடிக்கடி www.... என்று அழுத்தினான். மின்னஞ்சலும் அனுப்பிக் கொண்டிருந்தான். இருபது வயதுப் பெண்ணொருத்திக்கு தனது பதினைந்து வயதை இருபத்தியொரு வயது என எழுதினான். அவள் உடனே - ஐ லவ் யூ - என்று எழுதினாள். ஒரு ஆணுக்கு தான் ஒரு பெண் என்றும் வயது பதினேழு என்றும் எழுதினான்.



அவன் அப்படி அமெரிக்கா, நியூசிலாந்து........ என்று உலகமெல்லாம் பொய்யும் புரட்டும் காதலுமாய்..... சட்டன் செய்து கொண்டிருந்தது கோமதிக்குச் சிரிப்பைத் தந்தது. அவளுக்கு அது சுவாரஸ்யமாகக் கூட இருந்தது. இருந்தாலும் - இப்ப வா. வந்து சாப்பிடு. - என்றாள்.

இப்போது அவன் கணணித் திரையில் அம்மா கத்துகிறா. சாப்பிட்டு விட்டு அரைமணியில் வருகிறேன். - என்று எழுதி எல்லோருக்குமாக அனுப்பி விட்டுச் சாப்பிட வந்தான்.



பரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்த மூத்தவன் காண்டீயையும் ஒருவாறு இழுத்துக் கொண்டு வந்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிடத் தொடங்கினாள் கோமதி. அவர்களின் கதைகள் எங்கெல்லாம் சுற்றி வந்தாலும் கடைசியில் இன்ரநெற்றிலேயே வந்து சங்கமித்தன.



நீ இப்பிடி நாள் முழுக்க - சட்டன் - செய்து கொண்டிருந்தால் ரெலிபோன் பில் எக்கச்சக்கமா எல்லோ வரும். அது போக உன்ரை கண்ணுக்கும் எவ்வளவு கூடாது தெரியுமே..! கோமதி மதுரனைக் கடிந்தாள்.



என்னம்மா எப்பவும் இப்பிடிச் செய்யப் போறனே..? பள்ளிக்கூடம் தொடங்கினால் நேரம் எங்கை இருக்கப் போகுது? அது போக உங்களுக்கு ஞாபகமில்லையே..? போன கிழமை போஸ்ரிலை ஒரு சீடீ வந்ததில்லோ..! இல்லையில்லை இரண்டு சீடீ. அது அமெரிக்கன் ஒன்லைனிலிருந்துதான் வந்தது. அந்த ஒவ்வொரு சீடீயிலையும் காசில்லாமல் இன்ரநெற்றுக்குப் போய் வர இருபந்தைஞ்சு இருபத்தைஞ்சு மணித்தியாலங்கள் இருக்குது.



சாப்பிட்டு முடிந்ததும் கோமதியும் அந்ந சீடீக்களை வாங்கி ஒரு முறை வாசித்துப் பார்த்து அது இலவச இன்ரநெற் நுழைவுக்குத்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டாள். மதுரன் மீண்டும் கணணி அறைக்குள் நுழைந்து கணணிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டான்.



தொடரும் வீட்டு வேலைகளின் மத்தியில் கோமதியின் மனதுக்குள் ஒரு ஆசை பிறந்தது. தொலைபேசிக் கட்டணங்கள் மிகவும் அதிகமாயிருந்த, எந்தத் தொலைபேசி அட்டைகளும் அவ்வளவாக அறிமுகப் படுத்தப் படாத அந்தக் காலகட்டத்தில் நியூசிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மகளுடன் தொலைபேசியில் நிறையப் பேச முடிவதில்லை. அவளுடன் சட்டன்; செய்தால் என்ன..? என்ற ஆசைதான் அது.

மதுரனிடம் ஆசையைச் சொல்லி அந்த 50 மணித்தியாலங்களில் குறைந்தது ஆறு மணித்தியாலங்களையாவது தனக்குத் தரும்படி கேட்டுக் கொண்டாள். அவன் கணணியை அவளுக்காக விட்டுக் கொடுக்கும் வரை அவனோடு சேர்ந்து அவளும் இன்ரநெட் நண்பர்களுடன் அரட்டை அடித்தாள்.



மாலை கணவர் சுந்தரேசன் வேலையால் வர அவரைக் கவனித்து விட்டு கணணி முன் போயிருந்து நியூசிலாந்திலிருக்கும் மகளுடன் சட்டன் செய்யத் தொடங்கினாள். ஓசிதானே என்ற நினைப்பில் உப்புச் சப்பற்ற விடயங்களெல்லாம் எழுதினாள்.



இடையில் சுந்தரேசர் வந்து ரெலிபோன் பில் பற்றி எச்சரித்த போது

கோமதி அவசரமாய் . அது ஓசி. காசெண்டால் நான் இப்பிடிச் செய்வனே.? என்றாள்.

சுந்தரேசருக்கும் கோமதியின் புத்திசாலித்தனத்தின் மீது நல்ல நம்பிக்கை. மறு பேச்சின்றிப் போய் விட்டார்.



அன்று இரவு சிவராத்திரிதான். காண்டீ, மதுரன், கோமதி என்று மாறி மாறிச் சட்டன்தான்.

சுந்தரேசர்தான் இடையிடையே எழும்பி வந்து - என்னப்பா இரவிரவாச் செய்யிறியள். லைற்றையும் போட்டு வைச்சுக் கொண்டு..... மனிசரை நித்திரை கொள்ளவும் விடமாட்டியள். - என்று அதிருப்திப் பட்டுக் கொண்டார்.



இன்றும் அப்படியொரு விடுமுறை நாள் தான். பிள்ளைகளோடு வெளியிலை போவமோ.. அல்லது அது செய்வமோ, இது செய்வமோ... - என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் தபாற்காரன் அந்தக் கடிதத்தைக் கொண்டு வந்திருந்தான்.

கோமதிக்கு அதிர்ச்சிதான். ஆயிரம் மார்க்கைத் தாண்டிய ரெலிபோன் பில்லைத் தன்னோடு காவி வந்த அக் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு யோசித்தாள். ஊருக்கு அம்மாக்கும் போன் பண்ணேல்லை. நியூசிலாந்துக்கு மகளுக்கும் போன் பண்ணேல்லை. எப்பிடி இவ்வளவு பெரிசா வந்திருக்கும்..? பில்லைப் பார்த்தாள். உள்ளுர் தொடர்புக்குத்தான் 8860யூனிற்றுகள் என்று போடப் பட்டு கணக்கும் போடப் பட்டிருந்தது. என்னவாயிருக்கும்... கோமதிக்கு மலைப்பாய் இருந்தது.



இதுக்குள்ளை சுந்தரேசர் பில்லைப் பார்த்திட்டு கத்தத் தொடங்கி விட்டார். மனிசர் கஸ்டப் பட்டு வேலை செய்யிறது உங்களுக்கெங்கை தெரியப் போகுது. நான் வேலைக்குப் போக நீங்கள் வீட்டிலை இருந்து ஊர் ஊரா ரெலிபோன் பண்ணியிருக்கிறியள்.....



கோமதி ஒன்றும் செய்ய முடியாத அந்தரத்தில் கோபமாக தொலைத்தொடர்பு நிலையத்துக்குத் தொடர்பை ஏற்படுத்தி - ஏன் இப்படி ஒரு தவறான கணக்கு அனுப்பியிருக்கிறீர்கள்..? என்று கேட்டாள்.

அவர்களும் மிகவும் சங்கடப் பட்டு மன்னிப்புக் கேட்டு - பொறுங்கள்..! இரண்டு நாட்களில் பதில் தருகிறோம். - என்றார்கள். கடைசியில் தொலைபேசியை வைக்கும் போதுதான் அவளுக்கு அமெரிக்கன் ஒன்லைன் கிளை அலுவலகத்தின் ஞாபகம் வர சட்டன் பற்றிச் சொன்னாள்.



அப்போதுதான் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தவர் உயிர் பெற்றவர் போல உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். அமெரிக்கன் ஒன்லைன் இனூடான இன்ரநெற் நுழைவு இலவசம் என்றாலும் யேர்மனியின் இந்த அந்தத்திலுள்ள உங்கள் நகரத்திலிருந்து - மறு அந்தத்தில் இருக்கும் அமெரிக்கன் ஒன்லைன் கிளை அலுவகம் உள்ள நகரத்துக்கான இணைப்பு இலவசமில்லையே! -



கோமதிக்கு எங்கேயோ ஏமாந்த தனது புத்தி தன்னையே பார்த்துச் சிரிப்பது போலிருந்தது.



சந்திரவதனா

யேர்மனி

Wednesday, June 23, 2004

கொக்கென்று நினைத்தாயா...?

சொல்லப் படாது. இந்த மனுசனுக்கு ஒண்டும் சொல்லப்படாது.

அப்பிடித்தான் எப்பவும் நினைக்கிறனான்.

ஆனாலும்.......எங்கை.......? சில நேரத்திலை பொறுமை கெட்டுப் போயிடுது.

எத்தினைக் கெண்டு தான் நானும் பொறுமை காக்கிறுது?



காலைமை எழும்பினதிலையிருந்து ஆற அமர நேரமில்லை. வேலை.



ம்......கூம் வேலை எண்டு மட்டும் இந்த மனுசன்ரை காது படச் சொல்லக் கூடாது.

உடனை "என்னப்பா உனக்கு இஞ்சை வேலை......?"

"ஊரிலை மாதிரி என்ன இங்கையும் கல்லிலை அடிச்சு உடுப்புத் தோய்க்கிறியளோ....? அல்லது

ஆட்டுக் கல்லிலையும் அம்மியிலையும் அரைக்கிறியளோ.....? அல்லது அடுப்பைத் தன்னும் பச்சை விறகை வைச்சிட்டு ஊதி ஊதி எரிக்கிறியளோ.......?" எண்டு பன்மையிலை கேட்கத் தொடங்கீடும்.



எனக்கு வரும் கோவம். ஊரிலை என்ன மிக்சி இல்லையோ? அல்லது எலெக்றிக் குக்கர்தான் இல்லையோ? வாய்க்கு வசதியாக ஏதும் சொல்லேலுமெண்டால் எதையும் சொல்லலாமெண்டு நினைக்குது இந்த மனுசன்.



நானும் சொல்லுறதெண்டால் சொல்லுவன்.

"நீங்கள் மட்டுமென்ன....? ஊரிலை எண்டால் சைக்கிளைத்தான் தூக்கிக் கொண்டு வெளிக்கிடுவியள்.

இங்கை எண்டால் கார் இல்லையெண்டால் ஒரு அடி எடுத்து வைக்க மாட்டியள். அது மட்டுமே-விறகு கொத்துறது, தண்ணி அள்ளிக் கொண்டு வாறது......... எண்டு எத்தினை வேலையள் அங்கை உங்களுக்கும். இங்கை அப்பிடியே சாமான்கள் வேண்டுற வேலையையும் பொம்பிளையளின்ரை தலையிலை போட்டிட்டு, நான் என்ரை மனுசிக்கு சுதந்திரம் குடுத்திருக்கிறன் எண்டுவியளே! உங்கடை சுதந்திரக் குடுப்பனவு பற்றி எங்களுக்குத் தெரியாதாக்கும்.

வேலைக்குப் போறதும், சாமான் வேண்டப் போறதும் தான் பெண் விடுதலைக்கான அர்த்தம் எண்டு நீங்களெல்லாருமா ஒரு அகராதியே தயாரிச்சு வைச்சிருக்கிறீங்களே! "

ம்........இதையெல்லாம் சொல்லுறதிலை ஏதும் பிரயோசனமிருக்கே! அதாலைதான் நான் எப்பவும் நினைக்கிறதோடை நிப்பாட்டிப் போடுவன். சொல்லுறேல்லை.



சரி அதை விட்டிட்டு இப்ப பிரச்சனைக்கு வருவம்.

நான் காலைமை எழும்பி வரவே போர்வை சோபாவிலை அப்பிடியே குழம்பின படி போட்டுக் கிடக்கு. எனக்கு உடனையே எரிச்சல் வந்திட்டுது. நேற்றிரவு இந்த மனுசன்தான் போர்த்திக் கொண்டு படுத்திருந்து ரிவீ பார்த்துக் கொண்டிருந்தது. எழும்பிப் போகேக்கை போர்வையையும் எடுத்துக் கொண்டு போய் மடிச்சு வைக்கலாம்தானே. அதில்லை அப்பிடியே போர்வையை விட்டிட்டுப் போய்ப் படுத்திட்டுது.



"ஏனப்பா நீங்கள் இன்னும் சின்னப் பிள்ளையே......? உங்களுக்கு எத்தினை தடவை சொல்லிப் போட்டன். இந்தப் போர்வையை எடுத்து வைச்சால் குறைஞ்சு போயிடுவிங்களே? நாவுற்றுக்குக் கழிச்ச மாதிரி ஏன் எப்பவும் கோலுக்குள்ளை போர்வையை வைக்கிறிங்கள்?"

எண்டு கேட்க வந்த வார்த்தைகளை அப்பிடியே தொண்டையோடை நிப்பாட்டிப் போட்டன்:.



பிறகு மனுசன் சொல்லும் "விடியக் காத்தாலை தொடங்கீட்டாய் எண்டு." சும்மா சொன்னாலும் பரவாயில்லை. தன்ரை பிழையை மறைக்கிறேக்காண்டி நாய்க்கத்தல் கத்தத் தொடங்கீடும்.

எனக்கு அந்தக் கத்தலை கேட்கவே ஏலாது. எனக்கு மட்டும் என்ன விடியக் காத்தாலை இல்லையே? எனக்கும் விடியக் காத்தாலை இந்த மனுசன் அப்பிடிக் கத்தினால் மூட் அவுட்டாகும்தானே. ஆனால் மனுசன் நினைக்குது தனக்கு மட்டுந்தான் விடியக் காத்தாலை, வேலைக்களைப்பு, பஞ்சி, அலுப்பு எல்லாம் இருக்கெண்டு. எனக்கும் இதெல்லாம் இருக்கெண்டு இந்த மனுசன் நினைச்சுப் பார்த்ததாவே தெரியேல்லை.



போர்வை மட்டுந்தான் பிரச்சினை யெண்டால் தூக்கி மடிச்சு வைச்சிட்டு இருந்திடுவன். எல்லா விசயத்திலையும் அப்பிடித்தான். பேப்பரை விரிச்சு வாசிச்சா மடிச்சு வைக்கிறேல்லை. புத்தகத்தை புத்தக அலுமாரியிலையிருந்து எடுத்தா திருப்பிக் கொண்டே வைக்கிறேல்லை............. உப்பிடியே இந்த மனுசனும், பிறகு மனுசனைப் பார்த்து பிள்ளையளும் வீட்டிலை விதைச்சு விடுற சாமான்களெல்லாத்தையும் எடுத்து அந்தந்த இடத்திலை வைக்கவே எனக்கு ஒரு நாளிலை அரைவாசி போயிடும். அதுக்குள்ளை மனுசன் கேட்கும் "உனக்கென்ன வேலை...?" எண்டு.



காலைமை எழும்பினதிலையிருந்து வேலை எண்டெல்லே சொன்னனான். அதுதான் போர்வையை மடிச்சு வைக்கிறதிலை தொடங்கி ஒண்டொண்டா எல்லாத்தையும் அடுக்கி வைச்சு, சமைச்சு ........மற்ற வேலையளையெல்லாம் முடிச்சு....... நான் வேலைக்கு வெளிக்கிடக்கிளை அப்பிடியே வீடு பளிச்செண்டு இருந்திச்சு. எனக்கு அதைப் பார்க்கவே ஒரு சந்தோஷம்.

அந்த சந்தோஷத்தோடையே வேலைக்குப் போயிட்டன்.



வேலைக்குப் போனால் வேலை செய்யோணும் தானே. ஆனால் என்ரை மனுசன்ரை நினைப்பு, தான் மட்டும்தான் வேலையிடத்திலை வேலை செய்யிறது. நான் எண்டால் சும்மா இருந்திட்டு வாறதெண்டு. சரி ஏதோ நினைச்சிட்டுப் போகட்டும்.



எனக்கு வேலை முடிஞ்சால் நிம்மதி. இனி வீட்டை போகலாமெண்டு.

அப்பிடித்தான் வேலை முடிய நிம்மதியா வீட்டை வந்தன். அதையேன் பேசுவான். பளிச்செண்டு நான் விட்டிட்டுப் போன வீடு என்னைப் பார்த்து இளிக்கிற மாதிரி.......எல்லாம் தலை கீழாய். மேசையிலை புத்தகங்கள், பேப்பருகள், கடிதங்கள்.............. குசினிக்குள்ளை ஒரு குவியல் கோப்பையள்...........

கட்டிலுக்குப் பக்கத்திலை சுருட்டின படி மனுசன்ரை சொக்ஸ்..........



மனுசன் சோபாக்குள்ளை சுருண்டபடி அந்தப் போர்வையாலை போர்த்திக்கொண்டு பேசாமல் படுத்திருந்து ரிவீ பார்க்குது...... மனுசனுக்கு வேலைக்களைப்பு அதுதான். எனக்கு வந்துதே கோபமும் எரிச்சலும். கூட்டித் துடைச்சு அடுக்கி வைக்கத்தான் முடியேல்லை. அடுக்கினதுகளையாவது குழப்பாமல் இருக்கலாம்தானே.



ஆனால் நான் ஒண்டுமே சொல்லேல்லை. மனசுக்குள்ளை குமைச்சலாத்தான் இருந்தது. ஆனாலும் பேசாமல் மனுசனுக்கு தேத்தண்ணியை போட்டுக் குடுத்திட்டு -தேத்தண்ணியை உடனை போட்டுக் குடுக்காட்டி மனுசன் பிறகு மூஞ்சையை நீட்டிக் கொண்டு இருக்கும். எனக்கு இருக்கிற குமைச்சலும் எரிச்சலும் போதும். இன்னும் கூட்ட வேண்டாம் எண்டிட்டு அந்த வேலையை உடனை செய்திட்டு.... பிள்ளையள் சாப்பிட்டுதுகளோ குடிச்சுதுகளோ எண்டு பார்த்து..... இண்டைக்கு என்ன படிச்சது....... வெளியிலை என்ன நடந்தது........ எல்லாம் கேட்டு முடிச்சிட்டு.... பழையபடி அடுக்கல் கூட்டல் துடைத்தல்.... எண்டு எல்லாம் முடிய 11 மணியாச்சு. காலும் வேலை விட்ட போலை நோகத் தொடங்கீட்டுது. சரி இனி இண்டைக்கு ஒண்டும் செய்யேலாது படுப்பம் எண்டு நினைச்சுக் கொண்டு போனால் ரிவீ தன்ரை பாட்டிலை போய்க் கொண்டிருக்கு.... அது மட்டுமே!!. பழைய படி போர்வை சோபாவிலை...............



மனுசன் நைசா அதை அப்பிடியே விட்டிட்டுப் போய்ப் படுத்திட்டுது போலை........

எனக்கு வந்துதே கோபம். விறுவிறென்று போய் படுக்கையறையைப் பார்த்தன். மனுசன் ஒய்யாரமாப் படுத்திருந்து புத்தகம் வாசிக்குது.



சொல்லப்படாது எண்டுதான் முதல்லை நினைச்சனான். ஆனால் என்னையறியாமல் பொறுமை கெட்டுச் சொல்லிப்போட்டன்.



"ஏனப்பா அந்தப் போர்வையை எடுத்து வைக்கிறதுக்கென்ன......?

எத்தினை தரமெண்டு உங்களுக்குச் சொல்லுறது....!"

நான் சொல்லி முடிக்கேல்லை. மனுசன் இரவெண்டும் பாராமல் பொரிஞ்சு தள்ளிச்சே.

"நீ என்னத்துக்குப் பெண்டாட்டியெண்டு இருக்கிறாய்? எடுத்து வைக்கிறதுதானே!

மனுசருக்கு இருக்கிற பிரச்சனையள் தெரியாமல்... உனக்கு இப்ப போர்வைதான் பிரச்சனையாக்கும்."



எனக்குத்தானே முதலே பொறுமை கெட்டிட்டு. நானும் விடேல்லை.

"என்னப்பா உங்களுக்கு அப்பிடிப் பிரச்சனை." எண்டு கேட்டிட்டன்.



என்ன இவள் இப்பிடி பதில் சொல்லேலாத கேள்வியாப் பார்த்துக் கேக்கிறாளே எண்டு நினைச்சுதோ என்னவோ - மனுசனுக்கு வந்துதே ஒரு கோபம். அப்பிடியே முழுசி என்னை ஒரு பார்வை பார்த்திச்சு.

ஏதோ தான் பெரிய கௌசிக முனிவர். அவற்றை பார்வையிலை நான் எரிஞ்சு சாம்பலாயிடுவன் எண்ட நினைப்பு.



"என்னை என்ன கொக்கெண்டு நினைச்சியோ கொங்கணவா...?"

எண்டு கேக்கத்தான் எனக்கு மனம் வந்திச்சு.



ம்..........பிறகேன் பிரச்சினையை வளர்ப்பான் எண்டிட்டு பேசாமல் வெளிலை வந்திட்டன்.

மனுசன் நினைச்சிருக்கும் தன்ரை பார்வேலை நான் பயந்திட்டனெண்டு.



சந்திரவதனா

யேர்மனி

2001

என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையே...?

எனக்கு வாற கோவத்துக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை.

நான் பாத்ரூமுக்குள்ளை போய் தலையிலை சீப்பை வைக்குது வைக்க முன்னமே திரும்பவும் இந்த மனுசன் கத்துது. "என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையே..?" எண்டு.



எனனெண்டு முடியிறது?

காலைமை எழும்பி, வீட்டை ஒரு நிலைப் படுத்தி, அவசரமாய்ச் சமைச்சு, அதுக்கிடையிலை சின்னச் சின்னதா வீட்டிலை உள்ள மற்ற வேலையளைப் பார்த்து, அதோடை சமையலையும் முடிச்சு இந்த மனுசனுக்கு சாப்பாடும் குடுத்திட்டன்.



மனுசன் நித்திரையாலை எழும்பி படுக்கையைக் கூட விரிக்காமல் வந்து இருந்து நான் போட்டுக் குடுத்த கோப்பியைக் குடிச்சிட்டு, நான் கீழை போய் தபால்பெட்டிகக்குள்ளை இருந்து எடுத்துக் கொண்டு வந்த பேப்பரை வைச்சு நீட்டிலை வாசிச்சுக் கொண்டு இருந்திச்சு.

நான் பம்பரமாய் சுழண்டனே!. ஓரு உதவி செய்வம் எண்டில்லை.

சரி உதவத்தான் முடியேல்லை. உபத்திரமாவது தராமல் இருந்துதே!



இருந்து கொண்டு---- "இஞ்சரும் அந்தக் கண்ணாடியை எடுத்துத் தாரும்.

இஞ்சரும் இந்தக் கோப்பி கொஞ்சம் ஆறிப்போட்டுது. புதுசா ஒண்டு போட்டுத் தாரும்..........." .எண்டு தொல்லை வேறை.



அது மட்டுமே-

"எங்கையப்பா அண்டைக்கொரு என்வெலப் தந்தனே. அதையொருக்கால் தாரும்."

ம்...... தானே வைக்கலாம்தானே. கொண்டு வந்ததை என்னட்டைத் தாறது.

பிறகு எங்கையப்பா அது எண்டுறது.

இதெல்லாம் நல்ல புத்தி சாதுரியமான வேலையள் எண்டு மட்டும் எனக்குத் தெரியாதே. கதிரைக்குள்ளை இருந்து கொண்டு காரியம் சாதிக்கிற தன்மையள்.



சரி பேப்பரை வாசிச்சு முடிச்சிட்டு பாத்ரூமுக்குள்ளை போன மனுசன் சேவ்

பண்ணுறன் அது இது எண்டு சொல்லி ஒரு மணித்தியாலமாய் வெளிலை வரேல்லை.



அதுக்குள்ளை நான் பிள்ளையளின்ரை வேலையளை ஓடி ஓடி முடிச்சிட்டன்.



அதுகளும் எங்கை.......? அப்பா கதிரைக்குள்ளையும் சோபாவுக்குள்ளையும் இருக்க அம்மாதானே வேலையெல்லாம் செய்யிறா. அப்பிடியெண்டால் வேலையெல்லாம் அம்மாக்குத்தான் சொந்தம் எண்டு நினைக்குதுகள்.

அல்லது அம்மா வேலை செய்யிற மெஷின் எண்டு நினைக்குதுகுளோ!!!



மனுசன் குளிச்சிட்டு வெளிலை வருறதுக்கு முன்னமே சாப்பாட்டை ரெடியா மேசையிலை வைச்சிட்டன். மனுசன் ஏதோ நான் சமைக்கிறதுக்கெண்டே பிறந்தவள் எண்டு நினைச்சுதோ என்னவோ, நல்லாயிருக்கப்பா எண்டு ஒரு வார்த்தை பேசேல்லை. வேறை ஏதோ எனக்குத் தேவையில்லாத கதையளைச் சொல்லுறதும் "நாளைக்கு அந்த வேலையை செய். அங்கை அபபொயிண்ட்மெண்ட் எடுத்து வை" எண்டு எனக்கு கட்டளைகள் இடுவதுமாய் இருந்திச்சு.



எனக்கு பயங்கர எரிச்சல் மனசுக்குள்ளை. என்ரை எரிச்சலை இந்த மனுசனுக்குக் காட்டி ஏதும் பிரயோசனமிருக்கோ எண்டு நினைச்சுக் கொண்டு மனுசன் சாப்பிட்டு முடிச்ச கையோடை ரீ யைப் போட்டுக் குடுத்தன்.



ரீ யைக் குடிச்சுக் கொண்டே மனுசன் தொடங்கீட்டுது.

"என்னப்பா நீ இன்னும் வெளிக்கிடேல்லையே எண்டு...?"



எனக்கு கோவம் தான் வந்துது.

என்னெண்டு வெளிக்கிடுறது?

கொஞ்சம் கூட ஒத்தாசை பண்ணாமல் ..............

சாப்பிட்டு முடிய சாப்பாட்டைக் கூட மேசையிலை இருந்து எடுத்து வைக்காமல்....

போய் ரீவீ க்கு முன்னாலை இருந்து கொண்டு..........



எனக்கு வந்த கோவத்துக்கு

"ஏனப்பா இஞ்சை வாங்கோ. இதுகளை நீங்கள் எடுத்து வைச்சீங்களெண்டால்-- நான் டக் கெண்டு வெளிக்கிட்டிடுவன்தானே." எண்டு சொல்லோணும் போலை இருந்திச்சு.



ம்...... இப்ப சொல்லப் போய், அதுவும் வெளிக்கிடுற நேரம்

பிறகு மனுசன் "நான் என்ன உன்னைப் போலை சும்மா வீட்டிலையே இருக்கிறன். வேலைக்குப் போற மனுசனை ஒரு நேரம் ஆறுதலா இருக்க விடமாட்டாய்" எண்டு தொடங்கீடும்.



பிறகு எனக்கு மூட் அவுட் ஆகி--------- ஏன் பிரச்சனையை எண்டிட்டு

வாயை மூடிக்கொண்டு எல்லாத்தையும் எடுத்து வைச்சன்.



மனுசன் ஆற அமர இருந்து ரீ யைக் குடிச்சுக் கொண்டு ரீவீ யை ரசிச்சுக் கொண்டு இருந்திச்சு. எனக்கு குளிச்சுப் போட்டு வரவும் வேர்த்துக் கொட்டிச்சு.



ஒரு மாதிரி சாறியை உடுத்திட்டு வந்து தலையை இழுக்கிறதுக்கு சீப்பை தலையிலை வைக்கவே மனுசன் திரும்பத் தொடங்கீட்டுது. "என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையே எண்டு...?"



நல்லா திருப்பிக் குடுக்கோணும் போலை எனக்குக் கோவம் பொத்துக் கொண்டு வருது. ம்........ குடுத்தென்ன!. மனுசன் பிறகு இன்னும் சிடுசிடுக்கும்.



சரி ஒரு மாதிரி வெளிக்கிட்டாச்சு.

மனுசன் இப்ப எழும்பிப் போய் வெளிக்கதவையும் திறந்து வைச்சுக் கொண்டு நிண்டு......

"நீ வெளிக்கிட்டு வாறதுக்கிடையிலை அங்கை புரோக்கிராம் முடிஞ்சு எல்லாரும் வீடடையும் போடுவாங்கள். ஏன் தான் இந்தப் பொம்பிளையள் வெளிக்கிட இவ்வளவு நேரமோ.....?" எண்டு என்னை மட்டுமில்லாமல் பொம்பிளை வர்க்கத்தையே பேசிக்கொண்டு நிக்குது.



நானும் ஏதும் சொல்லோணும் எண்டு துடிக்கிற நாக்கை அப்படியே மடக்கி வாயை இறுக்கி மூடிப்போட்டன்.

வெளிலை போறதுக்கு முன்னம் வீட்டிலை எல்லாம் சரியா இருக்கோ எண்டு பார்த்தன். அதையேன் பேசுவான்.

வழக்கம் போலை லைற் எரியுது- ரீவீ நிற்பாட்டேல்லை. அது மட்டுமே..........?

மனுசன் வாசிச்ச பேப்பர் மேசையிலை விரிச்ச படி இருக்கு.

குடிச்ச கோப்பை கதிரைக்குப் பக்கத்திலை கீழை நிலத்திலை கிடக்குது.



எனக்கு என்ரை மனுசனிலை வந்த கோவம், சும்மா கொஞ்ச நஞ்ச மில்லை.



எண்டாலும் வந்த கோவத்தை அப்பிடியே எனக்குள்ளையே அடக்கிட்டன்.

ஏனெண்டால் மனுசன் கதவையும் திறந்து வைச்சுக் கொண்டு நிக்குது. இப்ப போய் நான் என்ரை கோவத்தைக் காட்டுறன் எண்டு சொல்லிக் கத்த---

எதிர் வீட்டுக் காரர் சொல்லுவினம் "ஒரு அடக்கமில்லாத பொம்பிளை, என்னமா புருஷனைத் திட்டுது. கலிகாலம் முத்திப்போச்சு. பாவம் அந்த மனுசன்...“ எண்டு.



அதுதான் சாறியை இழுத்து இடுப்பிலை செருகிக்கொண்டு ஓடி ஓடி லைற்றை நிற்பாட்டி, ரீவீ யை நிற்பாட்டி, பேப்பரை மடிச்சு வைச்சு, கோப்பையையும் எடுத்து வைச்சிட்டு.......

மனுசனோடை மௌனமா நடந்து போறன். மனசுக்குள்ளை மட்டும்..............கோவம்

ஆறாமல் இருக்குது. அது ஆரை என்ன செய்யப் போகுது.



-முற்றும்-



சந்திரவதனா

யேர்மனி



பிரசுரம் - ஈழமுரசு(25-31 ஒக்டோபர் 2001)

என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையே...?

எனக்கு வாற கோவத்துக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை.

நான் பாத்ரூமுக்குள்ளை போய் தலையிலை சீப்பை வைக்குது வைக்க முன்னமே திரும்பவும் இந்த மனுசன் கத்துது. "என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையே..?" எண்டு.



எனனெண்டு முடியிறது?

காலைமை எழும்பி, வீட்டை ஒரு நிலைப் படுத்தி, அவசரமாய்ச் சமைச்சு, அதுக்கிடையிலை சின்னச் சின்னதா வீட்டிலை உள்ள மற்ற வேலையளைப் பார்த்து, அதோடை சமையலையும் முடிச்சு இந்த மனுசனுக்கு சாப்பாடும் குடுத்திட்டன்.



மனுசன் நித்திரையாலை எழும்பி படுக்கையைக் கூட விரிக்காமல் வந்து இருந்து நான் போட்டுக் குடுத்த கோப்பியைக் குடிச்சிட்டு, நான் கீழை போய் தபால்பெட்டிகக்குள்ளை இருந்து எடுத்துக் கொண்டு வந்த பேப்பரை வைச்சு நீட்டிலை வாசிச்சுக் கொண்டு இருந்திச்சு.

நான் பம்பரமாய் சுழண்டனே!. ஓரு உதவி செய்வம் எண்டில்லை.

சரி உதவத்தான் முடியேல்லை. உபத்திரமாவது தராமல் இருந்துதே!



இருந்து கொண்டு---- "இஞ்சரும் அந்தக் கண்ணாடியை எடுத்துத் தாரும்.

இஞ்சரும் இந்தக் கோப்பி கொஞ்சம் ஆறிப்போட்டுது. புதுசா ஒண்டு போட்டுத் தாரும்..........." .எண்டு தொல்லை வேறை.



அது மட்டுமே-

"எங்கையப்பா அண்டைக்கொரு என்வெலப் தந்தனே. அதையொருக்கால் தாரும்."

ம்...... தானே வைக்கலாம்தானே. கொண்டு வந்ததை என்னட்டைத் தாறது.

பிறகு எங்கையப்பா அது எண்டுறது.

இதெல்லாம் நல்ல புத்தி சாதுரியமான வேலையள் எண்டு மட்டும் எனக்குத் தெரியாதே. கதிரைக்குள்ளை இருந்து கொண்டு காரியம் சாதிக்கிற தன்மையள்.



சரி பேப்பரை வாசிச்சு முடிச்சிட்டு பாத்ரூமுக்குள்ளை போன மனுசன் சேவ்

பண்ணுறன் அது இது எண்டு சொல்லி ஒரு மணித்தியாலமாய் வெளிலை வரேல்லை.



அதுக்குள்ளை நான் பிள்ளையளின்ரை வேலையளை ஓடி ஓடி முடிச்சிட்டன்.



அதுகளும் எங்கை.......? அப்பா கதிரைக்குள்ளையும் சோபாவுக்குள்ளையும் இருக்க அம்மாதானே வேலையெல்லாம் செய்யிறா. அப்பிடியெண்டால் வேலையெல்லாம் அம்மாக்குத்தான் சொந்தம் எண்டு நினைக்குதுகள்.

அல்லது அம்மா வேலை செய்யிற மெஷின் எண்டு நினைக்குதுகுளோ!!!



மனுசன் குளிச்சிட்டு வெளிலை வருறதுக்கு முன்னமே சாப்பாட்டை ரெடியா மேசையிலை வைச்சிட்டன். மனுசன் ஏதோ நான் சமைக்கிறதுக்கெண்டே பிறந்தவள் எண்டு நினைச்சுதோ என்னவோ, நல்லாயிருக்கப்பா எண்டு ஒரு வார்த்தை பேசேல்லை. வேறை ஏதோ எனக்குத் தேவையில்லாத கதையளைச் சொல்லுறதும் "நாளைக்கு அந்த வேலையை செய். அங்கை அபபொயிண்ட்மெண்ட் எடுத்து வை" எண்டு எனக்கு கட்டளைகள் இடுவதுமாய் இருந்திச்சு.



எனக்கு பயங்கர எரிச்சல் மனசுக்குள்ளை. என்ரை எரிச்சலை இந்த மனுசனுக்குக் காட்டி ஏதும் பிரயோசனமிருக்கோ எண்டு நினைச்சுக் கொண்டு மனுசன் சாப்பிட்டு முடிச்ச கையோடை ரீ யைப் போட்டுக் குடுத்தன்.



ரீ யைக் குடிச்சுக் கொண்டே மனுசன் தொடங்கீட்டுது.

"என்னப்பா நீ இன்னும் வெளிக்கிடேல்லையே எண்டு...?"



எனக்கு கோவம் தான் வந்துது.

என்னெண்டு வெளிக்கிடுறது?

கொஞ்சம் கூட ஒத்தாசை பண்ணாமல் ..............

சாப்பிட்டு முடிய சாப்பாட்டைக் கூட மேசையிலை இருந்து எடுத்து வைக்காமல்....

போய் ரீவீ க்கு முன்னாலை இருந்து கொண்டு..........



எனக்கு வந்த கோவத்துக்கு

"ஏனப்பா இஞ்சை வாங்கோ. இதுகளை நீங்கள் எடுத்து வைச்சீங்களெண்டால்-- நான் டக் கெண்டு வெளிக்கிட்டிடுவன்தானே." எண்டு சொல்லோணும் போலை இருந்திச்சு.



ம்...... இப்ப சொல்லப் போய், அதுவும் வெளிக்கிடுற நேரம்

பிறகு மனுசன் "நான் என்ன உன்னைப் போலை சும்மா வீட்டிலையே இருக்கிறன். வேலைக்குப் போற மனுசனை ஒரு நேரம் ஆறுதலா இருக்க விடமாட்டாய்" எண்டு தொடங்கீடும்.



பிறகு எனக்கு மூட் அவுட் ஆகி--------- ஏன் பிரச்சனையை எண்டிட்டு

வாயை மூடிக்கொண்டு எல்லாத்தையும் எடுத்து வைச்சன்.



மனுசன் ஆற அமர இருந்து ரீ யைக் குடிச்சுக் கொண்டு ரீவீ யை ரசிச்சுக் கொண்டு இருந்திச்சு. எனக்கு குளிச்சுப் போட்டு வரவும் வேர்த்துக் கொட்டிச்சு.



ஒரு மாதிரி சாறியை உடுத்திட்டு வந்து தலையை இழுக்கிறதுக்கு சீப்பை தலையிலை வைக்கவே மனுசன் திரும்பத் தொடங்கீட்டுது. "என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையே எண்டு...?"



நல்லா திருப்பிக் குடுக்கோணும் போலை எனக்குக் கோவம் பொத்துக் கொண்டு வருது. ம்........ குடுத்தென்ன!. மனுசன் பிறகு இன்னும் சிடுசிடுக்கும்.



சரி ஒரு மாதிரி வெளிக்கிட்டாச்சு.

மனுசன் இப்ப எழும்பிப் போய் வெளிக்கதவையும் திறந்து வைச்சுக் கொண்டு நிண்டு......

"நீ வெளிக்கிட்டு வாறதுக்கிடையிலை அங்கை புரோக்கிராம் முடிஞ்சு எல்லாரும் வீடடையும் போடுவாங்கள். ஏன் தான் இந்தப் பொம்பிளையள் வெளிக்கிட இவ்வளவு நேரமோ.....?" எண்டு என்னை மட்டுமில்லாமல் பொம்பிளை வர்க்கத்தையே பேசிக்கொண்டு நிக்குது.



நானும் ஏதும் சொல்லோணும் எண்டு துடிக்கிற நாக்கை அப்படியே மடக்கி வாயை இறுக்கி மூடிப்போட்டன்.

வெளிலை போறதுக்கு முன்னம் வீட்டிலை எல்லாம் சரியா இருக்கோ எண்டு பார்த்தன். அதையேன் பேசுவான்.

வழக்கம் போலை லைற் எரியுது- ரீவீ நிற்பாட்டேல்லை. அது மட்டுமே..........?

மனுசன் வாசிச்ச பேப்பர் மேசையிலை விரிச்ச படி இருக்கு.

குடிச்ச கோப்பை கதிரைக்குப் பக்கத்திலை கீழை நிலத்திலை கிடக்குது.



எனக்கு என்ரை மனுசனிலை வந்த கோவம், சும்மா கொஞ்ச நஞ்ச மில்லை.



எண்டாலும் வந்த கோவத்தை அப்பிடியே எனக்குள்ளையே அடக்கிட்டன்.

ஏனெண்டால் மனுசன் கதவையும் திறந்து வைச்சுக் கொண்டு நிக்குது. இப்ப போய் நான் என்ரை கோவத்தைக் காட்டுறன் எண்டு சொல்லிக் கத்த---

எதிர் வீட்டுக் காரர் சொல்லுவினம் "ஒரு அடக்கமில்லாத பொம்பிளை, என்னமா புருஷனைத் திட்டுது. கலிகாலம் முத்திப்போச்சு. பாவம் அந்த மனுசன்...“ எண்டு.



அதுதான் சாறியை இழுத்து இடுப்பிலை செருகிக்கொண்டு ஓடி ஓடி லைற்றை நிற்பாட்டி, ரீவீ யை நிற்பாட்டி, பேப்பரை மடிச்சு வைச்சு, கோப்பையையும் எடுத்து வைச்சிட்டு.......

மனுசனோடை மௌனமா நடந்து போறன். மனசுக்குள்ளை மட்டும்..............கோவம்

ஆறாமல் இருக்குது. அது ஆரை என்ன செய்யப் போகுது.



-முற்றும்-



சந்திரவதனா

யேர்மனி



பிரசுரம் - ஈழமுரசு(25-31 ஒக்டோபர் 2001)

Sunday, June 20, 2004

கலை வளர்க்கும் பூனைகள்

மண்டபம் நிறைந்திருந்தது. மேடையில் பரதம் நர்த்தனமாடியது. இளவட்டங்கள் கதிரைகளில் இருக்காமல் மண்டபத்தின் சுவரோரமாக நின்று நர்த்தனத்தையோ அல்லது நர்த்தகிகளையோ ரசித்துக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் இருக்கைகளை விட்டெழுந்து அங்குமிங்குமாக ஓடிக் கொண்டு திரிந்தார்கள்.



சுந்தரேசன் இந்தக் களேபரங்களுக்குள் மண்டபத்துள் அடங்கிப் போய் விடாமல் வெளியிலே நின்றார். அவர் அப்படித்தான். மண்டபத்துள் மனைவியின் அருகில் உட்கார்ந்து நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை விட வெளியில் பெரிய மனுசத் தோரணையுடன் கன்ரீனிலோ... கசட் விற்கும் இடங்களிலோ... நின்றால்தான் நடனமாடி விட்டுப் போகும் பெண்களுடனோ அல்லது வெளியில் கன்ரீனில் சிற்றுண்டி வாங்க வரும் பெண்களுடனோ இரண்டு பகிடி விட்டுச் சிரிக்கலாம் என்பது அவருக்கு நன்கு தெரியும்.



அவர் இந்த விடயத்தில் படுகில்லாடி. இதொன்றும் அவரது மனைவி கோமதிக்குத் தெரியாமலில்லை. இளவயசிலேயே அவர் சபலபுத்திக்காரன்தான். கிளி மாதிரி அழகிய மனைவி கோமதியைப் பக்கத்தில் வைத்து விட்டுக் காகங்களைத் தேடிப் போய் வருவதில் அவருக்கு அலாதி திருப்தி.



இளமையில்தான் அப்படியென்றால் இப்ப வயசு ஐம்பதைத் தொட்ட பின்னும் நரைத்த மீசையை மளிச்சு விட்டுக் கொண்டு அலையோ அலை என்று அவர் அலைவதைப் பார்க்க கோமதிக்குப் பொல்லாத எரிச்சல் வரும்.



கோமதி சில சமயங்களில் மனசு பொறுக்காமல் "கலியாண வயசிலை பிள்ளையளை வைச்சுக் கொண்டு என்னப்பா கூத்தடிக்கிறிங்கள்...! கொஞ்சம் கூட வெக்கமாயில்லையோ உங்களுக்கு..?" என்று பேசுவாள்.



"உனக்கு......விசரடி! நான் ஒண்டும் நீ நினைக்கிற மாதிரி நடக்கேல்லை.....!" என்று கத்தி விட்டு, அவர் தன் வேலையை அலுக்காமல் சலிக்காமல் ஒவ்வொரு தமிழ் நிகழ்ச்சிகளிலும் தொடருவார். தன்ரை வயசுக்கு தன்னை யாரும் சந்தேகப் பட மாட்டார்கள் என்பதில் அவருக்கு அபார நம்பிக்கை.



அவரின் கெட்டித்தனம் என்னவென்றால் யார் யாருக்கெல்லாம் பருவ வயதில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் தனக்கு நட்பாக்கி விடுவார். அவர்களிடம் - அண்ணை நீங்கள்தான் எல்லாம். - என்பது மாதிரி நடந்து கொள்வார். அவர்கள் தன்னை விட வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் ஒரு அண்ணை போட்டு - பணிவு காட்டி மடக்கி விடுவார்.



அடுத்தது - புதிதாகத் திருமணத்துக்கென யாருக்காவது பெண் வந்தால் போதும். ஏதாவதொன்றைச் சாட்டிக் கொண்டு எடுத்ததுக் கெல்லாம் அவர்கள் வீட்டுக்குத்தான் ஓடுவார். போயிருந்து அந்த வீட்டுப் பெண்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதில் அவருக்கு அளவுக்கதிகமான ஆர்வம். அதற்காகவே அழகான பெண்கள், இளம் மனைவியர் இருக்கிற வீட்டு ஆண்களுடன் எல்லாம் அருமையான நண்பன் போல அழகாக நடிப்பார். அந்தப் பெண்களின் கண்களுக்கு அவர்கள் கணவன்மார்களை விடத் தான்தான் அழகாகத் தெரிவேன் என்பது அவரது முழுநம்பிக்கையும்! அவருக்குத் தன்னம்பிக்கை மிக அதிகம்.



இன்றும் கோமதி தனியேதான் இருந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நினைவுகள் மட்டும் சுந்தரேசரோடு வெளியே நின்றன.



இம்முறை நிகழ்ச்சிக்கான மண்டபமும் அதற்குரிய கன்ரீனும் சுந்தரேசருக்கு மிகவும் வசதியாகவே அமைந்து விட்டது. வழமையான மண்டபங்களில் போல் வெளியாக இல்லாமல் கன்ரீனும் ஒரு அறையினுள். அதை அறையென்று சொல்வதை விட இருந்து சாப்பிடுவதற்கான இடமும் சேர்த்து பெரிதாகக் கட்டப் பட்டிருந்ததால் - ஹோல் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அந்த ஹோலின் ஒரு மூலையை சேலைகளாலும் திரைச்சீலைகளாலும் மூடி மறைத்துத்தான் நிகழ்ச்சி தரும் பெண்கள் உடை மாற்றுவதற்கான அறை தற்காலிகமாகத் தயாரிக்கப் பட்டிருந்தது. கன்ரீனைக் கடந்துதான் அந்தத் தற்காலிக அறைக்குப் போக வேண்டும். இது போதும்தானே அவருக்கு.



ஒரேயடியாகக் கன்ரீனுக்குள் போய் பெரிய மனுசத் தோரணையுடன் ஒரு கரையாக இருந்து கதையளந்து கொண்டிருந்தார். கண்கள் மட்டும் இளம் பெண்களின் கண்களைச் சந்திப்பதிலேயே குறியாக இருந்தன. சுந்தரேசரின் வயதுக்கு யாரும் அவரைத் தப்பாக நினைக்க மாட்டார்கள். யாராவது இளம்பெடியள் கன்ரீனுக்குள் வந்தால்தான் கண்குத்திப் பாம்பாய் நின்று காவல் காப்பார்கள். இது சுந்தரேசர் போன்ற பூனைகளுக்கு வலு வசதி.



ரீன்ஏஜ்ஜில் காலடி வைக்கும் பெண் பிள்ளைகளின் பலவீனம் அவருக்கு நன்கு தெரியும். அதனால் அவர் அந்தப் பிள்ளைகளைக் கண்களால் தூண்டில் போட்டு சுலபமாக மடக்கி விடுவார். அதன் பின் அங்கிள் அங்கிள் என்று கொண்டு அந்தப் பிள்ளைகள் அவர் பின்னால் திரிவார்கள். ரீன்ஏஜ்ஜில் இருந்து வெளியே போகப் போகும் பெண்பிள்ளைகளுடன் இன்னொரு விதமான அணுகு முறை.

திருமணமான இளம்பெண்கள் என்றால் கணவன்மாருக்கு எந்த வித சந்தேகமும் ஏற்படாத வகையில் வேறொரு விதமான அணுகுமுறை.



திருமணமான பெண்களின் முன் - பெண்கள் கஷ்டப் பட்டாலே அவருக்கு மனசு தாங்காது என்பது போல அவர் நடத்தும் நாடகங்கள் கொஞ்ச நஞ்ச மல்ல. வீட்டில் கோமதியையே எல்லா வேலைகளையும் செய்ய விட்டு விட்டு ஊர் சுற்றும் அவர், மற்றைய பெண்களின் கணவன்மாருக்கு பெண்டாட்டிக்கு உதவிகள் செய்யும் படி புத்திமதி சொல்வார். இதனால் இதெல்லாம் அவரது நடிப்பு என்று தெரியாமலே அந்தப் பெண்கள் இவர் மேல் மதிப்பும் பிரியமும் வைத்து விடுவார்கள்:



மொத்தத்தில் அவர் உலகமறிந்த, உளவியல் புத்தகங்கள் எல்லாம் வாசித்து பெண்களின் பலவீனங்களைக் கற்றறிந்த புத்திசாலித்தனமான பூனை.



கோமதிக்கு வெளியில் சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத அவஸ்தை. எல்லாவற்றையும் விட்டிட்டு எங்காவது ஓடி விடுவோமா என்ற எரிச்சலான எண்ணம் அவளுள் அடிக்கடி எழும். ஆனால் ஓடிப் போனால் சுந்தரேசர் கதையை எப்படித் திருப்புவார் என்பதும் அவளுக்குத் தெரியும். சுந்தரேசர் சொல்வதைத்தான் ஊர் நம்பும். கோமதி வெளிநாட்டு மோகத்தில் கலாச்சாரம் பண்பாடு எல்லாவற்றையும் காற்றில் வீசி விட்டு ஓடி விட்டாள் என்றுதான் சமூகம் சொல்லும். அதனால் புயல் வீசும் மனசைப் பொறுமையால் காத்தாள்.



கோமதியின் இந்த ஊர் உலகத்துக்குப் பயந்த தன்மை கூட சுந்தரேசருக்குச் சாதகமாகவே அமைந்து விட்டது.



கோமதி மன உளைச்சலுடன் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் திரை மூடப்பட்டு -15 நிமிட இடைவேளை - அறிவிக்கப் பட்டது. எழுந்து வெளியில் போனாள். கன்ரீனுள் அவளுக்கு முன்னமே வெளியில் போய் விட்ட பெண்களும் ஆண்களும் குவிந்து நின்றார்கள். ஏதாவது குடிக்க வேண்டும் போலிருந்ததால் கோமதியும் கும்பலோடு கும்பலாக கன்ரீன் முன் நின்றாள்.



சுந்தரேசர் இவளைக் கவனியாது மிகவும் சந்தோசமாக பிரசங்கம் வைத்துக் கொண்டிருந்தார்.

"எங்கடை கலையும் கலாச்சாரமும் அழியாமல் இருக்கோணுமெண்டால் நாங்கள் அடிக்கடி கலை நிகழ்ச்சிகள் வைக்க வேணும். எங்கடை கலையையும் கலாச்சாரத்தையும் வளர்க்க வேண்டியது தமிழர்களாகிய எங்களின்ரை கடமை..... இந்த நிகழ்ச்சியோடை நாங்கள் ஓய்ந்து போகக் கூடாது. முந்தி மாதிரி இப்பவெல்லாம் தமிழ் நிகழ்சிகளுக்கு வாற ஆக்களின்ரை தொகை குறைஞ்சு போட்டுதெண்டாலும் நாங்கள் ஓய்ந்து போகக் கூடாது. எங்கடை கலையை அழிய விடக் கூடாது. அடுத்த மாதம் அந்த நகரத்திலை.. அதற்கடுத்த மாதம் மற்றைய நகரத்திலை.... எண்டு எல்லா இடங்களிலையும் நடத்தோணும். உங்களுக்கு நிகழ்ச்சிகள் கிடைக்கிறது கஸ்டம் எண்டால் என்னட்டைச் சொல்லுங்கோ. நான் டான்ஸ் ரீச்சர்மாரோடை கதைச்சு உங்களுக்கு நிகழ்ச்சி எடுத்துத் தாறன்."



கோமதி எட்டிப் பார்த்தாள்.



கொஞ்சப் பேர் வாயைப்பிளந்தபடி அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சுந்தரேசரின் வாய் பேசிக் கொண்டிருக்க, கண்களோ ஒரு டான்ஸ்ரீச்சரையும் பிள்ளைகளையும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.



கோமதி ஒரு மாதிரி தண்ணியை வேண்டிக் கொண்டு வந்து தள்ளி நின்று கூட்டத்தைப் பார்த்தாள். நிகழ்ச்சி தரும் பிள்ளைகளை விட்டால் இளம் பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்ள மிகவும் சொற்பமானவர்களே நின்றார்கள். மிச்சமெல்லாம் வயது வந்தவர்கள்.



கலை வளர்ப்பும் கலாச்சார விழாவும் யாருக்காக நடக்கிறது. சுந்தரேசர் போன்ற.. பூனைகளுக்காகவா..? எழுந்த கேள்வியோடு மீண்டும் தன் இருக்கைக்கு நகர்ந்தாள்.



சந்திரவதனா

யேர்மனி

5.3.2003

பயணம்

இன்று புகையிரதத்தில்தான் பயணிக்க வேண்டுமென நேற்றிரவு முடிவான பொழுதே எனக்குள் மெல்லிய சந்தோச அலை அடிக்கத் தொடங்கி விட்டது. எனது கணவர் இன்று நிகழ்ச்சி நடை பெறும் மண்டபத்துக்கு வேளைக்கே போய் முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கிறதாம். அதனால் அதிகாலையிலேயே தான் காரில் போய் விடுவதாயும் என்னை பின்னர் புகையிரதத்தில் வரும் படியும் கேட்டுக் கொண்டார்.



எப்போதும் இந்தக் காரில்தானே..! அதுவும் அதிவேக வீதியில் அவசரமாய்ப் பயணிப்பது. நீண்ட பொழுதுகளின் பின் புகையிரதத்தில் போக இப்படியொரு வாய்ப்பு என்றதும் உண்மையிலேயே எனக்கு சந்தோசம்தான்.

எனக்குத் தேவையான எல்லாவற்றையும் காருக்குள்ளேயே அடைத்து அனுப்பி விட்டேன். சிறிய கைப்பையுடன் ஒரு கொப்பியும் பேனையுமாக ஏறிய போது புகையிரதத்தினுள் யன்னலோரமாக இருக்கை கிடைத்தது. மனசுக்குள் சந்தோசம் துள்ளியது.



வெயிலின் முறைப்பும் இல்லாமல், குளிரின் குத்தலும் இல்லாமல் காலைச் சிலிர்ப்போடு இயற்கை கண்களை இதமாக வருடியது. காற்று யன்னல் வழி மேனியைத் தழுவியது. இயற்கையை ரசித்த படி மனசு ஏகாந்தத்தில் சுகிக்கத் தொடங்கியது. புகையிரதம் தாலாட்டியது.



வெளி அழகாய்... மரங்கள் எல்லாம் அவசரமாய் நகர்ந்து கொண்டிருந்தன. குருவிகள் கெந்துவதும் ஏதோ நினைத்து விட்டு மீண்டும் பறந்து மரங்களில் குந்துவதுமாய் இருந்தன. கவிஞர் சோலைக்கிளி இதைக் கண்டால் கட்டாயம் ஒரு குருவிக் கவிதை புனைந்திருப்பார். எனக்கும் ஏதேதோ மனசுக்குள் பூத்தன. கவிதையாய் வடிக்க வார்த்தைகள்தான் வர மறுத்தன. "இனிது இனிது ஏகாந்தம் இனிது" ஒளவைப் பாட்டியின் வரிகளின் அர்த்தம் புரிந்தது.



திடீரென்று புரியாத பாசையில் கதைக்கும் பெரிய சத்தம் கேட்டது. ம்...... புகையிரதம் நின்றது கூடத் தெரியாமல்........நான். அதற்கிடையில் அடுத்த தரிப்பு நிலையம் வந்து விட்டது. ஏறுவோரும் இறங்கியோரும் தத்தமது திசைகளில் வெளியில் விரைய.. ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சில பெண்களும் ஒரு ஆடவனும் தமது உயர்ந்த குரல்கள் மற்றவர்களைத் தொந்தரவு செய்யுமே என்ற எந்த வித பிரக்ஞையுமின்றி அடிக்குரலில் உரத்துப் பேசிய படி நானிருந்த பெட்டியினுள் ஏறினார்கள்.



நான் மீண்டும் யன்னல் வழி பார்வையைச் செலுத்தி இயற்கையுடன் ஐக்கியமாகினேன். மனசுக்குள் இனிமையான கவிதையொன்று பிரசவமாவது போன்றதொரு மகிழ்வான உணர்வு. சோதியா, சோலைக்கிளி, ........ போன்றோரின் கவிதைகள் இப்படியான சந்தர்ப்பங்களில்தான் பிரசவித்தனவோ..!



விஜயராகவனின் நுங்குக் கவிதை அடிக்கடி மனசுக்குள் எட்டிப் பார்த்தது. அவனுக்குக் கவிதையை அழகாக வாசிக்கவும் தெரியும். ஒரு தரம் அவனது நுங்குக் கவிதையை ஐபிசி-தமிழ் வானொலியில் கேட்டு விட்டு இரவெல்லாம் ஒரே நுங்குக் கனவு. பாட்டா சீக்காய்களை எல்லாம் ஒரு பக்கமாய் ஒதுக்கி விட்டு தன் வீட்டு முன்றலில் நின்ற ஒற்றைப் பனையிலிருந்து கந்தசாமியைக் கொண்டு இறக்குவித்த பருவ நுங்கைப் பக்குவமாய் சீவி பெருவிரலால் குத்தி இழுத்து பனைமுகிழில் விட்டு......... ம்...ம்... நாக்கில் சுவை நரம்புகள் சுரந்து.........



பக்கத்தில் அடிடாஸ் ஆஃப்ரர்சேவின் வாசனை கமகமக்க "ஹலோ" என்றது ஒரு குரல். நுங்கை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தேன். சற்று முன்னர் வந்த ஆப்பிரிக்கப் பிரயைகளில் ஒருவனான அந்த ஆடவன்தான் என் அருகில் அமர்ந்தான். இவனோடு கூட வந்த பெண்களுக்கருகில் இவனுக்கு இடம் கிடைக்கவில்லைப் போலும். பதிலுக்கு "ஹலோ" சொல்லி விட்டு மீண்டும் யன்னலினூடு நான் இயற்கையிடம் சென்றேன்.



"மன்னிக்கோணும். உனக்கு என்ன பெயர் என்று சொல்வாயா..? "

ஆபிரிக்கன் யேர்மனிய மொழியில் வினவினான்.



திரும்பி "கோகிலா" என்றேன்.



"ம்... கோ..லா.. நல்ல பெயர்."

எனது பெயரை அவன் அப்படித்தான் உச்சரித்தான்.



"நன்றி" சொல்லி விட்டு அவனது பெயரைக் கேட்காமலே மீண்டும் யன்னல் வழி வெளியோடு ஐக்கியமானேன்.



"கோ...லா...! எங்கை போறாய்..? ஸ்ருட்கார்ட்டுக்கா..?"



"ம்... "



"அங்கு வேலை செய்கிறாயா..?"



"இல்லை. எமது நாட்டுக் கலை நிகழ்வு ஒன்றுக்குப் போகிறேன்."



"உன்னை எனக்குத் தெரியும். நீ உனது தங்கையை சங்கீத வகுப்புக்கு கூட்டி வரும் போது நான் காண்கிறனான்."



"அப்படியோ.....! எனக்கு உன்னைத் தெரியாது. நான் உன்னை ஒரு நாளும் கண்டதில்லை. அதுபோக அது எனது தங்கை இல்லை... மகள்....!"



"நான் நம்ப மாட்டன். நீ இவ்வளவு இளமையாக இருக்கிறாய். ஆசியப் பெண்கள் எல்லாம் இப்படித்தான் அழகாக இருப்பார்களோ..?"



ம்... தொடங்கி விட்டான்.

இந்த ஆண்களே இப்படித்தானோ! தமது மனைவியரல்லாத வேறு எந்தப் பெண்ணைக் கண்டாலும்.. நீ அழகு.. நீ இளமை என்று.. சின்னதான எரிச்சல் மனசுக்குள் தோன்றியது.



மீண்டும் யன்னல் வழி வெளியே லயிக்க முனைந்த போதெல்லாம்.. "கோ..லா..! கோ..லா..! " என்று அழைத்து எனக்கு கோபமூட்டினான். ஓவ்வொரு தரிப்பிலும் இறங்குவொரும் ஏறுவோருமாக பயணிகள் மாறிக் கொண்டிருக்க இவன் மட்டும் என்னருகில் என் தனிமையைக் குலைக்க என்றே இருந்தான். என் சந்தோசத்தை மெதுமெதுவாகச் சூறையாடினான்.



"கோ...லா என்னோடை ஒரு நாளைக்கு கோப்பி குடிக்க வருவியோ..?" ம்.. யேர்மனியில் ஒருவன் ஒரு பெண்ணை இப்படிக் கேட்கிறான் என்றால் அதன் அர்த்தம் வெறுமனே கோப்பி குடிப்பதற்கான அழைப்பல்ல. அதற்கும் மேலான சம்மதம் தேடல் அது. அருகமர்ந்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்கிடையில் அவன் தேடல்.. அவனைச் சொல்லிக் குற்றமில்லை. இது யேர்மனிய நாகரிகங்களில் ஒன்று.



"இல்லை. எனக்கு நேரமில்லை."

வார்த்தைகளோடு எரிச்சலும் ஒட்டியபடி வெளியில் கொட்டியது.



"பிளீஸ்... ஒரு நாளைக்கு. ஒரே ஒரு நாளைக்கு... "



"இல்லை. எனக்கு இவைகளுக்கு நேரமுமில்லை. இவைகளில் ஆர்வமுமில்லை. நான் திருமணமானவள். எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள்."



"அதனால் என்ன..? நானும் திருமணமானவன்தான்."



"அப்படியானால் உனது மனைவியுடன் போய் கோப்பியைக் குடியேன். "

சொல்ல வந்த வார்த்தைகளைச் சொல்லாமல் விழுங்கிக் கொண்டேன்.



அவனது கரைச்சல் தொடர்ந்தது. கெஞ்சிக் கேட்டான். யேர்மனியர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். எனக்கு நேரமில்லை என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும். அப்படியே ஒதுங்கி விடுவார்கள். நாளாந்தம் சந்திப்பவர்களாக இருந்தால் அந்த எண்ணத்தை அப்படியே விட்டு விட்டு மீண்டும் நட்பாகப் பழகத் தொடங்கி விடுவார்கள்.

இவன் ஆப்பிரிக்க நாட்டவன் என்பதாலோ என்னவோ எனக்கு விருப்பமில்லையென்று சொன்ன பின்னும்

"தொலைபேசி இலக்கத்தைத் தருகிறாயா..? முகவரியைத் தருகிறாயா..?" என்று கரைச்சல் படுத்திக் கொண்டே இருந்தான்.



இயற்கையோடு நான் ஒன்றும் போதெல்லாம் என்னைக் குழப்புவதிலேயே குறியாக இருந்தான். அவனைத் திசை திருப்ப எண்ணி வெளியிலே தாயின் கையைப் பிடித்த படி செல்ல நடை போடும் ஒரு குழந்தையைக் காட்டி "அந்தக் குழந்தையைப் பார்த்தாயா..? எவ்வளவு அழகாக இருக்கிறாள்.." என்றேன். உண்மையிலேயே அந்தக் குழந்தை துறுதுறுத்த கண்களுடன் துடிப்பாய் தெரிந்தாள். கன்னத்தைக் கிள்ளிப் பார்க்க வேண்டும் போல ஆசை வந்தது. ஆனால் அவனால் அக் குழந்தையிடம் லயிக்க முடியவில்லை. என்னைச் சம்மதிக்க வைப்பதிலேயே மும்முரமாக இருந்தான்.



எனது இன்றைய தனித்த ரெயில் பயணத்தில் ஏகாந்தமாய் இருக்கலாம் என்ற என் இனிமையான நினைப்பு தொலைந்து வெகு நேரமாகியிருந்தது. "இதற்கு மேலும் தாங்காது வேறு எங்காவது போய் இரு." என்று மனசு சொல்லியது. எரிச்சலோடு எழுந்து பார்த்தேன். எல்லா இருக்கைகளுமே நிரம்பி இருந்தன. பரவாயில்லை ஏதாவதொரு மூலையில் போய் நிற்பது உத்தமமெனத் தீர்மானித்த படி எனது கைப்பையையும் கொப்பியையும் பேனையையும் எடுத்துக் கொண்டு அவனைத் தாண்டி நடந்தேன்.



"கோ..லா.. எங்கை போறாய்..?"



"அங்காலை போய் இருக்கப் போறன்."



"ஏன்..?"



நான் பதில் சொல்ல வில்லை. விரைந்து நடந்தேன். இருப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. வெளிச் செல்வதற்கான கதவோடு அண்டிய ஒரு மூலையில் போய் நின்று எனது கொப்பியைப் பார்த்தேன். அது எதுவுமே எழுதப் படாமல் வெறுமையாக இருந்தது.



நேரத்தைப் பார்த்தேன். ம்.. இன்னும் சில நிமிடங்களில் ஸ்ருட்கார்ட் வந்து விடும். ஏமாற்றத்தின் நடுவே ஒரு நிம்மதிப் பெருமூச்சு.



சந்திரவதனா

யேர்மனி

10.6.2003

Thursday, June 17, 2004

பார்வைகள்

Date: 2003-09-18 04:52:23

Elango ( rebsmy@yahoo.com / no homepage) wrote:



Dear Chandra,

I am Ilango, one of the regular visitors to your valaipookal pakkam. I love to write this response in Tamil but my computer is not fully ready for typing it.

First of all let me thank you for doing such a great job with your web hosting skills. You won’t believe that your works are very inspirational and as a result I’ve started looking for Tamil writing software and currently working towards maintaining my own valaipookal pakkam. Thanks again.



Secondly, I have some important comments to add to your article "Depression in Women". This article is as interesting as every other topic in your pakkam. Keep up your good work of educating World Tamil Community with important health information like this. I liked the fact and very glad that your article recommends taking medications to treat depression only as a last option. As a practicing Pharmacist in America I see way too many prescriptions being prescribed for Antidepressant medications (SSRIs). I would like to pass on the following facts which are 100% my ‘personal opinion’ and there is no valid research conducted to substantiate these views.



My strong belief about Antidepressant medication is that they are not very helpful in providing cure to the patients. In stead they make them feel better temporarily and they have major side effects including addiction like effect. So the net possible outcome of taking this medication would be side effects which are worse than depression itself. Surprisingly I came across an article in this regard and if you want to know more use this link. http://www.prisoner-of-paxil.org

The person who own this site is a patient and the content is nothing but his own experience with PAXIL a popular brand of antidepressent drug. Unfortunately I often hear the same story from many patients.

Initially I was very surprised to notice that most of the patients were females and started to look into the possible reason. It did not took me long to realize that society plays a vital role in causing depression. Hereditary inheritance is also one of the many causes for this condition but it is very negligent compared with the social causes like child abuse in various forms, premature, dishonest marital relationship stressful lifestyle often associated with money minded socio economic environment and lack of trust worthy relationships.



I’m 26 years old and I was born and brought up in Tamilagam until few years ago. That’s where I had a very good opportunity to live in a society where good moral values were not only taught to the younger generation but also followed by the elders. I should say majority of the parents were very responsible and not self centered. In most cases if not both the parents at least the mother spend as much time as she could with their kids and offered constant affection, attention and advice to the child. This social set up ensured safe growing environment and avoided many problems in young ones and they almost never had any Psychological problems. Especially in case of girls extra protection comes without saying. Another notorious problem kids in this country is facing is Attention Defecit Disorder. We can speak about that days together. but in essence, even though sometimes doctors acts in the best interests of the Pharma companies, I’m sure if every parent keep this in mind and do well in their part of rearing and supporting the child, we can avoid getting into pharmacological treatment for depression which is worse than the condition itself.

Sorry for taking too much of your time and space. and sincerely hope that this will be of some use.

Vaazthukaludan,

Ilango





---------------------------------------------------------------------------



Date: 2003-09-25 00:48:33

Elango ( rebsmy@yahoo.com / http://www.saaralan.blogspot.com) wrote:



Hi chandra,

This is an invitation for you to visit WWW.Geocities/KATHAISOLLUNGAL.com and glance the combined effort of me and my friends towards story writing. If you like it you can very well be a member in our group.

Actually the site is not fully organized but its ready to give you an idea about what we are trying to do.

By the way, I have started my own weblog few days ago. Please also pay a visit. To start wih I blogging in English and pretty soon I am going to start my thamizh valaipookal pakkam.

nandri.



Natpudan

Elango



------------------------------------------------------------------------------



Date: 2003-09-26 07:49:43

Shalini ( shalini_thiyagaraja@yahoo.co.uk / no homepage) wrote:



Dear Chandra,



I have read several articles of yours and am very impressed with it. Unfortunately, I cannot write in Tamil without mistakes, though I can read it very well. I am 24 years old female and have been living abroad over 15 years. I had the privilege of growing up in both culture. The western outdoors and the eastern at home. This was at times difficult and confusing, but I welcome your article very much as they make me feel as part of the society and keep me on track. Since I have been introduced to your articles, I do not feel I am on my own and that there are many Tamil people out there who I could relate too. This helps me to keep in touch with my own identity.



In my opinion your guestbook is very welcomed idea as it gives me (and others) the chance to read other peoples opinion and feedbacks. Keep it up!



Shalini



------------------------------------------------------------------------------



Date: 2003-10-12 15:10:31

kmal ( samkamal81@yahoo.com / no homepage) wrote:



romba nalla irukku



------------------------------------------------------------------------------



Date: 2003-10-12 15:10:31

kmal Date: 2003-11-18 11:46:46

ரவியா ( no email / no homepage) wrote:



சந்திரா, இப்பகுதியில் தமிழில் எழுதமுடியுமா ?



------------------------------------------------------------------------------



Date: 2003-12-17 22:31:36

saraswathi ( no email / no homepage) wrote:



My eyes are watering when you told about Prabhakaran. These good lines are depicting Prabhakaran as such. Ippadi oru thamilan enbathil perumaiaai irukkirathu. Even though I read about Prabhakaran and feel thankfulness about his actions, Your lines gives more sweetness in explaining him. Nandrihal, ungal vaarthaihalukku.



------------------------------------------------------------------------------



Date: 2004-04-14 07:52:44

Uma ( uma@hotmail.com / no homepage) wrote:



உங்கள் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன.



------------------------------------------------------------------------------



Date: 2004-04-26 16:53:11

Sumathy Rupen ( thamilachi2003@yahoo.ca / no homepage) wrote:



வணக்கம் சந்திரவதனா





உங்கள் பொட்டு கிளாஸ் எனும் கதையை அண்மையில் பெண்கள் என்ற இணையத்தளத்தின் மூலம் படித்தேன்.. பின்னர் பல வாசகர்களின் கருத்தையும் படித்துப் பார்த்தேன்.. நானும் சிறுகதை எழுதுபவர் என்ற முறையில் எனது சில கருத்துக்களையும் சொல்ல விரும்புகின்றேன்..



தலித் இலக்கியம் என்று ஒன்று உள்ளது அதில் தலித் மக்கள் தமது சமூகத்தில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எழுதுவதுண்டு.. இந்த தலித் என்பதிற்குள் நானும் நீங்களும் நிச்சயம் அடக்கம்.

அடுத்தது தலித் என்பர்களைத் தனிமைப் படுத்தி நாம் உயர்ந்தவர்கள் அவர்கட்காக நாம் குரல் கொடுக்கின்றோம் என்ற வகையில் எம்மை நாம் உயர்த்திக் கொள்ளல்.. இந்த இரண்டாவது வகையையே தாங்கள் கை ஆண்டிருக்கின்றீர்கள்..

உங்கள் பொட்டு கிளாஸ் என்னும் சிறுகதை மூலம் நீங்கள் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் உங்கள் குடும்ப கௌரவம் என்பவற்றை நீங்கள் பிறரிக்குப் பறை சாற்ரி விட்டீர்களோ என்று எனக்குப் படுகின்றது..



கருக்கு பாமாவின் கருக்கு சங்கதி போன்றவற்றை தாங்கள் படித்திருக்கக் கூடும்.. அந்த உணர்வையே நான் நாவல்களிலும் சிறுகதைகளிலும் எதிர்பார்க்கின்றேன்.. இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே..



நட்புடன்

சுமதி ரூபன்

Wednesday, June 16, 2004

தனக்கென்று வரும் போது..!

1



ஸ்ருட்காட் விமானநிலையம் வழமை போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அமெரிக்கன் எயர்லைன்ஸ்க்குரிய கவுண்டரை நோக்கி விரைந்து கொண்டிருந்த நர்மதாவுக்கோ இழுத்துக் கொண்டும் இடையிடையே தூக்கிக் கொண்டும் வந்த சூட்கேசை விட அவள் மனம் தான் பாரமாயிருந்தது.



இனி இந்த வாழ்க்கையில் நீளப் போகும் காலங்களின் ஒவ்வொரு கணமும் கூட தனிமையில்தான் களியப் போகுதென்ற நினைவு தந்த கலக்கத்தில், அவள் கண்களில் கண்ணீர் பொங்கிப் பொங்கி வந்து கொண்டிருந்தது. அதைச் சிந்த விட்டு யாருக்கும் தன் சோகத்தைக் காட்ட விரும்பாத அவள் அவசரமாய்ப் பேப்பர்க் கைக்குட்டையால் தன் கண்களை ஒற்றி ஒற்றிக் கொண்டே வரிசையில் போய் நின்று கொண்டாள்.



புயலில் அகப்பட்ட துரும்பாய், நிலையிலாது அலைந்து கொண்டிருக்கும் மனதுடன், முதல் முதலாக அவள் தன்னந்தனியாக இப்படியொரு நீண்ட தூரப் பயணத்துக்கு தயாரானதற்கு காத்திரமானதொரு காரணம் இருந்தது. மற்றவரிடம் சொல்லவே கூச்சமான அருவருப்பான விடயம் அது.



அவளுக்கு இப்ப கூட அந்த சம்பவத்தை நினைத்தால் அருவருப்பாகவும், கணவன் நேசன் மேல் தாங்க முடியாத கோபமாகவும் இருந்தது. இருபத்து இரண்;டு வருடத் தாம்பத்தியம் இப்படி இரண்;டு பட்டுப் போகுமென அவள் எந்தக் கட்டத்திலும் நினைத்திருக்கவில்லை.



ஊரிலே - அவளுக்கு இருபது வயதாக இருக்கும் போது, அவளது மாநிறமான அழகையும், நீண்ட சுருண்ட கூந்தலையும் கண்டுதானே, நேசன் அவள் மேல் காதல் கொண்டு கல்யாணமும் செய்து கொண்டான்.

காதலின் சின்னமாக இரண்;டு குழந்தைகள் வீட்டில் தவழவும், நடக்கவும் தொடங்கிய போது தான் நாட்டுப் பிரச்சனை துரத்த எல்லாவற்றையும் விட்டு குழந்தைகளுடன் யேர்மனி வரை வந்து சேர்ந்தார்கள் இருவரும்.



ஆரம்பகால யேர்மனிய வாழ்க்கை நர்மதாவுக்கு, சிறு குழந்தைகளுடன் குளிரும், பனியும், தனிமையும் என்று போராட்டமாகவே அமைந்திருந்தாலும், காதலும், நேசமும் என்று நேசனுடன் இனிமையும் கலந்தே களிந்தது.



பிள்ளைகளும் வளர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அவள் இந்த யேர்மனிய வாழ்க்கையுடன் இணையத் தொடங்கி விட்ட நேரத்தில்தான் அந்த துரோகம் அவளைச் சுட்டது. வேறு யாராவது, ஏதாவது துரோகம் செய்திருந்தால் அவள் தாங்கியிருப்பாள். "எனக்கே எனக்கு.......! எனக்கு மட்டுமே சொந்தம்!" என்று அவள் நினைத்திருந்த அவள் நேசன் அல்லவா அந்தத் துரோகத்தைச் செய்திருந்தான். எப்படித் தாங்குவாள்.



இரு வாரங்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாதிருந்ததால், வேலையிடத்தில் லீவு கேட்டுக் கொண்டு, வேளைக்கே வீட்டுக்கு வந்தாள் அவள். அவள் வரவை சற்றும் எதிர் பார்க்காத நேசன், அவளது அறையில், அவளது கட்டிலில் இன்னொரு பெண்ணுடன்..................!



அந்தக் காட்சி தந்த அதிர்ச்சியில் ஆடிப் போய் விட்டாள் நர்மதா.

"இத்தனை கேவலமானவனா என் புருஷன்...!" என்ற நினைப்பே அவளைச் சுட்;டெரிக்கத் தொடங்கியது. அதற்கு மேல்; அவனுடன் வாழ அவளால் முடியவே இல்லை. யாரிடமும் இந்த அவமானத்தைச் சொல்லவும் அவள் தன்மானம் இடம் தரவில்லை. வளர்ந்து விட்ட பிள்ளைகளைத் தன்னுடன் இழுத்துச் செல்ல விரும்பாமல் தனியாகப் புறப்பட்டு விட்டாள்.



இந்தப் பயணம் நேசன் தந்த காயத்தை முற்றாக ஆற்றா விட்டாலும், வேதனையிலிருந்து காக்கும் என்ற நம்பிக்கை அவளுள் இருந்தது.................



2



தமிழ்மன்றம் நடாத்திய போட்டியில் முதல் பரிசு பெற்ற அக்கதையை எழுதும்போது மிகவும் சுலபமாக இருந்தது. நர்மதா என்ற கதாநாயகி கணவனை விட்டு விட்டு விமானமேறி அமெரிக்காவில் வாழ்வைத் தொடங்குவது கதைக்கு நன்றாக இருந்தது. அந்தக் கதையின் முடிவைப் பாராட்டி, அந்தக் கதாநாயகியின் துணிவைப் பாராட்டி அந்தக் கதாநாயகியே மௌனிகா என்பது போல், எத்தனை கடிதங்கள், எத்தனை தொலைபேசிகள்.



இத்தனையும் நியத்தில் சாத்தியப்படுமா?! சொந்த வாழ்க்கை என்று வரும் போது

இந்தக் கதையில் வந்த கதாநாயகியின் துணிவு ஒரு பெண்ணுக்கு வந்து விடுமா?!



நிட்சயமாக இல்லை.

தினம் தினம் தன்மானத்துக்கு விழும் அடிகள். உணர்வுகளைச் சுட்டெரிக்கும் வார்த்தை நெருப்புக்கள்.........! இவனை விட்டுப் போய் விடுவோமா என்று துடிக்கும் என் மனதுக்குத்தான் எத்தனை தடைக்கற்கள்!



எத்தனைதான் புரட்சி என்றும் புதுமை என்றும் உரக்கக் கத்தினாலும், ஒரு பெண் விவாகரத்து என்று கூறி கணவனை விட்டு விலகும் போது, சமுதாயத்தின் அத்தனை பார்வைகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திப் பார்ப்பது அந்தப் பெண்ணைத்தானே.



கணவன் கூடாதவன் என்பது அப்பட்டமாகத் தெரிந்தாலும், "என்ன இருந்தாலும் அவள் பொம்பிளை. அவள் தானே அநுசரிச்சுப் போயிருக்கோணும்." என்றும், "அவளுக்குத் திமிர்" என்றும கூறுவதுதான் அழகு என நினைக்கும் வெறும் வாய் மெல்லும் சமுதாயத்துக்கு முன், புரட்சியையும் புதுமையையும் சாதிப்பது எப்படி?!



எழுதும் போது பாராட்டும் சமுதாயம், செயற்படுத்தும் போது பாராட்டுமா?! இல்லை. இல்லவே இல்லை. நான் இப்போ என் கணவனை விட்டு விலகினால், இந்த சமுதாயம் என்னை வாய் கூசாமல் து}ற்றும். - கணவனை விட்டு வந்தவள், அடங்காதவள். . என்ற பட்டத்தை எனக்குச் சூட்டும். என் குழந்தைகள் அவமானத்தின் சின்னங்களாகக் கருதப் படுவார்கள்.



பிள்ளைகள் இருவரையும் இருபக்கக் கைகளிலும் பிடித்துக் கொண்டு மௌனமாக நடந்து கொண்டிருந்த மௌனிகாவின் மனசு விவாகரத்துப் பற்றிய எண்ணங்களுடனும், அதன் விளைவுகள் பற்றிய எண்ணங்களுடனும் போராடிக் கொண்டே இருந்தது.



மௌனிகா! - பெயர் சொல்லுமளவுக்கு - பிரபல்யமான எழுத்தாளர்களில்; ஒருத்தி. கல்யாணத்துக்கு முன் ஈழத்தில் எழுதிக் குவித்தது போல், கல்யாணத்தின் பின் இங்கு புலத்தில் எழுதிக் குவிக்கா விட்டாலும், அவ்வப்போது ஏதாவது இலக்கியமும் சுவையும் கலந்து, பொக்கிஷமாகப் பொத்தி வைக்கும் படி முத்தாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறாள். இருந்தாலும் அவள் கைகள் கட்டப் பட்டிருப்பதைப் பற்றி எதுவுமே தெரியாத எழுத்துலகம் "நீ எழுதுவது போதாது" என்று அவள் காதுக்குள் நச்சரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நச்சரிப்புக்கள் அவளை எரிச்சல்ப் படுத்துவதை விட வேதனைப் படுத்துவதுதான் அதிகம்.



எழுதுவது என்பது அவளுக்கு ஆத்ம திருப்தி தரும் விடயம். ஆனால் ஒவ்வொரு முறையும் உணர்வுகளை ஒன்று கூட்டி, வார்த்தைகளைக் கோர்வையாக்கி, கவிதைகளாகவோ, கதைகளாகவோ அவள் எழுதத் தொடங்கும் போது

"மௌனிகா......! என்ன இப்ப போய் எழுதிக் கொண்டு.....! நேரத்தைப் பாரும். எழுதுறதுக்கு ஒரு நேரம் காலம் கிடையாது! போய்ப் படும்." கோபமாய் கட்டளை இடுவான் கணவன் சங்கர்.



இது இரவில் என்றால், பகலில் அவள் வேலைகளை முடித்து விட்டு எழுதத் தொடங்கினால், "புட்டே இண்டைக்கு அவிச்சனீர்? எனக்கு இடியப்பம் விருப்பமாயிருக்கு அவியும். " என்பான். எழுந்த உணர்வுகள் அப்படியே அடங்கிப் போக அழுகையும் கோபமும் மனதுள் பொங்கும். எதிர்த்து ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணத் தைரியமின்றி மௌனமாக மௌனிகாவின் வேலைகள் தொடரும்.



இது மட்டுந்தான் பிரச்சனை என்றால் அவள் வாழ்க்கை இத்தனை சோகமாக இராது. அதை விட மோசமாக - இருப்பது, எழும்புவது, அழுவது, சிரிப்பது, து}ங்குவது.......... என்று அவளது ஒவ்வொரு அசைவுமே சங்கரால்தான் தீர்மானிக்கப் படுகின்றது. மௌனிகாவுக்கு வாழ்க்கையே வெறுப்பும் சலிப்பும் ஆகிவிட்டது.



சங்கர் வெளியுலகுக்கு நல்லவன் போலத்தான் தெரிந்தான். யேர்மனியின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஸ்ருட்கார்ட்டில் சொந்தவீடு. வீடு நிறைய அழகிய புதிய தளபாடங்கள். இது போதாதா! எமது சமூகம் ஒரு கணவனுக்கு நல்லவனென்ற முத்திரை குத்துவதற்கு.



"உமக்கென்ன மௌனிகா. மாளிகை போல வீடு. மனம் போல வாழ்வு. உமது கணவர் நல்ல பிரயாசி. கெட்டிக்காரன். " என்று அவளுக்குத் தெரிந்த பெண்களில் பலர் பெருமூச்சு விடுவார்கள். இன்னொரு சிலரோ "உம்மடை ஆளுக்கு உம்மிலை நல்ல அன்பு. என்ரை வீட்டுச் சோபாவைப் பாரும். ஏதோ மியூசியத்துச் சாமான் போல. உம்மடை வீட்டு சோபாவே, உம்மடை ஆளுக்கு உம்மிலை உள்ள அன்பைச் சொல்லாமல் சொல்லுது. " என்று பொறாமை ததும்பச் சொல்லுவார்கள்.



பஸ்சுக்கு இரண்டு டி.எம்(2னுஆ) தேவையென்றாலும் அவனிடம் கை நீட்ட வேண்டிய இன்னொரு அவலம் அவளை அவமானத்தில் குறுகடிக்கும்.

ஒவ்வொரு முறையும் பஸ்சுக்கு காசுக்காக அவள் கை நீட்டும் போது, சினந்து விட்டு, பிச்சை போல அவன் இரண்டு டி.எம் (2னுஆ) ஐப் போடும் அந்தக் கணத்தில் அவள் மனம் படும் பாட்டை யார் அறிவார்.



இந்தப் பத்து வருட யேர்மனிய வாழ்க்கையில், எந்த ஒரு கட்டத்திலும், அவனது சம்பளத்தை இவள் முழுமையாகப் பார்த்ததில்லை. "இந்தாரும் இதை இந்த மாதச் செலவுக்கு வைத்திரும். " என்று அவன் அவளிடம் கொடுத்ததுமில்லை.

ஒரு கத்தரிக்காய் வேண்டுவதானாலும் அவனிடம் கை நீட்டி, அவன் சினப்பில் மனங்குறுக வேண்டிய கட்டாயமே அவளுக்கு.



இதையெல்லாம் தாங்க முடியாமல்தான், தான் எப்படியும் வேலைக்குப் போக வேண்டுமென அவள் தீர்மானித்தாள். தான் கிழித்த கோட்டுக்குள்ளேதான் மௌனிகாவின் அசைவு இருக்க வேண்டுமென்ற கோட்பாடு கொண்ட சங்கரிடம், மௌனிகா தன் வேலைக்குப் போகும் ஆசையை தன்மையாக, கோபமாக, சண்டையாக வெளிப்படுத்தி, ஒருவாறு சம்மதம் பெறுவதற்குள் சில மாதங்கள் ஓடின.



அவன் சம்மதத்துடன் பகுதி நேர வேலை செய்யத் தொடங்கிய பின் அவளிடம் மனதளவில் சற்று மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின. அதுவும் முதல் மாதச் சம்பளம் வரைதான். முதல் மாதச் சம்பளத்தை - எனது பணம் - என்ற நிறைந்த நினைவுடன் அவள் எடுத்து வரும் வழியில், வீட்டில் சமையலுக்குத் தேவையான சில சாமான்களும் வேண்டிக் கொண்டு வந்தாள். அது வீட்டில் ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணும் என்று அவள் எள்ளளவும் நினைக்கவில்லை.



"என்னடி உனக்கு அவ்வளவு திமிர். ஆரைக் கேட்டு இவ்வளவு சாமானும் வேண்டினனீ? உன்ரை காசெண்ட திமிரோடி...........?! " சங்கரின் அர்த்தமில்லாத அநாகரிகமான பேச்சும், உருத்திர தாண்டவமும், மௌனிகாவை வெறுப்பால் குளிப்பாட்டி, கோபத்தால் கொதிக்க வைத்தன. கொதிப்பு வார்த்தைகளாகச் சிதறின. விளைவு - அடியும் உதையும் அவளுக்கு வழமை போலக் கிடைத்தன. முதல் மாதச் சம்பளம் தந்த சந்தோசம் எங்கோ பறந்து விட, தன்மானம் அவளைப் பார்த்துக் கெக்கட்டம் விட்டுச் சிரிக்க, தாங்க முடியாமல் அழுதாள்.



இப்படி எத்தனை தடவைகள,; அவள் தன்மானத்துக்கு சாட்டையடிகள் விழுந்து விட்டன. ஆனாலும் வெளியில் உள்ளவர்களிடம் தனது மானத்தைக் காக்க எண்ணி வதையையே வாழ்வாக்கி விடுவாள் இவள்.



இப்போது இவளது மாதச்சம்பளம் அப்படியே சங்கரின் கையில் கொடுக்கப் படுகிறது. வேலைக்குப் போகாமல் இருந்து விடுவாள். வேலையையும் விட்டால் சற்று நேரம் வெளி உலகுடன் தனியாகக் கிடைக்கும் தொடர்பும் இல்லாது போய் விடும் என்பதால் தொடர்ந்தும் வேலைக்குப் போகிறாள்.



அதற்குக் கூட "இண்டைக்கு நீ வேலைக்குப் போகக் கூடாது. " என்று எத்தனை தடவைகள் தடுத்திருக்கிறான். வேலையிடத்தில் இதனால் அவளுக்கு ஓழுங்கற்றவள் என்ற அவப் பெயர் கூட வந்து விட்டது.



நேற்று அவள், அவள் சம்பளத்தில் 10டீ.எம் இற்கு தனக்கு ஒரு சில பேனைகள், எழுதுவதற்கு அவசியம் தேவையென்பதால் வாங்கி விட்டாள். இரவு பில் (டீடைட) லுடன் மிகுதிப் பணத்தையும் அப்படியே அவனிடம் கொடுத்தாள்.

எப்படியொரு கோபம் அவனுக்கு வந்தது. அவனைக் கேளாமல் பேனை வாங்கியது மௌனிகா செய்த பெருந்தவறுகளில் ஒன்று என்பது போலச் சீறினான். மிருகமாகி அவளை அடித்தான். உதைத்தான். எத்தனை கேவலப் படுத்தினான். அவளின் அலறலில் து}க்கத்திலிருந்த குழந்தைகள் கூட துடித்துப் பதைத்து எழுந்து வந்து கதறத் தொடங்கி விட்டார்கள்.



இதெல்லாம் இன்றா நேற்றா! பத்து வருடங்கள். - இன்னும் எத்தனை காலங்களுக்கு இதைத் தாங்குவது..........! விடை தெரியாமல் கலங்கினாள் மௌனிகா.



இன்று பிள்ளைகளைத் தமிழ் பாடசாலைக்குக் கூட்டிப் போக, பஸ்சுக்குத் தேவையான பணத்தை சங்கரிடம் கேட்க மௌனிகாவுக்கு மனமே வரவில்லை.

அதனால்தான் 3 கிலோ மீற்றர் து}ரத்தை நடப்பதாகத் தீர்மானித்து நடக்கிறாள். அவனது கோபம் ஆறிய பின், மௌனிகா தான் பிள்ளைகளுடன் 3 கிலோ மீற்றர் து}ரத்தையும் நடந்தே சென்றது பற்றி அவனிடம் சொன்னால், "உனக்குக் கொழுப்பு. 2டீ.எம் ஐக் கேட்டிருக்கலாம்தானே. " என்பான்.



அவனது நினைப்பு, கருத்து எல்லாம் "பெண்ணென்றால் எதையும் தாங்கலாம். தன்மானம் எல்லாம் அவளுக்கு ஏன்? புருஷனிடம் காசு கேட்பதில் என்ன வெட்கம்! புருஷன் அடிப்பான், உதைப்பான். அது வழக்கம்தானே! இதுக்கென்ன பெண்டாட்டி கோபப்படுவது! - என்பதுதான். தான் அடித்தாலும் மௌனிகா சிரித்துக் கொண்டு வாங்க வேண்டுமே தவிர கோபப் படவே கூடாது." என்பதில் அவன் திடமாகவே இருந்தான்.



"இது என்ன நியாயம்... ?" என்பதுதான் மௌனிகாவைக் குமுறச் செய்யும். அவனது ஆங்காரம் பிடித்த அதிகாரத்தனம் அவளைக் கோபப்படவும் வைக்கும்.

அடித்தால் அழக்கூட உரிமையில்லாத வாழ்வு அவளுக்கு.



"வேலைக்குப் போற படியால் தான் உனக்கு இவ்வளவு திமிர் வந்தது. நீ இனி வேலைக்குப் போகக் கூடாது." என்றும் இன்று சொல்லி விட்டான்.



மீறிப் போவதொன்றும் பெரிய விடயமில்லை. ஆனால் அதன் பின் வீட்டில் ஏற்படப் போகும் பிரளயமும், அதனால் பாதிக்கப் படப் போகும் தனது குழந்தைகளின் மனநிலையும் அவளைக் கட்டிப் போட்டன.



"நான் நானாக வாழ முடியாமல், மாளிகை போல வீடும் மகாராஜா வீட்டில் உள்ளது போல சோபாவும் இருந்தென்ன...!" மனதுக்குள் எழுந்த சலிப்பைக் கொட்ட முடியாமல் மௌனமாய் குமுறினாள். சங்கர் திருந்துவான் என்ற நம்பிக்கை தொலைந்து நாட்களாகி விட்டன.



கதைகளில் எழுதியது போல் அவனைப் பிரிந்து போய் சுயமாக வாழத் திராணி இல்லை. சமூகம் என்ன சொல்லும் என்ற பயம். "புதுமை என்றும் புரட்சி என்றும் எழுதுவது மிகவும் சுலபம். கணவன் என்பவன் மிருகம் என்று தெரிந்த பின்னும் உலகம் என்ன சொல்லும் என்று, தன்மானத்தைக் கொன்று பெண் என்பவள் குடும்பமானம் காப்பதே இங்கு வழமை." புரிந்து கொண்டாள்.



புயலென எழுதுபவளின் வாழ்வில் புதுமைகள் இல்லை. பழமைகள் இருந்தால் கூடப் பரவாயில்லை. வீட்டில் எந்த ரூபத்தில் எப்போது புயல் வீசும் என்று தெரியாமலே தினம் தினம் பயம் சுமந்து, சுயமாக வாழ்வதையே மறந்து விட்டவள் இவள்.



3



மௌனிகா பிள்ளைகளுடன் பாடசாலையினுள் நுழைந்த போது "ஹலோ மௌனிகா! வணக்கம் மௌனிகா..............!" என்ற பல்வித முகஸ்துதிகளுடன் அவளை ஒரு பெண்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டது.



"மௌனிகா..! உம்மைக் கண்டது நல்லதாப் போச்சு. நர்மதாவின் முடிவு எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு." பலவித பாராட்டுக்களின் மத்தியில் ஒருத்தியின் பாராட்டு மிகவும் சத்தமாக தெளிவாக மௌனிகாவின் செவிப்பறைகளைத் தழுவுவது போல் தழுவி பலமாக அறைந்தது.



எழுத்தாளர் மௌனிகா எல்லோரையும் மௌனித்த புன்னகையால் தொட்டபடி மனதுக்குள் கதறினாள்.





சந்திரவதனா

யேர்மனி

October 2000

Tuesday, June 15, 2004

விடை கிடைக்காத கேள்விகள்

அந்தத் தாம்பாளம் இன்னும் உறுத்தலாய் முள்ளாய் என் கண்களுக்குள் நிற்கிறது.

காரணம் அந்தத் தாம்பாளத்திலிருந்த 6 இலட்சம் ரூபாய்கள்.



வெளிநாட்டு அண்ணன்மாரின் பணம் தண்ணீராய் செலவழிக்கப் பட்டு கல்யாண வீடு அன்று காலை கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஒரு மண்டபத்தில் கோலாகலமாக முடிந்து விட்டது. மாலை றிசெப்ஷனுக்குத்தான் என்னால் போக முடிந்தது.



றிசெப்ஷன் அவர்கள் வீட்டில் - லண்டன் பெற்றோல் ஸ்டேசனில் வேலை செய்யும் அவளுடைய அண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் மாப்பிள்ளை வந்தார். பாரிஸ் மாப்பிள்ளை. முன்பக்கம் வழுக்கைத் தலையுடன் மாநிறம் கொண்ட அவரைப் பார்த்த போது அடக்கமாகத் தெரிந்தார்.



சிரிப்புகள் வரவேற்புகள் முடிந்து சட்டப்படி கல்யாணம் எழுத மேசையில் அமர்ந்த போதுதான் அழகான தங்கப் பதுமை போன்ற மணப்பெண் அந்தத் தட்டை ஏந்தி வந்தாள். அதில் கட்டுக் கட்டாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது பணம்.



எனக்கு அதைப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. உடனே மணப்பெண்ணின் தாயிடம் சென்று

"மாமி..! என்ன காசு.. அது? ஏன்...?" என்று கேட்டேன்.



அதற்கு மாமி

"என்ன பிள்ளை இப்பிடிக் கேட்கிறாய். சீதனம்தான்." என்றா



"ஏன் மாமி சீதனம் குடுக்கிறியள்?"



"அவரைத் தாயவை கஷ்டப் பட்டுப் படிக்க வைச்சவையாம்." மாமி இயல்பாய் சாதாரணமாய்ப் பேசினாள்.



"ஏன் மாமி உங்கள் பெண்ணை மட்டும் நீங்கள் கஷ்டப் படாமல் சுகமா வளர்த்தனிங்களோ..? காசு செலவழிக்காமல் படிப்பிச்சனிங்களோ..?" என்று கேட்க வந்த வார்த்தைகளை எனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு பெற்றோல் ஸ்டேசன் அண்ணனைப் பார்த்தேன்.



அவன் அப்பாவியாக மணமகன் அருகில் நின்றான்.

அந்தப் பணம் அவன் வியர்வை.

எத்தனை இரவுகள் அந்தப் பணத்துக்காக அவன் நித்திரையைத் தொலைத்திருப்பான்.

எத்தனை தடவைகள் பனியில் கால்கள் புதைய குளிரில் உடல் நடுங்க ஓடி ஓடிப் போய் வேலை செய்து பணத்தைச் சேர்த்திருப்பான்.

இன்னும் எத்தனை கஸ்டங்களை அனுபவித்திருப்பான்.



அதை வாங்க பாரிஸிலிருந்து வந்த இன்னொருவனுக்கு எப்படி மனசு வந்தது?

விடை கிடைக்காத கேள்வி எனக்குள்ளே..!



சந்திரவதனா

யேர்மனி

நாகரீகம்

"என்ன தாலிக்கொடியைப் போடாமல் வந்தனீரே..?"



"ஓம் நான் போடுறேல்லை."



"என்ன நீர்..! அவை இதெல்லாம் கவனமாப் பார்ப்பினம். தாலியில்லாட்டில் என்ன நினைப்பினம்..! சீ.. எவ்வளவு மரியாதை இல்லைத் தெரியுமே..!"



அவள் தனது மொத்தத் தாலிக்கொடியில் கொழுவியிருந்த காசுப் பென்ரனை விரல்களால் அளாவியபடி என்னுடன் அலுத்துக் கொண்டாள்.



நான் உடுத்திய ஜோர்ஜெட் சேலை கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. தன்னைப் போல சருகைக் கரை போட்ட சேலையுடன்தான் அங்கு எல்லாப் பெண்களும் வருவார்களாம். கழுத்தோடு ஒட்டியபடி கல்லுப் பதித்த அட்டியலும் அணிந்திருந்தாள்.



நான் மேகவண்ண நீல ஜோர்ஜெட் சேலை உடுத்தி ஒரு தும்புச் சங்கிலியைக் கழுத்தில் தொங்க விட்டிருந்தேன்.



இது அவளுக்குப் பெரிய அவமானமாம். என்னைத் தனது சொந்தம் என்று சொல்லவே வெட்கமாம். அதுதான் இந்தத் தொணதொணப்பு. பிறந்தநாள் கொண்டாடும் வீட்டுக்குள் நுழையும் வரை அவளின் தொணதொணப்பு ஓயவில்லை. ஏன்தான் இவளைச் சந்திக்க என்று யேர்மனியிலிருந்து லண்டன் வந்தேனோ..! என்றிருந்தது.



பிறந்தநாள் கொண்டாடும் வீட்டில் எல்லோரும் கலகலப்பாக இருந்தார்கள். தாலி சேலைக்குள் சாடையாக மறைந்தாலும் எடுத்தெடுத்து வெளியே விடுவதும் தாலிச் சரட்டைப் பிசைவதுமாய் சில பெண்களும், பஞ்சாபிகளுடன் இன்னும் சில பெண்களும் ஒரு புறம் இருக்க, ஆண்கள் அடிக்கடி பல்கணியில் போய்ப் புகைப்பதுவும் பெரிய பெரிய போத்தல்களிலிருந்து வார்த்து வார்த்துக் குடிப்பதுமாய் இருந்தார்கள்.



அவள் சற்று சங்கடத்துடன் "இவ யேர்மனியிலையிருந்து வந்திருக்கிறா." என என்னை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தினாள். அங்குள்ள மற்றவர்களும் நகைகளையும் சேலையையும் வைத்துத்தான் என்னை அளந்தார்களோ தெரியாது. எனக்கு அது பற்றிக் கவலையில்லை. அவள்தான் இதை மறந்து போகாதவளாய் "பஞ்சப் பிரதேசத்திலையிருந்து வந்த ஆள் மாதிரி வந்திருக்கிறீர்." என்று எனது காதுக்குள் முணுமுணுத்தாள்.



பிறந்தநாள் பிள்ளையை மட்டும் காணவில்லை. உள்ளை எங்கையோ விளையாடுதாம். வந்திடுமாம். இதனிடையே கோழிக்கால்கள், கட்லட்டுகள் என்று பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தன. திடீரென்று ஒரு பெண் ஒரு தட்டில் ஏதோ குடிக்கக் கொண்டு வந்தாள்.



"ம்.... வைன் போலை இருக்கு." என்னை அறியாமலேயே முகத்தைச் சுளித்து விட்டேன்.



"ஓம் வைன்தான். இது பொம்பிளையளுக்கு." சொன்ன படி அந்தப் பெண் என்னிடம் வைன் கிளாஸை நீட்டினாள்.



"சீ.. எனக்கு வேண்டாம். நான் உதுகள் குடிக்கிறேல்லை."



அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. கொஞ்சம் அவமானப் பட்டது போன்றதான பின் வாங்கல்.



நிலைமை புரிந்தது. அவளைப் சங்கடப் படுத்தி விட்டேனோ..!!

"சொறி. குறை நினைக்காதைங்கோ. எனக்கு ஒறேஞ்யூஸ் இருந்தால் தாங்கோ. நான் அற்ககோல் குடிக்கிறேல்லை." சமாளித்தேன்.



"இஞ்சை லண்டனிலை இது கட்டாயம் குடிக்கோணும். இல்லாட்டி மரியாதையில்லை. உம்மைச் சரியான பட்டிக்காடு எண்டுதான் எல்லாரும் நினைப்பினம். அவள் நியமான எரிச்சலுடன் என்னைக் கடிந்து கொண்டாள்."



ஓ.. வைன் குடிக்காத பெண்கள் பட்டிக்காடுகளோ..? இது லண்டன் நாகரீகமோ..? நினைத்தபடி நான் யூஸைக் குடிக்கத் தொடங்கினேன்.



சந்திரவதனா - 12.3.2003

கனவுகள்

டேய் எழும்படா..



சும்மா கொஞ்சம் என்னைப் படுக்க விடு.



நீ இப்ப வேலைக்கெல்லோ போகோணும்.... சமைச்சுப் போட்டம். எழும்பிச் சாப்பிட்டிட்டு வெளிக்கிடு.



சந்திரனும் அலெக்சுமாக பாலாவை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.



பாலா உணவுவிடுதியில் வேலையை முடிச்சிட்டு சாமம் இரண்டு மணிக்குத்தான் வந்தவன். வந்தவன் உடனை படுத்திருக்கலாம். அதில்லை. காதலுக்குமரியாதை படத்தை ஆறாவது தடவையாகப் போட்டுப் பார்த்திட்டுத்தான் படுத்தவன்.



அவனுக்குச் சாலினி மாதிரி மனைவி வேணுமாம். அவனுக்குள்ளை இருக்கிற நிறையக் கனவுகளுக்கை இதுவும் ஒன்று.



ஏன் சந்திரனுக்கும் அலெக்சுக்கும் இல்லையே..! அவையளுக்கும்தான். பத்து வருசத்துக்கு முந்தி யேர்மனிக்கு வந்த புதுசிலை ரோகிணி, அமலா, குஸ்பு.. என்று கனவுகள் இருந்தது.



சந்திரன் ஒவ்வொருநாளும் உணவுவிடுதியிலை சலாட் கழுவுற பொழுது தன்ரை கனவுகளையும் சேர்த்துக் கழுவிக் கொண்டிருப்பான்.



அலெக்ஸ் சுப்பர்மார்க்கெட்டிலை நிலத்தைக் கூட்டிக் கழுவுகிற பொழுது தன்ரை கனவுகளையும் கூட்டிச் சேர்த்து கற்பனையில் பறந்து மகிழ்ந்து பின் கழுவித் துடைப்பான். நிலம் பளிச்செண்டு துலங்கும். இவன் மனசோ வெறுமையாகித் துக்கத்தில் துவண்டு ஏக்கத்தால் நிரம்பும்.



எழும்படா..



இவங்கள் இரண்டு பேரின்ரையும் ஆய்க்கினை தாங்கேலாமல் கிடக்குது.

முணுமுணுத்தபடி பாலா எழும்பினான்.



கட்டிலில் இருந்த படியே....

என்னைத் தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்கத் தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ...

பாடத் தொடங்கினான்.



பாடி முடியும் வரை பொறுத்திருந்த அலெக்சும், சந்திரனும் சரி.. சரி.. சாலினியைப் பிறகு பார்ப்பம். இப்பப் போய் பல்லைத் தீட்டிப் போட்டு வா... சாப்பிடுவம்... என்றார்கள் ஒரு வித நெகிழ்ச்சியோடு.



யேர்மனிக்கு வந்து பத்து வருசமாச்சு. இந்தப் பழக்கங்களை மட்டும் நீங்கள் விடேல்லை. சொல்லிய படி குளியலறைக்குள் நுழைந்தான் பாலா.



தண்ணீர்ச் சத்தத்தையும் மீறி

தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ?

மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ?

கொஞ்சம் பொறு.. கொலுசொலி கேட்கிறதே...



லல லாலால்ல லலலால...



எனது இரவு அவள் கூந்தலில்..

எனது பகல்கள் அவள் பார்வையில்..

காலம் எல்லாம் அவள் காதலில்..

கனவு கலையவில்லை கண்களில்;..

இதயம் துடிக்குது ஆசையில்..

வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்..

கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்..

நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்..

நாளைக்கு நான் காண வருவாளோ..

பானைக்கு நீர் ஊற்றிப் போவாளோ..

வழியோரம் விழி வைக்கிறேன்......



தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா?

மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா?

கொஞ்சம் பொறு.. கொலுசொலி கேட்கிறதே..



பாலாவின் குரல் தன்னை மறந்து ஒலித்துக் கொண்டிருந்தது. வெளியே மேசையில் பணம் கேட்டு வந்த ஊர்க்கடிதம் காத்திருப்பது தெரியாமல்....





சந்திரவதனா

12.8.1999



பாடல் வரிகள் - பழனிபாரதி

மேடைப்பேச்சு

அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது.

எப்படித்தான் பார்த்தாலும் எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா ஒத்துழைக்க மறுத்து, ஒத்திகைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லாது எத்தனையோ பேருடன்.. வாய் குளறி......... தடுமாறியிருக்கிறேன். அப்படியான சமயங்களில் எழுத்தின் ஆங்காரம், பேச்சில் ஓங்கவில்லையே எனப் பலர் என்னிடம் ஆச்சரியப் பட்டுள்ளார்கள். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒத்திகை பார்ப்பு என்பது எனக்குள்ளே அரங்கேறி அசை மீட்கும்.



அவர் மீது எனக்கு நல்ல மதிப்பு. அதனால்தான் இன்று இத்தனை தரமாய் ஒத்திகை பார்ப்பு. மேடைகளிலும், வானொலிகளிலும் வாய் திறந்தாலே அருவியாகக் கொட்டும் அவர் தமிழில் நான் மெய் மறந்து போயிருக்கிறேன். வார்த்தைகளில் அழகு மட்டுமா? வயதான அவரிடமிருந்து வெளிப்படும் முற்போக்குச் சிந்தனையுடனான, புதுமை நிறைந்த, சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் என்ன ஒரு தெளிவு. அடித்து வைத்துச் சொல்லும் கருத்துக்களிலுள்ள நியாயம். உண்மையிலேயே நான் வியந்து போவேன்.



கடந்த வாரமும் ஐரோப்பிய வானொலி ஒன்றில் கிட்டத்தட்ட 40 நிமிட நேரங்கள் அவரது வீச்சான உரை ஒலிபரப்பானது. எடுத்துக் கொண்ட விடயம் ஐரோப்பியாவில் நடைபெறும் ஆடம்பரமான சாமத்தியச்சடங்குகள் அவசியமானதுதானா..? என்றதாக இருந்தது. இன்றைய எமது கணினி உலகப் பெண்களே சாமத்தியச்சடங்கு அவசியந்தான் என்று எண்ணி தமது பெண் குழந்தைகளைக் காட்சிப் பொருளாக்கிக் கொண்டிருக்கும் அவல நிலையில் அவர் அது அவசியமே இல்லை.. என்று வாதிட்டு, வானொலி அறிவிப்பாளருக்கு இடையிடையே எழுந்த அது சம்பந்தமான சந்தேகங்களுக்கும்; தங்கு தடையின்றிப் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஐம்பதைத் தொட்ட ஒருவர் இப்படி

முற்போக்கு நிறைந்த ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்ததில் எனக்கு மெய்சிலிர்த்தது. அவரைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.



அந்த எனது நினைப்பை இன்று எப்படியாவது செயலாக்க வேண்டும் என்ற முனைப்பில், மீண்டும் ஒரு முறை மனசுக்குள் எப்படி அவருடன் பேசுவது என ஒத்திகை பார்த்து விட்டு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன்.



வழமைக்கு மாறாக எனக்கும் இன்று தங்கு தடையின்றிப் பேச வந்தது. பாராட்டினேன். அவரை நியமாகவே மனசாரப் பாராட்டினேன். அவரின் தமிழ்ப்புலமையை, பேசுந்திறனை, பொருள் கொண்ட கருத்துக்களை, அதைச் சபையோர்க்குத் தரும் விதத்தை ... என்று பாராட்டினேன். பேச்சு அலுக்கவில்லை. இருந்தாலும் பின்பொருமுறை பேசுகிறேன் என்று சொல்லி தொடர்பைத் துண்டிக்க முனைந்தேன்.



அவர் பல தடவைகள் நன்றி சொன்னார்.

இண்டைக்கெண்ட படியால் என்னைப் பிடிச்சிங்கள். இனி இரண்டு கிழமைக்கு எனக்கு ஒண்டுக்கும் நேரமிராது. என்றார்.



ஏன் நாட்டுக்குப் போறிங்களோ..?

இன்றைய இப்போதைய நிலையில் புலத்தில் இதுதானே சகயம் என்பதால் உடனேயே எந்த சிந்தனையுமின்றிக் கேட்டு விட்டேன்.



இல்லையில்லை............

மகள் பெரியபிள்ளையாகி ஒரு மாசமாச்சு. வாற சனிக்குத்தான் ஹோல் கிடைச்சுது. அதுதான் அந்த வேலையளோடை ஓடித் திரியிறன். எல்லாருக்கும் கார்ட் குடுத்திட்டன்.................. அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.



நான் தொலைபேசியை வைத்து விட்டேன்.



சந்திரவதனா - 21.8.2003

பிரசுரம் - வடலி-லண்டன்(செப்டெம்பர்-2003

அக்கரைப் பச்சைகள்

என் சின்னவன் மடிக்குள் கிடந்து முட்டி முட்டிப் பாலைக் குடிக்கும் போதுதான் அவள் வந்தாள். எப்போதும் அவள் இப்படித்தான் பல்கலைக்கழகத்திலிருந்து லீவில் வரும் போதெல்லாம் என் வீட்டை எட்டிப் பாராது தன் வீட்டுக்குப் போக மாட்டாள்.



சொந்தம் என்பதையும் விட ஒன்றாகப் படித்து ஒன்றாக இலந்தைப் பழம் பொறுக்கி ஒன்றாக மாங்கொட்டை போட்டு, ஒன்றாக கிளித்தட்டு விளையாடி........ என்று அரிவரியிலிருந்து ஒன்றாகவே என்னோடு உயர்தரம் வரை பயணித்தவள். எப்போதும் ஒன்றியிருக்கும் எமக்குள் பரீட்சைப் புள்ளிகளில் மட்டும் போட்டி வரும். ஒரு தரம் government test இல் கணிதத்துக்கு பாடசாலையே வியக்கும் படியாக அவளுக்கும் எனக்கும் ஒரே புள்ளிகள்.



இப்படியெல்லாம் படித்து விட்டு நான் ஒரு அவசரக் குடுக்கை. அவசரப் பட்டு கல்யாணம் செய்து மூன்று பிள்ளைகளையும் பெற்று குடும்ப சாகரத்தில் விழுந்து விட்டேன். கண்டறியாத காதல் எனக்கு.



அவள் trouser ம் போட்டுக் கொண்டு வந்து "ஹாய்" என்ற படி என் வீட்டு விறாந்தை நுனியில் அமர்ந்தாள். சின்ன வயசிலிருந்தே அவளும் நானும் அமர்ந்திருந்து கதைக்கும் இடம் அதுதான்.



பிச்சிப்பூ வாசத்தை நுகர்ந்த படி கப்போடு சாய்ந்து கொண்டு படிக்கும் போது கதையளந்ததுக்கும் இப்போதுக்கும் கனக்க வித்தியாசம். சுவாரஸ்யமான கதைகளில் முன்னர் போல மூழ்க முடியாமல் பிள்ளைகளின் பக்கம் என் கவனம் சிதறிக் கொண்டே இருந்தது.



அவள் பல்கலைக்கழகப் புதினங்களை அளந்து கொண்டேயிருந்தாள்.

எனக்கு என் மேலேயே கோபமாய் வந்தது. நானும் போயிருக்கலாம்தானே. எத்தனை தரமாய் எல்லோரும் சொன்னார்கள். பெரிய ரோமியோ யூலியட் காதல் என்பது போல ஒரே பிடியாய் நின்று......... இப்ப இவள் ஒரு சுதந்திரப் பறவை. நான் பிள்ளையளோடை மாரடிக்கிறன்.



அம்மா ஆடிப்பிறப்புக்கு கொழுக்கட்டை அவிக்க என்று நேற்றுத்தான் பயறு வறுத்து, உடைத்து, கொழித்தவ. கொழித்து வந்த பயத்தம் மூக்கை எப்பவும் போல ஹொர்லிக்ஸ் போத்தலுக்குள்ளை போட்டு வைத்தவ. அதில் ஒரு பிடி எடுத்து சர்க்கரையும் தேங்காய்ப்பூவும் போட்டுப் பிசைந்து இரண்டு dish களில் போட்டுக் கொண்டு வந்து தந்தா. சுகிக்கு அது நல்லாகப் பிடிக்கும் என்று அம்மாவுக்குத் தெரியும். சுகி அதை ரசித்துச் சாப்பிடத் தொடங்கினாள்.



நான் ஒரு கரண்டியை வாயில் போட்டு விட்டுப் பக்கத்தில் வைத்தேன்.

மூத்தவன் வந்து "அம்மா..! ஆ... ஆ..." என்று வாயைத் திறந்தான். ஒரு கரண்டியை அவனுக்கு ஊட்டி விட்டேன். இரண்டாமவன் வந்து "தம்பியைத் தொட்டிலிலை போடுங்கோ. நான் மடியிலை படுக்கப் போறன்." என்று மழலை பொழிந்தான்.



பல்கலைக்கழகப் புதினங்களை சுகி நிறுத்தி நிறுத்திச் சொல்லிக் கொண்டேயிருந்தாள். சின்னவகுப்பில் எங்களோடு படித்த தேவநாயகத்துக்கும் வானதிக்கும் காதலாம். எனக்கு நம்ப இயலாமல் இருந்தது. எங்களோடு படிக்கிற பொழுது தேவநாயகம் நெற்றியில் வடியத்தக்கதாக தலையிலை எண்ணெய் தப்பிக் கொண்டு, கன்ன உச்சியும் பிறிச்சுக் கொண்டு..........



"அவனைக் காதலிக்கிறாளோ வானதி..?"

வானதி எங்களுக்கு அடுத்த batch.



"உனக்கு இளப்பமா இருக்கே..? அவன் இப்ப எஞ்சினியர் தெரியுமே..! இப்ப அவனைப் பாத்தாயென்றால் நீயே லொள்ளு விடுவாய்."



எனக்கு அவளின் கதையைக் கேட்கக் கேட்க ஆச்சரியமாகவே இருந்தது. காதல் என்ற சொல்லைச் சொல்வதே பாவம் என்பது போல இருந்தவள் பல்கலைக் கழகம் போகத் தொடங்கிய பின் இப்பிடித்தான் லொள்ளு.. அது இது என்று புதுப் புதுச் சொற்களாய் உதிர்க்கிறாள். கூச்சமென்பதே இல்லாமல் பட் பட்டென்று மனதில் தோன்றுவதையெல்லாம் வெளியில் கொட்டுகிறாள். பொறாமையோடு அவளைப் பார்த்தேன். இத்தனையையும் இழந்து விட்டேனே என்ற ஆதங்கத்தில் எனக்குள் வெம்பினேன்.



அந்த நேரம் பார்த்து அவளிடம் இருந்து ஒரு பெருமூச்சு.

"உனக்கென்ன...? நீ கலியாணம் கட்டிப் போட்டு குழந்தைகள் குட்டிகள் எண்டு எவ்வளவு சந்தோசமாயிருக்கிறாய். எனக்கு எரிச்சல்தான் வருது. இன்னும் படிப்பு.. பரீட்சை எண்டு புத்தகங்களையும் காவிக் கொண்டு........."



மனசுக்குள் சில்லென்ற ஒரு உணர்வு.



மூத்தவன் மீண்டும் வந்து என் முதுகுப் பக்கமாக வளைந்து என்னைக் கட்டிப் பிடித்தான். அந்த ஸ்பரிசம் வழமையையும் விட அதீத சுகமாய்.... நான் அவனை அப்படியே இழுத்து இறுக அணைத்துக் கொண்டேன்.



சந்திரவதனா

யேர்மனி

27.5.2004