Thursday, March 31, 2005

நட்பு

அழுதழுது லலிதாவின் முகம் வீங்கியிருந்தது. கண்கள் சிவந்திருந்தன. நிம்மதியின்றி வீட்டுக்குள் அங்கும் இங்குமாய் அலைவதும், ஒன்றும் செய்ய மனமின்றி எங்காவது வெறித்துப் பார்ப்பதுமாய் இருந்தாள்.

அவளின் பதினான்கு வயது மகள் துளசியைக் காணவில்லை. நேற்று மதியம் பாடசாலை முடிய வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு பியானோ வகுப்புக்குப் போனவள் வீடு திரும்பவில்லை. அனேகமான சமயங்களில் லலிதா போய் காரில் ஏற்றிக் கொண்டு வருவாள். நேற்றுக் காரை அரவிந்தன் கொண்டு போய் விட்டதால் பேரூந்தில் வரச் சொல்லியிருந்தாள்.

என்ன நடந்திருக்கும்...? என்ன நடந்திருக்கும்...? என்ற கேள்வி தலையைக் குடைந்து கொண்டே இருந்தது. மதியம் நான்கு மணிக்கு வரவேண்டியவள், இரவு எட்டு மணியாகியும் வரவில்லையென்றதும் லலிதா பியானோ வகுப்பு மாஸ்டர், நண்பிகள்... என்று ஒவ்வொருவராய் தொலைபேசியில் அழைத்து விசாரித்து விட்டாள். ஒவ்வொருவரும் 3.30 க்கு வகுப்பு முடிய துளசி வெளியில் போனது வரைதான் தமக்குத் தெரியும் என்றார்கள்.

லலிதாவுக்கு நெஞ்சு திக்.. திக்கென்று கொண்டே இருந்தது. வெளியில் ஓடி ஓடித் தேடினாள். அரவிந்தனும் வேலை முடிந்து வந்த பின்னர் அரவிந்தனோடு ஆலோசித்து இனி வேறு வழியில்லை என்ற நிலையில் பொலிசுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு விடயத்தைச் சொன்னாள்.

"14 வயசுப் பிள்ளை கொஞ்சம் லேற்றா வாறது சகயம்தானே! இதுக்கு நீங்கள் பயப்படத் தேவையில்லை. ஒரு பிள்ளையை 24 மணித்தியாலங்களுக்கு மேலை காணேல்லை எண்டால்தான் நாங்கள் தேடத் தொடங்குவம்." என்றார் தொலைபேசி இணைப்பில் நின்ற காவல்நிலைய அதிகாரி.

லலிதா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "யேர்மனியப் பிள்ளையள் வேணுமெண்டால் அப்பிடி இருக்கலாம். எங்கடை பிள்ளையளை நாங்கள் எங்கடை கலாச்சாரத்தோடை வளர்க்கிறம். அவள் ஒரு நாளும் எங்களுக்குச் சொல்லாமல் வெளியில் போனதில்லை. 6 மணிக்கு மேலை நாங்கள் பிள்ளையை வெளியிலை விடுறதும் இல்லை. அவள் வகுப்பு முடிஞ்சதும் வீட்டை வந்திடுவாள். இண்டைக்கு அவள் வரேல்லையெண்டால் அவளுக்கு வேறையேதோ நடந்திட்டுது." என்றாள்.

நிலைமையைப் புரிந்து கொண்ட காவல்நிலைய அதிகாரி துளசியின் புகைப்படத்துடன் லலிதாவை காவல் நிலையத்துக்கு வரச் சொன்னார்.

லலிதாவும் அரவிந்தனும் காவல்நிலையத்துக்குப் போனபோது அவளது உடைந்து போன உள்ளத்தின் வெளிப்பாடு முகத்தில் தெரிந்ததினாலோ என்னவோ காவல் நிலைய அதிகாரிகள் அவளை அநுதாபத்துடன் நோக்கினார்கள். உள்ளே கூட்டிச் சென்று இருத்தி விபரம் கேட்டு எழுதினார்கள். "பிள்ளையை அடித்தீர்களா? அல்லது வீட்டில் ஏதாவது சண்டை வந்ததா?" எனத் துருவித் துருவிக் கேட்டார்கள். அவளுக்கு "Boy Friend (ஆண் நண்பன்) இருக்கிறானா?" என்றும் கேட்டார்கள்.

லலிதா "அப்படியெதுவும் நடக்கவுமில்லை. அவளுக்கு ஆண் நண்பனும் இல்லை." என அடித்துச் சொன்னாள். அரவிந்தனை விட லலிதாதான் கூடுதலாகக் கதைத்தாள்.

அவர்கள் எல்லாவற்றையும் ஒரு அறிக்கையாக எழுதிவிட்டு லலிதாவையும், அரவிந்தனையும் கையெழுத்திடச் சொன்னார்கள். "24 மணி நேரம் தாண்டிய பின்னும் பிள்ளையைக் காணவில்லையென்றால் பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் அறிவிக்கிறோம்," என்றார்கள்.

உடனே அரவிந்தன் துடித்துப் பதைத்து "அப்பிடியொண்டும் செய்து போடாதைங்கோ. பொம்பிளைப் பிள்ளை. காணேல்லையெண்டு பேப்பரிலை வந்தால் எங்கடை மானம் மரியாதையெல்லாம் கப்பலேறீடும். வேண்டாம்... எங்கடை கலாச்சாரம் பற்றி உங்களுக்குத் தெரியாது...!" என்றார்.

அவர்கள் லலிதாவையும், அரவிந்தனையும் சற்று நூதனமாகப் பார்த்து விட்டு "உங்கள் இஸ்டம். ஏதாவது தகவல் கிடைத்தால் அறிவிக்கிறோம். நீங்களும் உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக எங்களுக்குத் தெரியப் படுத்துங்கள். மூன்று நாளைக்கு மேல் பிள்ளையைக் காணவில்லை என்றால் நாங்கள் பொது ஊடகங்களுக்கு அறிவிப்போம்." என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

காவல் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை எழுதிய இரு காவல் நிலைய அதிகாரிகளினதும் முழு நம்பிக்கையும் துளசிக்கு ஒரு காதலன் இருக்கிறான் என்பதுதான்.

துளசி காணாமல் போய் 24 மணித்தியாலங்கள் கடந்து விட்டன. அரவிந்தன் விடுப்பு எடுக்க முடியாத நிலையில் வேலைக்குப் போய் விட்டான். லலிதா போகவில்லை. சுகமில்லை என அறிவித்து விட்டு நின்றாள். அவளை இல்லாத பொல்லாத நினைவுகளெல்லாம் அலைக்கழித்துக் கொண்டிருந்தன. இப்போதெல்லாம் துளசியின் வயதுப் பிள்ளைகள் அடிக்கடி காணாமல் போகிறார்கள். பின்னர் அவர்கள் பிணமாகவே மீட்கப் படுகிறார்கள். சிலர் மீட்கப் படாமலே கூட காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப் பட்டு விடுகிறார்கள்.

நேற்றும் கூட வடக்கு யேர்மனியின் - கீல் - நகரிலிருந்து காணாமற் போன 13 வயது நிரம்பிய லூசி என்ற பெண்குழந்தை காட்டினுள் பிணமாகக் கண்டெடுக்கப் பட்டாள். அவள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளாள் என்பதும் வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத ஒருவராலேயே கடத்தப் பட்டு இக்கதிக்கு ஆளாகியிருக்கிறாள் என்பதும் நேற்றைய தொலைக்காட்சி செய்தியில் ஒளி பரப்பானது.

ஓய்ந்து போயிருந்த அழுகை இப்போது லலிதாவிடமிருந்து ஒப்பாரியாக வெளிவந்தது. வீட்டில் யாரும் இல்லை. துளசியும் லூசி போல்....... இறந்திருந்தால்......... என்ற நினைவு வந்து அவளை இம்சித்தது. துளசியை கட்டிப் பிடித்துக் கொஞ்சி நிறையப் பேச வேண்டுமென மனசு அவாப்பட்டது.

"ஏதாவது தகவல் கிடைத்தால் அறிவி." என்று சொல்லி விட்டுத்தான் அரவிந்தன் வேலைக்குப் போனான். ஆனால் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்பதை சொல்வதற்காகவே லலிதா இரண்டு மூன்று தடவைகள் அரவிந்தனைத் தொலைபேசியில் அழைத்து அழுது விட்டாள்.

இந்த நேரம் பார்த்துத்தான் யார் யாரோ எல்லாம் தொலைபேசியில் லலிதாவை அழைத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு அழைப்பு வரும் போதும் அது துளசிதான் என நினைத்து தொலைபேசியை அவசரமாக எடுக்க.. மறுமுனையில் வேறு குரல்கள் அவளை அலுக்க வைத்தன. துளசியைக் காணவில்லை என்பதையோ தனது துயரத்தையோ யாரும் அறிந்திடக் கூடாது என்பதில் அவள் மிகவும் கவனமாக இருந்தாள். பெண்பிள்ளையைக் காணவில்லை என்றால் ஊர் என்ன பேசும் என்ற பயம் அவளுக்கு. இருந்தாலும் "என்ன லலிதா ஒரு மாதிரிக் கதைக்கிறீர்..! சுகமில்லையே..?" என்று சிலர் கேட்கத்தான் செய்தார்கள்.

லலிதா மீண்டும் மீண்டுமாய் அரவிந்தனை தொலைபேசியில் அழைத்து அழுதாள். "இப்பிடியே நானும் நீங்களுமாக அவளை எப்பிடிக் கண்டு பிடிக்கிறது. உதவிக்கு உங்கடை சினேகிதரையும் கேட்டுப் பாருங்கோவன். அவர்களுக்காவது அவளைக் காணேல்லை எண்ட கதையைச் சொல்லுங்கோ. எனக்குச் சரியான பயமாயிருக்கு. என்ரை பிள்ளை உயிரோடை வரேல்லை எண்டால்..... நானும் உயிரோடை இருக்க மாட்டன்." புலம்பினாள். அரவிந்தன் தானே தனக்குள் குழம்பியிருக்கும் போது லலிதாவின் புலம்பல் அவனை இன்னும் குழப்பியது. அவளையே தனது உற்ற நண்பர்கள் சிலரோடு தொலைபேசியில் கதைக்கச் சொன்னான்.

லலிதா அவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தாள். அரவிந்தனின் உற்ற நண்பர்களெனக் கருதப்படும் நான்கு பேரில் ஒருத்தரோடு கூட அவளால் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல நேர முயற்சியின் பின் சிறீதான் அதுவும் கைத்தொலைபேசியில் கிடைத்தான்.

லலிதாவால் விடயத்தைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. அழுகைதான் முந்திக் கொண்டு வந்தது. ஒருவாறு சொல்லி முடித்த போது முதலில் ரவி கொஞ்சம் தடுமாறினான். தொடர்ந்து லலிதா அழுகையும் ஏக்கமுமாய் தவித்த போதுதான் அதைச் சொன்னான்.

துளசி கிருபாவுடன்தான் நிற்கிறாளாம். கிருபா வேறு யாருமல்ல. அரவிந்தனின் உற்ற நண்பர்களில் ஒருவன். 35 வயது நிறைந்த அவனுக்கு 14வயது மட்டுமேயான துளசி மேல் காதலாம். அதுதான் பியானோ வகுப்புக்குப் போய் அப்பா கூட்டிக் கொண்டு வரச் சொன்னவர் என்று சொல்லி தனது காரிலேயே ஏற்றி.. பக்கத்து நகரிலுள்ள தனது வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போயிட்டானாம். துளசிக்கும் கிருபாவில் விருப்பமாம். அதனால் இது விடயத்திலை அரவிந்தனும் லலிதாவும் மறுப்புத் தெரிவிக்காமல் ஒத்துழைக்கோணுமாம்.

லலிதாவுக்கு ஒன்றையும் சரியாக அனுமானிக்க முடியாமல் இருந்தது. ஒரு கணம் தலை சுற்றியது. கட்டிக் காத்து துளசியை இத்தனை கட்டுப்பாடோடு வளர்த்ததெல்லாம் இதற்குத்தானோ..? குழம்பினாள்.

துளசி சின்னப்பிள்ளை. கல்யாணம் செய்து குடும்பம் நடத்தும் வயதல்ல அவளுக்கு. அவளின் பருவ வயதுப் பேதைமையை அப்பா ஸ்தானத்தில் இருக்க வேண்டிய அப்பாவின் 35வயது நண்பன் நன்கு பயன் படுத்தியிருக்கிறான். நட்புக்குள்ளே ஒளிந்திருந்த வஞ்சகம் லலிதாவினது நெஞ்சைச் சுட்டது. அழுவதற்குக் கூட திராணியற்றவளாய் துவண்டு போனவளின் மனசில் எண்ண அலைகள் உக்கிரம் கொண்டு திமிறின.

துளசியை அவளின் வயதையொத்த நண்பர்களுடன் பழக விட்டிருந்தால் இப்படியொரு கீழ்த்தரமான செயற்பாடு நடந்திருக்க பெரும்பாலும் வாய்ப்புக்கள் இருந்திருக்காது. சின்னப் பிள்ளைகளிடம், கைகோர்த்துத் திரியும் ஒரு இதமான காதல்தான் இருக்கும். இப்படி பெற்றோர்க்குத் தெரியாமல் ஓடிப் போகும் மந்த புத்தி அதுவும் இந்த ஐரோப்பிய மண்ணில் வரவே வராது.

இப்போதுதான் லலிதாவுக்குச் சில தெளிவுகள் ஏற்பட்டன. கட்டுப் பாடாக வளர்க்கிறோம் என்று சொல்லி அப்பாவின் வயதையொத்தவன் மேல் காதல் வரும் படியாக மகளை உலகம் தெரியாதவளாக கண்மூடித்தனமாக வளர்த்து விட்ட தவறு புரிந்தது. படிக்க வேண்டிய வயதில் இப்படியொரு பொறுப்பற்றவனிடம் மனதைப் பறி கொடுக்கும் படியான அறியாமையோடு மகளை வளர்த்து விட்ட தமது அறியாமை விளங்கியது.

"இனி என்ன செய்யலாம்..?" யேர்மனியில் இப்படியான இளம் வயதுக் கல்யாணக் கூத்துக்களுக்குச் சட்டமும் இடமளிக்காது. அதில் லலிதாவுக்கும் துளியும் இஸ்டமில்லை. இந்தச் சின்ன வயதில் இப்படியான ஒருவனிடம் தனது மகளின் வாழ்வு அடங்கிப் போவதைச் சம்மதிக்க அவள் ஒரு போதும் தயாராகவும் இல்லை.

"இனியென்ன..? அவனோடு போய் விட்டாள். எமது கலாச்சாரப்படி அவனோடுதானே வாழ வேண்டும்." என்று இந்திய சினிமா பாணியில் தன்னை முட்டாளாக்கவும் லலிதா விரும்பவில்லை. என்ன செய்யலாம் என்று நன்றாக யோசித்தாள்.

சட்டப்படி 14 வயதுப் பெண்பிள்ளையுடன் 18 வயதுக்குக் கூடிய ஒரு ஆண் படுக்கையைப் பகிர்ந்து கொண்டால் அது காதல் என்ற கணக்கில் சேர்க்கப் பட மாட்டாது. அது அப் பெண்பிள்ளையின் முழுமனதான சம்மதத்துடன் நடந்திருந்தாலும் கூட பாலியல் துர்ப்பிரயோகம் என்ற பெயரிலேயே பார்க்கப் படும். சட்டப்படி அந்த ஆணுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும். குறிப்பாக.... யேர்மனியில் இப்படியான பாலியல் துர்ப்பிரயோக நிகழ்வுகளுக்கான தண்டனைகள் மிகவும் கடுமையானதாகவே இருக்கும்.

துளசி தவறு செய்தாலும் கூட ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து அவளைத் திருத்த வேண்டியவன் மட்டுமல்ல கிருபா. அவன் அரவிந்தனின் நண்பனும் கூட.. ஆனால் அவன் நட்பின் போர்வைக்குள் இருந்து... துளசியின் வாழ்க்கையோடு விளையாடியிருக்கிறான். புலம் பெயர் மண்ணில் இப்படி வெறும் போலிகளாக...! நட்பு என்ற சொல்லுக்கே களங்கம் கற்பிக்கும்.. எத்தனை அப்பாவின் நண்பர்கள்? இவர்களை இனியும் சும்மா விடக்கூடாது.

சற்று நேரத்துக்கு முன் மனமொடிந்து வீழ்ந்து போயிருந்த லலிதா இப்போ திடம் கொண்டு எழுந்தாள். தனது மகள் துளசி கிருபாவால் கடத்தப் பட்டு விட்டாள் என்று காவல்நிலையத்துக்கு அறிவிப்பதற்காக.

சந்திரவதனா
யேர்மனி
22.2.2004

No comments: