Tuesday, October 19, 2004

எங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா?

நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கள் நாட்டில் இருப்பது போலவேதான் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். எல்லோரும் சொல்வது போல எங்கள் ஊர்க்காதல் மட்டுந்தான் ஆழமானதும், மேலைநாட்டுக் காதல் ஆழமற்றதும் என்றில்லை. ஊர்கள் வேறு படலாம். ஆனால் மனிதர்களும், மனங்களும் ஊர்களை வைத்து வேறு படுவதில்லை. அதே போலத்தான் காதலும்.



எமது நாட்டில் காதலிப்பதே உலகமகா குற்றமாகக் கருதப்பட்டு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளும், தடைகளும் இளையவர்களுக்கு விதிக்கப் படுகின்றன. கட்டுப்பாடுகள் அதிகமாகும் போதுதான் கட்டுமீறும் எண்ணமும், தடைகள் அதிகமாகும் போதுதான் அதைத் தாண்ட வேண்டுமென்ற தீவிரமும் ஏற்படுகின்றன. இந்த நிலையில்தான் பின் விளைவுகள் பற்றிய சிந்தனைகளெதுவுமின்றி காதலே வாழ்க்கை என்றாகிறது. எதிர்ப்புக்களை உடைத்தெறிய மனம் துணிந்து, அவசரக் கல்யாணமும் நடந்து விடுகிறது.



மேலைநாட்டுக் காதல் அப்படியில்லை. காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. ஆதலால் கள்ளமாக காதலிக்க வேண்டிய அவசியமோ, ஓடிப் போக வேண்டிய அவசியமோ இல்லை. காதல்தான் வாழ்க்கை என்றில்லாமல், அதற்காகப் போராட வேண்டிய அவசியமுமில்லாமல், காதல் ஒரு புறமும், அதை விட முக்கியமான கல்வி மறுபுறமுமாக வாழ்க்கை ஓடுகிறது. அவசரக் கல்யாணங்கள் அவசியமற்றதாகிறது.



இவைகளை வைத்துக் கொண்டு எங்கள் ஊர்க்காதல்தான் ஆழமானதென்று சொல்லி விட முடியாது. எங்கள் ஊரிலும் காதலிப்பதாக நடித்து ஏமாற்றியவர்களும் இருக்கிறார்கள். மேலை நாடுகளிலும் காதலைப் புனிதமாக நினைப்பவர்களும், ஆழமாகக் காதலிப்பவர்களும் இருக்கிறார்கள்.



அதே போலத்தான் திருமணமானவர்களும். வாழ்க்கை என்று வரும் போது, சேர்ந்து வாழ்கையில் கணவன் மனைவியருக்கிடையில் கருத்து வேறுபாடுகளும் அவரவர் விட்டுக் கொடுக்கும் தன்மை, சகிப்புத்தன்மை என்பவற்றிற்கேற்ப மனவிரிசல்களும் ஏற்படலாம். இந்த விரிசல்கள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுந்தான் ஏற்படும். எம்நாட்டவர்க்கு ஏற்படாதென்று சொல்லி விட முடியாது. வெளிநாட்டவர்கள் மத்தியில், மனவிரிசல்கள் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் பிரிந்து போய் விடுவதற்கு ஏதுவாக சட்டங்களும், வாழ்க்கை வசதிகளும் கை கொடுத்து விடுகின்றன. எமது நாட்டில் மனவிரிசல்கள் ஏற்பட்டாலும் பிரிந்து போய் விட முடியாத படி சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சாமாச்சாரங்கள் தடுத்து விடுகின்றன. இதனால் எங்கள் ஊர்க்காதல் ஆழமானது என்று சொல்லி விட முடியாது.



அத்தோடு இன்றைய நிலையில் எத்தனையோ மேலைத்தேயப் பெண்கள் எங்கள் நாட்டு ஆண்கள் மேல் காதல் கொண்டு சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர், எமது நாட்டு ஆண்களால் கைவிடப்பட்டும் இருக்கிறார்கள். ஆழமான காதல் கொண்ட எமது நாட்டு ஆண்கள்தான் இந்த அநியாயத்தைச் செய்திருக்கிறார்கள். அதற்காக அந்த ஐரோப்பியப் பெண்கள் காதல் தோல்வி என்று சொல்லி எமது ஊர்ப் பெண்களைப் போல தற்கொலை வரை செல்வதில்லை. தமக்கென இன்னொரு துணையைத் தேடத்தான் முயற்சிக்கிறார்கள். அதை வைத்து அவர்கள் காதல் ஆழமற்றது என்று சொல்லி விட முடியாது. அவர்கள் மனதிலிருக்கும் அந்தக் காதல் வேதனை வடுவாக மாற அவர்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். சும்மா மேலோட்டமாகப் பார்த்து எங்கள் ஊர்க்காதல் ஆழமானதென்று சொல்லி விட முடியாது.



முதலாவதாகக் கட்டுப்பாடுகளும், தடைகளுமே எங்கள் ஊர்க்காதலை தீவிரமாக்குகின்றன. இரண்டாவதாக சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சமாச்சாரங்கள் எங்கள் காதல் ஆழமானதென்று பொய் சொல்ல வைக்கின்றன. அதற்காக எமது காதலெல்லாம் பொய் என்று சொல்ல வரவில்லை. ஆழமான காதலுடன் வாழும் எம்மவர்கள் போலவே ஆழமான காதலுடன் வாழும் வெளிநாட்டவரும் இருக்கிறார்கள். காதல் எல்லோருக்கும் பொதுவானது. நாட்டை வைத்து அது மாறாது.

விருந்தாளிகள்

புலம்(பல்)



தொலைபேசி கிணுகிணுக்கிறது.



ஆரது இந்த நேரம்...? ஞாயிறும் அதுவுமா...?

நல்ல வெயில் எறிக்குது. உடுப்புகளை விரிச்சு முடிச்சுப் போடுவம் எண்டு பார்த்தன். முணுமுணுத்தபடி தயங்கிய மனதுடன்தான் பல்கணியிலிருந்து ஓடி வந்து செண்பகக்கா தொலைபேசியை எடுத்தா.



"வணக்கம் அக்கா! அண்ணை நிற்கிறாரோ?"



இல்லை. அவர் வெளியிலை போட்டார். நீங்கள்...?"



"நான் அக்கா ரவி. அவரோடை முந்தி லாகரிலை இருந்தனான். அவருக்கு என்னைத் தெரியும்."



"எந்த லாகரிலை...?"



"அது வந்து... வங்கன் லாகர்.... தெரியுமோ அக்கா?"



ம்.. இந்த மனுசன் சொன்னதுதான். நான் வரமுந்தி ஏதோ ஒரு.. லாகரிலை இருந்ததெண்டு. அது எந்தக் காலம்..! இப்ப அதையேன் இவன் புதுப்பிக்கிறான்..! இதைச் சாட்டிக் கொண்டு இப்ப ஏதும் கலியாணவீடு, சாமத்தியவீடு எண்டு சொல்லி, செலவு வைக்கப் பண்ணப் போறானோ.. என்னவோ...?



"எப்ப 1985 இலை ஒண்டா இருந்தனிங்களோ..? "



"ஓமக்கா. பியர்கேஸ் ரவி எண்டு சொல்லியிருப்பார்."



"அட நீங்கள்தான் சோசல் காசிலை பியர் வாங்கி வைச்சிட்டு 1 மார்க்குக்கு வித்த ஆளோ..? இப்ப விளங்குது."



"ஹி..ஹி...ஹி.. எல்லாம் அப்பச் சொல்லியிருக்கிறார். "



"அது சரி இப்ப என்ன விசயமா அடிச்சனிங்கள்..? என்னேம் விசேசமோ..?"



"நான் சுவிசுக்குப் போட்டு வாற வழியிலை அண்ணையையும் ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான்."



என்னடா.. இது? 19வருசம் கழிச்சு அண்ணையின்ரை நினைவு இவனுக்கு வந்திருக்கு. இவனைக் காணேல்லையெண்டுதான் அண்ணை அழுது கொண்டிருக்கிறாராக்கும்.



" என்னக்கா சத்தத்தைக் காணேல்லை. கண்டு கனகாலமாப் போச்சு. அதுதான் வந்தனாங்கள்."



அதென்ன.. வந்த.. னாங்கள். கன ஆக்களோ..!

செண்பகக்காவுக்கு சமையல் சாப்பாடு என்று நினைவில் வந்து பயமுறுத்தியது. எப்படியாவது வெட்டி விட்டிடோணும் என்று நினைத்துக் கொண்டா.



"அவர் தம்பி வீட்டிலை இல்லை. வெளியிலை போட்டார். நீங்கள் பிறகொரு நாளைக்கு வாங்கோவன்."



"பிறகெப்ப அக்கா வாறது. இவ்வளவு தூரம் வந்திட்டம்?"



விடமாட்டான் போலையிருக்கு.



"எவ்வளவு தூரம் வந்திருக்கிறியள்..? ஆரார் வந்திருக்கிறியள்?"



"என்னோடை இன்னும் நாலுபேர். இங்கை உங்கடை இடத்திலைதான் ஒரு பெற்றொல் ஸ்டேசனிலை நிற்கிறம்."



அடப்பாவிகளா..?வெட்டவே ஏலாதோ..?



"சரியப்ப வாங்கோவன்"



"அங்காலை வர வழி தெரியேல்லையக்கா. அதுதான்..!"



தெரிஞ்சிருந்தால் வீட்டு வாசலிலையே வந்து பெல் அடிச்சிருப்பாங்கள் போலை இருக்கு.



"உப்பிடியே நேரே வந்து இரண்டாவது திருப்பத்திலை இடது பக்கம் திரும்பினிங்கள் எண்டால் எங்கடை றோட்டுத்தான். 3ம் நம்பர் வீடு."



செண்பகக்கா அவசரமாக ரசேந்திரண்ணையின்ரை தொலைபேசிக்கு அழைப்பு விடுக்க..

"ஆரது..? நானில்லாத நேரம் வீட்டை வரச்சொன்னனீரோ..?" எண்டு ஒரு தரம் சினந்து..

"ஓமப்பா அவன் என்னோடை லாகரிலை இருந்தவன்தான் வாறன்.. நான் உடனை வாறன்" என்று அவர் அமைதியாக..

அவர்களும் வீட்டு வாசலுக்கு வந்து பெல் அடிக்க சரியாக இருந்தது.



செண்பகக்காவுக்குப் பயங்கர எரிச்சல். அழையா விருந்தாளிகளை அப்போது அவ துளியும் எதிர்பார்க்கவில்லை. உடுப்புகளை விரித்துப் போட்டு வந்து ஆறுதலாக இருக்க வேண்டுமென்றுதான் மனசுக்குள் உச்சாடனம் பண்ணிக் கொண்டிருந்தவ. எதையும் வெளியில் காட்டாமல் சிரித்துக் கொண்டு "வாங்கோ. வாங்கோ" என்று வரவேற்றா.



"இருங்கோ. அவர் வெள்ளெனவே வெளியிலை போட்டார். இப்ப வந்திடுவார். என்ன குடிக்கிறிங்கள்? தேத்தண்ணி போடட்டே..?"



"வேண்டாம் வேண்டாம். குளிரா ஏதாவது குடிக்கத் தாங்கோ. "



செண்பகக்கா குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து தோடம்பழ யூஸைக் கொண்டு வந்து வைத்து கிளாசுகளையும் கொண்டு வந்து விட..



"கோலா இல்லையோக்கா..? " பியர்கேஸ் கேட்க,

செண்பகக்கா கீழே கெலருக்குள் சென்று, கோலா எடுத்துக் கொண்டு வந்து ஊற்றிக் கொடுத்தா.



இப்ப என்ன தேவைக்கு வந்திருக்கினம் என்ற எரிச்சல் மனதுக்குள் இருந்தாலும், சும்மா ஒப்புக்கு சுகநலம் விசாரித்துக் கொண்டிருக்க, ராசேந்திரத்தாரும் வந்து விட்டார். வாயெல்லாம் பல்லாய் வந்தவர்களோடு அளக்கவும் தொடங்கி விட்டார். பியர் குடிக்க ஒரு கொம்பனி கிடைத்து விட்டதிலான புளுகம் அவர் வார்த்தைகளில் துள்ளி விளையாடியது.



"என்னப்பா பெடியளுக்கு ஏதும் சாப்பிடக் குடுமன். நாலைஞ்சு றோல்ஸ் செய்தீர் எண்டால் நல்லாயிருக்கும். " செண்பகக்கா வந்தவர்களுக்குத் தெரியாமல் அவரை ஒருதரம் முறைத்து விட்டுக் குசினிக்குள் நுழைந்தா.



"என்னடாப்பா சாப்பிட்டனிங்கள்? "



"இன்னும் ஒண்டுமில்லையண்ணை. காலைமை வெளிக்கிட்டனாங்கள். "



"சொல்லிப் போட்டு வந்திருந்தியள் எண்டால் செண்பகக்கா சமைச்செல்லோ வைச்சிருப்பா. "



"ஒரு surprice ஆ இருக்கட்டுமெண்டுதான்..."



ம்... ம்... surprice இல்லையெண்டுதான் இங்கை அழுதனாங்களாக்கும்.



றோல்ஸ் முடிய.. இடியப்பம்.. கறி.. சொதி.. பிரட்டல்.. எல்லாம் முடித்து, அவர்கள் சாப்பிட்டுப் போன பின்னும், வேலை முடியாது.. கழுவி, துடைத்து, அடுக்கி, குசினிக்கு வெளியில் வந்த போது ஞாயிறைக் காணவில்லை. பல்கணியில் அரைகுறையில் விடப்பட்ட விரிபடாத உடைகள் வெயிலில் முறுகி குளிரில் நனைந்து போயிருந்தன. விரித்த துணிகள் மீண்டும் குளிரத் தொடங்கியிருந்தன.



இவங்கள் எங்கையாவது ஒரு ரெஸ்ரோறண்டிலை சாப்பிட்டிட்டுப் போயிருக்கலாம்தானே.

செண்பகக்காவின் புலம்பல் யாருக்கும் கேட்கவில்லை. அது ராசேந்திரத்தாரின் குறட்டை சத்தத்துள் அமிழ்ந்து போனது.



சந்திரவதனா

யேர்மனி10.9.2004



பிரசுரம் - திண்ணை - 29.10.2004

Tuesday, October 12, 2004

ஞாயிற்றுக்கிழமை

"இஞ்சை ..........உங்கடை உந்தத் தலைக்கு Joghurtம் (யோக்கற்ம்) முட்டையும் கலந்து பூசி ஊற விட்டிட்டு, பிறகு தோய்ஞ்சிங்களெண்டால் சொடுகு போயிடுமாம்."



"ஆரப்பா உனக்குச் சொன்னது? பிறகும் ஏதும் புத்தகத்திலை வாசிச்சிட்டியே?"



"ம்.........வேறை எங்கையிருந்து எனக்குத் தெரியிறது! புத்தகத்தையும், பேப்பரையும், ரேடியோவையும் விட்டால் எனக்கு வேறை என்ன இருக்கு இங்கை!!!"



"ம்........எனக்கு மட்டும் இங்கை கனக்க இருக்காக்கும். "



"ஏன் உங்களுக்கென்ன ஏதும் அது இது எண்டு சாட்டிக்கொண்டு ஊர் சுத்தப் போடுவிங்களே!"



"உன்னை ஆரும் போவேண்டாமெண்டு சொன்னதே?"



"போவேண்டாம் எண்டு நேரடியாச் சொல்லாமல் நான் போகாத விதமா நீங்கள் நடக்கிறது எனக்கு விளங்காதெண்டு நினைக்கிறீங்களாக்கும். வேலை முடிஞ்சு வரக்கை தற்செயலா பஸ்ஸை விட்டிட்டனெண்டால் போதும். எங்கை துலைஞ்சு போனனி எண்டு எரிச்சலாக் கேப்பிங்களே! Shopping(சொப்பிங்) போயிட்டு வர, கொஞ்சம் லேற்றாப் போனால் போதும். முகத்திலை எள்ளும் கொள்ளும் வெடிக்க நிப்பிங்கள். இதெல்லாம் எனக்கு விளங்கிறேல்லை எண்டு நினைச்சிங்களோ? நீங்கள் ஊர் சுத்திப்போட்டு வர நான் வீட்டிலை இருந்து வீட்டு வேலையளைப் பாத்துக் கொண்டு நீங்கள் சொல்லிப் போட்டுப் போற வேலையளையும் செய்து கொண்டு இருக்கோணும். வந்து அதுக்கும் நொட்டையும் சொட்டையும் வேறை. எத்தினை காலத்துக்கெண்டு மனுசர் இப்பிடி வாழேலும்.நான் வேலைக்குப் போகாமலே எனக்குச் சம்பளம் வருமெண்டால் நீங்கள் எவ்வளவு சந்தோஷப் படுவியள் எண்டு எனக்குத் தெரியாதாக்கும்."



"சரியப்பா...கொஞ்சம் விட்டனெண்டால் நீ உன்ரை பல்லவியைத் தொடங்கீடுவாய்."



"இருந்து பாருங்கோவன். நானும் ஒரு நாளைக்கு............"



" இஞ்சை பார் நான் ஒண்டும் பார்க்கேல்லை..........நீ உந்தத் தேவையில்லாத கதையளை விட்டிட்டு போய்ச் சமையலைப் பார்."



"ஏன் இப்பக் கதையை மாத்திறியள்?"



"இஞ்சை பார்........ மனுசருக்குப் பசிக்குது. கதையை விட்டிட்டுப் போய் சமை."



"ஏன்.........நான் சமைக்கோணும். சாப்பிடுறது எல்லாரும்தானே...... சமைக்கிறது மட்டும் எனக்கெண்டு எங்கை எழுதி வைச்சிருக்கு?"



"ஐயோ.....ஏனப்பா கதைச்சே மனுசரைக் கொல்லுறாய்.?"



"பின்னை என்ன? நீங்கள் இருந்து TV(ரீவீ) பார்த்துக் கொண்டிருக்க நான் போய்ச் சமைக்கோணுமோ?"



"ஞாயிற்றுக் கிழமையிலையாவது மனுசரைச் சும்மா இருக்க விடன்."



"ஏன் எனக்கு மட்டும் ஞாயிற்றுக் கிழமை இல்லையோ?"



"நான் ஆம்பிளையடி!"



"ஆம்பிளையெண்டால்...............!"



சந்திரவதனா

யேர்மனி

மொய்

சமைச்சுக் கொண்டிருக்கிற நேரமாகப் பார்த்து தொலைபேசி அலறுகிறது.



"இந்தச் சனங்களுக்கு வேறை வேலையில்லை. சமைச்சுக் கொண்டிருக்கிற நேரமாப் பார்த்துத்தான் ரெலிபோன் பண்ணுங்கள். நேற்றும் வெங்காயம் எரிஞ்சு போட்டுது." புறுபுறுத்த படி சமையலறையிலிருந்து வெளியில் வந்த செண்பகக்காவின் மனசு ஏதும் தொல்லைபேசியாக இருக்குமோ என்று தயக்கம் காட்டினாலும், கால்கள் விரைய கைகள் தொலைபேசியைத் தூக்க...



"வணக்கம் அக்கா. நான் சாந்தன் கதைக்கிறன்."



"எந்தச் சாந்தன்..? கறுத்தச் சாந்தனோ..?"



"இல்லையக்கா"



"அப்ப... எரிமலை சாந்தனோ..?



"இல்லை...யக்கா. நான் அண்டைக்கு.. மைக்டொனால்ட்ஸ் சிறீயின்ரை கலியாணவீட்டிலை உங்களோடை கதைச்சன்.."



"அட நீங்களே..? சொல்லுங்கோ தம்பி என்ன விசயம்..?"



"உங்கடை வீட்டுக்கு எப்பிடியக்கா வாறது? ஒருக்கால் வழியைச் சொல்லுவிங்களோ..?"



இவன் ஏன் இப்ப இங்கை...! சொந்தமும் இல்லை. நட்பும் இல்லை. எப்பவோ ஏதோ ஒரு கலியாண வீட்டிலை சந்திச்சது. அவ்வளவுதான். என்ரை கணவரை முந்தியே இடைக்கிடை றோட்டு வழியே கண்டு கதைச்சிருக்கிறானாம். அண்டைக்கும் கலியாண வீட்டிலை மொய் எழுதிற வரிசையிலை நிண்டு மைக்கை விழுங்கினவன் மாதிரி பெரிய சத்தமாகக் கதைச்சுக் கொண்டு நிண்டவன். எங்கடை இடத்திலையிருந்து 100கி.மீற் தள்ளியிருக்கிறான்.



"தம்பி..! என்ன விசயம்? இவ்வளவு தூரம் எங்களைத் தேடி வர..?"



"அது வந்து... மகள் சாமத்தியப் பட்டிட்டா. வாற சனிக்குத் தண்ணி வார்க்கிறம். அதுதான் கார்ட்டைக் கொண்டு வந்து நேரேயே தந்திட்டுப் போவமெண்டு....."



உந்தக் கார்ட் தாறதுக்கு பெற்றோல் செலவழிச்சு 150கி.மீற் கார் ஓடி வரப் போறிங்களே..? ஏன் தம்பி உங்களுக்கு வீண் அலைச்சல்? தபாலிலை அனுப்பி விடுங்கோ.



செண்பகக்கா ஏதோ அவன் அலைஞ்சு கஸ்டப்படுறதைப் பார்க்க தனக்கு விருப்பமில்லை என்பது போலக் கதைத்தாலும், உள்ளுக்குள் 150கி.மீற் தூரத்திலையிருந்து வாறவனைச் சும்மா அனுப்பேலுமே! சமைச்சுமெல்லோ கொடுக்கோணும்.. என்ற பயம்தான் இருந்தது.



"பிறகு நீங்கள் குறை பிடிக்க மாட்டிங்களே..?"



"இதிலை குறை பிடிக்க என்ன தம்பி இருக்குது? நான் ஒண்டும் குறை நினைக்க மாட்டன். நீங்கள் தபாலிலை அனுப்புங்கோ.



ம்.........திரும்ப இண்டைக்கும்.. அடுப்பிலை வெங்காயம் எரிஞ்சு போட்டுது. நேற்றும் இந்த மனிசன் முகத்தைக் கோணி வைச்சுக் கொண்டு சாப்பிட்டது.



சனத்துக்கு வேறை வேலையில்லை. மகள் சாமத்தியப் பட்டிட்டுதாம். மகளையே நான் ஒரு நாளும் கண்ணாலை காணேல்லை. இப்ப உதுக்குப் போய் மொய் எழுதோணுமே! சா... யேர்மனியை விட்டிட்டு பேசாமல் செட்டி நாட்டிலை போய் இருக்கலாம் போலை இருக்கு. அங்கை கலியாணத்துக்கே மொய் 25பைசாதானாம்.



சந்திரவதனா

3.8.2004

பிரசுரம் - எரிமலை (Aug-2004)

Saturday, October 02, 2004

ஒரு நினைவுப் பறவையின் சிறகு விரிப்பு..! - 3

ரோச்சைப் பிடித்து நேரத்தைப் பார்த்தேன். 3.30 மணி. இங்கு வந்த பின் இப்படித்தான் வேளைக்கே விழிப்பு வந்து விடுகிறது. இன்று இன்னும் வேளைக்கு. இயற்கையின் சலசலப்புகள்தான் என்னை அருட்டினவோ!



மெதுவாக எழுந்து மெத்தை இல்லாத மரக்கட்டிலில் முட்டுக்காலில் இருந்த படியே மரச்சட்டங்களினூடே வெளியில் பார்த்தேன். விடியலுக்கான அறிகுறியாய் இருள் விலகியும் விலகாமலும் மங்கிய பொழுது. வெண்புறா செயற்கை உறுப்புத் தொழில் நுட்ப நிறுவனம் அமைதியாக உறங்கிக் கிடந்தது.



எனது அறைக்கு முன்னால் கேற்வாசல் மூலையோடு நிற்கும் பருத்த பெரிய ஒற்றை ஆண்பனை ஆடாமல் அசையாமல் அழகாய் கம்பீரமாய் எழுந்து நின்றது.



போரின் அனர்த்தங்களால் பொலிவிழந்து ஆங்காங்கு குழி விழுந்து வாடிப் போயிருக்கும் ஏ9 வீதியில் கடாமுடா என ஏறி இறங்கிச் செல்லும் வாகனங்கள் வீசிச் செல்லும் ஒளி வெள்ளத்தில், கேற்றுக்கு வெளியே மதிலோடு ஏ9 பாதையின் ஓரமாக நிமிர்ந்து நின்ற அறிவிப்புப் பலகையில் உள்ள வெண்புறாச் சின்னமும், வெண்புறா செயற்கை உறுப்பு தொழில் நுட்ப நிறுவனம், கிளிநொச்சிபிராந்தியச் செயலகம் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்த வாசகங்களும் மின்னி மின்னி மறைந்தன.



நேற்று வரை மூடிய படியே கிடந்த பாழடைந்த எதிர் வீட்டில் இன்று ஒரு வகை உயிர்ப்புத் தெரிந்தது. மோட்டார் சைக்கிள் ஒன்று வாசலில் நின்றது. திறந்த கதவினூடே ஒரு பெண்ணின் அசைவுகள் தெரிந்தன. இடம் பெயர்ந்து போன வீட்டுச் சொந்தக்காரர் மீண்டுள்ளனர் என்பது புரிந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் இங்கு ஒரு கடை முளைத்திருக்கும். நான் வந்த சில நாட்களுக்குள் இந்த வீதிகளில் முளைக்கும் புதிய புதிய கடைகள் என்னை அப்படித்தான் எண்ண வைத்தன.



பக்கத்துக் கோயிலில் வேர் பரப்பி விழுது விட்டு குடை விரித்திருக்கும் அழகிய அரச மரத்தின் கிளைகள் எனது அறையின் தகரக் கூரையில் உரசும் சத்தத்தை விட, அதிகாலையிலேயே குதித்துக் கொண்டும், இறகைச் சிலுப்பிக் கொண்டும் மற்றவர்களைத் தொந்தரவு பண்ணுகிறோமே..! என்ற எந்தப் பிரக்ஞையுமின்றி தமக்கு மட்டுந்தான் இந்தப் பிரபஞ்சம் சொந்தம் என்பது போல கரைந்து கொண்டிருந்த காகங்களின் சத்தம் அதிகமாகவே இருந்தது.



இதையெல்லாவற்றையும் மீறி எங்கிருந்தோ விட்டு விட்டு ஒலித்த அந்தச் சத்தம் என்னைத் தன்பால் ஈர்த்தது. "அது வானொலியா.....!" "இந்த நேரத்தில் எந்த வானொலி......!" எனக்குள் எழுந்த கேள்விக்கு விடை தேடும் முனைப்பில்------- கேட்கும் திறனையெல்லாம் ஒன்று கூட்டி, ஒரு நிலைப் படுத்தி கூர்ந்து கவனித்தேன். அது வானொலியல்ல. ஒலி பெருக்கி.



எங்கோ தொலைவிலிருந்து காற்று அள்ளி வந்த அந்தத் துண்டுத் துண்டு வாக்கியங்களைக் கோர்த்துப் பார்த்ததில் - சிறார்களைப் பள்ளிக்கு அழைப்பது தெரிந்தது. அழியாத செல்வமாம் கல்வியைப் பற்றி குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் விளக்கும் அவசரம் தெரிந்தது. கல்வியின் மகத்துவம் விளக்கப் பட்டது. எந்தக் குழந்தையும் பள்ளிக்கு வராமல் இருந்து விடக் கூடாது என்ற கரிசனம் தெரிந்தது. தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் ஒழுங்கு படுத்தலில் ருNஐஊநுகு நிறுவனத்தின் நிதியுதவியுடன் கிராமிய கல்வி பொருளாதார நிறுவனம் நடைமுறைப் படுத்தும் அந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாது பயன் படுத்தி விட வேண்டுமென்ற அக்கறை தெரிந்தது.



இந்த அக்கறை, மனிதம் மீதான இந்தக் கரிசனம் வன்னிக்குள் எங்கும் ஒட்டியிருந்தது. சிதைக்கப் பட்ட ஒரு பூமியில் நம்பிக்கை விதை நல்ணெண்ணத்தோடு விதைக்கப் பட்டு செழிப்போடு வளர்ந்திருந்தது. அந்த நிர்வாகத்திறன் என்னை வியக்க வைத்தது.



கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி வன்னிமண் செப்பனிடப்பட்டிருந்தது. நான் நினைக்கிறேன் இலங்கையிலேயே கூடுதலான அங்கவீனர்கள் வன்னியில்தான் இருக்கிறார்கள் என்று. ஆனால் வன்னி அவர்களை வீதியில் வீசி எறியாமல் தன்னோடு அணைத்து வைத்திருந்தது. ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்தது.



இந்த மனிதத்தனம், இந்த மனிதநேயம், மக்களோடான இந்த நட்பு, மக்களின் எதிர் காலத்தின் மீதான இந்த அக்கறை இவைதான் என்னுள் சந்தோசப் பிரவாகத்தையும் அளவிலாப் பிரமிப்பையும் ஏற்படுத்திக் கொண்டேயிருந்தன. போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பது தெரிந்தது.



தாயக விடுதலைக்காய் தோள் கொடுத்த, கால் கொடுத்த, கை கொடுத்த.... போராளிப் பிள்ளைகளைச் சந்திக்கும் போதெல்லாம் வன்னியின் இப்படியான நடப்புக்கள் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் ஆச்சரியம் பற்றிப் பேசினேன். அதனால் ஏற்பட்டிருக்கும் இன்பத் திணறல் பற்றிப் பேசினேன். இவையெல்லாவற்றையும் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன் மிக்க அண்ணனைப் பற்றிப் பேசினேன்.



"அண்ணன்" அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.



வாய்க்கு வாய் "அண்ணை" என்றும் "அண்ணன்" என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம் - ஏற்கெனவே எனக்குள் முளைவிட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து தளிர்த்து சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. "நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்குரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்." எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.



நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும், அது எனது ஆசை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளாதபடி, பொதுவாகக் கேட்பது போல் "அண்ணனை யாருக்காவது சந்திக்கும் வாய்ப்பிருக்கா..?" என்று கேட்டுப் பார்த்தேன்.



எல்லோரிடமிருந்தும் "அண்ணன் இப்ப பிஸியாக இருக்கிறார். முடியாது." என்ற பதில்கள்தான் வந்தன. "எத்தனையோ பேர் வந்து காத்திருந்து விட்டுப் போய் விட்டார்கள்." என்றும் சொன்னார்கள். அந்தப் பதில்களில் நான் சற்று ஏமாற்றத்தையடைந்தாலும் எனக்குள் விசுவரூபம் எடுத்த அந்த ஆசையை என்னால் வீசி எறிய முடியவில்லை.



என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காக தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு பேச வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.



"என்ன...! வெளியிலை ஆரும் நிக்கினமே...? விடிஞ்சிட்டே..? "

அருகில் ஆழ்ந்து தூங்கியிருந்த எனது கணவரின் விழிப்போடு வந்த கேள்வியில் நான் நினைவுச் சிறகுகள் அறுபட்டு தொப்பென்று மீண்டும் மரக்கட்டிலில் வீழ்ந்தேன்.



"இல்லை. ஒருத்தரும் இல்லை. எனக்கு மூண்டு மணிக்கே நித்திரை போட்டு."



சொல்லி விட்டு மீண்டும் படுத்தேன். எனக்கு நித்திரை வரவில்லை. மனசு இறக்கை கட்டிக் கொண்டு சிலிர்ப்பு, தவிப்பு, துடிப்பு..... என்று பல்வேறு உணர்வுகளுடன் எங்கெல்லாமோ அலைந்தது. இடையிடையே "அண்ணையை எப்படிச் சந்திக்கலாம்! அவர் என்னைச் சந்திக்கச் சம்மதிப்பாரா..?" என்ற கேள்விகளுடன் வெண்புறாவுக்குள் வந்து மரக்கட்டிலில் விழுந்தது.



சந்திரவதனா

யேர்மனி.



(நினைவுப்பறவை மீண்டும் தன் சிறகை விரிக்கும்)

Friday, October 01, 2004

ஒரு நினைவுப் பறவையின் சிறகு விரிப்பு..! - 2

ஒரு சின்னக் குளியல் செய்து விட்டு, முடிந்தால் சுடச் சுட ஒரு தேநீர் அருந்தி விட்டு பயணத்தைத் தொடரலாம் என்ற நினைப்போடுதான் வவுனியாவில் இருந்த வன்னிலொட்ஜ் இனுள் புகுந்து கொண்டோம்.



என்னவொரு ஏமாற்றம்..! வாழ்க்கையில் நான் சந்தித்த மிக மிக அருவருப்பான இடங்களில் ஒன்று அது. அறைக்குள் நுழைந்த பொழுதே அப்படியொரு நாற்றம். குளியலறைக்குள் நுழைந்தேன். வருடக்கணக்காகத் துப்பரவு செய்யப் படாதிருந்தது. போன வேகத்தில் வெளியில் வந்து விட்டேன். ஐந்து நிமிடங்கள் கூட அங்கு நிற்க முடியவில்லை. ஹொல்கெர் ஓடியோடி அந்த அசிங்கத்தைத் தனது கமராக்குள் திணித்துக் கொண்டிருந்தான். எனக்குச் சங்கடமாக இருந்தது. என்றாவது ஒருநாள் யேர்மனியத் தொலைக்காட்சியில் இது ஒளிபரப்புச் செய்யப் படலாம்.



எனது பயணத்தின் மணிப்பொழுதுகளில் இது ஒரு மாசு படிந்த பொழுது. ஒரு நாளைக்கான கட்டணப் பணத்தைக் கட்டி விட்டு வெளியேறினோம்.



வெளிப் பார்வைக்குப் பிரமாண்டமாகத் தெரிந்த அந்த லொட்ஜ் தன்னோடு வைத்திருந்த அருவருப்பு இப்போது என்னோடு ஒட்டிக் கொண்டு வந்துவிட்டது போலிருந்தது.



கையோடு கொண்டு வந்த ஃபைபர்கிளாஸ் (Fiberglass) இல் கால்செய்வதற்கான மருந்துப் பொருட்களையும், உபகரணங்களையும் விளக்குவைச்சகுளத்தினூடே கொண்டு செல்வதில் சிக்கல் இருக்கலாம் என்ற எண்ணம் எமக்கு இருந்ததால், அவைகளை வவுனியாவில் ஒரு கடையில் வைத்து விட்டுப் போய் றெட்குறோஸ் (Red Gross) மூலம் எடுத்துக் கொள்ளலாம் என நேற்றுக் கடைசி நேரத்தில் தீர்மானித்ததை இன்று செயற்படுத்து முகமாகக் குறிப்பிட்ட ஒரு கடையைத் தேடினோம்.



அதிகாலை நான்கு மணி என்பதால் அனேகமான எல்லாக் கடைகளும் பூட்டியே இருந்தன. ஒரு சில கடைகளுக்குள்ளிருந்து பாடல்கள் மட்டும் கேட்டன.



தூங்கி வழிந்த மாடுகளுக்கும் தூங்கியே கிடந்த மாடுகளுக்கும் மத்தியில் காத்திருந்தோம். பொறுமை கெட்டு வாகனத்திலிருந்து இறங்கி வீதியில் நடக்கையில் வீதியோரங்களிலும் கட்டிடத் திண்ணைகளிலும் மனிதர்களும் உறங்கியும் உறங்காமலும் இருப்பதைக் கண்டோம். ஓட்டோக்களும் நின்றன.



ஐந்து மணியாகிக் கொண்டிருக்கையில் மோட்டார்சைக்கிள்களினதும் துவிச்சக்கரவண்டிகளினதும் வரவைத் தொடர்ந்து ஒரு சில கடைகள் திறக்கப் பட்டு சாம்பிராணிப்புகை வாசம் கமகமக்கத் தொடங்கியது. சுப்ரபாதம் மனசையும் காதையும் நிறைத்து புத்துணர்ச்சியைத் தந்தது. காத்திருப்புகளைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி குறிப்பிட்ட கடையைக் கண்டு பிடித்துப் பொருட்களை ஒப்படைத்து விட்டு வவுனியாவிலிருந்து புறப்பட்டோம்.



வாகனம் விளக்குவைச்சகுளத்தை நோக்கி விரையத் தொடங்கியது. யாரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. எல்லோரிடமும் ஒரு அவசரம். - நேரத்துக்குப் போய் வரிசையில் நிற்க வேண்டும். - இடையிடையே "கெதியாப் போனால்தான் லைனில் நின்று பாதை கடக்கலாம்." என்று சிவா மாஸ்டரும் கணவரும் முணுமுணுப்பது கேட்டது. ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பின் லைனைக் கட்பண்ணி ஆட்களைத் திருப்பி விடுவார்களாம்.



எமக்குள் பதட்டம். பதினாறு வருடங்களின் பின் சரியான முறையில் சிங்கள இராணுவத்தை இனித்தான் சந்திக்கப் போகிறோம். பாதை திறக்கப்பட்ட பின் விளக்குவைச்சகுளத்தில் செக்கிங் எப்படி இருக்கும் என்பது பற்றியதான சரியான தகவல்களை யாருமே எமக்குத் தரவில்லை. சிவா மாஸ்டரும் பன்னிரண்டு வருடங்களின் பின் இப்போதான் கொழும்பிலிருந்து தமிழீழத்தை நோக்கிப் பயணிக்கிறாராம்.



எப்படியான வரவேற்பு எமக்காகக் காத்திருக்கிறது என்று தெரியாமலே விளக்கு வைச்சகுளத்தின் செக்கிங்பொயின்ற் இலிருந்து ஒரு மைல் நீளமளவில் நீண்டிருக்கும் மனிதர்களும் வாகனங்களும் நிரைப் படுத்தப் பட்ட வரிசையை வந்தடைந்தோம். எட்டுமணிக்கு முன்னமே இப்படியொரு நீள்வரிசை. செக்கிங் இன்னும் தொடங்கவில்லையாம். எட்டிப் பார்த்தோம். இறங்கி நடந்து பார்த்தோம்.



ஒவ்வொரு பத்து யார் தூரத்துக்கும் மூட்டைகளை அடுக்கி முள்ளுக்கம்பிச் சுருள்களை வைத்துத் தடைமுகாம்களை அமைத்திருந்தனர் சிங்கள இராணுவத்தினர். அடிக்கடி அதன் பின்னிருந்த சிறுகுடில்களுக்குள்ளிருந்து எட்டியும் பார்த்தனர். நட்பாகச் சிரித்தனர். போர் என்று வரும் போது இவர்கள்தானா பேய்களாக மாறுகிறார்கள்..? நம்ப முடியாதிருந்தது.

குளித்து விட்டு ஈரத்துவாலையைத் தோளில் போட்டுக் கொண்டு வந்த குட்டையாகத் தலையை வெட்டியிருந்த அவர்களில் சிலர் சிரித்த படி கைகாட்டினார்கள். இவர்களும் மனிதர்கள்தான். ஆனாலும் பணத்தைக் காட்டிப் பகடைக் காய்களாக்கப் படுகிறார்கள். யதார்த்தம் புரிந்தது.



காத்திருப்புகளில் எம்மவர்கள் களைத்துப் போயிருந்தார்கள். சுள்ளி வைத்து எரிக்கும் மணத்தைக் காற்று அள்ளி வந்தது. ஆங்காங்கு களையிழந்த வீடுகளின் முன்றலில் சிலர் அடுப்பின் மேல் பானை வைத்து தண்ணீர் சுட வைத்து தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். கொண்டு வந்த உணவுகளையும், அந்தத் தேநீரையும் சுவைத்துப் பலர் தமது பசியையும் களையையும் ஆற்றிக் கொண்டிருந்தார்கள். எமது வாகனத்தின் சிங்கள சாரதி ஓடியோடி ஒவ்வொரு தடைமுகாம்களுக்குள்ளும் புகுந்து சிரித்தபடி வெளியில் வந்தான்.



வரிசை நத்தையாக நகரத் தொடங்கியதும் நாங்களும் நகர்ந்தோம். எமது முறை வந்ததும் சிறீலங்கா அடையாள அட்டையைக் காட்டினோம். ஹொல்கரின் எம்ஓடீ(MOD) யைப் பார்த்து விட்டு, அதில் இரு பிரதி தமக்கு வேணுமென்றார்கள். "எமக்கு அதுபற்றித் தெரியாது. அதனால் நாம் ஒரு பிரதியும் எடுக்கவில்லை." என்றோம். ஒரு சிலர் எம்மைப் பாவமாகப் பார்த்தாலும் ஒரு சிங்களவன் எம்ஓடீ யின் கொப்பி இல்லாமல் நாம் மேற்கொண்டு நகர முடியாது என்று கடுமையாகச் சொல்லி விட்டான். அவன் முகத்தில் இனக்குரோதம், அதிகாரத்திமிர்... எல்லாமே அளவுக்கதிகமாகவே இருந்தன.



இனி நாங்கள் மீண்டும் வவுனியா வரை போய் கொப்பி(பிரதி) எடுத்து வந்து வரிசையில் நின்று... பயணம் தொடர்ந்த மாதிரித்தான். மனசுக்குள் சலிப்பும் கோபமும் வந்தன. சாரதி சிங்களத்தில் மீண்டும் அந்த அதிகாரியிடம் கேட்டுப் பார்த்தான். ம்கும்.. அதிகாரி சற்றும் இளகவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினோம். ஆனாலும் தடைமுகாம்களுக்குள் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களிடம் சாரதி ஆலோசனை கேட்ட போது அவர்களில் ஒருவன் எம்மை அவர்களது அலுவலகமொன்றுக்கு அழைத்துச் சென்று பிரதி எடுத்துத் தந்து, எமது வாகனத்தில் ஏறி எம்மை மீண்டும் வரிசையில் முன்னுக்குக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போனான். அவனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. கண்களால் சொன்னோம். சிரிப்பை உதிர்த்துச் சென்றான்.



ஓருவாறு பாஸ், எம்ஓடீ, ஐசி செக்கிங்குகள் முடிந்தால் இனி நாம் கொண்டு வந்த பொருட்களின் மீதான செக்கிங். அதற்கு வாகனத்தை அங்கிருந்த பரந்த காணிக்குள் இறக்க வேண்டி இருந்தது. மரநிழல்கள், வெயில்கள், இருக்கைகள் என்று பலதரப்பட்ட நிலைமைகள் அதற்குள். பொருட்களின் மீதான செக்கிங்கில் கடுமை இருக்கவில்லை. எமது உடமைகளில் சிலவற்றை அவர்கள் திறந்து கூடப் பார்க்கவில்லை. ஹொல்கெரின் கமராவைத்தான் கழற்றியும் பார்த்தார்கள். அத்தோடு முடியவில்லை. வாகனத்தையும் பதியவேண்டுமாம். அதனால் சாரதி அதற்குரிய இடத்துக்குச் சென்று விட நாம் காத்திருந்தோம்.



களைப்புக்கு நடுவிலும் அது ஒரு இனிமையான பொழுது. அங்கு காத்திருந்தவர்களில் பல உறவுகள் என்னை இனம் கண்டு வந்து பேசிச் சென்றார்கள். அவர்கள் உள்நாட்டிலேயே வாழ்ந்திருந்தாலும் 12, 15, 16.. வருடங்களின் பின் இப்போதான் வடக்கை நோக்கிச் செல்கிறார்களாம். அவர்களுடனான சந்திப்பு எதிர்பாராத சந்தோசம்.



வாகனமும் பதிந்து முடிய விளக்குவைச்சகுளத்தை விட்டுப் புறப்பட்டோம். "அப்பாடா" என்றதொரு உணர்வு மனத்துக்குள்.



நிம்மதியோடு தொடர்கையில் தமிழீழம் எங்களை வரவேற்றது. மனசு குதூகலித்தது. பெண்பொலிஸ்களும் எம் பெடியளும் என்று கண்டதில் மனசு துள்ளியது.



தமிழீழத்தில் ஆங்காங்கு ஓரிரு செக்கிங் பொயின்ற்ஸ் இருந்தாலும் மரையடிச்ச குளத்தில் எமக்கான செக்கிங். அங்கு பதிந்து வெளிநாட்டிலிருந்து வந்த காரணத்தால் 500 ருபா கட்டணம் செலுத்தி வன்னிக்குள் புகுவதற்கான பாஸைப் பெற்றுக்கொண்டோம். ஹொல்கெர் வெளிநாட்டவர் என்பதால் அவரிடம் எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப் படவில்லை. சிங்கள சாரதியை உள்விடுவதில்தான் சில தயக்கங்கள். எம்மை அழைத்துப் போக வெண்புறாவிலிருந்து இரு உறவுகள் வந்திருந்தார்கள். ஆனாலும் எமது பொருட்களை அவர்களது வாகனத்தில் வைக்க முடியவில்லை. அதனால்

இன்றே திரும்பி விட வேண்டுமென்ற உத்தரவுடன் சிங்களசாரதியை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.



எமது பயணம் எமது மண்ணில் தொடர்ந்து....... கிளிநொச்சியின் வெண்புறாசெயற்கை உறுப்பு பிராந்தியச் செயலகத்தை வந்தடைந்தது.



வைத்தியமே கேள்விக்குறியாகிப் போன நேரத்தில் செயற்கை அங்கங்களைப் பொருத்துவது - அதுவும் பணம் கொடுத்து - செயற்கை உறுப்புகளைப் பொருத்துவது என்பது சாதாரண மக்களுக்கு முடியாத காரியம்.

இந்த நிலையில் முற்று முழுதாக இலவசமாக தனது சேவையை தமிழ் மக்களுக்குத் தர 15.06.1994இல் யாழ்ப்பாணம் குளப்பிட்டி வீதியில் தோற்றம் பெற்றதுதான் இந்த வெண்புறா நிறுவனம்.



சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையால் யாழ்ப்பாணம் குளப்பிட்டி வீதியிலிருந்து கிளிநொச்சி-கோணாவில், புதுக்குடியிருப்பு எனப் பறந்து வந்த வெண்புறா, தனது தலைமைச் செயலகம் இன்னும் புதுக்குடியிருப்பிலேயே இருந்தாலும் 15.6.02 இலிருந்து கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் வந்து கம்பீரமாக அமர்ந்திருக்கிறது.



தொழில் நுட்பவியலாளர், திட்ட இணைப்பாளர், நிர்வாக அலுவலகர், வரவேற்பாளர், தட்டச்சாளர், கணக்காளர், காசாளர், களஞ்சியக்காப்பாளர், காவலாளர், சமையலாளர், பராமரிப்பாளர், கள அலுவலகர், விழிப்புணர்வுப் பணியாளர்கள், மருத்துவர், கண்ணிவெடி அகற்றும் பிரிவினர்... என்று 32 பேர்கள் பணியாற்றும் வெண்புறாவின் உள்ளே வீசும் காற்றுக் கூட என்னை நேசக்கரம் நீட்டி வாவென வரவேற்றது.



எம்மை ஏற்றி வந்த வாகனச் சாரதிக்கு மிகுதிப் பணத்தையும் கொடுத்து அனுப்பி விட்டு, வெண்புறாவின் உறவுகளுடன் நான் கைகோர்த்துக் கொண்டேன். அது இறுக்கமான நேசமான அன்பான கைகோர்ப்பு.



கோர்த்த கைகளை இழுத்துப் பிரித்துக் கொண்டு மீண்டும் யேர்மனி திரும்பும் ஒரு நாள் வரும் என்பது பற்றிய பிரக்ஞைகள் எதுவுமின்றி நான் வெண்புறாவுக்குள் உலா வந்தேன்.



சந்திரவதனா - யேர்மனி



(நினைவுப் பறவை மீண்டும் தன் சிறகை விரிக்கும்)