Saturday, May 31, 2008

பூத்த கொடி பூக்களின்றி...

ட்டன் நாஷனல் வங்கியிலிருந்து பணத்துடன் வெளியே வந்த கனகர் சைக்கிளை எடுத்துக் கொண்டு வலது பக்கமாகத் திரும்பி ரவுணை நோக்கி சைக்கிளை மிதித்தார். ரவுணுக்குள் நுழைய முடியாது போல இராணுவத்தினர் ரவுணை மொய்த்திருந்தனர்.

கனகருக்கு இன்று கொஞ்சம் களைப்பாக இருந்தது. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டார். வீட்டுக்குச் சற்றுத் தள்ளியுள்ள கடைகளிலேயே வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கியிருப்பார். ஓய்வூதியப் பணத்தை எடுக்க வங்கி வரை வர வேண்டியிருந்தது. அதுதான் இவ்வளவு தூரம் வந்தவர். ´அப்பிடியே ரவுணுக்குள்ளும் எட்டிப் பார்த்து விட்டுப் போவம்´ என்று நினைத்தார்.

வெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். யாராவது வங்கிக்குப் பணம் அனுப்பியிருப்பார்கள் என்ற நப்பாசையில் சிவபாலனைக் கேட்டார் 'ஏதும் காசு கீசு வந்திருக்கோ..?' என்று. கணினியைத் தட்டிப் பார்த்த சிவபாலன் 'இல்லை' என்ற போது மனசுக்குள் தோன்றிய ஏமாற்றத்தை முகத்தில் தெரிய விடாமல் மறைத்து விட்டு வந்தாலும் கனகரின் மனசு இன்னும் ஏமாற்றத்தில் துவண்டிருந்தது.

நினைவுகளைச் சிதற விட்டதில் ரவுணை நெருங்கும் போதுதான் செக்கிங் நடப்பதை உணர்ந்து கொண்டார். சைக்கிளால் இறங்கி வரிசையில் நின்றார். உச்சிவெயில் மண்டையில் சுள்ளிட்டது. வரிசை நத்தையாக நகர்ந்தது அவர் முறை வந்த போது அவரது ஒரு மாதப்பாஸை வேண்டிப் பார்த்த இராணுவம் அவரைப் போகச் சொன்னது.

´அப்பாடா´ என்று மனசு ஆசுவாசப்பட சைக்கிளை உருட்டிக் கொண்டு இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒருவனை நோக்கி நடந்தார். பத்து ரூபாவைக் கொடுத்து அவன் வெட்டிக் கொடுத்த இனிப்பான தண்ணென்ற இளநீரைக் குடித்த போது வெயிலின் அகோரம் தணிந்தது போல இருந்தது. அந்த உஷாருடன் பொருட்களை வாங்கிக் கொண்டு ரவுணை விட்டு வெளியேற முனைந்தவர் மீண்டும் ரவுணை விட்டு வெளியேறும் வரிசையில் கட்டாயமாக நிறுத்தப் பட்டார். சந்தேகத்தின் பெயரில் சிலர் கொடிய வெயிலில் மறித்து நிற்பாட்டி வைக்கப் பட்டிருந்தனர். பரிதாபமாக விழிக்கும் அவர்களைப் பரிதாபமாகப் பார்த்த படியே மீண்டும் நத்தை ஊர்வலத்தில் நகர்ந்து பாஸ் காட்டி வெளியேறி வீட்டை நோக்கிச் சைக்கிளை மிதித்தார்.

ரவுணுக்குள் மனிதங்கள் கொளுத்தும் வெயிலில் தடுத்து நிறுத்திச் சோதனை செய்யப் படுவதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லாமல் ஸ்ரேசன் றோட் சைக்கிள்கள், ஓட்டோக்கள், மனிதர்கள்... என நிரம்பி வழமையான அவசரத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது. இராணுவம், ஷெல், செக்கிங் இவையெல்லாம் வவுனியா மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகவும் சாதாரணமாகி விட்டன.

அதி வேகமாக முரட்டுத்தனமாக வந்த ஓட்டோ (முச்சக்கரவண்டி) ஒன்றில் மோதி விடாமல் கனகர் அவசரமாக ஒதுங்கிக் கொண்டார். துப்பாக்கியும், ஷெல்லும் இல்லாமலே ஓட்டோச் சில்லுக்குள் சிதைந்து போகும் அவலங்களும் இங்கு நிகழும். நாற்பது ரூபாவுக்காக பேயோட்டம் ஓடும் ஓட்டோ சாரதி நாய் போல நாதியற்று நடுத்தெருவில் கவுண்டு போன ஓட்டோவின் கீழ் சிதைந்து கிடப்பதும் இங்கு நிகழும். ´ஏன்தான் இப்பிடி நாயாய், பேயாய் ஓடுதுகளோ! ஒரு நிதானம் வேண்டாம். சாவதற்கு இத்தனை அவசரமோ!´ கனகர் தனக்குள்ளே நினைத்துக் கொண்டார்.

ஹட்டன் நாஷனல் வங்கிக்கு முன்னால் இருந்த பெரிய மரத்தின் கீழ் அழகிய செருப்புக்களைப் பரப்பி ஒருவன் விற்றுக் கொண்டிருக்க ஒரு சில பெண்கள் செருப்புக்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்து விலைபேசி வாங்கிக் கொண்டிருந்தார்கள். வவுனியா கனகருக்கொன்றும் புதிதில்லை. ஏற்கெனவே இருதடவைகள் அவர் வவுனியா அரச அலுவலகத்தில் வேலை பார்த்தவர்தான். ஆனால் அப்போதைய வவுனியாவுக்கும் இப்போதைய வவுனியாவுக்கும் நிறையவே வித்தியாசம். அந்த நாட்களை நினைத்தாலே அவரை ஏக்கம் பற்றிக் கொள்ளும். ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும் பிள்ளைகளையும், மனைவி செல்லத்தையும் அழைத்துக் கொண்டு வந்து அவருக்குக் கொடுக்கப் பட்ட குவார்ட்டர்ஸ்சில் அவர்களுடன் விடுமுறையைக் கழித்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை. இந்த வீதியில் பிள்ளைகளின் கையைப் பிடித்துக் கொண்டு... எத்தனை ஆனந்தமான நாட்கள் அவை.

அவரின் கால்கள் சைக்கிள் பெடலை மிதித்தாலும், மனம் அலைந்து அலைந்து தொலைந்து போன இனிமையான நாட்களைத் தொட்டுத் தொட்டு சிலிர்ப்பதுவும், ஏங்குவதுமாய் இருந்தது. ஆதிசக்தி விநாயகர் கோயிலடிக்கு வந்ததும்தான் அவர் நியத்துக்கு மீண்டார். சைக்கிளால் இறங்கி, சில நிமிடங்கள் தன்னை மறந்து, பக்தியில் நனைந்து பிள்ளையாரைப் பிரார்த்தித்தவர் மீண்டும் சைக்கிளில் ஏறி உழக்கினார். அப்போதுதான் தனக்கு தலைசுற்றுவதை உணர்ந்தார். அவருக்குக் கண்களை மறைப்பது போலிருந்தது.

'ஆதிசக்தி விநாயகரே...!'

அவர் அவ்வளவு அவசரமாக விநாயகரை அழைத்தும் விதி முந்திக் கொண்டதில் கீழே வீழ்ந்து விட்டார். தொடையில் சைக்கிள் கான்டில் பலமாகக் குத்தியதில் வலித்தது. அதைவிட வீதியில் இப்படி வீழ்ந்ததில் அவருக்கு சங்கடமாகவும், வெட்கமாகவும் இருந்தது. 'ரோட்டிலை எத்தினை கண்கள் என்னைப் பாக்குதுகள். நினைத்தவாறே எழும்ப முயன்றவரை வேதாரணியம் ஐயா ஓடி வந்து 'கனகண்ணை, எழும்புங்கோ' என்று தூக்கிய போது அவர் கூசிப் போனார். 'எனக்கென்ன வயசாகிட்டுதே? 63வயதுதானே! மனசுக்குள் ஆதங்கப் பட்டார்.

மூன்று மாதங்கள் ஓடியும் அந்த சம்பவத்தை மறக்க முடியாமல் திரும்பத் திரும்ப நினைத்து நினைத்து கனகர் உடம்போடு சேர்த்து மனசையும் குறுக்கிக் குறுக்கிக் கொண்டு கட்டிலிலேயே படுத்துக் கிடந்தார்.

அது போதாதென்று ´இவள் செல்லம் ஊரிலை என்னமாய் வாழ்ந்தவள். பருத்தித்துறையிலை மாளிகை மாதிரியான அந்தப் பெரிய வீட்டிலை பிள்ளையளும், பேரப்பிள்ளையளும் புடைசூழ ஒரு சந்தோச சாம்ராஜ்ஜத்தையே கட்டியாண்டவள் இண்டைக்கு இந்தக் குச்சியறைக்குள்ளை குடித்தனம் நடத்துறாளே! அங்கை அவளின்ரை குசினி மட்டுமே இந்தக் குச்சியறையைப் போல நாலுமடங்கு பெரிசாயிருக்கும். பிள்ளையளாவது பக்கத்திலை இருக்குதுகளே! எட்டுப் பிள்ளையளைப் பெத்தவள், ஒன்று கூடப் பக்கத்திலை இல்லாமல் எல்லாம் நாடு நாடாய் சிதறி....! நானெண்டாலும் அவளுக்கு ஆறுதலாய் இருக்கிறனே! கக்கூசுக்குப் போகக்கூட கைத்தடியாய் அவளைத் தேடுகிற கையாலாகதவானாகப் போயிட்டனே!´ என்று மனைவி செல்லத்தை நினைத்துக் கரைவதும் தனது கையாலாகத் தனத்தை நினைத்துப் புலம்புவதுமாயே இருந்தார்.

மூன்று மாதங்களின் முன் வவுனியாவின் ஸ்டேசன் ரோட்டில், ஆதிசக்தி விநாயகர் கோவிலின் முன் வீழ்ந்த போது கனகர் வெட்கத்தில் மட்டுந்தான் கூசிப் போனார். ஓட்டோவில் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டதும் செல்லம்தான் நன்றாகப் பதறிப் போனாள். உடனேயே மருத்துவமனைக்குக் கொண்டோடினாள். எல்லாம் சோதித்துப் பார்த்த மருத்துவர் 'விரைவில் குணமாகி விடும்' என்று சொல்லி மருந்தும் கொடுத்தார்.

மருந்தெடுக்க குணப்பட்டு விடுவேன் என்ற முழுமையான நம்பிக்கையுடன்தான் கனகரும் இருந்தார். ஆனால் அவர் நம்பிக்கை தோற்றுப் போகும் படியாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் படுக்கையிலே போய் விட்டார். பிறகுதான் புதிதாய் வந்த மருத்துவர் ஒருவர் அவரது இதயத்தில் கோளாறு இருப்பதைக் கண்டு பிடித்தார். தாமதாமன கண்டுபிடிப்பாலும், சரியான வைத்தியம் இன்மையாலும் அவரின் உடலின் சில பாகங்கள் செயலற்றுப் போனது அதிர்ச்சியான உண்மையானது. மருத்துவர் 'இனிச் செய்ய எதுவுமில்லை' என்று கையை விரித்தது மேலும் அதிர்ச்சியானது. நோயின் வேதனையைக் குறைக்க குளிகைகளும், ஊசிகளுமே கை கொடுத்தன.

மருத்துவமனை வரை போய்வரக் கூட இயலாத அளவுக்கு நோயின் தீவிரம் அவரை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பின் கனகருக்கு இந்தக் கட்டிலே தஞ்சமாகி விட்டது. மருத்துவர் தினமும் வந்து பார்த்து ஊசி போட்டுச் சென்றார். நோயின் வேதனையும், எழுந்து நடமாடக் கூட முடியாத நிலையும் கனகரின் தன்மான மனசை நன்றாகவே பாதித்திருந்தன. செல்லத்தின் அன்புதான் அவரை அவ்வப்போது ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தது.

செல்லம் தன்னந்தனியாக பிள்ளைகளின் உதவிகள் கூட இல்லாமல் தன்னைப் பராமரிப்பதையும், நோயின் வேதனை தாங்காது செல்ல...ம்... என்று அலுறும் போதெல்லாம் அருகிருந்து ஆதரவுடன் கவனிப்பதையும் பார்த்து ´பாவப்பட்டவள், கரைச்சல் குடுக்கக் கூடாதெண்டுதான் நினைக்கிறனான். ஆனாலும் முடியேல்லையே. வலி கொல்லுதே!´ என்று மிகவும் மனதுக்குள் வேதனைப் படுவார்.

குளிகைகளை விழுங்கிய பின் தூங்கிப் போகும் அவரை நோய் வலிமையாக ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்ததால் கோழித்தூக்கம் தூங்கி, வலியில் விழிக்கத் தொடங்கியிருந்தார்.

முதல்நாள் இரவு ஊசி போட வந்த மருத்துவர் செல்லத்தை அறைக்கு வெளியில் கூட்டிக் கொண்டு போய் 'இனி அவருக்கு மருந்தில்லை. விரும்பினதைக் குடுங்கோ. பிள்ளையள் ஆராவது வெளிநாட்டிலை இருந்து வந்து பார்த்திட்டுப் போறதெண்டால் பார்க்கட்டும். எந்த நேரத்திலையும் அவர் இதயம் துடிக்க மறந்து போகலாம்.' என்று குசுகுசுத்துச் சொன்னது கனகருக்கும் கேட்டது.

செல்லம் அதைப் பற்றி ஒன்றுமே கனகரிடம் சொல்லாமல் தனக்குள்ளே அழுது அழுது முந்தானையில் மூக்கைச் சீறிக் கொண்டு திரிந்ததைப் பார்த்து அவர் தனக்குள்ளே அழுது கொண்டிருந்தார். அவருக்கும் வாழ்க்கை ஆசை அற்றுப் போயிருந்தது. நோயின் வேதனையிலிருந்து விடுதலைதான் அவருக்குத் தேவைப்பட்டது. ஆனாலும் ´பிள்ளைகளை ஒருக்காலாவது பார்க்கோணும்´ என்ற ஆசை அவருக்குள் தோன்றி அவரை வதைத்தது.

'என்ரை பிள்ளையள் என்னை வந்து பார்க்குங்களே?' கனகரின் நினைவுகள் ஆசையில் வெந்தன. நொந்தன. பிள்ளைகளின் நினைவில் ஏங்கின.

'நான் செத்துப் போயிட்டனெண்டால் அதுகள் எப்பிடி வேதனைப் படுங்கள். புலம்புங்கள்.´ தனக்குள்ள வேதனையை விட பிள்ளைகளின் வேதனைகளை நினைத்து வேதனைப் பட்டார்.
மனசுக்குள் பிள்ளைகளைப் பற்றிய நினைவுகள் ஓடிக் கொண்டிருந்த அந்த நேரத்திலேயே அவருக்கு நெஞ்சுக்குள் மீண்டும் வலி தொடங்கியது.

ஆறு மணியாகுது. வழக்கத்திலையெண்டால் அஞ்சு மணிக்கு கிளினிக் முடிச்சிட்டுப் போற பொழுதே டொக்டர் வந்து ஊசி போட்டிட்டுப் போடுவார். இண்டைக்கென்ன இன்னும் காணேல்லை. ஏதும் அவசரத்திலை வராமல் போடுவாரோ?´ ஒரு யோசனை கனகரைப் பயப்படுத்த 'செல்லம்... செல்லம், டொக்டர் வராமல் போனாலும் போடுவார். எனக்கிண்டைக்கு தாங்கேலாமல் நோகுது. ஒருக்கால் ரெலிபோனிலை கூப்பிட்டு, கட்டாயம் வரச் சொல்லிச் சொல்லும்.' என்றார்.

செல்லம் ரெலிக்கொமினிக்கேசன் பூட்டப் போகின்றது என்ற அவசரத்தில் குருமன் காட்டுச்சந்தி ரெலிக்கொமினிக்கேசனை நோக்கி விரைந்தாள். சந்தியில் நிற்கும் இராணுவக் கூட்டத்தைக் கண்டதும் 'பாழ் பட்டுப் போவாங்கள். எப்பிடியெல்லாம் எங்களை வதைக்கிறாங்கள்.' என்று மனசுக்குள் திட்டினாள். வரசக்திப் பிள்ளையார் கோவிலைக் கடக்கையில் 'என்ரை மனுசனை நீதான் காப்பாத்து.' என்று மானசீகமாக ஒரு வேண்டுகோளை பிள்ளையாரிடம் விடுத்தாள்.

ரெலிக்கொமினிக்கேசனுக்குள் நுழைந்து மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்து கனகரின் நிலையை விவரித்தாள். 'இன்னும் ஒரு பேசன்ட் தான் அம்மா இருக்கிறார். அவரையும் பார்த்திட்டு அரைமணித்தியாலத்திலை வந்திடுவன். தைரியமா நீங்கள் வீட்டை போங்கோ' மருத்துவர் வாக்குறுதி கொடுத்தார். நிம்மதியோடு வீட்டுக்கு ஓடி வந்தாள் செல்லம். கனகர் வேதனையில் உழன்று கொண்டிருந்தார். செல்லம் எதுவும் செய்ய மனசில்லாமல் அவர் அருகிலேயே இருந்து அவரது நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள்.

அரைமணி ஒரு மணியாகியும் மருத்துவர் வரவில்லை. கனகர் வேதனையின் உச்சத்தில் பிள்ளைகளின் பெயர்களோடு, டொக்டர், சிவகாமி... என்றெல்லாம் அரற்றிக் கொண்டிருந்தார்.

வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன் றோட் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. அடுத்தநாள் மாவீரர்நாள் என்பதால் விடுதலைப்புலிகள் தமக்கு ஏதும் செய்து விடுவார்களோ என்று கிலி கொண்ட இராணுவத்தினர் ரவுண் வீதிகளில் கண்ட எல்லா அப்பாவித் தமிழர்களையும் தடுத்து நிறுத்தி வீதிகளில் இருத்திக் கொண்டிருந்தார்கள்.

கடமை முடித்து வந்த அந்த மருத்துவரையும் இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி, ரவுணுக்குள் இருத்தி வைத்திருப்பது தெரியாமல் பதைபதைக்கும் நெஞ்சுடன் செல்லம் கேற்றுக்கும், கட்டிலுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தாள். கனகரின் அரற்றல் அவர் மூச்சோடு மெதுமெதுவாக முடங்கத் தொடங்கியது. அவர் திணறிக் கொண்டிருந்தார்

சந்திரவதனா
ஜேர்மனி

Saturday, May 24, 2008

நினைவு நதியிலிருந்து ஒரு துளி

நினைவு நதியிலிருந்து ஒரு துளி
(1997 ம் ஆண்டு கார்த்திகை மாதம்,
உயிரோடு போராடிக் கொண்டிருந்த எனது அப்பாவைச் சந்திக்க வவுனியா சென்றிருந்த போது)

போர்வையை இழுத்து இழுத்துப் போர்த்திய போதும் நுளம்பு என்னைச் சுற்றிச் சுற்றிக் குத்திக் கொண்டே இருந்தது. ஏற்கெனவே காற்றைக் கிழித்து இரவின் நிசப்தத்தைக் குலைத்துக் கொண்டு செல்லும் ஷெல்கள் எங்கே இந்த யன்னலைப் பிளந்து கொண்டு வந்து என் தலையைப் பதம் பார்த்து விடுமோ என்ற அச்சம் என்னைத் தூங்க விடாது தடுத்துக் கொண்டிருந்தது. நுளம்பு வேறு தொல்லையாய்..!

நுளம்புத் திரி எரிந்து கொண்டுதானிருந்தது. நுளம்பும் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தது. எனக்குத் தனது கட்டிலைத் தந்து விட்டு கீழே பாயில் படுத்திருக்கும் சர்மிளா நித்திரையிலும் காலை இழுத்து இழுத்துச் சொறிந்து கொண்டிருந்தாள். அவளது அம்மா புவனாவுக்கு நுளம்பே குத்தவில்லையோ? குறட்டைச் சத்தத்துடன் ஆழ்ந்து உறங்கியிருந்தாள். எப்படித்தான் அவளால் இப்படி உறங்க முடிகிறதோ? ஷெல்லும், நுளம்பும் இவளை ஒன்றுமே செய்யவில்லையோ!

எனது கண்கள் அறையின் இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்துக்குப் பழகிப் போய் விட்டதால் அறையை வடிவாகப் பார்க்க முடிந்தது. ஐந்து அறைகளும் குசினியும் கொண்ட இந்த வீட்டில் இதுதான் பெரிய அறை. ஈழத்தின் பல்வேறு திக்குகளிலிருந்தும் புலம்பெயர்ந்த ஐந்து குடும்பங்கள் இங்கு வசிக்கிறார்கள்.

பக்கத்து அறையில்தான் அம்மாவும், அப்பாவும். அது ஒரு குச்சியறை. அதையே அம்மாவின் சேலையைத் திரைச்சீலையாக்கி இரண்டாகப் பிரித்து, பின்பக்கம் உடுப்பு மாற்றுமிடமும், சமையலறையும் ஆக்கி முன்பக்கம் கட்டில், மேசை, இரண்டு கதிரைகள். கால் வைக்க இடமில்லை. மூன்று பேர் நிற்கலாம். மூன்றாவது நபர் படுக்க இடமில்லை.

அம்மாவும், அப்பாவும் புவனாவுடன் கதைத்து நான் படுப்பதற்கு அவளின் அறையை ஒழுங்கு செய்திருந்தார்கள்.

'நான் கீழே பாயில் படுக்கிறேன்' என்று எவ்வளவோ சொல்லிப் பார்ததேன்.

'என்ன சொல்லுறிங்கள்? ஜேர்மனியிலை இருந்து வந்து, இங்கை பாயிலை படுக்கப் போறிங்களோ?' புவனா ஒரேயடியாக மறுத்து என்னைக் கட்டிலில் விட்டு விட்டாள். உணவுவிடுதிகளும், பிற்சேரியாக்களும்... என்று எம்மவர் வெளிநாடுகளில் படும் பாடுகள் பற்றிச் சொன்னால் இவர்கள் புரிந்து கொள்வார்களா?

எனக்குக் கட்டிலைத் தந்து விட்டு புவனாவும், சர்மிளாவும் கீழே பாயில் படுத்திருப்பது எனக்கு சங்கடத்தையே தந்தது. புவனாவுக்கு என் வயதுதான் இருக்கும் போலிருந்தது. சுவரெல்லாம் படங்கள் கொழுவியிருந்தன. அவள், அவளது கணவன், சர்மிளா மூவரும் சேர்ந்த படங்கள்தான் நிறையத் தெரிந்தன. தெரியாத முகங்களுடனும் சில படங்களில் புவனா சிரித்தாள். படத்தில் பொட்டும், நீண்ட கூந்தலுமாய் அழகாகத் தெரிந்த புவனா இப்போது குட்டையாக வெட்டிய கூந்தலுடன், பொட்டின்றி ஆனால் கலகலப்பாய் இருந்தாள்.

அறைக்குள் முழுக்க முழுக்க வெளிநாட்டு வாடையுடனான பொருட்கள். கணவர் வெளிநாட்டில் என்றால் தலையையும் குட்டையாக வெட்ட வேணுமா? எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

மீண்டும் காற்றைக் கிழித்த ஷெல் ஒன்றில் வெலவெலத்து நினைவுகளைக் கலைய விட்டேன். ´ஜேர்மனியில் விட்டு வந்த எனது கணவர், குழந்தைகளிடம் உயிரோடு திரும்பிப் போய்ச் சேருவேனா?´ பயத்தில் கலங்கினேன்.

காற்றைக் கிழிக்கும் ஷெல், என் குருதியின் சுவை கண்டு என்னையே சுற்றிச் சுற்றி ரீங்கரிக்கும் நுளம்பு, இரண்டுமே என் தூக்கத்தோடு சவால் விட்டும் எப்போது தூங்கினேனோ தெரியவில்லை. தூங்கி விட்டேன்.

´சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ரோங்கா...´ வர்த்தக சேவை இனிமையாக இசைக்க, சர்மிளா அதை மீறிய சத்தத்துடன் பாடிக் கொண்டு உள்ளே நுழைந்த போதுதான் நான் விழித்துக் கொண்டேன். சர்மிளாவினதும், புவனாவினதும் பாய்கள் மூலையில் சுருட்டி வைக்கப் பட்டிருந்தன. சுவர் மணிக்கூடு 7.30 காட்டியது.

'குட்மோர்னிங், சங்கவியக்கா. நித்திரையைக் குழப்பிப் போட்டனோ?' சங்கடத்துடன் கேட்டாள் சர்மிளா.

குளித்திருந்தாள். நெற்றியிலும், காதடியிலும் சுருண்டிருந்த கேசங்களில் ஒட்டியிருந்த தண்ணீர் சொட்டுச் சொட்டாகச் சிந்த அவள் முகம் பளிச்சென்றிருந்தது. வெள்ளைச் சட்டை அவளை இன்னும் அழகாகக் காட்டியது. பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகியிருந்தாள்.

'குட்மோர்னிங், சர்மிளா. 7.30 ஆகீட்டுது. நானும் இனி எழும்பத்தானே வேணும்.'

ஜேர்மனியின் நேரமும், தாயக நேரமும் மாறியது மட்டுமல்லாமல் தாயகத்தின் அசாதாரண நிலையும் சேர்ந்து நான் நன்றாகக் குழம்பித்தான் போயிருந்தேன். தூக்கமும் நேரம் மாறித்தான் என்னைத் தொட்டிருந்தது.

வாரிச் சுருட்டிக் கொண்டு நான் எழும்பிய போது புவனா வெளிர்நீலச் சேலைக்கு வெளிர் நீல மேற்சட்டை அணிந்து கொண்டு அறையினுள் நுழைந்தாள். பார்க்கவே ஆசையாக இருந்தது. மருத்துவ விடுதியில் தாதியாக வேலை செய்கிறாளாம். அதனால்தான் வெளிர்நீல ஆடைகள்.
சேலைக்கு அவள் உடம்பு மிகவும் அழகாக இருந்தது. நீண்ட கூந்தல் என் நினைவுகளில் மிதக்க அறையை விட்டு வெளியில் வந்தேன்.

அப்பாவும், அம்மாவும் தேநீர் அருந்தியபடி எனக்காகக் காத்திருந்தார்கள்.
'என்ன பிள்ளை, நல்லா நித்திரை கொண்டியே?' அப்பா வாஞ்சையுடன் கேட்டார்.

'ஓமப்பா நித்திரை கொண்டனான்தான். ஆனால் ஒரே நுளம்பு. ஷெல் வேறை.'

முற்றத்து ரோஜாக்களும், குரோட்டன்களும், கண்ணுக்குக் குளிர்ச்சி தர, மல்லிகை மணம் மனசையே மணக்க வைக்க, கதைத்த படியே வீதியை நோக்கினேன். வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன் ரோட் காலைப்பொழுதுக்கே உரிய சுறுசுறுப்புடன் களை கட்டியிருந்தது. வெள்ளைச் சட்டை அணிந்த இளஞ்சிட்டுகளும், சிறார்களும் கதைத்தபடி, சிரித்தபடி பாடசாலைக்கு விரைந்து கொண்டிருந்தார்கள். முதல்நாள் இரவு பெரிய சத்தங்களைத் தொடர்ந்து பறந்த வாழை மொத்திகள் போன்ற ஷெல்களைப் பற்றியோ, அவை எங்கெங்கு வீழ்ந்து வெடித்தன என்பது பற்றியோ அவர்கள் பேசிக் கொண்டதாகத் தெரியவில்லை. முதலிலேயே பேசி முடித்திருப்பார்களோ? அல்லது ஷெல்களும், சாவுகளும் அவர்களுக்கு சாதாரணமாகி விட்டனவோ? கூட்டிய குப்பைகளைக் கொட்ட வந்த நடுத்தர வயதான பெண்மணிகளும், ஒரு சில ஆண்களும்தான் இவைபற்றி ஆங்காங்கு நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

சர்மிளா ஒற்றைப் பின்னலை இரட்டைப் பின்னலாகப் பின்னிக் கட்டிக் கொண்டு சைக்கிளில் இருந்த படியே 'போட்டு வாறன் அக்கா' என்றாள். மாலையில் அவள் காதில் தொங்கிய தொங்குட்டானகளை இப்போது காணவில்லை. பூந்தோட்டம் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாளாம். எந்த ஆடம்பரங்களுக்கும் அங்கு இடமில்லையாம்.

வலது பக்கம் திரும்பினால் குருமன் காட்டுச் சந்தியில் நிற்கின்ற இராணுவத்தினரின் தரிசனம் கிடைக்கும். அவள் இடது பக்கமாகச் சைக்கிளைத் திருப்பி உழக்கினாள். 12வயதுதான் என்று சொல்ல முடியாத அளவுக்கு பருவம் அவளைத் தாராளமாக வளர்த்திருந்தது.

அவள் போகவும் பேப்பர்காரன் வந்தான். தினமுரசு, ராணி, தென்செய்தி, மித்திரன் நான்கையும் அப்பாவிடம் கொடுத்துச் சென்றான். பங்கர் சண்டைகள், பறக்கும் ஷெல்கள், பாயும் அணிகள், புலிகளுக்கு பிரேமா தூது, பூந்தோட்டப் பள்ளிக் கூடத்தில் இருந்து விசாரணையின் பேரில் மாணவி கடத்தல், கண்டி வீதியில் கட்டித் தொங்க விடப்பட்ட நிலையில் மரணித்திருந்த இளைஞன், முச்சக்கர வண்டி கவிண்டதில் ஸ்தலத்திலேயே மரணித்த சாரதி.. என்ற தலைப்புச் செய்திகளுடன் அஜீத்தின் சினிமாப் பிரவேசம் பற்றியும் பத்திரிகைகள் பறைசாற்றின.

வாசித்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்து சில வீடுகள் தள்ளி குடு;ம்பத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இமானுவெல், தான் இன்று மதியச் சாப்பாடு கொண்டு வருவதாக நேற்றே சொல்லியிருந்தாராம். மணக்க மணக்க கோழிக்கறியும், கத்தரிக்காய் வெள்ளைக்கறியும், முருங்கைக்காய் பிரட்டலும், சம்பாஅரிசிச் சோறும் கொண்டு வந்தார். குருமன் காட்டுச் சந்திப்பக்கம் போகாமல் பிள்ளையார் கோயில் பின்பக்கக் காணிக்குள்ளால் வருவதாகச் சொன்னார்.

கருவேப்பிலை கமகமக்க, மதிய உணவு சுவைத்தது. ஜேர்மனியில் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருக்கும் கோழிகளையே சமைத்துச் சுவைத்த நாவும், வாயும் ஊர்க்கோழியின் சுவையில் சப்புக் கொட்டின.

ஜேர்மனியில் இருந்து வந்திருக்கிறேன் என்றதில் அங்கிருந்த ஒவ்வொரு குடும்பமும் முறை வைத்து சாப்பாடு கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். பாதிக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்கள் என்ற ஒரு உறவைத் தவிர வேறு எந்த சொந்தமும் இல்லாத அவர்களது உறவுப் பிணைப்பும், உதவும் மனப்பாங்கும் என்னை நெகிழவும், மகிழவும் வைத்தன.

சாப்பாடு முடித்து இமானுவெலோடு கதைத்துக் கொண்டிருக்கும் போது நான்கு வீடு தள்ளியிருக்கும் வேதாரணியம் ஐயாவும் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார். வற்றாப்பளையிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவராம். சிறிது நேரத்தில் இந்த வீட்டிலேயே குடியிருக்கும் கருணா அன்ரியும் எங்களுடன் இணைந்து கொண்டார். அவரும் யாழ்ப்பாணம்தான். இரண்டு வருடங்களின் முன் 1995இல் தாண்டிக்குளம் தாண்டும் போது கணவர் தவறி விட்டாராம். இதுவரை எந்தத் தகவலுமே இல்லையாம். உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது கூடத் தெரியாதாம்.

1996 ஆம் ஆண்டு,செப்டெம்பர் 7ஆம் திகதி க.பொ.த (உயர்தரம்) பரீட்சை முடிந்து பாடசாலையிலிருந்து சைக்கிளில் வீடுநோக்கிச் சென்று கொண்டிருந்த பொழுது யாழ்ப்பாணம்-கண்டி வீதியில் செம்மணி காவலரண் அருகில் சோதனை என்ற பெயரில் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுப் பின்னர் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி கருணா அன்ரியின் சொந்தகாரப் பிள்ளையாம். நடந்து முடிந்த அந்தக் கொடுமையை மீண்டும் ஒரு முறை அவர் விபரித்தார். கண்களில் நீர் கோர்த்தது. தொட்டுத் தாவிய கதைகள் உணவு போலச் சுவைக்கவில்லை. மனதைச் சுமையாக அழுத்தின.

கதைகள் முடிந்து ஆளாளுக்கு அந்த இடத்தை விட்டுக் கலைந்த போது நேரம் மதியத்தைத் தாண்டியிருநந்தது. அந்தப் பொழுதில் திடீரென்று ஒரு வாகனம் வீட்டு வாசலில் வந்து நின்றது. பூந்தோட்டம் பாடசாலையில் இருந்து வந்து புவனாவைத் தேடினார்கள். புவனா வேலை செய்யும் இடத்தை அப்பா சொல்ல அவசரமாகத் திரும்பினார்கள்.

ஒரு மணி நேரம் சென்றிருக்கலாம். மீண்டும் அந்த வாகனம் வந்து நிற்க புவனா வந்திறங்கினாள். கூடவே சர்மிளா வந்தாள். கொஞ்சம் அசௌகரியமான உணர்வுகள் கலந்த முகத்தில் வேதனை ரேகைகளும் படிந்திருந்தன.

சர்மிளா பெரிய பிள்ளiயாகி விட்டாளாம். அம்மா, அப்பாவும், கருணா அன்ரியும் சந்தோசப் பட்டார்கள். பிள்ளையைக் குளிக்க வாருங்கோ என்றார்கள்.

புவனாவின் முகத்தில் சந்தோசமே இல்லை, வழமையான கலகலப்பையும் காணவில்லை. எதையோ பறிகொடுத்தவள் போலத் தவித்தாள். அம்மாவைக் கூப்பிட்டு பின்வளவுக்குள் இருக்கும் கிணற்றடியில் வைத்து சர்மிளாவுக்குத் தண்ணீர் வார்த்தாள். 'அப்பா இல்லாத இந்தப் பிள்ளையை எப்பிடிப் பாதுகாக்கப் போகிறேன்' என்று முனகினாள்.

'அப்பா இல்லாத..?' சட்டென்று விளைந்த ஆச்சரியத்தோடு நிமிர்ந்தேன் நான்.

„ம்.. மதவாச்சியில் எப்போதோ வெட்டிப் பிளக்கப் பட்டு விட்டார்.' கருணா அன்ரிதான் அவசரமாய்ச் சொன்னார்.

'கிருஷாந்திக்கு நடந்தது தெரியுந்தானே. அதுதான் நெஞ்சு பதறுது' என்றாள் புவனா.

தொடர்ந்த நாட்களில் சர்மிளா பெரியபிள்ளையாகி விட்டதை யாரும் யாருக்கும் சொல்லவில்லை. வீட்டுக்கு வருவோர் போவோருக்கெல்லாம் அவளுக்கு நல்ல காய்ச்சல் என்றுதான் புவனா சொல்லிக் கொண்டிருந்தாள். என்னையும் அப்படித்தான் சொல்லச் சொன்னாள். சிலரை சர்மிளாவுக்கு மலேரியாக் காய்ச்சல் போல இருக்கிறது என்றும் நெருப்புக் காய்ச்சல் போல இருக்கிறது என்றும் சொல்லி வீட்டு வாசலையே மிதிக்க விடாமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தாள். தொலைத்தொடர்பு நிலையத்துக்குச் சென்று சவுதியில் இருக்கும் தனது தம்பிக்கு மட்டும் விடயத்தைச் சொல்லி வந்தாள். புவனா சில சமயங்களில் புதிராகவே இருந்தாள். சில இரவுகளில் காணாமல் போயிருந்தாள்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடம் அது. பாஸ், அனுமதி... என்று பல கெடுபிடிகள். ஆனாலும் இடையிடையே எழிலன் என்றொரு இளைஞன் அம்மா, அப்பாவிடம் வந்து போய்க் கொண்டிருந்தான். அவனை மருமகன் என்று தான் அம்மாவும், அப்பாவும் மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்திருந்தார்கள். அறைக்குள் நின்று கதைக்கும் போதுதான் அவனது இடுப்பின் இருபக்கங்களிலும்; சொருகியிருந்த கைத்துப்பாக்கிகளும், கழுத்தில் தொங்கிய சயனைட்டும் அவனை எனக்கு இனம் காட்டின.

சில நாட்களில் அந்த வீடும், வாசலும், வீதியும் ஓரளவு எனக்குப் பழக்கமாகியிருந்தன. பயம் இருந்தாலும் அந்த வீட்டு வளவுக்குள் அனிச்சையாகத் சுற்றித் திரியத் தொடங்கியிருந்தேன். காய்த்துக் குலுங்கும் முருங்கை மரங்களும், குலை இறக்கியிருக்கும் வாழை மரங்களும்.. பூக்களும், செடிகளும், விதம்விதமான குரோட்டன்களும்... என்று வளவு முழுக்க செழித்திருந்தன. பகலில் வெயிலும், மாலையில் சொல்லி வைத்தாற் போல் பெய்யும் மழையும்தான் வளவு நிறைந்த மரங்களின் மதாளிப்பிற்குக் காரணமாக இருக்க வேண்டும்.

இயற்கையோடு இசைந்து, அந்த ரம்மியமான சூழலோடு நான் இணைந்திருந்த ஒரு மாலைப்பொழுதில் சிந்தனைகளைச் சிதறடித்து, உணர்வுகளை உறைய வைக்கும் படியாக திடீரென்று ஒரு பாரிய சத்தம். தொடர்ந்து துப்பாக்கி வேட்டுக்கள். சைக்கிள்களும், ஓட்டோக்களும் அசுர வேகத்தில் எதிரும் புதிருமாகப் பறந்தன. கூடவே 'கண்டி றோட்டில் இராணுவ வாகனத்துக்கு மேல் ஆரோ குண்டு வீசி விட்டார்கள் ' என்ற செய்தி பறந்து பரவிக் கொண்டிருந்தது.

எழிலனின் சைக்கிள் வந்த வேகத்தில் ரயர் நிலத்தோடு தேய வீட்டு வாசலில் நின்றது. ஓடி வந்து கதிரையில் அமர்ந்து அவசரமாக தினமுரசைப் படிக்கத் தொடங்கினான். இல்லை படிப்பது போலப் பாசாங்கு செய்தான். அவனுக்கு மூச்சு வாங்கியது.

'நீதானே எறிஞ்சிட்டு வந்திருக்கிறாய்?' அப்பாதான் கேட்டார்.

அவன் அர்த்தமான முறுவலோடு அப்பாவைப் பார்த்து விட்டு கண்களைத் தாழ்த்திக் கொண்டான். அவன் தினமுரசைப் படிக்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

திடீரென்று கருணா அன்ரி ஓடி வந்து 'தம்பி...! வாறாங்கள்' என்றார். மின்னல் வேகம் என்பதை அப்போதுதான் பார்த்தேன். ஒற்றைச் செருப்பு சரியாகக் காலுக்குள் கொழுவுப் படவில்லை. இழுத்துக் கொண்டு ஓடியவன் குருமன் காட்டுச் சந்திக்கு எதிர்ப்பக்கமாக சைக்கிளில் பறந்து விட்டான்.

கண் மூடி முழிக்க முன் வைரவர் புளியங்குள ஸ்ரேசன் றோட் இராணுவத்தின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபட்டது. வீட்டைச் சுற்றிலும் துப்பாக்கிகள் ஏந்திய இராணுவம். வீட்டுக்குள் ஓவ்வொரு அறையும் கிண்டிக் கிளறித் தேடப் பட்டன. . சர்மிளா அர்த்தத்தோடு பார்க்கப் பட்டாள். பின்னர் கைகளால் தடவியும் பார்க்கப் பட்டாள். அம்மா, அப்பாவின் குச்சியறைக்குள் நான்கு பேர் புகுந்து நாசம் பண்ணினார்கள். சாப்பாடுகளைக் கூடத் திறந்து கிண்டினார்கள்.

என்னை அவர்கள் கேள்விக் குறியோடு பார்த்தார்கள். மரணப் படுக்கையில் இருந்த அப்பா சிங்களத்தில் ஏதோ சொல்ல ஒவ்வொருவராக அறையை விட்டு வெளியில் போய்க் கொண்டிருந்தார்கள்.. பக்கத்து வீடுகளுக்குள்ளும் பாய்ந்து தேடினார்கள்.

தேடுதல் வேட்டை முடிந்து அவர்கள் போனபின் எல்லாம் அமைதியாயிற்று. அப்பாவும், அம்மாவும் பெருமூச்சு விட்டு தம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்கள். அப்போதுதான் கவனித்தேன். கேற்றுக்குப் போகும் வழியில் எழிலனின் ஒற்றைச் செருப்பு கவிழ்ந்து வீழ்ந்திருந்தது.

எழிலன் பிடிபட்டிருப்பானோ? நான் தவித்தேன்.

„அவனை இவங்கள் எங்கை பிடிக்கிறது! அவன் ஓடித் தப்பியிருப்பான்.' அப்பா உறுதியாகச் சொன்னார்.

சந்திரவதனா
ஜேர்மனி
24.5.2008