Thursday, November 18, 2004

அவள்

நடுரோட்டில் நின்றவள் என்னைக் கண்டதும் ஓடி வந்து கையைப் பிடித்தாள். தனது கணவனை ஜெயிலில் இருந்து விடுவித்துத் தரும்படி மன்றாடினாள். அவள் யாரென்பதையே அவளைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன். அடையாளமே தெரியாமல் உரு மாறிப் போயிருந்தாள். உதடுகள் வெடித்துக் காய்ந்து கருமை பேர்ந்திருந்தன. கண்கள் சோபை இழந்து சோகத்துக்குச் சொந்தமாகியிருந்தன. கன்னங்கள் ஒட்டி உலர்ந்திருந்தன. பன்னிரண்டு வருடங்களின் முன் நான் சந்தித்த மதுதான் இவளென்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது.



அழகிய ஓவியம் போல, அன்று என்னைத் தனது நான்கு வயது மகளுடன் சந்தித்தவள் இன்று ஏன் இப்படிக் காய்ந்த சருகு போலானாள் என்ற கேள்வி என்னுள் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. திடீரென சனநாடமாட்டம் மிக்க தெருவென்றும் பாராது உரத்து அழத் தொடங்கி விட்டாள். கன்னங்களில் பொலபொலவென்று வழிந்த கண்ணீர் என்னையும் கலங்க வைத்தது.



"அழாதைங்கோ. என்னெண்டு சொல்லுங்கோ. நான் ஹெல்ப் பண்ணுறன்."



"எனக்கு அவரைப் பார்க்கோணும். எல்லாருமா என்னை ஏமாத்தி கையெழுத்து வேண்டிப் போட்டு அவரை ஜெயிலிலை போட்டிட்டினம். எல்லாரும் பொய். எனக்கு அவரைப் பார்க்கோணும். அவர் அப்பிடிச் செய்திருக்க மாட்டார். குமுறினாள். குழறினாள்."



எனக்கு சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பது போன்றதான உணர்வு. என்ன நடந்திருக்கும்..? ஏன் இப்படிப் பேசுகிறாள். எப்படி சாருகன் ஜெயிலுக்குப் போயிருப்பான்? நாட்டிலிருந்து ஆட்களை வெளிநாட்டுக்கு அழைத்து வரும் ஏஜென்சி வேலை பார்த்திருப்பானோ?



எதுவானாலும் பேசுவதற்கு இதுவல்ல இடம். போவோரும் வருவோரும் என்னையும் அவளையும் ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டு சென்றார்கள். என்னைத் தெரிந்த சிலர், முகங்களில் கேள்விக்குறி தொக்க பார்வைகளை ஏளனம் கலந்து வீசிச் சென்றார்கள். இன்னும் சிலரோ இரக்கமாகப் பார்த்துச் சென்றார்கள்.



"வாங்கோ நாங்கள் அந்தக் தேநீர்க்கடைக்குள் போயிருந்து கதைப்பம்."



"எனக்குக் தேநீரும் வேண்டாம். ஒண்டும் வேண்டாம்."



"இஞ்சை பாருங்கோ. எல்லாரும் ஒரு மாதிரி எங்களைப் பார்க்கினம். கொஞ்சம் குளிராயும் இருக்கு. உள்ளை போயிருந்து ஆறுதலாக் கதைப்பம்." அவளது கையைப் பிடித்து இழுக்காத குறையாக அந்தத் தேநீர்க்கடைக்குள் அழைத்துச் சென்றேன். கூடவே அவளது நான்கு வயது மகனும் அவளது சுவெற்றரைப் பிடித்தபடி உள் நுழைந்தான். அவனது வாயைச் சுற்றி அவன் காலையில் சாப்பிட்ட சாப்பாடு வெண்மையாகப் படிந்து காய்ந்து போயிருந்தது. பார்ப்பதற்கு துப்பரவின்றி இருந்த அவனது தோற்றத்தை யேர்மனியர்கள் முகத்தைச் சுளித்த படி பார்த்தார்கள்.



கபேற்றறியாவின் உள்ளே ஒரு மூலையில் இடம் பிடித்துக் கொண்டேன். மது இப்படிப் பட்டவள் அல்ல. பன்னிரண்டு வருடங்களின் முன் சந்தித்த போது மகளை மிகவும் நேர்த்தியாக வைத்திருந்தாள். இப்போ என்ன நடந்தது? என் வீட்டுக்குக் கூட ஓரிரு தடவைகள் மகளோடு வந்திருக்கிறாள். பட்டுப் போல இருந்த அந்தக் குழந்தைக்கு இப்போ பதினாறு வயதாகியிருக்கும். அவள் எங்கே? கணப்பொழுதுக்குள் மனசுக்குள் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் எழுந்தன.



மது எங்கோ வெறித்துப் பார்ப்பதுவும், மீண்டும் மீண்டுமாய் அழத் தொடங்குவதுமாய் இம்சைப் படுத்தினாள். பார்க்கப் பாவமாய், பரிதாபமாய்த் தெரிந்தாள். அவளை ஆசுவாசப் படுத்தி சரியான முறையில் கதைக்கத் தொடங்குவதற்கிடையில் எனக்குப் போதும் போதுமென்றாகி விட்டது.



"என்ன நடந்தது? ஏன் சாருகன் ஜெயிலுக்குப் போனவர்?"



"அவர் சரியான குடி. குடிச்சால் அவருக்குக் கண்மண் தெரியிறேல்லை.

குடிச்சுப் போட்டு எனக்கு அடிக்கிறதாலை...



"அடிக்கிறது பிழைதான். அதுக்கு இங்கை தண்டனையும் கிடைக்கும். ஆனால் இவ்வளவு காலத்துக்கு ஜெயில்லை போட மாட்டங்களே..? அடிக்கிறதெண்டு நீங்களோ பொலிசுக்கு அறிவிச்சனிங்கள்?"



"இல்லை... அவர் ஒருக்கால் அடிச்ச பொழுது எனக்கு காது வெடிச்சு நான் சாகக் கிடந்தனான். ஆஸ்பத்திரியிலை இரண்டு மாதத்துக்கு மேலை இருக்க வேண்டி வந்திட்டுது. அதுதான்...... மற்றது எங்கடை பக்கம் அக்கம் வீட்டு டொச் சனங்களும் பொலிசுக்கு அறிவிச்சிட்டுதுகள்."



"அதுக்கு ஒரு நாளும் ஆறு வருசம் தண்டனை குடுக்க மாட்டாங்கள்.

வேறையென்ன நடந்தது என்று சரியாச் சொன்னால்தான் நான் ஏதும் உதவி செய்யலாம்."



"அந்த டொச் சனத்துக்கு விசர். இவர் எங்கடை மகளோடை பிழையாப் பழகிறதெண்டும் சொல்லிப் போட்டுதுகள்."



"பிழையா எண்டு....."



"பள்ளிக்கூட ரூர் ஒண்டுக்கும் விடுறதில்லை. பள்ளிக்கூட நீச்சல் வகுப்புக்கு விடுறதில்லை. பள்ளிக்கூடம் தவிர்ந்த வேறையெந்த இடத்துக்கும் விடுறேல்லை. சினேகிதப் பிள்ளையளோடை பழக விடுறதில்லை......"



"அது பிழைதான். அதுக்காண்டி..."



"அதோடை அவர் பிள்ளையோடை பாலியல் தொடர்பு வைச்சிருக்கிறாரெண்டும் பொய் சொல்லிப் போட்டுதுகள். அதை அறிக்கையா எழுதி என்ரை மகளட்டையும் சைன் வாங்கி யூகன்ட்அம்ற்றிலை (Youth wellfare office) குடுத்திட்டுதுகள்."



"அவர் சொந்தத் தகப்பன்தானே..."



"ஓம்."



"அப்படியெண்டால் ஏன் அந்தச் சனங்கள் அப்பிடி எழுதினதுகள். சில நேரத்திலை அவர் பிள்ளையை வெளியிலை விடாமல் இருக்கிறதாலை அதுகளுக்கு அப்பிடியொரு சந்தேகம் வந்திட்டுதோ தெரியாது. உப்பிடி சில நேரத்திலை நடக்கிறதுதான். ஒண்டும் நடக்காமலே நடந்தது மாதிரியான சந்தேகங்களில் வழக்குகள் வாறதுதான். இதாலை பிள்ளையளைப் பெற்றோரிட்டையிருந்து பிரிச்செடுக்கிற அவலங்களும் நடந்திருக்கு. எங்கையாவது ஒரு சொந்தத் தகப்பன் தன்ரை மகளோடை பிழையா நடப்பானோ? நீங்கள் யோசிக்காதைங்கோ. எப்பிடியாவது லோயரோடை கதைச்சு அப்பீல் எடுத்தால் இதிலை வெல்லலாம். இது ஒரு பிழையான வழக்கு."



இப்போது அவள் முகத்தில் ஒரு சிறிய மாற்றம். எனது பேச்சில் இருந்து.. கணவர் அப்படியொரு அநியாயமான தப்பைச் செய்திருக்க மாட்டாரென்ற பேருவகை. அவர் விடுவிக்கப் பட ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை.



எல்லாம் சில கணங்களுக்குத்தான். சடாரென்று அவள் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. "அவரை நான் பார்க்கோணும். ஒரு வருசத்துக்கு மேலையா அவரைப் பார்க்கேல்லை. விடமாட்டினமாம். கடைசியா நடந்த வழக்குக்குக் கூட என்னை உள்ளை விடேல்லை. லோயர்தான் போனவர்." சத்தமெடுத்து அழுதாள். தேநீர்க்கடையில் இருந்த அனைவரது தலைகளும் ஒரு தரம் எம்பக்கம் திரும்பி மீண்டன.



"எங்கை உங்கடை அந்த மகள்? அவ குழந்தைப்பிள்ளையில்லையே! அவவுக்கு 16 வயது. அவ தன்ரை அப்பா தன்னோடை அப்பிடிப் பிழையா நடக்கேல்லை எண்டு கோர்ட்டிலை சொன்னால் பிரச்சனை முடிஞ்சுதுதானே...?"



"அவவிட்டை அந்த விசர்ச் சனங்கள் கையெழுத்து வேண்டிக் குடுத்துட்டுதுகள். இதாலை அவவுக்கும் கெட்ட பெயர். தமிழ்ச்சனங்களுக்கு முன்னாலை தலை காட்டேலாதாம். அதுதான் அந்த நகரத்தையே விட்டிட்டு இங்கை வந்திட்டம். இப்ப அவ பள்ளிக் கூடத்துக்குப் போட்டா."



அப்படி ஏன் அந்த யேர்மனியச் சனங்கள் செய்யப் போகுதுகள்? என்ற கேள்வி எனது மூளையின் ஒரு புறத்தைப் பிறாண்டிக் கொண்டே இருந்தது. இருந்தாலும் மதுவைச் சமாளித்து என்னாலான உதவிகளைச் செய்வதாக வாக்குறுதியளித்து அனுப்புவதற்கிடையில் நான் களைத்து விட்டேன்.



வீட்டுக்கு வந்த பின்னும் மனசுக்குள் நினைவுகள் புரண்டு கொண்டே இருந்தன. யேர்மனியக் குடும்பங்களில் இப்படியான வழக்குகள் சில தடவைகள் வந்திருக்கின்றனதான். ஆனால் எமது தமிழ் சமூகத்தில் இது புதிய வழக்கு. ஒரு தந்தையால் தனது விந்திலிருந்து உருவான தனது குழந்தையை இப்படிப் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உட்படுத்த முடியுமா..?



இந்தக் கேள்விக்கு விடை தேடுமுகமாக எனக்குத் தெரிந்த பல அப்பாக்களை ஒப்பிட்டுப் பார்த்தேன். தம்பியின் மனைவியை, அண்ணனின் மகளை, மனைவியின் தங்கையை... என்று சபலப்படும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள்தான். ஆனால் சொந்த மகளையே....! முடியாது ஒரு நாளும் ஒரு தந்தையால் இது முடியாது. இது பிழையான வழக்கு. அநியாயமாக சாருகன் குற்றஞ் சாட்டப் பட்டிருக்கிறான். அவனை எப்படியும் ஜெயிலிலிருந்து விடுவிக்க வேண்டும்.



தெரிந்த ஒரு யேர்மனிய வழக்கறிஞரோடு இது பற்றிப் பேசினேன். இப்படியானதொரு வழக்கு அவருக்குப் புதிதாக இருக்கவில்லை. ஆனாலும் நான் தமிழ்த் தந்தையின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அவரை யோசிக்க வைத்தது. அப்படியொரு தவறை அந்தத் தந்தை செய்யாத பட்சத்தில், சரியான முறையில் முயற்சி செய்தால் மீட்கலாம் என்றார்.



ஒருவித நம்பிக்கையோடு மதுவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு சம்பந்தமான கடிதங்கள், கோர்ட் தீர்ப்புகள் எல்லாவற்றையும் கொண்டு எனது வீட்டுக்கு வரச் சொன்னேன். வந்தாள்.. அதே வாட்டம். அதே ஏக்கம். எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டதான சோகம். மகன் மட்டும் கொஞ்சம் துப்பரவாக வெளிக்கிடுத்தப் பட்டிருந்தான்.



இருக்க வைத்து தேநீர் தயாரித்துக் கொடுத்து கதைப்பதற்குள் பலமுறை ஒப்பாரி வைத்து விட்டாள். அவள் கொண்டு வந்த பேப்பர் கட்டுக்குள்ளிருந்து யூகன்ட்அம்ற்றிலிருந்து (Youth wellfare office) வந்த 12 பேப்பர்கள் ஒன்றாகப் பின் பண்ணப் பட்டிருந்த ஒரு கடிதத்தை எடுத்துப் பார்த்தேன். அது பதினொரு மாதங்களின் முன் சாருகனின் வழக்கின் தீர்வையொட்டி எழுதப் பட்ட ஒரு கடிதம். படிக்கத் தொடங்கினேன்.



"இலங்கையைச் சேர்ந்த சாருகன், மதுமிதா தம்பதிகள் இங்கு யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். இவர்களது அரசியற் தஞ்சக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டதின் காரணமாக இவர்களுக்கு யேர்மனியில் வதிவிட அனுமதி வழங்கப் பட்டுள்ளது.



தற்போது 15வயதுடைய இவர்களின் மகள் சகானா, கருச்சிதைவு செய்து கொள்வதற்காக, இரண்டு தடவைகள் அவளது தந்தை சாருகனால் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளாள். மருத்துவருக்கும் அங்கு உள்ள மற்றைய உதவியாளர்களுக்கும் இது சம்பந்தமாகப் பலத்த சந்தேகம் ஏற்படவே கருவிற்கு யார் தந்தை என்ற டி.என்.ஏ(DNA) பரிசோதனையை மேற் கொண்டுள்ளார்கள். (இந்தச் சோதனைக்கான ஒரு தரத்துச் செலவு 750யூரோக்கள்.) இச் சோதனையின் போது சகானாவின் வயிற்றில் உள்ள கருவுக்குத் தந்தை அவளின் தந்தையாகிய சாருகன் என்பது நிரூபணமாகியுள்ளது. அதனாலேயே சாருகன் தற்போது சிறையில் வைக்கப் பட்டுள்ளார்."



சரியான ஆதாரம் இருந்தும் கூட திருமதி சாருகன் இதை ஏற்றுக் கொள்கிறாரில்லை. ஒரு சட்டபூர்வமான உண்மையை ஓப்புக் கொள்ள மறுக்கும் சுபாவம் கொண்டவராக திருமதி சாருகன் இருப்பது பொலிஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. இதனால் சகானாவின் பாதுகாப்புக்குப் பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது.



சகானா தனது தந்தையாலேயே பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளாள். அதனால் மனஉளைச்சல் பட்டுக் கொண்டிருக்கும் அவளை அரவணைக்க வேண்டிய அவளது தாய் மதுமிதா, மகளுக்குத் தாயாக மகளின் பக்கம் நிற்காது, கணவனுக்கு மனைவியாக நின்று கணவனை நியாயமுள்ளவனாகக் காட்ட முனைவது பெரும் விசனத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.



இத்தனைக்கும் சாருகன் தனது மனைவியான மதுமிதாவை வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுமளவுக்கு மூர்க்கத்தனமாகப் பல தடவைகள் தாக்கியிருக்கிறார். எந்தக் கட்டத்திலும் மதுமிதாவை யேர்மனிய மொழி கற்றுக் கொள்ள சாருகன் அனுமதிக்கவில்லை. இத்தனை வருடங்கள் யேர்மனியிலிருந்தும் யேர்மனிய மொழியை ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள முடியாதவராகவே மதுமிதா இருக்கிறார்......."



எனக்கு மேற்கொண்டு வாசிக்க முடியாமல் இருந்தது. அந்த அறிக்கையில் எழுதப் பட்ட வாசகங்கள் ஒவ்வொன்றும் என்னை அதிர வைத்தன. நிமிர்ந்து மதுவைப் பார்த்தேன். அவள் "அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார்." என்பதை ஒரு மந்திரம் போல உச்சாடனம் பண்ணிக் கொண்டிருந்தாள்.



புத்தி பேதலித்தவள் போலப் புலம்பிக் கொள்ளும் இவளிடம் போய் "டீ.என்.ஏ(DNA) பரிசோதனை மூலம் உனது மகளின் கருவுக்கான காரணி உனது கணவன்தான் என்பது நிரூபணமாகியிருக்கும் போது இனி இவ்வழக்கில் வெல்வதற்கு எதுவும் இல்லை" என்பதையும் "உனது கணவனுக்குச் சரியான இடம் அதுதான். அவன் அங்கேயே இருக்கட்டும்." என்பதையும் எப்படிச் சொல்வது..?



யோசனை மேலிட, அந்தக் கடிதத்தை நான் அப்படியே மேசையில் வைத்து விட்டேன். அவள் மீண்டும் பொல பொலவென்று கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட "அவரை நான் பார்க்கோணும். ஒரு வருசத்துக்கு மேலையா அவரைப் பார்க்கேல்லை. அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார். அவரட்டை நேரே பார்த்து "அப்பிடிச் செய்தனிங்களோ...?" எண்டு கேட்கப் போறன்......" புலம்பிக் கொண்டிருந்தாள்.



சந்திரவதனா

யேர்மனி

15.11.2004

Wednesday, November 10, 2004

கப்டன்-மயூரன்(சபா)

அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு.



எனது இளைய மகன் சபா (கப்டன்-மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான்.



எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான்.



வயிற்றில் அல்சர் இருப்பதால்தான் வைத்தியம் செய்வதற்காக ஒன்றரை மாத லீவில் வந்திருப்பதாகச் சொன்னான். வைத்தியசாலைக்குச் சென்று ஏதோ மருந்துகள் எடுத்து வருவான். ஆனால் சாப்பாட்டில் எந்த விதக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடிக்க மாட்டான்.



அவன் வந்திருக்கிறான் என்று அவனது பாடசாலைத் தோழர்களும் போராளித் தோழர்களும் மாறி மாறி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விரும்பிய உணவுகளைக் கேட்டுச் சமைப்பித்துச் சாப்பிடுவது, ஐஸ்கிறீம் பாருக்குச் சென்று ஐஸ்கிறீம் சாப்பிடுவது, சிற்றுண்டி வகைகளைக் கொறிப்பது..... தங்கையைச் சீண்டி விளையாடுவது என்று ஒன்றரை மாதமும் ஒரே கும்மாளமும் கலகலப்பும்தான் வீட்டில்.



என் பிள்ளை நீண்ட பொழுதுகளின் பின் என்னிடம் வந்திருக்கிறான். அவன் மனம் எந்த வகையிலும் நோகக்கூடாது. போனால் எப்போ வருவானோ தெரியாது. அவர்களது முகாமிற்குள் போய் விட்டால் எல்லாம் கட்டுப்பாடு தானே! என்று நினைத்து நான் என்னால் இயன்றவரை அவனது ஆசைகள் விருப்பங்கள் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்தேன்.



அப்போதுதான் பிரபா(அவனது சின்னக்கா) திருமணமாகி ஏழு வருடங்களின் பின் கற்பமாகி இருந்தாள். அதையிட்டு அவன் மிகுந்த சந்தோசத்துடன் இருந்தான். மருமகனா..! மருமகளா..! என்று சதா ஆசையுடன் கேட்டுக் கொண்டே இருந்தான்.



இப்படியே ஆட்டமும் பாட்டமும் களிப்பும் கும்மாளமும் என்று ஒன்றரை மாதம் போன வேகமே தெரியவில்லை.



என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது.

அன்று 17.6.1993 - காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். பாமா அவனது உடுப்புக்கள் எல்லாவற்றையும் அயர்ண் பண்ணி அடுக்கிக் கொடுத்தாள். அவனது பள்ளி நண்பர்களில் மூவர் எந்நேரமும் அவனுடன்தான் நின்றார்கள். படுக்கைக்கு மட்டுந்தான் தமது வீடுகளுக்குப் போய் வந்தார்கள்.



என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை. படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. ஆனாலும் அவன் வருந்தக் கூடாது என்ற நினைப்பில் சோகம் கப்பிய சிரிப்புக்கள். வேலைகள்.



ஆனால் அன்று வாகனம் வரவில்லை. அவன் அன்று போக வில்லை என்றதும் எல்லோரிடமும் ஒரு தற்காலிகமான சந்தோசம்.



அடுத்த நாள் 18.6.1993 காலை அவனது அத்தான் கணேஸ் சோகத்துடன் - அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வேலைக்குச் சென்றார். திரும்பி வரும் போது அவன் நிற்க மாட்டான் என்பது அவருக்குத் தெரியும்.



பிரபா(அவனது சின்னக்கா) வேலைக்குப் போகும் போது "நான் மத்தியானம் வாற பொழுது நிற்பியோ? அல்லது போயிடுவியோ?" என்று கவலையோடு கேட்டாள். சோகம் கலந்த சிரிப்பொன்றுதான் அவனிடமிருந்து பதிலாகக் கிடைத்தது.



நான் அம்மா அல்லவா! என் சோகம் எல்லாவற்றையும் மறைத்து செய்ய வேண்டியவைகளை ஓடி ஓடிச் செய்து அவனுக்கும் நண்பர்களுக்கும் பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு பரிமாறினேன். அதன் பின் வேறு இடத்தில் வாகனம் வருவதாக அவனுக்குச் செய்தி வர அவன் விடை பெற்றுச் சென்றான். அவனது நண்பர்கள் அவனை கூட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றி விட்டு தமது வீடுகளுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார்கள்.



இம்முறை என் பிள்ளையின் முகத்தில் வழமை போல இல்லாமல் ஏதோ ஒரு சோகம் அப்பி இருப்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது ஏன் என்று புரியாமல் குழம்பினேன். ஆனாலும் எனக்குள்ளே இருந்த துயரத்தையோ நெருடல்களையோ நான் அவனுக்குக் காட்டவில்லை.



அவன் நின்ற ஒன்றரை மாதமும் இராப்பகல் பாராது ஓடியோடி எல்லாம் செய்த நான் - அவன் போனதும் - அதற்கு மேல் எதுவும் செய்யத் தோன்றாது அப்படியே கதிரையில் அமர்ந்து விட்டேன். எல்லாம் ஒரே மலைப்பாக இருந்தது. என் பிள்ளை போய் விட்டானா..? எல்லாம் பிரமையாக இருந்தது. அப்படியே நான் பிரமை பிடித்தவள் போல அந்தக் கதிரையில் ஒரு மணித்தியாலம் வரை இருந்திருப்பேன்.



என் பிள்ளை திரும்பி வருகிறான். ஏன்..? எனக்குச் சந்தோசமாயிருந்தது.

"என்னப்பு..! என்ன விசயம்?" என்று கேட்டேன்.



"வாகனம் இன்னும் சொன்ன இடத்துக்கு வரேல்லை அம்மா. அதுக்கிடையிலை உங்களை ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான். உடனை போகோணும்." என்றான். எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்வது போலிருந்தது.



அதற்குள் அவனது சின்னக்காவும் வேலை முடிந்து நாலைந்து கறுத்தக் கொழும்பு மாம்பழங்களுடன் அரக்கப் பரக்க ஓடி வந்தாள்.

"உனக்கு மாம்பழம் எண்டால் எவ்வளவு ஆசை எண்டு எனக்குத் தெரியும். அதுதான் வேண்டிக் கொண்டு ஓடி வந்தனானடா." என்று சொன்னாள். நான் மாம்பழத்தின் தோலைச் சீவி அவசரமாய் வெட்டிக் கொடுக்க என் பிள்ளை மிகவும் ஆசையாக ரசித்துச் சாப்பிட்டான்.



அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கவே வாகனம் எங்கள் வீட்டுக் கேற்றடிக்கு வந்து விட்டது. உடனே "பிரபாக்கா சுகத்தோடை பிள்ளையைப் பெத்தெடுங்கோ. மாமா வருவன் மருமகளைப் பார்க்க.." என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் விடை பெற்றுச் சென்றான்.



வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன்.



எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது.



பிரபாவின் குழந்தையைப் பார்க்க மிகவும் ஆசைப் பட்டான். கடற்புலி கேணல் தளபதி பாமா வந்து குழந்தையைப் பார்த்த போது சொன்னாள். "மயூரன் மணலாறு இதயபூமிச் சண்டைக்குப் போய் வெற்றியோடு திரும்பியிருக்கிறார். மருமகளைப் பார்க்கக் கட்டாயம் வருவார்." என்று.



வருவான் வருவான் என்றுதான் காத்திருந்தோம். அவன் வரவே இல்லை.

பூநகரித் தவளைப் பாய்ச்சலுக்குச் சென்று விட்டான்.



11.11.1993 அன்று பூநகரித் தவளைப் பாய்ச்சலில் அவன் விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருது நின்ற படையினருள் புயலாகிப் போனான் என்ற செய்தி 15.11.993 அன்றுதான் எனக்குக் கிடைத்தது.



விழுப்புண் பெற்ற அவன் வித்துடலைக் கூடக் காண வழியின்றிக் கலங்கி நின்றேன்.



அதன் பின் தான் உணர்ந்தேன் அப் பெரிய சமர்களுக்குப் போவதற்காகவே அவன் நீண்ட லீவில் என்னிடம் வந்து நின்றான் என்பதை. நீங்காத நினைவுகளை மட்டும் என் நெஞ்சோடு விட்டு விட்டு அவன் சென்று விட்டான்.



அம்மா

சிவா தியாகராஜா

மன்கைம்

யேர்மனி


Saturday, November 06, 2004

புலம் பெயர் வாழ்வில் வேலைக்குப்

புலம்பெயர் வாழ்வில் வேலைக்குப் போகும் பெண்களையும், வேலைக்குப் போகாதிருக்கும் பெண்களையும் பார்ப்போமேயானால் இரு பகுதியினரது வாழ்வும் ஏதோ ஒரு வகையில் கடினமானதாகவே இருக்கிறது.



எழுச்சிகளும், புரட்சிகளும் காலங்காலமாக இருந்து வந்தாலும், இன்றைய பெண்களுக்கு இந்த வாழ்க்கை ஒரு சவாலாகவே அமைந்துள்ளது. குடும்பம் என்ற புனிதமான கோவிலில் குழப்பங்கள் ஏற்பட்டு விடாமல், கணவன், மனைவி என்ற உறவில் எந்த விரிசல்களும் ஏற்பட்டு விடாமல், விடுதலைப் பாதையை நோக்கி வெற்றி நடை போட வேண்டிய ஒரு கட்டாயம் இன்றைய பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டாயத்தை பெரும்பாலான பெண்கள் தாமாகவேதான் விரும்பி தமக்காக எடுத்துக் கொண்டுள்ளார்கள்.



இங்கே முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டியது என்னவென்றால், ண்களைப் பொறுத்த மட்டில் பெண்களின் இந்த விழிப்புணர்ச்சி, அல்லது மாற்றம் அவர்களிடம் சற்று அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. அச்சப் பட்டவர்களை அப்படியே விட்டுவிட்டு, தம்பாட்டில் போய் விடாது, தம்மோடு அவர்களையும் இழுத்துச் செல்ல வேண்டிய கட்டாயமும் இன்றைய பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.



பெண்களுக்குள்ளும் ண்களைப் போலவே சை, பாசம், கோபம், நேசம்.. போன்ற எல்ல உணர்வுகளும் இருக்கின்றதென்பதை ண்களுக்குப் புரிய வைத்து, பெண்கள் அடிமைத் தனத்தையோ, அடக்கு முறையையோ விரும்பவில்லை, தாம் தாமாகவே வாழ விரும்புகிறார்கள் என்பதை உணர வைத்து, குடும்பத்தைக் குலைய விடாது காக்க வேண்டிய பாரிய பொறுப்பும் விடுதலைப் பாதையை நோக்கி நடக்கின்ற இன்றைய பெண்களுக்கு உள்ளது. பெண்விடுதலையின் சரியான பரிமாணத்தை உணர்ந்த பெண்கள், இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, ஒரு முன்னேற்பாடுடனேயே விடுதலையை நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளார்கள்.



இந்த விடுதலைப் பாதையின் முதற் படியில் இருப்பது பெண்கள் தாம் தமது காலில் நிற்பதற்கு ஏதுவான சுய சம்பாத்தியம். அதாவது பெண்கள் தாம் தமக்கெனச் சம்பாதிக்க வேண்டும். இன்றைய பெண்களில் அனேகமானோர் இந்த சூட்சுமத்தைப் புரிந்து வேலைக்குப் போகத் தொடங்கி வட்டார்கள். னாலும் அத்தோடு அவர்களது கஷ்டங்களும் பிரச்சனைகளும் தீர்ந்து விடவில்லை.



வேலைக்குப் போகும் பெண்கள் நிறையவே கஸ்டப் படுகிறார்கள். காரணம் ண்கள் சமூகம் இன்னும் பெண்களின் விடுதலைப் பாதையை நோக்கிய இந்த பயணத்தைச் சரியான முறையில் ஏற்றுக் கொள்ளவில்லை.



பெண்கள் வேலைக்குப் போகத் தொடங்கியதால் ண்களின் வாழ்க்கை சற்றுச் சுலபமாகியுள்ளது. அவர்கள் தனியாகச் சுமந்த குடும்பத்தின் பணத்தேவையை, இப்போது வேலைக்குப் போகும் பெண்களும் பங்கு போட்டுச் சுமக்கிறார்கள். அதே நேரம் வீட்டிலுள்ள மற்றைய வேலைகளையும் பெண்களே தனியாகச் சுமக்கிறார்கள். பெரும்பான்மையான ண்கள் அதைப் பங்கு போடத் தவறி விடுகிறார்கள்.



ணும் பெண்ணும் வேலைக்குப் போய் வருகையில், ண் வந்து கதிரைக்குள் இருந்து தொலைக்காட்சி பார்ப்பதுவும், பெண் வந்து கால் வலிக்க, கை வலிக்க வீட்டு வேலைகளைத் தொடர்வதுவும் ஒவ்வொரு வீட்டிலும் இன்னும் நடந்து கொண்டுதானிருக்கிறது.



திகாலத்தில் வேட்டைக்குப் போன ண்கள் வீட்டுக்கு வந்ததும் நெருப்பைக் கொழுத்தி விட்டு அதன் முன் இருந்து குளிர் காய்வார்கள். அந்த நேரத்தில் அவர்கள் யாருடனும் பொ¢யளவாகப் பேச மாட்டார்கள். மெளனமாக இருந்து தம்மை சுவாசப் படுத்திக் கொள்வார்கள். அதன் தாக்கம்தான் இன்றும் தொடர்வதாக ராய்சியாளர்கள் சொல்கிறார்கள்.



சில ண்கள் வீட்டு வேலைகளில் ஏதாவதொன்றைச் செய்வார்கள். அதாவது ஒரு ணால் சமைக்க முடியும். இன்னொருவரால் அயர்ண் பண்ண முடியும். இன்னோருரால் வீட்டைத் துப்பரவாக்க முடியும். னால் பெரும்பாலான ண்களால் ஒரு பெண்ணைப் போல வீட்டின் முழுவேலைகளையும் பொறுப்பேற்றுச் செய்யத் தெரிவதில்லை. அல்லது முடிவதில்லை. இதனால் வேலைக்குப் போகும் பெண் நிறையவே கஸ்டப் படுகிறாள். சில சமயங்களில் நேரமின்மை காரணமாக பிள்ளைகளைச் சரிவரக் கவனிக்க முடியாமல் கூடத் திண்டாடுகிறாள். கவலைப் படுகிறாள்.



இந்த நிலையில் கூட பிள்ளை ஒரு தவறு செய்யும் போது, "நீ பிள்ளையைச் சரியாக் கவனிக்கிறேல்லை." என்று கணவனிடம் திட்டும் வாங்குகிறாள். ஒரு கணவனும் தந்தையாக நின்று, பிள்ளையைக் கவனிக்கலாம்தானே. அப்படி நடப்பது மிகமிகக் குறைவு. ஏனெனில் இதெல்லாம் பெண்களின் வேலையாகவே கருதப் படுகின்றன. அது இன்று பெண் வெளியில் வேலைக்குப் போகும் போதும் மாறி விடவில்லை.



னாலும், இத்தனை சிரமங்களின் மத்தியிலும், பெண் என்பவள் தான் சம்பாதிப்பதில் ஒரு நிறைவடைகிறாள். "நான், எனது பணம்..!" என்று கர்வம் கொள்ளும் கணவனிடமிருந்து விடுதலை பெற்ற உணர்வைப் பெறுகிறாள்.



வேலைக்குப் போகும் பெண்களின் நிலை இரட்டைச் சுமையைத் தலையில் தூக்கி வைத்ததற்குச் சமனாயிருக்கும் போது, வேலைக்குப் போகாத பெண்களின் நிலை, வேறு விதமான பரிதாபத்தை உணர்த்துகிறது. அவர்களின் வீட்டு வேலைகள் ஒரு வேலையாகக் கணிக்கப் படுவதே இல்லை.



அனேகமான சமயங்களில் "உன்ரை மனைவி என்ன செய்கிறாள்..?" என்று கணவனை யாராவது கேட்டால்.. "அவ சும்மாதான் இருக்கிறா." என்பதே வேலைக்குப் போகாத பெண்களின் கணவன்மார்களின் பதிலாக இருக்கிறது.



இந்த அளவில்தான் பெண்களின் வீட்டு வேலைகள் கணிக்கப் படுகின்றன. அவர்கள் சிறிதளவு பணத்தேவைக்கும் கணவனை எதிர் பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். அனேகமான சந்தர்ப்பங்களில் "உனக்கென்ன தெரியும். நீ சும்மா வீட்டிலை இருக்கிறாய். நான் எவ்வளவு கஸ்டப் பட்டு முறிஞ்சு வேலை செய்திட்டு வாறன்." என்று சொல்லிக் கணவன்மாரால் உதாசீனப் படுத்தப் படுகிறார்கள். வீட்டிலுள்ள சகல வேலைகளையும் செய்வது மட்டுமல்லாது "எதுவுமே செய்வதில்லை." என்ற குற்றச் சாட்டையும் கணவனிடமிருந்து அடிக்கடி பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் வேலைக்குச் செல்லாத பெரும்பான்மையான புலம்பெயர் பெண்கள் பாரிய உளவியல் தாக்கத்துக்கும் உள்ளாகிறார்கள்.



அவர்களது வாழ்க்கை சமையல், வீட்டுவேலை கணவனுக்குப் பணிவிடை.. என்றே போய் விடுகிறது. அனேகமான குடும்பங்களில் கணவன்மார்கள் "நான் உழைக்கிறேன். எனது பணம்." என்ற ஒரு திமிருடன்தான் இருக்கிறார்கள். தமது மனைவியரைச் சற்றுத் தாழ்ந்தவர்களாகவே கருதி, மனைவியரின் மனங்களிலும் "நீ தாழ்ந்தவள். எனது பணத்தில்தானே நீ வாழ்கிறாய். நான் எவ்வளவு வேலை செய்து விட்டு வருகிறேன். நீ சும்மா வீட்டில் இருந்து எனது பணத்தில்தானே சாப்பிடுகிறாய்." என்பது போன்றதான கருத்துக்களை விதைக்கிறார்கள். மிகச் சிறுபான்மையான ண்கள் மட்டுமே மனைவியரை மனைவியராக, உணர்வுள்ள ஜென்மமங்களாக மதித்து, வீட்டு வேலைகளை வேலையாகக் கணித்து உதவுகிறார்கள்.



மொத்தத்தில் வேலைக்குப் போகும் பெண்களும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களும் சரி ஏதோ ஒரு வகையில் கஸ்டங்களையே சுமக்கிறார்கள். னாலும் வெளிவேலை, வீட்டுவேலை இரண்டினாலுமான அதீத சுமைகளின் மத்தியிலும் வேலைக்குப் போகும் பெண்கள் வெளி உலகத்துடனான தொடர்பு, நானும் உழைக்கிறேன் என்ற மனநிறைவு.. போன்றதான விடயங்களால் ஒரு வித தன்னம்பிக்கையுடனேயே வாழ்கிறார்கள். வேலைக்குப் போகாத பெண்களோ தாழ்வு மனப்பான்மை நிறைந்த உளவியல் தாக்கத்தினால் தன்னம்பிக்கை இழந்து ஒரு தனிமைச் சிறையில் வாழ்கிறார்கள்.



சந்திரவதனா

யேர்மனி

6.11.2004

Friday, November 05, 2004

உபதேசம்

நேற்று மாலதி நாட்டிலிருந்து திரும்பியிருப்பாள். அவளிடம் நாட்டுப் புதினங்களைக் கேட்க வேண்டுமென்று மனசு அவாப்பட்டது. நேற்றே தொலைபேசியில் அழைத்திருக்கலாம். பயண அலுப்புகளின் மத்தியில் என் தொல்லை வேறு அவளுக்கு வேண்டாமென்று நினைத்துப் பொறுமை காத்தேன்.



என்னை விடப் பத்து வருடங்கள் இளையவளானாலும் நட்போடு பழகக் கூடியவள். நான் எனது சிறு குழந்தைகளுடன் யேர்மனிய வாழ்க்கையை ஆரம்பித்த சில காலப்பொழுதுக்குள், ஒருநாள் ஸ்ருட்கார்ட் புகையிரத நிலையத்தில் அவளை முதல் முதலாகச் சந்தித்தேன். அப்போதுதான் திருமணமாகி அவளும் அவள் கணவனும் கல்யாணக்களை கலையாத புத்தம் புதுத் தம்பதிகளாய் தெரிந்தார்கள்.



அவளது பேச்சும், அவளிடமிருந்த நாட்டுப் பற்றும், முதற் சந்திப்பிலேயே என்னுள் அவள்பால் ஓர் பிடிமானத்தை ஏற்படுத்தி விட்டது. தொடர்ந்த ஓரிரு முறைகளிலான சந்திப்பில் வயது வித்தியாசம் பாராது நாங்கள் நட்பாகி விட்டோம்.



தமிழ்ப்பெண்களைக் காணுவதே அரிதான அந்தக் காலகட்டத்தில் அவள் எனக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகவே தெரிந்தாள். அதனால் தூரம் என்றும் பார்க்காமல் மாதம் ஒரு முறையாவது பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு, ரெயின் ஏறி அவளைச் சந்தித்து வருவேன்.



எனது பிள்ளைகளுடன் அவள் பேசும் விதமே எனக்கு மகிழ்வூட்டுவதாக இருக்கும். உறவுகள் என்று சொல்லிக் கொள்ள ஒருவரும் இல்லாத அந்நிய தேசத்தில், அவள் ஒரு மாமியாய், சித்தியாய்.. என்று நின்று என் பிள்ளைகளுக்குப் புத்திமதிகள் சொல்லும் போது ஒரு நெருக்கமான உறவு கிடைத்து விட்டதான உணர்வில் மனம் நிறைவேன்.



எனது மகனுக்கு அவளை நன்கு பிடிக்கும். "மாலதி அக்கா...! மாலதி...!" அக்கா என்று அன்போடு பழகுவான். அவளும் அவனோடு அன்பாகப் பழகுவாள். எப்போதும் நாட்டைப் பற்றியே பேசுவாள். நாங்கள் எல்லோரும் எப்படியாவது நாட்டுக்குப் போய் விட வேண்டுமென்று சொல்லுவாள். ஏதாவது அந்தரம், அவசரம் என்று வந்தால் கூட நம்பி அவளிடம்தான் எனது பிள்ளைகளை விட்டுச் செல்வேன்.



என்னோடு பேசும் போதெல்லாம் "அக்கா..! எனக்குப் பிள்ளையள் பிறந்தால், ஒரு பத்துப், பன்னிரண்டு வயசுக்கு மேலை அதுகளை இந்த நாட்டிலை வைச்சிருக்க மாட்டன். எப்பிடியாவது எங்கடை நாட்டுக்குக் கூட்டிக் கொண்டு போடுவன். இங்கை இருந்தால் பிள்ளையள் கெட்டுப் போடுங்கள். நீங்களும் உங்கடை பிள்ளையளை பிறந்தநாள் விழா அது இதெண்டு சொல்லி, யேர்மன் பிள்ளையளின்ரை வீடுகளுக்கோ அல்லது வேறை யேர்மன் களியாட்டங்களுக்கோ விட்டிடாதைங்கோ." என்பாள்.



எனது பிள்ளைகள் வளர்ந்து கொண்டு வரும் போது அவள் சொன்னது போல வளர்ப்பதென்பது கடினமான காரியமாகவே இருந்தது. வகுப்புப் பிள்ளைகளின் பிறந்த நாட்களுக்கோ, அல்லது எமது நகரில் நடைபெறும் களியாட்டங்களுக்கோ என் பிள்ளைகள் செல்வதை என்னால் தடுக்க முடியவில்லை. பத்துப் பன்னிரண்டு வயது வந்ததும், அவர்களது படிப்பைக் குழப்பிக் கொண்டு, ஒரு சுமூக நிலைக்கு வராத எனது நாட்டுக்கு ஓடவும் முடியவில்லை.



அதன் பின்னான பொழுதுகளில் மாலதி என்னை அடிக்கடி கண்டித்தாள். "நீங்களக்கா பிள்ளையளுக்கு அளவுக்கு மிஞ்சி இடங் குடுக்கிறிங்கள். இப்ப இந்த வயசிலை இப்பிடி யேர்மன் பிள்ளையளின்ரை வீடுகளுக்கு விட்டிங்கள் எண்டால், நாளைக்கு 14, 15 வயசு வரக்கை டிஸ்கோவுக்கும் விட வேண்டி வரும்" என்பாள்.



ஓரு தரம் எனது மூத்தவன் சினிமாப் பாடல் ஒன்றை மிகவும் ரசித்துக் கேட்ட போது, அவள் அவளது கணவனோடு சேர்ந்து "பாருங்கோ அக்கா... இவன் கேட்கிற பாட்டை...! இவனக்கா மெதுமெதுவா நாட்டை மறக்கிறான். எல்லாம் நீங்கள் குடுக்கிற இடந்தான்.." எனக் கடிந்தாள்.



இன்னொருதரம் அவன் மைக்கல் ஜக்சனின் பாட்டு தொலைக்காட்சியில் போன போது, தொலைக்காட்சியின் சத்தத்தையும் கூட்டி விட்டு, உடம்பை நெளித்து நெளித்து ஒரு ரசனையுடன் ஆடிய போது, அவள் போட்ட கூச்சலில் நானே ஆடிப் போய் விட்டேன்.



அவளது இந்த உபதேசங்கள் எமக்கிடையேயான நட்புக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காத போதும், அவள் சொல்வது போல என்னால் என் பிள்ளைகளை வளர்க்க முடியவில்லை என்பதால் அவளிடம் அடிக்கடி செல்வதை நான் தவிர்த்துக் கொண்டேன்.



இந்த இடையில் அவளுக்கும் ஒவ்வொன்றாக மூன்று குழந்தைகள் பிறந்து விட்டார்கள். அந்த சந்தோசங்களில் கலந்தும், அடிக்கடி தொலைபேசியில் கதைத்தும் எங்களுக்குள்ளான உறவை தொலைத்து விடாது காத்து வந்தேன்.



ஆனாலும் காலப் போக்கில் ஐரோப்பிய அவசரங்களுக்குள் தொலைபேசும் இடைவெளிகள் கூட நீண்டு கொண்டே போயின. அவளது பிள்ளைகளும் வளர்ந்து கொண்டிருக்கும் போது அவளுக்கான அவளுடைய நேரங்களும் குறுகிப் போயின. நேரடிச் சந்திப்புகள் மிகவும் அரிதாக இப்படித்தான் ஏதாவதொரு விடயம் சாட்டாக வரும் போது தொலைபேசிக் கொண்டோம்.



இப்போது அவள் நாட்டுக்குப் போய் வந்தது சாட்டாகி விட்டது. அழைத்தேன். தொலைபேசியின் சில மணி நேரச் சிணுங்கல்களுக்குப் பின்பே இணைப்பில் வந்தாள். கொஞ்சம் களைப்பாக இருந்தாள். பயண அலுப்பு இன்னும் தீரவில்லை என்பது தெரிந்தது. பின்னணியில் "சுற்றிச் சுற்றி வந்தீக..." படையப்பா படப் பாட்டு சத்தமாகக் கேட்டது. "கொஞ்சம் சத்தத்தைக் குறை" என்று திரும்பிக் கத்தி விட்டு இவன் சஞ்சுதனக்கா படையப்பா பாட்டுப் போடாமல் சாப்பிட மாட்டான். ஒரு நாளைக்கு மூன்று தரத்துக் குறையாமல் எங்கடை வீட்டை படையப்பா ஓடுது. சலிப்படைந்த பாவனையுடன் பேசினாலும் அதைச் சொல்லும் போது ஏதோ ஒரு பெருமிதம் அவள் குரலில் ஒலித்தது.



"எப்பிடி நாடு இருக்கு?"நான்தான் ஆவலோடு கேட்டேன்.



"சா.. அதையேன் கேட்கிறிங்கள் அக்கா? ஒரே இலையான். வெய்யில். சீ எண்டு போச்சுது."



தொடர்ந்து நிறையவே கதைத்தோம்.



"இனி எப்ப நாட்டுப் பக்கம் போற ஐடியா?"



"நாட்டுக்கோ....! இதுதான் கடைசியும் முதலும். இந்தப் பிள்ளையளாலை அதைத் தாங்கேலாது. பாவம் பிள்ளையள். அந்த வெய்யிலும்.. இலையானும்.. காய்ஞ்சு போய்க் கிடக்கு எல்லாம். இதுக்குள்ளை நுளம்பு வேறை. இதுகளுக்கு அந்த நாடு ஒத்து வராது. இனி அந்தப் பக்கமே போறேல்லை எண்டு தீர்மானிச்சிட்டன்."



பேசுவது மாலதிதானா..!!! மனசு வினாவியது.

அதற்கு மேல் எனக்குப் பேச்சே வரவில்லை.



சந்திரவதனா

யேர்மனி

4.11.2004

Wednesday, November 03, 2004

நிலவுக்குப் பயந்து பரதேசம் வந்த மான்குட்டிகள்

கிணற்றுக்குள் வீழ்ந்த மயிர்க்கொட்டிப் புழுப் போல் துளசியின் மனசுக்குள் நினைவுகள் அருவருப்பாய் நெளிந்து கொண்டே இருந்தன. வெளியிலே கொட்டி விடத் துடித்தாலும் முடியாத படி எதுவோ தடுத்தது.



வெளியில் பனியை வெயில் மெதுமெதுவாகக் கரைத்துக் கொண்டிருந்த மதியப் பொழுதில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தவள் - காலையில் பெரியம்மா வேலைக்குப் போக முன்னம் சமைத்து வைத்து விட்டுப் போனதை எடுத்து சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்கினாள்.



தொலைக்காட்சியில் பருந்து ஒன்று வட்ட மிட்டுக் கொண்டு கீழே எதையோ குறிவைத்து வந்து கொண்டிருந்தது. திக்கென்ற மனதுடன் அவள் பார்த்துக் கொண்டிருக்கவே பருந்தின் வருகையை உணர்ந்த மான்குட்டியொன்று எங்கே ஓடுவது என்று தெரியாது காதை உயர்த்தி விரித்துத் தடமடித்து தாயைத் தேடி.. ஓட விளைந்து..... இப்போ அவளுக்கு தானே மான்குட்டியானது போன்றதொரு பிரமை. பச்சாபத்தாபமான உணர்வு... பயம்... நடுக்கம்... ஒடுங்கி ஒடுங்கி நடுங்கினாள்.



இப்போதெல்லாம் இப்படியானதொரு அவஸ்தை அவளை வாட்டிக் கொண்டே இருக்கிறது. எதைப் பார்த்தாலும் எந்த அவலமானாலும் அதை தனதாக்கி தானே அதுவாகிய கற்பனையில் துடிப்பதும் துவளுவதுமாய்..........



மான்குட்டி தன் உயிர் காக்க பாய்ந்து பாய்ந்து தாவித் தாவி ஓடத் தொடங்கியிருந்தது. துளசி இறைவனை மன்றாடினாள். காப்பாற்று.. காப்பாற்று.. மன்றாட்டம் அவன் காதில் விழவில்லையோ...? அல்லது விழுவதற்கு முன் பருந்து முந்தி விட்டதோ...! அவக்கென மான்குட்டியின் மேல் விழுந்து கவ்விக் கொண்டு மேலெழுந்தது.



இப்போது துளசியின் பிரார்த்தனை - பருந்து தவறி வாயைத் திறக்கோணும்..! மான் குட்டி கீழே விழுந்து தப்பி விடோணும்..! என்றிருந்தது. ஆனால் பருந்து இது விடயத்தில் வலு கவனம். வைத்த குறியை தப்ப விட்டோ

எடுத்த இரையை சுவைக்காமல் விட்டோ அதற்குப் பழக்கமில்லை.

அது இன்னும் இன்னும் மான்குட்டியை தனக்குள் இறுக்கிக் கொண்டது.



அவளுக்கு அழுகையாய் வந்து விட்டது. விக்கி விக்கி அழத் தொடங்கினாள்: மான்குட்டிக்காக அழுகிறாளா..? அல்லது தனக்காக அழுகிறாளா..? அவளுக்கே தெரியவில்லை.



இன்று காலை அவளது அப்பா ரெலிபோனில் அவளை அழைத்து "துளசி எப்படியம்மா இருக்கிறாய்..?" என்று நெகிழ்ந்து நாத்தழுதழுக்கப் கேட்ட போது எல்லாவற்றையும் சொல்லி விடலாமா என்றுதான் யோசித்தாள். எப்படிச் சொல்வது என்று தெரியாத தடுமாற்றமும், அப்பா பாவம்... பருத்தித்துறையிலிருந்து தன்னோடு பேச என்று எவ்வளவு கஸ்டப் பட்டு வவுனியா வரை வந்திருப்பார் என்ற அனுதாபம் கலந்த எண்ணமும் அவளைப் பேச விடாது தடுத்து விட்டன.



துளசி யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து கிட்டத் தட்ட ஒரு வருடமாகிறது. அவளாக விரும்பி அவள் புலம் பெயரவில்லை.



நிறைந்த நம்பிக்கையோடும் அவளது எதிர் காலம் பற்றிய கனவுகளோடும்

"பிள்ளை என்னாலை உன்னை இங்கை வைச்சுக் காப்பாத்தேலாது. ஆமியின்ரை கொலை வெறி ஒரு புறம். காமவெறி மறுபுறம். இதுகளுக்கை பொம்பிளைப் பிள்ளை உன்னை யேர்மனிக்கு அனுப்ப வசதி இருந்தும் அனுப்பாமல் வைச்சிருக்கிறது பிழையெண்டுதான் எனக்குப் படுது."

என்று சொல்லி அப்பாதான் அவளை யேர்மனிக்குப் புலம் பெயர வைத்தார்.

அம்மாவுக்கு அவளைத் தன்னந்தனியாக அனுப்ப துளியும் இஸ்டமில்லை.



அப்பாவோ "உம்மடை கண்மூடித் தனமான பாசத்துக்கு அவளை இங்கை வைச்சுப் பலி குடுக்கப் போறீரே...!" என்று கோபமாகக் கத்தி அம்மாவைப் பேசி விட்டார். அப்பாவின் முழு நம்பிக்கையும் பெண்பிள்ளையே இல்லாத யேர்மனியில் வாழும் அவரது அண்ணன் அவளைச் சொந்தப் பிள்ளை போல வைத்துப் பார்ப்பார் என்பதுதான்.



அம்மாவுக்குப் பயம் - கதைகளிலும் படங்களிலும் வருவது போல் பெரியம்மா அவளைக் கொடுமைப் படுத்தி விடுவாவோ என்று. அதற்கு மேலால் அம்மாவுக்கு துளசியைப் பிரிய விருப்பமே இல்லை. பிரிவுத்துயரை தாங்கும் தைரியம் தனக்கில்லை என்றே அம்மா அழுதாள்.



"பிள்ளையள் எப்பவும் உம்மோடைதான் இருக்குங்கள் என்று நினைக்கிறீரே

அதுகள் ஒருநாளைக்கு எம்மை விட்டுப் போய் தமக்கெண்டொரு வாழ்க்கையை தொடங்கத்தானே வேணும்." அப்பா அம்மாவைச் சமாளிக்க இப்படித்தான் சொன்னார்.



"அதுக்கு இவ்வளவு வேளைக்கே பிள்ளைக்கு பன்ரண்டு வயசாயிருக்கக்கையே பிரியோணுமோ...!" என்று அம்மா கதறினாள்.



நாட்டு நிலைமைகளைச் சுட்டிக் காட்டி ஏதேதோ கதைத்து அப்பா துளசியை யேர்மனிக்கு அனுப்பி விட்டார். அம்மாவின் சம்மதம் பற்றி அவர் அவ்வளவாக அக்கறை கொள்ளவில்லை. அவரும் தான் சொன்னால் மனைவி அதை ஆமோதிக்க வேண்டும் என்று நினைக்கும் ரகம்தான்.



அவருக்கு தனது அண்ணன் என்றால் உயிர். உலகத்திலேயே அண்ணன் தம்பி பாசம்தான் உயர்ந்தது என்பது போல கண்கள் பனிக்கப் பேசுவார்.



அந்த அப்பாவின் உயிருக்குயிரான அண்ணனான பெரியப்பாவிடம் துளசி யேர்மனிக்கு வந்த போது பெரியப்பா அவளை அன்பிலே குளிப்பாட்டினார். அம்மா, அப்பாவைப் பிரிந்து வந்த பிரிவின் துயரை அவளும் பெரியப்பாவின் அன்பிலும் அணைப்பிலும் மறக்க முயன்றாள்.



பெரியப்பா எப்போ பார்த்தாலும் தமிழரின் கலாச்சாரம் பண்பாடு.. மரபு போன்றன பற்றியே வீட்டில் பெரியம்மாவுடன் பேசிக் கொண்டிருப்பார். வீட்டில் மட்டுமல்ல வெளியிலும் எல்லோருடனும் எல்லா விடயங்களிலும் கலாச்சாரம் சம்பிரதாயம் மரபு போன்ற விடயங்களைச் சொல்லிச் சொல்லியே பழகுவதும் செயற் படுவதுமாய் இருப்பார். மானம் மரியாதை என்று நிறையவே பேசுவார்.



குடும்பமானத்துக்கு எந்தக் களங்கமும் வந்து விடக் கூடாதெனச் சொல்லி ஆண்கள் எவரும் கண்ட படி வீட்டுக்குள் நுழைவதற்கு அனுமதிக்க மாட்டார். துளசி கலாச்சாரத்திலிருந்து வழுவி விடாதிருக்க வேண்டுமென்று வலியுறுத்தி அதனைச் சாட்டாக வைத்தே அவளை எந்த ஆடவனுடனும் பழக விட மாட்டார்.



ஊரிலிருந்த சுதந்திரம் கூட புலத்தில் மறுக்கப் பட்டதில் துளசி மிகவும் சங்கடப் பட்டாள். பன்னிரண்டு பதின்மூன்று வயதுகளில் உடலில் ஏற்படும் இயல்பான மாற்றங்கள் ஒரு புறமும், அந்த நேரக் கனவுகள் ஆசைகள் குழந்தைத் தனம் கலையாத தன்மைகள் போன்றவற்றால் ஏற்படும் உணர்வின் மாற்றங்கள் இன்னோரு புறமுமாய் துவண்டாள். கலாச்சாரம் என்ற பெயரில் பெரியப்பா போட்ட வேலிக்குள் நண்பிகள் கூட இன்றி தனிமைப் பட்டாள்.



அவளுக்குச் சில வேளைகளில் இது அதீதமான கவனம் என்பது போலவே படும். இருந்தாலும் அவள் அப்பாவின் பிரியத்துக்குரிய பெரியப்பாவின் சொல்லுக்கு எதிர்த்துப் பேசுவதோ மறுத்துப் பேசுவதோ கிடையாது. அவர் வகுத்த கோட்டிலேயே வாழ்ந்தாள். பன்னிரண்டு வயதில்தானே யேர்மனிக்கு வந்தவள் என்பதால் யேர்மனியில் பிறந்து வளர்ந்த தாயகத்துப் பிள்ளைகளிடம் உள்ளது போன்ற தன்மைகள் அவளிடம் இல்லை. யாரிடமும் எந்தப் பிரச்சனையையும் சொல்லுமளவுக்கு துணிவும் இல்லை.



இதுவே பெரியப்பாவுக்கு சாதகமாகி விட்டது. சாதகமானது என்று சொல்வதை விட அவர் அதற்கேற்ற படிதான் அவளை இந்த ஒரு வருடமாய்ச் செப்பனிட்டார். அன்பு காட்டுவது போல நடித்து கலாச்சாரம் என்ற பெயரால் அடக்கி அடக்கி உளரீதியாக அவளைப் பயந்தாங்கொள்ளி ஆக்கி வைத்திருந்தார்.



இதிலிருந்து மீள்வதற்கான எந்த வழியும் துளசிக்குத் தெரியவில்லை. பெரியம்மா காலையில் வேலைக்குப் போனால் மாலைதான் வருவா. துளசி வீட்டில் இருப்பதால் அவளின் உதவியும் அவவுக்கு வீட்டு வேலைகளில் கிடைப்பதால் அவ சந்தோசமாகவே இருந்தா. ஐம்பது வயசு தாண்டி விட்ட பெரியப்பா பற்றி அவ அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. அவருக்கு சமைத்துச் சாப்பாடு கொடுத்து உடைகளை மெசினில் கழுவி அயர்ண் பண்ணிக் கொடுத்து, இரவுகளில் அவர் ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதுடன் தன் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறா.



மேற்கொண்டு அவர் என்ன செய்கிறார் என்பது அவவுக்குத் தெரியாது. அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரி பாவனை. அல்லது கலாச்சார சீலராக வாழ்பவர் போல நாடகமாடும் கணவரில் அத்தனை நம்பிக்கை. இப்படித்தான் துளசிக்கு எண்ணத் தோன்றியது.



துளசிக்கு எண்ணத்தான் தெரியுமே தவிர எண்ணியதை எடுத்தியம்பத் தெரியாது. இல்லாவிட்டால் சில வாரங்களுக்கு முன், மதியமே விடுப்பு எடுத்துக் கொண்டு வந்த பெரியப்பாவின் அன்பு போலியாகிப் போனத, அவளாகவே சென்று பெரியம்மாவிடம் சொல்லியிருப்பாள். அல்லது இன்று காலை அவளது அப்பா ரெலிபோனில் அவளை அழைத்துப் பேசிய போது அப்பாவிடமாவது சொல்லியிருப்பாள்.



துளசி அழுது அழுது ஓய்ந்து கதிரைக்குள் சுருண்டபடி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மீண்டும் மீண்டுமாய் புலி மானைத் துரத்துவதும், ஆட்டுக்குட்டியைத் துரத்துவதும் கடித்துக் குதறுவதுமாய் தொலைக்காட்சியில் காட்சிகள் அவலமாய் ஓடிக் கொண்டிருந்தன.



துளசியின் நினைவுகள் தொலைக்காட்சியில் நிலைப்பதுவும் வெளியில் அலைவதுமாய் அந்தரித்துக் கொண்டிருந்தது. ஏன் உலகம் இப்படி இருக்கிறது. ஒன்றையொன்று விழுங்குவதாய்.. குதறுவதாய்.. "என்ரை வகுப்பிலை படிக்கிற மற்றப் பிள்ளையளுக்கும் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ..? அiயைளின்ரை பெரியப்பாமாரும் இப்பிடித்தான் இருப்பினையோ..? ஆரோடை அவை இதையெல்லாம் கதைப்பினம்... " என்று ஏதேதோ பதில் கிடையாத குழப்பமான கேள்விகள்.. அவளைக் குடைந்து கொண்டிருந்தன.



திடீரென்று வீட்டுக்கதவு திறக்கப் பட பெரியப்பா உள்ளே நுழைந்தார். துளசிக்கு நெஞ்சு திக்கென்றது. உடல் நடுங்கிப் படபடத்தது. வழமையில் மாலையில்தான் வேலை முடித்து வீடு திரும்புவார். இன்று மதியத்தோடே விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து விட்டார். இப்படித்தான் இப்போ அடிக்கடி செய்கிறார். துளசிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்காவது ஓடி விடலாமா என்ற யோசனை எப்போதும் போல் வந்தது. எங்கே ஓடுவது? அதுதான் அவளுக்குத் தெரியாது.



இப்ப கூட எங்காவது ஓடலாமா என நினைக்கிறாளே தவிர எங்கே ஓடுவது? ஓடிப் போய் என்ன செய்வது? யாரிடம் உதவி கோருவது? என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது.



பெரியப்பா நேரே அவளிடம் வந்து அவளை அணைத்து "என்னம்மா துளசி பள்ளிக்கூடத்தாலை வந்திட்டியே.. பெரியம்மா இன்னும் வரேல்லைத்தானே..!" அணைப்பை இன்னும் இறுக்கினார். யேர்மனிக்கு வந்த காலங்களில் இந்த அணைப்பே அவளுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இப்போ.... உடம்பு கூசியது.



தொலைக்காட்சியில் மீண்டும் மான்குட்டியொன்றை ஓநாயொன்று விட்டுக் கலைத்துக் கொண்டிருந்தது. துளசியினுள் மீண்டும் பிரார்த்தனை.

"காப்பாற்று..... காப்பாற்று....." ம்.. கும்.. யார் காதிலும் அவள் பிரார்த்தனை விழவில்லை. அது பெரியப்பாவின் சிகரெட் வாசனை கலந்த அருவருப்பான இறுக்கத்துக்குள் அமிழ்ந்து கரையத் தொடங்கியது.



மான்குட்டி ஓநாயின் வாயில் கிழிபட்டு.... இழுபட்டு..........

மான்குட்டியின் கதை இன்றோடு முடிந்து விட்டது.

ஐம்பது வயது தாண்டிய பெரியப்பாவிடம் மான் குட்டியான துளசியின் கதை எங்கே போய் எப்போது முடியப் போகிறது..?



சந்திரவதனா

யேர்மனி.

மார்ச் - 2003