Thursday, March 31, 2005

தகைமை

ஏதாவது அதிசயம் நிகழ்ந்து, தபாற்பெட்டியினுள் பணத்தோடு கடிதமோ அல்லது பணம் வென்றிருப்பதாய் கடிதமோ வந்திருக்காதோ என மைதிலியின் மனம் அவாப்பட்டது. அவ்வளவு பணமுடை மைதிலிக்கு.

சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். "யேர்மனிக்கு வந்து எவ்வளவு காலம். புருசனும், பெண்சாதியுமாக ஓடி ஓடி உழைக்கினம். எங்கை போகுது காசெல்லாம்..?" என்று ஒரு சாராரும், "அவையிட்டை நல்ல காசிருக்கும்...!" என்று இன்னொரு சாராரும் பேசிக் கொள்வார்கள்.

மைதிலிக்குத்தான் தெரியும் அவள் படும்பாடு. முகுந்தன் வேலை செய்வதோடு சரி. அவனது சம்பளம் வங்கிக்கு வரும். அதனுடன் தனது கடமை முடிந்து விட்டதாக அவன் நினைப்பு. கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுப்புகளெல்லாம் மைதிலியின் தலையில் பெரும் சுமைகளாகி விட்டன. பணமுடை வரும் போதெல்லாம் "என்னப்பா செய்யிறீர்..? நானும் மாடு மாதிரி உழைச்சுக் கொண்டு வந்து போடுறன். நீர் சும்மா செலவழிச்சுப் போட்டு இருக்கிறீர். என்னை அழிக்கிறதுக்கெண்டே வந்திருக்கிறீர்." முகுந்தன் கத்துவான்.

மைதிலி என்ன செய்வாள். எப்படித்தான் கணக்குப் போட்டுப் பார்த்தாலும் முகுந்தனின் உழைப்பு, வீட்டு வாடகை, மின்சாரம், காப்புறுதிகள்..., முகுந்தன் வாங்கிய புதுக்காருக்கான கட்டுக்காசு... போன்றவைகளுக்கே காணாது. மைதிலியின் சம்பளத்திலும் மாதாமாதம் கொஞ்சம் போட்டால்தான் வங்கி நிலை ஓரளவுக்காவது சரிவரும்.

ஆரம்பத்தில் திட்டமிட்டதென்னவோ மைதிலியின் சம்பளம் சாப்பாட்டுச் செலவுகளுக்கும், பிள்ளைகளின் பாடசாலை, உடுப்புச் செலவுகளுக்குமென்றுதான். ஆனால் முகுந்தனிடம் மெது மெதுவாகத் தலை காட்டத் தொடங்கிய டாம்பீகம், புதுக்கார்.. புதிய தளபாடங்கள்... என்றானதில் செலவுகள் கட்டுக்கடங்க மறுத்தன. இருந்தாலும் மைதிலி இரண்டு வேலைகள் செய்து, வரும் தனது இரு சம்பளத்தையும் சேர்த்து ஒருமாதிரி இதுவரை சமாளித்து வந்தாள்.

ஆனால் இந்த யூரோவும் வந்த பின், மார்க்கில் இருந்த சம்பளம் யூரோவாகிய போது சம்பளம் எண்ணிக்கையில் அரைவாசியானது. பொருட்களின் விலைகள் மட்டும் அப்படியே மார்க் என்பது யூரோ என்று மட்டும் மாற்றப் பட்டன. சம்பளத்தோடு பார்க்கும் போது பொருட்களின் விலைகளெல்லாம் உச்சமாக இருந்ததால், மைதிலியால் செலவுகளை ஒரு வழிக்கும் சமாளிக்க முடியாமல் போகத் தொடங்கியது. இந்த நிலை மைதிலிக்கு மட்டுமல்ல. அனேகமான நடுத்தர வர்க்கக் குடும்பத்தவர் எல்லோருக்கும்தான்.

ஆனாலும் யாரும் மைதிலியிடம் பணமில்லை என்பதை நம்பத் தயாராக இல்லை. ஊரவர்தான் புரிந்து கொள்ளவில்லையென்றால் உற்றவனும் கூடப் புரிந்து கொள்வதில்லை. புரிந்துணர்வில்லாது அவனுள்ளிருந்து எழும் சினங்களும், கோபங்களும் மைதிலியை பணமுடைக்கு மேலால் மனமுடைய வைத்தன.

அதிகமான பெரிய செலவுகள் முகுந்தனாலும், பிள்ளைகளாலும்தான் என்றாலும் பணப்பற்றாக்குறைக்கான காரணி மைதிலி என்பது போலத்தான் வீட்டுக்குள் எப்போதும் குத்தல் கதைகளும், எரிச்சல்களும்.. அதனோடு கூடிய சண்டைகளும் எழுந்தன.

வங்கியில் பணமில்லாத காரணத்தால் திருப்பப்படும் கணக்குகளை, தண்டனைப் பணத்துடன் கட்ட மைதிலி மெதுமெதுவாகக் கடன் படத் தொடங்கினாள். இப்போ கடனும் முட்டி விட்டது. வங்கியும் நெருக்குகிறது. முகுந்தன் கத்துகிறான்.

அதுதான் மைதிலி வேலை தேடுகிறாள். என்ன... வேலை..? பெரிதாய் ஒன்றும் இல்லை. அவள் திறமைக்கோ, தகைமைக்கோ ஏற்றதாய் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே இரண்டு வேலைகள் செய்வதால் மூன்றாவது வேலையையும் பதிந்து செய்வதில் அர்த்தமும் இல்லை. அறாவரி கட்டுவதிலேயே ஒரு சம்பளம் போய்விடும். பதியாமல் கள்ளமாக வேலை செய்யவதென்றால், ஆண்களுக்குக் கைகொடுப்பது உணவுவிடுதிகளும், பிற்சேரியாக்களும் என்றால், பெண்களுக்கோ வீடுகள் மட்டுந்தான். வீடுகளைத் துப்பரவாக்கிக் கொடுக்கும் Putzen (புட்ற்சன்) வேலையை விட்டால் வேறு எதுவும் பெரிதாக யேர்மனியில் இல்லை.

ஊரில் வேலைக்காரர்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டு வாழ்ந்து பழகிய தமிழ்ப் பெண்களில் பலர் இங்கு யேர்மனியில் யேர்மனியரின் வீடுகளில் அவர்களது மலசலகூடங்களைக் கழுவி, படுக்கையை விரித்து, குளியலறைகளைக் கழுவி, சட்டி பானைகளை மினுக்கி... வேறு வழிகள் அவர்களுக்குத் தெரியவில்லை. ஆரம்பத்தில் இதை யாரும் செய்வினையோ..! என்று முகம் சுளித்த மைதிலியும் இப்போ அதையே தேடத் தொடங்கி விட்டாள். இதற்குக் கூட நேர்முகப் பரீட்சை நடப்பதுதான் தவிர்க்க முடியாதது.

மைதிலி செய்தித்தாள்களில் வேலை தேடி, அவர்களுடன் தொலைபேசி.. நேரம் குறித்து இப்போ நூற்றுக்கு மேற்பட்ட நேர்முகப் பரீட்சைகளில் தோற்றி விட்டாள். நடந்து நடந்து கால்கள்தான் ஓய்ந்தனவே தவிர வேலை இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் எதிர் பார்த்த தகைமைகளில் அவளுக்கு பாடசாலைக்குச் செல்லும் வயதில் பிள்ளைகள் இருப்பதுவும், ஏற்கெனவே இரண்டு வேலைகள் செய்வதுவும் பெரும் குறையாக இருந்தன.

பல தடவைகள் அலைந்து உலைந்து பின் ஏமாறுவதில் இனி வேலை தேடுவதில்லை என்று சபதம் எடுப்பாள். அவள் என்ன கதைகளில் வரும் திரெளபதியா..? கூந்தலை அள்ளி முடித்துச் சபதம் எடுக்க..! வங்கியிலிருந்து திரும்பும் காசோலையும், முகுந்தனின் சினப்பும் போதும் அவள் சபதம் தவிடு பொடியாக.

நேற்றும் காலையே தினசரிப்பத்திரிகையைப் பார்த்து அதிகாலையே தொலைபேசி, நேரங் குறித்து அந்த வீட்டுக்கு நடந்தே போயிருந்தாள். பேரூந்தில் போயிருப்பாள். அந்தப் பக்கத்துக்கான பேரூந்து ஓட்டம் சற்று நீண்ட நேர இடைவெளிகளோடு என்பதால் நடந்தாள்.

குறித்த நேரத்துக்கு டாண்.. என்று அவள் அழைப்பு மணியை அழுத்திய போது அந்த வீட்டு யேர்மனியப் பெண் கதவைத் திறந்து விட்டு வியந்து நின்றாள். "நீ ஒரு வெளிநாட்டுக்காரி. இத்தனை கச்சிதமாக குறித்த நேரத்துக்கு வந்து நிற்கிறாய்" என்று பாராட்டினாள். தன்னை "ரெகினா" என்று அறிமுகப் படுத்தினாள்.

வீடு நான்கு மாடிகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மாடியும் விஸ்தாரமானதாய் இருந்தன. ரெகினா ஒவ்வொரு அறையாகக் காட்டிய போது ஒவ்வொரு மாடியிலுமிருந்த மலசலகூடங்களும், குளியலறைகளும், படுக்கையறைகளினுள்ளான படுக்கைகளும் மைதிலியின் மனதை மலைக்க வைத்தன. எப்படி மூன்று மணித்தியாலங்களுக்குள் நான்கு மாடிகளையும் துப்பரவாக்கி முடிப்பது என்று பயமாகக் கூட இருந்தது. ஆனாலும் அவள் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. கொஞ்சக்காலத்துக்காவது செய்து பணப்பிரச்சனையைத் தீர்த்தால் போதும் என்று மனசு கணக்குப் போட்டது. ஒவ்வொரு நாளும் மூன்று மணித்தியாலங்கள் என்னும் போது ஒருவாறு செய்து முடித்து விடலாம் என்ற நம்பிக்கையும் ஒரு புறமிருந்தது.

ஆனாலும் ஏற்கெனவே இரண்டு வேலைகளுடன், வீட்டு வேலைகளையும் செய்து முடிக்கவே அவளுக்கு போதும் போதுமென்றிருக்கும். இப்போ இந்த வேலையுமென்றால் பிள்ளைகளைக் கூடச் சரியாகக் கவனிக்க முடியாது போகலாம். மனதுக்குள் சங்கடமாகத்தான் இருந்தது. சில காலத்துககுச் செய்து விட்டு, பிறகு இந்த வேலையை விட்டு விடலாம். எண்ணிக் கொண்டாள்.

"நான் ஒண்டுமே சொல்ல மாட்டன். என்ன செய்யோணுமெண்டு நீயே பார்த்து அதுகளைச் செய்யோணும். ஒரு மாதத்துக்கு ஒருக்கால் எல்லா யன்னல் கண்ணாடியளையும் கழுவிப் போடோணும். 3 மாதத்துக்கு ஒருக்கால் யன்னல் சீலைகளையெல்லாம் நீயே கழற்றி வோசிங்மெசினில் போட்டு எடுத்து திரும்பவும் கொழுவீடோணும். குசினி அலுமாரியள் எல்லாத்தையும் கிழமைக்கொருக்கால் பழிச்செண்டு துடைச்சு விடோணும். புத்தகங்களை நான் எடுத்து வாசிச்சுப் போட்டு அப்பிடி இப்பிடி எங்கையாவது வைப்பன். நீ அதுகளைப் பார்த்து எடுத்து, சரியான இடங்களிலை அடுக்கி வைக்கோணும். புத்தகங்களிலையோ, புத்தக அலுமாரிகளிலையோ தூசி கொஞ்சமும் இருக்கக் கூடாது. அதிலை நீ கவனமாக இருக்கோணும். அடிக்கடி பார்த்துத் துடைச்சுப் போடோணும்." ரெகினா சொல்லிக் கொண்டே நடந்தாள்.

அங்கிருந்த புத்தக இறாக்கைகளும் அலுமாரிகளும், மட்டும் மைதிலியை வெகுவாகக் கவர்ந்தன. புத்தகங்களைக் பார்க்கும் போது மைதிலியின் கண்களில் தெறித்த ஆர்வத்தை ரெகினாவும் கண்டிருக்க வேண்டும்.

"உனக்கு புத்தகங்கள் என்றால் பிடிக்குமோ..? வாசிப்பியோ..? " உடனேயே கேட்டும் விட்டாள்.

"ஓம் ஓம் எனக்கு நல்லாப் பிடிக்கும்."

ரெகினா சில புத்தகங்களை இறாக்கையில் இருந்து இழுத்து மேசையில் போட்டாள். ஒரு புத்தக அட்டை அழகும் அமைதியும் குடிகொண்ட இந்திரா காந்தியின் முகத்துடன். மற்றது வாலில் நெருப்பு எரிய அனுமாருடன்...

"இதெல்லாம் வாசிப்பியோ..?" வியப்புடன் மைதிலி வினாவினாள்.

"ம்.. ம். நான் பல தடவைகள் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் போயிருக்கிறன்."

ரெகினா வீட்டின் ஒவ்வொரு பகுதியாகக் காட்டிக் கொண்டு போகும் போது தனது வாழ்க்கையின் சில பகுதிகளையும் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது கணவன் கடந்த வருடம் ஒரு கார் விபத்தில் இறந்து விட்டாராம். அவளுக்கு வயது ஐம்பதாம். பார்த்தால் நாற்பது, நாற்பத்தைந்துதான் மதிக்கலாம். தற்போது தன்னை விட ஐந்து வருடங்கள் இளைய ஒரு நண்பனுடன் வாழ்கிறாளாம். பிள்ளைகள் எல்லாம் தனித்தனியே வெவ்வேறு நகரங்களில் குடியேறி குடும்பம் குழந்தை என்று வாழ்கிறார்களாம். அவர்கள் இங்கு இவளைப் பார்க்க என்று வரும் போது தங்க இடம் வேணுமென்றுதான் இத்தனை பெரிய வீட்டை வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறாளாம்.

அறிமுகம் எல்லாம் முடிய "சரி.. இன்னும் 29 பெண்கள் நேர்முகப் பரீட்சைக்கு வருவார்கள். எழுபது பேர் மட்டிலை தொலைபேசியிலை அழைத்தார்கள். அவர்களிலை 30 பேரைத்தான் அழைச்சனான். நீதான் முதல் ஆள். நாளைக்குக் காலைமை எட்டு மணிக்கு முடிவு சொல்லுறன்" என்று சொல்லி வழியனுப்பி வைத்தாள்.

மைதிலிக்கு அந்த வீட்டுக்குள் குவிந்திருக்கும் வேலையை நினைத்து மலைப்பாக இருந்தாலும் மாதம் மாதம் கிடைக்கப் போகும் 400யூரோவின் அவசியம் அதிகமாக இருந்தது. வீட்டுக்குள் இருந்த ஏதோ ஒன்று அந்த வேலை கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டியது.

அந்த நம்பிக்கையோடுதான் அன்றைய தூக்கம். தூக்கத்தில், சின்னவன் சயந்தன் கேட்ட அடிடாஸ் சப்பாத்தை வாங்கிக் கொடுப்பது போலவும், பெரியவனின் பள்ளிக்கூட ரூறுக்கு அனுமதி வழங்குவது போலவும், அரவிந்தன் சினப்பை மறந்து சிரித்துச் சந்தோசமாகக் கதைப்பது போலவும் ஏதேதோ இனிய கனவுகள். ஒருவித சந்தோசமான எதிர்பார்ப்புடன்தான் அவளது இன்றைய பொழுது விடிந்தது. ரெகினா கதைத்ததை நினைத்துப் பார்க்கையில் கண்டிப்பாக வேலை கிடைக்கும் போலவே இருந்தது.

எட்டுமணிக்கு எதிர்பார்த்தபடி தொலைபேசி அழைத்தது. "மைதிலி உன்னை எனக்கு நல்லாப் பிடிச்சுது. ஆனாலும் நான் வேறையொரு பெண்ணை வேலைக்கு எடுத்திட்டன். புத்தகங்களைப் பார்க்கிற பொழுது உன்ரை கண்களிலை தெரியிற ஒளியும், காணுற புத்தகத்தையெல்லாம் சடாரென்று வாசிக்கத் தொடங்கிற உன்ரை ஆர்வமும்.... நீ புட்ற்சனுக்கு ஏற்ற பெண்ணில்லையென்று எனக்கு உடனையே தெரிய வைச்சிட்டுது. உனக்கு வேறையேதும் நல்ல வேலைதான் சரி. வேணுமெண்டால் நீ அடிக்கடி என்ரை வீட்டுக்கு வா. இந்தப் புத்தகங்களிலை விருப்பமானதை எடுத்துக் கொண்டு போய் வாசி...." அதற்கு மேல் மைதிலிக்கு அவள் சொன்னவை எதுவும் காதில் விழவில்லை.

நம்பிக்கைகள் மீண்டும் தவிடு பொடியாகின. வாசிப்பின் மீதான ஆர்வம் கூட இப்போது புட்ற்சன் செய்வதற்கு இருக்க வேண்டிய தகைமைகளில் மூன்றாவது குறையாக.. அவளைக் கலங்க வைக்க, ஏதாவது அதிசயம் நிகழ்ந்து, தபாற்பெட்டியினுள் பணத்தோடு கடிதமோ அல்லது பணம் வென்றிருப்பதாய் கடிதமோ வந்திருக்காதா என்ற அங்கலாய்ப்போடு தபாற்பெட்டியைத் திறந்தாள்.

வீட்டுவாடகை கட்டுப்படாததற்கான கண்டனக் கடிதம் எச்சரிக்கைப் பணத்தோடு சேர்த்துக் கணக்குப் போட்டு வந்திருந்தது.

சந்திரவதனா
யேர்மனி
19.8.2004

நட்பு

அழுதழுது லலிதாவின் முகம் வீங்கியிருந்தது. கண்கள் சிவந்திருந்தன. நிம்மதியின்றி வீட்டுக்குள் அங்கும் இங்குமாய் அலைவதும், ஒன்றும் செய்ய மனமின்றி எங்காவது வெறித்துப் பார்ப்பதுமாய் இருந்தாள்.

அவளின் பதினான்கு வயது மகள் துளசியைக் காணவில்லை. நேற்று மதியம் பாடசாலை முடிய வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு பியானோ வகுப்புக்குப் போனவள் வீடு திரும்பவில்லை. அனேகமான சமயங்களில் லலிதா போய் காரில் ஏற்றிக் கொண்டு வருவாள். நேற்றுக் காரை அரவிந்தன் கொண்டு போய் விட்டதால் பேரூந்தில் வரச் சொல்லியிருந்தாள்.

என்ன நடந்திருக்கும்...? என்ன நடந்திருக்கும்...? என்ற கேள்வி தலையைக் குடைந்து கொண்டே இருந்தது. மதியம் நான்கு மணிக்கு வரவேண்டியவள், இரவு எட்டு மணியாகியும் வரவில்லையென்றதும் லலிதா பியானோ வகுப்பு மாஸ்டர், நண்பிகள்... என்று ஒவ்வொருவராய் தொலைபேசியில் அழைத்து விசாரித்து விட்டாள். ஒவ்வொருவரும் 3.30 க்கு வகுப்பு முடிய துளசி வெளியில் போனது வரைதான் தமக்குத் தெரியும் என்றார்கள்.

லலிதாவுக்கு நெஞ்சு திக்.. திக்கென்று கொண்டே இருந்தது. வெளியில் ஓடி ஓடித் தேடினாள். அரவிந்தனும் வேலை முடிந்து வந்த பின்னர் அரவிந்தனோடு ஆலோசித்து இனி வேறு வழியில்லை என்ற நிலையில் பொலிசுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு விடயத்தைச் சொன்னாள்.

"14 வயசுப் பிள்ளை கொஞ்சம் லேற்றா வாறது சகயம்தானே! இதுக்கு நீங்கள் பயப்படத் தேவையில்லை. ஒரு பிள்ளையை 24 மணித்தியாலங்களுக்கு மேலை காணேல்லை எண்டால்தான் நாங்கள் தேடத் தொடங்குவம்." என்றார் தொலைபேசி இணைப்பில் நின்ற காவல்நிலைய அதிகாரி.

லலிதா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "யேர்மனியப் பிள்ளையள் வேணுமெண்டால் அப்பிடி இருக்கலாம். எங்கடை பிள்ளையளை நாங்கள் எங்கடை கலாச்சாரத்தோடை வளர்க்கிறம். அவள் ஒரு நாளும் எங்களுக்குச் சொல்லாமல் வெளியில் போனதில்லை. 6 மணிக்கு மேலை நாங்கள் பிள்ளையை வெளியிலை விடுறதும் இல்லை. அவள் வகுப்பு முடிஞ்சதும் வீட்டை வந்திடுவாள். இண்டைக்கு அவள் வரேல்லையெண்டால் அவளுக்கு வேறையேதோ நடந்திட்டுது." என்றாள்.

நிலைமையைப் புரிந்து கொண்ட காவல்நிலைய அதிகாரி துளசியின் புகைப்படத்துடன் லலிதாவை காவல் நிலையத்துக்கு வரச் சொன்னார்.

லலிதாவும் அரவிந்தனும் காவல்நிலையத்துக்குப் போனபோது அவளது உடைந்து போன உள்ளத்தின் வெளிப்பாடு முகத்தில் தெரிந்ததினாலோ என்னவோ காவல் நிலைய அதிகாரிகள் அவளை அநுதாபத்துடன் நோக்கினார்கள். உள்ளே கூட்டிச் சென்று இருத்தி விபரம் கேட்டு எழுதினார்கள். "பிள்ளையை அடித்தீர்களா? அல்லது வீட்டில் ஏதாவது சண்டை வந்ததா?" எனத் துருவித் துருவிக் கேட்டார்கள். அவளுக்கு "Boy Friend (ஆண் நண்பன்) இருக்கிறானா?" என்றும் கேட்டார்கள்.

லலிதா "அப்படியெதுவும் நடக்கவுமில்லை. அவளுக்கு ஆண் நண்பனும் இல்லை." என அடித்துச் சொன்னாள். அரவிந்தனை விட லலிதாதான் கூடுதலாகக் கதைத்தாள்.

அவர்கள் எல்லாவற்றையும் ஒரு அறிக்கையாக எழுதிவிட்டு லலிதாவையும், அரவிந்தனையும் கையெழுத்திடச் சொன்னார்கள். "24 மணி நேரம் தாண்டிய பின்னும் பிள்ளையைக் காணவில்லையென்றால் பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் அறிவிக்கிறோம்," என்றார்கள்.

உடனே அரவிந்தன் துடித்துப் பதைத்து "அப்பிடியொண்டும் செய்து போடாதைங்கோ. பொம்பிளைப் பிள்ளை. காணேல்லையெண்டு பேப்பரிலை வந்தால் எங்கடை மானம் மரியாதையெல்லாம் கப்பலேறீடும். வேண்டாம்... எங்கடை கலாச்சாரம் பற்றி உங்களுக்குத் தெரியாது...!" என்றார்.

அவர்கள் லலிதாவையும், அரவிந்தனையும் சற்று நூதனமாகப் பார்த்து விட்டு "உங்கள் இஸ்டம். ஏதாவது தகவல் கிடைத்தால் அறிவிக்கிறோம். நீங்களும் உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக எங்களுக்குத் தெரியப் படுத்துங்கள். மூன்று நாளைக்கு மேல் பிள்ளையைக் காணவில்லை என்றால் நாங்கள் பொது ஊடகங்களுக்கு அறிவிப்போம்." என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

காவல் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை எழுதிய இரு காவல் நிலைய அதிகாரிகளினதும் முழு நம்பிக்கையும் துளசிக்கு ஒரு காதலன் இருக்கிறான் என்பதுதான்.

துளசி காணாமல் போய் 24 மணித்தியாலங்கள் கடந்து விட்டன. அரவிந்தன் விடுப்பு எடுக்க முடியாத நிலையில் வேலைக்குப் போய் விட்டான். லலிதா போகவில்லை. சுகமில்லை என அறிவித்து விட்டு நின்றாள். அவளை இல்லாத பொல்லாத நினைவுகளெல்லாம் அலைக்கழித்துக் கொண்டிருந்தன. இப்போதெல்லாம் துளசியின் வயதுப் பிள்ளைகள் அடிக்கடி காணாமல் போகிறார்கள். பின்னர் அவர்கள் பிணமாகவே மீட்கப் படுகிறார்கள். சிலர் மீட்கப் படாமலே கூட காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப் பட்டு விடுகிறார்கள்.

நேற்றும் கூட வடக்கு யேர்மனியின் - கீல் - நகரிலிருந்து காணாமற் போன 13 வயது நிரம்பிய லூசி என்ற பெண்குழந்தை காட்டினுள் பிணமாகக் கண்டெடுக்கப் பட்டாள். அவள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளாள் என்பதும் வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத ஒருவராலேயே கடத்தப் பட்டு இக்கதிக்கு ஆளாகியிருக்கிறாள் என்பதும் நேற்றைய தொலைக்காட்சி செய்தியில் ஒளி பரப்பானது.

ஓய்ந்து போயிருந்த அழுகை இப்போது லலிதாவிடமிருந்து ஒப்பாரியாக வெளிவந்தது. வீட்டில் யாரும் இல்லை. துளசியும் லூசி போல்....... இறந்திருந்தால்......... என்ற நினைவு வந்து அவளை இம்சித்தது. துளசியை கட்டிப் பிடித்துக் கொஞ்சி நிறையப் பேச வேண்டுமென மனசு அவாப்பட்டது.

"ஏதாவது தகவல் கிடைத்தால் அறிவி." என்று சொல்லி விட்டுத்தான் அரவிந்தன் வேலைக்குப் போனான். ஆனால் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்பதை சொல்வதற்காகவே லலிதா இரண்டு மூன்று தடவைகள் அரவிந்தனைத் தொலைபேசியில் அழைத்து அழுது விட்டாள்.

இந்த நேரம் பார்த்துத்தான் யார் யாரோ எல்லாம் தொலைபேசியில் லலிதாவை அழைத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு அழைப்பு வரும் போதும் அது துளசிதான் என நினைத்து தொலைபேசியை அவசரமாக எடுக்க.. மறுமுனையில் வேறு குரல்கள் அவளை அலுக்க வைத்தன. துளசியைக் காணவில்லை என்பதையோ தனது துயரத்தையோ யாரும் அறிந்திடக் கூடாது என்பதில் அவள் மிகவும் கவனமாக இருந்தாள். பெண்பிள்ளையைக் காணவில்லை என்றால் ஊர் என்ன பேசும் என்ற பயம் அவளுக்கு. இருந்தாலும் "என்ன லலிதா ஒரு மாதிரிக் கதைக்கிறீர்..! சுகமில்லையே..?" என்று சிலர் கேட்கத்தான் செய்தார்கள்.

லலிதா மீண்டும் மீண்டுமாய் அரவிந்தனை தொலைபேசியில் அழைத்து அழுதாள். "இப்பிடியே நானும் நீங்களுமாக அவளை எப்பிடிக் கண்டு பிடிக்கிறது. உதவிக்கு உங்கடை சினேகிதரையும் கேட்டுப் பாருங்கோவன். அவர்களுக்காவது அவளைக் காணேல்லை எண்ட கதையைச் சொல்லுங்கோ. எனக்குச் சரியான பயமாயிருக்கு. என்ரை பிள்ளை உயிரோடை வரேல்லை எண்டால்..... நானும் உயிரோடை இருக்க மாட்டன்." புலம்பினாள். அரவிந்தன் தானே தனக்குள் குழம்பியிருக்கும் போது லலிதாவின் புலம்பல் அவனை இன்னும் குழப்பியது. அவளையே தனது உற்ற நண்பர்கள் சிலரோடு தொலைபேசியில் கதைக்கச் சொன்னான்.

லலிதா அவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தாள். அரவிந்தனின் உற்ற நண்பர்களெனக் கருதப்படும் நான்கு பேரில் ஒருத்தரோடு கூட அவளால் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல நேர முயற்சியின் பின் சிறீதான் அதுவும் கைத்தொலைபேசியில் கிடைத்தான்.

லலிதாவால் விடயத்தைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. அழுகைதான் முந்திக் கொண்டு வந்தது. ஒருவாறு சொல்லி முடித்த போது முதலில் ரவி கொஞ்சம் தடுமாறினான். தொடர்ந்து லலிதா அழுகையும் ஏக்கமுமாய் தவித்த போதுதான் அதைச் சொன்னான்.

துளசி கிருபாவுடன்தான் நிற்கிறாளாம். கிருபா வேறு யாருமல்ல. அரவிந்தனின் உற்ற நண்பர்களில் ஒருவன். 35 வயது நிறைந்த அவனுக்கு 14வயது மட்டுமேயான துளசி மேல் காதலாம். அதுதான் பியானோ வகுப்புக்குப் போய் அப்பா கூட்டிக் கொண்டு வரச் சொன்னவர் என்று சொல்லி தனது காரிலேயே ஏற்றி.. பக்கத்து நகரிலுள்ள தனது வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போயிட்டானாம். துளசிக்கும் கிருபாவில் விருப்பமாம். அதனால் இது விடயத்திலை அரவிந்தனும் லலிதாவும் மறுப்புத் தெரிவிக்காமல் ஒத்துழைக்கோணுமாம்.

லலிதாவுக்கு ஒன்றையும் சரியாக அனுமானிக்க முடியாமல் இருந்தது. ஒரு கணம் தலை சுற்றியது. கட்டிக் காத்து துளசியை இத்தனை கட்டுப்பாடோடு வளர்த்ததெல்லாம் இதற்குத்தானோ..? குழம்பினாள்.

துளசி சின்னப்பிள்ளை. கல்யாணம் செய்து குடும்பம் நடத்தும் வயதல்ல அவளுக்கு. அவளின் பருவ வயதுப் பேதைமையை அப்பா ஸ்தானத்தில் இருக்க வேண்டிய அப்பாவின் 35வயது நண்பன் நன்கு பயன் படுத்தியிருக்கிறான். நட்புக்குள்ளே ஒளிந்திருந்த வஞ்சகம் லலிதாவினது நெஞ்சைச் சுட்டது. அழுவதற்குக் கூட திராணியற்றவளாய் துவண்டு போனவளின் மனசில் எண்ண அலைகள் உக்கிரம் கொண்டு திமிறின.

துளசியை அவளின் வயதையொத்த நண்பர்களுடன் பழக விட்டிருந்தால் இப்படியொரு கீழ்த்தரமான செயற்பாடு நடந்திருக்க பெரும்பாலும் வாய்ப்புக்கள் இருந்திருக்காது. சின்னப் பிள்ளைகளிடம், கைகோர்த்துத் திரியும் ஒரு இதமான காதல்தான் இருக்கும். இப்படி பெற்றோர்க்குத் தெரியாமல் ஓடிப் போகும் மந்த புத்தி அதுவும் இந்த ஐரோப்பிய மண்ணில் வரவே வராது.

இப்போதுதான் லலிதாவுக்குச் சில தெளிவுகள் ஏற்பட்டன. கட்டுப் பாடாக வளர்க்கிறோம் என்று சொல்லி அப்பாவின் வயதையொத்தவன் மேல் காதல் வரும் படியாக மகளை உலகம் தெரியாதவளாக கண்மூடித்தனமாக வளர்த்து விட்ட தவறு புரிந்தது. படிக்க வேண்டிய வயதில் இப்படியொரு பொறுப்பற்றவனிடம் மனதைப் பறி கொடுக்கும் படியான அறியாமையோடு மகளை வளர்த்து விட்ட தமது அறியாமை விளங்கியது.

"இனி என்ன செய்யலாம்..?" யேர்மனியில் இப்படியான இளம் வயதுக் கல்யாணக் கூத்துக்களுக்குச் சட்டமும் இடமளிக்காது. அதில் லலிதாவுக்கும் துளியும் இஸ்டமில்லை. இந்தச் சின்ன வயதில் இப்படியான ஒருவனிடம் தனது மகளின் வாழ்வு அடங்கிப் போவதைச் சம்மதிக்க அவள் ஒரு போதும் தயாராகவும் இல்லை.

"இனியென்ன..? அவனோடு போய் விட்டாள். எமது கலாச்சாரப்படி அவனோடுதானே வாழ வேண்டும்." என்று இந்திய சினிமா பாணியில் தன்னை முட்டாளாக்கவும் லலிதா விரும்பவில்லை. என்ன செய்யலாம் என்று நன்றாக யோசித்தாள்.

சட்டப்படி 14 வயதுப் பெண்பிள்ளையுடன் 18 வயதுக்குக் கூடிய ஒரு ஆண் படுக்கையைப் பகிர்ந்து கொண்டால் அது காதல் என்ற கணக்கில் சேர்க்கப் பட மாட்டாது. அது அப் பெண்பிள்ளையின் முழுமனதான சம்மதத்துடன் நடந்திருந்தாலும் கூட பாலியல் துர்ப்பிரயோகம் என்ற பெயரிலேயே பார்க்கப் படும். சட்டப்படி அந்த ஆணுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும். குறிப்பாக.... யேர்மனியில் இப்படியான பாலியல் துர்ப்பிரயோக நிகழ்வுகளுக்கான தண்டனைகள் மிகவும் கடுமையானதாகவே இருக்கும்.

துளசி தவறு செய்தாலும் கூட ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து அவளைத் திருத்த வேண்டியவன் மட்டுமல்ல கிருபா. அவன் அரவிந்தனின் நண்பனும் கூட.. ஆனால் அவன் நட்பின் போர்வைக்குள் இருந்து... துளசியின் வாழ்க்கையோடு விளையாடியிருக்கிறான். புலம் பெயர் மண்ணில் இப்படி வெறும் போலிகளாக...! நட்பு என்ற சொல்லுக்கே களங்கம் கற்பிக்கும்.. எத்தனை அப்பாவின் நண்பர்கள்? இவர்களை இனியும் சும்மா விடக்கூடாது.

சற்று நேரத்துக்கு முன் மனமொடிந்து வீழ்ந்து போயிருந்த லலிதா இப்போ திடம் கொண்டு எழுந்தாள். தனது மகள் துளசி கிருபாவால் கடத்தப் பட்டு விட்டாள் என்று காவல்நிலையத்துக்கு அறிவிப்பதற்காக.

சந்திரவதனா
யேர்மனி
22.2.2004

Sunday, March 27, 2005

திசைகள் மார்ச் 2005 - ஒரு பார்வை

பலகாலமாகப் பெண்கள் எழுதிக் கொண்டிருந்தாலும் இதுவரை காலமும் எழுத்துலகமே ஆண்களுக்கானது போன்ற ஒருவித பிரமை எம்மிடையே உலாவி வந்துள்ளது. பழமொழிகள் என்றால் என்ன! பாடல்கள் என்றால் என்ன! கட்டுரைகள் என்றால் என்ன! எதுவானாலும் பெரும்பாலும் ஆண்களாலேயே முன்மொழியப் பட்டு, அவை பெண்களை அடக்குவதாகவும், பெண்களுக்கு "அடங்கிப் போ!" என்று புத்தி கூறுவதாகவும், பெண்களுக்கு எதுவுமே தெரியாது. அவர்கள் எடுத்து வைக்கப் போகும் ஒவ்வொரு அடிக்கும் நாம்தான் படி அமைத்துக் கொடுக்கிறோம் என்பது போலாகவும், எழுதப் பட்டுக் கொண்டிருந்தன.

காலங்காலமான அந்த எழுத்துக்களை உடைக்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சிலரால் சஞ்சிகைள், பத்திரிகைகள் என்று உருவாக்கப் பட்டு முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களுடன் அவை பெண்களின் பிரச்சனைகளைப் பேசுவதாயும், பெண்களுக்குத் தைரியமூட்டுவதாயும் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதற்கான எதிர்ப்புக் குரல்கள் ஒவ்வொரு வெளியீட்டின் போதும் வெளியில் கேட்கவும் தவறுவதில்லைத்தான். இருப்பினும் இதை எப்படி வெளியில் சொல்வது? என்று தயங்கும் எத்தனையோ பெண்களுக்கு இப்படியான சஞ்சிகைகள்தான் தைரியத்தைக் கொடுத்து அவர்களின் மௌனத்தைக் கலைத்திருக்கின்றன..

இந்த நிலையில் மாலன் அவர்கள் இணையத்திலே பெண்களுக்கான ஒரு இணையச் சிறப்பிதழை, பெண்களின் ஆக்கங்களைக் கொண்டு தயாரித்தது மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது. 27பெண்கள் தமது படைப்புக்களைக் கொடுத்திருக்கிறார்கள். சிந்தனைகள், உணர்வுகள், பார்வைகள், கருத்துக்கள்... என்று அவை வெவ்வேறு கோணங்களிலிருந்து வந்துள்ளன. எழுதியவர்களில் அனேகமானோர் ஓரளவுக்கேனும் தமது கருத்துக்களைத் துணிந்து வெளியில் சொல்பவர்களேயானாலும், அவர்களுக்கு மீண்டும் திசைகள் மூலம் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்த மாலன் அவர்களுக்கு நன்றி கூறிக் கொண்டு இதழினுள் நுழைகிறேன்.

அவ்வ்வ்வவ்வவ்வவ்வவ்வளவும் பெண்கள் என்ற தலைப்போடு அழகிய முகப்பு. பவித்ரா சிறீனிவாசனின் கருத்தாழமிக்க சுயம் என்ற வர்ணஓவியம் திசைகளின் முகப்புக்கு அழகோடு மெருகூட்டுகிறது.

உள்ளே படைப்பாளிகள் பற்றிய சிறு அறிமுகம் பெயரளவிலும் படைப்புகள் வாயிலாகவும் மட்டும் தெரிந்த 27பேரை ஓரளவுக்கேனும் அறிந்து கொள்ள உதவுகிறது. ஒவ்வொருவரையும் பற்றி வாசித்துவிட்டு இன்னும் உள்ளே போனால் எதை முதலில் வாசிப்பது என்று மனசு தடுமாறுகிறது. அனேகமான எல்லோருமே ஏதோ ஒரு வகையில் எழுத்துக்களால் எம்மைக் கவர்ந்த, எழுத்துலகினூடு எமக்கு அறிமுகமானவர்களே.

நான் முதலில் தேர்ந்தெடுத்தது அனிற்றா நாயர் எழுதிய "ஒரு தேடல் ஒரு பயணம் ஒரு அனுபவம்" - Ladies Coupe - நூலுக்கான ஜெயந்தியின் விமர்சனம். தினமும் எத்தனையோ எழுத்துக்களை வாசிக்கிறோம். அவற்றில் சில எழுத்துக்கள் எம்மனதில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில எழுத்துக்கள் அமைதியையும் வாசித்தோம் என்ற ஒரு ஆழ்ந்த திருப்தியையும் ஏற்படுத்துகின்றன. சிலது கோபத்தையும் எரிச்சலையும் கூட ஏற்படுத்துகின்றன. ஆனால் எந்த ஒரு விடயத்தையும் அழகாகவும் வாசித்த திருப்தி ஏற்படும் விதமாகவும் எழுத முடிவது எழுத்தாளனின் திறமையே. அந்த வகையில் ஜெயந்தியின் ஒரு தேடல் ஒரு பயணம் ஒரு அனுபவம் - Ladies Coupe - நூல் விமர்சனத்தை வாசித்து முடிந்ததும் மிகுந்ததொரு திருப்பதி ஏற்பட்டது. ஜெயந்தி தான் அந்த கதையை மிகவும் ரசித்து வாசித்ததோடு நின்று விடாமல் தனது உணர்வுகளை ரசனை கலந்து எங்களுக்கும் தந்துள்ளார். கதாநாயகி அகிலாவின் பிரச்சனைகளையே மையமாகக் கொண்டு கதை விரிந்திருந்தாலும்.. கதையை வாசித்த பின் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தாண்டிய ஒரு நிறைவு மனசுக்குக் கிடைத்தது. சில நாட்களாக அக்கதையைச் சுற்றி மனம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஜெயந்தியின் எழுத்துக்களும் சொற்பிரயோகங்களும் கூட மிகுந்த தரமாக அமைந்திருந்தது அதற்கொரு காரணமாயிருக்கலாம்.

சிறுகதைகளில் - வாசித்ததும் நிலாவின் "தகப்பன் சாமி" பிடித்துப் போனது. தமது மனைவியரை தமது உடைமைகளாக நினைக்கும் கணவன்மார்கள், தமது மகளை கணவனுடன் அனுப்பி விட்டு ஒரு அப்பாவாக நிற்கும் போதுதான் சில விடயங்களை உணர்ந்து கொள்கிறார்கள். இதில் நிலா தானே மகளாக நின்று கதையைக் கொண்டு செல்கிறார். அம்மாவை அடக்கி வைக்கும் அப்பா... அம்மாவை பிறந்த வீட்டுக்கு அனுப்பவே விரும்பாத அப்பா.. அதாவது கண்ணுக்குத் தெரியாத விலங்கை அம்மாவுக்கு மாட்டி, அம்மாவோடு குடித்தனம் நடத்தும் அப்பா.. அதைக் கண்டு மனசு பொறுக்காத மகளாக நின்று தனது கணவனோடு சேர்ந்து பாடம் புகட்டி வாழ்வையும் அம்மாவின் உணர்வுகளையும் கதையினூடாகப் புரிய வைக்கும் விதம் அருமை.

லதாவின் "நாளை ஒரு விடுதலை" சிங்கப்பூரில் வீட்டில் வேலை செய்பவளாக அவஸ்தைப் படும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. அந்நிய தேசத்தில் அந்நியளாய் நின்று கூசிப் போவது ஒரு புறமிருக்க, வீட்டில் முதலாளி அம்மாவிடம் வேலைக்காரியாகப் படும் அவஸ்தை மறுபுறம். இவைகளோடு பெண் என்பதால் முதலாளி ஐயாவின் சபலத்துக்கும் தப்பாத... பணத்துக்காகப் புலம் பெயர்ந்து அரேபிய நாடுகளிலும் சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் வாழ்வைத் தொலைத்த பல பெண்களின் கதைக்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

ஷைலஜாவின் "படிப்பு" சிறுகதையில் - பிஎஸ்ஸி படித்த ஒரு பெண் சீதனம் கொடுத்தால்தான் காதலன் கைபிடிப்பான் என்பதற்காக தனது அண்ணனின் மனதைப் பற்றிச் சிறிதேனும் சிந்திக்காமல் கொடுக்கத் தயாராகிறாள். அதே நேரம் ஒரு படிப்பறிவில்லாத பெண் அண்ணனின் நிலத்தைக் கொடுத்துத்தான் கல்யாணம் என்றால் அப்படி அண்ணனின் நிலத்துக்கு ஆசைப்படும் மாப்பிள்ளை தனக்கு வேண்டாமென மறுக்கிறாள். படிப்பினையூட்டும் ஒரு கதை. படிப்பறிவில்லாத இந்தப் பெண்ணின் தைரியமும் திடமும் எல்லாப் பெண்களுக்கும் வரவேண்டும். சீதனம் என்று வரும் போது சீதனம் கேட்பவனை மணமுடிக்க மாட்டோம் என்று ஒட்டு மொத்தப் பெண்களுமே ஒத்து நின்றால் இந்தச் சீதனம் இன்று வரை நிலை கொண்டு நிற்குமா..?

தொடர்ந்த மற்றைய சிறுகதைகளும் நல்ல கருப்பொருட்களையே கொண்டுள்ளன. பெற்றோர்கள் பிரிவதால் பிள்ளைகள் மனசால் தனித்துப் போவதை ரமா சங்கரனின் "புகையும் தனிமை" சொல்கிறது.

புலம் பெயர்ந்து நமக்கு நாமே என்று இருக்கும் நிலையில், பலர் அக்கரைப் பச்சை தேடி இருந்த குடும்ப உறவையும் தொலைத்து நிற்கும் சோகம் புலத்தில் அவ்வப்போ நிகழத் தவறுவதில்லை. றஞ்சியின் "அக்கரைப்பச்சை" அப்படியொரு சோகத்தைத்தான் சொல்கிறது. நல்ல எதிர்காலத்தை கனடாவில்தான் தேட முடியும் என்ற நினைப்பில் மனைவியையும் குழந்தையையும் கனடாவுக்கு அனுப்பி மனைவியையும் தனிமைப் படுத்தி சுவிஸில் தனது நிகழ்காலத்தையும் தொலைத்த ஒருவரின் கதை இது.

ஜனகாவின் "உதிரிப்பூக்கள்" மலர்க்கடையில் எஞ்சிப் போன உதிரிப்பூக்கள் போல, சொந்த பந்தமின்றிப் பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளை, தான் வளர்க்க நினைக்கும் ஒரு நல்மனதின் கதை.

இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின் "மேதகு வேலுப்போடி" பூசாரிகளின் தில்லுமுல்லுகளைச் சொல்கிறது.

கவிதைகள் ஏழு இடம் பிடித்துள்ளன. ஏதோ ஒரு லயமும், மெலிதான சோகமும் கவிதைகளில் படர்ந்திருக்கின்றன. கருப்பொருளில் ஜெஸிலா ரியாஸின் வேலைப்பழு என்னைக் கவர்ந்தது.

கட்டுரைகளில் அறிவியல், பொருளாதாரம், பிரச்சனை, உரிமை என்று வெவ்வேறு கோணங்களிலான நான்கு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கற்பகம் இளங்கோவின் அறிவியல் கட்டுரையோடு, பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டதுதானே என்று பேசப்படும் உலகில் உள்ள ஊனமுற்ற பெண்களின் பிரச்சனைகளை பத்மா அரவிந்தும், பணியிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை செல்வநாயகியும் தந்துள்ளார்கள். பெண்விடுதலையின் முதற்படிகளில் கல்வியும் சுயதொழிலும் முன்நிலையில் நிற்கின்றன. இந்தச் சுயதொழில் என்பது மூலை முடுக்குகளிலுள்ள எத்தனையோ பெண்களை தலை நிமிர வைத்துள்ளது. அச் சுயதொழிலுக்கான மூலதனமான நுண்கடனால், பெண்கள் எப்படி நன்மை பெற்றார்கள் என்பதையும், அது எப்படி எங்கே ஆரம்பித்தது என்பது பற்றியும் அருணா ஸ்ரீநிவாசன் தந்துள்ளார்.

குட்டி ரேவதியின் முலைகள் கவிதைத் தொகுப்பு சம்பந்தமான விவாதம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. புதியமாதவி, வைகைச்செல்வி, உஷா ராமச்சந்திரன், திலகபாமா ஆகியோர் இவ்விவாதத்தில் கலந்து கொண்டுள்ளார்கள். நால்வரும் சொன்ன பெரும்பாலான கருத்துக்களோடு என்னால் உடன் பட முடிகிறது. உஷா ராமச்சந்திரன் குறிப்பிட்டது போல இப்படிதான் எழுத வேண்டும் என்று யாருக்கும் சட்டதிட்டங்கள் சொல்ல முடியாது. ஆனால் படைப்பின் நோக்கம் முற்றிலும் திசைமாறிப் போவதில் அர்த்தம் இல்லை. குட்டி ரேவதியின் நோக்கம் திசைமாறியதா...? அது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் குட்டிரேவதியின் அக்கவிதைத் தொகுப்பை நான் வாசிக்கவேயில்லை. அதனால் அவர் எந்த நோக்குடன் அக்கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் என்றோ, என்ன நிலையில் அதனுள்ளான கவிதைகளை எழுதினார் என்றோ எதற்காக அந்தப் பெயரை வைத்தார் என்றோ என்னால் சரியாக அனுமானிக்க முடியவில்லை. இந்த நிலையில் அத்தொகுப்புப் பற்றிய எனது எந்தக் கருத்தையும் முன் வைக்கவும் முடியவில்லை.

ஆனால் எதையும் நாம் எழுதுவோம் யார் கேட்பது என்பது போன்றதான வீம்பும் அழகானதல்ல. ஏனெனில் பெண்விடுதலை என்பது ஆண்களோடு மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கும் ஒரு விடயமே அல்ல. காலங்காலமான நடைமுறைகளில் ஆண்கள் ஆளுமைக்குரியவர்கள் என்பது போலவும்ää பெண்கள் அடங்கிப் போக வேண்டியவர்கள் என்பது போலவும் பிரமைப் படுத்தப் பட்டு அதனூடும் அதற்குச் சார்பாகவுமே எல்லா விடயங்களும் இசைவு பெற்று விட்டன. அந்த இசைவாக்கத்திலிருந்து ஆண்கள் விடுபடவும் பெண்களின் உணர்வுகளைப் புரிந்து பெண்களும் மனித ஜென்மங்கள்தான் என்பதை உணர்ந்து செயற்படவும் ஏற்ற வகையில் அவர்களுக்குப் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில் நாங்கள் இதற்குத்தான் லாயக்கானவர்கள் எனத் தம்மைத் தாமே தாழ்த்தி நினைக்கும் பெண்களுக்கு தைரியத்தைக் கொடுத்து, உன்னால் முடியாதது எதுவுமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இவைகள்தான் பெண்விடுதலையின் அத்திவாரங்களாக அடியெடுக்கின்றன. அதைப் பெண்கள் மறந்து போய்; விடக் கூடாது.

சந்திரவதனா
யேர்மனி
28.3.2005

Thursday, March 10, 2005

கனவான இனிமைகள்

இன்றைய சுமதியின் கனவு மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. வழமையான கனவுகள் போல கட்டிலில் இருந்து தொப்பென்று விழுவதாயோ திடுக்கிட்டு விழித்து அழுவதாயோ இருக்கவில்லை.

நேற்றிரவு படுக்கையிலேயே சுமதிக்கும் அவள் கணவனுக்கும் காரசாரமான சண்டை வந்து விட்டது. சண்டை என்னவோ வழமையாக வரும்ä ஊருக்குப் பணம் அனுப்பும் விடயத்தில்தான் ஆரம்பித்தது.

சுமதியின் அம்மாவிடமிருந்து நேற்றுக் கடிதம் வந்திருந்தது. அதில் "பொம்பிளைப் பிள்ளையைக் கேட்கக் கூடாதுதான். ஆனாலும் என்ன செய்யிறது பிள்ளை! என்னாலை ஒண்டையும் சமாளிக்கேலாமல் கிடக்கு. சாப்பாட்டுக்கே கஷ்டமாயிருக்கு. ஏதாவது உதவி செய் பிள்ளை... என்று எழுதியிருந்தது.

சுமதி இதைப்பற்றி முதலே கணவன் மாதவனோடு கதைக்கத்தான் விரும்பினாள். ஆனால் மாதவனோ, இவள் இது பற்றிக் கதைத்து விடுவாளே! என்ற பயத்தில் தான் ஏதோ முக்கியமான வேலையில் இருப்பதுபோல கொம்பியூட்டரின் முன் இருந்து ஏதோ தேடுவது போலவும், ரெலிபோனில் முக்கிய விடயங்கள் பேசுவது போலவும் பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தான். இவள் காத்திருந்து சலித்து படுக்கைக்குப் போய் அரைமணித்தியாலங்களின் பின்பே அவன் படுக்க வந்தான்.

அம்மாவின் கடிதம்äசாப்பாட்டுக்கே காசில்லையென்று, பணம் கேட்டு வந்த நிலையில், எந்த மகளால் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியும். சுமதி நிம்மதியின்மையோடு படுக்கையில் புரண்ட படியே "இஞ்சை...! அம்மான்ரை Letter பார்த்தனிங்கள்தானே. தம்பியவங்கள் என்ன கஷ்டப் படுறாங்களோ தெரியேல்லை. என்ரை இந்த மாசச் சம்பளத்திலை கொஞ்சக் காசு அனுப்பட்டே?" மாதவனிடம் கேட்டாள்.

மாதவனிடமிருந்து மௌனம்தான் பதிலாய் வந்தது.

"என்ன...! சொல்லுங்கோவன்.........! அனுப்பட்டே.......?"
சுமதி கெஞ்சலாய்க் கேட்டாள்.

"உன்னோடை பெரிய தொல்லை. மனிசன் ராப்பகலா வேலை செய்திட்டு வந்து நிம்மதியாக் கொஞ்ச நேரம் படுப்பம் எண்டால் விடமாட்டாய்...! லைற்றை நிப்பாட்டிப் போட்டுப் படு." கத்தினான் மாதவன்.

சுமதிக்கும் கோபம் வந்து திருப்பிக் கதைக்க, வாய்ச்சண்டை வலுத்தது.

"..............! "

"..............!"

"..............!"

இறுதியில் "நீயும் உன்ரை குடும்பமும் கறையான்கள் போலை எப்பவும் என்னைக் காசு காசெண்டே அரிச்செடுப்பீங்கள்." மாதவன் இரவென்றும் பாராமல் கத்தினான்.

"என்ரை குடும்பத்துக்கு நீங்களென்ன அனுப்பிக் கிளிச்சுப் போட்டீங்கள். நான் வந்து பத்து வருஷமாப் போச்சு. இப்ப மட்டிலை ஒரு ஆயிரம் மார்க் கூட நீங்கள் என்னை அனுப்ப விடேல்லை. நானும் வேலை செய்யிறன்தானே. என்ரை காசை வீட்டுச் செலவுக்கு எடுத்துக் கொண்டு உங்கடை காசை உங்கடை அண்ணன்மார் கனடாவிலையும், அமெரிக்காவிலையும் வீடு வேண்டுறதுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறீங்கள்." சுமதியும் ஆக்ரோஷமாகச் சீறினாள்.

மாதவனுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வர "என்ரை குடும்பத்துக்குக் காசு அனுப்புறதைப் பற்றி, நீ என்னடி கதைக்கிறாய்? நான் ஆம்பிளை அனுப்புவன். அதைப் பற்றி நீ என்னடி கதைக்கிறது?" கத்திய படியே எழுந்து, சுமதியின் தலையை கீழே அமத்தி முதுகிலே ஓங்கி ஒரு குத்து விட்டான்.

சுமதி வலி தாளாமல் "அம்மா...........!" என்று அலறினாள். மீண்டும் மாதவன் கையை ஓங்க தன்னைக் காத்துக் கொள்ள எண்ணிய சுமதி, அவன் கைகளை அமத்திப் பிடித்துத் தள்ளினாள்.

"என்னடி எனக்கு நுள்ளிறியோடி.....? உனக்கு அவ்வளவு திமிரோ......?" மாறி மாறி அவள் நெஞ்சில், கைகளில், முதுகில் என்று தன் பலத்தையெல்லாம் சேர்த்து மாதவன் குத்தினான்.

சுமதியால் வலியைத் தாங்க முடியவில்லை. "மிருகம்" என்று மனதுக்குள் திட்டியவாறு அப்படியே படுத்து விட்டாள். மாதவன் விடாமல் திட்டிக் கொண்டே அருகில் படுத்திருந்தான். சுமதி எதுவுமே பேசவில்லை. மௌனமாய் படுத்திருந்தாள் மனதுக்குள் பேசியபடி. கண்ணீர் கரைந்தோடி தலையணையை நனைத்துக் கொண்டிருந்தது. மனசை நிறைத்திருந்த சோகம் பெருமூச்சாய் வெளியேறிக் கொண்டிருந்தது.

...................................................

சுமதி படுத்திருந்தாள். மாதவனின் திட்டல்கள் எதுவும் அவள் காதுகளில் விழவில்லை.

அப்போது அவள் முன்னே ஒரு அழகிய ஆண்மகன் குளித்து விட்டு ஈரத்தைத் துடைத்த படி, பின்புறமாக நின்றான். திரண்ட புஜங்களுடன், மாநிறமான ஒரு ஆண் மகன் ஈரஞ் சொட்ட நின்ற போது, சுமதிக்கு அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்து அந்த ஆண்மகன் சுமதியின் பக்கம் முகத்தைத் திருப்பினான். அழகிய முகம். அவன் புன்னகை சுமதியைக் கொள்ளை கொண்டது.

"என் இலட்சிய புருஷன் இவன்தான்." சுமதியின் முகம் நினைப்பிலே களிப்புற்றது. சுமதி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடையில் இன்னொருவன் வந்து நின்றான். அந்த இன்னொருவனைப் பார்க்கச் சுமதிக்குப் பிடிக்கவில்லை.

தன் மனங்கவர்ந்த முதலாமவனை அவள் தேடினாள். முதலாமவனின் கண்கள் அந்த இன்னொருவனையும் தாண்டி இவளுள் எதையோ தேடின. தேடியவன் மெதுவாக இவளருகில் வந்தமர்ந்தான். அந்த நேரம் பார்த்து யாரோ இடையே வந்து விட அவன் போய் விட்டான்.

அடுத்தநாள் அவன் நினைவுகளுள் மூழ்கியபடியே சுமதி லயித்திருந்தாள். அவன் வந்தான். எனக்காக..., என்னைத் தேடி..., எனக்குப் பிரியமான ஒருவன் வந்திருக்கிறான். என்ற நினைவில் சுமதி மிகவும் சந்தோஷப் பட்டாள்.

அதற்கடுத்த நாளும் அவன் நினைவுகளைச் சுமந்த படி, வருவானா..! என்ற எதிர்பார்ப்பு நிறைந்த கேள்வியோடு அவள் வீட்டிலிருந்து வெளியேறி வீதியிலிறங்கி நடக்கத் தொடங்கினாள்.

அது இரு பக்கமும் மரங்களடர்ந்த ஒரு அமைதியான, அழகான பாதை. அந்த ரம்மியமான சூழலில், காதலுணர்வுகள் மனதை நிறைக்க, அதில் அவன் நினைவுகளை மிதக்க விட்டபடி சுமதி நடந்து கொண்டிருந்தாள். தூரத்தில் அவன் வந்து கொண்டிருப்பது தெரிந்ததும், இனம் புரியாத இன்பத்தில் மிதந்தாள்.

எனக்காக வருகிறான். எனக்கே எனக்காக வருகிறான். தேநீரோ, சாப்பாடோ கேட்க அவன் வரவில்லை. என்னில் காதல் கொண்டு, என்னைத் தேடி வருகிறான். என்னைப் பார்க்க ஆசை கொண்டு வருகிறான். என்னோடு கதைத்துக் கொண்டு இருக்க வருகிறான். என்னைச் சமையலறைக்குள் அனுப்பி விட்டு, தான் ஒய்யாரமாக இருந்து தொலைக்காட்சி பார்க்கும் எண்ணம் அவனுக்கு இல்லை. என்னைச் சாமான்கள் வாங்கக் கடைக்கு அனுப்பி விட்டு, நான் தோள் வலிக்கச் சாமான்களைத் தூக்கிக் கொண்டு வரும்போது, தொலைபேசியில் நண்பருடன் அரட்டை அடிப்பது மட்டுமல்லாமல், "நான் என்ரை மனிசிக்கு முழுச்சுதந்திரமும் குடுத்திருக்கிறன்." என்று சொல்லுகிற வக்கிரத்தனம் அவனுக்கு இல்லை.

அவனிடம் எந்த சுயநலமும் இல்லை. எனக்கே எனக்காக என்னைப் பார்க்க என்னைத் தேடி வருகிறான். என்னைப் பக்கத்தில் வேலைக்காரி போல வைத்து விட்டு, ஊர்ப் பெண்களுடன் அரட்டை அடித்துத் திரியும் கயமைத்தனம் இவனிடம் இல்லை.

ஆயிரம் நினைவுகள் சுமதியை ஆக்கிரமிக்க ஆவலுடன் அவன் வருவதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அன்று போல் அவன் அரை குறை ஆடையுடன் இன்று இல்லை. தூய உடை அணிந்திருந்தான். அவன் நெருங்க நெருங்க சுமதி அவனை முழுமையாகப் பார்த்தாள்.

புன்னகையால் அவள் மனதை ஜொலிக்க வைத்த அவன் தலையில், மெலிதாக நரையோடியிருந்தது. சுமதி அவன் வரவில் மகிழ்ந்தாள். வானத்தில் பறந்தாள். ஏதோ தோன்றியவளாய் பக்கத்திலிருந்த பாதையில் திரும்பினாள். அவன் இரண்டு அடி தள்ளி அவள் பின்னே தொடர்ந்தான்.

அது ஒரு பூங்கா. ஆங்கு ஒரு சிறு குடில். அவன் அதனுள் நுழைந்து அங்கிருந்த வாங்கிலில் அமர்ந்து சுமதியைக் கண்களால் அழைத்தான்.

சுமதி அவன் பார்வைக்குக் கட்டுண்டவள் போல், போய் அவனருகில் அமர்ந்து கொண்டாள். அவன் சுமதியின் வலதுகை விரல்களை பூக்களைத் தொடுவது போல், மிகவும் மெதுவாகத் தொட்டுத் தூக்கி, தன் மறுகையில் வைத்தான். அவன் தொடுகையில் உடற் பசியைத் தீர்க்கும் அவசரமெதுவும் இல்லை. அன்பு மட்டுமே தெரிந்தது.

சுமதியின் வானத்தில் நட்சத்திரங்கள் தெரியத்தொடங்கின. அவள் மிகமிகச் சந்தோஷமாயிருந்தாள். வாழ்க்கையின் அர்த்தம் அவளுக்குப் புரிந்தது.

திடீரென்று அவளை யாரோ தோளில் பிடித்து உலுப்பியது போல இருந்தது. திடுக்கிட்ட சுமதி விழிகளைத் திறந்து பார்த்தாள்.

அங்கே பூங்காவும் இல்லை. புஷ்பங்களும் இல்லை. கனவுக்காதலனும் இல்லை. மாதவன் தான் விழிகளைப் புரட்டியபடி, கோபமாக, "அலாம் அடிக்கிறது கூடக் கேட்காமல் அப்பிடியென்ன நித்திரை உனக்கு வேண்டிக் கிடக்கு. எழும்படி. முதல்லை பொம்பிளையா லட்சணமா இருக்கப் பழகு...!"

"கெதியா தேத்தண்ணியைப் போட்டுக் கொண்டு வா. நான் வேலைக்குப் போகோணும்." கத்தினான்.

ஏதோ "பொம்பிளையளுக்குச் சுதந்திரம் கிடைச்சிட்டு" என்று ஊரெல்லாம் பேசிக் கொண்டிருக்கினம். சுமதிக்குச் சுதந்திரம் என்ற வார்த்தையின் அர்த்தமே புரியவில்லை.

அம்மாவின் கடிதம் மேசையில் மடித்த படி இருந்தது. மனசு கனக்க அவள் மௌனமாய் தேத்தண்ணியைப் போடத் தொடங்கினாள்.

உடலெல்லாம் வலித்தது.

அன்றைய கனவு மட்டும் மனதின் ஓரத்தில் அமர்ந்திருந்து, வாழ்க்கையின் இனிமை எங்கோ தொலைந்து விட்டது என்பதை அவளுக்கு உணர்த்தியது.

சந்திரவதனா - யேர்மனி
பிரசுரம் - ஈழமுரசு பாரிஸ்(மார்ச் - 8 - 14 - 2001)
பிரசுரம் - ஈழமுரசு அவுஸ்திரேலியா

Monday, March 07, 2005

வேஷங்கள்

காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.

"எப்படி அவனால் முடிந்தது...! எப்படித் துணிந்து சொன்னான்...!" காலையில் சந்துரு சொன்ன செய்தியில் கொதிப்படைந்த அவள் கோபத்தை அக்சிலேட்டரில் காட்டினாள்.

சந்துரு வேறு யாருமல்ல. அவள் கணவன்தான். 15வருடத் திருமண வாழ்க்கை. அன்புக்குச் சின்னமாக நிலாவினி அவர்களின் செல்ல மகள்.

"நேற்று இரவுவரை அன்பாகத்தானே இருந்தான்...! நடித்தானா...?" காலையில் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான் என அவள் கனவில் கூட நினைக்கவில்லை.

"உமா உம்மோடை நான் கொஞ்சம் கதைக்கோணும்." காலையில் தேநீருடன் சென்ற உமா, படுக்கையிலிருந்த அவனை எழுப்பிய போது குழைந்தான்.
அவனது வார்த்தையின் பரிவில் நெகிழ்ந்து, அப்படியே அவனருகில் கட்டில் நுனியில் அமர்ந்து, அவன் மார்பின் சுருண்ட கேசங்களைக் கோதிய படி
"சொல்லுங்கோ" என்றாள் மிக அன்பாக.

"நீ அழக் கூடாது."

"சும்மா சொல்லுங்கோ."

சில கணங்கள் நிதானித்து
"உமா நான் இண்டையிலையிருந்து முன்சனில் தங்கப் போறன்."

"ஏன்....?"
மிகவும் திடுக்கிட்டவளாய்

"ஒவ்வொருநாளும் பயணஞ் செய்யிறது சரியான கஸ்டமாயிருக்கு."

"இவ்வளவு நாளும் செய்தனிங்கள்தானே! இப்ப மட்டும் என்ன வந்தது..?"

"பார்த்தீரே..! இப்பவே ரென்சன் ஆகிறீர். நான் இன்னும் விசயத்துக்கே வரேல்லை. "

" ....... "
சந்துருவின் புதிருக்கு மௌனமாக தனக்குள் விடை தேடினாள்.

"உமா உமக்குத் தெரியுந்தானே என்னோடை அந்தச் சக்கி என்ற செக்கொஸ்லாவியப் பொம்பிளை வேலை செய்யிறது..?"

"ஓமோம். புருசன்காரன் விட்டிட்டுப் போயிட்டான் எண்டு சொன்னனிங்கள். அவள்தானே......! பாவம்...... அவளின்ரை மகன் எப்பிடி இருக்கிறான்?"

"அது வந்து...... உமா..! அவளின்ரை மகன் சரியான சுகமில்லாமல் இருக்கிறான். அவளுக்கு என்ரை உதவி தேவைப் படுது. அதுதான் என்னை வந்து.... "

"வந்து...... "

"தன்னோடை இருக்கச் சொல்லிக் கேட்கிறாள். "

"அதுக்கு.....! "

"அதுதான் அவளோடை போய் கொஞ்ச நாளைக்கு இருப்பமெண்டு தீர்மானிச்சிருக்கிறன்."

விக்கித்துப் போன உமா விருட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து விட்டாள். ஒரு கணம் துடிக்க மறந்த அவளது இதயம் மீண்டும் அவசரமாகத் துடிக்கத் தொடங்கியது. வார்த்தைகள் வெளி வர மறுத்தன.

"யோசிக்காதையும். நான் உம்மட்டையும் வந்து வந்து போவன். உமக்கென்ன குறை இஞ்சை இருக்கு. ஊரிலை போலை அடுப்பை ஊதி... உடுப்பைக் கல்லிலை அடிச்சுத் தோய்ச்சு... இப்பிடி ஒரு கஸ்டமும் இல்லைத்தானே... எல்லா வசதிகளும் இருக்குத்தானே. "

"இதெல்லாம் நீங்களாகுமோ..? நீங்கள் அவளை விரும்பிறீங்களோ...?"

"இல்லை... இல்லை... அவள்தான் என்னை உயிருக்குயிராய் விரும்புறாள். நான் இல்லையெண்டால் அவளுக்கு ஒரு துணையும் இல்லை. "

"நானும் அம்மா அப்பா சகோதரங்களையெல்லாம் விட்டிட்டு வந்திருக்கிறன். இந்தப் பெரிய ஜேர்மனியிலை உங்களையும் நிலாவினியையும் விட்டால் எனக்கும் வேறை ஆர் இருக்கினம்?" இப்போது அவளிடம் அழுகை பொங்கியது.

"ஏன் இப்ப அழூறீர்? நான் உம்மட்டையும் வருவன்தானே. நீர் படிச்ச பொம்பிளை இதை அனுசரிச்சுப் போகோணும். ஊருலகத்திலை நடக்காத விசயமே இது...!"

"நோ... என்னாலை ஒரு நாளும் இதுக்கு ஒப்புக் கொள்ளேலாது."

உமா கோபமாக முன்னேறி மூர்க்கத்தனமாக அவனது மார்பில் குத்தினாள். நுள்ளினாள். முகமெல்லாம் பிறாண்டினாள். அவன் அவளைத் தள்ளி விட்டு "பொம்பிளை மாதிரி நடந்து கொள்ளும்." என்று கத்தினான். அவனது இடது கன்னத்தில் இவளது நகம் பட்டு இரத்தம் துளிர்த்து நின்றது. வலியோடு அதைத் தடவியவன் கையில் பட்ட இரத்தத்தை அவளிடம் காட்டி, "இங்கை பாரும் எனக்கு இரத்தக் காயம் வர்ற அளவுக்கு பிறாண்டியிருக்கிறீர். இதுக்கு மேலை என்னைத் தொட்டீரோ..! நடக்கிறது வேறை. நானும் சும்மா இருக்க மாட்டன். என்ரை முடிவு முடிவாகீட்டுது. ஒத்துப் போனீர் எண்டால் உமக்கும் நல்லது. எனக்கும் நல்லது. நிலாவினிக்கும் நல்லது. இல்லாட்டி நீர்தான் கஸ்டப் படுவீர். நிலாவினிக்கு இதொண்டும் தெரியத் தேவையில்லை. "

உமாவுக்கு மலைப்பாக இருந்தது. தனது மூர்க்கத் தனமான செய்கையில் எரிச்சலாகவும், வெட்கமாகவும் இருந்தது. "என்னவெல்லாம் இவன் சொல்கிறான்" என்று கலக்கமாகவும் இருந்தது. சக்கியைப் பற்றி சந்துரு ஏற்கெனவே சொல்லியிருக்கிறான். அவளுக்காக உமாவும் பரிதாபப் பட்டிருக்கிறாள். அதுக்காக சந்துருவே போய் சக்கிக்கு வாழ்க்கை கொடுப்பதென்பது எந்த வகையில் நியாயமானது? "இவன் சொல்வதெல்லாம் உண்மைதானா அல்லது தன்னைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறானா" என்று குழம்பினாள்.

நிலாவினியும் வீட்டில் இல்லை. பாடசாலை ரூர் என்று போய் விட்டாள். திரும்பி வர இன்னும் எட்டு நாட்களாகும்.

"நீங்கள் சும்மா பகிடிக்குத்தானே சொல்லுறிங்கள்...?" ஒரு நப்பாசையோடு கேட்டாள்.

"இல்லை உமா. சீரியஸாத்தான் சொல்லுறன். எனக்கு உம்மையும் விருப்பம்தான். ஆனால் இப்ப சக்கிக்கு என்ரை உதவி தேவை. "

இயலாமை என்ற ஒன்று இப்போ உமாவை ஆக்கிரமித்தது. "ஓ....." வென்று குழறினாள்.

"ஏனப்பா இப்படிக் குழறுறீர்? பக்கத்து வீட்டுச் சனத்துக்கெல்லாம் கேட்கப் போகுது. என்ன நினைக்குங்குள். ஊரெண்டு நினைச்சீரே. ஏதோ மூண்டாந்தர குடும்பங்கள் மாதிரிக் கத்திறீர்!"

"ஆர் என்ன நினைச்சாலும் எனக்குப் பரவாயில்லை. நீங்கள் செய்யத் துணிஞ்சது மட்டும் முதலாந்தரமா இருக்கோ..?"

வார்த்தைகள் மிகச் சூடாக அநாகரிகமாக நீண்டு... ஒன்றோடொன்று மோதி.. உமாவுக்கு, சந்துரு முரட்டுத்தனமாக அடிக்க, உமா தன்னைக் காத்துக் கொள்ள எண்ணி, இழுத்துப் பறித்து கதவில் இருந்த திறப்பையும் இழுத்து எடுத்துக் கொண்டு வெளியில் ஓடினாள். கொஞ்ச நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றவள்... காரையும் எடுத்துக் கொண்டு இலக்குத் தெரியாமல் ஓடி.. சிவப்பு லைற்றில் தரித்து நின்றாள்.

சிக்னல் பச்சையாக, பின்னிருந்த காரோட்டி கோன் அடித்து "தூங்குகிறாயா...?" என்று சைகை காட்டிச் சினக்க.. சிந்தனையிலிருந்து தற்காலிகமாக விடுபட்டு..... மீண்டும் பலம் கொண்ட மட்டும் அக்சிலேட்டரை அழுத்தி சீறிக் கொண்டு பறந்தாள்.

ஒரு பாடசாலையின் முன் ஒரு குழந்தை வீதியைக் கடப்பதை கடைசி செக்கனில் கண்டு அவசரமாக பிறேக்கை அழுத்தினாள். "கடவுளே...! நான் என்ன செய்கிறேன். அந்தப் பிள்ளை அடிபட்டிருந்தால்...?" என்று முனகினாள். அப்படியே போனவள் வழியில் உள்ள மைக்கல் தேவாலயத்தின் அருகில், காரை நிறுத்தி விட்டு தேவாலயத்துக்கான படிகளில் ஏறி ஓரிடத்தில் அமர்ந்தாள். அடக்க முடியாமல் அழுதாள். திடீரென்று நிர்க்கதியாகப் போய் விட்டது போல உணர்ந்தாள். பைத்தியம் பிடித்தவள் போல அரற்றினாள். யோசிக்க முடியாமல் மூளைப்பகுதி நொந்தது. கண்களின் முன்னே மெல்லிய புகைமண்டலம் போல எதுவோ மறைத்தது. எதையும் சரியாகச் சிந்திக்க முடியாமல் திண்டாடினாள்.

சந்துருவுக்கும் அவளுக்கும் இடையில் அடிக்கடி சின்னச் சின்னச் சண்டைகள் சச்சரவுகள் என்று வரத் தவறுவதில்லைத்தான். சண்டைகள் கருத்து வேறுபாடுகள் இல்லாத குடும்பங்களா..? சில சமயங்களில் சந்துருவின் மேல் சந்தேகங்களும் வந்து பொங்கியிருக்கிறாள்தான். அவையும் சந்துரு கூறும் பொய்ச் சமாதானங்களில் பொங்கிய வேகத்தில் அடங்கியும் போயிருக்கின்றன. ஆனால் இந்தளவுக்கு தன்னை அப்படியே விட்டு விட்டுப் போய் இன்னொருத்தியுடன் வாழத் துணிந்த அவன் துணிவும், அதை மிகச் சாதாரண விடயம் போல அவள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவன் வேண்டுகோளும், இவளை நிலைகுலைத்து விட்டன. தன்னவன் இன்னொருத்திக்குச் சொந்தம் என்று தெரிந்தால் எந்தப் பெண்ணால்தான் நிலைகுலையாமல் இருக்க முடியும்.

தேவாலயம் உயர்ந்து கம்பீரமாக நின்றது. உல்லாசப் பிரயாணிகள் உள்ளே சென்று அதன் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தார்கள். சிலர் உச்சியில் நின்று நகரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இவளுக்கும் ஒரு விபரீத ஆசை வந்தது. தானும் போய் ஏறினாள். அதிக எண்ணிக்கையான வளைந்து வளைந்து செல்லும் படிகளில், ஒவ்வொன்றாக ஏறும் போது மனச்சோர்வுடன் உடற் சோர்வும் சேர்ந்து கால்கள் தடுமாறின. தலை சுற்றியது. ஆனாலும் ஏறி விட்டாள். மூச்சு வாங்கியது. மேலே நின்று பார்த்தாள். எதுவும் தெளிவில்லாமல் ஏதோ ஒரு மெல்லிய புகைமண்டலம் முன்னே தெரிந்தது. பச்சை மரங்கள் கூட புகை போர்த்தி வெண்மை பேர்ந்த பச்சைகளாகத் தெரிந்தன. யாரும் எதிர் பார்க்காத ஒரு கணத்தில் எம்பிக் குதித்தாள்.

அங்கு நின்ற எல்லோருமே அதிர்ச்சியில் அவலக்குரல் எழுப்ப அவள் இரத்தமும் சதையுமாய் தேவாலயத்தின் படிகளில் சிதறினாள். ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற அந்த இடத்தை பொலிஸ்வாகனங்களும் அம்புலன்ஸ் வண்டியும் அல்லோல கல்லோலப் படுத்தின. சிவப்பும் வெள்ளையும் கலந்த தடுப்பு நாடாக்கள் கட்டப்பட்டு அந்த வீதியிலான போக்குவரத்துக்களும் மக்கள் நடமாட்டமும் தடைப்படுத்தப் பட்டது.

இது மூன்றாவது சாவு. முதலில் 14வயது நிரம்பிய ஒரு யேர்மனிய மாணவி. அடுத்து ஒரு இந்தியத் தமிழ்ப்பெண். இப்போ இலங்கைத் தமிழ்ப்பெண். தேவாலயஉச்சிக்கு இனி யாருமே ஏற முடியாது என்ற அறிவித்தலோடு தேவாலயத்தினுள்ளே இருந்த உச்சிக்கு ஏறும் படிகளை மறித்து கேற் போட்டு பெரிய மாங்காய்ப்பூட்டு போடப் பட்டது.

விசாரரணைகள் தொடர்ந்து... சாக்கில் அள்ளிக் கட்டப் பட்ட உமாவின் உடல் என்று சொல்லப் பட்ட சதைத் துண்டுகள் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு கிழமைகள் ஓடி விட்டன. சந்துருவைத் துக்கம் விசாரிக்க உறவினர்கள் என்ற பெயரில் சிலரும், நண்பர்களும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

சந்துரு சோகமாய் தாடியை மழிக்காமல் தேவதாஸ் வேடம் போட்டிருந்தான். யார் வீட்டுக்கு வந்தாலும் ஒரு சோகப் பாட்டுள்ள இசைத்தட்டை சுழல விட்டு தன் சோகத்தை இன்னும் பலமாக மற்றவர்களுக்குக் காட்டினான். அழுவாரைப் போல இருந்து "அவ பாருங்கோ சரியானநல்லவ. ஆனால் யேர்மனியிலை இருக்கிற எல்லாப் பொம்பிளையளுக்கும் உள்ள அதே பிரச்சனைதான் அவவுக்கும். தனிமைதான் எல்லாத்துக்கும் காரணம். தாய் தகப்பன் ஊரிலை. சொந்தம் எண்டு சொல்லிக் கொள்ள ஒருவரும் பக்கத்திலை இல்லை. நானும் வேலையோடை. மகள் நிலாவினி பள்ளிக்கூடம் ரூர் எண்டு திரிவாள். இவ நாள் முழுக்க வீட்டிலை தனியத்தானே. அதுதான் அவவுக்கு சரியான மனஅழுத்தம். எப்பவும் சும்மா இருந்து அழுறதும்....." சொல்லிக் கொண்டே இருந்தான்.

சந்திரவதனா
ஜேர்மனி
7.3.2005