யன்னலினூடு தெரிந்த கஸ்தானியன் மரங்களோ அதை அசைத்துக் கொண்ட வந்த தென்றலோ இன்று யாரையும் இதமாகத் தழுவவில்லை. றோசியின் புறுபுறுப்பும், கரகரப்பும் இடையிடையே தெறித்து விழுந்து கொண்டிருந்த அநாகரீகமான வார்த்தைகளும் அறையிலிருந்த எல்லோரையும் ஓரளவுக்கு மௌனிகளாக்கி விட்டிருந்தன.
அவளது தொணதொணப்பு அவளருகிலிருந்த எனக்குத் தாங்கவில்லை. வந்ததிலிருந்து கீறுபட்ட கிராமபோன் போல ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தாள். எள்ளும் கொள்ளும் அவள் முகத்தில் வெடித்துக் கொண்டே இருந்தன. எனக்கு இதற்கு மேல் கேட்க முடியவில்லை என்பதை அவளுக்கு உணர்த்துவதற்காக இரண்டாவது தடவையாகவும் எழுந்து சென்று தேநீர் போட்டு, குசினிக்குள்ளேயே நின்று குடித்து விட்டு வந்தேன்.
வந்து இருந்ததும் மீண்டும் தொடங்கி விட்டாள்.
"இந்த முறை நான் தீர்க்கமான முடிவெடுத்திட்டன். அந்தப் பன்றியை எப்படியாவது விவாகரத்துச் செய்யப் போகிறேன். என்ன நினைக்கிறான் அவன். சரியான இடியட்..."
அவள் பன்றி என்றது அவளது கணவனைத்தான். என்னிடம் ஸ்வைனுக்கான தமிழ் சொல்லை தனது கணவனைத் திட்டுவதற்காகவே கேட்டுப் பாடமாக்கி வைத்திருக்கிறாள்.
வழமை போலவே நேற்று மதியமும் இவள் சமைத்த பன்றிப் பொரியலும், உருளைக்கிழங்கு சலாட்டும் அவனுக்குப் பிடிக்கவில்லையாம். பிடிக்காததற்குக் காரணம் சுவை சம்பந்தமானதல்ல. முதல்நாளிரவு அவன் குடித்து விட்டுத் தள்ளாடிக் கொண்டு வந்ததால், இவள் நாய்க்கத்தல் கத்தி விட்டு அவனை வரவேற்பறையில் படுக்க விட்டிருக்கிறாள். அதற்கான பழி தீர்ப்புத்தான் அது.
பன்றிப்பொரியல் பிடிக்கவில்லையென்று அவன் சாப்பிடாமல் போயிருந்தால் இவளுக்கு இத்தனை தூரம் கோபமேற்பட்டிருக்காது. நானும் இந்தத் தொணதொணப்பில் இருந்து தப்பியிருப்பேன். அவன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே இவளது முக அலங்காரத்தைப் பற்றி நையாண்டியாகச் சொல்லியிருக்கிறான். "உன்னை விடக் குரங்கு வடிவு" என்று நெளித்துக் காட்டியிருக்கிறான். அதுதான் இவளை உச்சக் கட்டக் கோபத்துக்குத் தள்ளியிருக்கிறது.
"நாளையிலையிருந்து எனக்கு விடுதலை. அப்ப பாரன் இவன் எவ்வளவு பாடுபடப் போறான் என்று.." மீண்டும் தொடங்கினாள்.
"இப்ப நீ இதை எத்தனையாவது தரம் சொல்லிப் போட்டாய்..? நூறாவது தடவையா..? இருநாறாவது தடவையா? அல்லது ஆயிரமாவது தடவையா..?" இரண்டாவது மேசையில் இருந்த ரெகீனா எரிச்சலும், கோபமும் பீறிட கேலித்தொனியில் கேட்டாள்.
"நீ சும்மாயிரு. உனக்கென்ன தெரியும் அந்த ஸ்வைனைப் பற்றி.. இதுக்கு மேலையும் என்னாலை அவனோடை வாழேலாது. நான் தீர்க்கமான முடிவுக்கு வந்திட்டன். கண்டிப்பா அவனை விவாகரத்துச் செய்யப் போறன்."
"எனக்கு உன்ரை கணவனைத் தெரியுமோ இல்லையோ. உன்னை நல்லாத் தெரியும். உன்னோடை வேலை செய்யிற இந்தப் 13 வருசத்திலை.. நான் நினைக்கிறன் ஆயிரம் தடவைக்கு மேலை உன்ரை கணவனை விவாகரத்துச் செய்யிறதாய்ச் சொல்லிப் போட்டாய். ஆனால் இன்னும் செய்யேல்லை. நான் உனக்குச் சொல்லக் கூடியது என்னெண்டால் உடனடியா விவாகரத்தைச் செய். அப்பதான் நாங்கள் தொடர்ந்து இந்த வேலையிலை இருக்கலாம். இல்லையெண்டால் உன்ரை தொணதொணப்பைக் கேட்டே எங்களுக்கு தலை வெடிச்சிடும்."
"ஏ...ய். கத்தாதை. என்ரை புருசன் எனக்குக் கடுப்பேத்தினது காணும். நீயும் பிறகு என்ரை எரிச்சலைக் கிளறாதை. இந்த முறை கண்டிப்பா விவாகரத்துத்தான். நான் வீடு கூடப் பார்த்திட்டன். தளபாடங்கள்தான் பிரச்சனை. அதுகளை நான் வங்கியிலை கடனெடுத்தாவது வேண்டிப் போடுவன்."
இம்முறை அவள் சொல்வதைப் பார்த்தால் நியமாகவே விவாகரத்துச் செய்து விடுவாள் போல இருந்தது. நாளைக்கே வீடு மாறக் கூடிய விதமாக ஒரு நண்பி அவளது வீட்டின் மேல் மாடியை ஒதுக்கிக் கொடுத்து விட்டாளாம்.
என்ன இருந்தாலும் 13 வருடங்களாக என்னோடு வேலை பார்க்கிறாள். அவளைச் சமாதானப் படுத்தி விவாகரத்து எண்ணத்திலிருந்து மீட்க வேண்டும். மனம் எண்ணிக் கொண்டது.
"இஞ்சை பார். விவாகரத்துச் செய்து போட்டுத் தனிய வாழுறது மட்டும் பெரிய நல்ல விசயம் எண்டு நினைக்கிறேயே. மொக்கு வேலை பார்க்காமல் நல்லா யோசிச்சு ஒரு முடிவெடு. விவாகரத்து எண்டிறது விளையாட்டு இல்லை."
"நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். இவனோடை என்னாலை வாழேலாது."
"விவாகரத்துச் செய்து போட்டு எத்தினை காலத்துக்குத் தனிய வாழப் போறாய். அடுத்ததாகக் கிடைக்கப் போகிறவன் இவனை விட நல்லவனாக இருப்பான் எண்டிறதுக்கு என்ன உத்தரவாதம்...?"
"சும்மா பேய்க்கதை கதைக்காதை. இவனை விடக் கூடாதவன் இந்த உலகத்திலையே இருக்க மாட்டான்."
அந்த நேரம் அவளோடு தொடர்ந்து கதைப்பதில் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என்ன நடக்குமோ என்று மனது சற்று அச்சப் பட்டது. அவள் தொடர்ந்தும் தொணதொணத்துக் கொண்டே இருந்தாள். கலகலப்பாகக் கழிய வேண்டிய எங்கள் வேலை நேரம் இவளது தொணதொணப்பில் விரயமாகக் கரைந்து போனது. வேலைகள் கூட சரியான முறையில் முடியவில்லை.
நேற்றைய சண்டை காரணமாக காரைத் தொடக் கூடாது என அவன் சொல்லி விட்டானாம். அவசரமாய் யக்கற்றை போட்டுக் கொண்டு கைப்பையையும் கொழுவிக் கொண்டு சூஸ்(bye bye) சொல்லியபடி எங்களுக்காகக் காத்திராமல் லிப்றுக்குள் புகுந்து கொண்டாள். பேரூந்தைப் பிடிக்க வேண்டுமென்ற அவசரம் அவளுக்கு.
அவளை விட அவசரமாய் லிப்ற் இறங்கியது. நானும் மற்றவர்களும் நிதானமாக எமது யக்கற்றுகளைப் போட்டுக் கொண்டோம். அவளுக்காக ஒரு சிலர் பரிந்துரைத்து அவள் கணவனை மனங் கொண்ட மட்டும் திட்ட.. ரெகினா மட்டும் உதட்டை நெளித்துச் சிரித்தாள். "இப்போதுதான் காதுக் குடைச்சல் தீர்ந்தது. பிறகு நீங்களும் தொணதொணக்காதைங்கோ." என்றாள்.
ஒருவரும் யன்னலைப் பூட்டுவதாகத் தெரியவில்லை. வளவளா என்று கதையளப்பதிலேயே குறியாக இருந்தார்கள். கஸ்தானியன் மரங்களின் அசைவில் யன்னல் சேலைகள் ஆடிக் கொண்டே இருந்தன. ஓடிச் சென்று யன்னலைப் பூட்ட முனைந்த நான் ஏதோ ஒரு ஈர்ப்பில் வெளியில் எட்டிப் பார்த்தேன்.
ம்... யாரது..?
யன்னலுக்கு நேரெ கீழே.. பெரிய பூங்கொத்து ஒன்று கைகளில் மலர்ந்திருக்க.. றோசியும் அவளது கணவனும் உதட்டோடு உதடு பதித்து... இறுக அணைத்து..
நான் கண்களைக் கசக்கிப் பார்த்தேன்.
அவர்களேதான். என்னை மன்னிச்சுக்கொள் என்ற வாக்கியம் பூங்கொத்தில் சொருகப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.
என் காதுகளுக்குள் இன்னும் அவளது தொணதொணப்பு ஒட்டிக் கொண்டே இருந்தது. அவர்களோ ஒருவரின் இடுப்பை ஒருவர் கைகளால் வளைத்த படி நடக்கத் தொடங்கினார்கள். இடை இடையே கண்களால் நோக்கி உதடுகளைக் கவ்வி.... உலகின் அதி அற்புதமான காதல் ஜோடிகளில் ஒரு ஜோடி போல...
திரும்பினேன். இவர்கள் அதுதான் எனது சக வேலைத் தோழிகள் றோசியின் விவாகரத்துப் பற்றி அநுதாபத்தோடும், அது சரியா பிழையா என்பது பற்றி அக்கறையோடும் விவாதித்துக் கொண்டு லிப்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.
சந்திரவதனா
யேர்மனி
12.9.2004
Wednesday, September 29, 2004
Sunday, September 19, 2004
தலைவருடன் சில மணிப்பொழுதுகள்
30.5.2002
நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு..! து}க்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன்.
கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும் - போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பதையும் பார்த்த பின் -
இதையெல்லாம் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன் மிக்க அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது.
அண்ணன் - அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.
வாய்க்கு வாய் அண்ணை என்றும் அண்ணன் என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம் - ஏற்கெனவே எனக்குள் முளைவிட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து தளிர்த்து சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. "நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்குரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்." எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.
என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காக தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு அளவளாவ வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.
என் ஆசைக்கு அணை போட முடியாத கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன்.
நேற்று முன் தினம் - மாலை நான்கு மணியளவில் வெயிலில் மூழ்கியிருந்த கிளிநொச்சி வெண்புறா நிறுவனத்தில் நிழலும் தண்மையும் தேடி வரவேற்பறையின் ஓர் மூலையில் நான் அமர்ந்திருந்த போதுதான் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆளனுப்பியிருந்தார். "எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் ஏழு மணிக்கு வாகனம் அனுப்புவதாகவும்" சொல்லி விட்டிருந்தார்.
ஏழு மணிக்குச் சில நிமிடங்கள் முன்னரே வாகனம் வந்தது. போனோம்.
நட்பு நிறைந்த பார்வைகள் எம்மை வரவேற்க அரசியல் துறை அலுவலகம் தனக்கே உரிய பாணியில் உள்ளேயும் வெளியேயும் அழகாகக் காட்சி அளித்தது.
அதே சிரிப்பு........! எப்போதும் நாம் பத்திரிகைகளிலும், ஒளி நாடாக்களிலும் பார்த்த அதே சிரிப்புடன் தமிழ்ச்செல்வன் அவர்கள் எம்மை வரவேற்றார்.
அக்கா..! அக்கா..! என்று உரிமையோடு அழைத்து அன்போடு பேசினார்.
களத்தில் காவியமான எனது தம்பிமாரைப் பற்றிக் கதைத்தார். முன்னர் பருத்தித்துறையில் புத்தக வெளியீடு செய்த தங்கை பற்றி விசாரித்தார். கதைகள் பல திசைகளிலும் விரிந்திருந்தன.
அவருடனான இரவு உணவு நளபாகம்தான். இறால், இறைச்சி, மரக்கறி... என்று சுவையாக இருந்தது. அங்கிருந்த உறவுகள் அதை நட்போடு பரிமாறிய விதம் மிகவும் இதமாக இருந்தது. அந்த இனிய உபசரிப்பில் மனசும் வயிறும் நிறைந்திருக்க நாம் விடை பெற எழுந்து கொண்டோம்.
அப்போதுதான் தமிழ்ச்செல்வன் அவர்கள் என்னைத் தனியாகக் கூப்பிட்டு அந்த இனிய செய்தியைச் சொன்னார். "வியாழக்கிழமை (அண்ணன்) உங்களைச் சந்திக்க விரும்புறார்." என்றார். எனக்கு ஒரு தரம் மனம் சிலிர்த்தது.
அண்ணையைச் சந்திப்பது பற்றி தமிழ்ச்செல்வன் அவர்கள் சொன்ன அந்தக் கணத்திலிருந்து நான் பதட்டமாகி விட்டேன்.
வெளியில் வந்து அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்த போதோ சமையல் செய்தவர்களிடமும் உணவு பரிமாறியவர்களிடமும் நன்றி கூறி விடைபெற்ற போதோ நான் ஒன்றிலும் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியாமல் பதட்டமாகவே இருந்தேன்.
உண்மைதானா..? மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நான் சந்திக்கப் போகிறேனா..? சந்தோசம்..! சந்தேகம்..! பதட்டம்..! பரபரப்பு..!..... எல்லாம் என்னுள். இன்று காலை தமிழச்செல்வன் அவர்கள் வெண்புறா வரை வந்து "மாலை நாலுமணிக்கு வாகனம் வரும்." என்று சொன்ன போதும், எனது படபடப்புகள் குறைய வில்லை.
நான்கு மணிக்கு வருவதாகச் சொன்ன வாகனம் சற்றுத் தாமதமாகத்தான் வந்தது. போர்pன் அனர்த்தங்களால் குழி விழுந்து போயிருந்த வீதியில் வாகனம் ஏறி இறங்கிச் சென்ற போது நாங்கள் குலுங்கினோம்.
கூட வந்தவரின் சற்றலைற் தொலைபேசி சிணுங்கினாலே "எங்கே.. இன்று எம்மால் அண்ணையைச் சந்திக்க முடியாது." என்று தகவல் சொல்லி விடுவார்களோ என்று! மனசு பயப்பட்டது.
அண்ணனைச் சந்திக்கும் வரை எதையும் நம்ப மனசு மறுத்தது. வாகனம் எம்மை ஒரு இடத்தில் இறக்கிய போது அங்குதான் அண்ணன் நிற்பார் என நினைத்தேன். பின் அரை மணி நேரமாகக் காத்திருந்த போது அண்ணன் அங்கு வருவார் என்ற நினைப்பில் காத்திருந்தேன்.
ஆனால் வந்தது இன்னுமொரு வாகனம். போராளிகளின் மருத்துவனான, ரேகா ஓட்டி வந்தான். முதற் சந்திப்பிலேயே காலாகாலத்துக்கும் பரிச்சயமான ஒரு உறவு போல "அக்கா...! அக்கா..!" என்று உரிமையோடு இனிமையாகப் பேசினான்.
சில நிமிடங்களில் வாகனம், மரங்கள் குடை விரித்திருந்த ஒரு இடத்துக்குள் நுழைந்தது. முற்றத்தில் கதிரை போட்டுத் தமிழ்ச்செல்வன் அவர்கள் அமர்ந்திருந்தார். அதே சிரிப்புடன் எம்மை வரவேற்றார். உள்ளே வீடா..! அலுவலகமா..! தெரிய வில்லை. மின் விளக்கில் பல முகங்கள் தெரிந்தன.
சில நிமிட உரையாடல்களின் பின் இன்னொரு வாகனம் வந்தது. கேற்றடியில் சற்று இருள் சூழ்ந்திருந்தது.
ஆனாலும் இறங்கியவர்களில் தலைவர் பிரபாகரன் அவர்களும் இருக்கிறார் என்பதை அவர் நடையிலேயே கண்டு கொண்டேன். இப்போதுதான் மனசு முழுதாக நம்பிக்கை கொண்டது.
சந்திப்புக்கான பிரத்தியேகமான தனியாக இருந்த ஒரு கட்டிடத்துள் அவர்கள் நுழைய நாங்களும் அழைக்கப் பட்டோம்.
மதிப்புக்குரிய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நேரே கண்டதும் எப்போதும் என் வாயில் சரளமாக வரும் வணக்கம் கூட வரமறுத்தது. `நா´ பேச மறந்து பின்னிக் கொண்டு பின் நின்றது. நம்ப முடியாதிருந்தது. சிரிப்பை மட்டும் உதிர்த்தேன்.
எல்லோரும் உள்ளே நுழைந்ததும் இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்.
அங்கும் தமிழ்ச்செல்வன் அவர்களுடனான சந்திப்பின் போது போலவே அழகாகவும் பண்பாகவும் உபசரித்தார்கள்.
சில நிமிடங்களில் தயக்கமும் தவிப்பும் தளர்ந்து இயல்பு நிலைக்கு வந்தேன். அண்ணன் பிரபாகரன் மிகவும் இயல்பாகப் பேசினார். உரிமையோடு எம்மோடு அருகிருந்து பேசினார். நான் சிரிக்கும் போது "மயூரனின் சிரிப்புப் போலவே இருக்கிறது." என்றார். "இதே சுருள் தலைமயிர்தான் மயூரனுக்கும்" என்றார்.
பூநகிரித் தவளைப் பாய்ச்சலில் உடலம் கூடக் கிடைக்காமற் சிதறிப் போன மயூரனின் குறும்புகள் பற்றி நிறையச் சொன்னார். `தகடை´ மாற்றிக் கட்டிக் கொண்டு திரியும் விளையாட்டுத் தனங்களைப் பற்றிச் சொன்னார்.
மொறிஸ் பற்றிச் சொன்னார். ஆனால் "மொறிஸை சந்திக்க முடியாமற் போய் விட்டது." என்றார். மொறிஸ் ஒரு கிழமையில் அவரிடம் வருவதாக இருந்தானாம். அதற்கிடையில் பருத்தித்துறையில் விதையாகி விட்டான்.
"மயூரன்ரை அந்த எழுதுற அக்கான்ரை கடிதங்களை எனக்கு நல்லாப் பிடிக்கும். எல்லாரும் விட்டிட்டு வா எண்டுதான் கடிதங்கள் போடுவினம். ஆனால் அவ மட்டும் அப்பிடி எழுத மாட்டா. நம்பிக்கையும் உறுதியும் கூறி.... எழுதுவா." என்றார். அவர் குறிப்பிட்டது சந்திரா ரவீந்திரனை. புலம் பெயர்ந்து விட்ட எனது தங்கையைக் கூட அவர் இத்தனை ஞாபகம் வைத்திருப்பது எனக்குள் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது.
மறைந்த கவிஞர் தீட்சண்யன், பொட்டம்மானின் மகன் பார்த்திபனுக்கு ஆங்கில வகுப்புகள் எடுத்தது பற்றிச் சொன்னார்.
பலதரப்பட்ட உரையாடல்களின் மத்தியில் "சாப்பிடுவோம் வாங்கோ!" என அவர் அழைத்த போது ஆச்சரியப் பட்டுத்தான் போனேன். அரைமணி நேரம்தான் எமக்காக ஒதுக்குவார் என நினைத்தேன். ஏற்கெனவே கூடிய நேரம் கதைத்து விட்டோம். விருந்து வேறையா..? மனசு புளகாங்கிதமடைந்தது.
சாப்பாடு அந்த மாதிரி இருந்தது. டுபாய் பிட்டு மிகவும் மென்மையாகச் சுவையாக இருந்தது. சாப்பிடும் போது நிறையக் கதைத்தோம். மனம் விட்டுச் சிரித்தோம். பெண்களின் பிரச்சனைகளிலிருந்து அரசியல் வரை அலசினோம்.
பெண்களின் பிரச்சனைகள் பற்றிப் பேசும் போதுதான் அண்ணன் பிரபாகரன் வன்னியில் வாழ்ந்தாலும் எத்தகையதொரு முற்போக்குச் சிந்தனையுடன் இருக்கிறார் என்பதும் செயற் படுகிறார் என்பதும் தெரிந்தது. அவர் பெண்களுக்கான எல்லா உரிமைகளையும் கொடுக்கிறார். பெண்கள் தாழ்ந்து போவதில் எந்தவிதமான இஷ்டமும் அவருக்கு இல்லை. அங்கெல்லாம் அனேகமாக ஆண்கள்தான் சமைக்கிறார்கள். பெண்கள் சமையலில் முடங்கிப் போய்விடக் கூடாதென்பதில் அவர் மிகுந்த கவனம் கொண்டிருந்தார். பெண்களால் சமையல் தவிர்ந்த வேறு ஆக்க பூர்வமான பல வேலைகளைச் செய்ய முடியும் என்பதில் அவர் நிறைந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
சில பெண்கள் சொல்லச் சொல்லக் கேளாமல் சாப்பாட்டைக் குறைத்து விட்டு களத்தில் விரைவில் களைத்துப் போய் விடுகிறார்கள் என்று அக்கறையோடு கவலைப்பட்டார். நீச்சல் தெரிந்த பெண்நீச்சல்ஆசிரியர் இல்லாத ஆரம்ப கால கட்டத்தில் பெண்களுக்கு நீச்சல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்த முயன்ற போது எழுந்த கஷ்டங்களை விளக்கினார்.
சில போராளிகள் "ஆங்கிலத்தைப் படியுங்கோ படியுங்கோ." என்று சொன்னாலும் அக்கறைப் படுகிறார்கள் இல்லை. - என்று வருந்தினார்.
அவரோடு பேசும் போது ஆரோக்கியமான எதிர்காலத் தமிழ்சமூகத்தின் மீதான அவரது அக்கறை புரிந்தது.
பேச்சுத் திசைமாறித் திசைமாறி எனது கணவரின் நகைச்சுவைப் பேச்சுக்களினால் எழுந்த சிரிப்பலைகளோடு மீண்டும் சாப்பாட்டில் வந்து நின்றது. டுபாய் பிட்டும் கோழிக்கறியும் உண்மையில் சுவையாக இருந்தது. அண்ணனிடம் சொன்னேன். "டுபாய்புட்டு நல்லாயிருக்கு. எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு. " என்று. அதை எப்படிச் சமைப்பதெனவும் கேட்டேன். "சமைக்கிறவையளைக் கூப்பிட்டுத்தான் சொல்லோணும்." என்றார்.
இப்படியே ஓரு விடயமென்றில்லாமல் குடும்பம் அரசியல் போராட்டம்.... என்று பல் வேறு பட்ட கதைகளுடன் ஏறக்குறைய நான்கு மணித்தியாலங்கள் களிப்போடு கழிந்தன. சேர்ந்து புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம்.
விடைபெறும் போது என்னால் நம்பவே முடியவில்லை. நான் அண்ணையைத்தான் சந்தித்திருக்கிறேன் என்பதை. அதற்கு மேல் என்னால் தலைவர் என்று சொல்ல முடியவில்லை. அவருடனான பொழுதுகள் அவ்வளவு நெருக்கமாக இருந்தன.
"எனது வேண்டுக்கோளுக்கமைய என்னை இவ்வளவு விரைவாகச் சந்தித்து மகிழ்ச்சிப் படுத்தியதற்கும் உங்கள் இனிய உபசரிப்புக்கும் மிகவும் நன்றி." என்று அண்ணையிடம் சொன்னேன்.
உடனே அண்ணன் "இல்லை, இல்லை, இதற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டாம். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும். உங்கடை குடும்பத்திலை மூன்று பேரை நாட்டுக்காகக் குடுத்திருக்கிறீங்கள். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும்." என்றார். அவரது அந்த பெருமிதமற்ற பேச்சில் உண்மையிலேயே நான் நெகிழ்ந்து போனேன்.
அந்த நெகிழ்ச்சியோடே, எனது பயணத்துக்கு அர்த்தம் சொன்ன அந்த இனிமையான பொழுதுகளை மனதுக்குள் நிறைத்த படி புறப்பட்டோம். வெண்புறா வந்த பின்னும் இனிய நினைவுகள் என்னுள் நிறைந்திருந்தன.
அடுத்தநாள், எனக்கு அந்த டுபாய்பிட்டை அவித்துக் காட்ட என நிமலனையும், புகழோவியனையும் அண்ணை அனுப்பியிருந்தார்.
எனக்கு நம்பவே இயலாமல் இருந்தது. "எனக்கு அந்த டுபாய்பிட்டுப் பிடித்திருக்கிறது. அதை எப்படிச் சமைப்பது?" என்று ஒரு வார்த்தை கேட்டதற்காக அவர் இத்தனை அன்பாக நடந்து கொள்வார் என்று நான் துளியும் எதிர் பார்க்கவில்லை. அண்ணை என்னோடும் என்னுடைய குடும்பத்தோடும் மட்டும் அப்படிப் பழகவில்லை. நாட்டுக்காக உயிரைக் கொடுத்த அத்தனை உறவுகளின் குடும்பங்களுக்கும் அவர் மதிப்புக் கொடுத்து, அவர்களை எந்தளவு தூரம் தனக்குள் பூஜித்து வைத்திருக்கிறார் என்பதை அவரோடு பழகிய அந்த சிலமணி நேரங்களில் புரிந்து கொண்டேன்.
அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அவர் வெறுமனே ஒரு இராணுவத் தளபதியல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். அவரோடு கதைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும் அவர் ஒவ்வொரு போராளிக்கும் எப்படியெப்படி தனது இதயத்துள் இடம் வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். எல்லோரும் நினைப்பார்கள். "ஆயுதந் தூக்கிப் போராடுபவர்கள் தானே!" என்று. அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பது அவரோடு நேரே பேசும் போதுதான் தெரிந்தது. போராளிகளின் மீது அவர் கொண்டிருந்த பாசமும் நெருக்கமும் என்னை வியக்க வைத்தன. மாவீரர்கள் எல்லோரையும் அவர் மனதில் நிறுத்தி வைத்திருப்பதை, எந்த மாவீரன் பற்றிப் பேசினாலும் அந்த மாவீரனைத் தன் நினைவில் கொண்டு வந்து அந்த மாவீரன் பற்றி "அவன் இப்படி! அவன் அப்படி!" என்று அவர் சொன்ன போது அறிந்து நான் வியந்து போனேன். தலைவர் என்பதன் அர்த்தத்தை அங்குதான் புரிந்து கொண்டேன்.
வன்னியின் நேர்த்தி மட்டுமா? எது விடயத்திலும் அவர் காட்டும் ஒழுங்கு. தானே அந்த ஒழுங்கைக் கடைப் பிடிக்கும் கண்ணியமான அழகு. உண்மையான அர்த்தமுள்ள கட்டுப்பாடுகள். என்னுள் எல்லாமே ஆழ்ந்த அதிசயமான வியப்பைத்தான் ஏற்படுத்தின.
எல்லோரும் நினைப்பது போல போராட்டம் மட்டுந்தான் அவரது குறியல்ல. ஒரு சுதந்திர தமிழீழத்தையும் அங்கு ஒரு சுதந்திர சமுதாயத்தையும் உருவாக்குவதிலேயே அவர் கவனமும் செயற்பாடும் இருக்கிறது.
பெண்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பு. போராட்டக் களங்களுக்குள் எந்த தவறுகளும் ஏற்பட்டு களம் களங்கப் பட்டு விடாதபடி அவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் நடைமுறைகள்...... சொல்லி முடியாத பிரமிப்பு என்னுள்.
அண்ணையுடனான அந்தப் பொழுதுகள் எதையுமே என்னால் மறக்க முடியவில்லை. இப்போது கூட - அண்ணையைச் சந்தித்த அந்தப் பொழுதுகளும் அண்ணை எம்மோடு பழகியவிதமும் மிகவும் இனிமையாக பசுமையாக என்னுள்ளே பதிந்திருக்கின்றன.

Subscribe to:
Posts (Atom)