பிள்ளைகள் மூன்று பேரையும் இழுத்துக் கொண்டு விமானத்திலிருந்து குதித்து விடுவோமா..! என்ற எண்ணம் எனக்குள் தோன்றியிருந்தது. வாழ்க்கை ஆசை அப்படியே அற்றுப் போய் தற்கொலை எண்ணம் என்னை ஆக்கிரமித்திருந்தது.
விமானத்திலிருந்து குதிக்க முடியுமா..?
என்ன ஒரு மக்குத் தனமான எண்ணம் என்னுள்..!
விமானம் ஏதாவதொரு நாட்டில் தரையிறங்கும் போது பிள்ளைகளுடன் ஓடி விடுவோமா..? மனசு நிலை கொள்ளாமல் தவித்துத் தத்தளித்துக் கொண்டேயிருந்தது. பேதைத் தனமாக எதையெதையெல்லாமோ எண்ணிக் குழம்பியது.
எப்படிப் போய் யார் முகத்தில் முழிப்பது? பணம் போய் விட்டது. யேர்மன் ஆசை மண்ணாகி விட்டது. அவரைக் காணும் களிப்பும் கனவாகி விட்டது.
எல்லோருக்கும் பயணம் சொல்லி ஊரிலிருந்து புறப்பட்டு, அகதிகளாய் வவுனியா கொறவப்பத்தானை ரோட் தேவாலயத்தில் அவதிப் பட்டு கொழும்பிலும் பயணம் சொல்லி விமானம் ஏறிய பின் மொஸ்கோவில் விசா சதி செய்யும் என்று யார் கண்டது!
அப்பவே பக்கத்து வீட்டு மகேசக்கா சொன்னவ-
"நீ..... சரியான துணிச்சல்க்காரிதான். மூண்டு பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு தனிய பிளேன் ஏறப் போறியே...! அதுவும் களவா.. ஏஜென்சிக் காரனுக்கு இவ்வளவு காசைக் கொட்டி..... காசைக் கரியாக்கிற வேலையள்தான் இதுகள்..!"
வார்த்தைகளை அவ கொட்டிய விதத்திலேயே நான் யேர்மனிக்குப் போவதில் அவவுக்கு உள்ள அதிருப்தி அப்பட்டமாகத் தெரிந்தது. நான் எனது கணவரிடம் போவது அவவுக்குப் பிடிக்கவில்லை.
இப்ப நான் திரும்பி வந்து விட்டேன் என்ற உடனே
"நான் சொன்னன் கேட்டியோ..!" என்று நாடியைத் தோள்ப் பட்டையில் இடிக்கத்தான் போறா. அவவாவது எனக்கு முன்னால் இடிப்பா. எனக்குப் பின்னால் இடிக்கப் போகிறவர்கள் எத்தனை பேர்..?
மனசு இந்த அவமானங்களைத் தாங்கும் துணிவின்றி அல்லாடிக் கொண்டிருந்தது.
"அக்கா எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. செத்திடலாம் போலை இருக்கு." எனக்கு நான்கு சீற் தள்ளியிருந்த சாந்தி அரை குறை அழுகையுடன் சொன்னாள்.
என்னையும் எனது பிள்ளைகளையும் சேர்த்து எல்லாமாக 32 இலங்கையர்
மனசுக்குள் அழுத படி இந்த விமானத்துள். ஐந்து நாட்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எயர்லங்காவில் ஏறிய போது இப்படி எல்லாம் நடக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நான் கூட ஏஜென்சி மகாதேவனுக்கு சுளையாக 75000 ரூபா கொடுத்தேன். யேர்மனிய மார்க் எட்டு ரூபா பெறுமதியாக இருந்த 1986ம் ஆண்டில் இந்த 75000 ரூபா கொஞ்சக் காசில்லை.
எல்லாம் ஏஜென்சிமாரின் பிழைதானாம். சரியாக விசாரிக்காமல் மூன்று ஏஜென்சிமார் 32 பேரிடமும் காசை மட்டும் சுளையாக வாங்கிக் கொண்டு விமானத்தில் ஏற்றி விட்டுக் ஹாயாக இருந்து விட்டார்கள். மொஸ்கோ வரை ஒரு பிரச்சனையுமில்லை.
"அக்கா உங்கடை அவர் யேர்மனியிலை எங்கை இருக்கிறார்?" முதலில் வெறுமனே சிரித்த சாந்தி இப்படித்தான் என்னுடன் விமானத்துள் கதைக்கத் தொடங்கினாள்.
எத்தனை தரம் கடிதம் எழுதி என்வலப்பில் அவரின் விலாசம் எழுதி அஞ்சல் செய்திருப்பேன். ஆனாலும் அந்தப் பெயர் வாயில் நுழையவோ நினைவில் நிற்கவோ மறுக்கிறது.
எந்தச் செக்கிங்கிலும் யார் கண்ணிலும் பட்டு விடாதபடி விலாசத்தைச் சுருட்டி எனது சட்டை மடிப்புக்குள் சொருகியிருந்தேன். நான் யேர்மனிக்குத்தான் போகிறேன் என்பது யாருக்கும் தெரியக் கூடாது. பெய்ரூட் (Beirut) போவது போலத்தான் எல்லாம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. யேர்மனியில் ஃபிராங்போர்ட் (Frankfurt) விமான நிலையத்தில் விமானம் தரிக்கும் போது இறங்கி அகதி விண்ணப்பம் கோர வேண்டும்.
விமானத்துள் வந்த ஒவ்வொரு தமிழரும் போக எண்ணிய இடங்கள் சுவிஸ், பாரிஸ், ஹொலண்ட், இத்தாலி... என்று வேறு பட்டிருந்தாலும் எல்லோரும் பெய்ரூட் போவது போலத்தான் பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
ஃபிராங்போர்ட்(Frankfurt) இல் எப்படிக் கதைக்க வேண்டுமென வெளிக்கிடுவதற்கு முதல்நாள் இரவே எனது கணவர் தொலைபேசியில் அழைத்துச் சொல்லியிருந்தார்.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் செக்கிங்கின் போது எனது சிறிய புகைப்பட அல்பத்தில் இருந்த எனது கணவரைப் பார்த்து அவர் இருக்கும் இடம், வளம்... என்று கேள்விகளை அடுக்கினார்கள். வாய் கூசாமல் "பெய்ரூட்" என்று பொய் சொல்லி வைத்தேன்.
"திரும்பி வருவாய் தானே..?"
அதற்கும் "ஓம்" என்று பொய்தான் சொன்னேன்.
விமானம் மேலெழும்பிய போது ஊரை உறவுகளை விட்டுப் பிரியும் துயரில் மனதின் ஒரு பக்கம் கனமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் கனவுகள் கற்பனைகள் என்று இறக்கை கட்டிப் பறக்கத் தொடங்கியது. யேர்மனிக்குப் போய்ச் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது.
கோழிக் குருமா சுவைத்தது. மூன்று சின்னப் பிள்ளைகளுடன் பறக்கிறேன் என்பதால் அக்கறையாகக் கவனிக்கப் பட்டேன். பிள்ளைகள் அந்த உணவுகளின் சுவைகளை ருசிக்க முடியாதவர்களாக இருந்ததால் அடிக்கடி பழங்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
நான்கு இருக்கைகள் தள்ளியிருந்த சாந்தி ஆரம்பத்தில் சிரித்து, பின் கொஞ்சமாய்க் கதைக்கத் தொடங்கி.. மொஸ்கோவை சென்றடைவதற்குள் கிறீம் தந்து "கையுக்குப் பூசுங்கோ அக்கா" என்று சொல்லுமளவுக்கு நட்பாகி விட்டாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். கனவுகளையும் ஆசைகளையும் கண்களுக்குள் நிறையவே தேக்கி வைத்திருந்தாள். கணவனை இரண்டு வருடங்களின் பின் சந்திக்கப் போவதில் என்னைப் போலவே ஆவலாய் இருந்தாள்.
மொஸ்கோவில் விமானம் தரையிறங்கும் போது காது விண்ணென்று வலித்தது.
பிள்ளைகள் வாந்தி எடுத்தார்கள். எமக்கு அங்கே ரான்ஸ்சிட் (Transit).
நாம் அங்கு ஒழுங்கு செய்யப்பட்ட ஹொட்டேல் ஒன்றில் ஒரு நாள் தங்கி அடுத்த நாள் மதியம் லுஃப்தான்சாவில் (Lufthansa) யேர்மனி புறப்படுவதாய்த்தான் ஏற்பாடு.
விமான நிலையத்திலிருந்து எம்மை பஸ்சில் ஹொட்டேலுக்கு அழைத்துச் சென்றார்கள். மொஸ்கோ குளிரில் உறைந்து ஒரு வரண்ட பிரதேசம் போல் காட்சி அளித்தது. பஸ்சில் இருந்து இறங்கிக் ஹொட்டேலினுள் நுழையும் போது குளிர் அறைந்தது. காது மடல்கள் விறைத்தன. ஆனாலும் அவை என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.
மூன்று பிள்ளைகளுடன் உள்ளே சமாளிப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. எனக்கு 19வது மாடியில் இரட்டை அறை ஒன்று தந்திருந்தார்கள். ஓரளவு வசதியான அறை. ஐன்னலால் வெளியில் பார்க்கப் பயமாக இருந்தது. அதே மாடியில் இன்னும் சில தமிழருக்கு அறைகள் கொடுக்கப் பட்டிருந்தன. மிக அமைதியாக இருந்த மாடி எம்மவரின் வருகையில் சற்று அல்லோல கல்லோலப் பட்டிருப்பது போலத் தெரிந்தது.
எவ்வளவுதான் வசதியாக அந்த அறை இருந்தாலும் ஏதோ வசதிக் குறைவு போலவே மனசு சங்கடப் பட்டது. பிள்ளைகளைக் குளிக்க வைத்து சாப்பிடுவதற்காக வெளியில் கீழே கன்ரீனுக்கு அழைத்துப் போன போதுதான் 32 தமிழர்களையும் ஒன்றாகக் கண்டேன்.
பரிச்சயமில்லாத உணவுகளைச் சாப்பிட முடியாமல் சங்கடப் பட்டோம். இரண்டு மேசை தள்ளியிருந்த நான்கு இளைஞர்களில் ஒருவனான ராஜன் சீனியென நினைத்து தேநீருக்கு உப்பைப் போட்டு விட்டு சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான். பார்ப்பதற்குக் கொஞ்சம் ரவுடித் தனமாய்த் தெரிந்தான்.
இரவானதும் சாந்தி பிள்ளைகளுடன் என் அறைக்கு வந்தாள். முகம் தெரியாதவனை மணம் செய்து கொள்ளச் செல்லும் சில பெண் பிள்ளைகளும் வெளிநாடு எப்படியெல்லாம் வாழ்க்கையை மாற்றப் போகிறது என்று தெரியாத பதினெட்டு பத்தொன்பது வயது நிரம்பிய அப்பாவித்தனம் கலையாத ஆண் பிள்ளைகளும் வந்தார்கள்.
எங்கள் கதைகள் - ஊரில் விட்டு வந்த உறவுகளைப் பற்றியும் புகலிடத்தில் சந்திக்கப் போகும் உறவுகளைப் பற்றியுமே சுற்றிச் சுற்றி வந்தன. சிலருக்கு கண்கள் கலங்கி கன்னங்களில் வழிந்தன. நடு இரவில், நினைத்த இடங்களுக்குப் போய்ச் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொருவரும் தத்தமது அறைகளுக்குப் போனார்கள்.
அடுத்தநாள் மதியம் எமக்கான பஸ்சில் ஏறி விமான நிலையத்துக்குச் சென்று ரிக்கெற்றை ஓகே பண்ணுவதற்காக வரிசையில் நின்ற போதுதான் விதி சதி செய்திருப்பதை அறிந்து கொண்டோம். ஒவ்வொருவராக விமானம் ஏறுவதற்கான அனுமதி மறுக்கப் பட்டோம். நானும் சாந்தியும் குழந்தைகளுடன் இருப்பதால் எங்களுக்கு மற்றவர்களை விட கூடிய சலுகை வழங்கப் படுமென எதிர் பார்த்து ஏமாந்தோம். ரான்ஸ்சிற் விசா இல்லாமல் லுஃப்தான்சா (Lufthansa) விமானம் எங்களை ஏற்க மறுத்து விட்டது.
எத்தனையோ விதமாகக் கதைத்துப் பார்த்தோம். கெஞ்சிப் பார்த்தோம். ம்கும்.. எங்கள் விமானம் எங்களை மொஸ்கோ விமான நிலையத்தில் விட்டு விட்டு தன்பாட்டில் பறந்த போது அழுகை வந்தது. ஆனாலும் கெஞ்சிக் கூத்தாடி வென்று விடமாட்டோமா..! என்ற நப்பாசையோடு போராடினோம்.
ஆனாலும் திரும்ப அந்த ஹொட்டேலுக்கே அனுப்பப் பட்டோம். ஹொட்டேலில் ஆங்கிலம் தெரிந்தவர்களே இல்லை என்று சொல்லலாம். அவர்களுடன் எங்கள் பிரச்சனைகளைப் பேசுவதே பெரும் பிரச்சனையாக இருந்தது. கன்ரீனில் அவர்கள் சாப்பாடுகளைப் பரிமாறும் போது நேற்றிருந்த மரியாதை குறைந்து போனது போலத் தெரிந்தது.
காவலுக்கு நின்ற பொலீசிடம் போய் எங்கள் நாட்டுப் பிரச்சனைகளைச் சொல்லி எங்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கேட்டுப் பார்த்தோம். அவர் உரியவர்களோடு ரஷ்ய மொழியில் பேசி விட்டு "அவர்கள் உங்களை என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அது வரை பொறுத்திருங்கள்." என்று சொன்னார். நம்பிக்கையுடன் நல்ல முடிவுக்காய் காத்திருந்தோம்.
அடுத்த நாள் ராஜனையும் இன்னொருவனையும் தவிர மற்றவர்களெல்லோரும் எனது அறைக்குள் வந்து கூடத் தொடங்கினார்கள். என்ன செய்யலாம் என்பதே எல்லோரது கேள்வியும். இப்போது எல்லோரும் தத்தமது நிலைப்பாடுகளை ஆற்றாமையோடு வெளியே சொல்லத் தொடங்கினார்கள்.
பதினெட்டு வயது நிரம்பிய சேகரை அவனது அம்மா வீட்டை ஈடு வைத்துத்தான் அனுப்பியிருந்தா. இருபது வயது லோகனுக்கு அவனது அக்கா தாலிக்கொடியை அடகு வைத்துப் பணம் கொடுத்திருந்தா. இப்படியே ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதை. வீணாய்ப் போன பணத்தையும் தடைப் பட்டு விட்ட பயணத்தையும் நினைத்து நினைத்து எல்லோரும் மிகவும் வேதனைப் பட்டுக் கொண்டே இருந்தோம்.
விமான நிலையத்திலிருந்து ஒவ்வொரு விமானமும் மேலெழுந்து பறக்கும் போது அந்தச் சத்தம் மனதை என்னவோ செய்தது. யன்னலால் வெளியில் பார்த்த போது மொஸ்கோ குளிர் நிறைந்த பாலைவனம் போலவே காட்சியளித்தது. மெது மெதுவாக மனசுக்குள் வெறுமை சூழத் தொடங்கியது.
ஒவ்வொரு அறையிலிருந்தும் வேறு நாட்டவர்கள் ஃபிளைட்டுக்காக (Flight) உடமைகளுடன் வெளியேறும் போது ஆதங்கம் தலை தூக்கியது. எனது கணவருக்கு எப்படியாவது விடயத்தைத் தெரிவிக்க வேண்டும் என்பதால் ஒரு கடிதம் எழுதி விட்டு அஞ்சல் செய்ய இடம் தேடிய போது ஒரு பின்லாந்து வயோதிபரைச் சந்தித்தேன். அவரிடம் எங்கள் 32 பேரது நிலைமைகளையும் சொன்ன போது, அவர் மிகவும் இரக்கப் பட்டு - கடிதத்தைத் தானே அஞ்சல் செய்வதாகச் சொல்லி வாங்கிச் சென்றார்.
போகப் போக ராஜனின் கதைகள் ஏடா கூடமாக இருந்தன. அவன் நீர் கொழும்பைச் சேர்ந்தவனாம். அவனது தமிழே ஒரு மாதிரியாக இருந்தது. கடைசியாக அவன் ஒரு குரூரமான யுக்தி சொன்னான்.
"ஒரு குழந்தையை யன்னலால் தூக்கிப் போட்டு விட்டால் எங்களைத் திருப்பி அனுப்ப மாட்டார்கள்." என்றான். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. ஒரு தரம் நெஞ்சு துடிக்க மறந்து பின் படபடத்தது. அவன் குறிப்பிட்டது எனது மூன்று பிள்ளைகளில் ஒருவரையோ அல்லது சாந்தியின் இரண்டு பிள்ளைகளில் ஒருவரையோதான்.
அதன் பின் எனக்கும் சாந்திக்கும் கொஞ்ச நஞ்சம் இருந்த நிம்மதியும் பஞ்சாய் பறந்து விட்டது. சாந்தி ஒரேயடியாக பிள்ளைகளுடன் எனது அறையில் வந்து இருந்து விட்டாள். அவன் செய்தாலும் செய்வான் அக்கா. எனக்கு அவனைப் பார்க்கவே பயமாக இருக்கு என்றாள்.
எங்கு சென்றாலும் நானும் சாந்தியும் பிள்ளைகளுடன் ஒன்றாகவே சென்றோம். ஹொட்டேலை விட்டு வெளியில் எங்காவது ஓடி விடுவோமா என்று மனசு அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது. எப்படி...? அது சாத்தியமாகுமா..! ஹொட்டேலை விட்டு வெளியில் காலடி வைக்கவே எங்களுக்கு அனுமதி இருக்கவில்லை. ஹொட்டேலினுள் எங்கு பார்த்தாலும் ரஷ்ய மொழியிலேயே எல்லாம் எழுதப் பட்டிருந்தன. ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களைக் கண்டு பிடிப்பதே பெரும்பாடாக இருந்தது:.
நான்காம் நாள் எம்மைத் திருப்பி அனுப்புவதாக முடிவெடுத்து விட்டதாக அறிவித்தார்கள். இரண்டு பொலீஸ் காரர்கள் ஒவ்வொரு அறையாக வந்து "நாளை விடிய மூன்று மணிக்கு ரெடியாக நில்லுங்கள்." என்று சொல்லிச் சென்றார்கள்.
அந்த இரவு - ராஜனைத் தவிர மற்றைய எல்லோரும் எனது அறைக்குள் வந்து கூடி விட்டார்கள். ராஜன் வந்து பார்த்து விட்டு, ஒரு பிள்ளையின் உயிரைத் தியாகம் பண்ண மறுத்து விட்டேன் அதனால்தான் எல்லாம் என்பது போல என்னில் கோபப் பார்வை ஒன்றை வீசி விட்டுச் சென்றான்.
அன்று எங்களில் யாருமே நித்திரை கொள்ளவில்லை. பெண்பிள்ளைகளில் சிலர் என்னோடு ஒட்டிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யாரும் அவரவர்க்குரிய அறைகளில் இல்லையென்பதை எப்படியோ அறிந்து கொண்ட பொலீஸ் கூட்டம் இரண்டரை மணியளவில் என் அறையை வந்து மொய்த்து விட்டது.
உடைகளை மாற்றி வெளிக்கிடும் படி கட்டாயப் படுத்தப் பட்டோம். நாங்களும் முடிந்தவரை மறுத்துப் பார்த்தோம். எதுவும் பயனளிக்கவில்லை. திருப்பி அனுப்புவதற்காக எங்களை இழுக்காத குறையாக அழைத்துச் சென்றார்கள். "போனால் செத்து விடுவோம்" என்றும் சொல்லிப் பார்த்தோம். அவர்கள் மசிய வில்லை. காலை ஏழு மணிக்குப் பறக்கப் போகும் விமானத்துக்காக எம்மை மூன்று மணிக்கே கூட்டிச் சென்று ஒரு குளிரான இடத்தில் நிற்பாட்டி வைத்தார்கள். விமானத்துக்கான பஸ்ஸின் வரவுக்கான காத்திருப்பு நீண்டதாக தண்டனை தருவது போல அமைந்திருந்தது. குறிப்பிட்ட நேரத்தின் பின் பிள்ளைகள் சுருண்டு விழத் தொடங்கினார்கள். குளிரில் அவர்களின் கால்களில் வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் கசியத் தொடங்கியது. மனசு துடித்தது.
இனி முடியாது என பெரியவர்கள் நாங்களும் ஓய்ந்து போய் நிலத்தில் சாய்ந்த ஒரு கட்டத்தில் பஸ் வந்து கட்டாயப் பயணம் ஆரம்பித்தது. ஓவ்வொருவர் மனதிலும் போராட்டம். எல்லோர் வாயிலும் அவர்களை அறியாமல் வந்த வார்த்தைகள் "செத்து விடுவோமா...!" என்பதுதான்.
விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கிய போது எல்லாம் பச்சையாகத் தெரிந்தது.
இறங்கி ஓடி விடுவோமா என மனசு அந்தரித்தது. எதுவும் என் கையில் இருக்கவில்லை. கட்டுநாயக்காவில் வந்திறங்கியபோது வார்த்தைகளில் வடிக்க முடியாத ஏமாற்றம். எதிர் கொள்ளப் போகும் உறவினர்களிடம் எப்படி முகம் கொடுப்பது என்ற மனப் போராட்டம்.
வெள்ளவத்தையில் இருக்கும் மாமாவைத் தொiபேசியில் அழைத்து விடயத்தைச் சொல்லி விட்டு ரக்சியில் ஏறினேன்.
சாந்தி கலங்கிய கண்களுடன் ஓடி வந்து என் கைகளை அழுத்திக் கொண்டு "அக்கா நான் எப்பிடியக்கா ஊருக்குப் போறது? செத்திடலாம் போலை இருக்கக்கா..!" என்று சொல்லி விட்டு இன்னொரு ரக்சியில் பிள்ளைகளுடன் ஏறினாள். அவளுக்கு கொழும்பில் யாரும் இல்லையாம். லொட்ஜ் இல் தங்கி விட்டு விடிய யாழ் புறப்படுகிறாளாம்.
மாமா வீட்டில் இரவுச்சாப்பாடு இடியப்பமும் உருளைக்கிழங்குக் கறியும். எதுவும் ருசிக்கவில்லை. விடயமறிந்து யேர்மனியிலிருந்து கணவர் தொலைபேசியில் அழைத்து "அவசரப் பட்டு ஊருக்குப் போக வேண்டாம. வேறு ஏதாவது வழி இருக்கோ என்று பார்ப்போம்." என்று சொன்னது சற்று ஆறுதலாக இருந்தது.
அடுத்தநாள் மதியம் இன்னொரு ஏஜென்சியிடம் போவதற்கு நானும் மாமாவும் ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம் - யாழ் நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று மாகோவுக்கும் அனுராதபுரத்துக்கும் இடையில் பயணிகளுடன் சேர்த்து எரிக்கப் பட்டு விட்டது. - என்ற செய்தி வந்தது.
அவசரமாய் சாந்தி இருந்த லொட்ஜ்க்குத் தொலைபேசி அழைப்பை மேற் கொண்டேன்.
"அவள் அறையைக் கான்சல் பண்ணிக் கொண்டு காலை பஸ்சில் புறப்பட்டு விட்டாள்." என்றார்கள்.
சந்திரவதனா
யேர்மனி.
29.11.2002
பிரசுரம் - பூவரசு (வைகாசி-ஆனி 2003)
Tuesday, August 24, 2004
Monday, August 09, 2004
கணேஸ்மாமா
பிடைப்பதை நிறுக்திய அப்பாச்சி காகத்தைக் கூர்ந்து நோக்கி மீண்டும் சுளகு அரிசிக்குள் கவனத்தைச் செலுத்தி, அரிசிக்குள் நெல் ஒன்றைக் கண்டு அதை அவசரமாக எடுத்து எறிந்த படியே.."சொல்லேலுதில்லை மேனை, பார்த்தால் அரிசிக்காகம் போலை இருக்கு. ஆனால் தொண்டையை விரிச்சுக் கத்துறதைப் பார்த்தால் ஏதோ ஒரு மாதிரி இருக்கு." என்றா.
எனக்கு ஆசை. அது அரிசிக்காகமாக இருக்கோணும். யேர்மனியில் இருந்து என் கணவரின் கடிதம் வரோணும் என்பதுதான். அதே நேரம் அது அண்டங்காகமாக இருந்து அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாதென்ற அங்கலாய்ப்பும் என்னுள் இருந்தது.
நேற்றும் இப்படித்தான் காகம் கத்திக் கொண்டே இருந்தது. ஆனால் அப்பாச்சி அடிச்சு வைச்சுச் சொல்லிவிட்டா. அது அரிசிக்காகம் என்றும், யாரோ வரப் போகிறார்கள் என்றும்.
அப்பாச்சி சொன்னது போலவே நேற்று கணேஸ்மாமா வந்தார். கணேஸ்மாமா எனக்கொன்றும் உறவு முறை மாமா இல்லை. ஊரே அவரைக் கூப்பிடுவது கணேஸ்மாமா என்றுதான். அவருக்கும் எங்களுக்கும் நட்பு வந்த கதையே சுவையானது.
வீட்டில் அவரது மனைவி எப்படித்தான் சுவை வகையாகச் சமைத்துப் போட்டாலும் பருத்தித்துறைத் தோசையைச் சுவைக்காமல் அவரால் இருக்க முடிவதில்லையாம். பருத்தித்துறைத் தோசைக்காகவே பொலிகண்டியிலிருந்து சைக்கிளை உழக்கிக் கொண்டு தினமும் பருத்தித்துறை ரவுண் வரை வந்து விடுவாராம்.
என் கணவரும் பருத்தித்துறைத் தோசைக்கு அடிமைதான். பல தடவைகள் நான் சமைத்து வைத்து விட்டுக் காத்திருக்க தோசை சாப்பிட்டு விட்டு வந்து என் கோபத்தைக் கிளறியிருக்கிறார்.
தோசை சுவைத்தவர்களுக்கிடையிலான பேச்சும் சுவைத்ததோ என்னவோ.......!ஓடக்கரைத் தோசைக்கும், லாலாக்கடைக் கொத்து ரொட்டிக்கும் கூட்டாகவே போகுமளவுக்கு இருவரும் நண்பர்களாகி விட்டார்கள்.
நட்பு வீடு வரை வந்த போதுதான் தேநீர் கிளாசுடன் கணேஸ் மாமாவை முதன்முதலாகச் சந்தித்தேன். படங்களில் வரும் வில்லன் போல் ஒரு மல்லன் தோற்றம். பேச நா எழவில்லை. சிரிப்புக் கூட யதார்த்தமாக வரவில்லை. ஒப்புக்குச் சிரித்து விட்டு உள்ளே ஓடி விட்டேன். பின்னர் "நட்புக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா.....?" எனக் கணவரைக் கடிந்தேன்.
"பொலிகண்டியார் அப்பிடித்தான். அவன் பார்ப்பதற்குத்தான் மல்லன். பழகுவதற்கு நல்லவன்." என்றார் என் கணவர்.
அடுத்த முறை கணேஸ் மாமா வீட்டுக்கு வரும்போது எட்டு எவர்சில்வர் ரம்ளர்களும் ஒரு எவர்சில்வர் றேயும் கொண்டு வந்தார். பொலிகண்டியார் கிளாசில் தேநீர் அருந்துவதில்லையாம். ரம்ளரில்தான் அருந்துவார்களாம்.
நாங்கள் வெள்ளிக்கிழமைகளிலும் விரதநாட்களிலும்தான் சில்வர் பாத்திரங்களைப் பாவிப்போம் என்பதைச் சொல்ல நினைத்தும் சொல்லாது தவிர்த்தேன்.
கால ஓட்டத்தில் உயர்ந்த பருத்த முரட்டுத்தனமான அந்த உருவத்துள் ஒளிந்திருக்கும் நல்ல மனதைக் கண்டு நானும் நட்பாகி விட்டேன்.
தேநீருடன் எமது வீட்டுக்குள் ஆரம்பித்த அந்த நட்பு குடும்ப நட்பானது. கணேஸ் மாமாவின் மனைவி ராணி அக்காவும் குழந்தை மனம் கொண்டவதான். எண்ணெய் பூசி வாரி இழுத்துப் போட்ட பெரிய கொண்டையும், பளபளக்கும் முகமும், பெரிய குங்குமப் பொட்டும், கழுத்து நிறைய நகையும் பொலிகண்டியாருக்கே உரிய தனிக்களையாம் - அம்மா சொன்னா.
ராணி அக்கா முதன் முதல் எங்கள் வீட்டுக்கு வந்த போது கணேஸ் மாமாவுடன் ஒட்டி ஒட்டிக் கொண்டே நடந்தபடி கள்ளமற்ற சிரிப்புடன் என்னைக் கவர்ந்தா.கையிலுள்ள பெரிய பார்சலை என்னிடம் தந்து "இதுக்குள்ளை புண்ணாக்கு இருக்கு. எல்லாருமாச் சாப்பிடுங்கோ." என்றா.
எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. நாங்கள் பிண்ணாக்கை ஆட்டுக்குத்தான் வைப்போம். இவ எங்களைச் சாப்பிடச் சொல்கிறா. யோசனையுடன் அம்மாவிடம் கொண்டு போய்க் கொடுத்து "அம்மா......! புண்ணாக்காம், கொண்டு வந்திருக்கினம், சாப்பிடட்டாம்." முகத்தையும் வாயையும் சுளித்த படியேதான் சொன்னேன்.
அம்மா சிரித்த படியே "பொலிகண்டியார் எள்ளுப்பாகுவைத்தான் புண்ணாக்கு என்பார்கள். சாப்பிட்டுப் பார். அவர்களின் எள்ளுப்பாகுவுக்குத் தனி ருசி." என்றா.
பொலிகண்டியும் பருத்தித்துறையிலுள்ள எனது ஆத்தியடியும் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கின்றன. ஆனால் பேச்சு வழக்கிலும் பழக்க வழக்கங்களிலும் இத்தனை வித்தியாசங்கள் எப்படி வந்தன? மனசு வினாவியது.
அன்று அவர்களுக்கு எங்கள் வீட்டில் மதியச் சாப்பாடு. பின் றப்பில் இரண்டு சேவல்களைக் கட்டித் தூக்கி துடிப்பதை பெண்கள் யாரும் பார்க்காமல்...! மணக்க மணக்க கோழி இறைச்சி, உறைப்பில் மூக்கு நுனி வேர்க்க ஒரு பிடிபிடித்தோம். மச்சம் என்பதால் எங்கள் வழக்கப்படி சில்வர் பாத்திரங்களைத் தவிர்த்து, பீங்கான் கோப்பைகளில் சாப்பிட்டு, கிளாசில் தண்ணீர் குடித்தோம்.
அடுத்த முறை கணேஸ்மாமா எங்கள் வீட்டுக்கு வரும்போது, எங்களிடம் சில்வர் கோப்பைகளே இல்லையென நினைத்து பத்து சில்வர் கோப்பைகளும் ஒரு சில்வர் செம்பும் கொண்டு வந்து தந்தார். "பொலிகண்டியார் சொம்பிலைதான் தண்ணி குடிப்பினம்." அப்பாச்சி சொன்னா. பொலிகண்டியாருடனான இந்த அனுபவம் எனக்கு சற்று வித்தியாசமாக ஆனால் சந்தோசமாக இருந்தது.
இந்த சந்தோசங்களில் யார் கண் பட்டதோ...?நாமுண்டு, நம் சொந்தமுண்டு, கூடிக் குதூகலிக்க நட்பு உண்டு என்று சந்தோசித்து வாழ்ந்திருந்த எமக்கும், எம் மண்ணுக்கும் வந்ததே கேடு.
ஆர்ப்பரித்த பருத்தித்துறைக் கடலின் அலை ஓசை, சீறி வந்த பீரங்கிக் குண்டுகளுக்குள் அமிழ்ந்து போகத் தொடங்கியது. நெடிதுயர்ந்த பனை உதிர்த்த பனம்பூவை நுகர்ந்தபடி நாம் நடந்த பனங்கூடல் பாதைகளும், அரசு உதிர்த்த இலைகள் சரசரக்க நாம் நடந்த வீதிகளும் சிங்கள எதிரிகளின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபடத் தொடங்கின. கூடி வாழ்ந்த நாமெல்லாம் கல்லெறிபட்ட பறவைக் கூட்டங்களாய் சிதறத் தொடங்கினோம். பயமும் ஓட்டமும் வாழ்வாகிப் போக சிறகிழந்த பறவைகளின் சோகம் எங்கள் சொந்தமாகத் தொடங்கியது.
திக்கம், பொலிகண்டி மக்கள் எல்லோரும் அகதிகளாயினர். ஓடிய கணேஸ் மாமாவும், ராணி அக்காவும், பிள்ளைகளும் எம் வீட்டில் அடைக்கலமாயினர். அதுவும் எத்தனை காலம். எம் வீடும் இராணுவத்தின் கண்களுக்குள் வீழ்ந்தபோது அவர்கள் இடம்மாறி இடம்மாறி ஓடிக் கொண்டிருந்தார்கள். என் கணவரும் தன்னைக் காக்க வழி தெரியாது நாட்டை விட்டே ஓடிவிட்டார். அதன் பின் கணேஸ் மாமா, ராணி அக்கா அவர்களுடனான தொடர்பும் எனக்கு இல்லாது போனது.
மீண்டும் கணேஸ் மாமா எமது வீட்டுக்கு வந்தபோது, கிரனைட் நிறைந்த துணிப்பையை தோளில் கொழுவியிருந்தார். இடுப்பிலே கைக்கிளிப் சொருகியிருந்தார். தான் புலிகளின் படகோட்டியாகி விட்டதாகச் சொன்னார். ராணி அக்காவும் பிள்ளைகளும் ஏதோ வாழ்கிறார்கள் என்றார்.
நேற்றும் இப்படித்தான் துணிப்பையுடன் வந்தார். சைக்கிளை கேற் வாசலில் சாத்தும் போது தபால்காரன் என்றுதான் நினைத்தேன். கேற்றைத் திறந்து படிகளில் ஏறி அவர் வரும் போதுதான் கணேஸ்மாமா என்று கண்டேன். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாகப் புன்னகையுடன் வந்தார்.
"வாங்கோ கணேஸ் மாமா!" வரவேற்றேன்.
"தங்கச்சி எப்பிடி இருக்கிறீங்கள்?" என்று தொடங்கியவர், நிறையக் கதைத்தார்.
இடையிலே "புட்டு இருக்கு. சாப்பிடுங்கோவன்." என்றேன்.
"வேண்டாம் தங்கச்சி. இண்டைக்கு இரவு நான் அங்காலை போறன். அதுதான் சொல்லிப் போட்டுப் போவமெண்டு வந்தனான்." என்றார். அதற்கு அர்த்தம் பெடியளை (புலிகளை) பயிற்சிக்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ படகில் இந்தியாவுக்குக் கூட்டிப் போகப் போகிறார் என்பதுதான்.
"திரும்பி வந்து ராணி பிள்ளையளையும் அங்காலை கொண்டு போய் விடப்போறன்." என்றார். எனக்கு ஏனோ கவலையாக இருந்தது. குசினிக்கு ஓடிப்போய் அம்மாவிடம் விடயத்தைச் சொன்னேன். அவர் பசியோடு இருக்கிறார் போலவே எனக்குத் தெரிந்தது.
வளவுத் தென்னையில் பிடுங்கிய இளவல் தேங்காய் போட்டு அவித்த பிட்டும், அதற்கு நேற்று பொன்னாத்தையிடம் வாங்கிய தம்பசிட்டித் தோட்டத்து கத்தரிக்காயில் வைத்த பிரட்டல் கறியும் காலையில் நாம் சாப்பிட்டது போக எஞ்சி இருந்தன. அம்மா அவசரமாய் முட்டையும் பொரித்துத் தரக் கொடுத்தேன். சுவைத்துச் சாப்பிட்டார்.
தான் காலையில் வேளைக்கே வெளிக்கிட்டு விட்டதால் ஒன்றுமே இன்னும் சாப்பிடவில்லையென்று சாப்பிடும் போதுதான் சொன்னார்.
சாப்பிட்டு முடித்ததும் நினைவாக அவர் தந்த செம்பிலேயே தண்ணீரைக் கொடுத்தேன். விறாந்தையில் நின்ற படியே கையை நீட்டி பிச்சி மரப் பாத்திக்குள் செம்பைச் சரித்து கையைக் கழுவியவர், நிமிர்ந்து அண்ணாந்து செம்புத் தண்ணீரைக் குடிக்கத் தொடங்கினார். ஒரு மிடறு தண்ணீர்தான் உள்ளே போயிருக்கும்.
கேற் திறந்த சத்தத்தைத் தொடர்ந்து தம்பி அவசரமாக ஓடி வந்தான். பாடசாலை போனவன் அரைகுறையில் பதட்டமாக ஓடி வருவது இப்போது சில நாட்களாகவே நடந்து கொண்டுதானிருக்கிறது.
கணேஸ்மாமாவைக் கண்ட அவன் முகத்தில் மெல்லிய சந்தோசம் மலர்ந்து உடனே கலக்கமாகி "கணேஸ்மாமா...! சந்தியெல்லாம் ஆமி. வீடு வீடாய்ப் புகுந்து பயங்கர செக்கிங் நடக்குது. எங்களையும் ஸ்கூலிலிருந்து அனுப்பி விட்டார்கள்." என்றான்.
எனக்கு நெஞ்சு திக்கென்றது. கணேஸ்மாமா அப்படியே செம்பை என் கையில் தொப்பென்று போட்டு விட்டு ஓடினார். எங்கள் கேற்றிலிருந்து ஐந்து யார் தூரத்தில் சந்தி. கேற்றோடு ஒட்டியபடி இறங்கி, சைக்கிளில் ஏறி மறுபக்கத்தில் பறந்தார்.
எனக்கு வேர்த்துக் கொட்டியது. அம்மா அப்பாச்சி எல்லோரும் பதறிப்போய் செய்வதறியாது நின்றார்கள். இதற்குள் கச்சேரியில் வேலை செய்யும் தங்கையும் திரும்பி விட எங்கள் கவலை சென்றிக்கு நிற்கும் மற்றத் தம்பியிடமும் (மொறிஸ்) திரும்பியது.
அன்றைய பொழுது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. சென்றிக்கு நின்ற தம்பி பற்றியோ கணேஸ்மாமா பற்றியோ தகவலெதுவும் கிடைக்கவில்லை.
இரவெல்லாம் பருத்தித்துறைக் கடலில் ஒரே சத்தம். நித்திரையைத் தொலைத்த நிம்மதியற்ற நடு இரவில் கிரனைட் பையுடன் தம்பி வந்து போனான். தம்பிக்கு எதுவும் ஆகவில்லையென்ற நிம்மதியுடன் நடு இரவுக்குப் பின் தூங்கி.... எழுந்து விட்டேன்.
வழமைபோல் சூரியன் உதிக்க - எல்லாமே நடந்து கொண்டிருந்தன. காகம் விடாது கத்திக்கொண்டே இருந்தது. கலைத்தும் பார்த்தேன். கொப்புக்குக் கொப்பு தாவியதே தவிர, பிச்சிப்பூ மரத்தை விட்டுப்போக மனமின்றி கத்திக் கொண்டு நின்றது.
அம்மா சோறும் வடித்து விட்டா. கறிகளும் ஓரளவு முடிந்து விட்டன. தபால்காரன் இன்னுமா வரவில்லையென்று நான் கேற்றைப் பார்த்த போது யாரோ வருவது தெரிந்தது.
அட தேவியக்கா...! கணேஸ்மாமாவின் உறவுக் காரப் பெண். அவர் வீட்டுக்குப் பக்கத்து வீடுதான் அவவின் வீடு.
"வாங்கோ தேவியக்கா!" வரவேற்ற போதுதான் பார்த்தேன்.
என்ன கோலம் அது.! பொட்டு இல்லாமல், நகையில்லாமல், எண்ணெய் பூசி வாரி இழுத்துப் போட்ட கொண்டை இல்லாமல், பறந்த தலையுடன் மூளியாகத் தேவி அக்கா.
"தேவி அக்கா என்ன.! என்ன இது கோலம்.?" வினாவினேன்.
"எல்லாம் முடிஞ்சிட்டுது தங்கைச்சி" என்றா பதறியபடி.
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. தேவிஅக்கா திடீரென்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறியழத் தொடங்கி விட்டா. அழுகையினூடே.... கணேஸ்மாமா நேற்றுப் போன படகு சிறீலங்கா கடற்படையின் தாக்குதலுக்குள்ளாகி, கணேஸ்மாமாவும் அவருடன் சென்ற பதினேழு பேர்களும் வீரச்சாவு அடைந்து விட்டார்கள். என்பதைச் சொன்னா.
உடலங்கள் கரையில் ஒதுங்கியதைச் சொல்லும் போது அவவிடம் இருந்து அழுகை பீரிட்டது. உண்மை தந்த அதிர்ச்சியில் நான் உறைந்து போய் உட்கார்ந்து விட்டேன்.
(14.04.1985 அன்று படகில் தமிழ்நாடு கெசல்கையில் சிறீலங்கா தடற்படை தாக்கி வீரச்சவை அடைந்த கணேஸ்மாமாவினதும், மற்றைய பதினேழு பேரினதும் நினைவாக.)
சந்திரவதனா
யேர்மனி
12.4.2000
பிரசுரம் - ஈழமுரசு (26ஏப்ரல்-02மே - 2001)
Monday, August 02, 2004
பார்வைகள்
வெளியில் இறங்கியபோதுதான் தெரிந்தது சூரியன் தனது இருப்பை இன்று சற்று அதீதமாகவே வெளிக்காட்டுவது. உடனேயே வீட்டினுள் நுழைந்து மின்குமிழ் வெளிச்சத்திலும், வெப்பமூட்டியின் வெப்பத்திலும் பச்சயத்தை மெதுமெதுவாக இழந்து இயல்பான பச்சையின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் எனது பூமரங்களில் சிலவற்றைத் தூக்கி வெளியில் வைத்து விட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு அவசரமாய் விரைந்தேன்.
ஆறு நிமிடத்தில் நடக்க வேண்டிய பேரூந்து நிலையத்தை, மூன்று நிமிடத்தில் அடைந்ததில் மூச்சு வாங்கியது.
"காலை வணக்கம்"(Guten Morgen) சொல்லி மாதப் பயணச்சீட்டை ஓட்டுனரிடம் காட்டி, இருக்கையில் அமர்ந்த போது மூச்சின் வேகம் சற்றுக் குறைந்திருந்தது. முழுவதுமாகச் சீரானதும் வாசிக்கலாமென கைப்பையிலிருந்த மாதசஞ்சிகை ஒன்றை எடுத்த போதுதான் அந்த மாது என் எதிரே வந்தமர்ந்தாள்.
தெரிந்த பாவனையுடன் சிரித்துக் கொண்டு காலை வணக்கம் சொன்னாள். பதிலுக்கு நானும் சொல்லிய போதுதான் அவள் சுமதி வீட்டுக்கு எதிர் வீட்டு மாது மரியானா என்பது ஞாபகத்தில் வந்தது. போனகிழமை ஒரு திருமணவைபத்தில்தான் சுமதி இவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
"சுமதி யேர்மனிக்கு வந்து கொஞ்சக்காலந்தான். அதற்கிடையில் யேர்மனிய மனிசியைப் Friend பிடிச்சு, ஓரளவு டொச்சும்(Deutsch - யேர்மனிய மொழி) கதைக்கத் தொடங்கீட்டாள். அவள் கெட்டிக்காரி." இப்படித்தான் எமது நகரத் தமிழர்கள் பேசிக் கொள்வார்கள்.
"ரவுணுக்குப் போறியோ..?" மரியானா கேட்டாள்.
"ஓம். சில சாமான்கள் வேண்டோணும்."
"நல்ல வெதர்."
"ஓமோம். நல்ல வெதர். சந்தோசமாயிருக்கு."
சூரியச்சிரிப்பில் ஸ்வெபிஸ்ஹால் நகரம் மிகவும் அழகாயிருந்தது. வழி நெடுகலும் மரங்கள் கிளைகளைப் பரப்பி விரிந்து... சோலைகளினூடே பயணிப்பது போன்றதொரு பிரமையை ஏற்படுத்தின. வீடுகளின் முன் ரோஜாக்களும், செவ்வந்திகளும்.... என்று பூத்துக் குலுங்கியதிலான அழகு மனசைக் கொள்ளை கொண்டது.
"எப்பிடி இருக்கிறாய்?" மரியானா மீண்டும் கதை கொடுத்தாள்.
"இருக்கிறன். நல்லாயிருக்கிறன்.நீ எப்பிடி இருக்கிறாய்?"எனக்கென்ன...? எல்லாம் நல்லாயிருக்கு."
பேரூந்து அடுத்த தரிப்பில் நின்று புறப்பட்டது. யன்னலினூடே தெரிந்த சந்தி வீட்டில் செர்ரி(cherry) மரம் குண்டு குண்டான கருஞ்சிவப்பு செர்ரி(cherry) பழங்களுடன் ஆடி அசைந்து கொண்டிருந்தது. முன்னர், புலம் பெயர்வு பற்றிய பிரக்ஞைகள் எதுவும் எம்மத்தியில் இல்லாத காலகட்டத்தில், பணம் தேட என்று ஐரோப்பியாவை நோக்கிக் கடல் கடந்தவர்கள் எழுதும் கதைகளின் தலைப்புகள் எல்லாம் "செர்ரி பழங்கள் காய்த்து விட்டன", "ப்ளம்ஸ் மரங்கள் பூத்து விட்டன"... என்று எங்களுக்கு ஒரு வித ஆவலைத் தூண்டுவனவாகவே இருந்திருக்கின்றன. இப்போ இவையெல்லாம் எமக்குக் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும், அவைகளைப் பணம் கொடுத்து வாங்கி வாய்க்குள் போட்டுச் சுவைப்பதோடு அதன் கதைகள் முடிந்து விடுகின்றன. பெரியளவாக யார் கதைகளிலும் இடம் பெறுவதில்லை.
"என்ன யோசிக்கிறாய்? வெளீலை அழகாய் இருக்கு என்ன..?" மரியானா மீண்டும் கதை கொடுத்தாள்.
"ஒண்டுமில்லை. வெளியில் அழகு....அது சரி சுமதி எப்பிடி இருக்கிறாள்?"
சுமதி மரியானாவுடன் நல்ல வாரப்பாடு என்பது எனக்குத் தெரியும். ஏற்கெனவே சுமதி சொல்லியிருந்தாள். தினமும் மரியானா சுமதி வீட்டுக்குப் போவதும்;, சுமதி மரியானா வீட்டுக்குப் போவதும், சுமதியின் உறைப்புக் கறிகளை மரியானா விரும்பிச் சுவைப்பதுவும் என்று அவர்கள் மிகவும் நெருக்கமாகப் பழகத் தொடங்கி விட்டார்களாம். மரியானாவுக்காக, சுமதியும் அவள் கணவன் அரவிந்தனும் உறைப்பைக் குறைத்துச் சமைத்துச் சாப்பிடவும் பழகி விட்டார்களாம்.
"அரவிந்தன் நல்ல பெடியன். நல்ல உழைப்பாளி." ஊருக்குள் தமிழரின் வீடுகளில் அவன் பெயர் இப்படித்தான் உருளும். உண்மையிலேயே அவன் யேர்மனிக்கு வந்ததிலிருந்து ஒரு சோலி சுரட்டுக்கும் போகாமல், தானுண்டு, தன் வேலையுண்டு என்றுதான் இருந்தான். குடி, சிகரெட் எதுவும் கிடையாது. அதிகாலையில் ஒரு தொழிற்சாலையில் வேலை தொடங்கும். முடிந்து வந்தால் இன்னொரு கடையில் கூட்டிக் கழுவும் பகுதி நேர வேலை. சனி, ஞாயிறுகளில் ஒரு உணவகத்தில் சலாட் கழுவும் வேலை. இப்படியே வேலை வேலையாகச் செய்து சொந்தமாய் ஒரு வீடும் வாங்கி விட்டான். நல்ல பிரயாசி. அதன் பின்தான் சுமதியைப் ஸ்பொன்சர் பண்ணிக் கூப்பிட்டான். சுமதியும் வந்து இரண்டு வருடங்களாகிறது.
"சுமதி குடுத்து வைச்சவள்." தங்கவேலின் மனைவி லலிதாவும், தேவதாசின் மனைவி மெலிண்டாவும் அடிக்கடி என்னிடம் சொல்லிப் பெருமூச்சு விடுவார்கள்.
தங்கவேல் பயங்கரக் குடிகாரன். இந்தப் பகுதிநேரவேலை செய்கிற பழக்கமெல்லாம் அவனிடம் இல்லை. வேலை நேரம் போக மற்றைய நேரமெல்லாம் வீட்டிலேயே குந்திக் கொண்டிருப்பான். பணப் பற்றாக்குறை வரும் போதெல்லாம் லலிதா புறுபுறுப்பாள். நல்லாக வாழும் சுமதியை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடுவாள்.
தேவதாஸ் பெரிய குடி என்றில்லை. ஆனால் அவனுக்கு வாய்த்தது மக்டொனால்ஸ்(Mc Donals) வேலை. அதனால் பணப் பற்றாக்குறை என்பது மெலிண்டாவின் வாழ்வில் தவிர்க்க முடியாதது. இதற்குள் அவனுக்கு ஆயிரத்தெட்டு நண்பர்கள். அவர்களுக்குச் சமைத்துப் போடுவதிலேயே மெலிண்டாவுக்குப் போதும்... போதும்... என்றாகி விடும்.
இந்தத் தொல்லையொன்றும் இல்லாது, சொந்த வீட்டில், கார், நகை, வீடு......... என்று வாழும் சுமதி, இவர்கள் பார்வைகளில் அதிர்ஸ்டக்காரி. கொடுத்து வைச்சவள்.
"சுமதி நல்லாயிருக்கிறாள். இப்ப அவளைச் சந்திச்சிட்டுத்தான் வாறன். வேலையேதுமிருந்தால் எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டவள். புட்ற்சன் (Putzen –துப்பரவாக்கும் வேலை) எண்டாலும் பரவாயில்லையாம்."
புற்சனோ...! புட்ற்சன் (Putzen) செய்ய நினைக்குமளவுக்கு சுமதிக்கு என்ன கஸ்டம்..? மனதுள் எழுந்த வியப்பில் என்னையறியமால் வார்த்தை வந்து வெளியில் வீழ்ந்தது.
மரியானா எனது ஆச்சரியத்தைப் புரிந்து கொண்டவளாய் "என்ன செய்யிறது அவளும்...? அரவிந்தன் நல்ல பெடியன்தான். நல்ல பிரயாசிதான். ஆனால் அவன் வேலை வேலையெண்டு காலையிலேயே போய் விடுவான். மாலையில் கூட அவள் துணையென்று யாருமின்றித் தனியேதான். என்னட்டை ஓடி ஓடி வருவாள். நானும் என்னத்தை அவளோடை கதைக்கிறது?. அவள் இருபது வயசுச் சின்னப் பெண். நான் அறுபது வயசுக் கிழவி. என்ரை கதையள் அவளின்ரை வயசுக்கு ஒத்துப் போகுமே..? வேறை வழியில்லாமல் வாறாள். ஆனால் தனிமை அவளைக் கொல்லுது எண்டு எனக்குத் தெரியும்...."
சற்று மூச்சு விட்டு மீண்டும் தொடர்ந்தாள். "வேலைக்குப் போனாள் எண்டாலும் பொழுதுகள் கெதியிலை போகும். டொச்(deutsch) வகுப்புக்குப் போனவள்தான். போட்டு வந்துவீட்டுக்குள்ளை இருந்தால் எப்பிடிக் கதைக்கப் பழகேலும்? ஏதாவதொரு வேலையெண்ட சாட்டிலையாவது வெளியிலை போய் நாலு பேரோடை கதைச்சு.. சிரிச்சு... வாழ்ந்தால்தான் பாசையும் தெரியவரும். வாழ்க்கையிலையும் ஒரு பிடிப்பு வரும்."
இப்போ அவள் பார்வை "என்ன இதுக்குச் சொல்லுறாய்..?" என்பது போல என்னை நோக்கியது.
அவள் சொல்வது அவளது பார்வையின் நோக்கலுடனான வெளிப்பாடு என்பது எனக்குத் தெரிந்தது. இதற்கு நான் என்ன சொல்லலாம். புலம் பெயர்ந்த எமது நாட்டுப் பெண்கள் பெரும்பாலானோரின் வாழ்வு இப்படித்தானே இங்கு தொடர்கிறது.
எனது மௌனம் அவளை என்ன செய்ததோ..?"பாவம் சுமதி. அவளுக்கு ஏதாவது வேலை எடுத்துக் குடுக்கோணும்." என்றாள்.
ரவுணுக்குள் எனது வேலைகளுடன் நான் விரைந்து கொண்டிருந்தாலும் மனசுக்குள் சுமதியும், அவள் மீதான மரியானாவின் பார்வையும், லலிதா, மெலிண்டா... போன்றோரின் பார்வைகளும் சுழன்று கொண்டே இருந்தன.
ரவுணில் இருந்து திரும்பிய போது வெளியின் அழகுகள் அவ்வளவாக என்னைக் கொள்ளை கொள்ளவில்லை. ரவுணுக்குள்ளேயான அலைச்சலும், அங்கொன்று இங்கொன்று என்று வேண்டி விட்ட சாமான்கள் ஒரு துணிப்பையில் நிரம்பி அது பாராமாய் என் கையில் தொங்குவதால் ஏற்பட்ட தோள்மூட்டின் வலியும்... சூரியன் உச்சிப் பகுதிக்கு வந்து விட்டதால் ஏற்பட்டு விட்ட அதீத வெப்பமும் என்னுள் ஒரு வித களைப்பையே ஏற்படுத்தியிருந்தன.
ஆனாலும் பேரூந்திலிருந்து இறங்கிய போது ஏதோ ஒரு உந்துதலில், எனது வழமையான பாதையை விடுத்து சுற்று வழியான சுமதியின் வீடிருக்கும் பாதையினூடு நடந்தேன். சுமதி அவள் வீட்டு வாசலில்தான் நின்றாள்.நீண்ட காலங்கள் அவள் வீட்டுப் பக்கமே போகவில்லை. வழியில் எங்காவது அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்புகள் கிடைப்பதால் வீட்டுக்கென்று போக வேண்டிய தேவைகளெதுவும் எனக்கு ஏற்படவில்லை.
வீட்டின் முன்றலில் பெரியதொரு செர்ரி (cherry) மரம் கிளைபரப்பி குடை போல விரிந்திருந்தது. சில கிளைகள் செர்ரி (cherry) பழங்களின் கனம் தாங்காமல் நிலம் நோக்கிச் சாய்ந்திருந்தன. இவள் வீட்டுச் செர்ரி(cherry) பழங்கள் சந்தி வீட்டுப் பழங்கள் போல் பெரிதாக இல்லாமல், எங்கள் ஊர் நாவற்பழ சைஸில் சிறிதாக இருந்தன. நன்கு பழுக்காதவைகள் இளஞ்சிவப்பு நிறத்திலும், பழுத்தவை கருஞ்சிவப்பு நிறத்திலும் அழகூட்டின. சுமதி அதன் கீழ் உள்ள நிலத்தைக் கூட்டிக் கொண்டு நின்றாள். என்னைக் கண்டதும் மிகவும் சந்தோசப் பட்டு, முகம் மலர "வாங்கோ... அக்கா வாங்கோ" என்று வரவேற்றாள். என் கைகளுக்குச் சிக்கிய கிளைகளில் ஒன்றில் இருந்து இரண்டு பழங்களை பிடுங்கி வாய்க்குள் போட்டுக் கொண்டேன். நாவற்பழ விதைகள் போலத்தான் இதன் விதைகளும். புழத்தின் சுவை மட்டும் மிகவும் வேறாய்.. தித்தித்தது.
சுமதியின் வீடு மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும், துப்பரவானதாகவும் இருந்தது. ஏற்கெனவே அவள்; உள்ளி, வெங்காயம் எல்லாம் போட்டுச் சமைத்திருந்தாலும் மற்றைய தமிழ் வீடுகள் போல சமையல் மணம் வீட்டுக்குள் இருக்கவில்லை. யன்னல்களைத் திறந்து வைத்திருந்தாள்.
எனக்கென கேக், சொக்கலேட்... என்று உள்ளதெல்லாம் கொண்டு வந்து வைத்தாள். சாப்பிடுங்கோ.. சாப்பிடுங்கோ.. என்று அன்புத் தொல்லை கொடுத்தாள். அடிக்கடி கேட்டும் வராத என்னை வீட்டுக்குள் வரவழைத்து விட்டதிலான சந்தோசம் அவள் உபசரிப்பில் தெரிந்தது. கதையின் இடையே எனக்கு "விசராக்கிடக்கு அக்கா. பொழுதே போகுதில்லை. அவர் காலைமை நாலு மணிக்கே வேலைக்குப் போயிட்டார். இனிப் பின்னேரம்தான் வருவார். வந்த உடனே சாப்பிட்டிட்டு அடுத்த வேலைக்குப் போயிடுவார். வர இரவு பத்து மணியாகீடும்." என்றாள்.
வீட்டில் ரீரீஎன், வெக்ரோன், தீபம்... என்று பல தமிழ் தொலைக்காட்சிகளுக்கான இணைப்புகளும், ஐரோப்பியத் தமிழ் வானொலிகள் அனைத்தையும் கேட்பதற்கான இணைப்புகளும் இருந்தன. "எல்லாவற்றையும் தன்னந்தனியே குந்தியிருந்து எத்தினை நாளைக்கெண்டுதான் பார்க்கிறது." அலுத்தாள்.
"நீங்கள் வேறை தமிழாக்கள் வீட்டை போறேல்லையே..?"
"எங்கை அக்கா.! அவருக்கு நேரமில்லை. என்னெண்டு போறது..?தானில்லாமல் தனிய நான் தமிழாக்கள் ஆற்றையும் வீட்டை போனாலும் அவருக்குப் பிடிக்காது"
"......"
"சும்மா சொந்த வீடென்று சொல்லுறது. மாதக்காசு அதுக்குக் கட்டிறதே பெரும்பாடாக் கிடக்கு. அதோடை அவருக்கு இன்னும் இரண்டு தங்கச்சிமார் கலியாணம் செய்யாமல் இருக்கினம். அவையளின்ரை பிரச்சனையளும் முடியோணும்..... அதுதான் அக்கா நானும் ஒரு வேலை செய்வம் எண்டு பார்க்கிறன். ஏதாவது புட்ற்சன்(Putzen) அப்பிடியேதும் இருந்தாலாவது சொல்லுங்கோ.
என்னால் அதிக நேரம் அங்கு இருக்க முடியவில்லை. பிள்ளைகள் மதியச் சாப்பாட்டுக்கு வந்து விடுவார்கள். ஓடிப் போய்ச் சமைக்க வேண்டும். புறப்பட்டு விட்டேன். "அடிக்கடி வாங்கோ அக்கா." இரண்டு மூன்று தரங்களாகச் சொன்னதை நான் படியில் இறங்கும் போதும் சொன்னாள்.
திரும்பிப் பார்த்தேன். எப்படித்தான் உழைத்தாலும் விமோசனம் கிடைக்காத ஐரோப்பியத் தமிழர்களில் அவளும் ஒருத்தியாக... பாவமாக இருந்தது. கட்டாயம் அவளுக்கு ஒரு வேலை எடுத்துக் கொடுக்க வேண்டும். இடைக்கிடையாவது அவள் வீட்டுக்குப் போக வேண்டும். நினைத்துக் கொண்டே விரைந்தேன்.
சந்திரவதனா
யேர்மனி
1.7.2004

Subscribe to:
Posts (Atom)