Sunday, August 06, 2006

செட்டை கழற்றிய நாங்கள்

- எனது பார்வையில் -

95 இல் பதிவாக்கப் பட்ட ஒரு கவிதைத் தொகுதி ஆறு வருடங்கள் கடந்து ஏழாவது வருடம் என் கரம் வந்து குந்தியதில் எனக்கு நிறையவே மகிழ்ச்சி.

செட்டை கழற்றிய நாங்கள், கவிதைத் தொகுப்பின் தலைப்பே ஒரு கவிதை போல, ஆனால் சோகத்தைத் தனக்குள்ளே நிரப்பி வைத்திருப்பது போன்றதொரு பிரமையை எனக்குள் தோற்றுவித்தது.

சிறிய தொகுப்பு ஆனாலும் தனக்குள்ளே புலம்பெயர் அவலங்களையும், புலம் பெயர மறுத்த நினைவுகளையும் நிறைத்து வைத்திருக்கிறது தொகுப்பு.

இக்கவிதைத் தொகுப்பு, இருப்பை இடம் பெயர்த்து சுவிசுக்கு மாற்றி விட்டு, அங்கு விருப்போடு அமர முடியாது தவிக்கும் பாலமோகன் எனப்படும் ரவியின் கவிதைகளால் தொகுக்கப் பட்டுள்ளது.

1995 இல் பதிக்கப் பட்ட இத் தொகுப்புக்கான முகவுரையை அ.மார்க்ஸ் அவர்கள் எழுதியுள்ளார்.

தற்போதைய புலம்பெயர் தமிழர்களின் நிலையை விட ஆரம்பகாலப் புலம் பெயர் தமிழர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியதாகவே இருந்தது. அதை நான் முன்பும் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தேன்.

அந்தப் பரிதாபத்துக்குரிய புலம் பெயர் தமிழர்களில் இந்தக் கவிதைத் தொகுப்பின் கவிதைகளைப் புனைந்த பாலமோகன் ஆகிய ரவி அவர்களும் ஒருவர் என்றே எனக்குத் தோன்றுகிறது. புலம் பெயர்வு அவருக்குள் ஒரு புயலையே ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

சொந்த மண்ணின் நினைவுகள் அவரை மிகவும் அலைக்கழித்திருப்பது அவர் வடித்த கவிதைகளின் வீச்சில் தெரிகிறது. மிகவும் தரமான கவிதைகள். இன்னதென்று பிரித்துச் சொல்ல முடியாத படியான ஒரு ஆழ்ந்த தேர்ச்சியும் நிறைவான வளமும் அவர் கவிதை நடையில் தெரிகிறது.

அவர் கவிதைகளை வாசிக்கும் போது, நீண்ட நாட்களாகக் கவிதை எழுதுவதையே மறந்து உறங்கியிருந்த எனது கற்பனைப் பறவை மெல்ல இறகு விரிக்க எத்தனிக்கிறது. உறைந்து போயிருந்த என் பேனாமை மீண்டும் ஊற்றெடுக்கத் தொடங்குவது போல ஒரு ஆனந்தம் எனக்குள். ஏதோ ஒரு சக்தி அவர் கவிதைகளுக்குள் இருப்பதை என்னால் உணர முடிகிறது. அதை எழுத்தில் வடிக்கத்தான் என்னால் முடியவில்லை. எழுத்தார்வமும், வாசிப்புத் தாகமும் கொண்டவர்கள் கண்டிப்பாக இத் தொகுப்பை வாசித்துப் பார்க்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

ரவி தன்னுரையில் இப்படிச் சொல்கிறார்,
"இது எனது முதல் கவிதைத் தொகுதி. சுமார் ஐந்து ஆண்டு கால இடைவெளிக்கு உள்ளான கவிதைகள் இவை. கடந்தகால கசப்பான சமூக அனுபவங்கள், இதன் தாக்கங்கள், வேரறுந்த இன்றைய அகதி வாழ்வு என்பன உணர்வு நிலையில், இந் நிலைமையில் உள்ள எல்லோரையும் போலவே, என்னைப் பாதிக்கிறது. இவற்றைக் கவிதையில் பதிவு செய்வது திருப்தி தருகிறது. "

என்று தொடங்கி... தொடர்ந்து,
கவிஞனின் உணர்வு நிலை உயர்ந்தது. அதை அர்த்தப் படுத்துவதற்கு வாழ்வியல் விதிமுறைகள் மீதான புரிதல்கள், தேவையாயின் அதன் மீதான தாக்குதல்கள் கூடத் தேவை. ஆதிக்க சக்திகள் மற்றும் அதன் நிறுவனங்களால் (அரசு, மதம், குடும்பம், பாடசாலை...) கட்டமைக்கப் பட்ட கருத்தியல்கள், புனைவுகள் மற்றும் வாழ்வியல் விதிமுறைகள் எல்லாவற்றையும் இயல்பானது என்று ஏற்றுக் கொள்ளும் ஒருவனின் உணர்வு நிலை கவலையையும் விரக்தியையும் தாண்டி விடப் போவதில்லை. எனது கவிதைகளும் இவற்றை முழுமையாய்த் தாண்டியதாயில்லை
என்று முடித்திருக்கிறார்.

இவரின் கவிதைகளில் சிறுவயது நினைவுகள், கனவுகள், இளமைக்கால பசுமையோடு பின்னிப்பிணைந்திருந்த தாயக ஏக்கங்கள், புலம்பெயர் மண்ணில் அந்நாட்டு மக்களது அந்நியன் என்றதான பார்வைகளை
எதிர் கொள்ள முடியாத தவிப்பு, நிறம் ஒரு குறையாக அவர்கள் பார்வைக்குள் தான் குறுகிப் போனதிலான இயலாமையுடனான கோபம்... என்று பலவிதமான ஆற்றாமைகள் புதைந்து கிடக்கின்றன.

அவைகளை எழுதிய விதம் மிகவும் அழகாக, கவிதைக்கே உரிய கவர்ச்சியுடன் மீண்டும் மீண்டும் அவைகளை வாசிக்கத் தூண்டுகின்றன.

புலம்பெயர்ந்தவர்கள் ஊரில் உள்ளவர்களுக்குப் பணம் அனுப்ப வேண்டிய ஒரு கட்டாய அவஸ்தையில் தம்மைத் தொலைப்பதைக் கூட அவர் கவிதையாக்கத் தவறவில்லை. அது பற்றியதான யாரொடு நோக... என்ற கவிதையிலிருந்து ஒரு சில வரிகள்,

நித்திரைப் பாயில் வைத்தே அமத்தும்
இந்த கொழும்பு ரெலிபோன் க்கு
விவஸ்தையே கிடையாது.
தனது காலில் தட்டுப் படும் எல்லாவற்றையும்
உதைத்து நொருக்கி
இருளில்
என்னை வந்து உலுக்கி எழுப்புகிறது.
மொட்டவிழும் போலிருக்கும்
என் சின்னச் சின்ன ஆசைகளைக் கூட
நுனிவிரலால் கிள்ளி எறிந்த படி
கைவீசி வருகிறது - ஒரு குழந்தைபோல்!
என்னால் கோபிக்கக் கூட முடிவதில்லை.
கடைவாயால் ஒழுகும் சிரிப்பும்
தேவைகளும்
எனது உழைப்பை அதிகம் கேட்டு
சுற்றி நின்று தொந்தரவு செய்யும்....

...சிலவேளைகளில் அது
நிதானமாய் வருவது போல
குரல் கொடுத்த படி வரும்.
எனக்கும் எனது அத்தான்மாருக்குமிடையில்
கால் மீது கால் போட்டு
அனுபவஸ்தன் போல் அமர்ந்து கொள்ளும்.
அத்தான்மாரின் புதியவிலை கேட்டோ
அல்லது பாக்கி விலை கேட்டோ
பேச்சைத் தொடங்கும்.
போதாததிற்கு தன்னுடன் யதார்த்தத்தை
அழைத்து வருகிறது,
தலையாட்டுவதற்காக.
எனது நியாயங்களை
இருவருமாய்த் தின்றுதீர்ப்பது
அத்தான்மாருக்கு மகிழ்ச்சியளிக்கிறது -
எனது சகோதரிகளுக்குங் கூடத்தான்!

காலைப் பொழுது என்னை எடுத்துப்
பிணைத்துக் கொள்வதில் அவசரப்படுத்தும்
நானோ இவர்களுக்கு வழி சொல்லியாக வேண்டும்.
இந்த இழுபறியில்
எனது இடைவெளி நேரங்களும்
விழுந்து நொருங்கும்.

30 கவிதைகளைத் தன்னகத்தே கொண்ட இக்கவிதைத் தொகுதியில் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் உயிரோட்டமான ஒவ்வொரு விதமான உணர்வுகளும் நெகிழ்வுகளும் நிகழ்வுகளும் இருக்கின்றன.

மெழுகுதிரியில் அமர்ந்திருக்கும் தீபத்தைக் கூட அவர் விட்டு வைக்கவில்லை. அந்தத் தீபத்தின் மீதான அவரது பிரசவிப்புகள் என்ற கவிதை சுவையானது. சுகமானது. ஆனால் ஆழ்ந்து, கருத்தை உணர்ந்து வாசிக்கும் போது இருப்பை இழந்த அவரது சோகம் தெரிகிறது. (பக்கம்-39-40)
பிரசுரமாகும் கடிதம் என்ற கவிதை - 83 யூலைக் கலவரத்தில் தமிழர் கப்பலேற்றப் பட்ட போது, ஒரு சிங்களப் பெண்ணுடனான சினேகமான உறவும் கப்பலேற்றப் பட்டதைச் சொல்கிறது.

இப்படியே இவரது ஒவ்வொரு கவிதையும்... அர்த்தங்களுடன் கவிதை நயம் குன்றாமல் அருமையாகப் புனையப் பட்டுள்ளது.

இருந்தாலும், இத்தொகுப்பைப் பற்றியதான எனது அபிப்பிராயத்தின் ஒரு துளியையே என்னால் இங்கு தர முடிந்தது. அது ஒரு குறையாக அமையாது என்ற நம்பிக்கையுடன் தற்போதைக்கு முடிக்கிறேன்.

சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி
2002

பூவரசு - பன்னிரண்டாவது நிறைவுமலர்

எனது பார்வையில்

இணையப் பத்திரிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று எல்லோரும் கணினிக்குள் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் பதிப்புகள் மீதான ஈர்ப்பு எம்மவரிடையே சற்று ஸ்தம்பிதமடைந்து போயுள்ளன. இதனால் துளிர்த்த வேகத்திலேயே கருகிக் காணாமற் போன சஞ்சிகைகள் பல.

தேர்ந்தெடுக்கப் பட்ட நல்ல ஆக்கங்களைக் கொண்டு உலகளாவிய ரீதியில் தொகுக்கப் பட்ட மிக அருமையான தொகுப்புக்கள் கூட குறுகிய வட்டங்களுக்குள்ளேயே உலா வந்து ஒரு கட்டத்தில் உரிமையாளர்களின் வீடுகளில் உறங்கிப் போன கதைகள் கூட ஏராளம். சந்தைப் படுத்தலில் உள்ள சிக்கலால் பதிப்புகளைத் தொகுப்பவர்களும், சஞ்சிகைகள், பத்திரிகைகளை வெளியிடுபவர்களும் பணவிடயத்தில் பாரிய பிரச்சனைகளைச் சந்தித்துச் சோர்ந்து போன கட்டங்களும் உண்டு.

இப்படியான பிரச்சனைகளைப் புலம் பெயர்ந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளின் உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பூவரசு தனது 12 அகவைகளை மகிழ்ச்சிகரமாக நிறைத்து 13 வது அகவையில் காலடி வைத்திருப்பது மிகப் பெரிய சாதனையே!

இப்படியான சாதனைகளுக்கு வாசகர்களும், படைப்பாளிகளும் முக்கிய காரண கர்த்தாக்களாக இருந்தாலும், அவர்களை ஒன்று கூட்டி, அவர்களோடு இசைந்து புலம்பெயர் வாழ்வில் முகம் கொடுக்க வேண்டிய எத்தனையோ பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு சஞ்சிகையை வளர்த்தெடுப்பது என்பது சுலபமான விடயமல்ல. ஆனால் பூவரசு சஞ்சிகை ஆசிரியர் இந்துமகேஷ் அவர்கள் அந்தச் சாதனையைச் செய்துள்ளார். அவர் வளர்த்தது பூவரசை மட்டுமல்ல. புலம்பெயர் மண்ணில் இலைமறைகாய்களாக இருந்த எத்தனையோ எழுத்தாளர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, பூவரசின் ஊடாக அவர்களையும் வளர்த்து விட்டிருக்கிறார்.

அதே நேரம் வருடந்தோறும் எழுத்தாளர்களுக்கு உற்சாகமூட்டக் கூடிய வகையில் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள், என்று நடாத்தி வளரும் எழுத்தாளர்களை பூவரசு மூலம் ஊக்குவிக்கவும் இவர் தவறுவதில்லை.

அந்த வகையில் 12 வது வருடத்தை நிறைத்து 13வது வருடத்தில் மகிழ்வோடு காலடி எடுத்து வைத்திருக்கும் இந்தப் பூவரசுவும், வழமையான தைத்திங்கள் இதழ்கள் போலவே பூவரசு நடாத்திய போட்டிகளில் முதற் பரிசு பெற்ற சிறுகதை, கட்டுரை, கவிதை என்பனவற்றைத் தாங்கி வந்தது மட்டுமல்லாமல், வாசகர்கள் பலரின் மனந் திறந்த பாராட்டுகள் சில பக்கங்கள் நிறைத்து நிற்க, இளந்தளிர்களுக்கான பிரத்தியேகமான இணைப்போடு.. 31 படைப்பாளிகளின் ஆக்கங்களை உள்ளடக்கி கண்ணா அவர்களின் தூரிகையின் வர்ணக் கோலங்களுடன் அழகாக வெளி வந்திருக்கிறது.

பூவரசின் வாசகர்கள் பல்வேறு நாடுகளில், பல்வேறு இயல்பு நிலைகளில் இருந்து கொண்டு ஆக்கங்களைத் தந்திருப்பதால் ஒவ்வொரு ஆக்கத்திலும் ஒவ்வோர் விதமான தனித் தன்மையும் சுவையும் கலந்துள்ளன.

ரவி செல்லத்துரை அவர்களும், வேலணையூர் பொன்னண்ணா அவர்களும் பொங்கல் கவிதைகள் மூலம் எல்லோரும் விரும்பும் நல்லனவற்றையே வேண்டி நிற்பது மங்களகரமாக உள்ளது.

பாரதியின் முதல் பரிசு பெற்ற நின்னைச் சில வரங்கள் சிறுகதை, வாசிக்கும் போது மனதைக் கனக்க வைக்கிறது. கதாசிரியரின் இந்த முயற்சி மிகவும் துணிகரமான ஒன்றே. எல்லோருமே பிள்ளைகளாக இருந்து கொண்டு தாயின் மீதான தமது உணர்வுகளைத்தான் கதைகளிலும், கவிதைகளிலும், கட்டுரைகளிலும் வெளிப்படுத்தி உள்ளார்கள். பாரதியோ ஒரு தாயின் ஸ்தானத்தில் போய் நின்று கொண்டு, மரணத்தின் வாயிலில் நின்று பிரிவின் துயர் தாங்காது மகளின் பாசத்தின் தரிசனத்துக்காய் ஏங்கும் ஒரு தாயின் உணர்வுகளை, நான் என்ற பார்வையில் எழுத முனைந்திருக்கிறார். ஒரு தாயின் அந்த நேரத்து முழு உணர்வுகளையும் தானாக நின்று கதைக்குள் கொண்டு வருவது மிகவும் கடினமானதொரு முயற்சியே!ஆனாலும் வார்த்தைப் பிரயோகங்களாலும் கதையை நகர்த்திய விதத்தாலும் ஒரளவு வெற்றியும் பெற்றுள்ளார். வித்தியாசமான கோணத்திலிருந்து எழுத முனைந்து வெற்றியும் கண்ட பாரதிக்கு பாராட்டுக்கள்.

த.பவானந்தராஜாவின் முதற்பரிசு பெற்ற விஞ்ஞானமும் மெய்ஞானமும் கட்டுரை, விஞ்ஞானத்துக்கும் மெய்ஞானத்துக்கும் இடையில் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை அழகாக விளக்கியுள்ளது. காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் போது பிரணாயாமம் ஒரு முறை நடந்து நிறைவேறும் விடயமும், அதை விஞ்ஞானிகளே ஒப்புக் கொண்ட தகவலும் வியப்பை ஏற்படுத்தியது.

அம்பலவன் புவனேந்திரனின் முதற்பரிசு பெற்ற எழுகின்ற நேரம் இது கவிதை, உறங்குபவர்களையும் அலட்சியமாக இருப்பவர்களையும் தட்டி எழுப்பும் விதமாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.

இலக்குமணணின் கோட்டில் புதிய இலக்கணம் கண்டு அதைக் கலாச்சாரக் கோடுகளின் ஆச்சார வீடுகள் என்று கவிதையாக்கிய மகேந்திக்கும் பாராட்டுக்கள்.

பிள்ளைகளைத் தள்ளி வைத்தே வளர்க்க வேண்டுமென நினைத்து தமக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தி வைத்திருக்கும் பெற்றோரின் தவறைச் சுட்டிக் காட்டியது மட்டுமல்லாமல் அவர்கள் பிள்ளைகளோடு நட்போடு பழக வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி நின்ற ஏ.ஜே.ஞானேந்திரனின் தோளுக்கு மிஞ்சினால் தோழன் கட்டுரை பயனானது.

தொலைக்காட்சிக்கு அடிமையாகிப் போயிருக்கும் எமது புலம் பெயர் தமிழர் பற்றியும், அதனால் பாதிப்படையும் அவர் தம் பிள்ளைகள் பற்றியும் நகுலா சிவநாதன் அவர்கள் பல மணி நேர தொலைக்காட்சி பாவிப்பால் பாதிப்படையும் சிறுவர்கள் என்ற சிறிய கட்டுரையில் வெளிப் படுத்தியிருந்தார். இது பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய அவசியமான ஒரு விடயமே. (ஆனாலும் இங்கு நகுலா சிவநாதன் அவர்களுக்கு ஒரு விடயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். யேர்மனியப் பாடசாலையில் பல ஆசிரியர்களைச் சுட்டுக் கொன்ற இளைஞனின் அந்தச் செயற்பாட்டுக்கு தொலைக்காட்சிதான் காரணமென்று விவரிக்கப் பட்டது ஒரு போலியான விவரணமே! உண்மையில் அந்த இளைஞன் அப்படி நடந்து கொண்டதற்குக் காரணமாக இருந்தவர்கள், பாடசாலையில் அவன் செய்த ஏதோ ஒரு சின்னத் தவறுக்காக அவனை Abitur எனப்படும் இறுதியாண்டுச் சோதனையை எழுத விடாது தண்டனை என்ற பெயரில் தடை செய்து, அவனை உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாக்கிய ஆசிரியர்களே!)

சிந்தனைச் செல்வர் எழிலன் அவர்கள் தந்த நான் எங்கு நிற்கிறேன் கட்டுரை, மரணத்தை எதிர் நோக்கும் ஆப்பிரிக்க சிறுவனை உணவாக்க கழுகு காத்திருக்கும் அவலத்தையும் இன்னும் பலவற்றையும் சொல்லி வாசிப்போரைச் சிந்திக்க வைப்பதாக அமைந்திருந்தது.

மேலும் அஞ்சுதலும் கெஞ்சுதலும் அகன்றதொரு ஆண்டாய் 2003 அமைந்திடவே கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் தந்த கைவிளக்கைக் கைப் பிடித்து காவலிலே ஊரான் பொங்கல் கவிதை

ஓலைக்குடில்கள் எரிகையிலே ஓரப்பார்வையேனும் வீசாதவர்கள் இப்போது ஈரப்பார்வை வீசுகிறார்களே என்று விசனப்பட்டு மட்டுவில் ஞானக்குமாரன் அவர்கள் தந்த போர்ப்பிரளயத்திலே கவி,

அர்த்தமில்லாத கொள்கைகளை அறுத்தெறியச் சொல்லி சுகந்தினி சுதர்சன் அவர்கள் தந்த குடித்தனம் புகுவாயோ கவிதை,

இ.சம்பந்தன் அவர்கள் தந்த மழை கவிதை,

வி.கந்தவனம் அவர்கள் தந்த காட்சி இன்பம் கவிதை,

ஜெயவதி எட்மன் அவர்கள் தந்த புது வருடம் கவிதை,

இந்துமகேஷ் அவர்கள் தந்த நான் எனும் நான் கவிதை,

மாலி ரமணன் அவர்கள் தந்த தென்றலுக்கு ஒரு விண்ணப்பம் கவிதை,

ஆகன்.எஸ்.பரம் அவர்கள் தந்த இப்படியும் இவர்கள் கவிதை,

சில்லையூர் சிங்கராயர் அவர்கள் தந்த இனிமை, கனிவு, பணிவு, துணிவு நமக்குத் தேவை,

ஜெயா நடேசன், சுஜி சீலன், செல்வா ஆகியோர் எம்மோடு பகிர்ந்து கொண்ட படித்த சுவையான பயனான விடயங்கள்,

சும்மா தந்த சும்மா,

சுதுவையூர் மூர்த்தி தந்த சும்மா வந்த சுமை,

நேர்மையைப் பற்றிப் பேசுறவங்ள் எல்லாரும் நேர்மையானவங்கண்ணு சொல்ல முடியுமா..? என்று ஆழமான கருத்துக்களையும் தந்து சமூகத்துள் ஆங்காங்கு நடைபெறும் பிரச்சனைகளையும் நாசூக்காகச் சுட்டிக் காட்டிய அப்பாசாமியின் புத்திசாலித் தனம்,

வீ.ஆர்.வரதராஜா அவர்கள் தந்த புதிய பரிமாணத்தில் ஒரு பரிணாமம்,

கனடாவிலிருந்து பாடலுக்குள் தேடல் செய்து அமலன் தந்த தமிழ்திரையிசை ஒரு கண்ணோட்டம்,

கலை ஞானத்தில் மட்டுமல்ல தமிழிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் 12 வயது நிரம்பிய செல்வன் சிவஞ்சீவ் சிவராமனின் திறமை,

என்று அனைத்து விடயங்களுமே தத்தமக்கே உரிய தனித்தன்மையுடன் பூவரசை மெருகேற்றியிருந்தன.

இறுதியாக, ஒரு எழுத்தாளர் கதையை ஆரம்பித்து வைக்க வாசகர்கள் கதையை வளர்த்துச் செல்லும் முயற்சியில் உருவான இனி அவர்கள் என்ற கதையைப் பார்ப்போம்.

இதில் நானும் ஒரு வாசகியாக நின்று கதையைத் தொடர்ந்த காரணத்தால் விமர்சனம் என்று முன் வைப்பதில் சற்று சிரமமாகத்தான் உள்ளது.

இந்து மகேஷ் அவர்கள் இந்த முயற்சி பற்றி என்னிடம் கூறிய போது
இப்படியான ஒரு தொடர் எழுதிய முன் அனுபவம் ஏதும் இல்லாத என்னால் எப்படி இதைத் தொடர முடியும்..? என்றுதான் நான் சங்கடப் பட்டேன். "உங்களால் முடியும்" என்று சொல்லி அவர் முதல் அங்கத்தை என்னிடம் தந்த போது அதை இராஜன் முருகவேல்தான் எழுதினார் என்பது எனக்குத் தெரியாது. இருந்தும் எனது கோணத்தில் பார்த்து நான் எனது இரண்டாவது அங்கத்தைத் தொடர்ந்தேன்.

ஆதவனிடம் அவனது தாய், யாதவன் பற்றிக் கேட்ட போது ஆதவன் கோபித்துக் கொண்டதும், தாய் மருமகளையோ பேரப் பிள்ளைகளையோ சம்பிரதாயத்துக்குக் கூட விமான நிலையத்தில் அணைக்காததும் சற்று விசனத் தனமாகவே எனக்குப் பட்டன. அதனால் என்னால் அந்த இடத்தைத் தொடவோ, அங்கிருந்து கதையைத் தொடரவோ முடியாதிருந்தது.

ஆனாலும் சாந்தினி வரதராஜன் அவர்கள் அதை நான் சற்றும் எதிர் பாராத கோணத்தில் பார்த்து அழகாகத் தொடர்ந்திருந்தார். ஒரு தாயின் ஏக்கத்தையும் யாதவனின் உணர்வுகளையும் மாற்றங்களையும் அழகாகத் தந்திருந்தார்.

அதைப் புஸ்பராணி ஜோர்ஜ் அவர்கள் தொடர்ந்து நகர்த்திய விதம் கூட நான் சற்றும் எதிர் பார்க்காததுதான். அவர் கதையை மிகவும் நீட்டியிருந்தாலும் வழமையான எம்மவர்கள் போல ஐரோப்பியர்கள் என்றாலே அன்பு பாசத்துக்கு அப்பாற் பட்டவர்கள் போன்றதான பிரமையைக் கதையில் புகுத்தாமல் ஐரோப்பியர்களின் மனதின் மென்மையையும் தன்மையையும் அழகாகச் சொல்லியிருந்தார்.

இரண்டாவது அங்கத்தை எழுதும் போது நதியா யேர்மனிக்கு வருவது போலவும் அதன் பின் புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்ப காலக் கஸ்டங்களை உணர்ந்து கொள்வது போலவுமே கற்பனை பண்ணி வைத்திருந்தேன். ஆனால் சாந்தினி, புஸ்பராணி ஆகியோரின் கதை நகர்த்தலில் அது பற்றி மறந்து கதையை வாசித்துக் கொண்டு போகும் போது, இந்து மகேஷ் அவர்கள் கதையின் இயல்பு நிலை மாறாமல் நதியாவை யேர்மனிக்கே கொண்டு வந்தது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

புலம் பெயர்ந்தவர்கள் மீது தப்பபிப்பிராயம் கொள்ளும் தாய்நிலத்தவருக்கு ஒரு படிப்பினையை ஏற்படுத்தக் கூடிய கதையாகக் கூட இனிஅவர்கள் அமைந்து விட்டது.

ஆனாலும் கதையைத் தொடக்கி வைத்த இராஜன் முருகவேல் அவர்கள் என்ன நினைத்துக் கதையைத் தொடங்கினார் எனவும், முடிவு எப்படி அமையும் என்று எதிர் பார்த்தார் எனவும் அறிய ஆவல்தான்.

சந்திரவதனா
யேர்மனி
9.3.2003


பிரசுரம் - பூவரசு (பங்குனி-சித்திரை 2003)

பூவரசு இனிய தமிழ் ஏடு - தை-2002

யேர்மனியில் இருந்து வெளியாகும் பூவரசு இனிய தமிழ் ஏடு
தை -2002
(ஒரு பார்வை)


பூவரசு என்றதும் மனதுக்குள் மின்னலிடும் நினைவுகள்தான் எத்தனை! இலையைச் சுருட்டி பீப்பி ஊதியதும், பம்பரக் காய் சுற்றியதும் மட்டும் அல்லாமல் மரங்களின் வட்டுக்குள் அப்பியிருந்த மயிர்க்கொட்டிகள் கூட ஞாபகத்தில் வந்து ஒரு தரம் மயிர்க்கூச்செறிய வைக்கின்றன. இவை மட்டுந்தானா..? எமக்குள்ளே உறங்கியும் உறங்காமலும் ஒளிந்திருக்கும் ஊரின் நினைவுகள் கூட ஒரு தரம் மீட்டப்பட்டு ராகமிசைக்கின்றன. அந்த சந்தோசத்துடனேயே நான் என்னை வந்தடைந்த பூவரசின் பக்கங்களைப் பக்குவமாகப் புரட்டத் தொடங்கினேன்.

நெற்றி வியர்வையைத் துடைத்த படி வேலை செய்யும் வேட்டியைத் தாறுபாய்ச்சிக் கட்டிய சிறுவர்களின் அழகிய கோலமும், பனைமரமும் முன் அட்டையை அழகு படுத்த பூவரசு தனது பதினொரு வருடப் பயணத்தை இனிதே நிறைத்திருந்தது.

1991 இல் தமிழ் வானொலிகளோ தொலைக்காட்சிகளோ இல்லாத ஐரோப்பிய மண்ணில் துளிர்த்த சஞ்சிகைதான் பூவரசு. காலத்தின் ஓட்டத்தில் எதிலும் ஒட்ட முடியாத புலம்பெயர் தமிழர்களின் பல்வேறு பட்ட பிரச்சனைகளின் மத்தியில் துளிர்த்த வேகத்திலேயே கருகிக் காணாமற் போன சஞ்சிகைகள் பல. இவைகளின் மத்தியில் பூவரசு 11 ஆண்டுகளை நிறைத்திருக்கிறது என்றால் நாம் முதலில் பூவரசு சஞ்சிகை ஆசிரியர் இந்துமகேஷ் அவர்களைத்தான் பாராட்ட வேண்டும்.

திரு இந்துமகேஷ் அவர்கள் தாயகத்திலேயே எழுத்துலகுக்கு மிகவும் பரிச்சயமானவர். இவரின் முதல் வீரகேசரிப் பிரசுரமான ஒரு விலை மகளைக் காதலித்தேன் என்ற குறநாவலை எழுத்துலகம் அத்தனை விரைவாக மறந்திருக்காது. அந்நாவல் அந்த நேரம் பலரைக் கவர்ந்தது மட்டுமல்லாமல் மிகுந்த சர்ச்சைக்கும் உள்ளானது யாவரும் அறிந்ததே.

எனக்குத் தெரிந்த வரையில் இவரது குறுநாவல்கள் பல வீரகேசரிப் பிரசுரங்களாக வெளிவந்துள்ளன. அதைவிட நாடக உலகிலும் இவர் கால் பதிக்கத் தவறவில்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாகினி போன்றவற்றிலும் இவரது நாடகங்கள் அரங்கேறி இருக்கின்றன. சங்கிலியன் மன்ற நாடகக் குழுவுடனும் இவர் நாடகங்களை அரங்கேற்றி இருக்கின்றார்.

தற்போது, புலத்திலும் பூவரசு தவிர்ந்த வேறு பத்திரிகைகளிலும் இவரது ஆக்கங்களைக் காண முடிகிறது. அதை விட பாடல்கள் எழுதி அதற்கு இசை வடிவம் கொடுப்பித்து ஒலி இழைப் பேழைகளிலும் பதிவாக்கியிருக்கிறார்.
இவர் கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதற்கு இவைகள் சான்றாயுள்ளன. அதனால்தான் அவரால் ஒரு சஞ்சிகையை இவ்வளவு மனஉறுதியுடன் 11 வருடகாலம் நடாத்த முடிந்திருக்கிறது.

சஞ்சிகையின் தரம் வளர்ந்து கொண்டே வருகிறது. புலம்பெயர்மண்ணில் பல எழுத்தாளர்களை உருவாக்கிய வளர்த்து விட்ட பெருமை, பல் வேறுபட்ட நாடுகளிலும் வாசகர்களைக் கொண்ட இந்தப் பூவரசுக்கு இருக்கிறது.

இன்னுமொரு குறிப்பிடப் பட வேண்டிய விடயம், வருடந்தோறும் எழுத்தாளர்களுககு உற்சாகமூட்டக் கூடிய வகையில் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள், என்று நடாத்தி வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்க
பூவரசு தவறுவதில்லை.

அந்த வகையில் 11 வது வருடத்தை நிறைத்த இந்தப் பூவரசும் போட்டி முடிவுகளைத் தெரிவித்துக் கலைஞர்களையும் கௌரவித்திருக்கிறது.

சஞ்சிகையை நடாத்துவது மட்டுமல்லாமல் அதன் ஒவ்வொரு வருட நிறைவையும் ஒரு விழாவாகக் கொண்டாடி எழுதுபவர்களை மட்டுமல்லாமல் மற்றைய கலைத்துறைகளில் உள்ளவர்களுக்கும் சந்தர்ப்பங்களைக் கொடுத்து ஊக்குவித்து பிறேமனையே ஒரு தமிழர்களின் கலைத்துறை சார்ந்த இடமாக்கிய பெருமை பூவரசு ஆசிரியருக்கு உண்டு.

இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், ஜேர்மனியின் பிறேமன் நகரில் வாழும் எம்மவர்களில் ஒருவரான ஒளிப்பதிவாளர் திரு பத்மகரன் அவர்கள் இம்முறைப் பூவரசில் கௌரவிக்கப் பட்டுள்ளார். இது மிகவும் வரவேற்கத் தக்க விடயம்.

எம்மவர் ஒருவர் திரைப்படத் துறையில் ஆர்வம் கொண்டு அதைக் கற்று நினைவுமுகம் என்ற தமிழ் திரைப்படத்துக்கு படப்பிடிப்பாளராக செயற்பட்டது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அதுமட்டுமா யேர்மனியின் தொலைக்காட்சியின் ARD யில் தொடர் நாடகங்களிலும் நடித்துள்ளார் எம்மவரான பத்மகரன். பூவரசு அதை எமது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

1992 இல் பூவரசின் 1வது ஆண்டு நிறைவை ஒட்டிய விழாவில், ஒரு தாளலயம் நாடகத்தில நடிக்க கிடைத்த வாய்ப்பே பத்மகரன் இந்தளவு தூரம் வளர்வதற்கு அத்திவாரமாக இருந்திருக்கிறது.

இப்படிப் பல்வேறுபட்ட சிறப்பம்சங்களைத் தன்னகத்தே கொண்ட இம்முறைப் பூவரசிலும் வழக்கம் போலவே கதை, கவிதை, கட்டுரை, சிறுவர்களுக்கான பகுதிகள், அங்கு இங்கு என்று பல இடங்களிலிருந்து பொறுக்கப் பட்ட பயனுள்ள செய்தித் துணுக்குகள், பழமொழிகள், பழங்கதைகள், பயனுள்ள தகவல்கள், கணினி பற்றிய தகவல்கள், "சும்மா" என்று சொல்லி சுவையான விடயங்கள், அப்பாவி அப்பாசாமியின் நாசூக்கான கருத்துப் பரிமாற்றங்கள் என்று பல்வேறுபட்ட விடயங்கள் இடம் பிடித்துள்ளள.

இடப்பற்றாக் குறை காரணமாக வழமையாக இடம் பெறும் சில விடயங்கள் இடம் பெறாதது கவலையே. குறிப்பாக 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனியில் கையெழுத்துப் பிரதியாக வெளிவந்த, புலம்பெயர்ந்தவர்களின் தவிப்பையும் கூடவே அவர்களை விட்டகலாத தாயக நினைவுளுடனான வாழ்வையும் மொத்தத்தில் புலத்தையும் தாயகத்தையும் தனக்குள்ளே கொண்ட மிகவும் சிறப்பான தொடராக வந்து கொண்டிருந்த, விடியலுக்கில்லை தூரம் என்ற குறுநவீனம இம்முறை சஞ்சிகையில் இடம் பெறாதது சற்று ஏமாற்றமே.

நா. தேவதாசனின் குறள் கவிதைகள் சுவையானவை. அவையும் இம்முறை இடம் பெறத் தவறிவிட்டன.

ஆனால் உலகப் பல்கலைக் கழகத்தின் The Cultural Doctorate in Philosophy of Literature என்ற உயர் விருதினைப் பெற்ற மதுரகவி திரு.கந்தவனம் அவர்களின் திறமையை வாசகர்களுடன் பகிர்ந்து பெருமை கொள்ளவும் பூவரசு தவறவில்லை.

பூவரசின் ஆசிரியர் இந்து மகேஸ் அவர்கள் தனது உரையில் இப்படிச் சொல்கிறார்.

"அந்நிய மண்ணுக்கு நாங்கள் அகதிகளாகப் புலம் பெயர்ந்த அந்த ஆரம்ப
காலங்களில் நமது வாழ்வின் தேவைகளுக்கான தேடுதல்களோடு, நம்மை நாம் முகம் தொலைத்து விடாதிருக்க, நம்மை நமது வாழ்வை அர்த்தப்படும் விதமாக செயலப்ட்டாக வேண்டிய நிலையில் கலை இலக்கியங்களைக் கரம் பற்றிக் கொண்டோம்.

இந்தக் கலைஇலக்கிய வெளிப்பாடுகளின் ஒரு அம்சமாக முகிழ்த்தன சஞ்சிகைகள். ஒன்று, பத்து, நூறு... என அவை எண்ணிக்கையிலும் பெருகின. இவை வடிவமைப்புக்களில் ஒத்த தன்மைகளைக் கொண்டிருந்த போதும் அவை தாங்கி வரும் படைப்புகளில் படைப்புக்களின் கருத்துக்களில் வித்தியாசப் பட்டிருந்தன.

பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருவித உத்வேகம் கொண்டு வெளிப்பட்ட பல்வேறு சஞ்சிகைளில் பெரும்பாலானவை இன்று "இல்லை" என்றான போதும் அவற்றின் சமூக கலை இலக்கியப் பணிகளை வாசகர்கள் மறந்து விடுவதற்கில்லை.

எந்த ஒரு சஞ்சிகையும் நெடுங்காலம் நிலைத்து நிற்பதற்கு அதன் அடித்தளம் பலமாக இருக்க வேண்டும் என்ற நியதிக்குக் கட்டுப் பட்டு தொடங்கப் பட்டவைகள் மிகக் குறைவே...."
இப்படித் தொடர்கிறார்.

ஆனால் பூவரசு தனது அடித்தளத்தை பலமாகக் கொண்டே தொடங்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் பூவரசின் 11 வது ஆண்டு கால வளர்ச்சியில் கண்டு கொண்டோம்.

அதன் கலை இலக்கியப்பணி தொடர எம்மாலான பங்கைச் செய்து அதன்
வளர்ச்சிக்கு வாழ்த்துவோம்.

சந்திரவதனா
யேர்மனி

இம்முறை பூவரசு நடாத்திய போட்டிகளில் பரிசு பெற்றோர் விபரம்:

சிறுகதை
முதல் இடம் - சந்திரவதனா செல்வகுமாரன் - ஜேர்மனி
இரண்டாவது இடம் - சாந்தினி வரதராஜன் - ஜேர்மனி
மூன்றாவது இடம் - நளாயினி தாமரைச்செல்வன் - சுவிஸ்

கட்டுரை
முதல் இடம் - த. பவானந்தன் - யேர்மனி
இரண்டாவது இடம் - ஏ. ஜே. ஞானேந்திரன் - சுவிஸ்
மூன்றாவது இடம் - சுயித்ரா தருமசீலன் - ஜேர்மனி

கவிதை - முதல் இடம் - நா. தேவதாசன் - ஜேர்மனி
இரண்டாவது இடம் - சக்திதேவி - சத்தியநாதன் - ஜேர்மனி
மூன்றாவது இடம் - அம்பலவன் - புவனேந்திரன் - ஜேர்மனி

மேலும் இம்முறை பூவரசில் ஆக்கங்களைத் தந்தோர் விபரம்-

ஜேர்மனியிலிருந்து:

த.சு.மணியம்,
திரு.திருமதி.ஜோர்ஜ்,
அம்பலவன்.புவனேந்திரன்,
இ.சம்பந்தன்,
சக்திபாலா,
கொற்றையூர்வாசன்
மாலினி. குணராஜன்
எழிலன்
நா.தேவதாசன்
ப.இராஜகாந்தன்
வீ.ஆர்.வரதராஜா
கே.என்.குணராஜன்
அமலன்
சாந்தினி வரதராஜன்
த.பவானந்தராஜா
பொ.கருணாகரமூர்த்தி
பகீரதி சுதேந்திரன்
செல்வா
ரவி செல்லத்துரை
புஸ்பராணி ஜோர்ஜ்
சில்லையூர் சிங்கராஜர்
அப்பாவி அப்புசாமி

டென்மார்க்கிலிருந்து:
வேலணையூர் பொன்னண்ணா

இலண்டனிலிருந்து:

கு.விக்னேஸ்வரன்

அவுஸ்திரேலியாவிலிருந்து:
ராஜி. வல்லிபுரநாதன்


சந்திரவதனா செல்வகுமாரன்
ஜேர்மனி

2002

Friday, August 04, 2006

பெண்கள் சந்திப்பு மலர் 2002 - ஒரு பார்வை

உணர்வுகள் கூடாத போது ஒருவனுடன் கூட வேண்டிய உளவலி தரும் பால்வினைத் தொழிலால் உலகளாவிய ரீதியில் பெண்கள் துன்புறும் போது அது பற்றி நாம் பேசுவதே தப்பு என்றும், பாரதூரமான குற்றமென்றும், அருவருப்பான செயலென்றும், அது பற்றிப் பேசுபவர்கள் பண்பற்றவர்கள், அத்தொழிலில் ஆர்வம் கொண்டவர்கள்… என்றும் எமது சமூகத்துள் பல்வேறு திசைகளிலிருந்தும் குரல்கள் எழுகின்றன.

இப்படியான - நமக்கில்லைத்தானே..! நாம் ஏன் பேச வேண்டும்..! என்ற எண்ணம் கொண்ட, உலகளாவிய ஒரு பிரச்சனை பற்றிய எந்த விதமான பிரக்ஞையுமின்றிய பெருபான்மையானோரைக் கொண்ட, நமது தமிழ் சமூகத்தின் மத்தியில் ஏழாவது மலரான கடந்த வருடப் பெண்கள் சந்திப்புமலர், பால்வினைத் தொழிலை மையமாகவும், கருப்பொருளாகவும் கொண்டு துணிகரமாக வெளி வந்துள்ளது.

பால்வினை பற்றிப் பேசுதலே தவறென்று கருதுவோர் மத்தியில் பால்வினை சம்பந்தமான தகவல்களைத் திரட்டுவது என்பது சுலபமான காரியமல்ல. இணையத்தளங்களில் தேடும் போதும் சரி, அது பற்றிய பத்திரிகை, சஞ்சிகைகளை பொது நூலகங்களிலோ அல்லது கடைகளிலோ பெற்றுக் கொள்ளும் போதும் சரி அவை தமிழர்கள் யாராவது கண்களில் பட்டு விட்டால் போதும். ஒரு துச்சமான ஏளனப் பார்வை. - இந்தளவுக்கு முன்னேறிட்டீங்களோ..? என்பது போன்றதான அநாகரிகக் குத்தல் பேச்சு…. இந்த நிலையில் இத் தொழிலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களோடோ அல்லது இத் தொழில் நடைபெறும் இடங்களில் கடமையாற்றுபவர்களிடமோ இவை பற்றிப் பேசித் தகவல்களை எடுக்க முனைந்தால் இன்னும் சற்று அதிகப் படியான ஏளனத்துடன் - சமூகத்தைக் கெடுக்க வந்த பொழுது போக்குப் பெண்ணியவாதிகள் - என்கின்ற முத்திரை குத்தல்…. இப்படியான எத்தனையோ இடர்பாடுகள்.

இவைகளின் மத்தியில் பால்வினைத் தொழிலை மையமாகவும், கருப்பொருளாகவும் கொண்டு மலரை வெளியிட நினைந்தது மட்டுமல்லாமல், நினைத்ததைச் செயற் படுத்தியும் காட்டியது பெண்கள் சந்திப்பு மலர்க் குழு.

இத்துணிச்சலான செயற்பாடு உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பெண்கள் அடக்கப் பட்டுக் கொண்டும் ஒடுக்கப் பட்டுக் கொண்டும் இருந்தாலும் ஆங்காங்கு ஒரு சில பெண்களாவது விழிப்படைந்து விட்டதையும் தாம் நினைத்ததைச் செயற்படுத்துமளவுக்கு தன்நம்பிக்கை கொண்டு விட்டதையுமே எடுத்துக் காட்டுகிறது.

தொழில் நுட்பம், வடிவமைப்பு… என்று சுவிஸ் றஞ்சி, நோர்வே தயாநிதி, லக்சுமி…. போன்ற பெண்கள் உள்ளுக்குள் நின்றே.. உழைக்க, கவித்ரா, ஜெயந்திமாலா, கோசல்யா, சந்திரவதனா, சிந்துக்கரையாள், தீபா, தேவா, ஈஸ்வரி;, ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், பாமதி, உமா, றஞ்சி, பார்வதி கந்தசாமி, அந்திரியா ட்வார்கின், நிரூபா ஆகியோர் முனைந்து முனைந்து தகவல்களையெல்லாம் தேடி எடுத்து ஆக்கங்களை மிகுந்த அக்கறையுடன் தயாரித்து கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும், கதை வடிவிலும் தந்திருந்தார்கள். அத்தனையும் பொய்மை கலக்காத உண்மைத் தகவல்கள்.

இவைகளுள் கட்டுரைகள் பால்வினைத்தொழில் பற்றிய பேச்சுக்கே முக்கியத்துவம் கொடுத்து, பால்வினைத் தொழில் பற்றிய ஏராளமான தகவல்களைத் தந்திருந்தன.

பால்வினைத்தொழில் செய்பவர்களை கீழ்தரமானவர்களாகவே அனேகமானோர் கணிக்கிறார்கள். ஏன்..! அவர்களிடம் பணம் கொடுத்து தமது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் ஆண்களும் கூட அவர்களை மிகவும் கீழ்தரமான ஸ்தானத்தில் வைத்துத்தான் கதைக்கிறார்கள். அந்தக் கணிப்பினூடான கண்ணோடுதான் பார்க்கிறார்கள். ஆனால் பால்வினைத் தொழில் என்பது ஆணாதிக்க சமூகத்தின் சுயநலத் தேவையின் பொருட்டு, பெண்களை அடிமை கொண்டு சுகிக்கு முகமாக ஆரம்பித்து வைக்கப் பட்ட தொழில் என்பதையும், பால்வினைத் தொழிலின் முக்கிய காரணி வறுமை என்பதையும் இக்கட்டுரைகளின் மூலம் எவரும் புரிந்து கொள்ளலாம். 30 வீதமான பெண்கள் வறுமையின் நிமித்தமும், 70 வீதமான பெண்கள் தரகர்களால் ஏமாற்றி அழைக்கப் பட்டு வந்து கட்டாயத்தின் பேரிலும் பால்வினைத் தொழிலைச் செய்து கொண்டிருப்பது உலகளாவிய ரீதியான கணிப்பீடு.

இம்மலரில் இடம் பிடித்திருக்கும் இக் கட்டுரைகளில் இவை பற்றிய ஆதாரபூர்வமான பல தகவல்கள் தரப் பட்டுள்ளன. வாசிக்கும் போது தலை விறைக்கும் அளவுக்கு பால்வினைத் தொழில் செய்வோர் அனுபவிக்கும் துயர்கள் பற்றிப் பேசப் பட்டுள்ளன.

பால்வினைத் தொழிலைச் சட்ட பூர்வமாக்கலாமா? என்ற தலைப்பின் கீழ் பிரெற்லெவி எழுதியதொரு கட்டுரையை தமிழில் கவித்ரா மொழிபெயர்த்துத் தந்திருந்தார். இதில் பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எப்படியாக ஏமாற்றப் பட்டு அழைத்து வரப்படுகிறார்கள் என்பதிலிருந்து இதை சட்ட பூர்வமாக்கலாமா..? அதனாலான நன்மை தீமை என்ன என்பவை பற்றி ஆராயப் பட்டிருந்தன. பால்வினைத் தொழில் குற்றமற்றதாக்கப் படுவது என்பதற்கு ஒரு இலகுவான விடை இல்லை என்பதும் இக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருந்தது.

சட்டத்தரணியான Catharine Mackinnon மற்றும் போர்ணோகிராபி எதிர்ப்புக் கோட்பாளரான Andrea Dworkin போன்ற தீவிரப் பெண்ணியலாளர்கள் பாலியல் தொழிலை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதையும் இன்னும் பல இது சம்பந்தமான ஆதாரத்துடனான தகவல்களையும் பால்வினைத் தொழில் - பெண்ணிய நோக்கு என்ற கட்டுரையின் மூலம் றஞ்சி தந்திருந்தார். இடைச்செருகலாக வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தால் என்ன..! வளர்ச்சியடையாத நாடாக இருந்தால் என்ன…! எங்கும் பெண்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே கையாளப் படுகிறார்கள் என்பதையும் பெண்கள் இன்னும் சுதந்திரமாகச் செயற்பட முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையும் தாயகத்தில் நடை பெறும் பாலியல் துர்ப்பிரயோகங்களையும் றஞ்சி சுட்டிக் காட்டியிருந்தார்.

ஜெயந்திமாலா மறுபக்கம் என்ற தனது கட்டுரையில் உலகின் திறந்தவெளிப் பால்வினைத்தொழில் விடுதியைக் கொண்ட கியூபாக் கடற்கரை, தாய்லாந்து, சுவிஸ் போன்ற இடங்களில் எப்படியெல்லாம் பெண்கள் பயன் படுத்தப் படுகிறார்கள் என்பதை ஆய்ந்திருந்தார்.

தாய்லாந்தில் கட்டாயப் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்ட பெண்குழந்தைகள் சிறு வயதிலேயே எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகி சீரழிக்கப் படுகிறார்கள் என்பதையும் பௌத்த மதக் கோட்பாட்டைக் காரணம் காட்டி முற்பிறப்பில் அவர்கள் செய்த கர்ம வினையாலேயே இப்படி ஆனார்கள் என்ற நியாயப் படுத்தலை ஆணாதிக்க பௌத்த மதம் நியாயப் படுத்துகிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இடத்தில் நின்று நிதானித்து நாம் யதார்த்தமாகச் சிந்தித்துப் பார்ப்போமேயானால் - பால்வினைத்தொழிலை முற்றாக அழிப்பது என்பது இயலாத காரியம். அப்படியிருக்கும் போது அறநெறிப் பண்புகளைக் காரணம் காட்டி அதற்கு அங்கீகாரம் வழங்க மறுப்பது ஏற்கெனவே துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் கட்டாயப் பால்வினைத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களை இன்னும் துன்பச் சகதிக்குள் தள்ளுவதற்கே சமனாகும். இத்தொழிலை சட்ட பூர்வமாக்கும் போது இந்தப் பாழுங்கிணற்றுள் கட்டாயமாகத் தள்ளி விடப் பட்ட பெண்களோ அன்றில் குழந்தைகளோ எவராயினும் பயமின்றித் தமது பிரச்சனைகளையும், உள்ளுக்குள் நடைமுறைப் படுத்தப் படும் வன்முறைகளையும்… வெளியிலே சரியான இடங்களில் எடுத்துக் கூறி தம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம். தம்மை முறைப் படியான உடல் நலப் பரிசோதனைக்கு உட்படுத்தலாம். இவைகளால் எத்தனையோ விதமான நடைமுறைச் சீரழிவுகள் குறையும். இது பற்றி கவித்ராவின் மொழிபெயர்ப்புக் கட்டுரையில் மட்டுமல்லாது இம் மலரில் இடம் பெற்ற மற்றைய அனேகமான எல்லாக் கட்டுரைகளிலும் குறிப்பிடப் பட்டிருந்தது.

இதே நேரம் றஞ்சியின் கட்டுரையில் நான்கு வருடங்கள் பால்வினைத் தொழிலாளியாக இருந்த Carmen - இப்போதுள்ள அமைப்பு முறையில் நாம் கைது செய்யப் பட்டால் இரும்புக் கம்பிகளின் பின் தள்ளப் படுகிறோம். பாலியல் தொழிலைச் சட்ட ரீதியாக்கிய பின் நாம் முட்கம்பிகளின் பின்னால் தள்ளப் படுவோம் என்று கூறியதும், சட்டங்களை அமுல் படுத்தும் அதிகாரிகள் எப்படிச் சட்டங்களை தமக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள் என்பது பற்றியும் குறிப்பிடப் பட்டிருந்தது.

அப்படியானால்…? பால்வினைத் தொழிலை சட்டரீதியாக்கினாலும் கூட இதனுள் வீழ்ந்த பெண்களுக்கு விமோசனம் கிடையாதா..? மீண்டும் எம்மிடம் கேள்வி எழுகிறது.

சிந்துக்கரையாளின் - உலகமயமாக்கலும் தென்கிழக்காசியாவின் பால்வினை வர்த்தகமும் - என்ற கட்டுரையும் கவித்ராவினதைப் போல ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரையே. இவர் Peoples Solidarity for Social Progress(pssp) என்ற மாத சஞ்சிகையில் மார்ச் 2001 இல் கொரிய மொழியில் மின்சூய் என்பவரால் எழுதப் பட்ட ஒரு கட்டுரையை மொழி பெயர்த்திருந்தார். பெண்கள் மீதான சுரண்டல் பற்றியும் 2001 இல் குன்சான் இல் உள்ள பால்வினைதொழிலாளர் விடுதி எரிக்கப் பட்ட போது அதற்குள் சிறை வைக்கப் பட்டிருந்த பால்வினைத் தொழிலாளப் பெண்கள் கருகியது பற்றியும் இக் கட்டுரை கூறுகிறது. மேலும் இக் கட்டுரையில் பால்வினைத் தொழிலாளர் பற்றியும் அவர்கள் மீதான சுரண்டல்கள் பற்றியுமான இன்னும் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.

தீபா - தனது பால்வினை - பரிணாமம் என்ற கட்டுரையின் மூலம் - முந்திய காலத்தில் பணக்கார ராஜாக்களும் வணிகர்களும் இன்னும் சுகபோக வாழ்வில் மையல் கொண்ட மானுடரும் போகும் இடமெல்லாம்; சுகபோகம் காண விளைந்ததின் பயனே பால்வினைத் தொழில் தோன்றியதற்கான அடிப்படைக்காரணம் என்றும், ஹைசா என்று அழைக்கப்பட்ட ஆரம்பகால விலைமாதர்கள் எப்படி உருவாக்கப் பட்டார்கள் என்பது பற்றியும் மிகவும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

தேவா - சில முரண்கள் - குறிப்புகள் - என்ற கட்டுரையினூடு தொழில் நிலையங்களில் பாலியல் வன்முறை… மதம் சார் பால்வினைத் தொழில்… அரசு சார் பாலியல் வன்முறை.. குடும்ப வறுமை காரணமாக பெற்றோர்களால் பால்வினைத் தொழிலுக்கு விற்கப் படும் பிள்ளைகளின் அவலம்… என்று பல விடயங்களைத் தொட்டிருந்தார். குறிப்பாக தமிழ் சமூகங்களில் பாலியல் என்பது ஆணுக்கான ஒரு விடயமாகக் கருதப் பட்டு, பெண்ணுக்கு அது பற்றியதான எந்த அறிவும் கொடுக்கப் படாமல், அது தெரியாமல் இருப்பதுதான் பெண்ணுக்கு அழகு என்னும் விதமாக வளர்க்கப் படுவது பற்றியும், அவள் உடல் பாலியல் உறுப்பு என்பவைகளை கருத்தில் வைத்தே சடங்குகளும் சம்பிரதாயங்களும் நடாத்தப் படுவது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இவரது எழுத்தில் தமிழ் சமூகத்தின் மூடுமந்திரத் தன்மையின் மீதான இவருள்ளான கோபம் தெரிந்தது.

உமா - மானிடராய் வாழ என்ற கட்டுரை மூலம் எங்கெங்கெல்லாம் பால்வினைத் தொழிலைச் சட்ட பூர்வமாக்கப் படுவதற்கான கோஷங்கள் எழுகின்றன. எங்கெங்கெல்லாம் பால்வினைத் தொழிலைச் சட்ட பூர்வமாக்கியுள்ளார்கள் எங்கெங்கெல்லாம் மறுக்கப் படுகின்றன என்பது பற்றியும்,

பெண்கள் மீதான ஆண்களின் பாலியல் சுரண்டல்கள் பற்றியும், ஆணாதிக்க சமுதாயத்தை நிலை நிறுத்துவதற்கான முக்கிய கூறாகவே பெண்ணொடுக்கு முறை இருப்பது போலவே இச் சமுதாயத்தில் பால் வினைத் தொழிலாளர்களின் பங்கும் ஆணாதிக்கத்தின் ஸ்திரத் தன்மையுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

பார்வதி கந்தசாமி - பாலியல் சிக்கல்களா? உரிமை மறுப்புக்களா? என்ற கட்டுரை மூலம் தமிழ் சமூகத்தில் எப்படியெல்லாம் ஆண்கள் மேன்மைப் படுத்தப் பட்டு, பெண்கள் தாழ்த்தப் படுகிறார்கள் என்பதையும் அதனாலான பிரதி பலிப்புகளையும், அதனால் பெண்கள் தாங்கிக் கொண்டுள்ள அசௌகரியங்களையும் சற்றுக் கோபமாகச் சுட்டியிருந்தார்.

மேலும் மிக்சிக்கன் சட்டக்கல்லூரியில் - பால்வினைத்தொழில் சர்வகலாசாலையில் இருந்து செயற்பாட்டுக்கு - என்ற தலைப்பின் கீழ் அந்திரியா ட்வார்கின் (Andrea Kworkin) - ஆற்றிய உரை ஒன்று மொழிமாற்றம் செய்யப் பட்டு பால்வினைத் தொழிலும் ஆண் மேலாதிக்கமும் என்ற தலைப்பில் தரப்பட்டிருந்தது.

இக்கட்டுரைகளின் நடுவே எனது கட்டுரையான பால்வினை என்ற கட்டுரையும் இம்மலரில் இடம் பெற்றிருந்தது. நான் எழுதிய கட்டுரைக்கு நானே வியாக்கியானம் சொல்ல முடியாது. ஆனாலும் அந்தக் கட்டுரையை எழுதுவதற்காக நான் வாசிகசாலை, பால்வினைத் தொழில் மையங்களில் ஏதோ ஒரு மூலையிலேனும் கடமையாற்றுவோர், இணையத்தளம்.. என்று பலதையும் நாடினேன். அதன் பயனாக இங்கு நான் கட்டுரையில் தந்ததை விடப் பன்மடங்கு அதிகமான என்னை வதைப்பதான தகவல்களைப் பெற்றேன். இதற்கான தகவல்களைத் திரட்டும் இந்தக் கால கட்டத்தில் என்னால் வேறெதிலும் கவனம் செலுத்த முடியாத படி மனசு ஏதோ ஒரு சோகத்தில் ஆழ்ந்து போயிருந்தது. இப்படியும் நடக்கிறதா..? இப்படியெல்லாம் சின்னஞ்சிறு சிறுமிகளும், பெண்களும் துயருறுகிறார்களா..? உலகம் இத்தனை ஏமாற்றுத் தனமும் நயவஞ்சகமும், சுயநலமும் நிறைந்ததா..? என்றெல்லாம் கேள்விகள் எனக்குள் எழுந்து கொண்டே இருந்தன. சில விடயங்களை நம்பவும் முடியாமல், நம்பித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பால்வினைத் தொழிலுக்காகவும், பாலியல் துர்ப்பிரயோகத்துக்காகவும் பலிக்கடாக்கள் ஆக்கப் பட்ட பெண்களின் துயர்களை மனசை விட்டு அகற்றவும் முடியாமல்.. அவஸ்தைப் பட்டேன். அடிக்கடி போலந்து, தாய்லாந்து, உக்ரையின், கென்யா, சீராலியோன்… போன்ற நாட்டுப் பெண்குழந்தைகளும் அவர்களது கண்ணீரும் என் நினைவில் வந்து கொண்டே இருந்தன. என் மனதை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது இந்த நினைவுகளிலிருந்து விடுவித்துக் கொள்ள எனக்குச் சில மாதங்கள் தேவைப் பட்டன என்பதை உங்களுக்கும் தெரியப் படுத்த விரும்புகிறேன்.

நிருபாவினது பயந்தாங்கொள்ளியும், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின் சென்னையில் ஒரு சின்ன வீடும் பால்வினைத் தொழில் பற்றிப் பேசாவிட்டாலும், பாலியல் துர்ப்பிரயோகம் பற்றிப் பேசின. இரண்டுமே வெவ்வேறு கோணங்களிலான கதை வடிவங்களில் தரப்பட்டிருந்தாலும் உள்ளடக்கம் சிறுமிகள் மீதான பாலியல் துர்ப்பிரயோகம் சம்பந்தமானதாகவே இருந்தன.

கதை சொல்லும் உத்தி நிரூபாவுக்குக் கை வந்த கலை. எப்படியெல்லாம் எழுதுகிறார்..! வியக்க வைக்கிறார். யதார்த்தம்.. முழுக்க முழுக்க யதார்த்தம். கதையின் நடை, வார்த்தைப் பிரயோகம்… சொல்லும் விடயங்கள் அத்தனையிலும் யதார்த்தம் ஒட்டியுள்ளது. பல சிறுமிகளின் வாழ்வுகள் எப்படி நகர்கின்றன என்பது பலருக்குத் தெரியாது. சொல்லப் படாமலே, எழுதப் படாமலே மனசுக்குள்ளே விழித்திருக்கும் அந்த அருவருப்புகளை பயந்தாங்கொள்ளியில் வரும் கதாநாயகியான அந்தச் சிறுமி அனுபவித்திருக்கிறாள். எத்தனையோ விடயங்களை சிறுமியாக இருந்து பார்த்திருக்கிறாள். கதையிலே வரும் மலரக்காவினதும் விக்கியினதும் தொடர்பை அவள் அந்த வயதில் விளங்கிக் கொண்ட விதத்தையும், அந்த விக்கியாலேயே அவள் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு ஆளாகிறாள் என்பதையும், ஆனால் இதில் எதையும் அவள் வெளியில் சொல்ல முடியாத படிக்கு பேய் பிசாசு என்று பயமுறுத்தப் பட்டுள்ளாள் என்பது மட்டுமல்லாமல் இப்படியான விடயங்களை எல்லாம் மனம் விட்டுப் பேசுமளவுக்கு அவள் தாயோ, ஆச்சியோ இடம் கொடுப்பதில்லை என்பதையும் நிரூபா மிகவும் தத்ரூபமான முறையில் சொல்லியுள்ளார். ஆச்சிக்கு எப்பவும் அயதி. மழை பெஞ்சுதெண்டால்.. என்று நிரூபாவின் பிறப்பிடம் வடமராட்சியோ என்று எண்ணும் அளவுக்கு, வடமராட்சி மண்ணின் தமிழ் வாசனையைக் கலந்து அடுக்கிக் கொண்டே போகிறார்.

நிரூபாவின் கதையை வெறும் கதையாகக் கருத முடியாது. ஒரு உண்மையின் பிரதி பலிப்பு. இப்படியான விடயங்கள் அன்று மட்டுமல்ல. இன்றும் தொடர்கின்றன. இதைப் பெரும்பாலானவர்கள் ஏற்க மறுத்தாலும் லண்டனில் சமூக நலப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் - சென்னையில் ஒரு சின்ன வீடு - என்ற கதை வடிவிலான ஆக்கம் உண்மை என்று அத்தாட்சி படுத்துகின்றது. சாந்தி என்ற பெண்குழந்தை தனது பன்னிரண்டாவது வயதிலேயே அவளது தாய்மாமனால் சிதைக்கப் படுகிறாள். அவள் சிதைக்கப் பட்டதோ அல்லது தொடர்ந்தும் அவள் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு ஆளாகிக் கொண்டிருப்பதோ அவளது தாய்க்குத் தெரியாது. அல்லது புரியவில்லை. அல்லது புரிந்தும் அது பற்றிப் பேசவோ, நடந்ததை ஒப்புக் கொள்ளவோ தைரியமில்லை. எத்தனையோ விதமாகக் கலாச்சாரம் பண்பாடு என்று பேசிக் கொண்டிருக்கும் எமது சமூகத்துக்குள்ளும் இப்படியான கொடுமைகள் நடக்கின்றன. அவைகளும் வீட்டுக்குள்தான் கூடுதலாக நடக்கின்றன. இதை ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் தனது ஆதங்கம் நிறைந்த வரிகளால் மனதைத் தொடும் படியாகச் சொல்லியுள்ளார்.

இதே கருத்தை அதாவது குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள்

மிக நெருங்கிய உறவுகளாலேயே நிகழ்த்தப் படுகிறது என்பதை பார்வதி கந்தசாமியும் தனது கட்டுரையில் சுட்டியிருந்தார்.

இன்னும் விலங்கிடாப் பெண் என்ற கவிதை மூலம் கோசல்யாவும்,

எய்ட்ஸ் நீ வாழ்க என்ற கவிதை மூலம் ஈஸ்வரியும்

தலைப்பிடப் படாத கவிதை ஒன்றின் மூலம் பாமதியும்

தத்தமது உணர்வுகளை அழகாக வெளிப் படுத்தியிருந்தார்கள்.

மிகுந்த சர்ச்சைக்குள்ளான, பெண்கள் சந்திப்பு மலரின் அட்டைப்படத்தை அவுஸ்திரேலியாவில் பிறந்த, பெண்களுக்காகக் குரல் கொடுத்த Germani Greer வரைந்திருந்தார். இப்படம் 1970ம் ஆண்டு முதற் தடவையாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தாலும், 1981 Granada publication லண்டன் என்ற அமைப்பினால் The femaleeunach என்ற பெண்கள் சஞ்சிகையில் மீண்டும் பிரசுரிக்கப்பட்டது. ஆனாலும் இந்தப் படத்தை பெண்கள் சந்திப்பு மலரின் அட்டைப் படமாக்கிய போது இதையும் பிரசுரிக்கலாமா..? என்ற கருத்துப்பட குற்றப் பட்டியல் தயாரித்து வைத்துக் கொண்டு ஆர்ப்பரித்தவர்கள் பலர். ஆர்ப்பரித்தவர்களில் ஆண்களை விட பெண்கள்தான் அதிக பங்கு வகித்தனர் என்பதுதான் வருத்தத்துக்குரிய விடயம். நியத்தில் பெண்களின் சுயம் வதை பட்டுக் கொண்டிருக்கும் போது அது பற்றி வருத்தப் படாதவர்கள், படத்தில் வந்த உள்ளாடைக்காகக் குதித்தார்கள். அது ஒரு ஓவியம் என்பதை அவதானிக்கக் கூட முயலாமல் கூச்சலிட்டார்கள்.

தன் முகம் காட்ட துணிவற்ற ஒரு பெண் எழுத்தாளர் நிலவன் என்ற பெயரில் இணையத்தளமொன்றில் இப்படி எழுதியிருந்தார்.

அண்மையில் பால்வினைத் தொழிலாளர் எனும் நூலொன்று வெளிவந்துள்ளது. எனக்கும் பார்க்கக் கிடைத்தது. புத்தகத்தை நண்பர் நிச்சயம் படிக்கும்படி வலியுறுத்தியதனால் நானும் வாங்கிப்படித்தேன். புத்தகத்தைக் கையில் எடுத்தவுடன் இது எமது பெண்களால் வெளியிடப்பட்டதா? அல்லது ஐரோப்பியரது வெளியீடா என எண்ணவைத்தது. அப்படியொரு அட்டைப்படம். இதிலிருந்து எமது பெண்ணியவளர்ச்சியை மதிப்பிடக் கூடியதாக இருந்தது.

இதில்
உமா (ஜேர்மனி)

றஞ்சி (சுவிஸ்)

சந்திரவதனா செல்வகுமாரன்(ஜேர்மனி)

சிந்துக்கரையாள்

பார்வதி கந்தசாமி

ஜெயந்திமாலா குணசீலன்

தேவா(ஜேர்மனி)

ராஜேஸ்வரி

போன்ற படைப்பாளர்கள் எழுதியுள்ளார்கள். இப்பால்வினைத் தொழிலாளர் நூலில் அடக்கப்பட்ட விடயங்கள் மிகுந்த சர்ச்சையை உண்டுபண்ணும் விடயங்களாகவுள்ளன. அதனை முன் அட்டைப்படமே சொல்கிறது. இதில் எழுதியுள்ள பெண்களில் எத்தனைபேர் நல்ல தெளிந்த பெண்ணியச் சிந்தனைகளுடன் உள்ளார்கள் என்று ஆராய்ந்தால் பூச்சியமே விடையாகக் கிடைக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இது பெண்ணியத்துக்கோ அல்லது பெண்விடுதலைக்கோ எதிரான குரலாக யாரும் தூக்க வேண்டாம். எனெனில் இந்நூலில் பேசப்பட்டுள்ள விடயம் எமது பெண்களுக்கான பிரச்சனையாக இல்லை. நமது உரிமைகளை நாமே தவறாகப் பயன்படுத்தி ஒரு நல்ல சமூகத்தின் சிந்தனைகளின் மீது குப்பையை வாரக்கூடாது.

அட்டைப் படத்துக்கும் பெண்எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கும் முடிச்சுப் போட முனைந்த இவரது அறியாமையை என்ன சொல்ல.

ஆண்களில்தான் சிலர் பெண்விடுதலை பற்றிப் பேசினாலே - ஐரோப்பியக் கலாச்சாரம் - என்று சொல்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு அட்டைப் படத்தைப் பார்த்து இது ஐரோப்பிய வெளியீடா…! என்று விழிக்கும் பெண்கள் மத்தியில் என்ன செய்யலாம்..? ஏன் ஐரோப்பியப் பெண்களுக்கு மட்டுந்தான் சுதந்திர உணர்வுகள் உள்ளதா? நாமெல்லாம் என்ன ஜடங்களா?

உலகின் அதி புரதான தொழில் ஒன்றினால் பெண்கள் மீது அதி உச்ச அடிமைத்தனத்தை உலகம் பிரயோகித்துக் கொண்டு இருக்கும் போது பெண்கள் நாம் பேசாதிருக்கலாமா? என்பதான கேள்விகள் எம்முள் எழும் போது………..

நாம் பேசத்தான் வேண்டும் என்கின்றன பெண்கள்சந்திப்பு மலரில் இடம் பிடித்துள்ள ஆக்கங்களும் தகவல்களும்.

தகவல் தந்த… அதைப் பதிவாக்கித் தந்த… சமூகப் பிரக்ஞை நிறைந்த அனைத்துப் பெண்களுக்கும் என் மனதார்ந்த நன்றி.

பெண்கள் சந்திப்பு மலரின் வருகைக்கு உள்ளிருந்தும், வெளியிருந்தும் உதவியது மட்டுமல்லாது

எனதும் மற்றையவர்களதும் இது பற்றியதான கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்வதற்கும் இப்படியானதொரு அரிய சந்தர்ப்பத்தை வழங்கிய றஞ்சிக்கு எனது பிரத்தியேகமான நன்றி.

சந்திரவதனா செல்வகுமாரன்

30.9.2003


பெண்கள் சந்திப்பு மலர் பற்றிய இப் பார்வை

11.10.2003 அன்று சுவிஸ் சூரிச்சில் நடை பெற்ற

பெண்கள் சந்திப்பில் வாசிக்கப் பட்டது.

உயிர்ப்பு சிறுகதைத்தொகுப்பு - ஒரு பார்வை

7.1.2006 அன்று, அவுஸ்திரேலியாவின் mellbourne நகரில், திரு முருகபூபதி அவர்களால் தொகுக்கப் பட்ட "உயிர்ப்பு" நூல் வெளியிட்டு வைக்கப் பட்டது.

உயிர்ப்பு சிறுகதைத் தொகுப்பில் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கெண்டிருக்கின்ற 20 எழுத்தாளர்களின் 20 சிறுகதைகள் இடம் பிடித்துகள்ளன.


அவற்றில் முதற் பத்துச் சிறுகதைகள் மீதான எனது பார்வை

உசா யவாகரின் மலரொன்று கருகுகின்றதோ!
எந்த நாடு எந்தத் தேசம் எதுவாயினும் பெண் என்பவளுக்கு ஏற்படுகின்ற சில துயர்கள் தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றன. உசா யவாகரின் மலரொன்று கருகுகின்றதே கதையும் இப் பிரச்சனையைத் தொட்டுள்ளது.

ஆபிரிக்கக் கண்டத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப் பட்ட இக்கதையில் சம்பியா நாட்டைச் சேர்ந்த விக்டோரியா என்ற 20வயது இளம் பெண் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பத்தில் பணிப்பெண்ணாய் பணி புரிகிறாள். அந்தக் குடும்பத்தில் நல்லவளாய் முத்திரை பதித்து நட்போடு பழகும் அவள் தனது பணியை நேர்த்தியாகவும் விசுவாசத்தோடும் செய்யும் ஒருத்தியாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறாள்.

அவள் தனது 16வது வயதிலேயே நண்பன் என்ற பெயரோடு பழகிய ஒருவனால் தாயாக்கப் பட்டுக் கைவிடப் பட்டவள். தற்போது மீண்டும் ஒருவனோடு நட்பாகி மோதிரம் மாற்றி திருமண பந்தத்தில் இணைந்த போது எயிட்சையும் அவனிடமிருந்து பெற்று இறந்து போகிறாள்.

இரு ஆண்களிடமிருந்தும் சுகத்தையும் விட சுமைகளையே அதிகமாகப் பெற்ற விக்ரோறியாவின் இறப்பு கதாசிரியரின் மனதில் ஏற்படுத்திய பாதிப்பும், விரக்தியும் கதையின் முக்கிய அம்சங்களாக இருந்தாலும் கதையில் இன்னும் பல விடயங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.

குறிப்பாக, எந்தப் புலத்தைக் கொண்டு ஒரு சிறுகதை அமைகிறதோ அந்தப் புலத்தோடு வாசகரை அழைத்துச் செல்வதும் அந்தப் புலம் பற்றிய செய்திகளை கதையினூடு வாசகனுக்குத் தருவதும் சிறப்பானது. அந்த வகையில் உசா யவாகர் வெற்றி கண்டுள்ளார். கதையில் கிடைத்த பல சுவையான தகவல்களில் சம்பியாவில் முருங்கைக்காய் மரங்கள் இருப்பதுவும் முருங்கைக்காயை அவர்கள் Devil stick என்பதுவும் நான் அறிந்திராத தகவல்கள்.

கதை இத்தனை நீளமாக இல்லாமல் குறுகலாக இருந்திருந்தால் நறுக்கென்று அமைந்த மிக அருமையானதொரு கதையாக மிளிர்ந்திருக்கும்.

அ.சந்திரகாசனின் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடி
கலை வளர்பதும், தமிழ் வளர்ப்பதும் தமை வளர்ப்பதற்க்கு என்ற நிலை புலத்தில் மட்டுமல்ல தாய் நிலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் புலத்தில் கலை என்றால் என்னவென்றே தெரியாத…, தமிழ் மேல் துளி கூட அக்கறையில்லாத…, சிலர் கலை வளர்ப்பதாகவும், தமிழ் வளர்ப்பதாகவும் சொல்லிக் கொண்டு தமது அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாகவே இருக்கின்றன. இப்படியானவர்களின் பாசாங்கும் போலியும் ஓரளவு சிந்திக்கக் கூடியவர்களுக்குப் புரியாமலும் இல்லை. அ.சந்திரகாசனின் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடியும் இப்படியான போலிகளைத்தான் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

"தமிழ், தமிழ்" என்று மேடைகளில் முழங்கும் பல பிரபலங்களின் பிள்ளைகள் தமிழே தெரியாமல் இருப்பதை நாம் நடப்பிலே பார்த்திருக்கிறோம். இக் கதையிலே தமிழுக்குச் சேவை செய்வதற்காகவே சிட்னி தமிழ்ப் பாடசாலையின் தலைவராகத் தெரிவு செய்யப் படுகிறார் கணேசானந்தம். தமிழ்ப் பாடசாலையில் தமிழ் கற்பிப்பது மட்டும் போதாது. வீட்டிலும் தமிழிலேயே பேசுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றார்.

ஆனால் இவ்வளவு பெரிய அந்தஸ்து வந்த பின் அவர் மகன் வெளியிலே ஆட்களின் முன் தன்னோடு தமிழில் பேசி மானத்தை வாங்கி விடக் கூடாது என்ற மனைவியின் வேண்டுகோளை ஆமோதிக்கிறார். இது உடனடியாகச் சிரிப்பை ஏற்படுத்தினாலும் சிந்திக்கும் போது எமது சமூகத்தின் ஆரோக்கியக் கேட்டை உணர்த்துகிறது.

ரதியின் நெருடல்
அம்மா தெய்வத்துக்குச் சமனானவள்தான். அம்மாவுக்காக மகன் எதையும் விட்டுக் கொடுப்பதுவும், மகனுக்காக அம்மா விட்டுக் கொடுப்பதும் எத்தனை சங்கடமானாலும் இயல்பிலே நடக்கக் கூடிய விடயங்கள். ஆனால் இங்கே இவர்களிடையே மனைவி என்றொருத்தி வரும் போது புரிந்துணர்வுகள் சரியாக அமையாத போது தவிர்க்க முடியாத பல சங்கடங்கள் ஏற்படலாம்.

ரதியின் நெருடல் இந்தியாவைப் பின் புலமாகக் கொண்டு எழுதப் பட்ட கதையாயினும் ஒரு சாதாரண குடும்பத்தில் ஏற்படக் கூடிய அம்மா, மகன், மனைவிக்கு இடையிலான யதார்த்தமான இந்தப் பிரச்சனையைத் தொட்டிருக்கிறது.

இந்தக் கதையில் அம்மாவின் சில புரிந்துணர்வற்ற தன்மைகளும் அதனாலான சிக்கல்களும் அம்மாவை முதியோர் விடுதியில் சேர்க்குமளவுக்கு வருகிறது. இது குற்ற உணர்வுடனான சலனத்தை ஏற்படுத்தினாலும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நினைப்பில் வீட்டிலே குறையும், கூப்பாடுமாய் இருப்பதை விட அவரவர்க்கு ஏற்ற வழியில் தனியாக வாழ்வது சந்தோசத்தையும் நிம்மதியையும் தரலாம் எனபதை உணர்த்துகிறது.

கதையில் கதாசிரியர் அம்மாவைச் சந்தோசமாக வைத்திருப்பது மட்டுமல்ல… மனைவி குழந்தைகளையும் சந்தோசமாக வைத்திருப்பது ஒரு ஆணின் கடமை என்ற நல்ல விடயத்தையும் சுட்டியுள்ளார்.

கதையில் வரும் சம்பாசணைகளை பேச்சுத் தமிழிலேயே தந்திருந்தால் கதையிலும் யதார்த்தம் மிளிர்ந்திருக்கும். கதாசிரியரின் வாழ்நில வட்டாரச் சொற்களும் வாசகருக்குக் கிடைத்திருக்கும்.

சாந்தா ஜெயராயின் அம்மா இல்லாத ஒரு மணி நேரம்
அம்மா…! எமது இளமைப்பருவத்தில் அவள் இல்லாத பொழுதுகளை எம்மால் எண்ணிப் பார்க்கவே முடியாது. எமக்கு எல்லாமே அவளாகத்தான் இருப்பாள். இந்த நிலையில் அவளின் இறப்பு என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

சாந்தா ஜெயராயின் அம்மா இல்லாத ஒரு மணி நேரம் அம்மா இறந்து விட்டதாகக் கனவு கண்ட ஒரு பெண்ணின் கதை.

செல்லமாகவும், வசதியாகவும் புலத்தில் வளர்ந்த ஒரு பதினைந்து வயதுப் பெண் திடீரென அம்மாவை இழந்து விட்டால் அவளின் உணர்வுகள் எப்படியிருக்கும் என்பதை சாந்தா ஜெயராய் சொன்ன விதம் மிக அழகாக அமைந்துள்ளது.

ஆனால் அம்மா இறந்து விட்டதாகக் கனவு கண்ட ஒரு பெண்ணின் கனவில் இத்தனை விடயங்களும் வந்து விடுமா என்பது கேள்விக் குறியாகிறது. அம்மா திடீரென இறந்து விட்டால்… நினைத்துப் பார்க்கவே முடியாத விடயம். அதைக் கற்பனை பண்ணிப் பார்க்கும் போது இத்தனை உணர்வுகளும் ஒருங்கே வந்து விடுமா?

ரவியின் கரைந்துரையும் நாகங்கள்
புலம் பெயர்ந்தாலும் நாம், எமது ஊர், எம்மவர் என்ற ஒரு பற்றுதலோடும் உண்மையாகவே உதவும் நோக்கோடும் வாழ்பவர்கள் மிகச்சிலரே. இக் கதையில் வரும் பி.எம் மும் அப்படியான ஒரு நன்நோக்குடையவர். உணவு விடுதி ஒன்றை நடாத்தி தானும் வாழ்ந்து ஊருக்கும் உதவிக் கொண்டிருக்கும் அவரின் இனப்பற்றும் ஊர்ப்பற்றும் இயல்பாகவே அவரை மற்றவர்களுக்கும் உதவ வைத்தது.

அவரது அந்த நன்நோக்கை தனக்குச் சாதகமாக்கி அவரது உதவியைப் பெற்று அவரது உணவு விடுதியிலே வேலை செய்து தன்னை நிலைப் படுத்திக் கொண்ட ஒருவர் அவருக்கு எதிராகச் செயற்பட முனைந்தது ஊரிலே இரும்புக் கடையில் வேலை செய்த ஒருவர் சில வருடங்களில் தானே இரும்புக்கடை ஒன்றைத் திறந்த ஏமாற்று வித்தையை ஞாபகப் படுத்தியது.

புவனா இராசரட்ணத்தின் அர்த்தங்கள்
பணம் தேடுவது ஒரு அவசியமான செயற்பாடாயினும் புலத்தில் சக்திக்கு மீறி வீடு கார் தளபாடம் என்று வாங்கி விட்டு அதற்காக தமது வாழ்வைத் தொலைப்பவர்கள் பலர். இவர்களில் பலர் தமது பிள்ளைகளுக்கு அந்தந்த வயதில் தேவைப்படும் அன்பு அணைப்பு ஆதரவைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. பணத்தாலும் பொருளாலும் பிள்ளைகள் திருப்தி அடைந்து விடுவார்கள் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு பிள்ளைகளையே தொலைத்து விடுவார்கள்.

புவனா இராசரட்ணத்தின் அர்த்தங்கள் கதையிலும் பெற்றோர் வேலை வேலை என்று திரிய வீட்டில் எந்தப் பிடிப்பும் இல்லாத சூழ்நிலை உருவாக மகன் முரளி போதை மருந்துக்கு அடிமையாகிறான். நீட்டி முழக்காமல் நறுக்கெனச் சொல்லப் பட்ட சிந்திக்க வைக்கும் கதை.

கல்லோடைக்காரனின் மறக்குமா மண்வாசைன…?
சிலர் புலம் பெயர்ந்து எத்தனை வருடங்கள்தான் ஆனாலும் அங்குள்ள நல்லவைகளைக் கண்டும் அனுபவித்தும் அந்தச் சூழலை தமக்குச் சாதகமாக்கி மகிழ்ச்சி கொள்வதை விடுத்து எப்போதுமே ஊரில் உள்ளவைகளையும், ஊரில் வாழும்போதான காலங்களையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.

இந்தக் கதையில் அவுஸ்திரேலிய மண்ணில் வாழும் ஒருவர் ஒவ்வொரு விடயத்தையும் ஊர் நடப்புகளோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு மனம் பொருமுகிறார். ஊர் நினைவுகள் மறக்க முடியாதவைதான். அதற்காக அதையே நினைத்து ஏங்கி ஏங்கி இப்படி வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்த்தும் விதமான கதை. சொல்ல வந்த விடயம் நல்ல விடயம். சற்றுக் குறுக்கிச் சொல்லியிருந்தால் சொன்ன விதமும் மிக நன்றாக அமைந்திருக்கும்.

நித்தியகீர்த்தியின் அது ஒரு பருவகால விளையாட்டு
இணையமும், மின்னஞ்சலும் காதல் பரிமாற்றங்களுக்கான ஊடகங்களாக மாறிவிட்ட இன்றைய காலத்திலும், வேலியினூடு காதல் கடிதங்களைப் பரிமாறிய அன்றைய காலத்திலும் காதல் ஒன்றேயானாலும் அதனது வெளிப்பாடுகள் வேறு விதமான சந்தோசங்களைத் தருவனவாக இருந்தன.

நித்தியகீர்த்தி அவர்களின் அது ஒரு பருவகால விளையாட்டு சொல்ல வந்த விடயம் வேறு கோணத்தில் கனமாக இருந்தாலும் கதையை வாசிக்கும் போது அன்றைய காதலும் வேலிச்சண்டையும் கறுத்தக்கொழும்பான் மாம்பழமும்.. என்று மெல்லிய கிளுகிளுப்புடன் எம்மை அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறது.

கவித்துவம் கலந்து நளினமாக எழுதப் பட்ட இக் கதையின் சாராம்சம், சமூகம், அந்தஸ்து... என்ற போலி கௌரவங்களுக்குப் பலிக்கடாவாகிப் போன வாணி என்ற ஒரு பெண்ணின் வாழ்வைக் கொண்டுள்ளது. பருவத்தே அரும்பிய ஒரு காதல் காரணமாக அவள் 17 வயதிலேயே தன்னை விடப் 12 வயது அதிகமான நந்தகுமாருக்கு மனைவியாக்கப் பட்டு விட்டாள். அம்மாவின் போலி கௌரவந்தான் அதற்கு முக்கிய காரணம்.

வாணியால் அந்த வயதில் அம்மாவை மீற முடியவில்லை. தற்கொலை செய்யும் எண்ணத்தையோ எங்காவது ஓடி விடும் எண்ணத்தையோ அவளால் செயற் படுத்தவும் முடியவில்லை. அதற்குள் அவள் தாயாகியும் விட்டாள். ஆனாலும் திருமண பந்தத்தில் அவள் மனம் ஒட்டவும் இல்லை. ஒரு வேளை நந்தகுமார் வாழ்வின் சூட்சுமங்களை அறிந்தவராக அவளோடு வேறு மாதிரிப் பழகியிருந்தால் அவளும் பழசுகளை மறந்து குடும்பத்துக்குள் முழுமனசோடு இணைந்திருக்கலாம். அது நடக்கவில்லை. 23 வருடங்களின் பின் தன் மகனுக்கும் ஒரு வாழ்வு அமைந்த பின் அவள் நந்தகுமாரை விட்டுப் போகத் துணிகிறாள். ஒரு புரட்சியான கதைதான்.

ஆனால் எத்தனை ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் கணவன் மனைவியை விட்டுப் போவது என்பதும், மனைவி கணவனை விட்டுப் போவது என்பதும் அத்தனை சுலபமான விடயமல்ல. அது சிலரால் மட்டுமே முடிந்த விடயம். இங்கு வாணியின் குணாதிசயத்தைப் பார்த்தால் அவளிடம் 23 வருடங்களாக அந்தத் துணிவு இல்லை. 23 வருடங்களாக வராத அந்தத் துணிவு 23 வருடங்களின் பின் அவளிடம் வருமா என்ற ஒரு கேள்வி என்னுள் எழுகிறது.

இப்படியான ஒரு புரட்சியான முடிவைச் சொன்ன கதாசிரியரின் மனதில், பெண்கள் அழகாக உடுத்துவதும், நகைகள் அணிவதும் தமது அழகைப் புருசனுக்குக் காட்டுவதற்கோ அன்றி வேறு ஆண்களுக்குக் காட்டுவதற்கோ என்ற தப்பான அபிப்பிராயம் பதிந்துள்ளதைக் கதையினூடு காண முடிகிறது.

எஸ். கிருஸ்ணமூர்த்தியின் பசி
பணத்தால் எதையும் வாங்கி விடலாம் என்பது பலரின் நினைப்பு. எவ்வளவுதான் பணம் இருந்தாலும் சிலதை எம்மால் வாங்கி விட முடியாதென்ற உண்மையை எஸ்.கிருஸ்ணமூர்த்தியின் பசி உணர்த்துகிறது.

அவுஸ்திரேலியாவில் வசதியான சூழ்நிலையில் வாழும் தர்சனிடம் பணம் போதுமான அளவு இருந்தும் பக்கத்தில் கடைகள் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் மகளின் பசியை போக்க முடியவில்லை. மகள் பசியால் துடித்த போதுதான் ஈழத்தில் உணவின்றி அல்லலுறும் உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற உத்வேகம் எழுகிறது.

சுருக்கமாக நல்ல விடயமொன்றை மற்றவர்களுக்கு உணர்த்தி விட்ட கதை.

களுவாஞ்சிக்குடி யோகனின் அன்னம்
காதலும் தோல்விகளும் என்றைக்குமே தவிர்க்க முடியாதவை. காதல் தோல்விகள் எமது பெண்களைக் கூனிக் குறுக வைத்ததும், தற்கொலை வரை கொண்டு சென்றதும் போராட்டம் என்ற ஒன்று எமது நாட்டில் தொடங்குவதற்கு முன் சற்று அதிகமாகவே இருந்திருக்கிறது.

களுவாஞ்சிக்குடி யோகனின் அன்னம் அன்றைய சீர், சீதனங்களில் காதலைத் தொலைத்தவள். ஏறத்தாள 40-45 வருடஙகளின் முன் காதலிப்பதே பாவமெனக் கருதப் பட்ட சூழலில் வாழ்ந்த அன்னமும் தற்கொலை வரை செல்லத் தயங்கவில்லை. ஆனாலும் சாகவில்லை.

உறவினரையோ, காதலனாக இருந்து ஏமாற்றிய ஆறுமுகத்தையோ பார்க்க விரும்பாமல் சிங்கப்பூருக்குச் சென்று விட்டாள். அங்கு ஒரு சந்தர்ப்பத்தில் சைமன் என்பவரோடு மனம் ஒத்துப் போக அவரோடு தன் வாழ்வையும் இணைத்து அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து விட்டாள். ஆனாலும் மனதின் அடியில் ஆறுமுகத்தின் மீதிருந்த வெறுப்பு மட்டும் அவளை விட்டு அகலவில்லை. தனது 65வது வயதில் ஒரு திருமண வைபவத்தில் எதிர் பாராத விதமாக அவனைக் காண நேர்ந்த போது உடனேயே அங்கிருந்து வெளியேறி நாட்டுக்குத் திரும்புகிறாள்.

கதை சற்று நீளமாக இருந்தாலும் சொல்லப் பட்ட விதம் நன்றாக உள்ளது. ஆனாலும் புதிய சிந்தனைகளோடு வெளிநாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுமளவுக்கு தன்னை மாற்றிக் கொண்ட அன்னம் ஆறுமுகத்தைக் கணடதும் அவ்விடத்தை விட்டு நகர வேண்டுமா எனவும் எண்ணத் தோன்றுகிறது.

சந்திரவதனா
7.1.2006

Wednesday, August 02, 2006

நிதர்சினி

நெஞ்சை உலுக்கிய கொலைச் செய்தியில் நிதர்சினியின் மரணம் தந்த அதிர்ச்சியில் தமிழ்மகன்தான் இந்தத் தகாத வேலையைச் செய்தான் என்ற போது மனசு வெட்கித் தலை குனிந்தது உண்மை

இது பற்றி றயாகரன் மிகக் காரசாரமான கருத்துக்களை முன் வைத்துள்ளார். ஆனாலும் ஏதோ ஒன்று உறுத்துகிறது. எல்லோரும் ஒட்டு மொத்தமாகக் கூறுவது போல் பெண்களின் கவர்ச்சியினாலும், அவாகள் கவர்ச்சிகரமாக உடை அணிவதாலும்தான் தப்பே நடக்கிறது என்ற தொனிதான், இவரின் கருத்திலும் தொக்கி நிற்கிறது. கூடவே தனது கருத்துக்கு வலிமை சேர்க்க இலக்கியங்களின் துணையை நாடி வலிமையும் தேடியுள்ளர்.

கடைசியில் என்ன, சுற்றிச் சுற்றி வந்து பெண்களின் உடை அணியும் சுதந்திரத்துக்கு ஒரு கட்டுப்பாட்டைக் கொணர்ந்துள்ளார்.

ஏன் ஆண்களின் அழகை இலக்கியங்கள் வர்ணிக்கவில்லையா? திரண்ட புஜங்களும், அகன்ற தோள்களும்.... இப்படி எத்தனை வர்ணனைகள். இதை வாசித்த உடனேயே உணர்ச்சிகளை அடக்க முடியாது பெண்கள் மிருகங்களாகி விடுகிறார்களா? அல்லது ஒரு ஆண் தன் தாயையோ அல்லது தங்கையையோ குளிக்கும் போதோ அல்லது உடை மாற்றும் போதோ கண்டு விட்டால் மிருகமாகி விடுவானா? இல்லை. இல்லவே இல்லை. அந்நியப் பெண் மீதுதான் தனது அடாவடித் தனத்தைக் கட்டவிழ்த்து விடுகிறான். அதற்கு கவர்ச்சி அது இது என்று சால்யாப்பு வேறு.

தென்அமெரிக்கக் காடுகளில் வாழும் "தோங்கா" பழங்குடியினரை பெண்களின் மார்பகங்கள் கவருவதே இல்லையாம். இதழுடன் இதழ் பதித்து முத்தம் கொடுக்கும் வழக்கம் கூட அவர்களிடம் இல்லையாம்.

இப்படிக் கூட நடைமுறைகள் இருக்கும் போது பெண்களின் உடைகளின் மேல் ஆண்கள் தமது மிருகத்தனத்தை ஒழிக்க முற்படுவது அபத்தம்.

.......

எந்தப் பலாத்காரத்தையும் எதிர்க்க பெண்களிடம் துணிவும் வலுவும் இருக்க வேண்டும். அது பெண்களிடம் இல்லையென்று உணரும், தெரியும் பட்சத்தில்தான் ஆண்கள் எதையும் பெண்கள் மேல் திணிக்கவும், பெண்களைப் பலாத்காரப் படுத்தவும் முனைகிறார்கள். துணிகிறார்கள்.

பெண்களைப் பெற்றவர்கள் இதையுணர்ந்து பெண் பிள்ளைகளுக்குத் துணிவூட்டி வளர்த்தால் பெண்களின் எதிர்காலம் இவ்வளவு மோசமானதாக இருக்காது.

சந்திரவதனா
1999-2000
சக்தி இதழுக்காக