Tuesday, June 15, 2004

விடை கிடைக்காத கேள்விகள்

அந்தத் தாம்பாளம் இன்னும் உறுத்தலாய் முள்ளாய் என் கண்களுக்குள் நிற்கிறது.

காரணம் அந்தத் தாம்பாளத்திலிருந்த 6 இலட்சம் ரூபாய்கள்.



வெளிநாட்டு அண்ணன்மாரின் பணம் தண்ணீராய் செலவழிக்கப் பட்டு கல்யாண வீடு அன்று காலை கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஒரு மண்டபத்தில் கோலாகலமாக முடிந்து விட்டது. மாலை றிசெப்ஷனுக்குத்தான் என்னால் போக முடிந்தது.



றிசெப்ஷன் அவர்கள் வீட்டில் - லண்டன் பெற்றோல் ஸ்டேசனில் வேலை செய்யும் அவளுடைய அண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் மாப்பிள்ளை வந்தார். பாரிஸ் மாப்பிள்ளை. முன்பக்கம் வழுக்கைத் தலையுடன் மாநிறம் கொண்ட அவரைப் பார்த்த போது அடக்கமாகத் தெரிந்தார்.



சிரிப்புகள் வரவேற்புகள் முடிந்து சட்டப்படி கல்யாணம் எழுத மேசையில் அமர்ந்த போதுதான் அழகான தங்கப் பதுமை போன்ற மணப்பெண் அந்தத் தட்டை ஏந்தி வந்தாள். அதில் கட்டுக் கட்டாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது பணம்.



எனக்கு அதைப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. உடனே மணப்பெண்ணின் தாயிடம் சென்று

"மாமி..! என்ன காசு.. அது? ஏன்...?" என்று கேட்டேன்.



அதற்கு மாமி

"என்ன பிள்ளை இப்பிடிக் கேட்கிறாய். சீதனம்தான்." என்றா



"ஏன் மாமி சீதனம் குடுக்கிறியள்?"



"அவரைத் தாயவை கஷ்டப் பட்டுப் படிக்க வைச்சவையாம்." மாமி இயல்பாய் சாதாரணமாய்ப் பேசினாள்.



"ஏன் மாமி உங்கள் பெண்ணை மட்டும் நீங்கள் கஷ்டப் படாமல் சுகமா வளர்த்தனிங்களோ..? காசு செலவழிக்காமல் படிப்பிச்சனிங்களோ..?" என்று கேட்க வந்த வார்த்தைகளை எனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு பெற்றோல் ஸ்டேசன் அண்ணனைப் பார்த்தேன்.



அவன் அப்பாவியாக மணமகன் அருகில் நின்றான்.

அந்தப் பணம் அவன் வியர்வை.

எத்தனை இரவுகள் அந்தப் பணத்துக்காக அவன் நித்திரையைத் தொலைத்திருப்பான்.

எத்தனை தடவைகள் பனியில் கால்கள் புதைய குளிரில் உடல் நடுங்க ஓடி ஓடிப் போய் வேலை செய்து பணத்தைச் சேர்த்திருப்பான்.

இன்னும் எத்தனை கஸ்டங்களை அனுபவித்திருப்பான்.



அதை வாங்க பாரிஸிலிருந்து வந்த இன்னொருவனுக்கு எப்படி மனசு வந்தது?

விடை கிடைக்காத கேள்வி எனக்குள்ளே..!



சந்திரவதனா

யேர்மனி

நாகரீகம்

"என்ன தாலிக்கொடியைப் போடாமல் வந்தனீரே..?"



"ஓம் நான் போடுறேல்லை."



"என்ன நீர்..! அவை இதெல்லாம் கவனமாப் பார்ப்பினம். தாலியில்லாட்டில் என்ன நினைப்பினம்..! சீ.. எவ்வளவு மரியாதை இல்லைத் தெரியுமே..!"



அவள் தனது மொத்தத் தாலிக்கொடியில் கொழுவியிருந்த காசுப் பென்ரனை விரல்களால் அளாவியபடி என்னுடன் அலுத்துக் கொண்டாள்.



நான் உடுத்திய ஜோர்ஜெட் சேலை கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. தன்னைப் போல சருகைக் கரை போட்ட சேலையுடன்தான் அங்கு எல்லாப் பெண்களும் வருவார்களாம். கழுத்தோடு ஒட்டியபடி கல்லுப் பதித்த அட்டியலும் அணிந்திருந்தாள்.



நான் மேகவண்ண நீல ஜோர்ஜெட் சேலை உடுத்தி ஒரு தும்புச் சங்கிலியைக் கழுத்தில் தொங்க விட்டிருந்தேன்.



இது அவளுக்குப் பெரிய அவமானமாம். என்னைத் தனது சொந்தம் என்று சொல்லவே வெட்கமாம். அதுதான் இந்தத் தொணதொணப்பு. பிறந்தநாள் கொண்டாடும் வீட்டுக்குள் நுழையும் வரை அவளின் தொணதொணப்பு ஓயவில்லை. ஏன்தான் இவளைச் சந்திக்க என்று யேர்மனியிலிருந்து லண்டன் வந்தேனோ..! என்றிருந்தது.



பிறந்தநாள் கொண்டாடும் வீட்டில் எல்லோரும் கலகலப்பாக இருந்தார்கள். தாலி சேலைக்குள் சாடையாக மறைந்தாலும் எடுத்தெடுத்து வெளியே விடுவதும் தாலிச் சரட்டைப் பிசைவதுமாய் சில பெண்களும், பஞ்சாபிகளுடன் இன்னும் சில பெண்களும் ஒரு புறம் இருக்க, ஆண்கள் அடிக்கடி பல்கணியில் போய்ப் புகைப்பதுவும் பெரிய பெரிய போத்தல்களிலிருந்து வார்த்து வார்த்துக் குடிப்பதுமாய் இருந்தார்கள்.



அவள் சற்று சங்கடத்துடன் "இவ யேர்மனியிலையிருந்து வந்திருக்கிறா." என என்னை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தினாள். அங்குள்ள மற்றவர்களும் நகைகளையும் சேலையையும் வைத்துத்தான் என்னை அளந்தார்களோ தெரியாது. எனக்கு அது பற்றிக் கவலையில்லை. அவள்தான் இதை மறந்து போகாதவளாய் "பஞ்சப் பிரதேசத்திலையிருந்து வந்த ஆள் மாதிரி வந்திருக்கிறீர்." என்று எனது காதுக்குள் முணுமுணுத்தாள்.



பிறந்தநாள் பிள்ளையை மட்டும் காணவில்லை. உள்ளை எங்கையோ விளையாடுதாம். வந்திடுமாம். இதனிடையே கோழிக்கால்கள், கட்லட்டுகள் என்று பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தன. திடீரென்று ஒரு பெண் ஒரு தட்டில் ஏதோ குடிக்கக் கொண்டு வந்தாள்.



"ம்.... வைன் போலை இருக்கு." என்னை அறியாமலேயே முகத்தைச் சுளித்து விட்டேன்.



"ஓம் வைன்தான். இது பொம்பிளையளுக்கு." சொன்ன படி அந்தப் பெண் என்னிடம் வைன் கிளாஸை நீட்டினாள்.



"சீ.. எனக்கு வேண்டாம். நான் உதுகள் குடிக்கிறேல்லை."



அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. கொஞ்சம் அவமானப் பட்டது போன்றதான பின் வாங்கல்.



நிலைமை புரிந்தது. அவளைப் சங்கடப் படுத்தி விட்டேனோ..!!

"சொறி. குறை நினைக்காதைங்கோ. எனக்கு ஒறேஞ்யூஸ் இருந்தால் தாங்கோ. நான் அற்ககோல் குடிக்கிறேல்லை." சமாளித்தேன்.



"இஞ்சை லண்டனிலை இது கட்டாயம் குடிக்கோணும். இல்லாட்டி மரியாதையில்லை. உம்மைச் சரியான பட்டிக்காடு எண்டுதான் எல்லாரும் நினைப்பினம். அவள் நியமான எரிச்சலுடன் என்னைக் கடிந்து கொண்டாள்."



ஓ.. வைன் குடிக்காத பெண்கள் பட்டிக்காடுகளோ..? இது லண்டன் நாகரீகமோ..? நினைத்தபடி நான் யூஸைக் குடிக்கத் தொடங்கினேன்.



சந்திரவதனா - 12.3.2003

கனவுகள்

டேய் எழும்படா..



சும்மா கொஞ்சம் என்னைப் படுக்க விடு.



நீ இப்ப வேலைக்கெல்லோ போகோணும்.... சமைச்சுப் போட்டம். எழும்பிச் சாப்பிட்டிட்டு வெளிக்கிடு.



சந்திரனும் அலெக்சுமாக பாலாவை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.



பாலா உணவுவிடுதியில் வேலையை முடிச்சிட்டு சாமம் இரண்டு மணிக்குத்தான் வந்தவன். வந்தவன் உடனை படுத்திருக்கலாம். அதில்லை. காதலுக்குமரியாதை படத்தை ஆறாவது தடவையாகப் போட்டுப் பார்த்திட்டுத்தான் படுத்தவன்.



அவனுக்குச் சாலினி மாதிரி மனைவி வேணுமாம். அவனுக்குள்ளை இருக்கிற நிறையக் கனவுகளுக்கை இதுவும் ஒன்று.



ஏன் சந்திரனுக்கும் அலெக்சுக்கும் இல்லையே..! அவையளுக்கும்தான். பத்து வருசத்துக்கு முந்தி யேர்மனிக்கு வந்த புதுசிலை ரோகிணி, அமலா, குஸ்பு.. என்று கனவுகள் இருந்தது.



சந்திரன் ஒவ்வொருநாளும் உணவுவிடுதியிலை சலாட் கழுவுற பொழுது தன்ரை கனவுகளையும் சேர்த்துக் கழுவிக் கொண்டிருப்பான்.



அலெக்ஸ் சுப்பர்மார்க்கெட்டிலை நிலத்தைக் கூட்டிக் கழுவுகிற பொழுது தன்ரை கனவுகளையும் கூட்டிச் சேர்த்து கற்பனையில் பறந்து மகிழ்ந்து பின் கழுவித் துடைப்பான். நிலம் பளிச்செண்டு துலங்கும். இவன் மனசோ வெறுமையாகித் துக்கத்தில் துவண்டு ஏக்கத்தால் நிரம்பும்.



எழும்படா..



இவங்கள் இரண்டு பேரின்ரையும் ஆய்க்கினை தாங்கேலாமல் கிடக்குது.

முணுமுணுத்தபடி பாலா எழும்பினான்.



கட்டிலில் இருந்த படியே....

என்னைத் தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்கத் தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ...

பாடத் தொடங்கினான்.



பாடி முடியும் வரை பொறுத்திருந்த அலெக்சும், சந்திரனும் சரி.. சரி.. சாலினியைப் பிறகு பார்ப்பம். இப்பப் போய் பல்லைத் தீட்டிப் போட்டு வா... சாப்பிடுவம்... என்றார்கள் ஒரு வித நெகிழ்ச்சியோடு.



யேர்மனிக்கு வந்து பத்து வருசமாச்சு. இந்தப் பழக்கங்களை மட்டும் நீங்கள் விடேல்லை. சொல்லிய படி குளியலறைக்குள் நுழைந்தான் பாலா.



தண்ணீர்ச் சத்தத்தையும் மீறி

தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ?

மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ?

கொஞ்சம் பொறு.. கொலுசொலி கேட்கிறதே...



லல லாலால்ல லலலால...



எனது இரவு அவள் கூந்தலில்..

எனது பகல்கள் அவள் பார்வையில்..

காலம் எல்லாம் அவள் காதலில்..

கனவு கலையவில்லை கண்களில்;..

இதயம் துடிக்குது ஆசையில்..

வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்..

கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்..

நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்..

நாளைக்கு நான் காண வருவாளோ..

பானைக்கு நீர் ஊற்றிப் போவாளோ..

வழியோரம் விழி வைக்கிறேன்......



தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா?

மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா?

கொஞ்சம் பொறு.. கொலுசொலி கேட்கிறதே..



பாலாவின் குரல் தன்னை மறந்து ஒலித்துக் கொண்டிருந்தது. வெளியே மேசையில் பணம் கேட்டு வந்த ஊர்க்கடிதம் காத்திருப்பது தெரியாமல்....





சந்திரவதனா

12.8.1999



பாடல் வரிகள் - பழனிபாரதி

மேடைப்பேச்சு

அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது.

எப்படித்தான் பார்த்தாலும் எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா ஒத்துழைக்க மறுத்து, ஒத்திகைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லாது எத்தனையோ பேருடன்.. வாய் குளறி......... தடுமாறியிருக்கிறேன். அப்படியான சமயங்களில் எழுத்தின் ஆங்காரம், பேச்சில் ஓங்கவில்லையே எனப் பலர் என்னிடம் ஆச்சரியப் பட்டுள்ளார்கள். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒத்திகை பார்ப்பு என்பது எனக்குள்ளே அரங்கேறி அசை மீட்கும்.



அவர் மீது எனக்கு நல்ல மதிப்பு. அதனால்தான் இன்று இத்தனை தரமாய் ஒத்திகை பார்ப்பு. மேடைகளிலும், வானொலிகளிலும் வாய் திறந்தாலே அருவியாகக் கொட்டும் அவர் தமிழில் நான் மெய் மறந்து போயிருக்கிறேன். வார்த்தைகளில் அழகு மட்டுமா? வயதான அவரிடமிருந்து வெளிப்படும் முற்போக்குச் சிந்தனையுடனான, புதுமை நிறைந்த, சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் என்ன ஒரு தெளிவு. அடித்து வைத்துச் சொல்லும் கருத்துக்களிலுள்ள நியாயம். உண்மையிலேயே நான் வியந்து போவேன்.



கடந்த வாரமும் ஐரோப்பிய வானொலி ஒன்றில் கிட்டத்தட்ட 40 நிமிட நேரங்கள் அவரது வீச்சான உரை ஒலிபரப்பானது. எடுத்துக் கொண்ட விடயம் ஐரோப்பியாவில் நடைபெறும் ஆடம்பரமான சாமத்தியச்சடங்குகள் அவசியமானதுதானா..? என்றதாக இருந்தது. இன்றைய எமது கணினி உலகப் பெண்களே சாமத்தியச்சடங்கு அவசியந்தான் என்று எண்ணி தமது பெண் குழந்தைகளைக் காட்சிப் பொருளாக்கிக் கொண்டிருக்கும் அவல நிலையில் அவர் அது அவசியமே இல்லை.. என்று வாதிட்டு, வானொலி அறிவிப்பாளருக்கு இடையிடையே எழுந்த அது சம்பந்தமான சந்தேகங்களுக்கும்; தங்கு தடையின்றிப் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஐம்பதைத் தொட்ட ஒருவர் இப்படி

முற்போக்கு நிறைந்த ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்ததில் எனக்கு மெய்சிலிர்த்தது. அவரைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.



அந்த எனது நினைப்பை இன்று எப்படியாவது செயலாக்க வேண்டும் என்ற முனைப்பில், மீண்டும் ஒரு முறை மனசுக்குள் எப்படி அவருடன் பேசுவது என ஒத்திகை பார்த்து விட்டு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன்.



வழமைக்கு மாறாக எனக்கும் இன்று தங்கு தடையின்றிப் பேச வந்தது. பாராட்டினேன். அவரை நியமாகவே மனசாரப் பாராட்டினேன். அவரின் தமிழ்ப்புலமையை, பேசுந்திறனை, பொருள் கொண்ட கருத்துக்களை, அதைச் சபையோர்க்குத் தரும் விதத்தை ... என்று பாராட்டினேன். பேச்சு அலுக்கவில்லை. இருந்தாலும் பின்பொருமுறை பேசுகிறேன் என்று சொல்லி தொடர்பைத் துண்டிக்க முனைந்தேன்.



அவர் பல தடவைகள் நன்றி சொன்னார்.

இண்டைக்கெண்ட படியால் என்னைப் பிடிச்சிங்கள். இனி இரண்டு கிழமைக்கு எனக்கு ஒண்டுக்கும் நேரமிராது. என்றார்.



ஏன் நாட்டுக்குப் போறிங்களோ..?

இன்றைய இப்போதைய நிலையில் புலத்தில் இதுதானே சகயம் என்பதால் உடனேயே எந்த சிந்தனையுமின்றிக் கேட்டு விட்டேன்.



இல்லையில்லை............

மகள் பெரியபிள்ளையாகி ஒரு மாசமாச்சு. வாற சனிக்குத்தான் ஹோல் கிடைச்சுது. அதுதான் அந்த வேலையளோடை ஓடித் திரியிறன். எல்லாருக்கும் கார்ட் குடுத்திட்டன்.................. அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.



நான் தொலைபேசியை வைத்து விட்டேன்.



சந்திரவதனா - 21.8.2003

பிரசுரம் - வடலி-லண்டன்(செப்டெம்பர்-2003

அக்கரைப் பச்சைகள்

என் சின்னவன் மடிக்குள் கிடந்து முட்டி முட்டிப் பாலைக் குடிக்கும் போதுதான் அவள் வந்தாள். எப்போதும் அவள் இப்படித்தான் பல்கலைக்கழகத்திலிருந்து லீவில் வரும் போதெல்லாம் என் வீட்டை எட்டிப் பாராது தன் வீட்டுக்குப் போக மாட்டாள்.



சொந்தம் என்பதையும் விட ஒன்றாகப் படித்து ஒன்றாக இலந்தைப் பழம் பொறுக்கி ஒன்றாக மாங்கொட்டை போட்டு, ஒன்றாக கிளித்தட்டு விளையாடி........ என்று அரிவரியிலிருந்து ஒன்றாகவே என்னோடு உயர்தரம் வரை பயணித்தவள். எப்போதும் ஒன்றியிருக்கும் எமக்குள் பரீட்சைப் புள்ளிகளில் மட்டும் போட்டி வரும். ஒரு தரம் government test இல் கணிதத்துக்கு பாடசாலையே வியக்கும் படியாக அவளுக்கும் எனக்கும் ஒரே புள்ளிகள்.



இப்படியெல்லாம் படித்து விட்டு நான் ஒரு அவசரக் குடுக்கை. அவசரப் பட்டு கல்யாணம் செய்து மூன்று பிள்ளைகளையும் பெற்று குடும்ப சாகரத்தில் விழுந்து விட்டேன். கண்டறியாத காதல் எனக்கு.



அவள் trouser ம் போட்டுக் கொண்டு வந்து "ஹாய்" என்ற படி என் வீட்டு விறாந்தை நுனியில் அமர்ந்தாள். சின்ன வயசிலிருந்தே அவளும் நானும் அமர்ந்திருந்து கதைக்கும் இடம் அதுதான்.



பிச்சிப்பூ வாசத்தை நுகர்ந்த படி கப்போடு சாய்ந்து கொண்டு படிக்கும் போது கதையளந்ததுக்கும் இப்போதுக்கும் கனக்க வித்தியாசம். சுவாரஸ்யமான கதைகளில் முன்னர் போல மூழ்க முடியாமல் பிள்ளைகளின் பக்கம் என் கவனம் சிதறிக் கொண்டே இருந்தது.



அவள் பல்கலைக்கழகப் புதினங்களை அளந்து கொண்டேயிருந்தாள்.

எனக்கு என் மேலேயே கோபமாய் வந்தது. நானும் போயிருக்கலாம்தானே. எத்தனை தரமாய் எல்லோரும் சொன்னார்கள். பெரிய ரோமியோ யூலியட் காதல் என்பது போல ஒரே பிடியாய் நின்று......... இப்ப இவள் ஒரு சுதந்திரப் பறவை. நான் பிள்ளையளோடை மாரடிக்கிறன்.



அம்மா ஆடிப்பிறப்புக்கு கொழுக்கட்டை அவிக்க என்று நேற்றுத்தான் பயறு வறுத்து, உடைத்து, கொழித்தவ. கொழித்து வந்த பயத்தம் மூக்கை எப்பவும் போல ஹொர்லிக்ஸ் போத்தலுக்குள்ளை போட்டு வைத்தவ. அதில் ஒரு பிடி எடுத்து சர்க்கரையும் தேங்காய்ப்பூவும் போட்டுப் பிசைந்து இரண்டு dish களில் போட்டுக் கொண்டு வந்து தந்தா. சுகிக்கு அது நல்லாகப் பிடிக்கும் என்று அம்மாவுக்குத் தெரியும். சுகி அதை ரசித்துச் சாப்பிடத் தொடங்கினாள்.



நான் ஒரு கரண்டியை வாயில் போட்டு விட்டுப் பக்கத்தில் வைத்தேன்.

மூத்தவன் வந்து "அம்மா..! ஆ... ஆ..." என்று வாயைத் திறந்தான். ஒரு கரண்டியை அவனுக்கு ஊட்டி விட்டேன். இரண்டாமவன் வந்து "தம்பியைத் தொட்டிலிலை போடுங்கோ. நான் மடியிலை படுக்கப் போறன்." என்று மழலை பொழிந்தான்.



பல்கலைக்கழகப் புதினங்களை சுகி நிறுத்தி நிறுத்திச் சொல்லிக் கொண்டேயிருந்தாள். சின்னவகுப்பில் எங்களோடு படித்த தேவநாயகத்துக்கும் வானதிக்கும் காதலாம். எனக்கு நம்ப இயலாமல் இருந்தது. எங்களோடு படிக்கிற பொழுது தேவநாயகம் நெற்றியில் வடியத்தக்கதாக தலையிலை எண்ணெய் தப்பிக் கொண்டு, கன்ன உச்சியும் பிறிச்சுக் கொண்டு..........



"அவனைக் காதலிக்கிறாளோ வானதி..?"

வானதி எங்களுக்கு அடுத்த batch.



"உனக்கு இளப்பமா இருக்கே..? அவன் இப்ப எஞ்சினியர் தெரியுமே..! இப்ப அவனைப் பாத்தாயென்றால் நீயே லொள்ளு விடுவாய்."



எனக்கு அவளின் கதையைக் கேட்கக் கேட்க ஆச்சரியமாகவே இருந்தது. காதல் என்ற சொல்லைச் சொல்வதே பாவம் என்பது போல இருந்தவள் பல்கலைக் கழகம் போகத் தொடங்கிய பின் இப்பிடித்தான் லொள்ளு.. அது இது என்று புதுப் புதுச் சொற்களாய் உதிர்க்கிறாள். கூச்சமென்பதே இல்லாமல் பட் பட்டென்று மனதில் தோன்றுவதையெல்லாம் வெளியில் கொட்டுகிறாள். பொறாமையோடு அவளைப் பார்த்தேன். இத்தனையையும் இழந்து விட்டேனே என்ற ஆதங்கத்தில் எனக்குள் வெம்பினேன்.



அந்த நேரம் பார்த்து அவளிடம் இருந்து ஒரு பெருமூச்சு.

"உனக்கென்ன...? நீ கலியாணம் கட்டிப் போட்டு குழந்தைகள் குட்டிகள் எண்டு எவ்வளவு சந்தோசமாயிருக்கிறாய். எனக்கு எரிச்சல்தான் வருது. இன்னும் படிப்பு.. பரீட்சை எண்டு புத்தகங்களையும் காவிக் கொண்டு........."



மனசுக்குள் சில்லென்ற ஒரு உணர்வு.



மூத்தவன் மீண்டும் வந்து என் முதுகுப் பக்கமாக வளைந்து என்னைக் கட்டிப் பிடித்தான். அந்த ஸ்பரிசம் வழமையையும் விட அதீத சுகமாய்.... நான் அவனை அப்படியே இழுத்து இறுக அணைத்துக் கொண்டேன்.



சந்திரவதனா

யேர்மனி

27.5.2004