Sunday, August 06, 2006

பூவரசு - பன்னிரண்டாவது நிறைவுமலர்

எனது பார்வையில்

இணையப் பத்திரிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று எல்லோரும் கணினிக்குள் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் பதிப்புகள் மீதான ஈர்ப்பு எம்மவரிடையே சற்று ஸ்தம்பிதமடைந்து போயுள்ளன. இதனால் துளிர்த்த வேகத்திலேயே கருகிக் காணாமற் போன சஞ்சிகைகள் பல.

தேர்ந்தெடுக்கப் பட்ட நல்ல ஆக்கங்களைக் கொண்டு உலகளாவிய ரீதியில் தொகுக்கப் பட்ட மிக அருமையான தொகுப்புக்கள் கூட குறுகிய வட்டங்களுக்குள்ளேயே உலா வந்து ஒரு கட்டத்தில் உரிமையாளர்களின் வீடுகளில் உறங்கிப் போன கதைகள் கூட ஏராளம். சந்தைப் படுத்தலில் உள்ள சிக்கலால் பதிப்புகளைத் தொகுப்பவர்களும், சஞ்சிகைகள், பத்திரிகைகளை வெளியிடுபவர்களும் பணவிடயத்தில் பாரிய பிரச்சனைகளைச் சந்தித்துச் சோர்ந்து போன கட்டங்களும் உண்டு.

இப்படியான பிரச்சனைகளைப் புலம் பெயர்ந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளின் உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பூவரசு தனது 12 அகவைகளை மகிழ்ச்சிகரமாக நிறைத்து 13 வது அகவையில் காலடி வைத்திருப்பது மிகப் பெரிய சாதனையே!

இப்படியான சாதனைகளுக்கு வாசகர்களும், படைப்பாளிகளும் முக்கிய காரண கர்த்தாக்களாக இருந்தாலும், அவர்களை ஒன்று கூட்டி, அவர்களோடு இசைந்து புலம்பெயர் வாழ்வில் முகம் கொடுக்க வேண்டிய எத்தனையோ பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு சஞ்சிகையை வளர்த்தெடுப்பது என்பது சுலபமான விடயமல்ல. ஆனால் பூவரசு சஞ்சிகை ஆசிரியர் இந்துமகேஷ் அவர்கள் அந்தச் சாதனையைச் செய்துள்ளார். அவர் வளர்த்தது பூவரசை மட்டுமல்ல. புலம்பெயர் மண்ணில் இலைமறைகாய்களாக இருந்த எத்தனையோ எழுத்தாளர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, பூவரசின் ஊடாக அவர்களையும் வளர்த்து விட்டிருக்கிறார்.

அதே நேரம் வருடந்தோறும் எழுத்தாளர்களுக்கு உற்சாகமூட்டக் கூடிய வகையில் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள், என்று நடாத்தி வளரும் எழுத்தாளர்களை பூவரசு மூலம் ஊக்குவிக்கவும் இவர் தவறுவதில்லை.

அந்த வகையில் 12 வது வருடத்தை நிறைத்து 13வது வருடத்தில் மகிழ்வோடு காலடி எடுத்து வைத்திருக்கும் இந்தப் பூவரசுவும், வழமையான தைத்திங்கள் இதழ்கள் போலவே பூவரசு நடாத்திய போட்டிகளில் முதற் பரிசு பெற்ற சிறுகதை, கட்டுரை, கவிதை என்பனவற்றைத் தாங்கி வந்தது மட்டுமல்லாமல், வாசகர்கள் பலரின் மனந் திறந்த பாராட்டுகள் சில பக்கங்கள் நிறைத்து நிற்க, இளந்தளிர்களுக்கான பிரத்தியேகமான இணைப்போடு.. 31 படைப்பாளிகளின் ஆக்கங்களை உள்ளடக்கி கண்ணா அவர்களின் தூரிகையின் வர்ணக் கோலங்களுடன் அழகாக வெளி வந்திருக்கிறது.

பூவரசின் வாசகர்கள் பல்வேறு நாடுகளில், பல்வேறு இயல்பு நிலைகளில் இருந்து கொண்டு ஆக்கங்களைத் தந்திருப்பதால் ஒவ்வொரு ஆக்கத்திலும் ஒவ்வோர் விதமான தனித் தன்மையும் சுவையும் கலந்துள்ளன.

ரவி செல்லத்துரை அவர்களும், வேலணையூர் பொன்னண்ணா அவர்களும் பொங்கல் கவிதைகள் மூலம் எல்லோரும் விரும்பும் நல்லனவற்றையே வேண்டி நிற்பது மங்களகரமாக உள்ளது.

பாரதியின் முதல் பரிசு பெற்ற நின்னைச் சில வரங்கள் சிறுகதை, வாசிக்கும் போது மனதைக் கனக்க வைக்கிறது. கதாசிரியரின் இந்த முயற்சி மிகவும் துணிகரமான ஒன்றே. எல்லோருமே பிள்ளைகளாக இருந்து கொண்டு தாயின் மீதான தமது உணர்வுகளைத்தான் கதைகளிலும், கவிதைகளிலும், கட்டுரைகளிலும் வெளிப்படுத்தி உள்ளார்கள். பாரதியோ ஒரு தாயின் ஸ்தானத்தில் போய் நின்று கொண்டு, மரணத்தின் வாயிலில் நின்று பிரிவின் துயர் தாங்காது மகளின் பாசத்தின் தரிசனத்துக்காய் ஏங்கும் ஒரு தாயின் உணர்வுகளை, நான் என்ற பார்வையில் எழுத முனைந்திருக்கிறார். ஒரு தாயின் அந்த நேரத்து முழு உணர்வுகளையும் தானாக நின்று கதைக்குள் கொண்டு வருவது மிகவும் கடினமானதொரு முயற்சியே!ஆனாலும் வார்த்தைப் பிரயோகங்களாலும் கதையை நகர்த்திய விதத்தாலும் ஒரளவு வெற்றியும் பெற்றுள்ளார். வித்தியாசமான கோணத்திலிருந்து எழுத முனைந்து வெற்றியும் கண்ட பாரதிக்கு பாராட்டுக்கள்.

த.பவானந்தராஜாவின் முதற்பரிசு பெற்ற விஞ்ஞானமும் மெய்ஞானமும் கட்டுரை, விஞ்ஞானத்துக்கும் மெய்ஞானத்துக்கும் இடையில் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை அழகாக விளக்கியுள்ளது. காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் போது பிரணாயாமம் ஒரு முறை நடந்து நிறைவேறும் விடயமும், அதை விஞ்ஞானிகளே ஒப்புக் கொண்ட தகவலும் வியப்பை ஏற்படுத்தியது.

அம்பலவன் புவனேந்திரனின் முதற்பரிசு பெற்ற எழுகின்ற நேரம் இது கவிதை, உறங்குபவர்களையும் அலட்சியமாக இருப்பவர்களையும் தட்டி எழுப்பும் விதமாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.

இலக்குமணணின் கோட்டில் புதிய இலக்கணம் கண்டு அதைக் கலாச்சாரக் கோடுகளின் ஆச்சார வீடுகள் என்று கவிதையாக்கிய மகேந்திக்கும் பாராட்டுக்கள்.

பிள்ளைகளைத் தள்ளி வைத்தே வளர்க்க வேண்டுமென நினைத்து தமக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தி வைத்திருக்கும் பெற்றோரின் தவறைச் சுட்டிக் காட்டியது மட்டுமல்லாமல் அவர்கள் பிள்ளைகளோடு நட்போடு பழக வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி நின்ற ஏ.ஜே.ஞானேந்திரனின் தோளுக்கு மிஞ்சினால் தோழன் கட்டுரை பயனானது.

தொலைக்காட்சிக்கு அடிமையாகிப் போயிருக்கும் எமது புலம் பெயர் தமிழர் பற்றியும், அதனால் பாதிப்படையும் அவர் தம் பிள்ளைகள் பற்றியும் நகுலா சிவநாதன் அவர்கள் பல மணி நேர தொலைக்காட்சி பாவிப்பால் பாதிப்படையும் சிறுவர்கள் என்ற சிறிய கட்டுரையில் வெளிப் படுத்தியிருந்தார். இது பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய அவசியமான ஒரு விடயமே. (ஆனாலும் இங்கு நகுலா சிவநாதன் அவர்களுக்கு ஒரு விடயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். யேர்மனியப் பாடசாலையில் பல ஆசிரியர்களைச் சுட்டுக் கொன்ற இளைஞனின் அந்தச் செயற்பாட்டுக்கு தொலைக்காட்சிதான் காரணமென்று விவரிக்கப் பட்டது ஒரு போலியான விவரணமே! உண்மையில் அந்த இளைஞன் அப்படி நடந்து கொண்டதற்குக் காரணமாக இருந்தவர்கள், பாடசாலையில் அவன் செய்த ஏதோ ஒரு சின்னத் தவறுக்காக அவனை Abitur எனப்படும் இறுதியாண்டுச் சோதனையை எழுத விடாது தண்டனை என்ற பெயரில் தடை செய்து, அவனை உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாக்கிய ஆசிரியர்களே!)

சிந்தனைச் செல்வர் எழிலன் அவர்கள் தந்த நான் எங்கு நிற்கிறேன் கட்டுரை, மரணத்தை எதிர் நோக்கும் ஆப்பிரிக்க சிறுவனை உணவாக்க கழுகு காத்திருக்கும் அவலத்தையும் இன்னும் பலவற்றையும் சொல்லி வாசிப்போரைச் சிந்திக்க வைப்பதாக அமைந்திருந்தது.

மேலும் அஞ்சுதலும் கெஞ்சுதலும் அகன்றதொரு ஆண்டாய் 2003 அமைந்திடவே கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் தந்த கைவிளக்கைக் கைப் பிடித்து காவலிலே ஊரான் பொங்கல் கவிதை

ஓலைக்குடில்கள் எரிகையிலே ஓரப்பார்வையேனும் வீசாதவர்கள் இப்போது ஈரப்பார்வை வீசுகிறார்களே என்று விசனப்பட்டு மட்டுவில் ஞானக்குமாரன் அவர்கள் தந்த போர்ப்பிரளயத்திலே கவி,

அர்த்தமில்லாத கொள்கைகளை அறுத்தெறியச் சொல்லி சுகந்தினி சுதர்சன் அவர்கள் தந்த குடித்தனம் புகுவாயோ கவிதை,

இ.சம்பந்தன் அவர்கள் தந்த மழை கவிதை,

வி.கந்தவனம் அவர்கள் தந்த காட்சி இன்பம் கவிதை,

ஜெயவதி எட்மன் அவர்கள் தந்த புது வருடம் கவிதை,

இந்துமகேஷ் அவர்கள் தந்த நான் எனும் நான் கவிதை,

மாலி ரமணன் அவர்கள் தந்த தென்றலுக்கு ஒரு விண்ணப்பம் கவிதை,

ஆகன்.எஸ்.பரம் அவர்கள் தந்த இப்படியும் இவர்கள் கவிதை,

சில்லையூர் சிங்கராயர் அவர்கள் தந்த இனிமை, கனிவு, பணிவு, துணிவு நமக்குத் தேவை,

ஜெயா நடேசன், சுஜி சீலன், செல்வா ஆகியோர் எம்மோடு பகிர்ந்து கொண்ட படித்த சுவையான பயனான விடயங்கள்,

சும்மா தந்த சும்மா,

சுதுவையூர் மூர்த்தி தந்த சும்மா வந்த சுமை,

நேர்மையைப் பற்றிப் பேசுறவங்ள் எல்லாரும் நேர்மையானவங்கண்ணு சொல்ல முடியுமா..? என்று ஆழமான கருத்துக்களையும் தந்து சமூகத்துள் ஆங்காங்கு நடைபெறும் பிரச்சனைகளையும் நாசூக்காகச் சுட்டிக் காட்டிய அப்பாசாமியின் புத்திசாலித் தனம்,

வீ.ஆர்.வரதராஜா அவர்கள் தந்த புதிய பரிமாணத்தில் ஒரு பரிணாமம்,

கனடாவிலிருந்து பாடலுக்குள் தேடல் செய்து அமலன் தந்த தமிழ்திரையிசை ஒரு கண்ணோட்டம்,

கலை ஞானத்தில் மட்டுமல்ல தமிழிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் 12 வயது நிரம்பிய செல்வன் சிவஞ்சீவ் சிவராமனின் திறமை,

என்று அனைத்து விடயங்களுமே தத்தமக்கே உரிய தனித்தன்மையுடன் பூவரசை மெருகேற்றியிருந்தன.

இறுதியாக, ஒரு எழுத்தாளர் கதையை ஆரம்பித்து வைக்க வாசகர்கள் கதையை வளர்த்துச் செல்லும் முயற்சியில் உருவான இனி அவர்கள் என்ற கதையைப் பார்ப்போம்.

இதில் நானும் ஒரு வாசகியாக நின்று கதையைத் தொடர்ந்த காரணத்தால் விமர்சனம் என்று முன் வைப்பதில் சற்று சிரமமாகத்தான் உள்ளது.

இந்து மகேஷ் அவர்கள் இந்த முயற்சி பற்றி என்னிடம் கூறிய போது
இப்படியான ஒரு தொடர் எழுதிய முன் அனுபவம் ஏதும் இல்லாத என்னால் எப்படி இதைத் தொடர முடியும்..? என்றுதான் நான் சங்கடப் பட்டேன். "உங்களால் முடியும்" என்று சொல்லி அவர் முதல் அங்கத்தை என்னிடம் தந்த போது அதை இராஜன் முருகவேல்தான் எழுதினார் என்பது எனக்குத் தெரியாது. இருந்தும் எனது கோணத்தில் பார்த்து நான் எனது இரண்டாவது அங்கத்தைத் தொடர்ந்தேன்.

ஆதவனிடம் அவனது தாய், யாதவன் பற்றிக் கேட்ட போது ஆதவன் கோபித்துக் கொண்டதும், தாய் மருமகளையோ பேரப் பிள்ளைகளையோ சம்பிரதாயத்துக்குக் கூட விமான நிலையத்தில் அணைக்காததும் சற்று விசனத் தனமாகவே எனக்குப் பட்டன. அதனால் என்னால் அந்த இடத்தைத் தொடவோ, அங்கிருந்து கதையைத் தொடரவோ முடியாதிருந்தது.

ஆனாலும் சாந்தினி வரதராஜன் அவர்கள் அதை நான் சற்றும் எதிர் பாராத கோணத்தில் பார்த்து அழகாகத் தொடர்ந்திருந்தார். ஒரு தாயின் ஏக்கத்தையும் யாதவனின் உணர்வுகளையும் மாற்றங்களையும் அழகாகத் தந்திருந்தார்.

அதைப் புஸ்பராணி ஜோர்ஜ் அவர்கள் தொடர்ந்து நகர்த்திய விதம் கூட நான் சற்றும் எதிர் பார்க்காததுதான். அவர் கதையை மிகவும் நீட்டியிருந்தாலும் வழமையான எம்மவர்கள் போல ஐரோப்பியர்கள் என்றாலே அன்பு பாசத்துக்கு அப்பாற் பட்டவர்கள் போன்றதான பிரமையைக் கதையில் புகுத்தாமல் ஐரோப்பியர்களின் மனதின் மென்மையையும் தன்மையையும் அழகாகச் சொல்லியிருந்தார்.

இரண்டாவது அங்கத்தை எழுதும் போது நதியா யேர்மனிக்கு வருவது போலவும் அதன் பின் புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்ப காலக் கஸ்டங்களை உணர்ந்து கொள்வது போலவுமே கற்பனை பண்ணி வைத்திருந்தேன். ஆனால் சாந்தினி, புஸ்பராணி ஆகியோரின் கதை நகர்த்தலில் அது பற்றி மறந்து கதையை வாசித்துக் கொண்டு போகும் போது, இந்து மகேஷ் அவர்கள் கதையின் இயல்பு நிலை மாறாமல் நதியாவை யேர்மனிக்கே கொண்டு வந்தது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

புலம் பெயர்ந்தவர்கள் மீது தப்பபிப்பிராயம் கொள்ளும் தாய்நிலத்தவருக்கு ஒரு படிப்பினையை ஏற்படுத்தக் கூடிய கதையாகக் கூட இனிஅவர்கள் அமைந்து விட்டது.

ஆனாலும் கதையைத் தொடக்கி வைத்த இராஜன் முருகவேல் அவர்கள் என்ன நினைத்துக் கதையைத் தொடங்கினார் எனவும், முடிவு எப்படி அமையும் என்று எதிர் பார்த்தார் எனவும் அறிய ஆவல்தான்.

சந்திரவதனா
யேர்மனி
9.3.2003


பிரசுரம் - பூவரசு (பங்குனி-சித்திரை 2003)

No comments: