Thursday, January 05, 2006

உயிர்ப்பு - ஒரு பார்வை

உசா யவாகரின் மலரொன்று கருகுகின்றதோ!

எந்த நாடு எந்தத் தேசம் எதுவாயினும் பெண் என்பவளுக்கு ஏற்படுகின்ற சில துயர்கள் தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றன. உசா யவாகரின்
மலரொன்று கருகுகின்றதே கதையும் இப் பிரச்சனையைத் தொட்டுள்ளது.

ஆபிரிக்கக் கண்டத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப் பட்ட இக்கதையில் சம்பியா நாட்டைச் சேர்ந்த விக்டோரியா என்ற 20வயது இளம்பெண் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பத்தில் பணிப்பெண்ணாய் பணி புரிகிறாள். அந்தக் குடும்பத்தில் நல்லவளாய் முத்திரை பதித்து நட்போடு பழகும் அவள் தனது பணியை நேர்த்தியாகவும் விசுவாசத்தோடும் செய்யும் ஒருத்தியாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறாள்.

அவள் தனது 16வது வயதிலேயே நண்பன் என்ற பெயரோடு பழகிய ஒருவனால் தாயாக்கப் பட்டுக் கைவிடப் பட்டவள். தற்போது மீண்டும் ஒருவனோடு நட்பாகி மோதிரம் மாற்றி திருமண பந்தத்தில் இணைந்த போது எயி;;;ட்சையும் அவனிடமிருந்து பெற்று இறந்து போகிறாள்;.
இரு ஆண்களிடமிருந்தும் சுகத்தையும் விட சுமைகளையே அதிகமாகப் பெற்ற விக்ரோறியாவின் இறப்பு கதாசிரியரின் மனதில் ஏற்படுத்திய பாதிப்பும் விரக்தியும் கதையின் முக்கிய அம்சங்களாக இருந்தாலும் கதையில் இன்னும் பல விடயங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.

குறிப்பாக எந்தப் புலத்தைக் கொண்டு ஒரு சிறுகதை அமைகிறதோ அந்தப் புலத்தோடு வாசகரை அழைத்துச் செல்வதும் அந்தப் புலம் பற்றிய செய்திகளை கதையினூடு வாசகனுக்குத் தருவதும் சிறப்பானது.
அந்த வகையில் உசா யவாகர் வெற்றி கண்டுள்ளார். கதையில் கிடைத்த பல சுவையான தகவல்களில் சம்பியாவில் முருங்கைக்காய் மரங்கள் இருப்பதுவும் முருங்கைக்காயை அவர்கள் னுநஎடை ளவiஉம என்பதுவும் நான் அறிந்திராத தகவல்கள்.

கதை இத்தனை நீளமாக இல்லாமல் குறுகலாக இருந்திருந்தால் நறுக்கென்று அமைந்த மிகஅருமையானதொரு கதையாக மிளிர்ந்திருக்கும்.

அ.சந்திரகாசனின் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடி

கலை வளர்பதும் தமிழ் வளர்ப்பதும் தமை வளர்ப்பதற்க்கு என்ற நிலை புலத்தில் மட்டுமல்ல தாய்நிலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனாலும் புலத்தில் கலை என்றால் என்னவென்றே தெரியாத… தமிழ் மேல் துளி கூட அக்கறையில்லாத… சிலர் கலை வளர்ப்பதாகவும் தமிழ் வளர்ப்பதாகவும் சொல்லிக் கொண்டு தமது அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாகவே இருக்கின்றன. இப்படியானவர்களின் பாசாங்கும் போலியும் ஓரளவு சிந்திக்கக் கூடியவர்களுக்குப் புரியாமலும் இல்லை. அ.சந்திரகாசனின் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடியும் இப்படியான போலிகளைத்தான் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

தமிழ் தமிழ் என்று மேடைகளில் முழங்கும் பல பிரபலங்களின் பிள்ளைகள் தமிழே தெரியாமல் இருப்பதை நாம் நடப்பிலே பார்த்திருக்கிறோம். இக்கதையிலே தமிழுக்குச் சேவை செய்வதற்காகவே சிட்னி தமிழ்ப்பாடசாலையின் தலைவராகத் தெரிவு செய்யப் படுகிறார் கணேசானந்தம். தமிழ்ப்பாடசாலையில் தமிழ் கற்பிப்பது மட்டும் போதாது. வீட்டிலும் தமிழிலேயே பேசுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றார்; ஆனால் இவ்வளவு பெரிய அந்தஸ்து வந்த பின் அவர் மகன் வெளியிலே ஆட் களின் முன் தன்னோடு தமிழில் பேசி மானத்தை வாங்கி விடக் கூடாது என்ற மனைவியின் வேண்டுகோளை ஆமோதிக்கிறார். இது உடனடியாகச் சிரிப்பை ஏற்படுத்தினாலும் சிந்திக்கும் போது எமது சமூகத்தின் ஆரோக்கியக் கேட்டை உணர்த்துகிறது.


ரதியின் நெருடல்

அம்மா தெய்வத்துக்குச் சமனானவள்தான். அம்மாவுக்காக மகன் எதையும் விட்டுக் கொடுப்பதுவும் மகனுக்காக அம்மா விட்டுக் கொடுப்பதும் எத்தனை சங்கடமானாலும் இயல்பிலே நடக்கக் கூடிய விடயங்கள். ஆனால் இங்கே இவர்களிடையே மனைவி என்றொருத்தி வரும் போது புரிந்துணர்வுகள் சரியாக அமையாத போது தவிர்க்க முடியாத பல சங்கடங்கள் ஏற்படலாம்.

ரதியின் நெருடல் இந்தியாவைப் பின் புலமாகக் கொண்டு எழுதப் பட்ட கதையாயினும் ஒரு சாதாரண குடும்பத்தில் ஏற்படக் கூடிய அம்மா மகன் மனைவிக்கு இடையிலான யதார்த்தமான இந்தப் பிரச்சனையைத் தொட்டிருக்கிறது;

இந்தக் கதையில் அம்மாவின் சில புரிந்துணர்வற்ற தன்மைகளும் அதனாலான சிக்கல்களும் அம்மாவை முதியோர் விடுதியில் சேர்க்குமளவுக்கு வருகிறது. இது குற்ற உணர்வுடனான சலனத்தை ஏற்படுத்தினாலும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நினைப்பில் வீட்டிலே குறையும் கூப்பாடுமாய் இருப்பதை விட அவரவர்க்கு ஏற்ற வழியில் தனியாக வாழ்வது சந்தோசத்தையும் நிம்மதியையும் தரலாம் எனபதை உணர்த்துகிறது.

கதையில் கதாசிரியர் அம்மாவைச் சந்தோசமாக வைத்திருப்பது மட்டுமல்ல… மனைவி குழந்தைகளையும் சந்தோசமாக வைத்திருப்பது ஒரு ஆணின் கடமை என்ற நல்ல விடயத்தையும் சுட்டியுள்ளார்.

கதையில் வரும் சம்பாசணைகளை பேச்சுத் தமிழிலேயே தந்திருந்தால் கதையிலும் யதார்த்தம் மிளிர்ந்திருக்கும். கதாசிரியரின் வாழ்நில வட்டாரச் சொற்களும் வாசகருக்குக் கிடைத்திருக்கும்.


சாந்தா யெயராயின் அம்மா இல்லாத ஒரு மணி நேரம்

அம்மா…! எமது இளமைப்பருவத்தில் அவள் இல்லாத பொழுதுகளை எம்மால் எண்ணிப் பார்க்கவே முடியாது. ஏமக்கு எல்லாமே அவளாகத்தான் இருப்பாள். இந்த நிலையில் அவளின் இறப்பு என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

சாந்தா யெயராயின் அம்மா இல்லாத ஒரு மணி நேரம் அம்மா இறந்து விட்டதாகக் கனவு கண்ட ஒரு பெண்ணின் கதை.

செல்லமாகவும் வசதியாகவும் புலத்தில் வளர்ந்த ஒரு பதினைந்து வயதுப் பெண் திடீரென அம்மாவை இழந்து விட்டால் அவளின் உணர்வுகள் எப்படியிருக்கும் என்பதை சாந்தா யெயராய் சொன்ன விதம் மிக அழகாக அமைந்துள்ளது.

ஆனால் அம்மா இறந்து விட்டதாகக் கனவு கண்ட ஒரு பெண்ணின் கனவில் இத்தனை விடயங்களும் வந்து விடுமா என்பது கேள்விக் குறியாகிறது. அம்மா திடீரென இறந்து விட்டால்… நினைத்துப் பார்க்கவே முடியாத விடயம். அதைக் கற்பனை பண்ணிப் பார்க்கும் போது இத்தனை உணர்வுகளும் ஒருங்கே வந்து விடுமா?

ரவியின் கரைந்துரையும் நாகங்கள்

புலம் பெயர்ந்தாலும் நாம் எமது ஊர் எம்மவர் என்ற ஒரு பற்;றுதலோடும் உண்மையாகவே உதவும் நோக்கோடும் வாழ்பவர்கள் மிகச்சிலரே. இக் கதையில் வரும் பி.எம் மும் அப்படியான ஒரு நன்நோக்குடையவர்.
உணவுவிடுதி ஒன்றை நடாத்தி தானும் வாழ்ந்து ஊருக்கும் உதவிக் கொண்டிருக்கும் அவரின் இனப்பற்றும் ஊர்ப்பற்றும் இயல்பாகவே அவரை மற்றவர்களுக்கும் உதவ வைத்தது.

அவரது அந்த நன்நோக்கை தனக்குச் சாதகமாக்கி அவரது உதவியைப் பெற்று அவரது உணவு விடுதியிலே வேலை செய்து தன்னை நிலைப் படுத்திக் கொண்ட ஒருவர் அவருக்கு எதிராகச் செயற்பட முனைந்தது
ஊரிலே இரும்புக்கடையில் வேலை செய்த ஒருவர் சில வருடங்களில் தானே இரும்புக்கடை ஒன்றை திறந்த ஏமாற்று வித்தையை ஞாபகப் படுத்தியது.

புவனா இராசரட்ணத்தின் அர்த்தங்கள்

பணம் தேடுவது ஒரு அவசியமான செயற்பாடாயினும் புலத்தில் சக்திக்கு மீறி வீடு கார் தளபாடம் என்று வாங்கி விட்டு அதற்காக தமது வாழ்வைத் தொலைப்பவர்கள் பலர். இவர்களில் பலர் தமது பிள்ளைகளுக்கு அந்தந்த வயதில் தேவைப்படும் அன்பு அணைப்பு ஆதரவைப் பற்றிச் சிந்;திப்பதேயில்லை. பணத்தாலும் பொருளாலும் பிள்ளைகள் திருப்தி அடைந்து விடுவார்கள் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு பிள்ளைகளையே தொலைத்து விடுவார்கள்.

புவனா இராசரட்ணத்தின் அர்த்தங்கள்; கதையிலும் பெற்றோர் வேலை வேலை என்று திரிய வீட்டில் எந்தப் பிடிப்பும்; இல்லாத சூழ்நிலை உருவாக மகன் முரளி போதை மருந்துக்கு அடிமையாகிறான். நீட்டி முழக்காமல் நறுக்கெனச் சொல்லப் பட்ட சிந்திக்க வைக்கும் கதை.

கல்லோடைக்காரனின் மறக்குமா மண்வாசைன…?
சிலர் புலம் பெயர்ந்து எத்தனை வருடங்கள்தான் ஆனாலும் அங்குள்ள நல்லவைகளைக் கண்டும் அனுபவித்தும் அந்தச் சூழலை தமக்குச் சாதகமாக்கி மகிழ்ச்சி கொள்வதை விடுத்து எப்போதுமே ஊரிலுள்ளவைகளையும் ஊரில் வாழும்போதான காலங்களையும் ஒப்பிட்டு ஒப்பிட்N;ட ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.

இந்தக் கதையில் அவுஸ்திரேலிய மண்ணில் வாழும் ஒருவர் ஒவ்வொரு விடயத்தையும் ஊர் நடப்புகளோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு மனம் பொருமுகிறார். ஊர் நினைவுகள் மறக்க முடியாதவைதான். அதற்காக அதையே நினைத்து ஏங்கி ஏங்கி இப்படி வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்த்தும் விதமான கதை. சொல்ல வந்த விடயம் நல்ல விடயம். சற்றுக் குறுக்கிச் சொல்லியிருந்தால் சொன்ன விதமும் மிக நன்றாக அமைந்திருக்கும்.


நித்தியகீர்த்தியின் அது ஒரு பருவகால விளையாட்டு

இணையமும் மின்னஞ்சலும் காதல் பரிமாற்றங்களுக்கான ஊடகங்களாக மாறிவிட்ட இனறைய காலத்திலும் வேலியினூடு காதல் கடிதங்களைப் பரிமாறிய அன்றைய காலத்திலும் காதல் ஒன்றேயானாலும் அதனது வெளிப்பாடுகள் வேறுவிதமான சந்தோசங்களைத் தருவனவாக இருந்தன.

நித்தியகீர்த்தி அவர்களின் அது ஒரு பருவகால விளையாட்டு சொல்ல வந்த விடயம் வேறு கோணத்தில் கனமாக இருந்தாலும் கதையை வாசிக்கும் போது அன்றைய காதலும் வேலிச்சண்டையும் கறுத்தக்கொழும்பான் மாம்பழமும்.. என்று மெல்லிய கிளுகிளுப்புடன் எம்மை அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறது.

கவித்துவம் கலந்து நளினமாக எழுதப் பட்ட இக் கதையின் சாராம்சம் -சமூகம் அந்தஸ்து... என்ற போலி கௌரவங்களுக்கு பலிக்கடாவாகிப் போன வாணி என்ற ஒரு பெண்ணின் வாழ்வைக் கொண்டுள்ளது. பருவத்தே அரும்பிய ஒரு காதல் காரணமாக அவள் 17வயதிலேயே தன்னை விடப் 12வயது அதிகமான நந்தகுமாருக்கு மனைவியாக்கப் பட்டு விட்டாள். அம்மாவின் போலி கௌரவந்தான் அதற்கு முக்கிய காரணம்.

வாணியால் அந்த வயதில் அம்மாவை மீற முடியவில்லை. தற்கொலை செய்யும் எண்ணத்தையோ எங்காவது ஓடி விடும் எண்ணத்தையோ அவளால் செயற் படுத்தவும் முடியவில்லை. அதற்குள் அவள் தாயாகியும் விட்டாள். ஆனாலும் திருமண பந்தத்தில் அவள் மனம் ஒட்டவுமில்லை. ஒரு வேளை நந்தகுமார் வாழ்வின் சூட்சுமங்களை அறிந்தவராக அவளேர்டு வேறு மாதிரிப் பழகியிருந்தால் அவளும் பழசுகளை மறந்து குடும்பத்துக்குள் முழுமனசோடு இணைந்திருக்கலாம். அது நடக்கவில்லை. 23 வருடங்களின் பின் தன் மகனுக்கும் ஒரு வாழ்வு அமைந்த பின் அவள் நந்தகுமாரை விட்டுப் போகத் துணிகிறாள். ஒரு புரட்சியான கதைதான்.

ஆனால் எத்தனை ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் கணவன் மனைவியை விட்டுப் போவது என்பதும் மனைவி கணவனை விட்டுப் போவது என்பதும் அத்தனை சுலபமான விடயமல்ல. அது சிலரால் மட்டுமே முடிந்த விடயம். இங்கு வாணியின் குணாதிசயத்தைப் பார்த்தால் அவளிடம் 23 வருடங்களாக அந்தத் துணிவு இல்லை. 23 வருடங்களாக வராத அந்தத் துணிவு 23வருடங்களின் பின் அவளிடம் வருமா என்ற ஒரு கேள்வி என்னுள் எழுகிறது.

இப்படியான ஒரு புரட்சியான முடிவைச் சொன்ன கதாசிரியரின் மனதில் பெண்கள் அழகாக உடுத்துவதும் நகைகள் அணிவதும் தமது அழகைப் புருசனுக்குக் காட்டுவதற்கோ அன்றி வேறு ஆண்களுக்குக் காட்டுவதற்கோ
என்ற தப்பான அபிப்பிராயம் பதிந்துள்ளது என்பதைக் கதையினூடு காண முடிகிறது.

எஸ். கிருஸ்ணமூர்த்தியின் பசி

பணத்தால் எதையும் வாங்கி விடலாம் என்பது பலரின் நினைப்பு.
எவ்வளவுதான் பணம் இருந்தாலும் சிலதை எம்மால் வாங்கி விட முடியாதென்ற உண்மையை எஸ். கிருஸ்ணமூர்த்தியின் பசி
உணர்த்துகிறது.

அவுஸ்திரேலியாவில் வசதியான சூழ்நிலையில் வாழும் தர்சனிடம்
பணம் போதுமான அளவு இருந்தும் பக்கத்தில் கடைகள் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் மகளின் பசியை போக்க முடியவில்லை. மகள் பசியால் துடித்த போதுதான் இhழத்தில் உணவின்றி அல்லலுறும் உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற உத்வேகம் எழுகிறது.

சுருக்கமாக நல்ல விடயமொன்றை மற்றவர்களுக்கு உணர்த்தி விட்ட கதை.


களுவாஞ்சிக்குடி யோகனின் அன்னம்

காதலும் தோல்விகளும் என்றைக்குமே தவிர்க்க முடியாதவை. காதல் தோல்விகள் எமது பெண்களைக் கூனிக் குறுகவைத்ததும் தற்கொலை வரை கொண்டு சென்றதும் போராட்டம் என்ற ஒன்று எமது நாட்டில் தொடங்குவதற்கு முன் சற்று அதிகமாகவே இருந்திருக்கிறது.

களுவாஞ்சிக்குடி யோகனின் அன்னம் அன்றைய சீர் சீதனங்களில் காதலைத் தொலைத்தவள். ஏறத்தாள 40-45வருடஙகளின் முன் காதலிப்பதே பாவமெனக் கருதப் பட்ட சூழலில் வாழ்ந்த அன்னமும் தற்கொலை வரை செல்லத் தயங்கவில்லை. ஆனாலும் சாகவில்லை.

உறவினரையோ காதலனாக இருந்து ஏமாற்றிய ஆறுமுகத்தையோ பார்க்க விரும்பாமல் சிங்கப்புhருக்குச் சென்று விட்டாள். அங்கு ஒரு சந்தர்ப்பத்தில் சைமன் என்பவரோடு மனம் ஒத்துப் போக அவரோடு தன் வாழ்வையும் இணைத்து அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து விட்டாள். ஆனாலும் மனதின்; அடியில் ஆறுமுகத்தின் மீதிருந்த வெறுப்பு மட்டும் அவளை விட்டு அகலவில்லை. தனது 65வது வயதில் ஒரு திருமண வைபவத்தில் எதிர் பாராத விதமாக அவனைக் காண நேர்ந்த போது உடனேயே அங்கிருந்து வெளியேறி நாட்டுக்குத் திரும்புகிறாள்.

கதை சற்று நீளமாக இருந்தாலும் சொல்லப் பட்ட விதம் நன்றாக உள்ளது. ஆனாலும் புதிய சிந்தனையோடு வெளிநாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுமளவுக்கு தன்னை மாற்றிக் கொண்ட அன்னம்
ஆறுமுகததைக் கணடதும் அவ்விடத்தை விட்டு நகர வேண்டுமா எனவும் எண்ணத் தோன்றுகிறது.

சந்திரவதனா
6.1.2006

Monday, December 12, 2005

பெண்மனசு - 1 (ஏன்தான் பெண்ணாய்...?)

எனக்கு ஒண்டுமே பிடிக்கேல்லை. எல்லாரிலையும் கோபம் கோபமா வருது. எதுக்கெடுத்தாலும் "பொம்பிளைப் பிள்ளை நீ" எண்டு கொண்டு......! ஏன்தான் இப்பிடிப் பொம்பிளைப் பிள்ளையாப் பிறந்தனோ......!

ஞாயிற்றுக் கிழமை எண்டால் எல்லாரும் எவ்வளவு சந்தோசப் படுவினம். எனக்கு மட்டும் ஞாயிறுகள் எல்லாம் ஏன்தான் வருதோ எண்டிருக்கு.

பின்னை என்ன......! ஞாயிறு எண்டு சொல்லி என்னைப் படுக்க கூட விடமாட்டினமாம். பொம்பிளைப் பிள்ளை இப்பிடி வெய்யில் படு மட்டும் நித்திரை கொள்ளுறதோ.......! எண்டு அப்பா சத்தம் போட்டு எழுப்பிப் போட்டார். இந்த அப்பா எப்பவும் இப்பிடித்தான். அம்மாவும் அப்பா சொல்லுறதுக்கு மறுத்து ஒண்டும் சொல்லமாட்டா.

அம்மா சொல்லலாம் தானே "அவளை ஏனப்பா எழுப்பிறீங்கள்.
ஞாயிற்றுக்கிழமைதானே கொஞ்சம் படுக்கட்டுமன் விடுங்கோ" எண்டு. அதில்லை, அப்பா ஊதுற சங்கை தான் இன்னும் கொஞ்சம் பெலத்தா ஊதுறதுதான் தனக்கு அழகு எண்டு நினைக்கிறா அம்மா. நான் என்ன செய்யிறது....?

என்ரை வகுப்புப் பிள்ளையளெல்லாம் சொல்லுங்கள், தாங்கள் ஞாயிற்றுக் கிழமையிலை பன்ரண்டு மணிமட்டும் நித்திரை கொண்ட கதையளையும், இரண்டு மணிமட்டும் நித்திரை கொண்ட கதையளையும். அதையெல்லாம் கேக்க எனக்குப் பொறாமையா இருக்கும். எனக்கு அதுகளைப் போல நீண்ட நித்திரைக்கெல்லாம் வழியே இல்லை.

எனக்குப் பார்த்தால் சில வேளை அம்மாக்கே ஞாயிறிலை கன நேரம் நித்திரை கொள்ள ஆசை இருக்கிற போலை தெரியும். ஆனால் அப்பா விடியக் காத்தாலை கண்ணை முழிச்சிடுவார். அவருக்கு தேத்தண்ணி குடிக்கிறதுக்கு அம்மா வேணும். ஒரு தேத்தண்ணி போடுறது பெரிய வேலையே. எழும்பிப் போய் போட்டுக் குடிக்கிறதுதானே. ஒரு தேத்தண்ணிக்காண்டி அம்மான்ரை நித்திரையைக் குழப்பி எழுப்போணுமே. ஆனாலும் எழுப்பிப் போடுவார். அம்மா பெட் (Bed) தேத்தண்ணி குடுத்தாப் போலைதான் அவர் படுக்கையை விட்டு எழும்புவார்.

இந்த பெட்-கோப்பி, பெட்-ரீ எல்லாம் வெளிநாட்டு ஸ்ரைலிலை நடக்கும். அந்த ஸ்ரைலும் அப்பாக்கு மட்டும்தான். எழும்பி பல்லைத் தீட்டி முகத்தைக் கழுவிப் போட்டு தேத்தண்ணியைக் குடிக்கலாம்தானே . கேட்கத்தான் மனம் வரும். ம்..கும் பிறகு நான் கேட்கப் போக அப்பா கத்த பிறகு அம்மா கத்த... ஏன் அந்த களேபரமெல்லாம்! அந்தக் களேபரத்தோடை என்ரை பிரச்சனை தீர்ந்திடுமெண்டாலும் பரவாயில்லை. அப்பா பிடிச்ச முயலுக்கு எப்பவும் மூண்டு கால்தான். அதை ஓமெண்டு சொல்லிச் சொல்லியே அம்மாக்கும் பழகீட்டுது. அதுக்காண்டி நானும் ஓமெண்டேலுமே......!

நித்திரை மட்டும் தான் பிரச்சனை எண்டால் பரவாயில்லை. ஞாயிற்றுக் கிழமை எண்டாலே நாள் முழுக்க நான் இந்த வீட்டுக்குள்ளைதான் அடைஞ்சு போய்க் கிடக்கோணும். அண்ணா தம்பி ரண்டு பேரும் எவ்வளவு நேரம் வேணுமெண்டாலும் மூசி மூசி நித்திரை கொண்டிட்டு எழும்புவாங்கள். பிறகு சாப்பிட்டிட்டு ஊர் சுத்தப் போடுவாங்கள்.

நான் மட்டும் இங்கை தனிய இருந்து எப்பவும் இந்த ரீவீ யைப் பார்த்துக் கொண்டு..., எனக்கு அப்பாவிலை சரியான கோபம் கோபமாய் வருது. அம்மாவாவது சில நேரம் சிலதுக்கு அநுமதிப்பா. ஆனால் அவவும் சமயம் வாற போது அப்பான்ரை பக்கம் சாய்ஞ்சிடுவா.

இண்டைக்கு மிகைலாவின்ரை பிறந்தநாள். ஆறு மணியிலை இருந்து பத்து மணி வரை பார்ட்டி. என்ரை வகுப்புப் பிள்ளையள் எல்லாரும் போவினம்.

"அதென்ன இரவிலை பார்ட்டி! நாங்கள் யேர்மனியிலை வாழ்ந்தாலும் சிறீலங்கன்ஸ்தான். அதை மறந்திடாதை." எண்டு அப்பா கோவமாச் சொல்லித் தடுத்துப் போட்டு குசினிக்குள்ளை போய் அம்மாட்டை "இஞ்சை பாரும், இப்பிடி பார்ட்டி அது இதெண்டு போய்த்தான் பிள்ளையள் கெட்டுப் போறதுகள். அவளுக்குச் சொல்லி வையும், இனி இப்பிடியான விசயங்களுக்குப் போப்போறன் எண்டு என்னைக் கேட்கக் கூடாதெண்டு." எண்டு கத்துறார். எனக்கு அழோணும் போலை இருந்திச்சு.

நான் அழுதாலும் இவையளுக்கொண்டும் பிரச்சனையில்லை. அம்மாவைப் பார்த்தால் சிலவேளை எனக்காண்டிக் கவலைப் படுறா போலை இருக்கும். ஆனால் ஒண்டும் சொல்ல மாட்டா.

ஏதோ வெளிநாட்டுக் காரர் பிள்ளையளை வளர்க்கிறது சரியில்லை எண்ட மாதிரி என்ரை அப்பா, அம்மா, அவையளின்ரை சினேகிதர்கள் எல்லாரும் சேர்ந்து கதைப்பினம். ஆனால் உண்மையிலை வெளிநாட்டுக் காரர்தான் பிள்ளையளின்ரை மனஉணர்வுகளுக்கு மதிப்புக் குடுத்து வளர்க்கினம் எண்டது இவையளுக்குத் தெரியேல்லை. இதுகளை நான் சொல்லப் போனால் இவையள் கேட்பினமே..!

ஒரு பதினாலு வயசுப் பிள்ளைக்கு எத்தினை ஆசையள் இருக்கும். என்ரை வயசுப் பிள்ளையளெல்லாம் எவ்வளவு சந்தோஷமா எங்கையெல்லாம் சுத்திக் கொண்டு திரியுதுகள். நான் மட்டும் இப்பிடி வீட்டுக்குள்ளை அடைஞ்சு போய்க் கிடக்கோணும் எண்டு இவையள் நினைக்கிறது சரியோ....! என்னெண்டு நான் இதையெல்லாம் இவையளுக்கு விளங்கப் படுத்துறதோ தெரியேல்லை.

வெளியிலை போனால் இப்ப என்ன வந்திட்டுது. அண்ணா, தம்பியவையள் மட்டும் நல்ல ஹாயா எங்கையோ எல்லாம் சுத்திப் போட்டு வருவினம். அதுக்கு அம்மாவும் அப்பாவும் ஒண்டுமே சொல்லமாட்டினம். ஏனெண்டால் அவையள் ஆம்பிளைப் பிள்ளையளாம்.

அவையள் சுத்திப் போட்டு வந்து "ஒரு தேத்தண்ணி போடு" எண்டுவினை. "ஏன்... நீ போட்டுக் குடியன்" எண்டு சொல்லத்தான் எனக்கு மனம் வரும். அதுக்கிடையிலை அம்மாவே சொல்லிப் போடுவா "பிள்ளை அவனுக்கு அந்த வடையையும் எடுத்துக் குடு" எண்டு. ஏன் ஆம்பிளைப் பிள்ளையளுக்கு கைகால் ஒண்டும் இல்லையோ...! ஏன் நான் எடுத்துக் குடுக்கோணும்...! இதையெல்லாம் கேட்கேணும் போலை இருக்கும். என்னெண்டு கேட்கிறது..!

அவங்களும் லேசில்லை. சும்மா புதுமை கதைப்பாங்கள். சேர்ட்டை மாத்துற மாதிரி அடிக்கடி கேர்ள்ல் பிரண்டையும் மாத்துவாங்கள். தாங்கள் வெளிநாட்டுப் பெட்டையளோடை உதட்டோடை உதடு உரசி அன்பைப் பரிமாறுறது ஒண்டும் தப்பில்லையாம். ஆனால் தங்கடை சகோதரி மட்டும் பெடியங்களைக் கண்டால் சிரிப்பைக் கூட அளந்துதான் உதிர்க்கோணுமாம்.

அது மட்டுமே, தங்களுக்கு மனைவியா வரப் போறவள் பயங்கர சுத்தமா இருக்கோணுமாம். அவள் கண்டிப்பா தாயகத்திலை இருந்து அடக்கமான பண்பான தமிழச்சியா வரோணுமாம், எப்பிடியிருக்கு இவையளின்ரை நியாயங்கள்.

இதுகளைப் பற்றி நான் மூச்சே விடக்கூடாதாம். ஏனெண்டால் அம்மா அப்பாவும் அண்ணாவையளின்ரை கொள்கையளுக்கு நல்ல சப்போர்ட். அம்மாவோடை சாடை மாடையா இதைப் பற்றி ஒரு நாள் கதைச்சுப் பார்த்தன். அவை ஆம்பிளைப் பிள்ளையளாம். அம்மா சொல்லி அந்த சப்டரையே என்னைத் தொடர விடாமல் குளோஸ் பண்ணீட்டா.

அம்மாவாலை என்னண்டு தான் இப்பிடி எல்லாம் வாழ முடியுதோ. எனக்கெண்டால் தெரியேல்லை. வாற கோபத்துக்கு எல்லாருக்கும் ஏதாவது சொல்லோணும் போலை கிடக்கு. என்னெண்டு சொல்லுறது...! உடனை அப்பா கத்துவார். "உப்பிடி வாய் காட்டிப் பழகாதை. பொம்பிளைப் பிள்ளை மாதிரியே வளர்ந்திருக்கிறாய்...!" எண்டு. அது மட்டுமே...! பிறகு அம்மாவோடையும் கத்துவார். "நல்ல வளர்ப்புத்தான் வளர்த்து வைச்சிருக்கிறீர்" எண்டு.

எனக்கு ஒண்டு விளங்கேல்லை. ஏன் பொம்பிளையள் ஏதும் கதைச்சால் அதை வாய் காட்டுறது எண்டு சொல்லோணும். என்ரை கருத்தை நான் சொல்லுறதுக்கு எனக்கு உரிமை இல்லையே! எனக்கு எல்லாரையும் விட அப்பாவிலைதான் பயங்கரக் கோவம். அப்பாவைக் கூப்பிட்டு இதையெல்லாம் கேக்கோணும் எண்டு இருக்கும்.

ஏதோ சனநாயகம், சர்வாதிகாரம்... எண்டெல்லாம் பெரிய அரசியல் கதைப்பார் அப்பா. இது கூட ஒரு வித சர்வாதிகாரம்தானே.

என்னை யேர்மன் ஸ்ரைலிலை பிறந்தநாள் விழாவுக்குப் போக வேண்டாமெண்டு சொல்லிப் போட்டு, தான் மட்டும் வெளிநாட்டு ஸ்ரைலிலை மேசையிலை போத்தலுகளும் கிளாசுகளுமா வைச்சுக் கொண்டிருந்து தன்ரை சினேகிதர்களோடை குடிச்சுக் கொண்டிருக்கிறார். எனக்கு ஒரே எரிச்சலும் கோபமும்தான் வருது. எவ்வளவு நேரத்துக்கெண்டு இந்த ரீவீயைப் (தொலைக்காட்சி) பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுவும் அப்பாக்கும் அவற்றை சினேகிதருக்கும் பிடிச்ச நிகழ்ச்சியளை மட்டும்.

அம்மா ரேஸ்ருக்கு (aste) ரோல் செய்து அப்பாவைக்குக் குடுத்திட்டு இடியப்பமும் அவிச்சு கறி, பொரியல் சொதியெல்லாம் செய்திட்டா. அப்பாவையள் ரோல்ஸ்சை சாப்பிட்டு முடிச்சிட்டினம். அதாலை ரேஸ்ருக்கு (taste) க்கு இன்னும் ஏதாவது வேணுமாம். அப்பா வந்து அம்மான்ரை காதுக்குள்ளை குசுகுசுத்துப் போட்டுப் போறார். அம்மா களைச்சுப் போட்டா எண்டுறது எனக்குத் தெரியுது. ஆனாலும் அம்மா முடிக்கி விட்ட பொம்மை மாதிரி வாயை மூடிக் கொண்டு கட்லட் செய்ய ஆயுத்தப் படுத்துறா. என்னைக் கூப்பிட்டு வெங்காயம் வெட்டித் தரச் சொல்லுறா.

எனக்கு அம்மாவோடை கதைக்கக் கூடப் பிடிக்கேல்லை. நாளைக்கு பள்ளிக்கூடத்திலை என்ரை பிரண்ட்ஸ் (Friends) எல்லாரும் கேட்பினம் ஏன் நீ Birthdaypartyக்கு வரேல்லை" எண்டு. ஏதாவது பொய் சொல்லோணும். அதுகளுக்கு இப்ப என்ரை நிலைமை ஒரளவு விளங்கீட்டுது. "துருக்கி அப்பாமார் மாதிரி உன்ரை அப்பாவும் பொல்லாதவரே? உன்னை ஒரு இடமும் விடமாட்டாரே?" எண்டு அண்டைக்கு ஸ்ரெபி கேட்டவள். எனக்கு எவ்வளவு வெக்கமா இருந்ததெண்டு இந்த அம்மாக்கோ, அப்பாக்கோ தெரியுமே?

இதுக்குள்ளை பிறகு அம்மா சொல்லுறா "பிள்ளை இந்தக் கோப்பையளைக் கழுவு" எண்டு. "மாட்டன்" எண்டு சொல்லோணும் போலை பயங்கரக்கோவம் எனக்கு வருது. ஆனால் என்னெண்டு சொல்லுறது. பேசாமல் கோப்பையளோடை சேர்த்து என்ரை ஆசையளையும் கழுவிக் கொண்டிருக்கிறன்.

ஒரு மனசு.
2001

Thursday, December 08, 2005

பெண்மனசு - 5 (பிரச்சனை)

இண்டைக்கு எப்பிடியாவது இந்தப் பிரச்சனையைப் பற்றி இவரோடை கதைச்சிடோணும். நேற்றே கதைச்சிருப்பன். ஆனால் நான் வேலையாலை வந்த நேரம் அவர் ஆரோடையோ தொலைபேசியிலை கதைச்சுக் கொண்டிருந்தார்.

கதைச்சு முடிஞ்சு வரட்டும் கதைப்பம் எண்டு நினைச்சுக் கொண்டு நான் என்ரை வேலையளைச் செய்து கொண்டிருந்தன்.

கதைச்சு முடிச்சிடோணும் எண்ட நினைப்பு மனசுக்கை இருந்ததாலையோ என்னவோ என்ரை வேலையள் சரியா ஓட மறுத்துக் கொண்டு நின்றன. தேநீரைப் போட்டுக் குடுத்திட்டு ஏதோ ஒரு ஒட்டாத் தன்மையோடை கணினிக்குள் புகுந்து, குசினுக்குள் அடுக்கி....

ம்...கும். அவர் இன்னும் கதைச்சு முடியேல்லை. நீட்டிலை கதைச்சுக் கொண்டே இருந்தார். சரியாக் காது குடுத்துப் பார்த்தன். ஒவ்வொரு விசயத்தையும் இரண்டு மூண்டு தரமா அளந்து கொண்டிருந்தார். இதெல்லாம் தேவையோ எண்டு நினைக்கிற விசயங்களையும் கதைச்சுக் கொண்டிருந்தார். பெண்களைக் கண்களா மதிக்கிறா மாதிரியும் இடையிடையிலை கதைச்சு, எதிர் முனையிலை இருக்கிறவனிட்டை தன்னைப் பற்றிய இமேஜ்யை உயர்த்த முயற்சித்தார்.

அரைகுறையா அவற்றை கதை என்ரை காதிலை விழுறதையும் என்னாலை தவிர்க்க முடியேல்லை. நேரமும் பத்து மணியாகீட்டுது. பத்துமணி எண்டத்தான் நான் வேலையாலை வந்து இரண்டு மணித்தியாலங்கள் கரைந்து விட்டன எண்டதும் உறைச்சுது.

சா... யன்னலுக்கு வெளியிலை ஒரே கும்மிருட்டு. வேலையிடத்திலை என்ரை தோழியர் "கோப்பி குடிக்கப் போவம் வா" எண்டு கேட்டவை. நான் "எனக்கு இண்டைக்குப் பஞ்சியா இருக்கெண்டு" பொய் சொல்லிப் போட்டு வந்திட்டன். லேற்றாப் போனால் இந்த மனுசன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் எண்டு சொன்னால் அதுகள் "ஏன் உன்ரை மனுசன் உன்னை வீட்டிலை தனிய விட்டிட்டு எத்திரை தரம் எங்கையோ எல்லாம் சுத்திப் போட்டு வந்தவன்" எண்டு சொல்லிப் பேசுங்கள்.

பேசாமல் அதுகளோடை போய் நாலு கதை கதைச்சு மனம் விட்டுச் சிரிச்சிட்டு வந்திருக்கலாம்.

இன்னும் மனுசன் தொலைபேசியிலை அளக்குது. மூன்று மணித்தியாலமா நானும் உம்மாண்டி மாதிரி முட்டு வீட்டுக்குள்ளை தட்டுப் பட்டுக் கொண்டு திரியிறன். இந்தப் பிரச்சனையை இண்டைக்கும் கதைச்சு முடிக்கேலாது போல கிடக்கு.

சரி சரி ஒரு மாதிரி மனுசன் தொலைபேசியை வைச்சிட்டுது. ஆனால் நேரந்தான் பதினொரு மணியாச்சு. இப்பப் போய் இந்தப் பிரச்சனையைக் கதைக்கேலாது. அவ்வளவு அவசரமா கதைச்சு முடிக்கிற விசயமுமில்லை இது. அதோடை இப்ப போய் நான் ஏதாவது கதைக்கு மனுசன் படுக்கிற நேரம் பிரச்சனையான கதையளைக் கதைக்காதை எண்டு சினக்க.. வேண்டாம். நாளைக்குக் கதைப்பம் எண்டு விட்டிட்டன்.

அதுதான் இண்டைக்காவது எப்பிடியாவது கதைச்சிடோணும் எண்ட நினைப்போடே பிள்ளையாரே...! கடவுளே...! இண்டைக்கு ஒருத்தரும் ரெலிபோன் பண்ணியிருக்கக் கூடாது எண்டு நினைச்சுக் கொண்டு கதவைத் திறந்தன். நல்ல காலம் ஒரு கதைச் சத்தமும் கேட்கேல்லை.

அந்தப் பெரிய சந்தோசம் ஒரு சின்ன செக்கனுக்குள்ளை ஓடிட்டுது. தொலைக்காட்சியிலை காற்பந்தாட்டம் நடக்குது. மெதுவா எட்டிப் பார்த்தன். மனுசனுக்கு என்ரை பக்கம் திரும்பக் கூட மனமில்லை. கண்களை தொலைக்காட்சிக்குள்ளை தொலைச்சுப் போட்டு சோபாக்குள்ளை சுருண்டு கிடக்குது.

சரி வழக்கம் போலை தேநீரைப் போட்டுக் குடுத்திட்டு தொலைக்காட்சியைப் பார்த்தன். விளையாட்டுத் தொடங்கி ஆகப் பத்து நிமிசங்கள்தான். சா... விளையாட்டு முறைப்படி முடியிறதெண்டாலே 70நிமிசங்கள் இன்னும் வேணும். இதுக்குள்ளை எத்தினை அளாப்பல். குழப்பம். இதுக்குள்ளை இடைவேளை. இதுகளோடை தேநீரையே கை நீட்டி வாங்க மறந்து தொலைக்காட்சியோடு இருக்கிற மனுசன். இண்டைக்கும் கதைக்கிறதெங்கை!
வெளியிலை பார்த்தன். கும்மிருட்டு. என் அறை லைற்றை அணைத்த போது இன்னும் இருட்டாய் இருந்திச்சு. மனசுக்குள் எரிச்சல் கும்மாளமிட்டது. பிரச்சனை மட்டும் எகத்தாளமாய் என்னைப் பார்த்துச் சிரித்தது.

- பெண்மனசு -

பெண்கள் சந்திப்புமலர் 2004 ஒரு பார்வை

சுயம், சுதந்திரம்... போன்றவற்றின் பொருள் சரியாக உணரப்படுகிறதா என்ற சந்தேகம் அடிக்கடி எழுகிறது. பெண்விடுதலை என்றால் என்ன என்பது பலருக்கும் புரியவில்லை.

"இவ்வளவு கொடுத்து விட்டோமே! போதாதா?" என்றும், "இதற்கு இதற்கு எல்லாம் அனுமதியளிக்கிறோமோ! திருப்தியில்லையா?" என்றும், "இதற்கு மேல் என்ன வேண்டும்?" என்றும் ஆணாதிக்க உலகிலிருந்து வெளிவர முடியாதவர்களும், வெளிவந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருப்பவர்களும் சற்றும் தயங்காமல் கேட்கிறார்கள். அளந்து தருவதற்கும் நிறுத்து வாங்குவதற்கும் சுயமும், சுதந்திரமும் என்ன கடைச்சரக்குகளா?

ஒரு பெண் வேலைக்குப் போனாலோ, அல்லது ஒரு ஆண் சமைத்தாலோ அந்தக் குடும்பத்துப் பெண்கள் விடுதலை பெற்று விட்டார்கள் என்று கூட்டாகப் பாடத் தொடங்கி விடுகிறார்கள். பெண்களுக்குள்ள பிரச்சனைகள், அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகள், சில உணர்த்துதல்கள், ஆலோசனைகள்... போன்றவற்றை யாராவது சொன்னாலோ அல்லது எழுதினாலோ போதும், அவளுக்கு பெண்ணியவாதி என்று முத்திரை குத்துவது மட்டுமல்லாமல் ஒரு இளக்காரப் பார்வை, கிண்டல் பேச்சு... என்று எதிர்க்குரல் கொடுக்கத் தொடங்கி விடுகிறது சமூகம்.


இத்தகையதொரு இக்கட்டான, புரிந்துணர்வற்ற சமூகச் சூழ்நிலையில் 39க்கு மேற்பட்ட பெண் படைப்பாளிகளின் படைப்புக்களுடன், பெண்கள் சந்திப்புக் குழுவினரால்(றஞ்சி-சுவிஸ், தேவா-ஜேர்மனி, உமா-ஜேர்மனி, விஜி-பிரான்ஸ், நிருபா-ஜேர்மனி) எட்டாவது பெண்கள் சந்திப்புமலர் அழகாகவும் நேர்த்தியாகவும் வெளியிட்டு வைக்கப் பட்டுள்ளது.

"பெண்கள் சஞ்சிகையா?" என்று முகம் சுளித்தவர்களும், "பெண்களுக்கு என்று தனியாக வெளிவரும் சஞ்சிகையில் நான் எழுதவில்லை. எனது எழுத்தின் மதிப்பை அது குறைத்து விடும்..." என்று தயங்கியவர்களும், இப்போது தாமாகவே முன் வந்து படைப்புக்களைத் தருவதற்கும், குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள்ளேயே நின்றவர்கள் துணிந்து பல்வேறு விடயங்களிலும் கால் வைத்திருப்பதற்கும் இப்படியான வெளியீடுகள் பெரிதும் துணை நிற்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று.

அச்சு, பதிப்பு, வெளியீடு... போன்ற பெரும்பான்மையான வேலைகள் ஆண்களுடையதாகவே கருதப்பட்டு வந்த காலம் மாறி, இப்போது பெண்களாலேயே செய்யப் படுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது. பெண்கள் சந்திப்பு மலரின் ஆக்கங்கள் மட்டுமல்லாமல் மலரின் வடிவமைப்பும் படிப்படியாக பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

பெண்கள் சந்திப்புமலர் 2004இன் அட்டைப்படம் அர்த்தமுள்ள அழகிய நவீனஓவியத்துடன் கண்களைக் கவருகிறது. முன் அட்டைப் படத்தை வாசுகியும் பின் அட்டைப் படத்தை அருந்ததியும் வரைந்துள்ளார்கள். மலரில் இடம் பெற்ற ஆக்கங்களுக்கு வலுவும் அழகும் சேர்ப்பனவையாக மோனிகா, சுகந்தி சுதர்சன், சௌந்தரி, ஆரதி, அருந்ததி, வாசுகி... போன்றோரின் ஓவியங்கள் மலரினுள்ளே பொருத்தமாக நிறைந்திருப்பது மலரின் இன்னொரு சிறப்பம்சம்.

குறிப்பிட்டுச் சொல்லும் விதமாக, மலரில் 10 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பத்தையும் வெவ்வேறு கோணங்களிலிருந்து பத்துப் பெண்கள் எழுதியுள்ளார்கள். பத்துமே நன்றாக அமைந்த கதைகள்.

பாமாவின் - அந்தி - கதை இவைகளுள் பிரத்தியேகமாக நிற்கிறது. அவருக்கேயுரிய வட்டார வழக்குச் சொற்கள் பலதின் அர்த்தம் புரியாவிட்டாலும் கதையின் ஓட்டமும், கதை சொல்லும் விதமும் ஒரு பிசகலின்றி அமைதியாக, நேர்த்தியாக எம்மை கதையோடு அழைத்துச் செல்கின்றது. குழந்தை, குட்டி என்று பெற்று அவர்களை வளர்த்து, ஆளாக்கி அவர்களுக்கென்று வாழ்வுகளை அமைத்துக் கொடுத்து விட்டு, தான் என்ற வீம்போடு தனியாக வாழும் தவசிப் பாட்டியின் கதை சாதாரண கதைதான். வெள்ளம் வருமளவு பெய்து விட்ட மழை நிறைந்திருக்கும் ஒரு குழியில் ஒரு அந்திப் பொழுதில் தவசிப்பாட்டி அநியாயமாக ஆனாலும் தான் நினைத்தது போலவே யாருக்கும் பாராமாக இல்லாமல்... இறந்து விட்டதை, மனசை விட்டு அகலாத படி பாமா சொன்ன விதம் அருமை. வாசித்துப் பல நாட்களாகியும் அகலாமல் மனசுக்குள்ளேயே உருண்டு கொண்டிருந்த கதை.

நிருபாவின் - மழை ஏன் வந்தது - பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு அல்லது பாலியல் சுரண்டலுக்குள் தன் பால்ய காலத்து இனிமைகளை எல்லாம் தொலைத்து நிற்கும் ஒரு சிறுமியின் பரிதாபக்கதை. மிகவும் தத்ரூபமாக நிரூபா அதை எழுதியுள்ளார். பாலியல் துன்புறுத்தலை மட்டுமல்லாது, அந்த வயதில் துளசியோடு பின்னியிருக்கும் வாழ்வின் அசைவுகளையும், அதனூடே இடையிடையே நாகம் போலப் படம் விரித்தாடும் பாலியல் தொல்லை ஒரு சிறுமியின் வாழ்வை எத்தனை தூரம் இம்சைப் படுத்துகிறது என்பதையும் நிரூபா சொன்ன விதம் யதார்த்தமாக அமைந்துள்ளது. பேச்சுத்தமிழ்தான் என்பதால் ஒரு இயல்புநிலை தெரிகிறது. யாரது...? அப்பாவா..! அண்ணாவா...! மாமாவா...! என்று தெரியாமல் குழம்பும் அந்தச் சிறுமி துளசி தன் வயசுக்குரிய சந்தோசங்களையெல்லாம் அந்த அருவருப்புக்குள் தொலைத்து விட்டு தன்னைக் குற்றவாளியாக நினைத்தோ என்னவோ பெற்றதாயிடம் கூட சொல்லாமல் மறுகுகிறாள்.

நண்பியிடம் கூட மனம் விட்டுப் பேசத் தைரியமின்றிய துளசியின் இயலாமை, எமது சமூகத்தில் பல குழந்தைகளுக்கும் உள்ள அவலந்தான். இந்த நிலை எமது சமூகத்தில் மட்டுந்தானென்றில்லை. ஐரோப்பிய சமூகங்களிலும் கூட குழந்தைகளோடு மனம் விட்டுப் பேசாத பெற்றோரின் குழந்தைகள் இப்படியான கொடுமைகளை வெளியில் சொல்லும் தைரியமின்றி மிகுந்த இம்சைக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது வாழ்வு இந்தப் பருவத்தில் மட்டுமல்லாது தொடரும் காலங்களிலும் இதன் பாதிப்பை பிரதிபலிப்பதாய் அமைந்திருப்பது ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இப்படியான கதைகளை வாசிக்கும் போது தமது பெண்குழந்தைகளுக்கு இப்படியொரு நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் இந்த உலகில் இருக்கிறது என்பதை தாய்மார் கண்டிப்பாக உணர்ந்து கொள்வார்கள்.

"இவ இப்பிடியான கதை மட்டுந்தான் எழுதுவா" என்று ஒரு சாரார் குரல் கொடுப்பது கேட்காமல் இல்லை. இவைகள் வெறுமே கதைகளல்ல. நியத்தின் வடிவங்கள். சமூகப் பிரச்சனைகளை வெளியில் கொண்டு வரும் இப்படியான எழுத்துக்களால் எத்தனையோ குழந்தைகள் இந்தத் தொல்லைகளிலிருந்து காப்பாற்றப் படுகிறார்கள் என்ற உண்மையை நாம் தயங்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். நிரூபாவின் எழுத்துக்களில், அதாவது ஒரு சமூகப் பிரச்சனையை எடுத்துச் சொல்லும் விதத்தில் ஒரு தனித்துவம் இருப்பதை மறுக்க முடியாது.

சுமதியின் - நாகதோஷம் - அருமையான கருப்பொருளைக் கொண்ட கதை. எந்த யுகத்திலும் அழகுக்குத்தான் முதலிடம். நல்ல வெள்ளையா... சிவப்பா... வடிவான... என்ற ரீதியில் பெண் தேடும் படலம் இன்னும் நின்ற பாடில்லை. காலாகாலத்துக்கும் இந்தப் பெண் தேடுதல் வேட்டையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் இல்லை. வைப்பாட்டியாக... ஆசைநாயகியாக... அவசரத்துக்காக... என்று எந்தக் கோணங்கியோடும் இணைந்து இச்சை தீர்த்துக் கொள்பவர்கள் மனைவி மட்டும் சுத்தமாக... அழகாக... வெள்ளையாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இங்கேயும், வரப்போறவன் எப்படி இருந்தாலும் அவன் ஆம்பிளை என்பதை மட்டுந்தான் பெண்ணானவள் கவனிக்க வேண்டும். ஆனால் பெண் மட்டும் அழகாக லட்சணமாக இருக்க வேண்டும். தப்பித்தவறி கறுப்பாய் இவர்கள் வகுத்து வைத்த லட்சணங்களுக்குள் அடங்காதவளாய் இருந்து விட்டால் போதும் அவள் உணர்வுகளும், ஆசைகளும் தனிமைக்குள் தீய்ந்து போய் விடும். இதனோடு சாத்திரம் சம்பிரதாயம் என்ற பெயரில் தோஷங்கள் வேறு அவளைப் பொசுக்கி விடும்.

இப்படியான அவலத்தில் மனசு பொசுங்கிப் போன ஒரு பெண் இன்றைய வசதிகளைப் பயன் படுத்தி செயற்கையாய் தன்னை அழகு படுத்திய போது அவளது பருவ வயதில் அவளை அழகில்லையென்று விட்டுச் சென்ற அதே ஆடவன் அவளைச் சுகிக்க வருகிறான். அப்போது அவளும் அவனிடம் அவனது ஆண்மையைக் குறைத்துக் கூறுவது பழிதீர்ப்பதாய் வக்கிரமானதாய்த் தெரியலாம். காதலித்தவன் அல்லது காதலிப்பது போல நடித்தவன் அவளுக்கு மார்பு போதவில்லை என்பதற்காகவும், கறுப்பாய் இருக்கிறாள் என்பதற்காகவும் மணமுடிக்காது போன போது எவருக்கும் அது வக்கிரமாயோ பாலியல் சார்ந்ததாகவோ தெரியவில்லைத்தானே!

பெண்களை, பாலியல்தேவையை பூர்த்தி செய்யும் இச்சைப்பொருளாக மட்டுமே நோக்கும் ஆண்களுக்கு சாட்டையடி கொடுப்பது போல அமைந்த கதை நாகதோஷம்.

கமலா வாசுகியின் - கண்டறியாத பிள்ளை - கதை ஒரு பெண்ணுக்கு முதலில் ஏற்படும் சூல் முட்டைகளின் வெளியேற்றத்தை, பெருவிழாவாக்கும் எம்மவரிடையே உள்ள அறியாமையையும், அது அப்பெண் குழந்தையின் மனதை எந்தளவுக்குப் பாதிக்கிறது என்பதைப் பல பெற்றோர்கள் இன்னும் உணர்ந்து கொள்ளாமல் இருப்பதையும், சிலர் உணர்ந்தாலும் மற்றவர்கள் போலச் சடங்கு சம்பிரதாயம் செய்யாவிட்டால் தாம் சமூகத்தில் இருந்து ஒரு படி இறங்கி விடுவோம் என நினைத்து செயற்படுவதையும், பெண்குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத உறவுகளின் தன்மையையும் அதனால் ஒரு பெண்குழந்தையின் மனதில் ஏற்படுத்தும் விசனத்தையும் சொல்கிறது.

ஜெயந்தியின் - தையல் - குழந்தை பெற்றுக் கொண்ட பச்சை உடலோடு வலியும், உணர்வுமாய் தவிக்கும் ஒரு பெண்ணின் கதை. குழந்தை பெறுவதை விடத் தையல் போடுவதுதான் அதிகமாய் வலிக்கும் என்பார்கள். கதையின் நாயகி சுதா வலியோடு கணவனுக்காய் காத்திருக்கும் போது புண்ணியாஜனத்துக்கு வந்தவன் அவள் உணர்வுகளை மதிக்காமல் போனது கூட மனதைப் பாதிக்கவில்லை. அன்பாய் ஆதரவாய் பேச வருவான் என்று அவள் காத்திருக்க, நடுஇரவில் தன் உடற்சுகத்துக்காக அவளைத் தேடி வருவது மனதை நெருட வைக்கிறது.

விஜயலட்சுமி சேகரின் - குற்றமில்லை - சிறுகதை நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்த பெண் சுவர் ஏறிக்குதித்து கொலை செய்ய வரும் காமுகன் முன்னே ஆபரணம் ஆவதா ஆயுதம் ஆவதா? என்று கேட்கிறது. ஆயுதம் ஆவதுதான் சரியென்று நாம் சொன்னாலும் சட்டமும் சமூகமும் கொலைகாரியென்றும் நடத்தை கெட்டவள் என்றும் பாதகமாக அவள் மீது பழி சுமத்தியுள்ளன.

சாந்தினி வரதராஜனின் - வீடு - புலம்பெயர்ந்து வாழும் சுகந்தி சொந்த நாட்டை நோக்கிப் பயணிப்பதையும், அங்கு தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீட்டுக்கு சோகங்களையும் சுகங்களையும் நினைவுகளில் சுமந்து கொண்டு செல்வதையும் உணர்வுகளோடு சொல்கிறது. புலம்பெயர்ந்த எல்லோரின் மனதுக்குள்ளும் பிரிவும், துயரும் எந்தளவுக்குப் படிந்து போயிருக்கிறது என்பதை நெகிழ்வோடு சொல்லியுள்ள கதை.

சந்திரா ரவீந்திரனின் - பனிமழை - சுப்பர்மார்க்கெட்டில் வேலை செய்யும் புலம் பெயர்ந்த ஒரு தமிழ்குடும்பப் பெண்ணின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாய் அமைந்துள்ள கதை. பனிமழையின் குளிரையும், அழகையும் அவர் வர்ணித்திருந்ததையும் விட அவர் கடமையாற்றும் சுப்பர்மார்க்கெட்டினுள்ளான வேலைகளையும், அனுபவங்களையும், நடைமுறைகளையும் எங்கள் கண்முன்னும் அழகாகக் கொண்டு வந்திருந்தார்.

வேலையிடத்தில் தனது கடமைகளை அதற்கேயுரிய சிரத்தையுடன் செய்து விட்டு ஒரு மனைவியாக, தாயாக வீடு திரும்பும் போது வீட்டின் கோலங்கள் ஒரு குடும்பப்பெண்ணின் மனதை எந்தளவுக்கு நெகிழச் செய்யும் என்பதை நன்றாகச் சொல்லியிருந்தார். இருந்தாலும் சந்திரா ரவீந்திரனின் கதை என்ற எனது எதிர்பார்ப்புக்கு ஈடாக அக்கதை அமையவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

உமாவின் - மரியானா - கதை மருத்துவமனைக் கட்டிலில் வலியுடன் படுத்திருக்கும் போது வைத்தியத்துக்காக அவள் அறையைப் பங்கு போட வந்த ஒரு ஜேர்மனியப் பெண்ணுடனான உரையாடல். மிகவும் இதமாக, படிக்கும் போது மனதை வருடும் உணர்வைத் தரக் கூடிய விதமாக நன்றாக அமைந்துள்ளது. வயதானாலும் வயதை ஒரு பொருட்டாக்காமல் அறிவோடு பேசும் தொண்ணூற்றைந்து வயதுச் சிறுமியின் பேச்சுக்களும் அதை உமா சொன்ன விதமும் மிகவும் நன்றாக உள்ளன.

ஷாமிலாவின் - சிறகிழந்த பறவையாய் - நாட்டு நிலைமையை உத்தேசித்து வெளிநாட்டில் பெரியப்பாவோடு இருந்து படிக்கச் செல்லும் ஒரு சிறுமியின் வாழ்வு எப்படி சிதைக்கப் படுகிறது என்று சொல்லும் கதை. ஐம்பது வயதைத் தாண்டிய, அப்பா ஸ்தானத்தில் இருக்க வேண்டிய பெரியப்பாவே அவளைப் பாலியல் இச்சைக்கு பலியாக்க முயல்வதும், அவள் இணங்காத பட்சத்தில் வற்புறுத்துவதும் பாலியல் சுரண்டல் என்பது எமது சமூகத்தில் எந்தளவுக்குப் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

சிறகுகளை விரித்துக் கொண்டு தன் வீட்டை விட்டுப் பறக்கத் தொடங்கும் அந்தச் சிறுமியின் கண்களில் கனவுகளும், வானத்தைத் தொடும் நினைவுகளும் மட்டுமே இருந்தன. வீட்டை விட்டு போகும் போது இன்னும் எத்தனை விடயங்களை இழக்கப் போகிறேன் என்பது மட்டும் நினைவுக்குள் சிக்கவில்லை. அவள்தான் சின்னப்பிள்ளை என்றால் அவள் பெற்றோருக்குக் கூட சில விடயங்கள் விளங்கவில்லை. பெற்றோர்கள் தவிர்ந்த வேறு உறவுகளுடன் (அவர்கள் மிக நெருங்கிய உறவுகளாய் இருக்கும் பட்சத்திலும் கூட) வாழ நேரிடும் பெண்குழந்தைகளுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல்களைப் பல பெற்றோர்கள் அறிந்து கொள்வதில்லை. இக்கதையிலும் அதேதான். நம்பிக்கைக்குரியவர்கள் என்று நினைத்து அவர்களிடம் தமது குழந்தைகளை ஒப்படைக்கும் பெற்றோர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கதைகளில் ஒன்று இது.

இது ஒரு உண்மைக் கதை என்பதால் அதிகம் சொல்ல முடியவில்லை. மொழிபெயர்ப்பு சரியாக அமைய வேண்டுமானால் தன்னிச்சையான சுருக்குதல் அல்லது நீட்டுதலைத் தவிர்க்க வேண்டும். அதைத்தான் செய்துள்ளேன். கதை பின்னுக்கு சற்று நீண்டு விட்டது போலவே தோன்றுகிறது. கதையில் பின்னுக்கு வரும் கணவனின் தந்தையின் செயற்பாட்டை இன்னொரு கதையாகச் சொல்லியிருக்கலாம்.

கதைக்காக றஞ்சி தேர்ந்தெடுத்த படம் கதைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருப்பது குறிப்பிடப்பட வேண்டியதொன்று.

அடுத்து மதனி ஜெக்கோனியாஸ் மொழி பெயர்த்துத் தந்த - கைவிடப்பட்டவளாய்.... - மனதை மிகவும் பாதித்த இன்னொரு உண்மைக்கதை. 13வயதுச் சிறுமியான நூரியாவின் சோகக்கதை. ஒரு தந்தை தனது பெண்குழந்தையை அவளது மூன்றாவது வயதிலேயே பெரியப்பாவிடம்(தனது சகோதரனிடம்) கொடுப்பதுவும் அந்தப் பெரியப்பா அவளை அவளது 12வது வயதிலேயே, அவளது சம்மதமோ அன்றி அவளது விருப்பு வெறுப்பு பற்றிய பிரக்ஞையோ இன்றி ஒரு 62வயதுக் கிழவனுக்கு விற்பதுவும் நம்ப முடியாவிட்டாலும் உண்மையான கதை என்னும் போது மனதை வருத்துகிறது. இன்றைய காலகட்டத்திலும் இப்படியான அடிமைத்தனமான வேலைகளுக்கு பெண்குழந்தைகள் பலியாவது மிகச் சோகமான விடயம். அவள் கொலைக்குற்றம் சாட்டப் பட்டு சிறையில் இருப்பது இன்னும் துன்பமானது.

கட்டுரைகளைப் பார்க்கும் போது ஆறு கட்டுரைகள் இடம் பிடித்துள்ளன. இவைகளில் இன்றைய காலகட்டத்தில் மிகுந்த பிரபலமாகியுள்ள, பலராலும் பாவிக்கப்படுகின்ற, உயர்ந்த இடங்களில் கூட அவதானிக்கப் படுகின்ற, பயனுள்ள... இணைய உலகிலான வலைப்பதிவுகள் பற்றியதான மதி கந்தசாமியின் - இணையத்தில் குடில் போடலாம் வாருங்கள் - தவிர்ந்த மற்றைய ஐந்து கட்டுரைகளும் பெண்களின் பிரச்சனைகள், முன்னேற்றம் குறித்த ஆலோசனைகள், ஆணாதிக்க சிந்தனைகள்.. பற்றிக் கூறுகின்றன.

இவைகளில் இந்தியாவைச் சேர்ந்த வைகைச்செல்வியின் - பெண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - கட்டுரை சகலவிதத்திலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட அன்றைய காலத்தில் படைக்கப் பட்ட பெண் எழுத்துக்களில் இருந்த வலிமையும், வீரியமும், உயிர்ப்பும், காலத்தை வென்று நிற்கும் தன்மையும் இன்றைய பெண்படைப்பாளிகளின் படைப்புக்களில் இல்லையோ! என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது. அன்றைய பெண்படைப்பாளிகள் பற்றிய பலதகவல்களோடு ஒளவையார், சரோஜினி, வை.மு.கோதைநாயகி... என்று அன்றைய பெண் படைப்பாளிகளிகளையும் அதற்கு உதாரணமாக ஒப்பிட்டுச் சுட்டியுள்ளார் வைகைச்செல்வி. ஆனாலும் வைகைச்செல்வி குறிப்பிட்டது போன்ற ஆளுமை மிக்க பெண்படைப்பாளிகள், இன்றும் இருக்கிறார்கள். அதுவும் அன்றைய படைப்பாளிகளை விடக் கூடிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அன்று ஒரு குறிப்பிட்ட அளவான பெண் படைப்பாளர்களே இருந்தார்கள். அவர்கள் பளிச்சென்று எல்லோர் கண்களுக்கும் தெரிந்தார்கள். இன்று உலகளாவப் பெண் படைப்பாளிகள் இருக்கிறார்கள். அதனால் அந்தப் பளிச்சென்ற வெளித்தெரிவு இல்லை. மற்றும் படி பன்முகத்தன்மை கொண்ட எழுத்துக்களை மட்டுமல்லாமல், அதைச் செயற்படுத்தும் திறனோடும் பல ஆளுமை மிக்க பெண்கள் இன்று எம்மிடையே உள்ளார்கள் என்பதுதான் உண்மை.

மும்பையைச் சேர்ந்த புதியமாதவியின் - என்று தணியும் எங்கள் சுதந்திரதாகம் - என்ற கட்டுரை இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருந்தாலும் இன்னும் ஏன் பெண்ணியல் சிந்தனையில் புரட்சிகள் ஏற்படவில்லை என்றும், ஆணாதிக்கம் இல்லாத சுதந்திரக்காற்று இன்னும் ஏன் அவள் சுவாசத்துக்கு எட்டவில்லையென்றும் ஆய்ந்துள்ளது. ஊடகங்களில் பெண்கள் எப்படிச் சிறுமைப் படுத்தப் படுகிறார்கள், விளம்பரங்களில் பெண்கள் எப்படி மலிவு படுத்தப் படுகிறார்கள், அரசியலில் எந்த நிலையில் பெண்கள் நுழைகிறார்கள், இல்லங்களில் பெண்களின் வேலைகள் எப்படிக் கணிக்கப் படுகின்றன என்றெல்லாம் அருமையாக விளக்கி, அதிகம் படித்த பெண்ணென்றால் என்ன? ஐரோப்பியப் பெண் என்றால் என்ன? பெண் என்பதால் அவள் இன்னும் வன்முறைக்கு உட்படுத்தப் படுகிறாள் என்ற உண்மையை புள்ளி விபரங்களுடன் தந்துள்ளது.

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின் - இன்னும் இருபது வருடங்களில் - புலம்பெயர்ந்த தமிழ்ப்பெண்களின் நிலை எதிர்காலத்தில் என்னவாயிருக்கும் என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அரசியல், பொருளாதாராம், மேற்படிப்பு போன்ற காரணங்களால் ஏற்பட்ட புலம் பெயர்வு தமிழ்பெண்களை பொருளாதார ரீதியில் சற்று முன்னேற்றி இருக்கிறது என்றாலும், அதற்கப்பால் என்ன முன்னேற்றத்தைத் தமிழ்ப்பெண்கள் கண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி இக்கட்டுரையினூடே எழுகிறது.

சின்னத்திரைத் தொடர்களும், பெரியதிரை தரும் படங்களும் பெண்களை இன்னும் எவ்வளவு தூரத்துக்கு பின்னுக்குத் தள்ளுகின்றன என்பதையும், இவைகளின் பாதிப்புக்கள் எமது தமிழ்ப்பெண் குழந்தைகளின் மனவளர்ச்சியில் எத்தகையதொரு பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகிறது என்பதையும், இதனால் எதிர்காலக் குழந்தைகளின் அறிவுவளர்ச்சி எந்தளவுக்குக் குன்றும் என்பதையும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் கட்டுரையினூடே வருத்தத்தோடு தெரிவிக்கிறார். சின்னத்திரைகளோடு மாரடிக்கும் புலம்பெயர் பெண்கள் கண்டிப்பாகக் கவனத்தில் எடுக்க வேண்டிய கட்டுரை இது.

அவுஸ்திரேலியாவிலிருந்து சந்திரலேகா வாமதேவாவின் - கற்பு நிலை சொல்ல வந்தார் - என்ற கட்டுரை மூலம் கற்பு என்பதன் பொருள் பற்றியும், அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்ற போதும் அன்றைய காலத்திலிருந்து இன்றைய வரைக்கும் பெண்களின் கோட்பாடாகவே கருதப்படுவது பற்றியும் ஆய்ந்துள்ளார். கூடவே இலக்கியங்களில் உள்ள கற்புக்கரசிகள் பற்றிய கதைகளை உதாரணங்களாகக் காட்டி, அவைகளெல்லாம் ஆண்களாலேயே எழுதப் பட்டிருப்பதைச் சுட்டியும் உள்ளார்.

தயாநிதி மொழிபெயர்த்துத் தந்த கிரிஸ் கிராஸ்சின் - ஆணாதிக்கத்திற்கு முகம் கொடுப்பது பற்றிய சில தனிப்பட்ட பிரதி பலிப்புகள் - மிகவும் அருமையானதொரு கட்டுரை. "ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஒரு விவாதத்தில் பெண்களுடன் நேருக்கு நேர் பார்த்து உரையாடுவது போன்றதல்ல. இது ஒரு அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, உளவியல் ரீதியான பலம் வாய்ந்த கட்டமைப்புக்கு எதிரான போராட்டம். அத்துடன் எனது உட்புறமுள்ள மேலாதிக்கம் என்பது பனிமலையின் முனைப்பகுதி போன்றது. இது சுரண்டலாலும் அடக்கு முறையினாலும் கட்டப் பட்டது" என்கிறார் கிரிஸ் கிராஸ்.

ஆணாதிக்க சமூகத்தில் உள்ள ஒருவரே ஆணாதிக்கத்தைப் பற்றிச் சிந்திப்பதென்பதும் அது பற்றி கூறுவதென்பதும் மிகவும் வித்தியாசமானது. என்னதான் விடுதலை அமைப்புக்களில் அங்கத்தவர்கள் ஆனாலும் தந்தைவழிச் சமூக அமைப்புகளினோடு வளர்ந்த ஆண்களின் உள்ளே திமிறும் மேலாதிக்கம் அவர்களை ஆக்கிரமிப்பது அவர்களைப் பொறுத்த வரையில் தவிர்க்க முடியாத ஒன்றே. இந்த நிலையை ஒரு குற்ற உணர்வோடு நோக்கும் ஒரு ஆணே இது பற்றி எழுதியது ஒரு வகையில் சுவாரஸ்யமாகக் கூட உள்ளது. மொழி பெயர்த்துத் தந்த தயாநிதிக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.

கவிதைகளைப் பார்க்கும் போது

அவுஸ்திரேலியாவிலிருந்து
ஆழியாளின் - விடுதலை,
பாமதியின் - யுத்தம்,
சௌந்தரியின் - இளமைக்காலம்,

இலங்கையிலிருந்து
அனாரின் - இருப்பின் பின்னால் வாழ்வின் வெளி,
முகைசிரா முகைடீனின் - நான், நான் பேச நினைப்பதெல்லாம், பாலறஞ்சனியின் - நிஜங்களும் நிகழலாம், தீக்குள் விரலை வைத்தால், விஜயலட்சுமி.சேகரின் - நானும் ஓர் காவியம்தான்,


இந்தியாவிலிருந்து
மாலதி மைத்ரியின் - மனநோயின் முன் பின் நிகழ்வுகள், விதைச்சொல், திலகபாமாவின் - நகல்கிறது நதி, கட்டுடையும் நகரம்,
புதியமாதவியின் - கவிஞனின் மனைவி(தெலுங்கில் மந்தரப்பு ஹேமாவவதி), புதியமாதவி கவிதைகள்,

கனடாவிலிருந்து
எதிக்காவின் - இன்னமும் ஏதோவொன்றிற்காய்...,
துர்க்காவின் - துர்க்கா கவிதைகள்,

சுவிசிலிருந்து
நளாயினி தாமரைச்செல்வனின் - தலைப்பில்லாத கவிதை, நமக்கான நட்பு,

ஜேர்மனியிலிருந்து
பாரதியின் - நலங்கெடப்புழுதியில்
சுகந்தினி சுதர்சனின் - பிரச்சனைகளுக்கு முகவரியிடுவோம்,
கோசல்யா சொர்ணலிங்கத்தின் - தீர்ப்பெழுதும் கரங்கள் பெண்களாகட்டும்,
விக்னா பாக்யநாதனின் - துளிப்பாக்கள்,


என்று 23க்கு மேற்பட்ட கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவைகள் பெண்களின் விடுதலையை, அடக்கப் படுகிறோம் என்று தெரிந்தும் விட்டு வெளியேற முடியாத இயலாமையை, அடைந்து கிடந்தாலும் மனதால் சுதந்திரமாகப் பறக்கத் துணிந்த பெண்களின் தன்மையை, விட்டு விடுதலையாகி விடுவோம் என்ற நம்பிக்கையை, இருப்பின் அவசியத்தை..., யுத்தத்தின் கோலங்களை, இயற்கையின் சீற்றங்களை... என்று பல விடயங்களை உணர்வுகள் கலந்து சொல்கின்றன. இக் கவிதைகளைத் தனியாக ஒரு தரம் அலசலாம் போலுள்ளது.

அடுத்து, உரையாடல் வடிவில் - மல்லிகா எம்மிடையே உள்ள சில பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

சமைத்துப் போடும் கணவனின் மனைவியும், அதிகாலை வேலைக்குப் போகும்போது தானே தேநீரைத் தயாரித்துக் குடித்து விட்டுச் செல்லும் கணவனின் மனைவியும் விடுதலை பெற்றவர்கள் என்பதான அறியாமை நிறைந்த பேச்சு கூடுதலாகப் பெண்களிடையேதான் உலாவுகிறது.

கதையில் வந்த மாயாவுக்கு தான் விரும்பியவனை மணம் முடிக்கவோ, முடித்த ஒருவன் சரியில்லை, குடிகாரன், இவளை அடித்துத் தொந்தரவு செய்கிறான் என்ற போது அவனை விட்டு விலகிச் செல்லவோ உரிமையில்லை. தன் வாழ்வைத் தானே நிர்ணயிக்கும் அவளது சுதந்திரம் பற்றி பெண்ணான அவள் அண்ணிக்கே கவலையில்லை. பெண்ணே பெண்ணை விளங்கிக் கொள்ள முடியாத அல்லது விளங்கிக் கொள்ள விரும்பாத இப்படியான நிலைமைகளையும் சமூகம், கலாசாரம் என்பதன் அர்த்தம் புரியாத அர்த்தமற்ற செயற்பாடுகள் கொண்ட எமது பெண்களின் பார்வையில் ஜேர்மனியப் பெண்கள் மீதான கணிப்புகளையும்.... என்று சொல்ல வந்த விடயத்தை கச்சிதமாகச் சொல்லியுள்ளார் மல்லிகா.

ஓவியர் வாசுகியுடனான றஞ்சியின் செவ்வியொன்றும் மலரில் இடம் பெற்றுள்ளது. மலருக்கு மிகவும் பொருத்தமான ஒருவரோடான செவ்வி இது. பெண்களது வெளிப்பாடுகளை ஓவியப்பயிற்சி மூலம் கொண்டு வரும் இந்த வாசுகிதான், முன் அட்டைப்படத்தை வரைந்து, மலருக்கு அழகும் வலுவும் ஊட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தின் சாதாரண ஒரு பெண்ணுக்குக் கிட்டாத பல வெளிகள் ஓவியம் மூலம் தனக்கு சாத்தியமாகின என்று சொல்லும் வாசுகியினுடனான செவ்வி மிகவும் சுவாரஸ்யமானது.

"பெண்கள் சந்திப்போ...! உங்கை என்ன நடக்குது?. உதுக்கு நாங்கள் ஆம்பிளையள் வரக்கூடாதோ?"

"ம்... பெண்டுகள் சந்திச்சு என்ன செய்யப் போறிங்கள்? குடுமிச் சண்டையோ பிடிக்கப் போறிங்கள்?"

"இஞ்சைபார்...! பெண்கள் சந்திப்பு, இலக்கியம் எண்டெல்லாம் சொல்லிக் கொண்டு கூடுறது இலக்கியங்கள் பேச இல்லை."

இவைகளெல்லாம் என்னவென்று யோசிக்கிறீர்களா? பெண்கள் சந்திப்புக்கு ஒரு தடவையேனும் செல்லாத சில ஆண்களால் அவர்களைச் சுற்றியுள்ள பெண்களின் மீது எறியப் படும் எள்ளல் கருத்துக்கள் இவை. தமது மனைவியரோ சகோதரிகளோ இதைச் சாட்டிக் கொண்டு வெளியில் போய் விடக்கூடாதே என்ற அங்கலாய்ப்பில் அவசரமாய் கொட்டப்படும் வார்த்தைகள் இவை.

கருத்து மோதல்களும் முரண்களும் ஆண்கள் ஒன்று கூடலில் ஒரு போதுமே நிகழ்வதில்லையா? கேட்பதற்குத் திராணியற்றவர்களாக இன்னும் பெண்கள் இருக்கிறார்கள்.

இவைகளுக்கெல்லாம் பதில் கூறும் விதமாக பெண்கள் சந்திப்பதில்..., ஒன்று கூடுவதில்... உள்ள நன்மைகள்.... தமது பிரச்சனைகளை மனந்திறந்து கலந்துரையாடுவதின் மூலம் பெண்களுக்குள் ஏற்படும் தன்னம்பிக்கை... இவை பற்றி தேவா விளக்கமாகச் சொல்கிறார் பெண்கள் சந்திப்பு சிறுகுறிப்பு என்ற கட்டுரை மூலம்.

இத்தனை விடயங்களும் இந்தப் பெண்கள் சந்திப்பு மலருக்குள் அடங்கியிருக்கின்றன என்னும் போது உண்மையிலேயே வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது. எத்தனையோ பிரச்சனைகள், அவசரங்கள், அவசியங்கள், தடைகளின் மத்தியில் மீண்டும் பெண்கள் சந்திப்பு மலர் இத்தனை கனமாக வெளிவந்தது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விடயமே. வெளியிட்டு வைத்த பெண்கள் சந்திப்புக் குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். கூடவே ஆக்கங்களைத் தந்துதவி பெண்கள் சந்திப்பு மலருக்கு வலுவூட்டி, உறுதுணையாக நின்ற சகோதரிகளுக்கும் மனதார்ந்த நன்றி.

சந்திரவதனா
ஜேர்மனி
18.8.2005

Wednesday, June 22, 2005

புலம் பெயர் வாழ்வில் பெண்களின் உளவியல் பிரச்சனைகள்

உளவியல் பிரச்சனையில் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது இன்றைய புலம்பெயர் வாழ்வில் அதிகமாகிவிட்டது. ஏன், எதற்கு என்று குறிப்பிட்ட ஒரு சில காரணங்கள் மட்டுமில்லாமல், எந்த வயதில் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் இந்த உளவியல் பிரச்சனை பெண்களின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களிலும் பல்வேறு வளர்ச்சிப் படிகளிலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இங்கு நான் பெற்றோருடன் வாழ்கின்ற திருமணமாகாத எங்கள் பெண்பிள்ளைகள் உளவியல் பிரச்சனையில் மாய்வதற்கான காரணங்களை ஓரளவுக்கோ அல்லது மேலோட்டமாகவோ பார்க்க முயற்சிக்கிறேன்.

எங்களது ஆண்பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் பிறந்ததிலிருந்து ஒரேமாதிரி உண்டு உறங்கி வளர்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அதாவது பெண் குழந்தைக்குப் பத்து வயது வந்ததும் எமது வளர்ப்பில் வித்தியாசம் ஏற்படத் தொடங்குகிறது. அப்போதே ஒரு பெண் குழந்தையின் மனதில் விசனங்களும் ஏற்படத் தொடங்கி விடுகின்றது. ஏன் என்ற கேள்வி மனசைக் குடையத் தொடங்கி விடுகின்றது.

ஆண்பிள்ளை வெளியில் போய் விளையாடலாம். நினைத்த நேரம் வெளியில் போய் நினைத்த நேரம் வீட்டுக்குத் திரும்பலாம். ஆனால் ஒரு பெண்பிள்ளை ஏதாவதொரு காரணத்துக்காகப் பத்து நிமிடங்கள் பிந்தினாலே ஏன்...? ஏதற்கு...? என்ற கேள்விகளால் குடைந்தெடுக்கப் படுகின்றாள்.

பெண்பிள்ளைகளைக் கவனமாக வளர்க்கிறோம் என்ற பெயரில் எத்தனை அநாவசியத் தடைகள் போடப் படுகின்றன. இந்தத் தடைகளும் அளவுக்கு மீறிய கண்டிப்பும் பெண்பிள்ளைகளைச் செப்பனிட்டு வளர்த்து விடப் போதுமானவை என்றுதான் அனேகமான பெற்றோர்கள் நினைக்கின்றார்கள். இதுதான் பெண்பிள்ளைகளை வளர்க்கும் முறை என்றதொரு ஆழ்ந்த கருத்தை அவர்கள் தமக்குள் பதித்தும் வைத்திருக்கிறார்கள்.

பெற்றோர்களது இந்தச் செயற்பாட்டுக்கான முக்கிய காரணங்களில்
ஒன்று, அவர்கள் தம் பிள்ளைகளின் மேல் வைத்திருக்கும் அளவுக்கதிகமான பாசம். இரண்டாவது, இந்த சமூகத்தின் மேலுள்ள அதீத பயம்.

இரண்டையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தீர்களானால் இந்த சமூகம் தமது பெண்பிள்ளையை அடக்கமில்லாதவள் என்றோ, ஆட்டக்காரியென்றோ சொல்லி விடும் என்றும், அதனால் தமது மகளுக்கு திருமணம் நடக்காது போய் விடும் என்றும் பெண்ணைப் பெற்றவர்கள் பயப்படுகின்றார்கள். இது போன்று இன்னும் வேறு சில காரணங்களும், அதனால் ஏற்படும் பயங்களும்தான் பெற்றோர்களை இப்படியான முடிவுகளை எடுக்க வைக்கிறது. அவர்களின் இந்த முடிவினால் அவர்கள் பெண் பிள்ளைகளின் முன் கட்டி யெழுப்பும் தடைகள் அதிகமாகின்றன.

தடைகள் அதிகமாக அதிகமாகத்தான் அதை உடைத்தெறியும் வீறாப்பு ஏற்படும் என்பதை எந்தப் பெற்றோரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

அதேநேரம் இந்த உடைத்தெறியும் துணிவு எத்தனை பேருக்கு வரும்? உடைத்தெறியும் துணிவு வந்தாலும் அதை செயற்படுத்தும் தைரியம் எத்தனை பேருக்கு வரும்? இந்தத் துணிவு, தைரியம் எதுவும் வராதவர்கள் தான், எல்லாவற்றையும் மனதுக்குள்ளே வைத்து வருந்தி வருந்தி உளவியல் பிரச்சனைக்கு அடிமையாகிறார்கள்.

வீட்டிலே அம்மாவும் அப்பாவும் ஐரோப்பிய ஸ்ரைலில் எல்லாம் செய்வார்கள். ஆனால் அவர்களின் பெண் பிள்ளை வகுப்பு மாணவியின் அல்லது நண்பியின் பிறந்தநாள் விழாவுக்குப் போகவேண்டுமென்று கேட்டால் மட்டும் எமது கலாச்சாரத்தைச் சொல்லித் தடுத்து விடுவார்கள்.

பெண்பிள்ளை பாடசாலையால் வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் வீட்டுக்கு வரப்போகும் விருந்தினரை வரவேற்க அவளைக் கொண்டும் வேலைகள் செய்விப்பார்கள். விருந்தினர் வந்தவுடன் அப்பா போத்தலும் கிளாசுமாக இருந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். அம்மா அப்பாவின் நண்பர்களது மனைவியருடன் சமையலறையில் சமையலும் அரட்டையுமாக நிற்பார்.
அண்ணன், தம்பி எல்லோரும் நண்பர்களிடமோ அல்லது விளையாடவோ வெளியில் போய்விடுவார்கள். அந்தப் பெண்பிள்ளை என்ன செய்யும்?

அப்பாவும் அப்பாவின் நண்பர்களும் தொலைக்காட்சியில் என்ன பார்க்கிறார்களோ! அதையே பார்த்து... அம்மாவும் அப்பாவின் நண்பர்களின் மனைவியரும் என்ன அரட்டை அடிக்கிறார்களோ! அதையே கேட்டு... இதுதான் பத்து வயது தாண்டிய ஒரு பெண்பிள்ளையின் அறிவை வளர்க்கும் விடயங்களா? அல்லது அந்த வயதில் அவளின் மனிதில் சிறகடிக்கும் இனிய கனவுகளுக்கும், நினைவுகளுக்கும் போடும் தீனியா?

வீட்டு வேலைகளைப் பிள்ளைகள் பழகத்தான் வேண்டும். ஆனால் அதுதான் அவர்கள் வாழ்க்கை என்றில்லை. அது போகப் பெண்பிள்ளைகள் மட்டும் தான் வீட்டு வேலைகளைப் பழக வேண்டுமென்றுமில்லை. பெண்பிள்ளைகள் வெளியுலகத்தையும் பார்க்க வேண்டும்.

இந்த வயதில் அவர்களிடம் பல ஆசைகள் இருக்கும். ஆனால் அனேகமான பெற்றோர்கள் நினைக்கிறார்கள், இந்த வயதில் பிள்ளைகளிடம் காதல் ஒன்று மட்டும் தான் இருக்குமென்று. அந்த நினைவுகள் அவர்களைப் பயமுறுத்த தவறுகள் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற ஒரே எண்ணத்தைக் கருத்தில் கொண்டு பெண்பிள்ளைகளைக் கட்டிப் போட்டு விடுகிறார்கள். இங்கு கூட பெண்பிள்ளைகளை மட்டுந்தான் கட்டிப் போடுகிறார்கள். ஆண் பிள்ளைகள் தவறினால், அது தவறு இல்லை, இயல்பு என்பது எமது சமூகத்தின் கணிப்பீடு.
பெற்றோர்களினதும், சமூகத்தினதும் இந்தத் தவறான கணிப்பீடு, பெண் பிள்ளைகளின் மனதில் ஒரு வித விரக்தியையும், வேதனையையும் ஏற்படுத்தி அதுவே நாளடைவில் உளவியல் தாக்கமாகி விடுகிறது.

இதனால் அந்தப் பெண்பிள்ளைகளின் மனம் மட்டுமல்லாமல், உடல் கூடப் பாதிக்கப் படுவது ஆராய்ச்சி ரீதியாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
ஐரோப்பிய மருத்துவர்களும், அமெரிக்க மருத்துவர்களும், ஐரோப்பிய, அமெரிக்கப் பெண்களை விட புலம் பெயர்ந்திருக்கும் ஆசியத் தமிழ்ப் பெண்கள் தோள்மூட்டு வலியாலும், மிக்ரேனே எனப்படும் கபாலஇடியாலும் மிகவும் அவஷ்தைப் படுவதைக் கண்டு பிடித்து ஒரு ஆராய்ச்சியும் செய்தார்கள்.

இந்த ஆராய்ச்சியிலிருந்து அவர்கள் கண்டு கொண்டது புலம் பெயர்ந்திருக்கும் ஆசியத் தமிழ்ப் பெண்களில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான ஆசியத்தமிழ்ப் பெண்கள் ஏதோ ஒரு வித மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கின்றார்கள். அதனால் அவர்களின் தோள் மூட்டில் வலியோ அல்லது தாங்க முடியாத தலை இடியாகிய கபால இடியோ ஏற்படுகின்றது. அல்லது அதையும் மீறி எல்லோர் மீதும் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டு அதை வெளியில் கொட்ட முடியாது உள்ளுக்குள்ளேயே அடக்கி, அடக்கி அது மூளையின் சில நரம்புகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க, இரண்டு காதின் பின் புற நரம்புகளும் புடைத்து, அவர்களுக்கே, இது ஏன் என்று தெரியாமல் அவர்கள் நோயாளிகள் ஆகிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விடயங்களை அனேகமான பெற்றோர்கள் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருப்பது சற்று கவலைக்குரிய விடயம்.

பெற்றோர்கள் ஒரு விடயத்தை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதாவது, பெண்பிள்ளைகளை அளவுக்கதிகமாக அடக்கி வளர்ப்பது தான் அவர்களைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்கான வழி இல்லை, என்பதை.

அவர்களுக்கு ஓரளவுக்காவது சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களைப் பேச விட வேண்டும். அவர்களை மற்றவர்களுடன் பழக விட வேண்டும். வாழும் முறை பற்றி அவர்களுக்குப் பக்குவமாய்ச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதை விடுத்து
"நீ பெண் - அதனால் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்றோ
"நீ பெண் - அதனால் இப்படித்தான் பேச வேண்டும்" என்றோ அல்லது
"நீ பெண் - அதனால் இன்ன இன்னதுதான் செய்யலாம்" என்றோ வரையறைகள் போடுவது மிகவும் தப்பானது.

ஒரு பெண்குழந்தையின் திறமைகள் இப்படியான செயற்பாடுகளால் கட்டிப் போடப்படுகின்றன. அந்த நிலையில், தன் திறமையை வெளிப்படுத்த முடியாத கோபத்தில், அது பற்றிப் பேசக் கூட முடியாத விரக்தியில் அந்தக் குழந்தை உளவியல் நோயாளியாகிறது.

ஆதலால் பெற்றோர்கள் சற்று அல்ல, நிறையவே சிந்திக்க வேண்டும். தமது பிள்ளைகளை தாமே உளவியல் நோயாளியாக்கும் அவல வேலையைச் செய்யாமல், அன்பு, நட்புடன் சுதந்திரத்தையும் கொடுத்து, ஒழுக்கத்தையும் சரியான முறையில் போதித்து அவர்களை வளர்க்க வேண்டும்.

பிள்ளையின் நடத்தையில் தவறு கண்டால், நீ பெண்பிள்ளை என்றோ, எமது கலாச்சாரம் என்றோ அவளைப் பயமுறுத்தாமல், அவளை அன்போடு அணுகி, ஆதரவோடு பேசி, நானிருக்கிறேன் உனக்கு என்ற நம்பிக்கையை அவள் மனதில் விதைக்க வேண்டும்.

அப்போதுதான் அவள் நட்போடு உங்களைப் பார்ப்பாள். பயம் தெளிந்து உங்களுடன் பேசி நல்ல பாதைக்குத் திரும்புவாள். வீட்டுக்குள்ளேயே வைத்து, அடக்கம் என்ற பெயரில் அடக்கி வளர்க்கப் படும் பிள்ளைகளை விட, உங்கள் பிள்ளை நல்லது, கெட்டதைப் பகிர்ந்துணரும் தன்மை கொண்டவளாக இருப்பாள்.

மிக மிக முக்கியமான விடயம், பெற்றோர்கள் தங்கள் நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காகச் செலவு செய்யும் நேரத்தை விடக் கூடிய நேரத்தை தமது பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதற்குச் செலவு செய்ய வேண்டும். அது பிள்ளைகளின் மனதில் ஒரு சந்தோஷத்தையும், பெற்றோரிடம் எதையும் மனம் திறந்து பேசி, ஆலோசனை கேட்கும் தன்மையையும் ஏற்படுத்தும்.

அதை விடுத்து கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் பெண்பிள்ளைகளை அடக்க நினைத்தால் இந்த உளவியல் பிரச்சனை எமது பெண்பிள்ளைகளின் மத்தியில் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

சந்திரவதனா
யேர்மனி
2000


ஒலிபரப்பு - ஐபிசி தமிழ் - அக்கினி-கலா (2001)
பிரசுரம் - ஈழமுரசு - பாரிஸ்(27.12.2001-2.1.2002)