Monday, July 26, 2004

சங்கிலித் துண்டங்கள்

அலை வந்து கால்களை நனைத்தது. மெல்லிய குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆங்காங்கு மரங்களின் கீழும், கற்களிலும், தரைகளிலும் அமர்ந்திருந்து இளஞ்சோடிகள் காதல்லீலைகள் புரிந்து கொண்டிருந்தனர். வெள்ளவத்தைக் கடற்கரையின் அந்தக் குழுகுழுப்பிலோ, மகிழ்வலைகளிலோ என் மனம் குதூகலிக்க மறுத்தது.



இந்து என் மனநிலையைப் புரிந்து கொண்டவளாய், என்னை சந்தோஷப் படுத்த எண்ணி ஏதேதோ கதைத்தாள். சிரித்தாள். நானும் ஒப்புக்குச் சிரித்துக் கொண்டு நடந்தேன்.



ஆரவாரப்பட்டுக் கொண்டு வேகமாக ஓடி வந்த கடல் அலைகளில் ஈரமாகிப் போன என் சட்டையின் கீழ்ப்பகுதி, என் கால்களில் ஒட்டிக் கொண்டு நின்றது. என் மனசு மட்டும் எதிலுமே ஒட்டாமல் வெறுமையாக இருந்தது.

அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, தங்கைமாருடன் இந்தக் கடற்கரையில் நடந்த இனிய காலங்கள்...............!  சிரித்து, ஓடி, விழுந்து, ஒழித்து..............!  எத்தனை இனிமை! நினைவுகள் தந்த  சிலிர்ப்பில் மனம் களித்து, உடனேயே கலைந்தது.



"சந்தியா! என்ன மௌனமாகீட்டாய்? எதையும் நினைச்சு நினைச்சு மனசைக் குழப்பிக் கொண்டிராதை. இந்தளவாவது வந்து அப்பாவோடை இருக்க முடிஞ்சதை நினைச்சுச் சந்தோஷப்படு."என் சோகத்தையெல்லாம் துடைத்தெறிந்து விடுவதாய் கங்கணம் கட்டிக் கொண்டவளாய் இந்து என்னை அன்பாகக் கடிந்தாள்.



ஊற்றாய் சுரந்து எனக்குள்ளே அருவியாகப் பிரவகித்துக் கொண்டிருந்த சோகம் அவளின் அன்புத் தொடுகையில் தடுமாறி அணைமீறி விழிவழி பாய்ந்து கடலுடன் கலந்தது.



`அப்பா...............! போயிட்டார். முந்தநாள் எல்லாம் முடிந்து போய் விட்டது. என்ரை அப்பா என்னை விட்டுப் போயிட்டார். இந்த உலகத்தை விட்டே போயிட்டார்.´



அப்பா...............! எத்தனை வாட்டசாட்டமாக இருந்தவர். மீசையையும் முறுக்கி விட்டுக் கொண்டு வாட்டசாட்டமான கட்டுடலுடன் அவர் நடக்கும் ராஜ நடையே ஒரு தனி அழகுதான். இராஜ ராஜ சோழன் சிவாஜியைப் பார்த்து அப்பாதான் நடிக்கிறாரோ என்று சின்ன வயசில் எனக்கு ஒரு சந்தோசமான சந்தேகம் வரும்.அப்படி ஒரு அழகும் ஆளுமையும் அப்பாவிடம். அவர் வாழ்வு இத்தனை வேகமாக முடிந்திருக்கத் தேவையில்லை.எதையும் நம்பவும் முடியாமல், ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் மனசு விம்மி விம்மித் துவண்டது.



வவுனியாவில் வைத்தியர்கள் பற்றாக்குறையாம். பாதிக்கப் பட்டது யார்? எம் தமிழர்கள்தான். நாற்பத்தியாறு வைத்தியர்கள் கடமையாற்ற வேண்டிய வவுனியாவின் மூன்று பெரிய வைத்தியசாலைகளுக்குமாக மூன்றே மூன்று வைத்தியர்கள் மட்டுமே. அடிபட்டுப் போன தமிழர்களில் என் அப்பாவும் ஒருவர் என்ற போதுதான் கொடுமையின் தீவிரம் என்னையும் குதறியது. மனம் குமுறியது.



ஆனாலும் நேற்று வவுனியா ரெயில்வே ஸ்டேசனுக்கு வரும் வரை நான் அழவேயில்லை. அம்மாவைக் கட்டித் தழுவி விடை பெறுகையில் என்னையும் மீறி ஏக்கம் பெருமூச்சாய் வெளிவந்தது. நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. அப்போதும் நான் அழவேயில்லை. எங்கே அம்மா அழுது விடுவாளோ என்ற பயம் தான் என்னைத் தடுத்திருக்க வேண்டும்.



திடீரென்று அம்மா யேர்மனிக்கு ரெலிபோன் பண்ணி அப்பா மரணத்தின் வாசலில் நிற்கிறார் என்ற போது மனம் புலம்ப விழி கசிய அவசரமாய் விமானமேறி விட்டேன். வழியெல்லாம் அப்பாவை நினைத்து அழுத மனசு, யேர்மனியில் விட்டு வந்த என் குழந்தைகளையும் நினைத்து அழுதது. உயிருக்கு உத்தரவாத மில்லாத தாய்நாட்டை நோக்கிய இந்தப் பயணம் சரிதானா? என் குழந்தைகளைச் சிறகிழக்கப் பண்ணப் போகிறேனா? என்ற குற்ற உணர்வுகள் என்னைக் குடைந்தெடுத்தன.



வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்டேசன் ரோட்டின், அந்த வீட்டுக்குள் நுழைந்த போது, ஏக்கம் தோய்ந்த விழிகளுடன் காத்திருந்த அப்பா, வாடி, வதங்கி நோயின் வலியில் வேதனை ஓடி இருந்த விழிகள் ஒரு கணம் பிரகாசிக்க, தினவெடுத்த அந்தத் தோள்கள் சற்று ஒடுங்கிப் போயிருந்தாலும், பாசப்பிரவாகத்தில் துடிதுடிக்க ஓ வென்று கதறியபடி எனை ஆரத்தழுவி விம்மிய போது குடைந்தெடுத்த குற்ற உணர்வுகள் பறந்தோட, அவர் விழி துடைத்து, தலை கோதித் தாயானேன்.



என்னைத் தன் தோளில் சுமந்து, சமுதாயத்தில் தலை நிமிர்த்தி வாழும் படியாக நேர்த்தியாக வளர்த்தெடுத்த என் அப்பாவுக்கு தன் தலை சாய்க்க, என் தோள் தேவைப் பட்டிருந்தது.



ஏழு நாட்கள்...! ஏழே ஏழு நாட்கள்.

பன்னிரண்டு வருடங்களின் பின் அப்பாவுடனான அந்த ஏழு நாட்களில் ஒரு குழந்தையாய் அப்பா நடந்து கொண்ட விதம் என் பயணத்துக்கு அர்த்தம் கூறியது. அனர்த்தம் நிறைந்த எனது நாட்டை நோக்கிய என் வரவுக்கான அவசியத்தைக் கூறியது. இன்னும் என்னவெல்லாமோ கூறியது. அப்பாவின் இந்த இறுதி நாட்களிலாவது, எங்கோ அந்தகாரத்துக்குள் பிள்ளைப் பாசத்தைத் தேட வையாது, ஓடி வந்து இந்த ஏழு நாட்களையும் உயிர்ப்புடைய தாக்கியதில் எனக்குள் நிம்மதி நிறைந்த தாய்மைப் பூரிப்பு ஏற்பட்டது.



அதனால்தானோ என்னவோ எட்டாவது நாள், அப்பாவின் ஜீவன் அவரை விட்டுப் போன போது, நான் ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை. என் மனம் மட்டும, அப்பாவுடன் கை கோர்த்து என் அழகிய பருத்தித்துறை மண்ணில் நடந்த நாட்களை அசை போட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நினைவுகளும் மீட்டப்பட்டு மனம் சிலிர்த்தது.



கண்ணின் மணி போலக் காத்து, என்னை வளர்த்த என் அப்பாவை விட்டு.............! எப்படி முடிந்தது என்னால்?  பன்னிரண்டு வருடங்கள்..... நான்..... எனது கணவன் .... எனது பிள்ளைகள்..... என்று ஒரு வகை சுயநலத்துடன் இருந்து விட்டேனே!இந்தப் பன்னிரண்டு வருடத்தின் ஒவ்வொரு கணத்தையும் என்னைப் பெற்றெடுத்து, தாலாட்டி, சீராட்டி வளர்த்து இந்த சமூகத்தில் நடமாட வைத்த அப்பா அம்மா என்ற இந்த இரண்டு ஜீவன்களும் எப்படிக் கழித்திருப்பார்கள்!  எனக்கு என் பிள்ளைகள் முக்கியமாகி விட்டார்கள். இவர்களுக்கு நான் பிள்ளையில்லையா? இவர்களுக்கு முக்கியமான நான் எங்கோ இருந்து விட்டேனே! 



தள்ளாத வயதில் என்னைப் பெற்றவர்களைத் தவிக்க  விட்டு, பிள்ளைப் பாசத்துக்காக ஏங்க விட்டு, நான் சுமந்து பெற்ற என் பிள்ளைகளுக்காக என்னை அர்ப்பணித்து..........! மனசு கிடந்து அல்லாடிக் கொண்டே இருந்தது.



ஊரில் பருத்தித்துறையில் மாளிகை மாதிரி வீட்டில் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் புடைசூழ ஒரு சந்தோச சாம்ராச்சியத்தையே கட்டியாண்டவர்களை,சொந்தம் என்று சொல்ல யாரும் இல்லாத படி தாண்டிக்குளம் தாண்டி வந்து வவுனியாவில் தன்னந் தனியாகத் தங்க விட்டு..........! நினைவுகள் சாட்டைகளாக மனசை விளாசிக் கொண்டேயிருந்தன. வந்தவர்கள் நினைத்திருக்கலாம். யேர்மனிக்குப் போனதோடு என் மனம் கல்லாகி விட்டதென்று. வந்தவர்கள் யாரும் சொந்தக்காரர்கள் அல்ல.



குருமன் காட்டுச் சந்தியில் நிற்கும் சிங்களக் கூலிப்படைகளுக்கு கேட்கும் படி குழறியழும் துணிவு யாருக்கும் இல்லையென்றாலும் அவர்கள் எல்லோரும் மூச்சிழுத்து அழுது கொண்ருந்தார்கள். மூக்கைச் சீறி சேலைத் தலைப்பால் துடைத்தார்கள்.



அப்பாவுக்கும் அப்பாவைச் சுற்றிக் கொண்டு நின்று அழும் இவர்களுக்கும் இடையிலான பிணைப்பு சொந்தம் இல்லை. ஆனால் சொல்லில் வடிக்க முடியாத பந்தம்.



அப்பாவின் கால் மாட்டில் இருந்தழும் நாகேஸ் அன்ரி என்னை விட இளையவள்.அவள் தான் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரி. எண்பத்தாறில் நடந்த ஒரு கொடுரத்தில் அநுராதபுரத்தில் இவள் கணவனும் வெட்டிப் பிளக்கப் பட்டு விட்டானாம். "அப்பா...! அப்பா...!"  என்று உருகி உருகி அழுதாள்.



அப்பாவின் வலது பக்கம் நின்றழும் பக்கத்து அறை பரிமளாவும் "அப்பா...! அப்பா...!"  என்று விசும்பினாள். என் வயதிலிருக்கும் அவளும் கணவனை இழந்தவள்தான். மதவாச்சியில் அவள் கணவன் கண்ட துண்ட மாக்கப் பட்டு காலங்கள் ஓடி விட்டதாம்.



இப்படியே அந்த வீட்டுக்குள் இருக்கும் ஏழு குடும்பங்களும் தமக்குள் ஒவ்வொரு சோகக் கதையைச் சுமந்து கொண்டு என் அப்பாவுக்காக விம்மி விம்மியழுதன.



அவர்கள் எல்லோருக்கும் என் அப்பா, அப்பா முறையாக இருந்தார். அம்மா, அம்மா முறையாக இருந்தார். இதே போல் என்னை விட இளைய நாகேஸ் அன்ரி எல்லோருக்கும் நாகேஸ் அன்ரிதான். அப்பாவும் அவளை நாகேஸ் அன்ரி என்றுதான் கூப்பிடுவாராம். பாதிக்கப் பட்டவர்கள் என்ற முறையில் அவர்கள் தமக்குள் அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அன்ரி...............!என்ற உறவு முறைகளை ஏற்படுத்தி பாசப் பிணைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.



என் அப்பாவில் அவர்களுக்கிருக்கும் உரிமை எனக்கில்லைப் போல் ஒரு குற்ற உணர்வு என்னைக் குத்திக் கொண்டிருந்தது. அப்பா படுக்கையில் வீழ்ந்த போது, நான் யேர்மனியில் இருக்க சொந்தப் பிள்ளைகள் போல், சகோதரர்கள் போல் பாசத்தைக் கொட்டிப் பார்த்தவர்கள் இவர்கள் தானே! இவர்கள் பாசத்தின் முன்  நேசத்தின் முன் நான் எம்மாத்திரம்..! மனசு கூசிப் போயிருந்தது.



எல்லாம் முடிந்து, அன்றைய இரவு எங்கள் மனங்களைப் போலவே அப்பாவின் படுக்கையும் வெறுமையாகக் கிடக்க, ஷெல்கள் மட்டும் எந்தத் தயக்கமுமின்றி காற்றைக் கிழித்து, இரவின் நிசப்தத்தைக் குலைத்துக் கொண்டிருந்தன.



"அம்மா...............! இனி இங்கை தனிய இருந்து என்ன செய்யப் போறியள்? நாளைக்கு நீங்களும் என்னோடை வாங்கோ. வந்து அங்கை கொழும்பிலை இருங்கோ. கொழும்பிலை இருந்தியள் எண்டால் நான் யேர்மனிக்குப் போனாப் பிறகும் உங்களோடை பிரச்சனையில்லாமல் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கும் கொஞ்சம் வசதியாயிருக்கும்."

அம்மாவைக் கேட்டுப் பார்த்தேன்.



"இல்லை. அப்பாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை யெல்லாம் செய்து முடிச்சுப் போட்டுத்தான் இந்த இடத்தை விட்டு நகருவன்."

அம்மா ஒரேயடியாக மறுத்து விட்டா.



அம்மாவுக்கு அப்பா மீதுள்ள பிடிப்பும் பிரியமும் நானறியாததல்ல. அப்பா கூட வயது போன காலத்திலும் அம்மா மீது மிகவும் பிரியமாகவே இருந்தார். இந்த நிலையில் அம்மாவை எந்த வற்புறுத்தலும் அசைக்காது என்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன்.



அதுக்காக அம்மா, அப்பாவுக்கான கடமைகளை முடிக்கும் வரை காத்திருக்க  எனக்கு அவகாசம் இல்லை. எனக்கு அவசரம். எனது பிள்ளைகள் யேர்மனியில்.! நான் அவர்களிடம் போய்ச் சேர வேண்டும். வேலைக்கு மேலதிக லீவு போட இயலாது. நாளைக்கு ஃப்ளைட் (Flight). எல்லாவற்றிற்கும் மேலால் வவுனியா பாஸ் நாளையுடன் முடிவடையப் போகிறது. புதுப்பிப்பதென்றால் கொழும்பு வரை போய் திரும்பி வர வேண்டும். அதற்கெல்லாம் எனக்கு நாட்கள் காணாது. என் பிள்ளைகளிடம் நான் போய் விட வேண்டும். அதனால் நான் புறப்பட்டு விட்டேன்.



உயிர் தந்து தன் உடலில் எனைச் சுமந்த என் அம்மாவை விட உயிர் கொடுத்து நான் என் உடலில் சுமந்த என் பிள்ளைகள் எனக்கு முக்கியமாகப் பட்டதால் என் அம்மாவைத் தன்னந்தனியாக விட்டு விட்டு நான் புறப்பட்டு விட்டேன்.



வவுனியா ரெயில்வே ஸ்டேசனில் ரெயின் வரும் வரை காத்திருந்த போதுதான் அதுவரை அடக்கி வைத்திருந்ததெல்லாம் அணை உடைத்த வெள்ளமாய் மனமுடைத்து வெளிப்பாய்ந்தது.



பின்னே என்ன? இந்த வவுனியா ரெயில்வே ஸ்டேசனில் அப்பா ஸ்டேசன் மாஸ்டராக இருந்த போது அவர் கை பிடித்து இந்த பிளாட் போர்மில் (Flatform)  நடந்த நாட்கள் எத்தனை சுகமானவை. வெள்ளை சேர்ட், வெள்ளை ரவுசர், வெள்ளைத் தொப்பி அணிந்த அப்பா மீசையையும் முறுக்கி விட்டுக் கொண்டு ராஜ நடை போட்ட அந்த இடம் இன்று சிங்களக் கூலிப் படைகளால் மொய்க்கப் பட்டு, ஏதோ ஒரு அசாதாரண அருவருப்பான பயப் பீதியுடனான இடமாக மாறியிருந்தது.



விடுமுறை நாட்களை அப்பாவுடன் கழித்த, அப்பாவுக்கென கொடுக்கப் பட்டிருந்த ரெயில்வே குவார்ட்டர்ஸ் எந்தக் கலகலப்புமில்லாமல் அமைதியைப் போர்த்தியிருந்தது. அந்தப் படிகளில் அப்பாவுடன் நான் ஒட்டிக் கொண்டிருந்து கதைத்துக் கொண்டு...............!



நான் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கி விட்டேன். பக்கத்தில் நின்ற பெண்தான் என் சோகத்தின் முழுக் காரணம் தெரியாவிட்டாலும் சோகம் பற்றித் தெரிந்தவளாய் என்னைச் சமாதானப் படுத்தினாள்.



ரெயின் வந்து சிலிப்பரேட்ஸ் கொம்பார்ட்மெண்ட் கதவு திறந்து ஏறிய பின்பும் என் விசும்பல் அடங்கவில்லை. அம்மாவைத் தன்னந் தனியாக விட்டுச் செல்கிறேன் என்ற நினைவே என்னைக் கொன்றது.



இறாகமவில் சிங்கள கூலிப்படைகள் ரெயினுக்குள் ஏறி செக்கிங் என்ற பெயரில் எம்மைக் குடைகிறவரை என் விழியோரம் கசிந்து கசிந்து கொண்டேயிருந்தது.பக்கத்திலிருந்த இளம்பெண் கட்டிக் கொண்டு வந்த இடியப்பப் பார்சலைக் கூட திறந்து காட்டச் சொல்லி அவர்களில் ஒருவன் கிளறிப் பார்த்த போது, விழி நீர் உறைந்து மனசு அழ மறந்து பயத்தில் வெட வெடத்தது. மிடறு விழுங்கக் கூட துணிவில்லாது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தது நான் மட்டுமல்ல. அந்த கொம்பார்ட்மெண்டுக்குள் இருந்த அனைவரும்தான்.துணிவாகக் காட்சியளித்தவர்கள் கூட விழி பிதுங்க விறைத்தது போல இருந்தார்கள்.



கொழும்புக் கோட்டையில் நிம்மதி மூச்சுடன் இறங்கிய போதுதான் சில பேரின் நிம்மதிகள் கூலிப்படைகளால் சூறையாடப் பட்டிருப்பது தெரிந்தது.  அறுபதைத் தாண்டிய ஆண்கள் சிலரும் பருவ வயதிலுள்ள பெண்கள் சிலரும் சந்தேகத்தின் பேரில் கைதாகி இருந்தார்கள். அவர்கள் இனிக் காணாமல் போய் விடலாம். அல்லது களுத்துறைச் சிறையிலோ வேறெங்கோ அடைத்து வைக்கப்படலாம்.



நினைவுகள் சுமைகளாக அழுத்த ரணமான மனத்துடன் வெள்ளவத்தை வந்த எனக்கு ஒத்தடமாக இருப்பவள் எனது பால்ய காலத்து நண்பியான இந்த இந்துதான்.



ஒத்தடத்தையும் மீறிய வலி எனக்குள். வெள்ளவத்தைக் கடற்கரையின் இயற்கை அழகிலோ, இந்துவின் ஆறுதல் வார்த்தைகளிலோ சமாதானப்பட மறுத்தது என் மனம். நாளை நான் யேர்மனியை நோக்கிப் பறக்கப் போகிறேன். என் அம்மாவைத் தனியாக விட்டு விட்டு, யேர்மனியில் விட்டு வந்த என் குழந்தைகளிடம் ஓடப் போகிறேன்.



என் முடிவு சரிதானா? என் குழந்தைகளுக்காக என்னைப் பெற்ற தெய்வத்தை விட்டுச் செல்வது சரிதானா? குற்ற உணர்வுகள் என்னைக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தன. ஆனாலும் நான் நாளை காலை யேர்மனியை நோக்கிப் பறக்கப் போகிறேன். பேச்சிலே, பாட்டிலே, கவிதையிலே பெற்றவளைத் தெய்வம் என்று புகழ்வது மிகவும் சுலபம். நியத்திலே அந்த தெய்வத்தை தவிக்க விட்டு விடுவதுதான் இங்கு அதிகம். அதைத்தான் நானும் செய்யத் தயாராகியிருந்தேன்.



தாரை தாரையாக நான் வடிக்கும் கண்ணீரில் உடைந்து எங்கெங்கோ சிதறிப் போன இந்தப் பாசச் சங்கிலித்துண்டங்கள் இணைக்கப் படுமா?

                   

-முற்றும்-



சந்திரவதனா

யேர்மனி   



(2001 இல் பிறேமன் யேர்மனியிலிருந்து வெளிவரும் பூவரசு நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.)                 

Monday, July 19, 2004

பதியப்படாத பதிவுகள்

தூறல் போல் தொடங்கி - சோ - வென்று கொட்டி விட்ட மழையில் மரங்களும் செடிகளும் சிலிர்த்து நின்றன. பீலியால் இன்னும் தண்ணீர் வடிந்து  கொண்டிருந்தது. வேலிக்கு மேலால் தெரிந்த இராணுவத் தலைகளும் கண்களும் காணாமல் போயிருந்தன.



சற்று நேரத்துக்கு முன் இராணுவக் கண்களைக் கண்டு மருண்டு முகம் இருண்டுபோயிருந்த சங்கவி இப்போது தன்னை மறந்து இலைகளில் இருந்து சொட்டும் மழை நீரைப் பார்த்து ரசித்த படி விறாந்தை நுனியில் நிற்பதைப் பார்த்த கதிரேசருக்குச் சந்தோஷமாக இருந்தது.



கதிரேசர் இன்று என்று மில்லாத சந்தோஷத்தில் குளித்துக் கொண்டிருந்தார். பின்னே என்ன இருக்காதா? மகள் சங்கவி யேர்மனியில் இருந்து வந்திருக்கிறாள். அதுவும் பன்னிரண்டு வருடங்களின் பின்.



கதிரேசர் இப்படிக் கதிரைக்குள்ளும் கட்டிலிலுமாய் முடங்கிப் போய் இருக்கக் கூடிய ஆள் அல்ல. மீசையையும் முறுக்கி விட்டுக் கொண்டு வாட்ட சாட்டமான கட்டுடலுடன் அவர் ராஜநடை போடும் அழகே தனி அழகுதான். எப்போதும் சந்தோசமாக இருக்க விரும்பும் அவர் லீவிலே வீட்டுக்கு வந்தாலே வீடு அசாதாரண கலகலப்பில் மிதந்து அவர் அன்பில் திளைத்திருக்கும். மனைவி செல்லமும் பெரிய குங்குமப் பொட்டுடன் வளையல்கள் குலுங்க வீட்டுக்குள் வளைய வரும் காட்சி மங்களகரமாகவே இருக்கும்.



பின்னேரம் என்றாலே கதிரேசர் வீட்டுக்குள்ளே இருக்க மாட்டார். பிள்ளைகளையும் செல்லத்தையும் அழைத்துக் கொண்டு Beach, Park, படம் என்று சுற்றித் திரிவார்.



பருத்தித்துறைத் தோசை என்றாலே அவருக்குக் கொள்ளை பிரியம். அதற்காகவே மகள் சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஓடக்கரைக்குப் போவார். பகலில் எந்த வித அசுமாத்தமும் இல்லாமல் வேலியோடு வேலியாக மூடப் பட்டிருக்கும் சின்னச் சின்னச் சதுரத் தட்டிகள் மாலையானதும் திறக்கப் பட்டிருக்கும். உள்ளேயிருந்து - கள் - விட்டுப் புளிக்க விடப்பட்ட தோசை மாவில் சுடப்படும் தோசையின் வாசம் மூக்கைத துளைக்கும்.



கதிரேசர் சைக்கிளையும் உருட்டிக் கொண்டு ஒவ்வொரு தட்டியாகத் தாண்டும் போது சங்கவி ஏனப்பா போறிங்கள்? இங்கையே வேண்டுங்கோவன். - பொறுமையிழந்து கேட்பாள்.



கதிரேசர் "இவளட்டைத் தோசை சரியில்லை. இவளின்ரை பச்சைச் சம்பல் சரியில்லை."  என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொன்றாகத் தாண்டி குறிப்பிட்ட தட்டியடியில் குனிந்து மூடு பெட்டியைக் கொடுத்து  "முப்பது தோசை சுட்டு வையணை." என்கிற போது  "என்ரை ராசா வந்திட்டியே." என்பாள் தோசை சுடும் பெண்.



ஏதோ அவளும் கதிரேசரும் நெருங்கிய உறவினர்கள் போல இருக்கும் அவளின் கதை. தோசை வாங்கி வாங்கியே பரிச்சயமான உறவு. நல்லா நிறையச் சம்பல் போட்டு வையணை. பத்துப் பாலப்பமும் புறிம்பாச் சுட்டு வையணை. - கதிரேசர் சொல்லி விட்டு சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ரவுணுக்குள் போய் இன்னும் தேவையான வீட்டுச் சாமான்களையும் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து தோசை பாலப்பத்தையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார்.



வவுனியாவில் நிற்கும் சங்கவியின் நினைவலைகள் பருத்தித்துறையை வலம் வந்தன. பிறந்த மண்ணையும் அப்பா, அம்மா, சகோதரர்களுடனான அந்த வாழ்க்கையையும் நினைக்கும் போதெல்லாம் வீணையின் நரம்பை மீட்டும் போதெழுகின்ற மெல்லிய நாதத்தின் இனிமை தரும் சிலிர்ப்பு அவளுள் ஏற்படும்.



"என்ன சங்கவி ஆமியைக் கண்டு பயந்து போட்டியே? இஞ்ச வா. வந்து பக்கத்திலை இரு."  மிகவும் ஆதரவாகவும் ஆசையாகவும் கதிரேசர் சங்கவியை அழைத்தார். நினைவுகள் தந்த சிலிர்ப்புடன் சங்கவி வந்து அவர் பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்து இடது கையால் அவர் முதுகைத் தடவி அணைத்துக் கொண்டு வீதியை நோக்கினாள்.



சற்று நேரத்துக்கு முன் சிங்கள இராணுவத்தின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபட்டுக் கிடந்து வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன்ரோட், சைக்கிள்களும், ஓட்டோக்களும், மனிதர்களுமாய் மீண்டும் உயிர்ப்புடன் தெரிந்தது.



பக்கத்தில் அமர்ந்திருந்த அப்பா கதிரேசரைப் பார்க்கப் பார்க்க சங்கவிக்கு ஒரே கவலையாக இருந்தது. அவரது அகன்ற தோள்கள் ஒடுங்கி மார்பகங்கள் வலுவிழந்து, கைகளும் கால்களும் சோர்ந்து.......... உடலுக்குள் நெளிந்து திரியும் நோயின் கொடிய வேதனையைக் கொன்று விடும் அளவு கொடிய வேதனை பிள்ளைகள் நாடு நாடாகச் சிதறியதால் ஏற்பட்ட தனிமையில் கண்ணுக்குள் தெரிய துவண்டு போயிருந்தார்.



அவர் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையாகிப் போனதை "மேற்கொண்டு வைத்தியம் செய்ய முடியாது எல்லாம் கை நழுவி விட்டது."  என்று டொக்டரே கை விரித்த பின்தான் செல்லம் யேர்மனிக்கு ரெலிபோன் பண்ணி சங்கவியிடம் சொன்னாள். சங்கவியை ஒரு தரமாவது பார்த்து விடவேண்டுமென்ற ஆசைத் துடிப்பிலேயே அவர் இன்னும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்றும் சொன்னாள்.



உயிருக்கு உத்தரவாதமில்லாத தாயகத்தில் தனக்கொன்று ஆகி விட்டால் யேர்மனியில் விட்டு வரும் குழந்தைகள் சிறகிழந்து போவார்களே என்ற பயம் சங்கவியின் மனதைக் குழம்ப வைத்தாலும் அப்பாவின் பாசம் வலிந்திழுக்க போராடும் மனதுடன்தான் புறப்பட்டாள்.



தாயகத்தில் கால் வைத்த போது மனதுக்குள் ஏற்பட்ட இனம் புரியாத சந்தோசத்தையும் துள்ளலையும் முண்டித் தள்ளிக் கொண்டு முன்னுக்கு வந்து நின்றது பய உணர்ச்சிதான்.



"பொட்டை அழித்து விடு."  பின்னுக்கு நின்ற சிங்களப் பெண் ஆங்கிலத்தில் கிசுகிசுத்த போது, பன்னிரண்டு வருடங்களாக யேர்மனியிலேயே தவிர்க்காத பொட்டைத் தவிர்த்து பாழடைந்த நெற்றியுடன் கால்கள் பின்னித் தடுமாற படபடக்கும் நெஞ்சுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்ததை நினைக்க சங்கவிக்கு மனசு கூசியது. "ஏன் இப்படி முகம் இழக்கப் பண்ணப் படுகிறோம்." என்று குமுறலாகக் கூட இருந்தது.



விமான நிலையத்தில் மாமாவை இனங் கண்டு, செக்கிங் பொயின்ற்ஸ் தாண்டி, வெள்ளவத்தை வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுத்து வவுனியா புறப்படுவதற்கிடையில் சங்கவி நிறையத் தரம் எரிச்சல் பட்டு விட்டாள்.

"அந்நிய நாட்டில் எமக்கிருக்கும் சுதந்திரம் கூட எமது நாட்டில் எமக்கு இல்லையே"  என்று மாமாவிடம் குமுறினாள்.



"வவுனியாவிலை ரெயின் நிண்டதும் ஓடிப் போய் லைன்ல நில். இல்லாட்டி பாஸ் எடுத்து வீட்டை போய்ச் சேர மத்தியானம் ஆகீடும்."  மாமா ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் சங்கவி ஓடவில்லை.



அதன் பலனாக வவுனியா ரெயில்வே ஸ்ரேசனை நிறைத்து நின்ற சிங்கள இராணுவப் படைகளுக்கு நடுவில் நீண்டு வளைந்து நெளிந்து நின்ற மூன்று மனித வரிசைகளின் மிக நீண்ட வரிசையில் இறுதி ஆளாக அவள் நின்றாள். இறுதிக்கு முதல் ஆளாக அவளது மாமா நின்றார்.



அலுப்பு, களைப்பு, பயம், சலிப்பு, எல்லாவற்றையும் மீறிய ஆர்வத்துடன் அவள் முன்னுக்கு எட்டிப் பார்த்தாள். மூன்று வரிசைகளும் ஆரம்பிக்கும் இடங்களில் ஐந்து ஐந்து பேராகச் சிங்களப் பெண்கள் Uniform  உடன் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். மேசைகளில் பெரிய பெரிய கொப்பிகள் இருந்தன. வரிசையில் முன்னுக்கு நிற்பவரை ஒரு பெண் எதுவோ கேட்டு எழுத, அடுத்த பெண் ஒரு கொப்பியைப் புரட்டி எதுவோ தேட, மற்றைய இரு பெண்களும் எழுதுவதும் பொலிஸ் ரிப்போர்ட்டையோ அல்லது வேறு எதையோ அக்கு வேறு ஆணி வேறாய் அலசிப் பார்த்து முடிப்பதுமாய் தொடர இறுதிப் பெண் ஒரு சின்ன ரோஸ் கலர் துண்டைக் கொடுக்க மனித வரிசை ஒவ்வொருவராக ஆறுதலாகக் கலைந்து கொண்டிருந்தது.



6.30 க்கு ரெயினால் இறங்கிய சங்கவியும் மாமாவும் சிங்களப் பெண்கள் இருந்த மேசையடிக்கு வரும் போது நேரம் எட்டு மணியைத் தாண்டியிருந்தது. மற்றைய இணர்டு வரிசைகளும் ஏற்கெனவே முடிந்து அந்த வரிசைகளுக்குப் பொறுப்பாக இருந்த சிங்களப் பெண்கள் எழுந்து நின்று கைகளை மேலே உயர்த்தி உளைவு எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு வரிசைகளும் ஏற்கெனவே வவுனியாவில் இருந்து கொழும்பு வரை போய் வருபவர்களுக்காம். இந்த வரிசை சங்கவி போல் புதியவர்களுக்காம்.



அப்பா கதிரேசர் வவுனியாவில் ஸ்ரேசன் மாஸ்டராகப் பணி புரிந்த காலங்களில் அவரோடு கைகோர்த்துக் கொண்டு துள்ளித் திரிந்த Flattform இன்று சிங்கள இராணுவங்களால் நிறைந்திருக்கும் காட்சியை ஜீரணிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த சங்கவியை அந்தச் சிங்களப் பெண்கள் கேள்விகளாய்க் கேட்டு கோபப் படுத்தினார்கள்.



சங்கவிக்கு சிங்களம் விளங்குகிறதோ இல்லையோ என்பது பற்றியே அக்கறைப் படாத சிங்களப் பெண்கள் அவளின் கோபத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.  அவர்கள் கேள்விகளால் குடைந்து யேர்மனியப் பாஸ்போர்ட், ஐசி பார்த்து பொலிஸ் ரிப்போர்ட்டை ஆராய்ந்து பாடசாலை வரவுப் பதிவேடு போன்ற கொப்பியில் பெயர் விலாசம் எல்லாம் பதிந்து கடைசியாக முத்திரை போன்ற சைஸில் ஒரு ரோஸ் கலர் துண்டை நீட்டிய போது "அப்பாடா" என்ற உணர்வுடன் அதை வாங்கிப் பார்த்தாள்.

 

எல்லாம் சிங்களத்தில் எழுதப் பட்டிருந்தன. ஒன்றுமே புரியவில்லை.

சிங்கள இராணுவத்தின் விறைப்புகளையும் முறைப்புகளையும் தாண்டி செக்கிங்கில் கிளறப்பட்ட சூட்கேஸை அமத்திப் பூட்டிக் கொண்டு, வெளியில் வந்த போது நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது.



"மாமா...! என்ன இது? எல்லாம் சிங்களத்திலை எழுதியிருக்கு. ஒண்டுமே விளங்கேல்லை. இதுதான் பாஸோ..?"  ரோஸ் துண்டை நீட்டிய படி சங்கவி மாமாவை நோக்கினாள்.



"ஓமோம். இதுதான் பாஸ். கவனமா வைச்சிரு. துலைச்சியோ....! உன்ரை சரித்திரம் அவ்வளவுதான். இது ஒரு நாள் பாஸ்தான். நாளைக்குக் காலைமை வந்துதான் ஒரு கிழமைப் பாஸ் எடுக்கோணும்."



மாமா சொன்ன பின் சங்கவிக்கு அந்த மெல்லிய ரோஸ் கலர் பேப்பர் துண்டு மகா கனமாக இருந்தது. Handbag க்குள் வைத்து விட்டு அடிக்கடி திறந்து திறந்து அது பத்திரமாக இருக்கிறதா..! எனப் பார்த்துக் கொண்டாள்.



"ஏன் ஒருநாள் பாஸ்தான் தந்தவையள்? ஓரேயடியா ஒரு கிழமைக்குத் தந்தால் என்ன?" திருப்தியின்மையுடன் கேட்டாள்.



"உடனை அப்பிடித் தரமாட்டினம்."



"அப்ப நாளைக்கு இன்னொரு தரம் இங்கை வந்து தூங்கிக் கொண்டு நிக்கோணுமோ? ஏன் இந்தளவு கெடுபிடி? இதிலை இவையளுக்கு என்ன லாபமிருக்கு?"



"எல்லாம் தங்கடை கட்டுப் பாட்டுக்கை வைச்சிருக்கத்தான். பெடியளை(புலிகளை)உள்ளை நுழைய விடாமலிருக்கத்தான்."



"அப்ப இங்கை பெடியளே இல்லையோ..?"



"இருக்கிறதுக்கான சந்தர்ப்பம் இல்லை. இது ஆமியின்ரை கட்டுப் பாட்டுக்குள்ளை இருக்கிற இடம்."



சங்கவிக்கு எல்லாமே விசித்திரமாக இருந்தது.

"என்ன பிள்ளை.. ஒரே யோசிச்சுக் கொண்டு இருக்கிறாய். பிள்ளையளை நினைச்சுக் கவலைப் படுறியோ?" கதிரேசர் கேட்டதும்தான் சங்கவி மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தாள்.



"இல்லையப்பா... இவங்கள் காலைமை ரெயில்வேஸ்டேசனிலை மணித்தியாலக் கணக்கிலை என்னையும் மாமாவையும் மறிச்சு வைச்சு கணக்கெடுப்பும் பதிவும் செய்ததை நினைக்க நினைக்க எனக்குக் கோபம் கோபமாய் வருது. அப்பிடியெண்டால்... இந்தப் பெடியள்(விடுதலைப்புலிகள்) இதுக்குள்ளை வரேலாதோ..? "



இப்பக் கதிரேசர் குனிந்து இரகசியமாக.. அவள் காதுக்குள்.."எங்கடை பெடியளை இவங்களாலை என்ன செய்யேலும்..?"  என்றார். சொல்லும் போதே நோயில் வாடிப் போயிருந்த அவர் கண்கள் பிரகாசித்ததை சங்கவி கவனிக்கத் தவறவில்லை. இரண்டு மாவீரர்களைப் பெற்றெடுத்த கதிரேசரிடம் தேசப்பற்றும் தமிழ்த்தாகமும் மரணத்தின் வாசலில் நிற்கும் இந்த நேரத்திலும் குறையாமல் இருந்தன.



சங்கவி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதிரேசர் "என்ன பிள்ளை அப்பிடிப் பார்க்கிறாய்? உன்னைப் பார்த்திட்டன். இனி நான் நிம்மதியாக் கண்ணை மூடுவன்."  என்றார்.



"இல்லையப்பா அப்பிடியொண்டும் நடக்காது....."சொல்லிக் கொண்டிருக்கும் போதே சைக்கிள் ஒன்று வந்து கேற் வாசலில் நிற்க, அழகிய இளைஞனொருவன் இறங்கி உள்ளே வந்தான். பக்கத்து அறைகளில் குடியிருப்பவர்களிடம்தான் அவன் வருகிறான் என சங்கவி நினைத்த போது "வா விமலன் வா."  கதிரேசரும் செல்லமும் அவனைக் கோரசாக வரவேற்றார்கள்.



மாவீரனான தம்பி மொறிஸ் இப்போ உயிரோடு இருந்தால் இவன் வயதில்தான் இருப்பான். சங்கவி தனக்குள் நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்துச் சிரித்தாள்.



நடக்கவே கஸ்டப் படுகிற கதிரேசர் முக்கித்தக்கி கதிரைக்குள்ளால் எழுந்து சுவரைப் பிடித்துக் கொண்டு மெதுமெதுவாய் நடந்து அவரது அந்தக் குச்சி அறைக்குள் நுழைய விமலன் அவர் பின்னால் அறைக்குள் நுழைந்தான். செல்லமும் பின் தொடர சங்கவியும் உள்ளே போனாள்.



யார் வந்தாலும் வெளி விறாந்தையில் இருத்திக் கதைக்கும் அம்மாவும் அப்பாவும் நடந்த விதம் அவளுக்குச் சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தது.

கதிரேசர் கட்டிலில் அமர உதவி செய்த விமலன் தானும் அவர் அருகில் அமர்ந்து கொண்டான்."எப்படியப்பு இருக்கிறாய்..?"  செல்லம் ஆதரவாய்க் கேட்டாள்.



"யார் இவன்..?" சங்கவிக்குள் ஆர்வம் கேள்வியாய் எழுந்தது.



"நீங்கள்..?"  சங்கவி அவனை நோக்கினாள்.



"அக்கா..! நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தனனான். உங்கடை தம்பி மொறிசின்ரை நண்பன்தான் நான்."



தம்பி மாவீரனாகிப் வருடங்கள் பல ஓடிய பின் தம்பியின் நண்பனாக வந்தவனை வியப்புடன் பார்த்து "நான் வந்தது எப்பிடித் தெரியும்..?" என்றாள்.

 

"எல்லாம் தெரியும்." என்றான் அர்த்தத்துடன்.



இப்போ செல்லம் கிசுகிசுத்தாள்."விமல் வெளியாக்களுக்குத்தான் எங்கடை மருமகன். ஆனால் உள்ளுக்கு......"



செல்லம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விமலன் சேர்ட்டை மேலே உயர்த்தி இடுப்பிலே சொருகியிருந்த கடிதமொன்றை எடுத்து செல்லத்திடம் கொடுத்தான்.



அப்போதுதான் சங்கவி அதிர்ந்தாள். தலைக்குள் குருதி வேகமாகப் பாய்ந்ததை உணர்ந்தாள். விமலனின் இடுப்பின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு Pistole கள்.



"எப்படி....? எப்படி இது சாத்தியம்? இத்தனை தடைகளை மீறி...?"

இத்தனை தடைகளை மீறி எப்படி இவன் வைரவர் புளியங்குளத்துக்குள் நுழைந்தான்? குருமண் காட்டுச் சந்தியில் நிற்கும் சிங்கள இராணுவத்தின் கண்களுக்குள் நிற்கும் இந்த வீட்டுக்குள் எப்படி நுழைந்தான்..?



"எப்படி விமலன்..? எப்படி இதெல்லாம் சாத்தியமாயிற்று..? உங்களட்டைப் பாஸ் இருக்கோ..?" கேள்விகளை அடுக்கினாள்.



"இல்லை அக்கா. என்னட்டைப் பாஸ் இல்லை."



"அப்பப் பிடிபட்டால்...?" சங்கவி நியமான பயத்துடன் கேட்டாள்.



விமலன் கழுத்து மாலையை இழுத்துக் காட்டினான். குப்பி தொங்கியது. வாயைக் கூட்டி உமிழ்வது போலச் செய்தான். இரண்டு குப்பிகள் கடைவாயின் இரண்டு பக்கங்களிலும் வந்து நின்றன. மீண்டும் அவைகளை உள்ளிழுத்து கொடுப்புக்குள் அடக்கி விட்டு இயல்பாகச் சிரித்தான். செல்லம் கொடுத்த தேநீரைக் குடித்தான். சங்கவிக்கு வியப்பும் படபடப்பும் அடங்க முன்னமே சைக்கிளில் ஏறிப் போய் விட்டான்.



சங்கவிக்கு தான் காலையில் ரெயில்வே ஸ்டேசனில் பார்த்த பதிவுக் கொப்பிகள் நினைவில் வர தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.



நிகழ்வு . 21.11.1997



சந்திரவதனா

யேர்மனி

1999

 

பிரசுரம் 

முதல்பாகம் - ஈழமுரசு பாரிஸ் -19-25 ஓகஸ்ட் 1999

இரண்டாம்பாகம் - ஈழமுரசு பாரிஸ் - 19 ஓகஸ்ட் - 25 செப் 1999



Tuesday, July 13, 2004

பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் கப்டன் மொறிஸ்

பரதரராஜன்.தியாகராஜா. ஆத்தியடி பருத்தித்துறை



நான் போர்முனையில்

குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்

மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால்

உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...!



என்றான். அவன்தான் மொறிஸ்.



1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன் பதினைந்து ஆண்டுகள் தன் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்தான். தனக்கென

வாழும் சுயநல வாழ்வில் அவனுக்கு விருப்பம் ஏற்படவில்லை. மண்ணில் சுதந்திரம் கண்ட பின்பு மனையில் இன்பம் காண்போம் என்றான். அன்றே அன்னை மடியைத் துறந்து போர்க்களம் புகுந்தான். மொறிஸ் ஆனான்.



நான்கு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டான். குறுகிய காலப் பகுதியில் அவன் ஆற்றிய சேவைகள் அளப்பரியன.



சிறீலங்கா இவாணுவம் தொண்டமானாற்றில் குடிகொண்டிருந்த காலம் அது. புலிகள் பெருந்தாக்குதல் ஒன்றை இராணுவ முகாம் மீது மேற்கொண்டனர். மொறிஸ் அத்தாக்குதலை முன் நின்று நடாத்தி வெற்றியும் கண்டான். இராணுவ வீரரைச் சிதறியோடச் செய்தான். பூநகரி இராணுவ முகாமைத் தாக்கி வெற்றியும் கண்டு காயமும் பட்டான்.



பருத்தித்துறையில் குடி கொண்டிருந்த இராணுவத்தை வெளியேற விடாமல் சென்ரி போட்டுத் தடுத்து வெளிவந்தோரை விரட்டி அடித்த பெருமை இவனுக்குண்டு.



முதல் முதலாக பருத்தித்துறையில் தம்பசிட்டி வீதியில் வைத்து ஆமி றக்கிற்கு கிரனைட் வீசி ஆமியைக் கிலி கொள்ளச் செய்த துணிவும் இவனுக்குண்டு.



ஆமி குடி கொண்டிருக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று அவர்கள் இருப்பிடங்களைச் சுற்றி சக்கை தாட்டு விட்டு வருவதில் இவனுக்கு நிகர் இவனே தான். அதனால் இவனை பருத்தித்துறை மக்கள் அன்பாக M.O (Mines operator) என்று அழைப்பார்கள்.



1987 ம் ஆண்டு யூலை 29 இல் இந்திய அமைதிப்படை இலங்கை மண்ணில் கால் வைத்தது. காந்தி பிறந்த தேசத்திலிருந்து அமைதி காக்க என்று சொல்லி வந்த படை ஆக்கிரமிப்புப் படையாகி புலிகளைத் தேடிக் கண்டு பிடித்துக் கொல்லும் பணியில் ஈடுபடத் தொடங்கியது.



தாயக மண் மீட்பே தன் மூச்செனக் கொண்டு வடமராட்சியில் தனக்கென ஒரு

தனி இடம் பிடித்துக் கொண்ட மொறிஸ் மீது ஆக்கிரமிப்புப் படையின் கவனம் காட்டமாக இருந்தது. எப்படியாவது அவனைப் பிடித்து விடவேண்டுமென்ற எண்ணத்துடன் வெறி கொண்ட நாய் போல அவனைத் தேடி அலையத் தொடங்கியது.



மொறிஸோ இந்திய இராணுவத்தின் கண்ணெதிரில் அகப்பட்டும் அவர்கள் பால் தன் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து அவர்கள் துப்பாக்கி வேட்டுக்களுக்குள் தான் அகப்படாது மாயமாய் மறைந்தான். ஐந்து தடவைகள் இந்தியப் படைகள் சுற்றி வளைத்த போதும் அவர்கள் கண்களுக்குள் அகப்படாது தப்பித்துக் கொண்டான். அவன் சாதாரண துப்பாக்கி வேட்டுக்களுக்கெல்லாம் அகப்படுபவன் அல்ல.



ஆறாவது தடவையாக இந்தியப் படையினரால் சுற்றி வளைக்கப் பட்ட போதும் கலங்காது நின்று போராடி வெற்றியும் கண்டான்.



அவனது நேரடி மோதலுக்கு ஈடுகொடுக்க முடியாது பலத்த இழப்புகளோடு தப்பியோடிய இந்தியப் படையினரில் பலர் பதவி இறக்கப்பட்டனர். உலகின் நாலாவது வல்லரசின் இராணுவச் சிப்பாய்கள் மொறிஸ் என்ற நாமம் கேட்டாலே நடுங்கினர். அவன் நாமம் சொன்ன அப்பாவி மக்களை அடித்தும் உதைத்தும் சித்திரவதைப் படுத்தினர். அவன் பெற்றோரை உடன் பிறப்புகளை மைத்துனரை எல்லாம் இராணுவ முகாம் வரை கொண்டு சென்று துன்புறுத்தினர்.



இதனால் மொறிஸின் மனம் வேதனையில் வாடினாலும் தமிழீழத்தின் மீது அவன் வைத்த நம்பிக்கை எள்ளளவேனும் குறையவில்லை. அவனது நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போயிற்று.



இந்தியப் படையின் தேடுதல் வேட்டைக்கு நடுவிலும் மொறிஸின் பணிகள் தொடர்ந்தன. இயக்க வளர்ச்சியில் அவன் எப்போதும் கண்ணும் கருத்துமாகவே இருந்தான். சாதாரண படை வீரனாகச் சேர்ந்த அவன் கப்டன் பதவிவரை உயர்வு பெற்று மிகமிக ஆபத்தான சூழ்நிலையிலும் மக்கள் மத்தியில் நடமாடி இயக்க வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எண்ணிலடங்காதவை.

வெற்றிகள் பல ஈட்டி அளப்பரிய சாதனைகள் பல புரிந்து மக்கள் மனதில் அழியாத இடம் பெற்று விட்டான் கப்டன் மொறிஸ்.



நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமானான். தன்சகாக்களை அன்புடன் நேசிப்பதில் அவனுக்கு நிகர் அவனேயானான். இயக்கத்தின் மீதும் இயக்க உறுப்பினர்கள் மீதும் அவன் கொண்டிருந்த மட்டற்ற அன்பையும் விசுவாசத்தையும், போராட்டத்தின் மீது அவன் கொண்டிருந்த தீர்க்கத்தையும் கடைசி நேரம் வரைக்கும் அவன் செய்த செயல்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

பருத்தித்துறை வாழ் மக்கள் அவனை மிகவும் நேசித்தனர். அவனும் மக்களை மிகவும் நேசித்தான்.



ஆனாலும் எட்டப்பர் கூட்டம் தம் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்யத் தவறவில்லை. காட்டிக் கொடுக்கும் எட்டப்பரை இல்லாது ஒழித்து அழிக்க வேண்டுமென அடிக்கடி சொன்னான். சொன்னதை அவன் செயற் படுத்தி முடிக்கும் முன் எட்டப்பர் சூழ்ச்சிக்கு அவனே பலியானான்.



அன்று... 1989 ம் ஆண்டு. மே முதலாம் திகதி. (1.5.89)- அதிகாலை.





மொறிஸ் முதல் நாள் இரவு நீண்ட நேரமாகத் தன் நண்பர்களுடன் சில திட்டங்கள் பற்றிக் கதைத்து விட்டு நேரங்கழித்தே நித்திரைக்குச் சென்றான்.......காலை எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து, குளித்து தன் கடமைக்குத் தயாரானான்.



சாப்பாட்டுக்கு வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும். அதற்கு முன் இயக்க சம்பந்தமான பரிசோதனை ஒன்று செய்ய வேண்டி இருந்ததால் தனது சகதோழர்கள் ஏழு பேர்களுடன் சேர்ந்து அந்தப் பரிசோதனையில் ஈடுபட்டான்.



அந்த நேரத்தில்தான் அவன் இந்திய அமைதிப்படையினரால் சுற்றி வளைக்கப் படத் தொடங்கியிருந்தான். தான் ஒரு எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப் பட்டு விட்டேன் என்பதோ, தான் அந்த நேரத்தில் சுற்றி வளைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதோ அவனுக்குத் தெரியாது. அவன் அதை அந்த இடத்தில், அந்த நேரத்தில் துளியும் எதிர்பாராது தன் கடமையில் கவனாமாயிருந்தான்.



500க்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் அவன் இருந்த வீடு இருந்த பகுதியை வரைபடத்துடன் சுற்றி வளைத்திருந்தனர். அவன் மீது நேசமும் பாசமும் கொண்ட பருத்தித்துறை வாழ் மக்கள், அவனுக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்க ஓடி வந்தனர். அவன் விடயத்தில் பலமுறை தோல்வியைத் தழுவிக் கொண்ட இந்தியப் படையினர் ஓடி வந்த மக்களை மேற் கொண்டு நகர விடாது அவ்விடங்களிலேயே அதாவது தெருவீதியிலேயே இருத்தி விட்டனர்.



சுற்றியுள்ள காணிகள், வீடுகள், வீதிகள் என்று எல்லா இடங்களிலும், எந்தப் பக்கம் பார்த்தாலும் இந்தியப் படையினர் நிறைந்து சுற்றி வளைத்திருந்தனர். நடுவில் மொறிஸ் தன் சகாக்களுடன் தனது பணியில் ஈடுபட்டிருந்தான்.



தான் காட்டிக் கொடுக்கப் பட்டதையும், சுற்றி வளைக்கப் பட்டிருப்பதையும், தன் நிலையையும் அறிந்த போது மொறிஸ் சிறிதும் கலங்கவில்லை. அஞ்சி ஓடவில்லை. தன் மெய்ப்பாது காவலனையும், காவல் கடமைக்குப் பொறுப்பான போராளியையும் மட்டும் தன்னுடன் நிற்கச் சொல்லி விட்டு

இந்தியப் படையை நோக்கிச் சுட்டவாறே

"நான் ஒரு கை பார்த்திட்டு வாறன். நீங்கள் ஓடுங்கடா"



என்று கத்தினான். அவன் கட்டளைப் படி மிகுதி ஐவரும் அவன் சொன்ன பாதை வழியே சுட்டுக் கொண்டு ஓடினர்.



மொறிஸ் தொடர்ந்து இந்தியப் படையுடன் நேரடியாக மோதினான். அவனது துப்பாக்கி ரவைகள் இந்தியப்படையில் மூன்று பெரியவர்களைச் சுட்டு வீழ்த்தியது. இந்த நேரம் இந்தியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு காவல் போராளி சிறீதரன் (வெள்ளை) பலியானான்.



மொறிஸ் தொடர்ந்து போராடினான். இந்தியப் படையினர் சரமாரியாகச் சுட்ட சூடுகள் அனைத்துக்கும் தப்பித் தப்பிப் பாய்ந்த படி, அவர்களைச் சுட்டவாறே அவன் அடுத்த காணிக்குள் பாய முற்பட்டான். அந்த வேளையிலேயே பின் காணி முழவதும் இந்தியப்படை நிற்பதை அவதானித்தான். இந்த நிலையிலுங் கூட அவன் கலங்கவில்லை. தொடர்ந்து அவர்களை நோக்கிச் சுட்டுக் கொண்டும் அவர்களின் சூட்டிலிருந்து தப்பிக் கொண்டும் இருந்தான்.



துப்பாக்கி ரவையினால் அவனை வீழ்த்த முடியாதென்பதை உணர்ந்த இந்தியப் படையினர் அவன் நின்ற இடத்தைக் குறிபார்த்து பசூக்கா ஷெல்லும் அடித்து கிரனைட்டையும் எறிந்தார்கள். ஷெல் துண்டுகள் அவன் மார்பையும் தலையையும் பதம் பார்க்க கரும்புகை மண்டலத்துக்குள் இரத்த வெள்ளத்தோடு மண்ணுக்கு வித்தானான் மொறிஸ்.



பின் அவனின் மெய்ப் பாது காவலன் ஜெகேசன் (லெப். ரம்போ)இன் உடலையும் சல்லடையாக்கினர் இந்தியப் படையினர்.

மாவீரர்களான மொறிஸ், ரம்போ, வெள்ளை மூவரையும் இழந்து நாடே அழுதது.

மொறிஸை விண்ணுலகுக்கு அனுப்பிய இந்தியப் படையினருக்குப் பதவி உயர்வாம்! விருந்தாம்! தங்கப்பதக்கமாம்!



மொறிஸ் நாட்டில் மக்களுடன் மக்களாக நின்று போராடி மண்ணுக்கு வித்தானான். மொறிஸின் தம்பி மயூரன் காட்டில் தலைவர் அருகில் நின்று-

பின்னர் பூநகரிச் சமரில் 11.11.93 இல் மண்ணுக்கு வித்தானான்.



திலீபன்

யேர்மனி

மாவீரன் வெங்கடேஸ்

படம் போல இன்னும் மனதுள் பதிந்து போயிருக்கும் காட்சிகளை

நினைந்து நினைந்து கலங்கும் ஒரு தாயின் நினைவு.




வெங்கடேஸ் - எனது மகன் மொறிஸின் அருமைத் தோழன். கடற்புலி மேஜர் பாமாவின் அண்ணன். எனக்கு அவன் அன்பு மகன்.



அவன் எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் - பசிக்குதணை. கெதியாச் சமையுங்கோணை. என்று உரிமையோடு என்னிடம் சொல்லுவான். சமைத்ததும் சாப்பிடுவான். நான் அவனுக்காகவும் அவன் போன்ற மற்றைய போராளிப் பிள்ளைகளுக்காகவும் கடலை, பருப்பு, முறுக்கு... என்று எல்லாம் பொரித்தும் சுட்டும் வைத்திருப்பேன். அவன் வரும் போதெல்லாம் அவைகளை மிகவும் விரும்பி ருசித்துச் சாப்பிடுவான். தன் வீடு போலவே என் வீட்டில் நடந்து கொள்வான்.



எனது மூக்குக் கண்ணாடியை நான் கழற்றி வைத்தால் போதும் - அதை எடுத்துப் போட்டுக் கொண்டு அயர்ண் பண்ணி வைத்திருக்கும் சேர்ட் களில், காசைப் பொக்கற்றினுள் வைத்தால் வெளியில் தெரியக் கூடிய வகையிலான ஏதாவதொரு மெல்லிய சேர்ட்டையும் தெரிவு செய்து எடுத்துப் போட்டுக் கொண்டு, என்னிடம் தாள் காசு தரும்படி கேட்டு வாங்கி அதைப் பொக்கற்றுக்குள் வைத்து விட்டு மொறிஸின் இளையக்காவிடம் - இளையக்கா இப்ப என்னைப் பார்க்க அறிவாளி மாதிரி இருக்குதோ? - என்று கேட்பான்.



அனேகமான சமயங்களில் - தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே

மான் போல வந்தவரை யார் அடித்தாரோ.. என்ற பாடல் கசற்றைப் போட்டு விட்டு றேடியோவுக்கு முன்னால் மேசையில் தன் தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டு பாடலைக் கேட்ட படி அழுது கொண்டிருப்பான்.

அவன் கண்களில் இருந்து கண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும். நான் பலதடவைகள் அதைப் பார்த்து - ஏன் அப்பு அழுகிறாய்? - எனக் கேட்டிருக்கிறேன்.



ஆனால் அவன் ஒரு நாளும் அந்தப் பாடலுக்கும் அவனுக்கும் இடையிலான துயரத்தைப் பற்றி எனக்கு எதுவுமே சொன்னதில்லை.



அன்றும் அதாவது 1988ம் ஆண்டு மே மாதம் 10ந் திகதி எங்கள் வீட்டுக்கு வந்தவன் அந்தப் பாட்டுக் கசற்றைப் போட்டுக் கேட்டு அழுது கொண்டிருந்தான்.



- அப்பு ஏனடா அழுகிறாய்? சோல்லனடா. என்றேன்.



அவன் கண்களைத் துடைத்துக் கொண்டு - ஒண்டுமில்லை அம்மா. ஒரு நல்ல ரீ (தேநீர்) உங்கடை கையாலை தாங்கோ என்றான்.



- இரு அப்பு உடனை கொண்டு வாறன். - என்று சொல்லி விட்டு அடுக்களையை நோக்கி விரைந்தேன்:



அந்த நேரம் எனது மகன் மொறிஸ் அவசரமாய் வீட்டுக்குள் ஓடி வந்தான். வந்ததும் வராததுமாய்

- வெங்கடேஷ் வெளிக்கிடு கெதியாய். கூட ரவாஸ் வருவான் அவனையும் கூட்டிக் கொண்டு போ. - என்று சொல்லிக் கொண்டு ஒரு பையில் ஏதோ பொருட்களைப் போட்டு வெங்கடேஷிடம் கொடுத்தான்.



- அம்மா ரீ (தேநீர்) கொண்டு வருவா. குடிச்சிட்டுப் போறன். - என்று வெங்கடேஷ் சொல்வது என் காதில் விழுந்தது. நான் அவசரமாய் தேநீரைத் தயாரிக்கத் தொடங்கினேன்.



ரவாஸ் மிக்ஸரைக் கொறித்துக் கொண்டிருந்தான்.



- போதுமடா எழும்படா - என்ற மொறிஸின் அதட்டல் எனக்குக் கேட்டது.



நான் இருவருக்கும் அவசரமாய் கோப்பைகளில் தேநீரை ஊற்றிக் கொண்டு ஓடி வந்தேன். அவர்கள் இருவரும் எனது வீட்டின் கிழக்குப் பக்கக் கதவால் வெளியில் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.



- அவங்கள் ரீ யைக் குடிச்சிட்டுப் போகட்டுமன் - என்றேன்.



- சும்மா இருங்கோ அம்மா. அவங்களுக்கு இப்ப நேரமில்லை. இரவு வருவாங்கள். உங்கடை ஆசைக்கு எல்லாம் குடுங்கோ - என்றான்.

நான் கலக்கத்தோடு வாயடைத்துப் போய் நின்றேன்.



அவர்கள் - அம்மா போட்டு வாறம். மொறிஸ் சரிதானே...! - என்ற படி பின் கேற்றைத் திறந்து கொண்டு வெளியேறினார்கள்.



அவர்கள் போய் கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கும். பயங்கரமான வேட்டுச் சத்தங்கள் கேட்டன. நாமெல்லோரும் கதி கலங்கி விட்டோம். மொறிஸின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவன் எங்கோ வெளியில் ஓடினான். நாம் அதாவது நானும் எனது பெண் பிள்ளைகளில் மூவரும் செயல் இழந்து தவியாய்த் தவித்த படி துடித்துக் கொண்டு நின்றோம்.



இரவு எட்டு மணியளவில் தீராத சோகத்துடன் மொறிஸ் வீடு வந்து சேர்ந்தான்.



- என்னடா..! என்ன நடந்தது?- நான்தான் கேட்டேன்.



அவன் குமுறிக் கொண்டு - வெங்கடேஷ் போயிட்டான் அம்மா - என்றான். தொடர்ந்து அம்மா ரவாசும்தான் போயிட்டான். - என்று சொல்லித் தேம்பினான்.

எனக்குச் சம்மட்டியால் எனது தலையில் யாரோ அடித்தது போல இருந்தது.



வெங்கடேஷ் கொண்டு சென்றது முக்கியமானவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய சில மிக முக்கியமான பொருட்கள் என்பதுவும் - இந்தியன் ஆமியின் துரத்தலால் ரவாஸ் குண்டடி பட்டு வீழ்ந்ததும், வெங்கடேஷ் ஓடி ஓடி இயலாத நிலையில் ஒரு வீட்டில் புகுந்து தனக்குத் தானே காதுக்குள் வெடி வைத்து மரணித்து கொடிய உண்மையும் பின்புதான் எமக்குத் தெரியவந்தன. அழுதோம். கதறினோம். அவர்கள் வித்துடல் கூட எமக்குக் கிடைக்கவில்லை.



ஆனால் அன்றும் என்றும் இன்றும் ஏன் அவன் அந்தப் பாட்டுக்கு அழுதான் என்ற விடை எனக்குக் கிடைக்கவேயில்லை. விடையைக் கூறாமலே அவன் போய் விட்டான். - ஒரு நல்ல ரீ உங்கடை கையாலை தாங்கோ. என்று கேட்டவன் - அன்று எனது ரீ யைக் கூடக் குடிக்காமல் போய்விட்டான்.



படம் போல இன்னும் மனதுள் பதிந்து போயிருக்கும் காட்சிகளை

நினைந்து நினைந்து கலங்குகிறேன்.



திருமதி . சிவா. தியாகராஜா

மன்கைம் - யேர்மனி


தென்பாண்டிச் சீமையிலே... பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் நெஞ்சு குலுங்கி அதிர்வுறும். என் பிள்ளை வெங்கடேஷின் நினைவு என்னை அலைக்கழிக்கும்.

Monday, July 12, 2004

மரணங்கள் முடிவல்ல

சில மணிநேரத்திற்கு முன்பு, என்றைக்குமில்லாத சந்தோசத்துடன் அந்தப் பெரிய நாற்சார வீட்டில் வளைய வந்த மகேஸ்வரி, இப்போதுதான் அவளின் வீட்டுக்குள் இருந்து நடு ரோட்டுக்கு இழுத்துக் கொண்டு வந்து இருத்தப் பட்டாள்.

தெருவிளக்குகள் கூட எரியாத அந்த நடு இரவின் கும்மிருட்டுக்கும் அவளது அன்றைய அசாதாரண சந்தோசத்துக்கும் எந்தவிதமான பொருத்தமும் இல்லாவிட்டாலும், அவளது அன்றைய சந்தோசத்துக்குக் காத்திரமான காரணம் இருந்தது.



இளம் வயதிலேயே நாட்டைக் காக்க என்று வீட்டை விட்டுப் போன அவள் மகன் ராஜன் இப்போது இரண்டு நாட்களுக்கு முன்தான் வெள்ளை என்ற பெயருடன் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான்.



கொப்புளிப்பான் அவனில் கொப்புளங்களை அள்ளிப் போட்டதால்தான் நண்பர்கள் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள்.



பத்து மாதம் சுமந்து பெற்ற மகனை ராஜா போல் அந்த வீட்டில் வளர்ந்தவனை வாடிவதங்கியபடி கண்டதும் மகேசு, சந்தோசம் துன்பம் எல்லாம் கலந்த ஒன்று நெஞ்சிலிருந்து பீறிட்டுக் கண்ணீராய்ப் பாய "பெத்த வயிறு எப்பிடித் துடிக்குதடா....?!" என்றபடி அவனைக் கட்டியணைத்துக் கதறினாள்.



„களத்தில் நின்றபோதும் அம்மா...!, உன்னை ஒரு கணமும் நான் மறக்கவில்லை“ என்று மனதுக்குள் கூறிய படி ராஜனும் மகேஸ்வரியைக் கட்டிப் பிடித்தான். கலங்காத அவன் நெஞ்சும் ஒரு தரம் குலுங்கியது. ஒரு வருடப் பிரிவையும் அதனால் ஏற்பட்ட இதயம் நிறைந்த பாசத்தாகத்தையும் சில நிமிட நேரத் தழுவலில் ஓரளவுக்காவது தீர்த்துக் கொண்டார்கள்.



கொப்புளங்கள் ராஜனின் மேனியில் அள்ளிப் போட்டிருப்பதால்தான் அவனால் இங்கு வரமுடிந்தது என்றாலும், இந்தச்சாட்டிலாவது அவனை அருகிருந்து கவனிக்க முடிந்ததில் மகேஸ்வரிக்குச் சந்தோசமாக இருந்தது. அந்தச் சந்தோசத்தையும் அவளால் முழுமையாக அனுபவிக்க முடியாமல் நெருஞ்சி முள்ளாய் பய நினைவொன்று நெஞ்சத்தில் குத்திக் கொண்டிருந்தது. மூன்று மாதங்களுக்கு முன் வியாபார விடயமாகக் கிளிநொச்சிவரை போன கணவன் சோமசுந்தரம் இன்னும் வந்து சேராததுதான் அவளுக்குள் கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இன்று வருவான், நாளை வருவான் என்றெண்ணிக் காத்திருப்பதும், போக்குவரத்து வசதி சரியாக அமையவில்லைப் போலும் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வதுமாயே மூன்று மாதங்கள் ஓடி விட்டன.



இப்போ வராத மகன் வந்து இரண்டு நாட்களாகியும் இந்த மனுசனைக் காணவில்லையே. வந்து மகனைக் கண்டால் எப்படி மகிழ்ந்து போவான். என்ற எண்ணம் ஏக்கமாய் அவளை வதைக்க எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்;.

பக்கத்துக் கோயில் வைரவரையும், புட்டளைப் பிள்ளையாரையும், மந்திகை அம்மனையும், வல்லிபுர ஆழ்வாரையும் மனதுக்குள் மன்றாடினாள்.



"என்ரை மனுசன் நல்ல படி வந்து சேர்ந்து விடவேண்டும். நான் பட்டுச் சாத்துவேன், பொங்கிப் படைப்பேன்....!" என்றெல்லாம் மனதுக்குள் கடவுள்களுக்கு வாக்குறுதிகொடுத்தாள்.

அவள் மன்றாட்டம் வீண்போகவில்லை. சரியாக மகன் வந்த மூன்றாம் நாள் மாலை, அதுதான் இன்று மாலை சோமுவும் வந்து சேர்ந்து விட்டான்.

மகேஸ்வரியின் மகிழ்வைச் சொல்லவும் வேண்டுமா! அப்படியொரு சந்தோஷத் துள்ளல் அவளிடம்.



நீண்ட மாதங்களின் பின் நிறைவான குடும்பமாய் இருந்ததில் அவள் மனமும் நிறைந்திருந்தது. கணவன் கொண்டு வந்த மரக்கறிகளை மணக்க மணக்கச் சமைத்துப் பரிமாறினாள். சோமுவுக்குக் கூட அவளது குழந்தைத்தனமான சந்தோசத் துள்ளலில் குதூகலம் பிறந்திருந்தது. அவளது மூத்தமகள் கவிதாவும், கடைக்குட்டி தீபிகாவும், களத்திலிருந்து வந்த மகன் ராஜனும் அந்தக் குதூகலத்துக்கு எந்தக் குந்தகமும் வந்து விடாதபடி கூடியிருந்து கதைத்துவிட்டுப் பத்து மணியளவில் படுக்க ஆயத்தமானார்கள்.



அகிம்சையைப் போதித்த காந்தி பிறந்த மண்ணிலிருந்து அமைதி காக்க என்று வந்த இந்தியப்படை தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியபின் பருத்தித்துறை மக்களைப் பற்றிக் கொண்ட பீதி கிராமக் கோட்டில் வாழ்கின்ற மகேஸ்வரியையும் தொற்றிக்கொள்ளத் தவறவில்லை.



இந்திய இராணுவத்தின் கற்பழிப்புகளும் காட்டுமிராண்டித் தனங்களும் இன்னும் மகேஸ்வரியின் வீடுவரை வரவில்லையென்றாலும் முன்னெச்சரிக்கையாக அவள் கவிதாவையும் தீபிகாவையும் அவர்களின் அறைகளில் படுக்க விடாமல் தனது படுக்கையறையிலேயே படுக்க வைப்பாள். மகன் ராஜனையும் இந்த இரண்டு நாட்களும் தனது பெரிய படுக்கை அறையின் ஒரு மூலையிலேதான் படுக்க வைத்தாள். இன்றும் கொப்பளிப்பான் ஆக்கிரமிப்பு இன்னும் அவனில் இருந்ததால் அவனைக் கைத்தாங்கலாய் பிடித்துக் கூட்டிக்கொண்டு போய் தனது அறையிலேயே படுக்க வைத்தாள்.



சோமு மாங்காய்ப் பூட்டைக் கொண்டுபோய் கேற்றைப் பூட்டுகையில் மெதுவாக வெளியில் ரோட்டையும் எட்டிப்பார்த்தான். வலதுபக்கம் கிராமக்கோட்டுச் சந்தியை நோக்கிய ரோட்டிலும் சரி இடதுபக்கம் பல்லப்பையை நோக்கிய ரோட்டிலும் சரி எந்தவித மனித நடமாட்டமும் தெரியவில்லை. ஊரே அடங்கிப் போயிருந்தது. எந்த வீடுகளிலும் வெளிச்சம் தெரியவில்லை.



பத்து மணிக்கே ஊரடங்கிப் போகும் படியாக நாட்டுக்கு வந்த நிலையை மனதுக்குள் எண்ணி வருந்தியவாறே கேற்றைப் பூட்டிவிட்டு உள்ளே வந்தவன் படுத்கையறைக்குள் புகுந்து கொண்டான்.



மூன்று பிள்ளைகளும் கணவனும் தன் அருகிலேயே இருக்கிறார்கள் என்ற எண்ணம் மகேஸ்வரியின் மனதை நிறைத்திருக்க படுக்கையிலேயே கணவனுடன் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தவள் அப்படியே து}ங்கிவிட்டாள். இரவு பன்னிரண்டு மணியையும் தாண்டிய அந்த அர்த்த ராத்திரியில் கனவுபோல் அந்தச் சத்தம் கேட்டது.



“சோமசுந்தரம்...... சோமசுந்தரம்...... கதவைத்திற“



முதலில், ஏதோ கனவென்றுதான் மகேஸ்வரி நினைத்தாள். கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டபோதுதான் ஆழ்ந்து து}ங்கியிருந்தவள் துடித்துப் பதைத்து எழுந்தாள்.



“மூன்று மாதங்களின் பின் இன்றுதானே என் வீட்டில் என் மனைவி குழந்தைகளுடன் து}ங்குகிறேன.;“ என்ற நிம்மதியுடன் து}ங்கிக் கொண்டிருந்த சோமுவும் திடுக்கிட்டுக் கண்விழித்து, விபரம் புரியாமல் விழித்து, எதுவோ உறைக்க விறைத்துப் போய் விட்டான்.



அது இந்தியப்படைதான். பிறழ்ந்த அவர்களின் தமிழில் புரிந்துகொண்ட சோமுவும் மகேஸ்வரியும் செய்வதறியாது திகைத்தார்கள். தடுமாறினார்கள்.



“சோமசுந்தரம்.....! “

அதட்டலான கூப்பிடுகையில் மீண்டும் அதிர்ந்து பதறினார்கள்.



“டேய் அப்பு எழும்படா. இந்தியன் ஆமி வந்திட்டானடா“

மகேஸ்வரி குரல் எழுப்பிக் கதைக்கவும் முடியாமல் பயத்தில் குரலைத் தனக்குள் அடக்கிக் கிசுகிசுப்பாகத் தழதழத்த குரலில், ராஜனைக் கட்டிப்பிடித்து எழுப்பினாள்.



“சோமசுந்தரம் கதவைத்திற!“

மீண்டும் கர்ணகடுரமாய் ஒலித்த அந்தக்குரல் மகேஸ்வரியினதும் சோமுவினதும் செவிப்பறைகளில் அறைந்தது. இதற்குள் கவிதாவும் தீபிகாவும் உசாராகிவிட கொப்புளிப்பானில் சுருண்டு போயிருந்த ராஜனும் உசாராகிவிட்டான்.



“அப்பு நான் போய் முன் கதவைத் திறக்க முன்னம் நீ பின்பக்கத்தாலை ஓடிப்போயிடடா“

மகேஸ்வரியிடமிருந்து அழுகை பீறிட்டது. ராஜன் மனதளவில் உசாராகி விட்டாலும் கொப்புளிப்பானில் வெந்து துவண்டு போயிருந்த அவனின் உடல் அவன் மனதின் வேகத்துக்கேற்ப இயங்க மறுத்தது.



“தம்பி வா. நான் உன்னைக் கூட்டிக் கொண்டு போய் பின்னுக்கு விடுறன்.“ கவிதா அவனின் கையைப் பிடித்துக் கொண்டு நாற்சார வீட்டின் நடு முற்றத்தில் இறங்கினாள். குரோட்டன்கள், மல்லிகைக்கொடிகள், ரோஜாச்செடிகள் எல்லாம் அவர்கள் இருவரையும் தழுவி, உரசி பின் தவிப்போடு நிற்க அவை பற்றிய எந்த வித பிரக்ஞையும் இல்லாமல் ராஜனும் கவிதாவும் முன்னேறி குசினி விறாந்தையில் ஏறினார்கள்.



கவிதா குசினிக்குப் பக்கத்திலிருந்த பின்பக்கக் கதவை மெதுவாகத் திறக்க ராஜன் எதுவும் தெரியாத கும்மிருட்டில் வெளியில் காலை வைத்தான்.

அவன் கால் நிலத்தில் படமுன்னரே படபடவென்று துப்பாக்கி வேட்டுக்கள் வெடித்தன.



கவிதா வெலவெலத்துப் போனாள். „தம்பி போகாதை இங்காலை வா“ மெல்லிய குரலில் பதைப்புடன் கூப்பிட்டுக் கொண்டு அப்படியே குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்றாள். அவளுக்கு வெளியில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.



இதே நேரம் தயங்கித் தயங்கி முன் கதவைத் திறந்த மகேஸ்வரி வெடிச்சத்தத்தில் அவள் நெஞ்சே அதிர, குளறியடித்துக்கொண்டு, வாசலில் நின்ற அந்தக் கொடிய இந்திய இராணுவத்தைக் கூடக் கண்டு கொள்ளாமல் திரும்பி வீட்டுக்குள் ஓடினாள்.



அவள் இரண்டடிதான் ஓடியிருப்பாள். ஒரு முரட்டுக்கை அவளை முரட்டுத்தனமாக அழுத்திப் பிடித்தது. "இங்கை புலி இருக்குது.“ பார்வையால் அவளை விழுங்கியபடியே அந்த மிருகம் கர்ச்சித்தது. „இல்லை இல்லை“ மகேஸ்வரி நடுங்கியபடி மறுத்தாள். அந்த மிருகம் தன் அழுங்குப் பிடியை சற்றும் தளர்த்தாமல் அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் வீட்டின் முன் நடுரோட்டில் இருத்தியது.



„ஐயோ என்ரை பிள்ளையளும் மனுசனும் உள்ளை“ கதறினாள். அவள் கதறலில் கொஞ்சம் கூடக் கலக்கமடையாத கல்நெஞ்சுக் காரர்களில் ஒருவன் தீபிகாவையும் சோமுவையும் வெளியிலே கூட்டிக் கொண்டு வந்து மகேஸ்வரியின் அருகில் இருத்தி விட்டு அவர்கள் பக்கம் துப்பாக்கியைக் குறிபார்த்து நீட்டியபடி நின்றான்.



சோமுதான் முதலில் கதவைத் திறக்கப் போனவன். மகேஸ்வரிதான் அவனை அனுப்பப் பயந்து அவனை அறையிலேயே இருக்கச் சொல்லி விட்டுத் தான் வந்து கதவைத் திறந்தவள். எப்படியாவது புருசனையும் பிள்ளைகளையும் இவர்கள் கண்ணில் படவிடாது காப்பாற்றி விடலாம் என்றுதான் முதலில் நம்பிக்கையுடன் எண்ணினாள். இப்படி நடுச்சாமத்தில் நடுரோட்டில் இருத்தப் படுவாள் என்று அவள் துளி கூட நினைக்கவில்லை. இதெல்லாம் நியமாக நடக்கிறதா அல்லது கெட்ட கனவா என்று அவளுக்குப் புரியவில்லை.

பின் பக்கம் போன கவிதாவும் ராஜனும் என்ன ஆனார்கள் என்பது கூடத் தெரியவில்லை. ஹஎப்பிடியாவது என்ரை பிள்ளை தப்பியோடியிருப்பான்ஹ

பொங்கி வந்த கண்ணீருக்கு நம்பிக்கை நினைவுகளால் அணை போட்டாள்.



அவள் நெஞ்சைத் துளைப்பது போல் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுக்கள் மௌனமாகி விட்டன. ஆனால் அவளின் சிறு அசைவைக் கூட அவதானித்த படி துப்பாக்கி முனையொனன்று அவளை நோக்கி நீண்டிருந்தது. வீட்டு வாசலில் அருவருத்த முகங்களுடனான இந்தியன் ஆமிகள் காவலுக்கு நிற்க அவர்களுக்குள் முகமூடி போட்ட எட்டப்பன் ஒருவனும் நின்றான்.



„என்ரை பிள்ளையைக் காட்டிக் கொடுக்கவோடா இந்தப் பிசாசுகளைக் கூட்டிக் கொண்டு வந்தனீ? நீ ஒரு தமிழனாய் இருந்து கொண்டு இப்பிடிச் செய்யலாமோடா?....“ மகேஸ்வரிக்கு அவன் நெஞ்சுச் சட்டையைப் பிடித்து இழுத்துக் கேட்க வேண்டும் போல ஒரு வெறி வந்தது.



பிள்ளைகள் இரண்டு பேரும் என்ன ஆனார்கள் என்று தெரியாத பயத்தில் வெறி கோபமாய் மாறி அதைக் கொப்புளிக்க முடியாமல் திணறி அழுகையாய் சிதறியது. நடுரோட்டு என்றும் பாராமல் ரோட்டில் புரண்டு புலம்பினாள்.

கண்ணுக்கெட்டிய தூத்திலிருக்கும் அந்த வைரவர் கோயில் வைரவரையும் புட்டளையிலிருக்கும் புட்டளைப்பிள்ளையாரையும் கூப்பிடக் கூடத் திராணியின்றிப் பிதற்றினாள்.



இதேநேரம் குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்ற கவிதாவின் கண்கள் அந்த இருட்டிலும் ராஜனைத் தேடின.

„தம்பி தம்பி எங்கையடா நீ “ கிசுகிசுப்பாய்க் கேட்டாள்.



சத்தம் இல்லை.

மெதுவாகச் சுவரோடு ஒட்டியபடியே வாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள். திடீரென்று அவளை „அக்கா.......!“ என்ற படி ராஜன் கட்டிப்பிடித்தான்.



„அக்கா....... தண்ணி......!“

திக்கிய படி அவன் முனகலுடன் கேட்டான். கவிதாவின் நெஞ்சுச் சட்டையின் உள்ளே எதுவோ பிசுபிசுத்தது.



„தம்பி....!“ இறுகக் கட்டிப் பிடித்தாள்.



„அக்கா...தண்ணி...!“

சில முரட்டுக் கைகள் அவர்களை இழுத்துப் பிரித்தன.



„விடு....என்ரை தம்பி“ கவிதா திமிறினாள்.



„தம்பிக்குத் தண்ணி.....“ அவள் முடிக்கு முன்னே இன்னுமொரு முரட்டுக்கை அவளை கைகளால் பிடித்து இழுத்துக்கொண்டு போனது.



„அ..க்..கா!“ மெலிதாக ராஜன் முனகும் ஒலியைத் தொடர்ந்து தொப்பென்று எதுவோ விழுந்த சத்தம் கேட்டது.



இழுத்து வரப்பட்ட கவிதாவும் இப்போது நடுரோட்டில் இருத்தப் பட்டாள்.

இருட்டிலும் அவள் நெஞ்சுச்சட்டை சிவப்பாக இருப்பது தெரிந்தது.

புpசுபிசுத்தது தம்பியின் குருதி என்பது அவளுக்குத் தெளிவாகப்; புரிந்ததும், „தம்பி....!“ குழறிய படி வீட்டை நோக்கி ஓடினாள். மீண்டும் முரட்டுக்கை அவளை இறுகப்பிடித்து இழுத்துக்கொண்டு வந்து நடுவீதியில் இருத்தியது.



நாலுமணி நேரத்துக்கு முன்பு சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கியிருந்த அந்த வீட்டின் குசினி விறாந்தையில், இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த ராஜனை இந்திய இராணுவத்தினர் வெற்றிக்களிப்புடன் தூக்கிக்கொண்டு வெளியில் வந்தனர். ராஜன் கொப்புளிப்பானில் வீட்டுக்கு வந்திருப்பதை மோப்பம் பிடித்து இந்திய இராணுவத்திடம் காட்டிக்கொடுத்த அந்த முகமூடித் தமிழன் அவர்களைப் பின்தொடர...!

சோமு அவர்களிடம் போய் „என்ரை பிள்ளை.....!?“ கேட்டான்.



„நாளைக்கு மந்திகை ஆஸ்பத்திரிக்கு வந்து அவன் புலி எண்டு சொல்லிக் கையெழுத்துப் போட்டிட்:டு எடுத்துக்கொண்டு போ.“ சொல்லிக் கொண்டு போனார்கள் அந்தப் படுபாதகர்கள்.



களத்தில் காவியமாக வேண்டிய ராஜன், எட்டப்பன் வழி வந்த காட்டிக் கொடுப்பவனால், அவன் தவழந்த வீட்டிலேயே உயிரையும் உதிரத்தையும் சிந்திய கொடுமையைத் தாங்க முடியாமல் அந்த வீடே ஆழ்ந்த சோகத்தில் அசாதாரண அமைதியில் மூழ்கிக்கிடக்க, நடைப்பிணங்களாக சோமசுந்தரமும், மகேஸ்வரியும், கவிதாவும், தீபிகாவும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.



(4.12.1987 அன்று நடந்த உண்மைச்சம்பவம் இது.)

இயற்பெயர்-விஸ்ணுபாலன்.

செல்லப்பெயர்-ராஜன்

போராளியாக-றோகன்.




சந்திரவதனா

யேர்மனி

செப்டெம்பர் 1999



பிரசுரம் - ஈழமுரசு(11 - 17 நவம்பர் - 1999)

பொட்டுகிளாஸ்

டொமினிக் ஜீவா அவர்களின் எழுதப் படாத கவிதைகளும் வரையப் படாத சித்திரங்களும் என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து மனதின் அடிநாதத்திலிருந்து ஏதேதோ நினைவுகள் எழுந்து வந்து அலை மோதிக் கொண்டிருக்கின்றன. கட்டியக் காரனாக நின்று அவர் எழுதிய வரிகளைத் தாண்டி என்னால் மேலே செல்ல முடியாமல் உள்ளது. மீண்டும் மீண்டும் சில வரிகளை வாசிப்பதுவும் அப்படியே மாண்டு போகாது என் மனசுக்குள்ளே பதிந்து போயிருக்கும் சிறுவயது நினைவுகள் மீட்டப் பட்டு அந்த சம்பவங்களுடன் நான் சங்கமித்துப் போவதும் சில வாரங்களாகவே நடந்து கொண்டு தானிருக்கிறது.



நானும் பார்வையால் பேச்சால் செயலால் பஞ்சமரை வதை செய்த கர்வம் பிடித்த சமூகத்தில் இருந்து வந்தவள்தான்.



இன்றும் அவரது அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். என் மனசு ஓடிப் போய் என் வீட்டு ஒட்டிலும் பொட்டுக் கிளாஸிலும் அமர்ந்து கொண்டு விட்டது. தாய்க்காரி எவ்வளவுதான் சொல்லி விட்டாலும் வெள்ளத்தைக் கண்டதும் நின்று விடும் பள்ளிப் பிள்ளை போல மனசு தொடர்ந்து வாசிக்க மறுத்தது. வெள்ளத்தைக் கண்ட பிள்ளையின் மனதிலாவது வெள்ளத்துடனான லயிப்பிலும் தப்பலிலும் சந்தோசமாவது இருக்கும். என்னுள்ளே இனம் புரியாத அசௌகரியமான ஸ்தம்பிதம்.



துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு போகும் பாட்டாவை நேர் எதிரே கண்டதும் தனது துண்டை இழுத்து கக்கத்துள் வைத்துக் கொண்டு உடையார் என்று குழைந்து கூழைக் கும்பிடு போடும் - எங்களுர் சாவுச் சடங்குகளுக்குப் பறையடிக்கும் - மாணிக்கம்....



எங்கள் அழுக்குத் தலை மயிரைப் பிடித்து அழகாகக் கத்தரித்து விட்டு எங்கள் வீட்டு ஒட்டில் மட்டும் அமர அனுமதிக்கப் படும் நாவிதன் கதிரமலை...



எங்கள் தென்னையில் ஏறி கள்ளுச் சீவும் கந்தசாமி...



எங்கள் அழுக்குத் துணிகளையெல்லாம் மூட்டையாகக் கட்டி தோளிலே சுமந்து சென்று தோய்த்துக் கொண்டு வந்து தரும் வயதான கோபால்.... இப்படி ஒவ்வொருவராக என் முன்னே தோன்றிக் கொண்டிருந்தார்கள்.



இவர்களில் நாங்கள் கட்டாடி என்று சொல்லும் கோபால் சில சமயங்களில் எங்கள் வீட்டுச் சடங்குகளுக்காக வீட்டுக்குள்ளே வர அனுமதிக்கப் படுவான். ஆனாலும் மூத்தவர்களை வாங்கோ போங்கோ என்று கதைக்க வேண்டும் என்று சொல்லித் தந்த அம்மாதான் அவனை அவன் இவன் என்று நான் அழைக்க அனுமதித்தா.



அப்பாவின் வயதை ஒத்த அவனை

"கோபாலு.."

என்று கூப்பிட்டு

"எனக்கு திங்கட்கிழமை வெள்ளைச் சட்டை கட்டாயம் வேணும். கொண்டு வந்து தந்திடு."

என்று சொல்வேன். அவன் சின்னப்பெண்ணான என்னைப் பார்த்து

“ஓமுங்கோ..! நான் கொண்டு வந்து தாறன்.

என்று பணிவோடு சொல்வான். திங்கட்கிழமை விடிய கொண்டு வந்தும் விடுவான். ஊத்தை உடுப்புகளைத் தனது பின் முதுகில் சுமந்துதான் அவன் முதுகில் அப்படியொரு கூனல் விழுந்ததோ..?



கள்ளுச் சீவும் கந்தசாமி தென்னையில் ஏறும் லாவகமே ஒரு தனி அழகுதான். ஆனால் அவன் எங்கள் வீட்டு ஒட்டில் கால் வைத்து நான் கண்டதில்லை. ஒட்டுக் கரையோடு முற்றத்தில் நின்றுதான் அம்மாவோடும் அப்பாவோடும் கதைப்பான்.



பறையடிக்கும் மாணிக்கம் ஒட்டிலிருந்து எட்டடி தள்ளி நின்றே கதைப்பான். கிட்ட வந்தாலே ஏதாவது ஒட்டி விடும் என்று நினைத்து அவனை அப்படித் தள்ளி வைத்தார்களோ..?



கதிரமலை எங்கள் வீட்டில் குழந்தைகளுக்குத் தலைமயிர் வெட்ட வேண்டுமென்றால் மட்டும் ஒட்டில் வந்து இருந்து வெட்டுவான். மற்றும் படி எட்டத்தான் இருப்பான்.



ஒட்டு என்றால் என்ன என்ற யோசனை உங்களுக்கு வரலாம். எனக்குக் கூட ஆரம்பத்தில் ஏன் அந்த ஒட்டு என்று விளங்கவில்லை. வழுவழுப்பான எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தையுடன் சேர்த்து ஒரு சொருசொருப்பான விறாந்தை கட்டப் பட்டிருந்தது. ஆனால் அது எங்கள் பெரிய விறாந்தையிலிருந்து அரை அடி பதிவாகவே இருந்தது. மிகச் சின்ன வயசில் அது எனக்கு தொங்கி விளையாட நல்ல சாதகமான சாதனமாய் இருந்தது.



எனக்குள் சிந்தனைகள் விரியத் தொடங்கிய - ஒவ்வொரு விடயத்திலும் பூராயம் தேடத் தொடங்கிய - ஏன் என்ற கேள்விகளை மற்றவர்களிடம் அடுக்கத் தொடங்கிய ஒரு கால கட்டத்தில்தான் நான் எனது அம்மம்மாவிடம் அந்த ஒட்டு பற்றி விசாரித்தேன்.



”அம்மம்மா..! ஏன் அதுக்கு ஒட்டு எண்டு பெயர்...? அதேன் பெரிய விறாந்தையை விடப் பதிஞ்சிருக்கோணும்;....?"

br />

அதற்கு அம்மம்மா சொன்ன பதில்தான் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நம்ப முடியாதிருந்தது. அவ பஞ்சமர்களின் பெயர்களை அநாயசமாக அடுக்கி

"அவையள் வந்தால் இருக்கிறதுக்குத்தான்"

என்று சொன்னா. உண்மையிலேயே நான் ஆச்சரியப் பட்டுப் போனேன். அதற்காக என்றே ஒரு விறாந்தையை எமது விறாந்தையுடன் ஒட்டி விட்டுள்ளார்களா? என்ன மனிதர்கள் இவர்கள்....!





"ஏன் அம்மம்மா..! அவையள் இந்த மேல் விறாந்தையிலை இருந்தால் என்ன..?



சீ..... மொக்குப் பிள்ளை மாதிரிக் கதைக்காதை. நாங்கள் இந்த விறாந்தையிலை இருந்து கதைக்கிற பொழுது அவையளும் இதிலை இருந்தால் என்ன மாதிரி..? அவையள் எங்களுக்குக் கீழைதான் இருக்கோணும்."



அம்மம்மாவின் பதில் எனக்குள் ஒருவித அதிருப்தியான உணர்வையே தோற்றுவித்தது. எமது வீட்டின் ஒவ்வொரு காரியத்திலும் பங்கு கொள்ளும் - அவர்களைத்(பஞ்சமர்) தாழ்த்தி வைத்துப் பார்க்கும் இந்தக் குரோதம் இவர்களுக்குள் எப்படி வந்தது. ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். எனக்குள் பலவிதமான சிந்தனைகள் எழுந்தன.



அதன் பின்தான் நான் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். எனக்கு எதுவுமே பிடிக்க வில்லை. ஆனாலும் என் வீட்டுப் பெரியோரைச் சீர் திருத்தும் அளவுக்கு எனக்கு வயது போதவில்லை. என் சொற்களோ செயல்களோ அங்கு எடு படவில்லை. என்ன கதைத்தாலும் மொக்குப் பிள்ளை..! ஆள்தான் வளர்ந்திருக்கிறாளே தவிர இவளுக்கு அறிவு வளரேல்லை.. போன்ற ஆலாபனைகள் தான் எனக்குக் கிடைத்தன.



ஆனாலும் எனக்குள் எழுந்த சிந்தனைகள் அறுபட வில்லை. அவை இன்னும் இன்னும் பெரிதாக விரிந்தன. கதிரமலையோ கோபாலுவோ வீட்டுக்கு வந்தால் அவர்களும் மனிதர்கள்தான் என்ற நினைப்போடு அவர்களோடு நானும் போய் ஒட்டில் இருந்து கதைக்கத் தொடங்கினேன். இவைகளைப் பார்த்து அம்மா என்ன நினைத்தாவோ தெரியாது. ஆனால் ஒன்றுமே சொல்லவில்லை.



அவ சொந்தமான எந்த சிந்தனையையும் வெளிப் படுத்தும் தைரியம் இன்றி அவவின் பெற்றோரான எனது பாட்டாவும் அம்மம்மாவும் வகுத்த படி சமூகக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு வளர்ந்திருக்கிறா. - இது தப்பு, இது சரி. - என்று பகுத்தாயும் தன்மையோ திறனோ அவவுக்குள் இருந்தாலும், இவைதான் நியதி என்று எண்ணி அதன் படி வாழும் மனப் பக்குவமும் அவவுக்குள் தாரளமாக இருந்தது. மற்றும் படி அவவிடம் சாதித் தீயோ மனிதர்களை மண்டியிட வைக்கும் மனிதமல்லாத குணமோ இல்லை. அதனால்தான் அவ எதுவும் சொல்லவில்லையோ..!



ஆனால் நான் அப்படி சமமாக இருந்து கதைப்பதை பாட்டாவோ அம்மம்மாவோ கண்டு விட்டால் போதும். நான் அவர்களின் கடுமையான கோபத்துக்காளாகி வசைமாரிகளை வாங்கிக் கட்டிக் கொள்வேன். எனக்கு அது பற்றிக் கவலையில்லை. அம்மா பேசினால் மட்டுந்தான் எனக்கு அழுகை வரும். மற்றவர்கள் பேசினால் என்னில் பிழை இல்லை என்று தெரிந்தால் மனம் கொண்ட மட்டும் என் மனசுக்குள்ளேயே அவர்களைத் திட்டி விட்டு இருந்து விடுவேன்.



அன்று சனிக்கிழமை. இற்றைக்கு 30 வருடத்துக்கு (1972) முந்திய காலகட்டம். கதிரமலை வந்திருந்தான். எனது தம்பிமார், சித்தப்பாமார் எல்லோரும் ஒவ்வொருவராக முற்றத்தில் கதிரை போட்டமர கதிரமலை நின்ற படி அவர்களுக்குத் தலைமயிர் வெட்டி விட்டான். கனபேருக்கு வெட்டியதால் களைத்தும் விட்டான்.



அம்மா இன்று இரண்டாவது தேநீர் அவனுக்காகப் போட்டு விட்டு வழமை போல அவனுக்கென வைத்த தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி என்னைக் கூப்பிட்டுத் தந்தா. எனக்கு என்னவோ போல இருந்தது. அம்மாவோடு இது பற்றி ஏற்கெனவே கதைத்திருந்தும் அம்மா யோசிப்பதாகச் சொன்னாவே தவிர செயற் படுத்துவதாய்த் தெரியவில்லை. எனக்கு கோபமுமில்லை. கவலையுமில்லை. இரண்டுக்கு மிடைப்பட்ட ஏதோ ஒரு உணர்வு.

"அம்மா இண்டைக்கு நான் அவனுக்குக் கிளாசிலைதான் ரீ குடுக்கப் போறன்."

எனது அந்தத் தீர்க்கமான பேச்சு அம்மாவைச் சங்கடப் படுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் அம்மாவிடம் தான் நினைப்பதைத்தான் தனது பிள்ளைகள் செய்ய வேண்டுமென்ற திணிப்புத் தன்மையோ கண்டதையும் எதிர்க்கும் தன்மையோ இல்லாததால் என்னை மௌனமாகப் பார்த்த படி நின்றா. அவவையும் பஞ்சமரைத் தாழ்த்தும் இந்தப் பண்பற்ற செயல்கள் புண் படுத்தியிருந்தனவோ..? எனக்குத் தெரியவில்லை.



நான் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த பொட்டுக் கிளாஸை எடுத்து அதனுள் அந்தத் தேநீரை ஊற்றிக் கொண்டு போய் களைத்துப் போயிருந்த கதிரமலையிடம்

"இந்தா கதிரமலை..! ரீ யைக் குடி..!"

என்று நீட்டினேன்.



அவன் தீப் பட்டவன் போலத் துடித்துப் பதைத்து எழுந்து அந்தப் பொட்டுக் கிளாஸையும் என்னையும் கண்கள் அகல விரிய ஆச்சரியமாய்ப் பார்த்தான்.எனக்கு சந்தோசமாய் இருந்தது. ஒரு ஜீவனை அசைத்திருக்கிறேன். அதுவும் சந்தோசமாக அசைத்திருக்கிறேன் என்ற சந்தோசம்.





"பிடி கதிரமலை. - உனக்குத்தான்."



அவன் கண்களுக்குள் என்ன உணர்வோ! நிட்சயமாய் நன்றி கலந்த உணர்வு! அதற்கு மேலும் ஏதோ சொல்ல விளையும் தவிப்பு.





"இருந்து குடி கதிரமலை."



ஏதோ ஒரு சந்தோசம் அவன் முகத்தில் தவழ கிளாஸை பக்குவமாகப் பிடித்துக் குடிக்கத் தொடங்கினான்.



எனக்கு அன்று மனசு நிறைந்திருந்தது. அம்மாதான்

"இக்கணம் பாட்டா கண்டால் பேசப் போறார்."

என்று பயந்து கொண்டிருந்தா.





"ஏதும் ஒட்டிக் கொண்டு வந்திடும் எண்டு பயமெண்டால் நல்லாச் சாம்பல் போட்டு மினுக்குங்கோ. அல்லது விம் போட்டுக் கழுவித் துடைச்சு வையுங்கோ."

தொண்டை வரை வந்த வார்த்தைகளை வெளியே சிந்த முன் அப்படியே முழுங்கிக் கொண்டேன்.ரீ



அன்றைய பொழுது எனக்கு அர்த்தமுள்ளதாய் ஆனந்தமானதாய் இருந்தது. சிட்டுக் குருவியின் சிறகசைப்பு எனக்குள். அடுத்தநாள் விடிய எழும்பி பல்லு மினுக்கும் போது குசினிக்குள் அம்மா ஆட்டுப் பால் தேநீரை ஆத்தும் வாசம் கிணற்றடி வரை வந்து மூக்கைத் தொட்டது.



ஆசையோடு தேநீருக்காய் குசினிக்குள் நுழைந்த போது

"பொட்டுக் கிளாசுக்குள்ளைதான் எனக்கு ரீ வேணும்..!"

என்று தம்பி அடம் பிடித்துக் கொண்டிருந்தான். அம்மா ஒன்றும் பேசாமல் தேநீரை கிளாசுகளுக்குள் ஊற்றிக் கொண்டிருந்தா. அவைகளுக்குள் பொட்டுக் கிளசைக் காணவில்லை.



அது குசினிக்குப் பின்னால் வெளியில் உள்ள விறகு வைப்பதற்கென இறக்கப் பட்ட பத்தி மூலைக்குள் பத்திரமாகக் கழுவிக் கவிழ்க்கப் பட்டிருந்தது.





-முற்றும்-





சந்திரவதனா செல்வகுமாரன்

யேர்மனி

19.11.2002






பிரசுரம் - முழக்கம் - கனடா - 17.01.2003

குண்டுமணிமாலை

அந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது. மரங்கள் வீடுகள் லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை. ரெயின் ஓடிக் கொண்டிருந்தது.



ரெயினின் அந்த சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்த சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது.



நான் இப்படித்தான். யேர்மனியிலும் ஒவ்வொரு காலையிலும் வேலைக்குப் போகும்போது அந்த ஸ்வெபிஸ்ஹால் நகர ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டும் போது ஏதேதோ நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க என்னையே மறந்து போய்க் கொண்டிருப்பேன்.



எனது அப்பா ஸ்ரேசன் மாஸ்டராக இருந்ததாலோ என்னவோ ரெயினும் ரெயில்வே ஸ்ரேசனும் என் வாழ்க்கையில் எப்போதும் சுகந்தம் தருபவையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு பாடசாலை லீவுக்கும் குடும்பமாக, குதூகலமாக ரெயினில் பயணித்ததை என்னால் மறக்க முடிவதில்லை. நினைக்கும் போதெல்லாம் குப்பென்று என்னில் சந்தோச வாசனை வீசும்.



ரெயினுக்குள் என்னைத் தவிர எல்லோருமே தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் ஆழ்ந்து தூங்குவதாகத் தெரியவில்லை. பயம்...! பயம்...! கொழும்பு(கோட்டை) ரெயில்வே ஸ்ரேசனில் பார்த்த போதே உணர்ந்து கொண்டேன். யாருமே இயல்பாக இல்லை என்பதை. என்னைப் போல அதீத பயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் யார் கண்ணிலும் துறுதுறுப்பு இருக்க வில்லை.



பொட்டு வைக்கவே துணிவில்லாத பாழடைந்த நெற்றிகள். குலுங்கிச் சிரிப்பதை மறந்தே போய் விட்ட குமருகள். உறவுகளைத் தொலைத்து விட்டு சோகங்களை மட்டும் துணையாக்கிக் கொண்ட சொந்தங்கள் என்று அங்கு நின்ற தமிழர்கள் எல்லோருமே முகமிழந்து நின்றார்கள். அவர்கள் எல்லோருமே வவுனியாவை நோக்கித்தான்.



ரெயின் வந்ததும் எல்லோரும் ஏதோ அவசரத்துடன் விரைந்து ஓடி ஏறினார்கள். ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டும் சிலிப்பரேட்ஸ் கதவுகள் திறக்கும் வரை காத்திருந்து திறந்ததும் ஏறி தாம் ஏற்கெனவே பணம் கொடுத்துப் பதிவு செய்து வைத்த நம்பர் இருக்கைகளைத் தேடி அமர்ந்தார்கள்.



சிலிப்பரேட்ஸ் கொம்பார்ட்மெண்ட் கதவுகளை வெளியில் இருந்து யாராலும் திறக்க முடியாது என்பதால் கொழும்பிலிருந்து வவுனியா போவதற்கிடையில் காடையர்களால் தமக்கு எந்த வித ஆபத்தும் நேராதென அவர்கள் நம்பினார்கள்.



அந்தக் கொம்பார்ட்மெண்டில் ஏறியவர்களில் அனேகமானோர் வவுனியாவில் ரீச்சராகவோ, அல்லது வேறு நல்ல பதவியிலோ இருப்பவர்கள் என்பதை அதற்குள் ஏறிய பின்தான் அறிந்து கொண்டேன். அவர்கள் எல்லோருமே அனேகமான வெள்ளிகளில் கொழும்பு வந்து, ஞாயிறு இரவு ரெயினில் வவுனியா திரும்புவது வழக்கமாம்.



எனக்குப் பகல் ரெயினில் வவுனியாவுக்குப் பயணஞ் செய்யத்தான் விருப்பமாக இருந்தது. ஆனால் நான் எனது தாய்நாட்டில் நடமாட எனக்குப் பொலிஸ் ரிப்போர்ட் வேண்டுமாம். விமான நிலையத்தில் வைத்தே மாமா சொன்னார்.

"ஏன் அப்பிடி? என்னட்டை யேர்மனியப் பாஸ்போர்ட் இருக்குது. ஐசி இருக்குது. இது போதாதோ என்னை அடையாளம் காட்ட..!" சற்று எரிச்சலுடன் கேட்டேன்.



"இதுக்கே எரிச்சல் பட்டால்....! இன்னும் எத்தனை அலங்கோலங்களையெல்லாம் நாங்கள் இங்கை காணுறம். தமிழராய்ப் பிறந்திட்டம். தாங்க வேணுமெண்ட விதி." சலிப்பும் கோபமும் இழைந்தோட மாமா சொன்னார்.



என் எரிச்சல் யாரை என்ன செய்தது? பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கத்தான் வேணும். வேறு வழியிருக்கவில்லை. இரண்டு தரமாகப் பொலிஸ் ஸ்டேசன் வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கையில் ஒரு நாளைத் தொலைத்திருந்தேன். இன்னுமொரு நாளைத் தொலைக்க விரும்பாத நான் இரவு ரெயினிலேயே மாமாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்.



ஓடிக் கொண்டிருக்கும் ரெயினின் யன்னலினூடாக இருளில் ஒளிந்திருக்கும் என் தாயகத்தின் அழகைத் தேடித் தேடிப் பார்த்தேன்.



அடிக்கடி விழித்துக் கொண்ட மாமா கேட்டார் "என்ன சந்தியா நீ நித்திரையே கொள்ளேல்லையோ..? நேற்றிரவும் செக்கிங் அது இதெண்டு நித்திரையே இல்லை. இனி வவுனியா போய்ச் சேர்ந்தால் பன்னிரண்டு வருஷக் கதையளை அம்மா அப்பாவோடை கதைக்கோணுமெல்லோ..!" நான் மாமாவைப் பார்த்து முறுவலித்தேன்.



பன்னிரண்டு வருஷத்தில் மாமாவில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. தளர்ந்து போயிருந்தார். கொழும்பு வாழ்க்கை என்றாலும் கொடுமைகளில் மனம் குமுறிப் போயிருந்தார்.



மாமா மீண்டும் து}ங்கிப் போய் விட்டார். சிங்களக் குடில்களும் வீடுகளும் இருளில் ஓடிக் கொண்டிருந்தன. எனக்குக் குருநாகல் ரெயில்வே ஸ்டேசனையும் பார்த்த பின் கொஞ்ச நஞ்சம் இருந்த பஞ்சியும் பஞ்சாய்ப் பறந்து விட்டது.



குருநாகல் ரோட்டில் நாங்கள் அப்பாவுடன் கைகோர்த்து நடந்ததை விட, அடுத்து வரப்போகும் நாகொல்லகம வில், ரெயில்வே குவார்ட்டர்ஸில், நாங்களெல்லோரும் லீவில் வந்து நிற்கும் போது குருநாகல் வரை அப்பா போய் தேங்காய்ப் பூரான் எங்களுக்கு வாங்கி வந்த நாட்கள் தான் அதிகம்.



நாகொல்லம ரெயில்வே ஸ்ரேசன் ஒரு சின்ன அடக்கமான ரெயில்வே ஸ்டேசன். சின்னனென்று புகையிரதப் பெட்டியிலேயே அமைக்கப் பட்ட ரெயில்வே ஸ்டேசன் அல்ல. அழகாகக் கட்டப் பட்ட பெரிய கட்டடம். அழகான பெரிய Flatform. Flatform இற்கு நேர் எதிரே தண்டவாளங்களுக்கு மற்றைய பக்கத்தில் ஒரு புல்வெளி.



அங்குதான் அப்பா தன் சக வேலையாட்களுடன் வொலிபோல் (Volleyball) விளையாடுவார். அந்த இடத்திலிருந்து இருநூறு மீற்றர் நடந்து போனால், பெரிய தாமரைக்குளம். தாமரையும் அல்லியுமாகப் படர்ந்திருக்க அழகிய சிங்களப் பெண்கள் நீண்ட கூந்தலுடன் முங்கி முங்கி எழுந்து மீன் போல நீந்தும் காட்சியால் குளம் அழகின் உச்சத்தில் நிற்கும்.



அந்தக் குளத்தில்தான் அப்பா எனக்கு நீச்சல் கற்றுத் தந்தார். "நான் மாட்டேன். எனக்குப் பயமா இருக்கு..!" தயங்கிய என்னைத் தன் கைகளில் ஏந்தி இரண்டு நாட்களில் பயம் தெளிய வைத்து.....



ரெயினின் ஓட்டத்துக்கு எதிர்ப் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கும் மரங்கள் வீடுகள் லைற்கம்பங்கள் எல்லாவற்றையும் விட வேகமாக என் நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தன.



நாகொல்லகமவுக்கு அப்பா மாற்றலாகிய இரண்டு கிழமைகளில் எங்களுக்குப் பாடசாலை லீவு. அப்பா பருத்தித்துறைக்கு வந்து எங்களையும் கூட்டிக் கொண்டு எல்லோருமாக நாகொல்லகமவுக்கு வந்து சேர்ந்தோம்.



ரெயினால் இறங்கும் போதே போர்ட்டர் மார்ட்டீன் வந்து "மாத்தயா..! மாத்தயா..!"

என்று குழைந்து கொண்டு நின்றான். எங்கள் சூட்கேஸ்களில் இரண்டைத் தூக்கிக் கொண்டு எங்களுடன் நடந்தான்.



சண்டிங்ரூமிலிருந்து வெளியே வந்த சில்வாவிடம் பணம் கொடுத்து "நல்ல ரோஸ் பாணும் கோழிக்கூடு(கப்பல்) வாழைப்பழமும் வாங்கி வா." என்று அப்பா சிங்களத்தில் சொன்னார். அண்ணன் எங்கள் வீட்டுக் கோழிக்கூட்டை நினைத்துக் கொண்டு சிரிசிரியென்று சிரித்தான். நானும் அவனோடு சேர்ந்து சிரித்தேன்.



சிலிப்பர் கட்டைகளால் எல்லை போடப் பட்ட அந்த வீட்டின் சிலிப்பர் கட்டை கேற்றைத் திறக்கும் போதே பொன்னாங்கண்ணிச் செடிகள் இரண்டு பக்கமும் பரந்திருக்க பாதை மிகவும் சுத்தமாக வீட்டு முகப்பு வரை நீண்டிருப்பது தெரிந்தது. வீட்டின் இடதுபக்க முற்றம் வழைகளால் நிறைந்து வாழைப் பொத்திகளும் வாழைக்குலைகளுமாய் எம்மை வரவேற்றது. வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மாவுக்கு அந்த வீடு நன்றாகப் பிடித்து விட்டது என்பது அம்மாவின் பிரகாசித்த முகத்தில் தெரிந்தது.



முன்னுக்குத் தனியாக இருக்கும் அறையில் அப்பாவின் - அஸிஸ்டென்ட் டிக்சன்- இருக்கிறார் என அப்பா சொன்னார். டிக்சன் அங்கிளின் அறைக்கு முன்னால் கதவுக்கு மேலே குருவிக்கூடு இருந்தது. குருவிகள் வந்து கீச்சிட்டு, சண்டை பிடித்துச் சென்றன. தம்பி ஆர்வமாய் அவைகளைப் பார்த்தான்.



அப்பா சூட்கேஸ் தூக்கிய மார்ட்டீனின் கையில் சில்லறையைத் திணிக்க, அம்மா தேநீர் தயாரிக்க, நானும் அண்ணனும் குசினியின் பின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தோம்.



பின் முற்றத்தில் பெரிய பெரிய பப்பாளிப் பழங்களுடன் பப்பாளி மரங்களும், மரவெள்ளி மரங்களும் நிறைந்து நின்றன. அங்காலை ஒரு கிணறு. ஆழம் பார்க்கும் ஆர்வம் எங்களுக்கு. ஓடிப்போய் எட்டிப் பார்த்தோம். அண்ணன் ஒரு சின்னக் கல்லை எடுத்துப் போட்டு விட்டு, கல் விழுந்ததால் அழகாகக் கலங்கிய கிணற்று நீரைப் பார்த்து ரசித்தான்.



"அது சரியான ஆழம். இங்காலை வாங்கோ." அறைக்குள் உடை மாற்றுகையில் யன்னலால் எம்மைக் கண்டு விட்ட அப்பா சத்தம் போட்டார்.



அப்போதுதான் கண்டேன் அந்த மரத்தை. அது பெரிய மரமில்லை. செடி போன்ற சிறிய மரம். அதன் கீழே குண்டுமணிகள். ஒரு பக்கம் சிவப்பும் மறுபக்கம் கறுப்புமான குண்டுமணிகள்.



"வாவ்..! குண்டுமணி மரம்." வாழ்க்கையில் முதன் முதலாகக் குண்டுமணி மரத்தைக் கண்டதில் என் எட்டு வயது மனம் துள்ளிக் குதிக்க நான் துள்ளினேன்.



பயித்தங்காய் போல. ஆனால் பயித்தங்காய் போல நீளம் நீளமாய் இல்லாமல் சின்னச் சின்னக் காய்கள் அந்த மரத்தில். ஒரு காயைப் பிய்த்துப் பார்த்தேன். உள்ளே குண்டுமணிகள். ஆனால் காயாமல். அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸின் சந்தோசம் எனக்கு.



அன்று மாலையே நிறையக் குண்டுமணிகள் பிடுங்கிச் சேர்த்து மாலை கோர்க்க ஆரம்பித்தேன். தம்பி பாலு குண்டுமணிகள் சேர்க்க எனக்கு உதவி செய்தான்.

குண்டுமணி காயாமல் ஈரத்தன்மையுடன் பச்சையாக இருந்ததால் ஊசி சுலபமாக ஏறியது.



மாலை கோர்த்த பின் தும்புத் தடியில் கொழுவி ஓட்டில் காய வைத்தேன். எனக்குப் பெருமையோ பெருமை. ஊரில் பருத்தித்துறையில் நான் ஒருநாளும் குண்டுமணி மரம் பார்க்கவில்லை. லீவு முடிந்து போகும் போது குண்டுமணி மாலையுடன் போய் எனது சினேகிதிகளைப் பொறாமைப் பட வைக்கலாம்.



அன்றிரவு குண்டுமணி மாலைக் கனவுகளுடனேயே தூங்கிப் போனேன். அடுத்த நாள் விடிந்ததும் விடியாததுமாய் ஓடிப் போய் காயவைத்த குண்டுமணி மாலையைப் பார்த்தேன். காணவில்லை. சோகமாகிப் போனேன்.



"குருவி து}க்கிக் கொண்டு போயிருக்கும்." அப்பா சொன்னார்.



குருவிக் கூட்டில் கீச்சிட்ட குருவிகளைக் கலைத்தேன்.



"நங்கி......! நங்கி.....!"



குரல் வந்த திசையைப் பார்த்தேன். டிக்சன் அங்கிள் சற்றுக் கோபமாக..

"துரத்தாதை குருவிகளை..! வீட்டிலை உள்ள செல்வமெல்லாம் போயிடும்."

சிங்களத்தில் தடுத்தார்.



இப்போது அவரது நீண்ட மூக்கு எனக்கு விகாரமாகத் தெரிந்தது.

"கிளி மூக்கு" மனதுக்குள் திட்டிக் கொண்டேன். வெளியில் அசடு வழிந்த படி "சொறி அங்கிள்" என்றேன்.



எனக்குக் கவலை. எப்படி ஒரு குண்டுமணி மாலை கோர்த்துக் காய வைத்து ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று. வீட்டுக்குள்ளே காயவைத்தால் குண்டுமணி சுருங்கிப் போகிறது. வெளியிலே காயவைத்துப் பலதடவைகள், கோர்த்த குண்டுமணி மாலையைக் குருவிக்குக் கொடுத்து விட்டேன். எப்படித்தான் ஒளித்துக் காயவைத்தாலும் கண்டு பிடித்து விடுகின்றனவே இந்தக் குருவிகள். லீவும் முடிகிறது. மரத்திலும் முற்றிய குண்டுமணிகள் முடிந்து பிஞ்சுகள்தான் எஞ்சியிருக்கின்றன. தம்பி பாலுவும் என் கவலையில் கொஞ்சம் பங்கு எடுத்துக் கொண்டு தேடித் தேடி கொஞ்சம் குண்டுமணிகள் பொறுக்கித் தந்தான்.



இரண்டு நாளில் ஊர் திரும்பப் போகிறோம். முற்றத்தில் ஒரு பேப்பர் போட்டு, நான் கோர்த்த மாலையை அதன் மேல் வைத்து வெயிலில் காய விட்டேன். நானும் பக்கத்தில் இருந்து காய்ந்தேன்.



தங்கையை இடுப்பில் தூக்கிய படியே "உச்சி மண்டையிலை வெய்யில் சுடுது. உள்ளை வா..!" அம்மா சத்தம் போட்டா. எள்ளேன் காயுது எண்ணெய்க்காக. எலிப்புழுக்கை ஏன் காயுது கூடக் கிடந்த குற்றத்துக்காக." என்றும் ஏதேதோ புறுபுறுத்தா. ஆனாலும் குண்டுமணிகளை மாலையாக்க நான் படும் பாடு தெரிந்ததாலோ என்னவோ என்னை வலுக் கட்டாயமாக உள்ளே அழைக்க வில்லை.



ஊர் திரும்புகையில் ஒரு குண்டுமணி மாலை என்னிடம் பத்திரமாக இருந்தது. எனக்குப் பெருமையோ பெருமை.



"நானே கோர்த்தேன்." என்று பெருமையாகச் சொல்ல, ஊரில் என் நண்பிகள் நம்பாது வியந்து வியந்து பார்த்தார்கள்.



ரெயின் ஒரு தரம் குலுங்கி ஓடியது.



"ஏன் எல்லாவற்றையும் விட்டிட்டு ஓடிப்போனேன். பதினெட்டு வருடங்களாகப் பொத்தி வைத்திருந்த குண்டுமணி மாலையை மட்டுமா..?! எல்லாவற்றையும் விட்டிட்டு ஏன் யேர்மனிக்கு ஓடிப் போனேன்!"



"ஏன்.....? ஏன்.....?"



பருத்தித்துறைக் கடலிலிருந்து காலம் நேரம் பாராது எம்மை நோக்கி வந்த ஷெல்களாலா? ஹெலியிலிருந்து நீண்ட துப்பாக்கிகளிலிருந்து எங்கள் வீட்டிலும் சன்னங்கள் சிதறியதாலா? வீடு வீடாகச் சென்ற சிங்கள இராணுவம் ஆண்களைச் சுட்டு வீழ்த்தி, பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக எண்ணி தம் இச்சை தீர்த்துக் கொண்டதாலா? குறுக்கே கட்டியபடி, குளித்த குறையில், துலாக் கயிற்றை இழுத்துத் தண்ணிவாளியைப் பிடித்துக் கொண்டு, நேரம் போவதே தெரியாமல் தங்கையுடன் கதையளந்த காலம், எங்கே ஷெல் வந்து எம் தலையில் விழுந்து விடுமோ! எந்தப் பக்கத்தால் ஆமி எங்கள் வீட்டுக்குள் குதிப்பானோ! என்ற அச்சத்தில் காக்காக் குளிப்புக் குளிக்கும் காலமாக மாறியதாலா? என் பிள்ளைகளும் இயக்கத்தில் சேர்ந்து விடுவார்களோ என்ற சுயநலம் கலந்த பயத்தாலா?



"ஏன் ஓடிப் போனேன்?"



"போய்.... என்ன கண்டேன் யேர்மனியில்..!"



வெறுமை, தனிமை, குளிரின் கொடுமை, பாஷை தெரியாத பரிதவிப்பு, "தொங்கிக் குதிக்கக் கூட தடையா இங்கே..?" என்ற வினா முகங்களில் தொக்கி நிற்க மனம் வாடி நின்ற என் பிள்ளைகள். எதையோ பறிகொடுத்து விட்ட வேதனையை முகத்தில் தெரிய விடாமல் மறைக்கப் பிரயத்தனப் படும் எனது கணவன். இவை தவிர வேறு என்ன கண்டேன். தமிழ் முகங்களையே காணமுடியாத ஒரு நகரம்.



பல்லைத் தீட்டித் துலாவிலை தண்ணியை இழுத்து வாய் கொப்பளித்து முகம் கழுவி வர, சுடச்சுட ஆட்டுப்பால்தேநீர் தரும் அம்மா இல்லை. களைத்துப் போய் வந்தால், "அக்கா நல்லாக் களைச்சுப் போட்டியள் போலை இருக்கு. முதல்ல இதைக் குடியுங்கோ." அன்போடு கோப்பையை நீட்டும் தங்கைமார் இல்லை.

"அக்கா நல்ல கிளிச்சொண்டு மாங்காய் கொண்டு வந்திருக்கிறன். நைஸா அம்மாக்குத் தெரியாமல் உப்பும் து}ளும் கொண்டு வாங்கோ." என்கிற தம்பிமார் இல்லை. என் பிள்ளைகளை இடுப்பில் து}க்கி வைத்துக் கொண்டு தோட்டத்து மாதுளம் பழத்தைப் பிரித்து மணிமணியாக எடுத்து பிள்ளைகளின் வாய்க்குள் நசித்து சாறைச் சுவைக்க விட்ட படியே காகமும் வடையும், குரங்கும் அப்பமும்...... கதைகள் சொல்லும் அப்பா இல்லை.



இன்னும் எத்தனை இல்லைகள்.!



"இருந்தும் ஏன் போனேன் யேர்மனிக்கு..?"



..........? ................?



போகாமலிருந்திருந்தாலும் எப்படி அல்லல் பட்டிருப்பேன். தம்பியைத் தேடி வந்த இந்தியன் ஆமி எங்கட குடும்பத்தைப் படுத்தின பாட்டைத் தங்கை பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாள். நின்றிருந்தால் நானும் பட்டிருப்பேன். அவள் அந்தக் கொடுமைகளைக் கூட கதை போல நேர்த்தியாக எழுதி அனுப்பிக் கொண்டேயிருப்பாள்.



ஓரு கடிதத்தில் "அக்கா...! அந்தச் சண்டாளர் ஒவ்வொரு முறை வரும் போதும் உங்கடை அலுமாரியைக் குடைஞ்சு குடைஞ்சு கொஞ்சங் கொஞ்சமாக எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போறாங்கள். சாறியள், எவர்சில்வர் சாமான்கள்.... என்று எல்லாத்தையும் கொண்டு போறாங்கள்....." என்று எழுதியிருந்தாள்.



"அதையிட்டு ஒண்டும் கவலைப் பட வேண்டாம். உங்களுக்கு ஒண்டும் நடக்காதது தெய்வசெயலே.....!" நானும் ஆறுதல் கூறிக் கடிதங்களாய் எழுதினேன்.



என்ன கஷ்டத்திலும் "அக்கா...!" என்று அன்பைத் தோய்த்து எழுதும் தங்கையின் கடிதங்கள் நாளுக்கு நாள் சோகத்தால் நிறைந்து கனமாகவே வந்தன.



அப்படி வந்ததில் "தம்பியை இந்தியப் படையினர் 500 பேர் ஒன்றாகச் சுற்றி வளைத்து, அவனுடன் நேர் நின்று போராட முடியாத கட்டத்தில - பசூக்கா ஷெல்லால் அடித்து வீழ்த்தி விட்டார்கள். கடைசி மூச்சு வரை போராடி தம்பி வீரமரணமடைந்து விட்டான்......!" என்ற வாக்கியங்களுடன் சுமைதாளாத சோகத்துக்கு என்னை ஆளாக்கிய அந்தக் கடிதத்துக்கு முதல் கடிதத்தில் வந்த செய்தி...



"அக்கா..! இம்முறை இந்தியன் பிசாசுகள் ஐந்து பேர் வந்தார்கள். ஒருவன் என்னை இழுத்து வீழ்த்தி என் நெஞ்சின் மேல் காலை வைத்துக் கொண்டு "தம்பி மொறிஸ் எங்கே..?" என்று கேட்டு உறுமினான். இன்னொருவன் எங்கள் குட்டித் தங்கையின் அழகிய பின்னல்களைப் பிடித்து இழுத்து, நெஞ்சிலே துவக்கின் பின் பக்கத்தால் இடித்து, "எங்கே மொறிஸ்..? சொல்லு..!" என்று அதட்டினான். அவள் வலி தாங்காமல் வார்த்தை வராமல் புரண்ட போது கூட அவன் இரக்கப் பட வில்லை. மற்றவன் அப்பாச்சிக்கு உலக்கையால் அடித்தான். அப்பாச்சியின் அலறல் நெஞ்சைப் பிளந்தது. நல்ல வேளையாக அம்மா நிற்கவில்லை. அப்பாவிடம் யாழ் சென்றிருந்தா.



மற்றவன் மைத்துனர் கணேசைப் பிடித்து முகத்தில் துவக்கால் அடித்து, இரத்தம் பீறிட்டுப் பாய இழுத்துக் கொண்டு போனான். ஐந்தாவது ஆமி வழமை போல் உங்கடை அலுமாரியைக் குடைஞ்சு எதையெல்லாமோ இழுத்துக் கொண்டு போனான். அந்த நேரம் வெளியிலிருந்து வந்த ஒரு தமிழ் ஆமியால்தான் எங்கள் கற்பும் உயிரும் காப்பாற்றப் பட்டன. எல்லோரும் போய் நாங்கள் ஒரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்தான் பார்த்தேன். உங்கடை குண்டுமணிமாலை அறுந்து கணேஸ் சிந்திய இரத்தத்தில் சிதறிப் போயிருந்ததை...!"



ரெயின் விசுக்கென்று நாகொல்லகம ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டிச் சென்றது. அங்கே ரெயின் நிற்கவில்லை. ஆனாலும் நான் அவசரமாகப் பார்த்ததில் அந்த நீலவீடு இப்போ மஞ்சளாகியிருப்பது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது.

வெள்ளை சேர்ட், வெள்ளை ரவுசர், வெள்ளைத் தொப்பி போட்ட ஸ்ரேசன் மாஸ்டர் வுயடிடநவ உடன் ஸ்ரேசனில் நிற்பதும் தெரிந்தது. ஆனால் அது என்ரை அப்பா இல்லை.



அப்பா......! உயிரோடு போராடும் அந்தக் கனமான வேளையிலும் என் முகம் பார்க்க ஏங்கி வழி மேல் விழி வைத்து என் வரவுக்காய் வவுனியாவில் காத்திருக்கிறார்.



ரெயின் இப்போ மாகோவை நோக்கித் தன்பாட்டில் ஓடிக் கொண்டிருக்கிறது.

எனக்கு ஏனோ நெஞ்சு கொள்ளாமல் கண்களால் வழிந்தது. மாமா பார்த்து விடக் கூடாதே என்று துடைக்கத் துடைக்க வழிந்தது.



நிகழ்வு - 20.11.1997



-முற்றும்-



சந்திரவதனா

யேர்மனி

1999




பிரசுரம் -

முதற்பாகம் - ஈழமுரசு (15-21 யூலை 1999)

இரண்டாம் பாகம் - ஈழமுரசு (22-28 யூலை 1999)

Sunday, July 11, 2004

அந்த மௌன நிமிடங்களில்........!

நூற்றுக் கணக்கான கிலோமீற்றர்களைக் கடந்து வந்த களைப்பையும் மீறிய சோகம் மாவீரர் குடும்பத்தினருக்கென மண்டபத்தின் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களின் முகங்களில் அப்பியிருந்தது.



தமிழர்களின் பழங்காலக் கோட்டை வடிவில் அமைக்கப் பட்டிருந்த மேடையும், மேடைக்கு இடது புறமாக அமைக்கப்பட்டிருந்த துயிலும் இல்லமும், அதைச்சுற்றி

வைக்கப் பட்டிருந்த மலர்களும், ஓலித்துக் கொண்டிருந்த மாவீரர் கானமும்.....

யேர்மனியின் வர்த்தக நகரான டோட்மூண்ட் (Dortmund) நகரின் மத்தியில் அமைந்துள்ள அந்த மண்டபத்தின் உள்ளே நுழைந்த போதே எனக்குள்ளே ஒரு பயபக்தியை ஏற்படுத்தி விட்டது. நான் வேறொரு உலகத்தினுள் வந்து நிற்பது போலவே உணர்ந்தேன். யேர்மனியின் நெரிசல் நிறைந்த சாலைகளும் அழுத்தம் நிறைந்த வாழ்வும் எனக்கு மறந்து விட்டது.



பண்போடும் மரியாதையோடும் எம்மை வரவேற்ற சகோதர அன்பர்கள் தமது வேலைகளை ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் கவனிப்பது மட்டுமல்லாது அவ்வப்போது வந்து எமக்கு ரோஜாப் பூக்களையும் தந்து சென்றார்கள்.

புனிதமான உலகத்தினுள் இருப்பது போன்ற உணர்வில் என் மனது நெகிழ்ந்து போயிருந்தது.



திடீரென்று...

"தாயகத்தை உயிரிலும் மேலாக நேசித்து, அந்த உன்னத இலட்சியத்துக்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் சுதந்திர வீரர்களை நெஞ்சங்களிலே சுமந்து, அந்த உத்தமர்களுக்கு வணக்கம் செலுத்த நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம்.

அன்பார்ந்த தமிழீழ நெஞ்சங்களே!

விலைமதிக்க முடியாத தம் இன்னுயிரை ஈகம் செய்து, தமிழீழ தேசத்தின் அத்திவாரக் கற்களாக கல்லறைகளில் துயில் கொள்ளும் மாவீரர்களுக்கும், அந்நியர்களால் அநியாயமாக உயிர் பறிக்கப்பட்டு அநியாயமாக மண்ணோடு கலந்து விட்ட பொது மக்களுக்கும் எழுந்து நின்று அகவணக்கம் செய்வோம்."

ஓலிபெருக்கி முழங்கியது.



பேரிரைச்சலாக ஒலித்துக் கொண்டிருந்த கிசுகிசுச் சத்தம் அப்படியே அடங்கிப் போக மண்டபத்தினுள் அமர்ந்திருந்த அத்தனை தமிழீழ நெஞ்சங்களும் அந்த ஒரு நிமிட அஞ்சலிக்காய் எழுந்து, மனதுக்குள் பேசிய படி மௌனம் காத்தன.



இரண்டு நிமிடங்களில் மௌனத்தைக் கலைத்த படி மீண்டும் ஒலிபெருக்கி...

"அன்பார்ந்த தமிழீழ நெஞ்சங்களே அகவணக்கத்தை அடுத்து,

தொடர்வது தேசியக் கொடிவணக்கம்

எமது தமிழீழத் தேசியக் கொடியினை 19.10.1997 இல் புல்மோட்டைக் கடற்பரப்பில் நடந்த தாக்குதலின் போது வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட மாவீரன் கடற்கரும்புலி மேயர் சிறீ திருமாறன் கணேசபிள்ளை ரவிச்சந்திரன் அவர்களின் தாயார் திருமதி கணேசபிள்ளை அவர்கள் ஏற்றி வைப்பார்கள்." முழங்கியது.



தாய்நாட்டைக் காக்க தன் இன்னுயிரை ஈந்த மாவீரனின் தாய் நான் என்ற நினைவில் ஈன்ற பொழுதையும் விட நெஞ்சு பெருமை கொள்ள அந்தத் தாய்

கொடியை ஏற்றினார்;.



தமிழ் ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி ஏறுகையில் நெஞ்செல்லாம் புல்லரித்தது.

செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே சீற, நான்கு நிமிடங்களில் கொடி ஏறிப் பறக்க மனசு பரபரத்தது.

எத்தனை எத்தனை வேங்கைகள் இரத்தத்தில் ஏறிய கொடியிது புதுவை இரத்தினதுரையின் வரிகளின் யதார்த்தத்தில் கண்கள் பனித்தன.



மீண்டும் ஒலிபெருக்கி...

"தொடரும் மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வுகளில், அடுத்து - 1.5.89 அன்று இந்திய இராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் வீரமரணமடைந்த மாவீரன் கப்டன் மொறிஸ் - பரதராஜன்.தியாகராஜா அவர்களின் தாயாரும்,

11.11.93 அன்று தவளைப் பாய்ச்சல் தாக்குதலின் போது வீரமரணமடைந்த மேஜர் மயூரன் - பாலசபாபதி.தியாகராஜா அவர்களின் தாயாருமான திருமதி.தியாகராஜா அவர்கள் முதலில் ஈகைச்சுடரை ஏற்றி வைப்பார்கள் " என்று முழங்கியது.



தாய் நாட்டில் ஒளி வீசுவதற்காய் தம்மை அணைத்துக் கொண்ட அந்த வீரர்களின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றினார்.



திரையிலே ஈழத்தில் நடைபெற்ற உணர்வு பொங்கும் ஈகைச் சுடரேற்றல் ஓடிக் கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் என்னை நிலைகுலைய வைத்த அந்தப் பாடல்

ஒலிக்கத் தொடங்கியது.



தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே

இங்கு கூவிடும் எங்கள் குரல்மொழி கேட்குதா ஒளியினில் வாழ்பவரே...

என் மனதும் பாடலுடன் சேர்ந்து கூவத் தொடங்கியது.



...உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்

எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்

ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்...



மனசுஓலமிட,

கண்களில் நீர் திரையிட்டது. மண்டபத்தினுள் எதுவுமே எனக்குத் தெரியவில்லை.

மனத்திரை விசாலமாக விரிய அங்கு எத்தனை முகங்கள். மண்ணுக்கு வித்தான பல முகங்கள். அக்கா அக்கா...! என்று என் முன்னே சிரித்து விட்டு அடுத்த கணமே களத்தில் காவியமாகி கல்லறையில் துயில் கொள்ளும் உயிர்ப்பூக்கள்.

அங்கு அவனும் வந்தான்.



அன்று தம்பி வந்து நின்றதில் எங்களுக்கெல்லாம் சந்தோஷமாய் இருந்தது. நானும் தங்கைமாருமாக அவனுடன் கதை கதையென்று கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் சந்தோஷத்தைப் பார்த்து அம்மாவும் சந்தோஷத்தோடு, தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தா.



தம்பி அப்போது அனேகமான பொழுதுகளில் சென்றிக்கு நின்று ஆமியை உள்ளே வராமல் பார்த்துக் கொள்ளும்; பணியில் இருந்தான். அத்தோடு புலிகளின் நியாய விலைக் கடையையும் பொறுப்பாக நின்று நடாத்திக் கொண்டிருந்தான்.



அவன் வீட்டில் இருக்கும் போது படுக்க ஒரு தலையணி காணாதென்று சண்டை பிடித்து, காலுக்கு, கையுக்கு, தலைக்கு என்றெல்லாம் தலையணி வைத்துப் படுப்பான். கிணற்றில் தண்ணீர் அள்ளும் வேலையைத் தவிர வேறொரு வேலையும் செய்ய மாட்டான். பெரிய ஸ்ரைல் பார்ப்பான். கண்ணாடிக்கு முன்னால் மணிக்கணக்காய் நின்று தலைமயிரை அழகு படுத்துவான். நல்ல உடுப்புகள் மட்டுந்தான் போடுவான்.



இப்போ அவன் சைக்கிளில் பின்னுக்குக் கரியர் பூட்டி, கரியரில் ஒரு பக்கீஸ் பெட்டி கட்டி, அதனுள் நியாய விலைக்கடைச் சாமான்களைக் கொண்டு போவதைப் பார்த்து எங்களுக்கு ஒரு புறம் சிரிப்பும் மறுபுறம் கவலையும் வரும்.



இப்போதும் அதையெல்லாம் சொல்லி அவனைப் பகிடி பண்ணிக் கொண்டிருந்தோம். அவன் அதற்கு மேலால் வேறு பகிடிகள் சொல்லி எங்களைச் சீண்டிக் கொண்டிருந்தான்.



எங்கள் கதைகள் திசைமாறித் திசைமாறி எங்கெங்கோ சென்று திரும்பின.

"டேய்... நீ......! உந்தக் கிரனைட் பாக்கை (டீயப) யெல்லாம் கொண்டு போய் காம்பிலை குடுத்திட்டு வந்து போசாமல் படி. " நான் சொன்னேன்.

தங்கையும் என் ஆலோசனை நல்லதென்பது போலப் பக்கப் பாட்டுப் பாடினாள்.



"பேசாமல் வாறதோ...! என்ன சொல்லுறிங்கள்...? " சற்று ஆச்சரியத்துடன் கேட்டான்.



"ஓமடா, எத்தினை பெடியள் போராட இருக்கிறாங்கள். நீ உதெல்லாத்தையும் விட்டிட்டு வந்து முதல்லை படிச்சு முடி. அம்மா உன்னை நினைச்சு எவ்வளவு அழுறவ தெரியுமே!"



இப்போ அவன் சற்று ஆக்ரோசத்துடன்

"அக்கா...! நீங்கள் படிச்சனிங்கள்தானே. நீங்களே இப்பிடிச் சொன்னால்...! உங்கடை தம்பி மட்டும் படிக்கோணும். மற்றவங்கள் படிக்கத் தேவையில்லையோ? அவங்களுக்கும் அக்காமாரும் அம்மாமாரும் இருக்கினம் தானே! ஒவ்வொரு அம்மாமாரும் அழுது தடுத்தால் போராட ஆர் வருவினம்?"



"..................."



"அக்கா நீங்கள் என்னை மனசோடை துணிவோடை அனுப்போணும். "



அதுக்கு மேல் என்னால் பேச முடியவில்லை. மீண்டும் எங்கள் பேச்சு இயல்புக்கு மாறி நாங்கள் சிரித்துக் கொண்டிருக்கும் போது "அக்கா...! என்ரை கறுத்த ரவுசரை அயர்ண் பண்ணி வையுங்கோ. நாளைக்கு போட்டோ (Phழவழ) எடுக்கிறதாம். " என்றான்.



"ஏன் போட்டோ? " நானும் தங்கைமாரும் கோரஸாகக் கேட்டோம்.



"நான் செத்தால் நோட்டீசிலை போடுறதுக்கு. " அவன் மிகவும் சாதாரணமாகச் சொன்னான். அப்படியே எங்கள் சிரிப்பு அடங்க நாங்கள் மௌனமாகி விட்டோம். மனசு மட்டும் திக்கிட்டது. ஏதோ ஒரு பயப் பந்து நெஞ்சுக்குள் உருள்வது போலிருந்தது.



அன்று அவன் அப்போது போய்விட்டான். இரவு வந்து நியாயவிலைக்கடைக் காசை எண்ணி என்னிடம் தந்தான்.

"ஏன் எண்ணித் தாறாய்? என்னிலை உனக்கு நம்பிக்கையில்லையோ? " செல்லமாகக் கேட்டேன்.



"அக்கா எனக்கும் உங்களுக்குமிடையிலை அன்பைத் தவிர வேறையொண்டுமே

இல்லை. அது எனக்குத் தெரியும். ஆனால் இந்தக் காசிருக்கே. இது என்ரையில்லை. இது எங்கடை நாட்டின்ரை காசு. அதை நான் உங்களிட்டைத் தரக்கிளையும் சரி, வாங்கக்கிளையும் சரி எண்ணிறதுதான் நல்லது."

மூச்சு விடாமல் சொன்னான்.



என்னை விடப் பத்து வயது குறைந்தவனின் பொறுப்பான பேச்சில் ஆச்சரியமும் பெருமையும் என்னை ஆட்கொள்ள, எண்ணிய காசைப் பையில் போட்டு எனது அறையினுள் வைத்து விட்டு "சாப்பிடன்" என்றேன்.



"குளிச்சிட்டு வாறன்." என்றான்.



குசினிக்குள் போனேன். அடுப்பில் தணல் இருந்தது. குழம்புச் சட்டியை அடுப்பில்

வைத்து விட்டு, பிரட்டலை குக்கரில் வைத்து, குக்கரைப் பற்ற வைத்தேன். மண்(ணெண்)ணெய் மணம் பக் கென்று வந்து போனது.



"அக்கா...!" கூப்பிட்டான்.



"என்னடா?"



"என்ரை முதுகைத் தேய்ச்சு விடுங்கோ."



"சாமம் பன்ரெண்டு மணிக்கு கிணத்தடியிலை நிண்டு உனக்கு முதுகு தேய்க்கோணுமோ?!"



"என்ரை அக்கா இல்லே.........!"



லக்ஸ் சோப்பைப் போட்டுத் தேய்த்து விட்டேன். கிணற்றில் அள்ளி அள்ளி ஊற்றி ஊற்றிக் குளித்தான்.



"இஞ்சபார்! கெதிலை குளிச்சு முடி. ஷெல் வந்து கிணத்தடியிலை விழுந்தால் எல்லாம் சரியாப் போடும்." பருத்தித்துறைக் கடலில் இருந்து ஓயாது பறந்து கொண்டிருந்த ஷெல் தந்த பயத்தில் நான் அவனை அவசரப் படுத்தினேன்.



சாப்பாட்டைக் கொடுக்க அவன் ஆசை ஆசையாக அள்ளிச் சாப்பிட்ட போது எனது கண்கள் பனித்தன. "போகும் போது படுத்து நல்ல நித்திரை கொள்ளோணும் போலை இருக்குதக்கா." என்றான்.



"அப்ப கொஞ்சம் படன்."



"இல்லை நான் போய் சென்றிக்கு நிண்டு கொண்டு வெள்ளையை விடோணும்."



"நித்திரை தூங்கிப் போடுவாய்........!"



"படுத்தாத்தானே நித்திரை கொள்ளுறது.......!"



"இண்டைக்கு எந்தப் பக்கம்.........?"



"ஆலடிப் பிள்ளையார் கோயிலுக்கு அங்காலை இருக்கிற பனங்காணிக்குள்ளை பனைக்குப் பின்னாலை நிற்பன்." அதை மட்டும் மிகவும் குசுகுசுப்பாக என் காதுக்குள் சொன்னான்.



தொடர்ந்து "நித்திரை வராது...... பகலெண்டால் ஆராவது தேத்தண்ணி கொண்டு வந்து தருவினம்." என்றான்.



"கால் நோகாதே...?" அக்கறையோடு கேட்டேன்.



"கால் நோகுமெண்டு சொல்லி நாங்கள் நிக்காட்டி ஆமி உள்ளை பூந்திடுவான் இல்லே. உங்களைப் போல எத்தினை அக்காமார் எங்களை நம்பி வீடுகளுக்குள்ளை இருக்கினம்." என்றான். உடனே, சில மாதங்களின் முன் ஆலடி வீடுகளுக்குள் புகுந்த ஆமி ஒரே நாளில் எழுபது பெண்களை மானபங்கப் படுத்திய வெறித்தனம் என் நினைவில் வந்து என் உடல் ஒரு தரம் நடுங்கியது.



"அக்கா என்ன யோசிக்கிறீங்கள்? நான் வெளிக்கிடப் போறன். நாளைக்கு வருவன். அந்தக் கறுத்த ரவுசரை எடுத்து ரெடியா வையுங்கோ. நல்ல சேர்ட்டும்

வையுங்கோ. நோட்டீசிலை படம் வடிவா வரோணும்." என் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்த்தபடி சொன்னான்.



பிறகு என்னைக் கனிவாகப் பார்த்தபடி

"அக்கா நான் ஏன் இப்பிடிச் சொல்லுறன் தெரியுமே! ஒண்டும் சொல்லாமல் நான் செத்துப் போட்டன் எண்டால் உங்களாலை தாங்கேலாது. சாவு என்னை எந்தக் கணத்திலும் தழுவலாம். அதைத் தாங்க நீங்கள் இப்ப இருந்தே உங்களைத் தயார் படுத்தி வைச்சிருக்கோணும். அம்மாவையும் நீங்கள்தான் தயார் படுத்தி வைச்சிருக்கோணும். என் சாவு உங்களை வருத்தக் கூடாது. அக்கா...! உங்கடை கண்ணிலை இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரக்கூடாது. அதுதான் என்ரை ஆசை." சொல்லிக் கொண்டே சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டான்.



அடுத்த நாள் காலை வந்து அழகாக வெளிக்கிட்டுக் கொண்டு, நியாயவிலைக் கடைக் காசுடன் புறப்பட்டான். போகும் போது "ரவியையும் இண்டைக்கு போட்டோ எடுக்கினம். போட்டோ எடுத்து முடிய அவனோடை வருவன். ரவிக்கு வடை விருப்பம். ஏலுமெண்டால் சுட்டு வையுங்கோ." என்று சொல்லிக் கொண்டே போனான்.



அவன் போய் சில மணி நேரங்களில் கிரனைட்டுகளும், ஷெல்களும் துப்பாக்கி வேட்டுக்களுமாய் ஒரே சத்தம்.



"அந்தக் குறுக்கால போவார் வெளிக்கிட்டிட்டாங்கள் போலை கிடக்கு." அப்பாச்சி தன் ஆத்திரத்தையும் எரிச்சலையும் வார்த்தையில் காட்டினா.

பருத்தித்துறையே அல்லோலகல்லோலப் பட்டது. சென்றிக்கு நிற்கும் பிள்ளைகளின் வீடுகளிலெல்லாம் அன்று உலை கொதிக்கவில்லை. மனம் பதைக்க பெற்றவரும் உற்றவரும் பிள்ளைகளின் வரவுக்காய் வாசலில் காத்திருந்தார்கள்.



நீண்ட காத்திருப்பின் பின் எம் நெஞ்சம் குளிர தம்பி வந்தான். மீண்டும் உயிர் வந்தது போல் நாம் பெருமூச்சு விட்டோம். ஆனால் அவன் சோர்ந்து போயிருந்தான். எதையோ பறி கொடுத்தவன் போல் வெறித்துப் பார்த்தான்.



"என்னடா...!" தங்கைதான் கேட்டாள்.



"ரவி பேயிட்டான்...!" வார்த்தைகளோடு உணர்வும் வெடித்துச் சிதற குலுங்கியழுதான். களத்தில் புலியாகப் பாய்பவனின் இளகிய மனம் கண்டு நாமும் அழுதோம்.



திடீரென்று ஒளிப்பிரவாகம். ஓலி பெருக்கி முழங்கியது.

"தொடர்ந்து... மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஈகைச்சுடரேற்றி மாவீரருக்கு அஞ்சலி செய்வார்கள்."



"அக்கா உங்கடை கண்ணிலை இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரக் கூடாது."

என் பிரிய தம்பியின் வார்த்தையை மீறி என் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.



நான் 1985 இலிருந்து 2000 இற்கு மீண்டு ஈகைச்சுடரேற்றும் வரிசையில் ரோஜா மலருடன் நகர்ந்தேன்.



மாவீரர்களின் மத்தியில் என் தம்பியும் அழகாய்...!

அவன் கண்கள் என்னையே ஊடுருவிப் பார்த்து அழாதையுங்கோ அக்கா. என்று

சொல்வது போல்...!



சந்திரவதனா

யேர்மனி

2000




பிரசுரம் - ஈழமுரசு (மாவீரர்சிறப்பிதழ் 2001)

Friday, July 09, 2004

சுமை தாளாத சோகங்கள்!

பருத்தித்துறைப் பிரதேசப்பொறுப்பாளர் கப்டன்மொறிஸின் நினைவாக



வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய் தகப்பன்மாரும் நிற்கினம்.



இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார். இண்டைக்கென்ன ஐந்து மணியாகியும் காணேல்லை.



யன்னலாலை அவர் வாற வழியைப் பார்த்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறன். வருகிற பாடாவே தெரியேல்லை. - நல்லா வேலை கொடுத்திட்டாங்களோ? -

பிள்ளையளும் ரியூசனுக்குப் போயிட்டினம்.



மே மாதம் என்ற படியால் பனி போய் வெய்யிலும் வந்திட்டுது. இந்த யேர்மன் சனம் வெய்யிலைக் கண்டால் வீட்டுக்குள்ளையே இருக்காதுகள். எப்பவும் வெளியிலைதான் நிக்குங்கள்.



எனக்கென்னவோ யேர்மனிக்கு வந்து மூன்று வருசமாகியும் ஒண்டிலையும் மனசு ஒட்டமாட்டனெண்டுது. நான் 10.5.1986 இலை யேர்மனிக்கு வந்தனான். இண்டைக்கு கலண்டர் 2.5.1989 எண்டு காட்டுது. இந்த மூன்று வருசத்திலையும் இந்த மனசு எப்பிடி எப்பிடியெல்லாம் கிடந்து தவிக்குது. என்ரை மூன்று பிள்ளையளையும் என்ரை கணவரையும் விட்டால் வேறை ஒண்டையுமே எனக்கிங்கை பிடிக்கேல்லை.



எப்பவும் ஊரிலை விட்டிட்டு வந்த தம்பிமாரையும், தங்கச்சிமாரையும், அண்ணனையும், அப்பா அம்மாவையும்தான் மனசு நினைச்சுக் கொண்டு இருக்குது.



எப்பிடிச் சொன்னாலும் நான் ஒரு சுயநலக்காரிதான். எனக்கு மனசு வந்ததுதானே! அதுகளை அங்கை விட்டிட்டு இங்கை மட்டும் ஓடிவர. இப்ப இருந்து புலம்பிறன்.

என்ன பிரயோசனம்..!



எனக்கு அங்கை போகோணும். அம்மான்ரை முகத்தைப் பார்க்கோணும். தங்கைச்சிமாரோடை சினிமாப்பாட்டிலை இருந்து அரசியல் வரை எல்லாத்தைப் பற்றியும் அரட்டை அடிக்கோணும். முக்கியமாக தம்பியைப் பிடிச்சு, கட்டிப் பிடிச்சுக் கொஞ்சோணும்.



அவனை இந்தியன் ஆமியள் தேடுறாங்களாம். "அவன் எங்கே..?" என்று கேட்டுக் கேட்டு என்ரை சகோதரங்களை மட்டுமில்லை. ஊர்ச்சனங்களையெல்லாம் சித்திரவதைப் படுத்திறாங்களாம். தங்கைச்சிதான் இதெல்லாம் எனக்கு எழுதிறவள்.



நேற்றும் சாமத்திலை கனவிலை தம்பிதான். அவன் சாப்பிடுறதுக்கெண்டு மேசையிலை இருக்க, அம்மா சோறு போட்டுக் கொண்டிருக்க, ஆமி வந்திட்டான் போலையும், தம்பி சாப்பிடாமலே ஓடுற மாதிரியும் கனவு. நான் முழிச்சிட்டன். எனக்கு ஒரே அழுகையா வந்திட்டுது.



எத்தினை நாளைக்கெண்டுதான் என்ர தம்பிமார் சாப்பிடாமல், குடியாமல், நித்திரை கொள்ளாமல் ஓடித் திரியப் போறாங்கள். கடவுளே..! எல்லாத்தையும் நிற்பாட்டு. என்ரை தம்பிமார் மட்டுமில்லை. எல்லாப் பிள்ளையளும் வீட்டுக்குப் போயிடோணும்.



தலைக்கு மட்டும் தலேணி (தலையணி) இருந்தால் போதாதெண்டு காலுக்கொரு தலேணி, கையுக்கொரு தலேணி எண்டு வைச்சுப் படுக்கிறவங்கள் என்ரை தம்பிமார். இப்ப எங்கை...! எந்தக் கல்லிலையும் முள்ளிலையும் படுக்கிறாங்களோ..?!



நான் போகோணும். அவங்களோடை வாழோணும். எனக்கு அடக்கேலாமல் அழுகை வந்திட்டுது. விக்கி விக்கி அழத் தொடங்கீட்டன். சத்தத்துக்கு இவர் எழும்பீட்டார்.



"என்ன இப்ப நடந்திட்டுதெண்டு இப்பிடி அழுறாய்..?" ஆதரவாய்த்தான் கேட்டார்.



"நான் போப்போறன் ஊருக்கு. எனக்கு அம்மாவைப் பார்க்கோணும். பரதனைப் பிடிச்சுக் கொஞ்சோணும் போலை இருக்கு."



"என்ன இப்பிடிப் பைத்தியக் கதை கதைக்கிறாய். இப்ப அங்கை போயென்ன சாகப் போறியே? நீயாவது இங்கை இருக்கிறாயெண்டு கொம்மாவும் கொப்பரும் எவ்வளவு நிம்மதியா இருப்பினம்."



" ................... "



"இன்னும் ஒரு வருசத்திலை பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடும். அதுக்குப் பிறகு நாங்களேன் இங்கை இருக்கப் போறம். அஞ்சு பேருமாப் போவம்.

இப்பப் படு. நாளைக்கு நேரத்துக்கு எழும்போணும் எல்லோ!"



"ஓம்" எண்டு சொல்லிப் படுத்திட்டன். ஆனால் நித்திரையே வரேல்லை. கண்ணை மட்டும் மூடிக் கொண்டு படுத்திருந்தன். மனசு மட்டும் அப்பிடியே கொட்டக் கொட்ட விழிச்சுக் கொண்டு இருந்திச்சு.



"என்ரை தம்பிமாரைக் காப்பாற்று. அம்மா அப்பா தங்கைச்சிமாருக்கு ஒண்டும் நடந்திடக் கூடாது. எல்லாரையும் காப்பாற்று." எண்டு மனசு எல்லாத் தெய்வங்களையும் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகு எப்படியோ நித்திரையாகீட்டன்.



காலைமை எழும்பி இவரையும் வேலைக்கு அனுப்பி, பிள்ளையளையும் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிப் போட்டன். எனக்கு வேலை செய்ய அனுமதி இல்லை. இந்த நகரத்தையும் விட்டு ஒரு இடமும் போகக் கூடாது. எனக்கு அதிலையெல்லாம் கவலை இல்லை. கவலையெல்லாம் ஊரிலை இருக்கிற என்ரை உறவுகளைப் பற்றித்தான். எண்டாலும் களவா ஒரு ஸ்ரூடியோ(Studio) விலை இரண்டு மூன்று மணித்தியாலங்கள் வேலை செய்யிறன். Workpermit இல்லாமல் வேலை தர அந்த லேடி பஞ்சிப் பட்டவதான். பிறகு ஏதோ ஓமெண்டு தந்திட்டா. நல்லவ. பிள்ளையள் பள்ளிக்கூடத்தாலை வரமுன்னம் வேலையை முடிச்சிட்டு ஓடி வந்து சமைச்சுப் போடுவன்.



என்னையறியாமலே என்ரை கண்கள் அவர் வாறாரோ எண்டு யன்னலுக்காலை பார்த்துக் கொண்டுதான் இருந்தன.



பார்த்துக் கொண்டிருக்கவே அவர் வாறார்.

என்ன...! ஒரு மாதிரி தளர்ந்து போய் வாறார். பாவம், நல்லா வேலை வாங்கிப் போட்டாங்களோ! ஊரிலை எத்தினை பேரைத் தனக்குக் கீழை வைச்சு வேலை வாங்கினவர். இங்கை வந்து இவங்களுக்குக் கீழை......!



ஏன் இப்பிடியெல்லாம் நடந்தது? ஏன் இந்த யேர்மனிக்குக் தனியாக வந்து சேர்ந்தம். எல்லாம் ஏதோ பிரமையாய்.... நம்ப முடியாததாய்.....

எனக்கு ஓடிப் போய் அம்மான்ரை மடியிலை முகத்தை வைச்சு அழோணும் போலை இருக்கு. அம்மா முதுகைத் தடவி தலையைக் கோதி விடுவா.

அப்பான்ரை கையைப் பிடிச்ச படி கதைச்சுக் கொண்டு ஊரெல்லாம் சுத்தோணும் போலை ஆசை ஆசையா வருது.



எங்கையாலும் போட்டு வந்தால் "அக்கா களைச்சுப் போட்டியள். இந்தாங்கோ இதைக் குடியுங்கோ." என்று தங்கைச்சிமார் ஏதாவது குடிக்கத் தருவினம். அந்த அன்பு வேணும் எனக்கு. அதிலை நான் குளிக்கோணும்.



மனசு சொல்லுக் கேளாமல் அடம் பிடிச்சுக் கொண்டு ஊரையும் உடன் பிறப்புக்களையும் சுற்றிச் சுற்றிக் கொண்டே நிற்குது.



இப்பிடியே நான் மனசை அலைய விட்டுக் கொண்டிருக்க இவர் வீட்டுக்குள்ளை வந்திட்டார். நான் என்ரை கவலையொண்டையும் இவருக்குக் காட்டக் கூடாதெண்டு - டக்கெண்டு - சிரிச்சுக் கொண்டு "என்ன வேலை கூடவே! லேற்றா வாறிங்கள்!" எண்டு கேட்டுக் கொண்டே குசினிக்குள்ளை போய் - ரீ(Tea) - (தேநீர்) யைப் போட்டன்.



ரீ யோடை வெளியிலை வந்து பார்த்தாலும் இவர் ஒரு மாதிரித்தான் இருக்கிறார். வழக்கம் போலை முஸ்பாத்தியும் விடேல்லை. சிரிக்கவும் இல்லை.

இவர் இப்பிடி இருக்க மாட்டார். முஸ்பாத்தி விடுவார். இல்லாட்டி கோபப் படுவார். கவலைப் படுற மாதிரி எல்லாம் காட்ட மாட்டார். இண்டைக்கென்ன நடந்திட்டு? ஏன் இப்பிடி இருக்கிறார். சரியாக் கதைக்கவும் மாட்டாராம்.

நான் இவற்றை மூட் (Mood) ஐ நல்லதாக்க பிள்ளையளின்ரை பகிடியளைச் சொல்லிப் பார்த்தன். கிண்டர் கார்டன் ரீச்சர் சொன்ன கதையளையும் சொல்லிப் பார்த்தன். ஒண்டுக்கும் மாற மாட்டாராம். அப்பிடியே இருக்கிறார்.



இப்ப ஏதோ சொல்ல வாறார் போலை இருக்கு. நான் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தன்.



"பரதன் போயிட்டான்." என்றார்.

எனக்கொண்டுமே புரியேல்லை.



"பரதன் எங்களையெல்லாம் விட்டிட்டுப் போயிட்டான்." என்றார் மீண்டும்.

இப்ப எனக்கு எதுவோ உறைத்தது. சடாரென்று ஆரோ என்ரை நெஞ்சிலை சுத்தியலாலை ஓங்கி அடிச்சது போலை இருந்தது.



அப்படியே நெஞ்சைப் பிடிச்சுக் கொண்டு நான் இருந்திட்டன்.

"என்ரை தம்பி.....! பரதா.....!

போயிட்டியோ.....!"

இப்ப அழத் தொடங்கீட்டன்.

இருக்காது. அவன் செத்திருக்க மாட்டான். அவனை நான் பார்க்கோணும்.

ஏதோ ஒரு நப்பாசையோடை இவரைப் பாhர்த்தன். என்ன செய்யிறதெண்டு தெரியாமல் அப்பிடியே இருக்கிறார்.

"உண்மையான நியூஸ்தானோ அது?" இவரைக் கேட்டேன்.

இல்லையெண்டு சொல்ல மாட்டாரோ என்ற பயமும் எதிர் பார்ப்பும் ஏக்கமும் நிறைந்த அவா எனக்குள்.



"தகவல் நடுவச் செய்திகளிலை அப்பிடித்தான் சொல்லுறாங்கள். பிழையான செய்தியாயும் இருக்கலாம்." இவர் இப்ப என்னை ஆறுதல் படுத்தச் சும்மா சொன்னார்.



எனக்கு அவன் செத்திட்டான் எண்டு நம்பவே ஏலாதாம். நானும் தகவல் நடுவங்களுக்கு அடிச்சுப் பார்த்தன். புனைபெயர், அப்பான்ரை பெயர், வயது எல்லாம் சரியாகச் சொல்லுறாங்கள்.

- மே முதலாந்திகதி பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் மொறிஸ் இந்திய இராணுவத்துடன் நேரடியாக மோதி வீரமரணமடைந்து விட்டார். - எண்டு சொல்லுறாங்கள். பருத்தித்துறையெல்லாம் கர்த்தாலாம். கதவடைப்பாம். கறுப்புக் கொடியாம்.



கடவுளே..! இந்தச் செய்தியெல்லாம் பொய்யா இருக்கோணும்.



நான் பள்ளிக்கூடத்தாலை வீட்டை மத்தியானம் சாப்பிடப் போற பொழுது அப்பிடியே தவண்டு வந்து "மூ..மூ......த்தக்கா" என்று கொண்டு அஞ்சு விரலையும் என்ரை வெள்ளைச் சட்டையிலை பதிச்சிடுவான். நான் அவனைத் து}க்கி கட்டிப் பிடிச்சுக் கொஞ்சுவன். அம்மாதான் "வெள்ளைச்சட்டை ஊத்தையாகுது." என்று கத்துவா.



எனக்குப் பத்து வயசாயிருக்கிற பொழுதுதான் பிறந்தவன். அவன் பிறந்த உடனை அப்பாவோடை மந்திகை ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்த்தனான். பஞ்சு மாதிரி இருந்தவன். என்ரை விரலைக் குடுக்க அப்பிடியே இறுக்கிப் பொத்தி வைச்சிருந்தவன். அப்பா- அம்மாவோடை கதைச்சுக் கொண்டிருக்க நான் அவனைத்தான் பார்த்துக் கொண்டும், தொட்டுக் கொண்டும் இருந்தனான். எனக்கு அவனை விட்டிட்டுப் போகவே மனம் வரேல்லை.



வோச்சர் வந்து "ஆறு மணியாச்சு. எல்லாரும் போங்கோ." எண்டிட்டான்.

அப்பா அவன்ரை கையுக்குள்ளை இரண்டு ரூபாவைத் திணிச்சு விட்டார். இன்னும் கொஞ்ச நேரம் நிற்க விட்டான்.



எனக்கு அப்பாவோடை வீட்டை திரும்பிப் போற பொழுதும் அவன்ரை மெத்தென்ற பாதம்தான் நினைவுக்குள்ளை இருந்தது. சுருட்டை மயிரோடை எவ்வளவு வடிவாயிருந்தவன்.



இப்ப அவன் இந்த உலகத்திலையே இல்லையோ......! நெஞ்சு கரைஞ்சு கண்ணீராய் ஓடிக் கொண்டே இருந்திச்சு.



முதன் முதலா அவன் நடக்கத் தொடங்கின பொழுது எவ்வளவு சந்தோசமாய் இருந்திச்சு. கொஞ்சம் வளர்ந்தாப் போலை, இரவு படுக்க வைக்கிற நேரத்திலை

"மூத்தக்கா கதை சொல்லுங்கோ." எண்டு அடம் பிடிப்பான். ஒவ்வொரு நாளும் சொல்லிச் சொல்லி எனக்குத் தெரிஞ்ச கதையெல்லாம் முடிஞ்சிடும்.

"மூத்தக்கா கதை சொல்லுங்கோ. இல்லாட்டிப் படுக்க மாட்டன்." என்பான்.



பிறகு நானே இயற்றி இயற்றிக் கதையெல்லாம் சொல்லுவன். அப்பிடியே என்னை இறுக்கிக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு நித்திரையாப் போடுவான்.



இப்ப எனக்கு அவனைக் கட்டிப் பிடிக்கோணும் போலை ஒரே அந்தரமா இருக்குது. நெஞ்செல்லாம் ஏக்கமா இருக்கு. அவனைப் பார்க்கோணும். நிறையக் கதைக்கோணும். மூத்தக்கா என்று கூப்பிடுறதைக் கேக்கோணும். அப்பிடியே பல்லெல்லாம் காட்டிக் குழந்தையா சிரிப்பானே. அதைப் பார்க்கோணும்.



கடவுளே.....! இனி இதெல்லாம் ஏலாதே!



உலகத்துச் சோகமெல்லாம் எனை அழுத்த எனக்கு அழுகை அழுகையாக வந்து கொண்டே இருக்குது.



இன்னும் வளர்ந்தாப் போலை எப்பிடியெல்லாம் முஸ்பாத்தி விடுவான். நான் அவனுக்குச் சொன்ன கதையெல்லாம், அவன் என்ரை பிள்ளையளுக்குச் சொல்லுவான். அவசரத்துக்கு என்சை; சைக்கிளிலை கூட ஏத்திக் கொண்டு போவான். என்ரை பிள்ளையளோடை எப்பிடியெல்லாம் செல்லங் கொஞ்சுவான்.



தம்பி....! அவன் செத்திருக்க மாட்டான். நான் எத்தினை கடவுள்களையெல்லாம் மன்றாடினனான். அப்பிடி நடந்திருக்காது.



அவனையே நினைச்சு நினைச்சு அழுது அழுது கண்ணீர் ஆற்று நீரின்ரை கணக்கிலை ஓடிக் கொண்டே இருக்குது. வத்தவேயில்லை.



எனக்கு இப்ப அப்பா, அம்மா, தங்கைச்சிமார் எல்லாரையும் கட்டிப் பிடிச்சு அழோணும் போலை இருக்கு. ரெலிபோன் கூட பருத்தித்துறைக்கு அடிக்கேலாது.



தம்பியின்ரை மறைவிலை அம்மா, அப்பா, எல்லாரும் எப்பிடி அழுவினை எண்டு நினைக்க எனக்கு இன்னும் அழுகை கூடவாய் வருது. எனக்கு ஒண்டையும் தாங்கேலாதாம். "பரதா....! என்னட்டை ஒருக்கால் வாடா!" மனசுக்குள் அவனைக் கூவி அழைச்சேன்.



படுக்கையறைக்குள் ஏதோ சரசரத்துக் கேட்டிச்சு. ஆவியோ....! மனசு பரபரக்க ஓடிப்போய் படுக்கையறையைப் பார்த்தன். நேற்று முன்தினம் சின்னவன் கிண்டர்கார்டனிலிருந்து ஈயப் பேப்பரிலை வெட்டின ஒரு படம் கொண்டு வந்து தந்தவன். அதை லைற்றிலை கொழுவி விட்டனான். அதுதான் யன்னலாலை வந்த காத்துக்கு ஆடிக் கொண்டிருந்திச்சு. எனக்கு ஒரே ஏமாற்றமாய் போட்டுது.



அடுத்த நாள் இவர் வேலைக்குப் போகாமல் நிண்டு மத்தியானம் சமைச்சுப் போட்டு சாப்பிடச் சொல்லி கோப்பையிலை போட்டும் தந்தார். எனக்கு ஒரு வாய் வைக்கவே தம்பி இந்த உலகத்திலையே இல்லை எண்ட நினைவிலை அழுகை வந்திட்டுது. உப்புக் கரிச்சது.



"இங்கை பார். அவன் மாவீரனாப் போயிருக்கிறான். நீ அழக் கூடாது. நீ இப்பிடியே அழுது கொண்டிருந்தால் நானும் வேலைக்குப் போக, பிள்ளையளை ஆர் பார்க்கிறது?" இவர் என்னைப் பேசினார்.



அவர் சொல்லுறது சரிதான். அதுக்காண்டி அழுகை நிண்டிடுமோ! இல்லை என்ரை சோகம்தான் வடிஞ்சிடுமோ!



சும்மா சும்மா சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் எத்தினை தரம் கவலைப் பட்டிருப்பன். அழுதிருப்பன். இப்பதான் தெரியுது அதெல்லாம் ஒண்டுமே இல்லையெண்டு.

சாவைப் போல சோகம் வேறையொண்டும் இல்லை. யாராவது தெரியாதவர்கள் செத்தாலே கவலைப் படுறம். இளம் போராளிப் பிள்ளையள் செத்ததைக் கேட்டாலே வயிறு கொதிக்குது. மனசு பதைக்குது. இந்தக் கவலையளும் சோகங்களும் எல்லாருக்கும் தெரியும். ஏன் எல்லாரும் அனுபவிச்சுமிருப்பினம். நானும் அனுபவிச்சிருக்கிறன்.



மில்லர் போலை ஒவ்வொரு கரும்புலியும் மரணத்தைக் குண்டுகளாய் உடம்பிலை கட்டிக் கொண்டு சிரிச்சுக் கொண்டு கை காட்டிப் போட்டுப் போறதை, அவையள் வெடிச்ச பிறகு வீடியோ(Video) விலை பார்க்கிற பொழுது அப்பிடியே மனசைப் பிய்ச்சுக் கொண்டு சோகம் கண்ணீராய்க் கொட்டும். இந்த அனுபவமெல்லாம் எனக்கு மட்டுமில்லை எல்லாருக்கும் இருக்கும்.



ஆனால் இந்த சோகத்தையெல்லாம் அப்பிடியே முழுங்கி விடுற அளவு சோகமும் உலகத்திலை இருக்குதெண்டு எல்லாருக்கும் தெரியாது. அதை அனுபவிச்சவைக்கு மட்டுந்தான் தெரியும்.

உங்களுக்குப் பிரியமானவை யாராவது செத்தவையோ?

பிரியமானவை எண்டு மிகமிகப் பிரியமான யாராவது.......!

அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தம்பி, தங்கை.......!

இப்பிடி யாராவது.....?



அப்பிடியென்றால் உங்களுக்கும் புரியும். என்ரை அந்த சோகத்திலை ஒரு இத்தனு}ண்டு சோகத்தைத்தான் நான் சொல்லியிருக்கிறன் எண்டு. மிச்சம் சொல்லேலாது. உணரத்தான் முடியும்.



மரணத்தின் முன்னால் மற்றதெல்லாம் பூச்சியம்தான். அதை நான் என்ரை தம்பி என்னை விட்டுப் போன பொழுதுதான் முழுமையாக உணர்ந்தன்.



இத்தனை து}ரம் மனசு அழுது அழுது அவலப் பட்டுக் கொண்டிருக்கிற பொழுதும் நு}லிழையிலை ஒரு நம்பிக்கை தொங்கிக் கொண்டிருந்திச்சு. - தம்பி சாகேல்லையெண்டு தங்கச்சி எழுதின கடிதமொண்டு ஊரிலை இருந்து வருமெண்டு! -



அந்த நம்பிக்கை நு}லைப் பிடிச்சுக் கொண்டு நடக்கையில், இருக்கையில், படுக்கையில், பயணிக்கையில்..... என்று எந்த நேரமும் நினைவுகளுக்குள்ளேயே மூழ்கி, அழுத விழிகளைத் துடைக்க மறந்து, ஏதோ ஒரு உலகத்திலை நான் வாழ்ந்து கொண்டு இருக்கிற பொழுதுதான் - சரியா 21 ம் நாள்



கூட வந்த தோழர்களிற்கு

ஓட வழி செய்து விட்டு

தனித்திரண்டு புலிகளுடன்

களத்தினிலே போராடி

பாரதத்துப் பேய்களது

பாவரத்தம் களம் சிதற

கோரமுடன் படை சரித்து

எம் தம்பி

வீரமுடன் மண் சாய்ந்து விட்டான் - என்று எனது தங்கைச்சி எழுதிய கடிதம் என்னை வந்தடைந்தது.



அது இன்னுமொரு சுமை தாளாத சோகம் நிறைந்த நாள்.



சந்திரவதனா

யேர்மனி

1999